சதிராடும் திமிரே 26

 

அத்தியாயம் 26



“என்னடி எல்லாரும் உனக்காக குரல் கொடுக்கவும் புதுசா தைரியம் எல்லாம் வருதோ? கேள்வி எல்லாம் கேட்கிற?”

“என்னோட தைரியம் எப்பவும் என்னோடவே தான் இருக்கு. ஏன்னா என்கிட்டே நேர்மை இருக்கு”

“அப்போ நான் என்ன திருட்டுப் பயலா?”கண்கள் சிவக்க ஆத்திரத்துடன் பேசியவரை நிமிர்ந்து பார்த்தார் மேகலா. அவர் பார்வையில் இருந்த ஏதோவென்று துரைசாமியை வாய் அடைக்க செய்தது.

“உங்களை கல்யாணம் பண்ணி உங்க கூட இருபத்து அஞ்சு வருசம் வாழ்ந்து இருக்கேங்க. உங்களோட ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும்”

“....”

“உங்க கிட்டே நேர்மை இருக்குன்னா.. என் பையன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம். எனக்கு நல்லாத் தெரியும். உங்களால பதில் சொல்ல முடியாது. ஊர்ல இருக்கிறவங்க எல்லாரும் நீங்க அந்த வீட்டு வாசல்ல தினமும் போய் நிற்கிறதைப் பத்தி எப்படி எல்லாம் பேசுறாங்கனு எனக்குத் தெரியும். ஆனா இப்போக் கூட எனக்கு உங்க மேல ஒரு துளி கூட  அந்த மாதிரியான சந்தேகம் இல்ல. ஆனா எதையோ மறைக்கறீங்க அது மட்டும் எனக்குத் தெரியும்” என்றவர் உறைந்து நின்ற துரைசாமியை பாராதவர் போல நகர்ந்து விட்டார்.

உடைந்து போய் பேசிய மேகலாவை தேற்றுவதற்கு சத்யனும், அஞ்சலியும் நகர்ந்து விட, ஆறுதல் சொல்வதற்கு கூட யாரும் இல்லாமல் நொறுங்கிப் போய் அப்படியே அமர்ந்து விட்டார் துரைசாமி.

குடும்பத்தில் யாருமே அவருக்கு அருகில் இல்லை. உள்ளம் உடைந்து போய் இருந்தார்.

வழக்கம் போல அவருக்கு போன் அழைப்பு வர, இந்த முறை அவர் முகத்தில் பதட்டம் இல்லை. கோபத்தில் முகம் சிவந்து போய் போனை ஆன் செய்து பேசத் தொடங்கினார்.

“இப்போ எதுக்கு போன் பண்ணி என்னோட உயிரை வாங்குற”

“மணி ஒன்பது ஆச்சு... இன்னும் சரசு வீட்டுக்குப் போகலையா நீ?”

“போகலை... இனி போகவும் மாட்டேன்... நான் எதுக்குடா போகணும்... போக முடியாது” ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி கத்தித் தீர்த்தார் துரைசாமி.

“இதோ பாருய்யா.. பெரிய மனுஷா? அந்த புள்ளை சரசு எனக்கு ரொம்பவும் வேண்டிய ஆளு. இந்த நேரம் அவளோட உயிருக்கு ஆபத்து இருக்கு. அதனால தான் உன்னை தினமும் அவளுக்கு காவலா இருக்க சொல்றேன்”

“இனி என்னால முடியாது.”

“உன்னால முடியாதுன்னா... நான் தான் வந்து அவளை பார்த்துக்கணும்... வரட்டுமா? அப்படி வந்தா எனக்காக காத்துக்கிட்டு இருக்க போலீஸ் கண்ணுல  மாட்டுவேன். அதுக்கு அப்புறம் கோர்ட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போக மாட்டாங்க. நேரா உன் மருமகன் முன்னாடி தான் என்னை நிறுத்துவாங்க.

போலீஸ் என்னை தேடுறது பத்தாதுன்னு உன்னோட மருமகன் வேற ஊர்ல இருக்கிற எல்லா டிடெக்டிவ்யும் விட்டு என்னை தேடிட்டு இருக்கான். அவன் கையில நான் மாட்டுனா எனக்கு ஒண்ணும் இல்லை. ஆனா உன்னோட நிலைமையை யோசிச்சு பார்த்தியா?

எனக்குத் தெரிஞ்சு உன்னோட மருமகன் மாமனார்ன்னு எல்லாம் பாவம் பார்க்க மாட்டான். அப்புறம் உன்னோட பொண்டாட்டி, புள்ளை...யோசிச்சுக்கோ சொல்லிட்டேன்”

“என்னை ஏன்டா இப்படி சாவடிக்கிற?”

“ஹே... நல்ல கதையா இருக்கே... பொண்ணையும், மருமவனையும் சாவடிக்க சொன்னது நீயி... இப்போ என்னைப் போய் இப்படி சொல்ற? சொல்லப் போனா உன்னை விட நான் எவ்வளவோ மேல்... நான் அவளை பத்திரமா பார்த்துக்கத் தான் சொல்றேன். உன்னை மாதிரி கொல்ல சொல்லலை”அந்தப் பக்கம் இருந்தவனும் நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல பேச... துரைசாமிக்கு பதில் பேச முடியாமல் போனது.

“ஆமா நான் இருபது லட்சம் கேட்டேனே ரெடி பண்ணிட்டியா?”

“என்னடா ஏதோ கொடுத்து வச்ச மாதிரி அடிக்கடி பணத்தை கேட்கிற... ஏற்கனவே உன்னால என்னோட சொத்தை எல்லாம் அடகு வைக்க ஆரம்பிச்சுட்டேன். வீட்டுல எவ்வளவு பிரச்சினை தெரியுமா?”

“பார்த்தியா... மறுபடி என் மேலேயே பழியை போடுற. என்னவோ இரக்கப்பட்டு இதெல்லாம் செய்ற மாதிரி பேசுற... நான் வெளியே வந்தா நீ உள்ளே போய்டுவ..அதுக்காக தான் இதெல்லாம் செய்ற.”

“அதுக்காக இப்படி கேட்டுட்டே இருப்பியா?”

“இந்த தடவை மட்டும் பணத்தை ஏற்பாடு செஞ்சு கொடு. நான் பக்கத்து ஸ்டேட்டுக்கு போய்டலாம்னு இருக்கேன். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். போகும் பொழுது சரசுவையும் கூட்டிட்டு போய்டுவேன். அதுவரை பத்திரமா அவளை பார்த்துக்கிட்டா போதும்”

எப்படியாவது பணத்தை ஏற்பாடு செஞ்சு தர்றேன். வாங்கிட்டு தயவு செஞ்சு எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போய்டு”

“எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா இப்படி ஒரே இடத்துல அடைஞ்சு கிடக்கணும்னு. அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.”

“சொல்லித் தொலை...”

“அடுத்த வாரம் வேற ஹோட்டல்ல தங்கலாம்னு இருக்கேன்.”

“ஏன்டா? இப்போ இருக்கிற ஹோட்டலே நல்ல வசதியான இடம் தானே? அதுவுமில்லாம ரொம்ப பாதுகாப்பான இடமும் கூட

“இடம் எல்லாம் வசதியா தான் இருக்கு. ஆனா நினைச்சா நேரம் சரக்கும், பொண்ணும் கிடைக்க மாட்டேங்குது.”என்று சவடாலாக சொல்ல, காதில் வைத்து இருந்த போனை எடுத்து சில நொடிகள் வெறித்துப் பார்த்தார் துரைசாமி.

அதைத் தவிர அவரால் வேறு என்ன செய்து விட முடியும்? எதை சொன்னாலும் அதற்கு நீ தான் காரணம் என்று அம்பை அவர் பக்கமே அவன் திருப்பி விடுவான் என்பதை இத்தனை நாள் வழக்கத்தில் கண்டு கொண்டு விட்டாரே.

“சரி... இருபது லட்சம் எப்போ கிடைக்கும்?”

“நாளைக்கு உனக்கு வந்துடும்”

“ம்ம்.. எவ்வளவு சீக்கிரம் வருதோ... அவ்வளவு சீக்கிரம் நான் கிளம்பிடுவேன். என்னோட தொல்லை உனக்கு இருக்காது”

‘அதுக்குத் தானே இவ்வளவு பாடும்’ மனதில் மட்டும் தான் நினைக்க முடிந்தது அவரால்.

போனை பேசி விட்டு திரும்பியவர் அங்கே நின்ற மேகலாவை கண்டதும் அதிர்ந்து போனார்.

‘அய்யயோ... இவ எப்போ வந்தா? என்னவெல்லாம் காதுல விழுந்துச்சுனு தெரியலையே’

மேகலாவோ அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லை. கையில் இருந்த பாலை டேபிளில் வைத்தார்.

“பால் வச்சு இருக்கேன்.. குடிச்சுடுங்க”

“மே... மேகலா... அது.. நான்” மேகலா கோபப்பட்டு ஏதேனும் பேசி இருந்தால் கூட அவருக்கு இந்த அளவுக்கு தடுமாற்றம் வந்து இருக்காதோ என்னவோ? ஒன்றுமே பேசாமல் அமைதியாக போனது அவருக்கு ஒருவித கலக்கத்தைக் கொடுக்க.. மனைவியை தடுத்து நிறுத்தி பேசத் தொடங்கினார்.

“எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்லைங்க... எப்படியும் நீங்க உண்மையை சொல்லப் போறது இல்லை. ஒருவேளை நியாயம் உங்க பக்கம் இருந்து இருந்தா... இந்த பிரச்சினை ஆரம்பிக்கும் போதே என்கிட்டே எல்லாத்தையும் சொல்லி இருப்பீங்க... நீங்க பூசி மொழுகும் போதே எனக்கு தெரிஞ்சுடுச்சு... வேண்டாம்... வீணா பொய் சொல்லி கஷ்டப்படுத்திக்காதீங்க” என்று கொஞ்சம் விட்டேற்றியாக சொல்லி விட்டு போக.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டது.

‘நான் தப்பே செஞ்சு இருந்தாலும் பொண்டாட்டி இவ கண்ணை மூடிக்கிட்டு புருசன்காரன் பக்கம் வந்து நிற்க வேண்டியது தானே? புதுசா எதிர்த்து எல்லாம் பேசுறா? இதை இப்படியே விடக் கூடாது... அப்புறம் வாய் நீளமாகிடும்’

“ஏய்! மேகலா காலையில வரும் பொழுது ஆட்டுக்கால் சூப்பு செஞ்சு வை... புரிஞ்சுதா?”அதிகாரத்துடன் கட்டளை இட்டவர் காரில் ஏறி சரசுவின் வீட்டிற்கு சென்று விட்டார்.

அவர் போன பிறகு இரவு முழுக்க... மேகலா கொஞ்சம் கூட தூங்கவில்லை. இரவில் ஒருமுறை வெளியே  வந்து தண்ணீர் குடித்த சத்யனும் அன்னையின் அறையில் லைட் எரிவதையும், அவர் இன்னும் உறங்காமல் விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தவன் எதையும் சொல்லாமல் மன வருத்தத்துடன் அங்கிருந்து சென்று விட்டான்.

அவனுக்கும் உறக்கம் வரவில்லை. வீட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தும் பாராதவள் போல உறங்க முற்பட்டாள் அஞ்சலி.

என்ன நடந்தாலும் சரி... வாயைத் திறந்து எதையும் பேசி விடக் கூடாது என்பதில் வெகு உறுதியாக இருந்தாள் அஞ்சலி.

‘உன் பேச்சைக் கேட்டுத் தான் இந்த அளவுக்கு பிரச்சினை ஆகி விட்டது’ என்ற வார்த்தையை அந்த வீட்டில் யாரும் சொல்வதற்கு வாய்ப்பே தரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.

அப்பொழுது தானே அவளது திட்டம் பலிக்கும்.

அடுத்த நாள் காலை யாரும் எதிர்பாரா விதமாக சஹானாவும், அபிமன்யுவும் வீடு தேடி வந்து இருந்தார்கள்.

‘என்ன இந்த நேரத்தில்?’ என்ற பதட்டத்துடன் மேகலா வேகமாக வெளியே வர, அபிமன்யுவோ... முகம் கொள்ளா புன்னகையுடன் சஹானாவை கைகளில் ஏந்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

“இந்தப் பக்கம் ஒரு படத்துக்கு சூட்டிங் வந்தோம் அத்தை... வர்ற வழியில சனாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை”பேசியபடியே அவளை சோபாவில் அமர வைத்தான்.

“அச்சச்சோ... என்னாச்சு விஷ்வா?”மேகலா பதற... அவரின் பதட்டம் நிறைந்த குரல் கேட்டு அஞ்சலியும், சத்யனும் அறையை விட்டு வெளியே வந்தவர்கள் அபிமன்யுவையும், சஹானாவையும் பார்த்து முகம் மலர்ந்தார்கள்.

“பயப்படும் படியா ஒண்ணுமில்லை அத்தை.. வந்து சஹானா... நான்... இல்ல.. நீங்க..”லேசான வெட்கத்துடன் தடுமாற... அனுபவசாலியான மேகலாவின் மனம் நிறைந்து போனது.

பூரிப்புடன் மகளின் முகத்தை பார்த்தார். சஹானாவோ வெட்கத்துடன் அபிமன்யுவின் பின்னே முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“அஞ்சலி... உள்ளே போய் சர்க்கரை எடுத்துட்டு வா” என்று ஆர்பரிக்க.. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.

இந்த நேரத்துல இவ்வளவு தூரம் பிரயாணம்...?” நல்ல விஷயம் தான் எனினும் அபிமன்யு தவறாக எடுத்துக் கொள்வானோ என்று எண்ணி பாதியில் நிறுத்த... அபிமன்யுவோ புரிந்து கொண்டார் போல புன்னகை புரிந்தான்.

“இங்கே வரும் வழியில் தான் எங்களுக்கே தெரிஞ்சது அத்தை... நல்லவேளை காரில் வந்தோம்... அதான் நிறுத்தி நிதானமா வர முடிஞ்சது. வர்ற வழியில ஒரு ஹாஸ்பிடலில் செக் பண்ணிட்டோம். டாக்டர் பயப்பட ஒண்ணுமில்லை சனா ரொம்ப ஆரோக்கியமா இருக்கானு சொன்னாங்க”

“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை...” என்று சத்யன் அபியின் கையைப் பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவிக்க, அஞ்சலி சஹானாவை கட்டிக் கொண்டாள்.

“அப்பா, அம்மாவுக்கு சொல்லிட்டியா அண்ணா?”

“வர்ற வழியிலேயே சொல்லிட்டேன் அஞ்சலி... அப்புறம் அத்தை... நான் பக்கத்துல ஒரு கிராமத்துக்கு சூட்டிங்க்காக வந்தேன். எப்படியும் ஒரு வாரம் ஆகிடும்.என்னோடவே அவளையும் வச்சுக்கலாம்னு நினைச்சு தான் கூட்டிட்டு வந்தேன். ஆனா இப்போ கொஞ்சம் பயமா இருக்கு. அவளை தனியா விட்டுட்டு எங்கேயும் போக.. சூட்டிங் முடியும் வரை சனா இங்கேயே இருக்கட்டும்.”

“அதுக்கென்ன மாப்பிள்ளை... நான் தங்கமா பார்த்துக்கிறேன்... நீங்க கவலைப்படாம போய் உங்க வேலையைப் பாருங்க.”

“அப்பா எங்கேம்மா?”தான் தாய் ஆகப் போகும் செய்தியை தந்தையிடம் சொல்லி மகிழ எண்ணி அவள் தேட... அதைக் கேட்ட மற்றவர்களின் முகம் கலவரமானது.

“அ... அது... அப்பா...”என்று மேகலா தடுமாற... அதே நேரம் உள்ளே நுழைந்தார் துரைசாமி.

“யார் வந்து இருக்கிறது? அதுவும் இந்த நேரத்துல? ஓ.. நீங்களா? என்ன மறுபடியும் உங்க வீட்டு பெண்ணை பார்த்துட்டு போக வந்தீங்களா?” வந்திருப்பது மகளும், அவரது வீட்டு மாப்பிள்ளை என்பதும் மறந்து போய் விட்டதைப் போல பேசியவரை என்ன சொல்வது என்று புரியாமல் எல்லோரும் தவித்தனர். அந்த தவிப்பு அபிமன்யுவிற்கு கிடையாதே.

“என்ன மாமா? கொஞ்ச நாள் பார்க்கலைனா சொந்த மகளையும், மருமகனையும் கூட மறந்துடுவீங்க போல.. நீங்க எப்படித் தான் பஞ்சாயத்து எல்லாம் செய்றீங்களோ?”

“முக்கியமான விஷயம் எல்லாம் எப்பவும் மறக்காது எனக்கு”

“அது தான் தெரியுதே” என்று அபிமன்யு கிண்டல் செய்தான்.

“அப்புறம் என்ன விஷயமா வந்தீங்க? பொண்ணு கொடுத்த வீட்டுக்கு அடிக்கடி வர்றது எல்லாம் எங்க ஊர் பழக்கம் இல்ல...”

“அப்பா... மாப்பிள்ளையை கொஞ்சம் பேச விடுங்க...”சத்யன் கண்டிப்புடன் சொல்ல... வேண்டா வெறுப்பாக வாயை மூடிக் கொண்டார்.சத்யனுக்கு அவர் மீது ஆயிரம் கோபம் இருந்தாலும் இந்த நேரத்தில் அதை எதையும் வெளிக்காட்டிக் கொள்ள நினைக்கவில்லை அவன்.

“இந்தப் பக்கம் ஒரு சூட்டிங் இருந்தது மாமா.. இங்கே கொஞ்சம் சனாவோட சுத்திப் பார்க்கலாம்னு அவளையும் சேர்த்து கூட்டிட்டு வந்தேன். அப்போ...”

எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க... துரைசாமியின் போன் ஒலிக்கத் தொடங்கியது.

அதை எடுத்து பேச அவர் விரும்பவில்லை. இரண்டு முறை அதை எடுத்து கட் பண்ணி விட்டு அவர்களின் பேச்சை கூர்ந்து கேட்டுக் கொள்வது போல பாவனை செய்ய ஆரம்பித்தார். அபிமன்யு சொன்ன எதையுமே அவர் காதிலேயே வாங்கவில்லை. அவரது கவனம் முழுக்க கையில் இருந்த போனிலேயே இருந்தது.

“அம்மா, நீங்களும் அப்பாவும் எங்களை ஆசீர்வாதம் செய்ங்க” காலை லேசாக தாங்கி நடந்தவள், கணவனோடு ஆசீர்வாதம் வாங்குவதற்காக காலில் விழ முனைய, அபிமன்யுவிற்கு துரைசாமியின் காலில் விழுவதற்கு விருப்பமே இல்லை எனினும் கருவுற்று இருக்கும் மனைவியை வருந்த வைக்க விரும்பாமல் அவரது காலில் விழ முனைந்தான்.

அப்பொழுது தான் துரைசாமி அந்த காரியத்தை செய்தார்.  கணவனின் உதவியுடன் மெல்ல கால்களை தாங்கி அவரிடம் ஆசி வாங்குவதற்காக குனிந்த மகளை ஆவேசத்துடன் தள்ளி விட்டு வெளியே போய் விட்டார்.

“சனா” என்று உயிர் பதறும் குரலில் கதறினான் அபிமன்யு.

Post a Comment

புதியது பழையவை