அத்தியாயம்  29
“அஞ்சு பேபி...உள்ளே வா” ஒரு கரத்தை அஞ்சலியின் புறம் நீட்டினான் அபிமன்யு.
சஹானாவை ஆராய்ச்சி பார்வை பார்த்த படியே உள்ளே வந்தாள் அஞ்சலி.
“இவங்க பேர் விஷ்வ சஹானா.... உனக்கு அண்ணி மாதிரி” என்று சொல்லிவிட்டு
கண்களில் காதலோடும் ஏக்கத்தோடும் சஹானாவை பார்வையிட்டான்.
“அண்ணா! என்ன சொல்ற?” அஞ்சலியின் குரலில் இருந்தது ஆச்சரியமா இல்லை
அதிர்ச்சியா என்று அங்கிருந்த இருவராலும் பிரித்தறிய முடியவில்லை.‘ஆம்’ என்பது போல
இமை மூடித் திறந்து அஞ்சலிக்கு குறிப்பாக உணர்த்தினான் அபிமன்யு.
“இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டன்னு மாம் சொன்னாங்க அதான் என்ன விஷயம்னு உன்னை
பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் அண்ணா...இட்ஸ் ஓகே ...கீழே வா.”
“அம்மா காபி சாப்பிட கூப்பிட்டாங்க...நீங்களும் வாங்க” என்று சஹானாவை பார்த்து
நட்புடன் மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு அங்கிருந்து
கிளம்பினாள்.சஹானாவிடம் கண்களால் விடைப் பெற்றுக் கொண்டு தங்கையின் பின்னே ஓடினான்
அபிமன்யு.
“அஞ்சு என்னடா ஒண்ணுமே சொல்லாம வந்துட்ட ? அண்ணனோட செலெக்க்ஷன் எப்படி?”
“என்கிட்ட சொல்லாம மறைச்சுட்ட இல்ல?”
“என்னடா இப்படி எல்லாம் பேசுற...உன்கிட்ட எப்படி என்னால மறைக்க
முடியும்?உன்கிட்ட மறைக்கணும்னு நினைக்கலை அஞ்சு.அவளை நான் மட்டும் தான்
நேசிக்கிறேன். அவள் இன்னும் என்னையோ என்னுடைய காதலையோ ஏற்றுக்கொள்ளவில்லை . அப்படி
இருக்கும் போது உன்னிடம் சொல்லி, உன்னையும் ஏன் வருத்த வேண்டும் என்று தான்
உன்னிடம் சொல்லவில்லை. உனக்கு தெரியாமல் என் வாழ்க்கையில் எந்த ரகசியமும் இல்லை
பேபி” ஆதரவாக அவளின் தலையை தடவினான்.
“அவளுக்கு ஏன் உன்னை பிடிக்கலை அண்ணா?? ஒருவேளை இப்படி எல்லாம் நடித்து உன்னை
கவர நினைக்கிறாளோ என்னவோ?” அசால்ட்டாக சொன்னாள் அஞ்சலி.
“கண்டிப்பாக இல்லை அஞ்சு...அவளைப் பற்றி அப்படி எல்லாம் நினைக்காதே.உனக்கு
ஆரம்பத்தில் இருந்து சொன்னால் தான் புரியும் என்றவன் முதன்முதலாக அவளை கடற்கரையில்
பார்த்ததில் இருந்து இன்று அவளை வீட்டிற்கு அழைத்து வந்தது வரை எல்லாவற்றையும்
சொல்லி முடித்தான்.
“என்ன அண்ணா சொல்ற.இவ நீ ஷூட்டிங் போனியே ஒரு பட்டிக்காடு, அந்த ஊர்க்காரியா?”
“ஆமா”
“எனக்கு அந்த ஊரை கொஞ்சமும் பிடிக்கவில்லை.உனக்கு பெண் எடுக்க போயும் போயும்
அந்த பட்டிக்காட்டு கிராமத்துக்காரி தான் கிடைத்தாளா? வேறு யாரும்
கிடைக்கவில்லையா?வேண்டாம் அண்ணா. இந்த பெண் வேண்டாம். உனக்கு வேறு பெண்
பார்க்கலாம்.நீ ஒரு வார்த்தை சொல்லு உனக்கு ஏற்ற அழகான,செல்வாக்கு மிகுந்த பணக்கார
பெண்களை நான் தேர்ந்தெடுத்து வைக்கிறேன்.”
“தேவை இல்லை அஞ்சு...அம்மாகிட்ட சொன்னது தான் உனக்கும்.எனக்கு மனைவின்னு
ஒருத்தி வந்தா அது அவ மட்டும் தான்.”அழுத்தம் திருத்தமாக கூறினான் அபிமன்யு. அந்த
நிமிடம் அஞ்சலியின் மனதில் சஹானாவின் மீதான வெறுப்பு எனும் சிறு செடி முளைக்கத்
தொடங்கியது.
‘அதென்ன என்னை விட அவள் முக்கியமா உனக்கு? நான் சொன்னால் கூட கேட்க
மாட்டாயா?அப்படி என்ன இருக்கிறது இந்த பட்டிக்காட்டு பெண்ணிடம்.நீயாகத் தானே அவளை
விட மாட்டாய்.அவளாக உன்னை விட்டு ஓட வைக்கிறேன்.’ என்று மனதில் சூளுரைத்தவள்
வெளியே நல்ல பிள்ளை போல சிரித்து வைத்தாள்.
“ஓ சார் அந்த அளவுக்கு போய்ட்டீங்களா? நீங்க இவ்வளவு தெளிவா இருக்கும் போது
எனக்கு என்ன பிரச்சினை” என்று சொன்னவள் அவனுக்கு முன்னே சென்று ஹாலில் இருந்த
டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டாள்.
“ஹே...நீ என்கிட்டயே விளையாடுறியா? வாலு” என்று சொன்னவன் செல்லமாக அவளது
தலையில் தட்டினான்.பதிலுக்கு அஞ்சலியும் அபிமன்யுவின் தலையை கலைத்து விளையாட
மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த சஹானா இந்த காட்சியை விழி விரித்துப்
பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளும் அவளுடைய அண்ணன் சத்யனும் ஒருநாள் கூட இப்படி அவர்கள் வீட்டில் பேசிக்
கொண்டது கிடையாது.அப்படி இருவரும் சேர்ந்து ஒன்றாக விளையாடுவதற்கு கூட அந்த
வீட்டில் அவளுக்கும் சத்யனுக்கும் அனுமதி இல்லை.
அண்ணனிடம் கூட இடைவெளி விட்டுத் தான் சஹானா பழகியாக வேண்டும்.அப்படி
இருக்கையில் இவர்கள் இருவரும் இப்படி மகிழ்ச்சியாக விளையாடுவதை பார்த்து அவளுக்கு
அதிசயமாகத் தான் இருந்தது. ‘தன்னுடைய வீட்டில் என்றேனும் ஒருநாள் தானும் சத்யனும்
இது போல இருக்க முடியுமா?’ என்று ஏக்கத்தோடு நினைத்தாள்.
அவளை பார்த்ததும் அபிமன்யு விளையாடுவதை நிறுத்தி விட்டு சஹானாவிற்கு அருகில்
இருந்த சேரை எடுத்து அவள் அமருவதற்கு வசதியாக எடுத்து வைத்தான்.வேண்டுமென்றே அவன்
எடுத்து வைத்த சேரில் அமராமல் இரண்டு சேர் தள்ளி அமர்ந்தாள் சஹானா.
அபிமன்யுவின் ஏக்கமான பார்வையையும் சஹானாவின் கோபமான முகத்தையும் கண்ட
அஞ்சலிக்கு அடுத்து தான் செய்ய வேண்டியது என்ன என்று தெளிவாக மனதுக்குள் ஒரு
திட்டம் தோன்ற வெளியே மட்டும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.

கருத்துரையிடுக