சதிராடும் திமிரே 24

 


அத்தியாயம் 24





திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து இருந்தது. புதுமண தம்பதிகளை எங்கேயும் தனித்து அனுப்ப மறுத்து விட்டார் துரைசாமி. மறுவீடு, தேன்நிலவு என்று எங்கேயும் அனுமதிக்கவில்லை அவர். அவருக்குத் தெரியாமல் சத்யனோடு உள்ளூரில் எங்கேயும் போனால் மட்டும் தான் உண்டு.

அதையும் யாராவது வந்து பார்த்து விட்டு எதார்த்தமாக அவரிடம் சொல்லி விட்டால் போதும்... வீட்டுக்குள் நுழைந்ததும் கன்னாபின்னாவென்று கத்தி தீர்த்து விடுவார்.

“யாரைக் கேட்டு அவங்க வெளியே போனாங்க... இந்த சத்யனுக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியலை... எனக்குத் தெரியாம எப்படி அவங்க வெளியே போகலாம்?.. வீட்டுல பெரிய மனுசன்னு நான் ஒருத்தன் இருக்கிறது யாருக்கும் கண்ணுக்குத் தெரியலையா?” என்று கேட்டு கத்தத் தொடங்க.. மேகலா அவசரமாக வந்து அவரை அமைதி படுத்த முயலுவார்.

“என்னங்க... நான் தான் பிள்ளைகளை வெளியே போய்ட்டு வர சொன்னேன்..”

“யாரைக் கேட்டுடி சொன்ன?”

“புதுசா கல்யாணம் ஆனவங்க... கொஞ்சம் சேர்ந்து வெளியே போய்ட்டு வரட்டுமேங்க...”

“அதெல்லாம் போகக் கூடாது... சத்யனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதை எல்லாம் விட்டுட்டு இப்படி பொழுதுக்கும் வெளியே ஜோடி போட்டு சுத்திக்கிட்டு இருந்தா தொழிலை யார் பார்க்கிறது?”

“என்னங்க..சத்யா எல்லா வேலையும் முடிச்ச பிறகு தான் மருமகளை கூட்டிட்டு வெளியே கிளம்புவான். அஞ்சலியும் பொறுப்பான பொண்ணுங்க... வேலை நேரத்துல சத்யாவை தொந்தரவு செய்யாம புரிஞ்சு நடந்துப்பா”

“அவனுக்கு வேலை இருக்கு... இல்லை.. முடிச்சுட்டான்.. முடிக்கலை அது பிரச்சினை இல்லை.. அவங்க இரண்டு பேரும் சேர்ந்து எங்கேயும் வெளியே போகக்கூடாது.. அவ்வளவு தான்”

“நம்ம பொண்ணை மாப்பிள்ளை எங்கே எல்லாம் கூட்டிட்டு போறார் தெரியுமா? அவருக்கு நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் சஹானாவை கூட்டிட்டு எங்கேயாவது ஊருக்குப் போறாங்க”

“என் பொண்ணு நல்லவ... அவளுக்கு அப்பன் நான்... அவ நல்ல மாதிரி வாழ்ந்தா... இந்த வீட்டுக்கு வந்த தரித்திரியமும் அதே மாதிரி வாழணும்னு அவசியம் இல்ல...”

“என்னங்க.. இப்படி எல்லாம் பேசுறீங்க? மருமக காதுல விழுந்தா ரொம்ப வருத்தப்படும்ங்க... நீங்க இப்படி கோபமா பேசுற அளவுக்கு அந்தப் பொண்ணு அப்படி என்ன தான் பண்ணினா.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட துடுக்குத்தனமா ஏதாவது பேசுவா.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அப்படியே அடியோட மாறிப் போய்டுச்சுங்க மருமக.. உங்க வார்த்தைக்கு மறுவார்த்தை கூட பேசுறது இல்ல.. அப்படி இருந்தும் ...”

“நான் பேசுற வார்த்தைக்கு எல்லாம் உனக்கு காரணம் சொல்லணுமா நான்?” உண்மைக் காரணத்தை வெளியே சொல்ல முடியுமா? தன்னை மிரட்டித் தான் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள் என்று சொன்னால் அதற்குண்டான காரணத்தையும் சொல்லியாக வேண்டுமே.

திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி அமைதியாகத் தான் இருந்தாக வேண்டும். அதே நேரம் அந்த வீட்டில் அவள் மகிழ்ச்சியாகவும் இருந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் துரைசாமி.

“இனியொரு முறை இரண்டு பேரும் வெளியே எங்கேயாவது போகட்டும் அப்புறம் என்னோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க”

“என்னங்க...கொஞ்சம்”

“வாயை மூடு... எங்கே அந்த தரித்திரம் பிடிச்சவ”

“அஞ்சலிக்கு உடம்புக்கு முடியலைங்க... உள்ளே படுத்து இருக்காங்க”

“என்ன கேடு வந்துச்சு?”

“வயித்துவலி...”

“ஹுக்கும்... ஊர் உலகத்துல எல்லா பொம்பளைக்கும் வர்றது தானே... எல்லாரும் இப்படித் தான் படுத்து கிடக்கிறாங்களா?”

“பாவம்ங்க.. காலையில இருந்து காபி கூட குடிக்கலை... படுக்கையிலேயே வலி தாங்க முடியாம உருண்டுகிட்டு இருக்கா... இப்போ தான் கசாயம் வச்சு  எடுத்துட்டுப் போறேன்.. கையில் இருந்த டம்ளரை காட்ட... வேகமாக அதைத் தூக்கி தரையில் எறிந்தார்.

“என்னங்க... இப்படி செஞ்சுட்டீங்க... இதெல்லாம் ரொம்ப பெரிய பாவம்ங்க... அவளும் நம்ம பொண்ணு மாதிரி தாங்க” கண்கள் கலங்கி விட்டது மேகலாவுக்கு.

“ஏய்! கண்ட கழிசடை எல்லாம் எனக்குப் பிறந்த பொண்ணோட சேர்த்து வச்சு பேசாதே... அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்...”

“இதெல்லாம் சத்யனுக்கு தெரிஞ்சா?”

“என்னடி... பூச்சாண்டி காட்டுறியா? நான் தூக்கி வளர்த்த பய.. அவன் பேரை சொன்னா நான் அடங்கி இருக்கணுமா? இந்த துரைசாமி யாருக்கும் அடங்க மாட்டான்... நான் நினைச்சதைத் தான் செய்வேன்”

“வேணாம்ங்க.. சொன்னா கேளுங்க.. உங்க குணத்தை மாத்திக்கோங்க.. குடும்பமே அழிஞ்சிடும். இப்போ எல்லாம் உங்க பேச்சு, நடவடிக்கை எல்லாமே ஒரு தினுசா இருக்கு”

“என்னடி... வாய் ரொம்ப நீளுது” கையை ஓங்கிக் கொண்டு மேகலாவை அறையப் போக... ஏற்கனவே பழக்கப்பட்ட ஒன்று தான் என்றாலும் அதிர்ந்து தான் போனார் மேகலா.

“எங்க அம்மா மேல மட்டும் ஒரு அடி விழுந்துச்சு...” கோபத்தில் முகம் கனன்று போய் நின்ற மகனைக் கண்டதும் கையை கீழே இறக்கினாலும் உடனடியாக பின்வாங்கவில்லை துரைசாமி.

“நீ யாருடா.. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் குறுக்கே வர...”

என் அம்மாவோட புள்ளை”

“நான் இல்லாமத் தான் நீ வந்து குதிச்சியோ”

“இந்த கேள்விக்கு எல்லாம் அப்புறம் பதில் சொல்றேன்... நேத்து நைட் எங்கே போனீங்க?” கண் பார்வையில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த வேலையாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தான் சத்யன்.

“எ.. எங்கே போனேன் நான்?”

“அதைத் தான் நானும் கேட்கிறேன்...”

“ஏய்! சும்மா என்னைக் கேள்வி கேட்கிற வேலை வச்சுக்காதே...”

“என்னடா சத்யா... அப்பா கிட்டே எப்பவும் இப்படி குரல் உசத்தி பேச மாட்டியே... என்னாச்சு?” மேகலா கொஞ்சம் கலவரத்துடன் கேட்டார்.

“ஏய்... அவன் கிட்டே என்னடி வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு.. எனக்குத் தலைவலிக்குது.. போய் காபி போட்டு கொண்டு வா” மேகலாவை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார் துரைசாமி. அதை கண்டு கொண்ட சத்யனின் கண்களில் வலி தெரிந்தது.

“அவங்களை ஏன்ப்பா உள்ளே போக சொல்றீங்க... இருங்க அவங்க இருக்கட்டும்.. நேத்து எங்கே போனீங்க?”

“நா.. நான் எங்கே போனேன்... தோப்பு வீட்டுக்கு...”

“அம்மா... அப்பா ராத்திரி வீட்டுல தங்கி ஒரு மாசம் இருக்குமா?”

“ஆமா தம்பி... அதுக்கு என்னடா.. அப்பாவுக்கு வேலைடா.. நீயும் பகல் முழுக்க அலைஞ்சு எவ்வளவு வேலை பார்க்கிற.. அதான் அப்பா ராத்திரியில உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்னு அப்பா வேலையை அவர் பார்க்கிறார்” என்று கணவனுக்கு பரிந்து கொண்டு வர சத்யனின் குற்றம் சாட்டும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார் துரைசாமி.

“நேத்து ராத்திரி முழுக்க... இவர் அந்த சரசு வீட்டு வாசல்ல தான் இருந்து இருக்கார்மா...” என்று சொல்ல மேகலாவின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி..

சரசு அந்த ஊரைப் பொறுத்தவரை ஒரு விலைமாது. அவள் வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும். ஊர் பெரிய மனிதர்கள் பெரும்பாலானவர்கள் இரவில் முக்காடு போட்டுக் கொண்டு அங்கே போய் வருவார்கள்.

‘அந்த வீட்டு வாசலில் விடிய விடிய கணவர் இருந்தாரா?’ நம்ப முடியாமல் மிரண்டு போய் கணவரைப் பார்த்தார் மேகலா. அந்த ஒற்றைப் பார்வை துரைசாமியை அப்படியே நொறுக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் அப்படியே நிமிர்ந்து தெனாவெட்டாய் தான் நின்று கொண்டிருந்தார் அவர்.

“சொல்லுங்கப்பா...”

“என்னடா சொல்லணும்?”

“நேத்து அங்கே எதுக்கு போனீங்க?”

“உனக்கு யாருடா சொன்னா?”

“நானும் என் பொண்டாட்டியும், கோவிலுக்கு போனதை உங்க கிட்டே வந்து சொல்றதுக்கு ஆள் இருக்கும் பொழுது , உங்களைப் பத்தி என்கிட்டே வந்து சொல்றதுக்கு யாரும் ஆள் இருக்க மாட்டாங்களா?”

“எவனோ வந்து சொன்னா... நீ என்னையே கேள்வி கேட்பியா?”

“அப்பா... நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க...”

“டேய்! தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்கக் கூடாதுனு பார்க்கிறேன்... மரியாதையா போ”

“வேண்டாம்ப்பா.. இதெல்லாம் நல்லா இல்லை.. என்கிட்டேயே உங்களை  ஒரு மாதிரி பேசுறாங்க... பேசுனவன் வாயை உடைக்கிற அளவுக்கு எனக்கு ஆத்திரம் இருக்கு. ஆனா அவங்களை என்ன செய்றது? அவங்க யாரும் பொய் பேசலையே...”

“உனக்கு எல்லாம் நான் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை... ஏய்! சூடா காபி போட்டு ரூமுக்கு எடுத்துட்டு வாடி” விரலை சொடுக்கிட்டு சொன்னவர் அடுத்த நொடியே அங்கிருந்து நகர முயன்றார்.

அதே நேரம் வீட்டுக் கணக்குப் பிள்ளை வேகமாக வந்தார்.

“அய்யா... நம்ம ஊர் செட்டியார் கிட்டே இருந்து உடனே ஒரு அஞ்சு லட்சம் வாங்கிட்டு வர சொல்லி இருந்தீங்களே? இந்தாங்க அய்யா பணம்..” என்று பவ்யமாக ஒரு மஞ்சள் பையை அங்கே வைத்தவர் அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விட்டார்.

துரைசாமிக் ஆடு திருடிய கள்ளனைப் போல விழிக்க... மேகலா, சத்யன் இருவருமே அதிர்ந்து தான் போனார்கள் அவர்கள் காதில் விழுந்த செய்தியால்.

அஞ்சலி வெளியே நடக்கும் வாக்குவாதங்களை கேட்டு என்ன பிரச்சினையோ என்று எண்ணி ஹாலுக்கு வந்தாள் மெதுவாக நடந்து.

“அப்பா செட்டியார் அநியாய வட்டிக்கு பணம் கொடுக்கிறவராச்சே.. அவர் கிட்டே எதுக்குப்பா பணம் வாங்குனீங்க?அஞ்சு லட்சம் பணம் எல்லாம் நமக்கு ஒரு பெரிய விஷயமா? உங்க அக்கௌன்ட்ல இருக்குமே... பேங்க் அக்கௌன்ட்ல எதுவும் பிரச்சினையா? நான் வேணும்னா மேனேஜர் கிட்டே பேசட்டுமா?”

அப்பா ஏதோ பிரச்சினையில் மாட்டிக் கொண்டாரோ என்று பரிதவிப்புடன் கேட்ட மகனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை அவரால்.

“பேங்க் மேனேஜர் என் பிரண்டோட அப்பா தான்... நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா மாமா” உதவி செய்ய முன்வந்த அஞ்சலியைப் பார்த்து தீயாய் முறைத்தார்.

“ஏய்! உன்கிட்டே வந்து எனக்கு உதவி செய்னு நான் கேட்டேனா? உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ”

“அப்பா.. அஞ்சலி என்னோட பொண்டாட்டி...”

“இருந்துட்டுப் போகட்டும்... அதுக்காக என்னோட விஷயத்துல மூக்கை நுழைப்பாளா அவ”

“உதவி தானப்பா செய்ய வர்றா?”

“இந்த கேடு கெட்டவ எனக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்...”

“அப்பா... நீங்க வரம்பு மீறி பேசுறீங்க”

“எனக்கு வரம்பு நிர்ணயம் பண்ண நீ யாருடா... இது என்னோட வீடு ... நான் அப்படித் தான் பேசுவேன்...”

“என்னோட பொண்டாட்டிக்கு மரியாதை இல்லாத வீட்டுல நானும் இருக்க மாட்டேன்...”

“போயும் போயும் இந்த கேடு கெட்டவளுக்காக என்னையே எதிர்த்து பேசுறியா?” துரைசாமி சத்யன் மீது பாயத் தயாராக அவரின் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக நின்ற சத்யனையும் பார்த்து மேகலாவும், அஞ்சலியும் பதறிப் போனார்கள். 

இருவரும் குறுக்கே பாய்ந்து தத்தமது கணவர்மார்களை பிரித்து தங்களுடைய அறைக்கு இழுத்து சென்றார்கள்.

அன்று முழுவதும் வீடு அமைதியாகவே இருந்தது. யாரும் தங்களுடைய அறையை விட்டு வெளியே வரவில்லை.

மேகலா மூலமாக சத்யனுக்கும், அஞ்சலிக்கும் உணவு அவர்களின் அறைக்கே அனுப்பி வைக்கப்பட்டது.

சத்யன் கட்டிலில் அமர்ந்து இருக்க, அவனது மடியில் தலை வைத்து படுத்து இருந்தாள் அஞ்சலி.

“அப்பா ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறார் அஞ்சலி? முன்னாடியும் அவர் எங்க எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசுவார் தான். ஆனா சமீப காலமா அளவுக்கு அதிகமாவே பணம் செலவழிக்கிறார். காரணமும் சொல்ல மாட்டேங்கிறார். அப்பப்போ பெரிய பெரிய தொகையா பேங்கில் இருந்து எடுக்கிறார்.

எதுக்காக, யாருக்காக ஒன்னும் புரியலை. இப்போ என்னடானா அந்த சரசு வீட்டு வாசலுக்குப் போய் நிற்க ஆரம்பிச்சு இருக்கார்.

முன்னாடி அவர் தொடர்ந்து பணம் எடுத்தப்போ கூட ஏதோ பெரிய கடன்ல மாட்டிக்கிட்டார் போலன்னு நினைச்சேன். ஆனா இப்போ சரசு வீட்டுக்கு போறதை எல்லாம் பார்த்தா வேற ஏதோ பிரச்சினை மாதிரி இருக்கே...

ஒரு நல்ல பையனா இப்போ நான் என்ன செய்யட்டும் அஞ்சலி?” குழந்தைப் போல கலங்கித் தவித்த சத்யனைக் கண்டு அவள் உள்ளம் துடித்தது.

சோர்வாக படுத்து இருந்தவள் மெல்ல எழுந்து அவனை தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டாள்.

“நீங்க சொல்ற மாதிரி மாமாவுக்கு உண்மையிலேயே கடன் பிரச்சினை இருக்கலாம். தேவை இல்லாம கண்டதையும் போட்டு குழப்பிக்க வேண்டாம். கொஞ்ச நாள் பொறுமையா இருங்க... எல்லாம் சரி ஆகிடும்”

“உங்க அண்ணனுக்கு தெரிஞ்ச போலீஸ் இல்லேன்னா டிடெக்டிவ் கிட்டே சொல்லி அப்பாவை கண்காணிக்க சொல்லலாமா?”

“அய்யய்யோ... அதெல்லாம் வேண்டாம்ங்க... மாமாவுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆகிடும்... அதுவும் இல்லாம மூணாவது மனுசங்களை விட்டு உங்க அப்பாவையே நீங்க வேவு பார்க்கிறது தெரிஞ்சா குடும்பத்துல இன்னும் அமைதி கெட்டுடும்”

“இப்போ என்ன தான் செய்றது அஞ்சலி?”

“கொஞ்ச நாள் விஷயத்தை ஆறப் போடுவோம்... மாமாவே நிலைமை சரி ஆனதும் நம்ம கிட்டே  எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லுவார்”

“நிஜமாத் தான் சொல்றியா?”

“நிஜம்ம்ம்மா”அவனது முன்னுச்சி முடியை கலைத்து விளையாடினாள் அஞ்சலி.

“என்னவோ தெரியல அஞ்சலி... தொழில்ல பெரிய பெரிய முடிவை எல்லாம் அசால்ட்டாக எடுப்பேன். அப்பாவோட நடவடிக்கையில் மொத்தமா குழம்பி போயிட்டேன். இப்போ உன்கிட்டே பேசுனதும் கொஞ்சம் தெளிவா, தைரியமா இருக்கு”

அன்றைய பொழுது ஒரு மாதிரியாக போனாலும்.. அடுத்த நாள் விடியலில் எல்லாமே சரி ஆகி விடும் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாள் காலை வீட்டு வாசலில் சரசுவைக் காணும் வரை.

Post a Comment

புதியது பழையவை