அத்தியாயம் 28
மனம் முழுக்க சஹானாவிற்கு ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும் அது எல்லாவற்றையும்
பின்னுக்கு தள்ளிவிட்டு முதலில் நின்றது அபிமன்யு அவளை முதன்முதலாக கடற்கரையில்
பார்த்ததாக சொன்னதே. ‘இவர் என்னை ஊரில் அருவிக்கரையில் தானே பார்த்தார்.அப்புறம்
ஏன் கடற்கரையில் பார்த்ததாக சொன்னார்?’ என்ற கேள்வியே அவளுடைய தலையை போட்டுக்
குடைந்தது.
ஏதேதோ யோசனையில் மூழ்கி இருந்தவள் வீடு வந்ததை கூட அறியாமல் அப்படியே
யோசனையோடு இருந்தாள்.அவளுடைய தோளில் தட்டி அவளை சுய உணர்வுக்கு கொண்டு வந்தார்
பார்வதி.
“வீட்டுக்கு வந்தாச்சு சஹானா...கீழே இறங்கு”
“வேண்டா வெறுப்பாக காரை விட்டு கீழே இறங்கியவள் ஒரு நிமிடம் அரண்மனை போல
இருந்த அந்த வீட்டின் அழகில் தன்னை மறந்து ரசிக்கத் தொடங்கினாள். அவளுடைய ஊரிலேயே
அவளது வீடு தான் பெரிய வீடு.இங்கே அபிமன்யுவின் வீடோ அதை விட பல மடங்கு பெரிதாக
இருந்தது.நொடியில் தன்னை சுதாரித்தவள் மெல்ல திரும்பிப் பார்த்தாள்.
அபிமன்யுவின் கார் அப்பொழுது தான் வீட்டின் உள்ளே நுழைந்தது.அவர்கள் வந்த
காருக்கு பின்னேயே வந்து காரை நிறுத்தியதும் வேகமாக அங்கே பிரசன்னமான வாட்சமேன்
அவனுடைய கையில் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு காரை பார்க் பண்ண எடுத்து
சென்றான்.
முதன்முறையாக அபிமன்யுவை முழுதாக பார்த்தாள் சஹானா.சந்தன நிறத்தில் டி
ஷர்ட்டும், நேவி ப்ளூ கலர் ஜீன்ஸ் பேண்டும் போட்டு இருந்தான்.தேக்கு மரம் போன்ற
உடல்,அலை பாயும் கேசத்தை அவன் கோதுவதை ஒரு முறை பார்த்தால் கூட பெண்களின் மனமும்
அலை பாய தொடங்கிவிடும். கம்பிரமான நடையோடு நடந்து வந்தவன் அப்பொழுது தான் திரும்பி
முதன்முதலாக தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் சஹானாவைப் பார்த்தான்.காதல் கொண்ட
அவனின் மனது துள்ளிக் குதியாட்டம் போட்டது.வசீகரமான ஒரு புன்னகையுடன் அவளை நோக்கி
வந்தான்.
“என்ன சனா வீட்டிற்குள் வரும் எண்ணம் இல்லையா? நான் வேண்டுமானால் அம்மாவை
ஆரத்தி எடுக்க சொல்லட்டுமா?”
“ஒண்ணும் வேணாம்.” என்று ஆத்திரமாக கூறியவள் வேகமாக முன்னே வீட்டிற்குள்
நுழைந்தாள்.அவளுடைய கோபத்திற்கு காரணம் தன்னையும் அறியாமல் ஒரு சில நிமிடங்களே
என்றாலும் இந்த பொறுக்கியை போய் வைத்த கண் வாங்காமல் பார்த்தோமே என்று தன் மீதே
வந்த கோபத்தை கட்டுப்படுத்தப் முடியாமல் அபிமன்யுவிடம் எரிந்து விழுந்தாள் சஹானா.
வேகவேகமாக உள்ளே நுழைந்தவள் அசந்து தான் போனாள்.சினிமாவில் பார்த்து வியந்த
வீடுகளையே முழுங்கி விடும் போல இருந்தது அந்த வீட்டின் உள்ளமைப்பு.எங்கு
திரும்பினாலும் நவீன மயம் அனைத்திலும் பணக்காரத் தனம் , அளவிற்கு அதிகமான செழுமையை
காட்டியது.அதை உணர்ந்தவளின் உடல் ஒருமுறை பயத்தில் விறைத்து பின் இயல்பானது.
“சஹானா உனக்கு மாடியில இருக்கிற அறை ஏற்பாடு பண்ணி இருக்கேன்மா...அங்கே போய்
ஓய்வு எடுத்துக்கோ சஹானா”
அபிமன்யு சஹானாவின் கோபம் எதையும் கண்டுகொள்ளவேயில்லை அவன் மனம் மகிழ்ச்சியில்
திளைத்துக் கொண்டு இருந்தது.தன்னுடைய வீடு அதில் தனக்கு அருகிலேயே தனக்கு
பிரியமானவள்.பூமியில் நடக்காமல் வானத்தில் மிதந்தான்.அவளை தாண்டிக் கொண்டு
தன்னுடைய அறைக்குள் நுழையப் போனவனை தடுத்து நிறுத்தியது சஹானாவின் குரல்.
“ஒரு நிமிஷம்”
“சொல்லுமா” அபிமன்யுவின் குரல் நெகிழ்ந்து இருந்தது.
“என்னை முதன்முதலில் எங்கே பார்த்தீங்க?” அவளின் பார்வை வேறு எங்கோ
இருந்தது.அதற்காக எல்லாம் அபிமன்யு கவலைப் படவில்லை.அவனுடைய மனம் கவர்ந்தவள்
முதன்முதலாக தன்னிடம் தானாகவே வந்து பேசி இருக்கிறாள் என்பது மட்டுமே அவனுடைய
நினைவில் இருந்தது.
“இங்கே சென்னையில் உள்ள பீச்சில் வைத்து தான்” அவள் முகத்தில் இருந்து
பார்வையை திருப்பாமல் பதில் அளித்தான் அபிமன்யு.
“எப்போ”
“நான் எப்பொழுதும் விடியற்காலை நேரம் தான் ஜாக்கிங் செல்வேன்.தொந்தரவு
இருக்கக் கூடாது என்பதற்காக.சில நாட்களுக்கு முன் அப்படி ஒரு நாள் விடியற்காலை நேரம் நான்
ஜாக்கிங்செய்து கொண்டு இருந்த போது தான் சத்யனோடு சேர்த்து வைத்து உன்னை
பார்த்தேன். அப்பொழுது எனக்கு தெரியவில்லை சனா.நீ என்னை இந்த அளவிற்கு பாதிப்பாய்
என்று.யாரோ ஒரு பெண் ஒரு ஆணுடன் இந்த விடியற்காலை நேரத்தில் வந்து இருக்கிறாள்
என்று தோன்றியது.”
“அப்பொழுது நீ சத்யனின் தோள் சாய்ந்து கண்ணீர் சிந்தினாய்.உன்னுடைய கண்ணில்
வழிந்த அந்த கண்ணீரை துடைக்க என்னுடைய கைகள் இரண்டும் பரபரத்தது.ஆனால் உடனேயே
என்னை சமாளித்துக் கொண்டேன்.அதன் பிறகு பொழுது நன்றாக விடிந்ததும் நீயும் சத்யனும்
அங்கிருந்து கிளம்பி ஒரு ஆட்டோவில் ஏறிப் போனீர்கள்.”
“நானும் விடாது உன்னை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் நீ போன ஆட்டோவை பின்
தொடர்ந்து வந்தேன்.ஆனால் வழியில் ஒரு சிக்னலில் உன்னை தொலைத்து விட்டேன்.உண்மையை
சொல்ல வேண்டுமானால் அப்பொழுது அதற்காக நான் வருந்தவில்லை சஹானா.”
“ஏனெனில் அப்பொழுது அந்த நிமிடம் என்னுடைய மனதை நான் அறியவில்லை.பார்த்தவுடன்
எப்படி ஒரு பெண்ணின் மீது காதல் வரும்?அது வெறும் ஈர்ப்பு என்ற முடிவுக்கு
வந்தேன்.அதன்பிறகு உன்னை சுலபத்தில் மறந்து விடலாம் என்று தான் நினைத்தேன்.
அது அவ்வளவு சுலபம் இல்லை என்று எனக்கே என்னை உணர வைத்தாய் நீ.உனக்கு தெரியுமோ
தெரியாதோ சஹானா.எனக்கு என்னுடைய டான்ஸ் அகாடமி தான் எல்லாமும்.அதை சிறந்த அகாடமி
என்று பெயர் எடுக்க வைக்க வேண்டும் என்பதை மட்டுமே என்னுடைய வாழ்நாள்
லட்சியம்.ஆனால் அப்படிப்பட்ட என்னுடைய தொழிலை கூட சில சமயம் உன்னால் மறந்து
போனேன்.
உன்னை பார்த்த பிறகு என் தொழிலை மறந்தேன்,என் குடும்பத்தை மறந்தேன் ஏன்
என்னையே கூட மறந்தேன்.உன்னை நான் பார்த்தது ஒரு சில நொடிகளாகக் கூட
இருக்கலாம்.ஆனால் முதல் பார்வையிலேயே என்னுடைய நெஞ்சில் முழுமையாக நீ பதிந்து
விட்டாய் என்பதை அப்பொழுது நான் உணரவேயில்லை.உன்னை தொலைத்த பிறகு தான் அந்த உண்மை
எனக்கு உரைத்தது.
அதனால் தான் உன்னை மறுபடியும் அருவிக்கரையில் பார்த்த பொழுது எங்கே உன்னை
மறுமுறை தவற விட்டு விடுவேனோ என்ற பயத்தில் தான் உன்னுடைய கையை பிடித்து
இழுத்தேன்.மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை சனா”
“...”
“இப்பொழுதாவது என்னை கொஞ்சம் புரிந்து கொள் சஹானா...நான் கெட்டவன்
இல்லை.உன்னிடம் காதலை மட்டுமே கேட்டவன்”
“...”
“எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு சனா.ப்ளீஸ்” கிட்டத்தட்ட கெஞ்சினான் அபிமன்யு.
அவனை திரும்பிப் பார்த்து சஹானா பதில் சொல்லும் முன்னரே அங்கே கேட்ட புதிய
குரலில் சஹானா அப்படியே பேச்சை நிறுத்தினாள்.
“இது யார் அண்ணா?” என்று கேட்டபடியே அங்கே வந்து நின்றாள் அஞ்சலி.
கருத்துரையிடுக