சதிராடும் திமிரே 25

 

அத்தியாயம் 25

மேகலா எப்பொழுதும் விடியற்காலை எழுந்து வீட்டுப் பணிகளை தொடங்கி விடுவார். என்ன தான் எல்லா வேலைக்கும் ஆட்கள் இருந்தாலும் அவர்களை நின்று வேலை வாங்க ஒரு ஆள் வேண்டுமே.

காலை ஆறு மணி வாக்கில் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.

இந்த நேரத்தில் யார்?’ என்று புருவம் சுருக்கி யோசித்தவர் உள்ளிருந்து இறங்கிய உருவத்தைப் பார்த்ததும் பதறிப் போனார்.

காரிலிருந்து சரசு இறங்கி வந்தாள். கீழே இறங்கியதும் அவள் பார்வை மேகலாவை அலட்சியம் செய்து விட்டு, வீட்டின் தோற்றதையும், அளவையும் கண்களால் அளவிட்டது.

ஊர் மக்கள் யாரேனும் பார்த்து விட்டால் என்ன ஆவது?’ என்ற பதட்டத்துடன் அவளை நோக்கி வந்தார்.

“யாரும்மா நீ என்ன வேணும்?” என்று அவளுக்கு முன்னே வாசலை மறித்தபடி நின்று கேட்க... அவளோ அவருக்கு பதில் சொல்லாமல் வீட்டில் சுற்றி நின்று வேலை பார்க்கும்  வேலையாட்களை கண்களால் அலசினாள்.

“குப்புசாமி மாமா... அய்யா வீட்டுல இல்லையா?” என்று அங்கே இருந்த ஒருவனைப் பார்த்து கொஞ்சம் உடலை வளைத்து , நெளிந்து கொண்டே பேச... அவனோ மேகலாவைப் பார்க்க முடியாமல் தர்ம சங்கடத்துடன் நெளிந்தான்.

அதே நேரம் மேகலாவை மீறி அவளது கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லவே இல்லை. எஜமான விசுவாசத்தை காட்டும் விதமாக அவன் மௌனம் காக்க, அதை சரசுவும் உணர்ந்து கொண்டாள்.

போனால் போகிறது... என்று வேண்டா வெறுப்பாக மேகலா புறம் திரும்பியவள் அதே அலட்சியத் தொனியில் பேசினாள்.

“அய்யாவைப் பார்க்கணும்”

“என்ன விஷயமா ஊர்த் தலைவரைப் பார்க்க வந்தே” வார்த்தைகளை வெகுகவனமாக தொடுத்தார் மேகலா.

“எல்லாத்தையும்... எல்லார் கிட்டயும் சொல்லிட முடியுமா என்ன? அதெல்லாம் அய்யா கிட்டே தான் சொல்ல முடியும்”

“என்ன விஷயம்னு சொன்னா தான் அவர் வந்து பார்க்கிற அளவுக்கு பெரிய பிரச்சினையா? இல்ல பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத சில்லறை பிரச்சினையான்னு முடிவு பண்ணி அதுக்கு அப்புறம் அய்யா கிட்டே சொல்லுவேன். என்னோட புருசனுக்கு தொந்தரவு தரக் கூடிய எதையும் நான் அவர்கிட்டே கூட அனுமதிக்க மாட்டேன்” என்று உறுதியுடன் கூறியவரை கண்கள் சுருக்கி ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாள் சரசு.

வரவழைக்கப்பட்ட போலி பணிவுடன் மேகலாவை எதிர்கொண்டாள்.

“அய்யாவை பார்க்க வந்தேன்”

“என்ன விஷயம்னு இன்னும் நீ சொல்லவே இல்லையே”

“அது... அது.. ரொம்ப முக்கியமான விஷயம்.. அய்யா கிட்டே தான் சொல்ல முடியும்”

“ஏய்! மேகலா காலையில இன்னும் எனக்கு காபி கூட கொடுக்காம அங்கே யார்க்கிட்டே வெட்டி அரட்டை அடிச்சுட்டு இருக்க...”மாடியில் இருந்து எட்டிப் பார்த்து துரைசாமி அனலாய் காய... சரசுவை வைத்துக் கொண்டு இப்படி பேசியதில் ஒரு நொடி முகம் வாடிய மேகலா அடுத்த நொடி தன்னை சமாளித்துக் கொண்டு அவருக்கு பதில் சொன்னார்.

“உங்களைப் பார்க்க வந்தவங்க கிட்டே தான் பேசிட்டு இருக்கேன்ங்க. ஒரு நிமிஷம் இதோ காபி கொண்டு வந்துடறேன்”

“யார் வந்துருக்கா? இந்த நேரத்துல... சரி சரி... அவங்களையும் உள்ளே கூட்டிட்டு வா” என்றார் வந்திருப்பது யார் என்று தெரியாமல்.

சரசுவுக்கு கொண்டாட்டமாக இருந்தது. மேகலாவின் பின்னால் கொஞ்சம் மறைந்தார் போல இருந்தவளை துரைசாமியும் பார்த்திருக்கவில்லை.

மேகலா அப்பொழுதும் சரசுவை வீட்டினுள் அழைத்து செல்ல விரும்பவில்லை. வந்ததில் இருந்தே சரசுவின் பார்வை ஒருவித கணக்கிடுதலுடன் வீட்டின் மீது பதிவதை அவர் உணர்ந்தே இருந்தார்.

மேகலா யாரையும் தரக்குறைவாக நினைப்பவரில்லை. ஆனால் எத்தனையோ குடும்பங்கள் அழிவதற்கு சரசு காரணமாய் இருந்து இருக்கிறாள் என்பதை அறிந்து வைத்திருந்ததால் அவளை உள்ளே அனுமதிக்க அவருக்கு மனம் வரவில்லை.

தோட்டத்தில் ஒரு ஓரமாக அவளை அமர வைத்து விட்டு ஆட்களை விட்டு துரைசாமிக்கு மட்டுமாக காபியை கொண்டு வர சொன்னார்.

“ஏன்டி காபி கேட்டு எவ்வளவு நேரமாகுது? இன்னும் கொண்டு வராம என்ன செய்ற?”

“இங்கேயே இவங்க கிட்டே பேசிக்கிட்டே குடிப்பீங்கனு நினைச்சேன்.” என்றவரின் பார்வையில் இருந்த வித்தியாசத்தில் துணுக்குற்ற துரைசாமி அப்பொழுது தான் அங்கே நின்று உடலை நெளித்துக் கொண்டு நின்ற சரசுவைக் கண்டு பதறினார்.

‘அய்யோ... பாதகத்தி இவ எதுக்கு இங்கே வந்தா? இவ நுழைஞ்சா குடும்பமே அழிஞ்சுடுமே’

“என்னம்மா ? யார் நீ? என்ன வேணும் உனக்கு?” முதல் கேள்வியிலேயே அவளுக்கும் தனக்கும் எந்தவித முன் அறிமுகமும் இல்லை என்பதை மறைமுகமாக மேகலாவிற்கு தெரியப்படுத்தினார் துரைசாமி.

“அது... வந்து அய்யா கிட்டே கொஞ்சம் தனியா பேசணும்...”வேண்டுமென்றே புடவை மாராப்பை சரி செய்வது போல அவரிடம் வழிந்தாள்.

“சரி சொல்லு... இவ என்னோட பொண்டாட்டி தான். இவளுக்குத் தெரியாம இந்த வீட்டுல ஒரு துரும்பு கூட நகராது” என்று சொல்ல.. சரசுவின் முகம் அதிருப்தியை வெளிக்காட்டினாலும் உடனே சோர்ந்து போகவில்லை அவள். இப்படி பேசிய எத்தனை ஆண்களை பார்த்து இருக்கிறாள் அவள்.

“ரொம்ப முக்கியமான விஷயம் அய்யா.. என்னோட உயிரும், மானமும் சம்பந்தப்பட்டது.” என்று அவள் சொல்லி முடிக்கும்போது கணவன் , மனைவி இருவர் முகத்திலும் வந்து போன எள்ளலைக் கண்டு உள்ளுக்குள் பொங்கிய வஞ்சத்தை நாசுக்காக மறைத்து முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.

“அதெல்லாம்... எதுவா இருந்தாலும்...”பேசிக் கொண்டே போனவர் அவருடைய போன் ஒலிக்கவும்... ஒரு நிமிடம் பதறி... வெளியே தெரியாதவாறு அதை மறைக்க முயன்றார்.

“ஏய்!.. காபியில் சர்க்கரையே இல்லை... உள்ளே போய் எடுத்துட்டு வா”

“என்னங்க...”

“ஏய் உள்ளே போய் எடுத்துட்டு வா” என்றவரின் முக பாவனை கோவமாக மாற, ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் மேகலா.

சரசு அங்கே இருப்பதை உணர்ந்தாலும் மேகலா வருவதற்கு முன் போனை பேசி விட வேண்டும் என்ற அவசரத்துடன் போனை எடுத்து பேசினார்.

“என்ன?”

“...”

“அதெல்லாம் முடியாது...”

“...”

“எல்லாம் என் தலை எழுத்து” என்று கடுப்புடன் போனை வைத்து விட்டார்.

“என்ன வேணும் உனக்கு? எதுக்கு என் வீட்டை தேடி வந்து இருக்க?”ஒருவித வெறுப்புடனே பேசினார்.

“அது... வந்து அய்யா... நீங்க இரண்டு நாளா என் வீட்டு வாசலிலேயே தவமா தவம் இருக்குறீங்களாம்... என்னோட வேலைக்காரன் சொன்னான். அது தான் அய்யா வீட்டுக்குள்ளே வர கூச்சப்பட்டுக்கிட்டு... உங்களுக்கு வர சங்கடமா இருந்தா... நா... நானே இங்கே வரட்டுமானு... கேட்க வந்...” என்று பேசிக் கொண்டே போனவள் அவரின் முகம் கோபத்தில் சிவக்கத் தொடங்க பேச்சை தட்டுத் தடுமாறி நிறுத்தி விட்டாள்.

“நான் அங்கன வேற ஒரு சோலியா வந்தேன்... இனி எப்போ தேவைப்பட்டாலும் அந்தப் பக்கம் வருவேன். அதுக்காக என் வீட்டுப் படியேறி வந்து என்கிட்டேயே இப்படி கேட்பியா? என்ன நெஞ்சழுத்தம் உனக்கு?”

“இதுல ஒண்ணும் தப்பில்லைங்களே அய்யா... ஊர் உலகத்துல யாரும் செய்யாததா? அதுவும் வசதியும், நெஞ்சில தைரியமும் கொட்டிக் கிடக்கிற எல்லா ஆம்பிளைங்களும் செய்றது தானே?” அங்கத்தை இன்னும் கொஞ்சம் வளைத்து நெளித்தாள்.

“இந்தாரு... என் பொண்டாட்டி வந்தா... அவ கையில விளக்கமாத்த கொடுத்து உன்னை அடிக்க சொல்லிடுவேன்... ஒழுங்கா ஓடிடு...”

“உங்களுக்காக என் வீட்டுக் கதவு...”

“எலேய்! முனியா... வீட்டுக்குள்ளே இருக்கிற என்னோட துப்பாக்கியை எடுத்துட்டு வாடா... ஒரு பன்னி சேத்துல புரண்டுட்டு அப்படியே நம்ம வீட்டுப் பக்கம் வரப் பார்க்குது”என்று சொல்ல முனியனும் வீட்டுக்குள் செல்லப் போக.. உயிர் பிழைத்தால் போதுமென்று ஓடி வந்து விட்டாள் சரசு.

மேகலா வந்து பார்த்த பொழுது அங்கே சரசு இல்லாமல் போனது நிம்மதியைக் கொடுத்தாலும் அவர் இல்லாத நேரம் சரசு அவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை வீட்டு வேலையாட்கள் தங்களுக்குள் கிசுகிசுத்ததை கேட்க நேர்ந்த பொழுது அவரையும் அறியாமல் நெஞ்சின் ஓரம் ஒரு வலி எழுந்தது உண்மை.

அன்றைய பொழுது சரசுவை வெளியேற்றி விட்டார் என்று நிம்மதியாக இருந்தாலும் தொடர்ந்து அவர் சரசுவின் வீட்டு வாசலில் தான் இரவு முழுக்க நின்றார்.

துரைசாமி வீட்டின் உள்ளே செல்ல மாட்டார் தான். ஆனால் காரில் அமர்ந்து இரவு முழுக்க தூங்காமல் அங்கேயே இருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக ஊர் முழுக்க இந்த விஷயம் பரவத் தொடங்கியது.

“அய்யா எதுக்கு சரசு வீட்டுப் பக்கம் தினம் போறாரு”

“வீட்டுப்பக்கம் தானே போறார்... அதெல்லாம் நம்ம அய்யா ராமர் மாதிரி”

“என்ன தான் ராமராவே இருந்தாலும் தினம் வேசி வீட்டு வாசல்ல நிற்கிறது எல்லாம் எனக்கு என்னவோ சரியா படலை”

“எத்தனை நாள் அவர் சும்மா வாசலோட நிற்க முடியும்? என்னிக்காவது இவர் அந்தப் படியைத் தாண்டி உள்ளே போகத் தான் போறார்”

“ஏய்! அப்படி எல்லாம் சொல்லாதே.. அதெல்லாம் அய்யா அப்படி சரசு  வீட்டுக்குள்ளே போக மாட்டார்”

“ஹ... தேனைத் தின்னவன் புறங்கையை நக்காம இருப்பானா?”

“பைத்தியம் மாதிரி பேசாத... அய்யா ஏதாவது செஞ்சா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்”

“ஹ... ஆம்பிளை... தினம் வேசி வீட்டுக்குப் போனா அதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான் இருக்கும்...”

“அப்படியா சொல்ற”

“இப்பவாச்சும் உன் மூளையை வச்சு கொஞ்சம் யோசிச்சு பாரு”

“நீயும் மூளைக்காரன் தான்டா”

கோவில் தூணிற்கு மறுபுறம் சத்யன் இருப்பது தெரியாமல் ஊரில் வம்பு பேசிக் கொண்டு திரியும் ஒரு கும்பல் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க... இந்தப் பக்கம் சத்யனின் நரம்புகள் சூடேறி கொதித்துக் கொண்டு இருந்தது.

வெகு நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தவன் ஒரு முடிவுடன் வீட்டை நோக்கி சென்றான்.

அஞ்சலியும், மேகலாவும் அவனுக்காக காத்திருக்க, உணவு உண்ண செல்லாமல் கூடத்திற்கு வந்து அமர்ந்தான்.

சோர்ந்து போன நடையுடன் வந்து அமர்ந்த சத்யனை எண்ணி கவலை கொண்டாலும் அவனிடம் எதையும் கேட்க பயந்து போய் அவனுக்கு அருகில் போய் நின்றார் மேகலா.

“அப்பா எங்கேம்மா?”

“குளிச்சிட்டு இருக்கார் தம்பி”தரையைப் பார்த்த வண்ணம் பதில் சொன்னார் மேகலா. அதற்கு அர்த்தம் இன்னும் சில நிமிடங்களில் அவர் சரசு வீட்டிற்கு கிளம்பப் போகிறார் என்பது புரிய... ஒரு பெருமூச்சுடன் அவருக்காக காத்திருக்கத் தொடங்கினான்.

அறையில் இருந்து வெளியே வந்த துரைசாமியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

சத்யன் அங்கே மறந்து இருப்பதைப் பார்த்தாலும் பார்க்காத மாதிரியே அங்கிருந்து நகர முயன்றார்.

“அப்பா... நில்லுங்க... உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்”

“டேய்! நான் பேசுறதைத் தான் இந்த வீட்டில் எல்லாரும் கேட்கணும். நீ பேசுறதை எல்லாம் கேட்கணுமா வேண்டாமான்னு நான் தான் முடிவு பண்ணனும்”

“ஊரே சிரிக்குதுப்பா... நம்மளைப் பார்த்தாலே மரியாதையா பேசினவங்க எல்லாம் இப்போ வேற மாதிரி பேசுறாங்க...நம்ம வீட்டு ஆட்களைப் பார்த்தாலே கண்டபடி பேசி சிரிக்கிறாங்க...”

“ஊர்ல இருக்கிறவன் சிரிக்கிறதுக்கு எல்லாம் நான் என்ன பண்ண முடியும்? அவன் வாய்... அவன் சிரிக்கிறான்?”

“சரி தான்ப்பா... அதுக்கு நீங்க எதுவும் செய்ய முடியாது தான். ஆனா இதுக்கு நீங்க பதில் சொல்லுங்க... செட்டியார் கிட்டே நம்ம தென்னந்தோப்பை அடகு வச்சு இருபது லட்சம் கேட்டீங்களாமே?”

“அ.. அது...”

“டேய்! அது என் சொத்து நான் என்ன வேணா செய்வேன். என்னமோ நீ சம்பாதிச்ச சொத்து மாதிரி என்னை நிற்க வச்சு கேள்வி கேட்கிற?”

“ஊரே உங்களைப் பார்த்து சிரிக்குது. அதைப் பத்தி உங்களுக்கு கவலை இல்லை. நான் கேள்வி கேட்கிறது தான் உங்களுக்கு பெருசா தோணுதா?”

“அதையும் தான் நீ ஏன்டா கேட்கிற?”

“இப்போ என்ன நான் சொத்துக்காகவா இவ்வளவு தூரம் கேட்கிறேன்... நம்ம மானம் போகுது தெரியலையா உங்களுக்கு?”

“ஏய்! என்னடி புள்ள வளர்த்து வச்சு இருக்க? பெத்த அப்பனை நிற்க வச்சு கேள்வி கேட்கிறான். இது தான் நீ புள்ளை வளர்த்த லட்சணமா? அது சரி உனக்கு எங்கே குடும்பத்தைப் பார்க்க நேரம் இருந்துச்சு. தைய தக்கான்னு குதிக்கத் தானே நேரம் இருந்துச்சு. கொஞ்சமாவது குடும்பத்து மேல அக்கறை இருக்கிற பொம்பளை செய்ற காரியமா அது?”

“அப்பா நான் உங்களை  கேள்வி கேட்டா நீங்க எதுக்கு அம்மா பக்கம் திருப்பி விடறீங்க?”

“மறுபடியும் என்னை எதிர்த்து பேசுறான் பாருடி” என்றவர் எகிறிக் கொண்டு மேகலாவை அடிக்கப் பாய... அத்தனை நேரம் அமைதியாக இருந்த அஞ்சலி குறுக்கே பாய்ந்தாள்.

“ஏய்! தரித்திரம்... நகரு...”

“அப்பா...”

“அஞ்சலி நீ நகர்ந்து போ தங்கம்” குரல் நடுங்கியது மேகலாவிற்கு.

“என் கண்ணு முன்னால உங்களை அவர் அடிச்சா என்னால எப்படி அத்தை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியும்?”

“நீ நகரு அஞ்சலி... என்னை மீறி இவர் அம்மா மேல கையை வச்சுடுவாரா?”சத்யன் மறுபக்கம் மேகலாவிற்கு பாதுகாப்பாக நின்று கொள்ள... துரைசாமி இருவரையும் இளக்காரமாக பார்த்து சிரித்து வைத்தார்.

“என்ன எல்லாரும் சேர்ந்து இப்படி நடிக்கறீங்க? ஒழுங்கு மரியாதையா போய் அவங்க அவங்க வேலையை பாருங்க”

“இப்படி எல்லாம் பேசி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம தப்பிச்சுக்க பார்க்காதீங்க”

“இது தானே சத்யா அவர் இத்தனை வருசமா செஞ்சுட்டு இருக்கார்”முதன்முறையாக வாய் திறந்து பேசிய மேகலாவை அங்கிருந்த எல்லாருமே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.


Post a Comment

புதியது பழையவை