அத்தியாயம்  30
அடுத்த நாள் பொழுது அழகாக விடிந்தது அபிமன்யுவிற்கு.சஹானாவை பார்த்ததில்
இருந்து அவனை விட்டு விலகி இருந்த தூக்கம் நேற்று இரவு முழுவதும் அவனை விட்டு
விலகாமல் இருந்ததின் பயனாக வெகுநாட்களுக்கு பிறகு நன்கு உறங்கினான். நல்ல
உறக்கத்தின் காரணமாகவா அல்லது காதலியின் அருகாமையோ காலையில் எழும் போதே முகம்
எங்கும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தது அபிமன்யுவிற்கு.
எப்பொழுதும் போல விடியற்காலை எழுந்ததும் ஜாகிங் செல்வதற்காக கிளம்பியவன்
விசில் அடித்தபடி கீழே இறங்கி வந்தான். நேராக தோட்டத்தில் இறங்கி தன்னுடைய
ஜாக்கிங்கை ஆரம்பித்தான்.சற்று நேரம் பொறுத்து கீழே இறங்கி வந்த
ராஜேந்திரனும்,பார்வதியும் ஏன் அந்த வீட்டு வாட்ச்மேன் உட்பட அனைவரும் அந்த
காட்சியை வியப்பாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.
எத்தனையோ முறை பார்வதி அபிமன்யுவிடம் சொல்லி இருக்கிறார்.        “இங்கே நம்முடைய வீட்டு தோட்டத்திலேயே
ஜாக்கிங் செய் அபி என்று” அப்பொழுது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்று மறுத்து
பேசியவன் இப்பொழுது வீட்டின் உள்ளே இருக்கும் தோட்டத்தில் ஜாக்கிங் செய்வதால் வந்த
ஆச்சர்யம் தான் அது.
“என்ன அபி இன்னைக்கு வீட்டுலேயே ஜாகிங் போற...வழக்கமா கடற்கரைக்கு இல்ல
போவ.நான் இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை வீட்டிலேயே ஜாகிங் பண்ணுனு சொன்னப்போ
எல்லாம் வேண்டாம் வேண்டாம்ன்னு அலறுவ.இப்ப என்ன ஆச்சு?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாம்...இனிமே இங்கே வீட்டுலயே செய்யலாம்னு தோணுச்சு.
அதான்” அபிமன்யுவின் முகத்தில் லேசானதொரு வெட்கம்.பெண்ணின் வெட்கம் அழகு என்றால்
ஆணின் வெட்கம் அதிசயம். எல்லா ஆண்களும் எல்லா நேரத்திலும் வெட்கப்பட
மாட்டார்கள்.மழை நேரத்தில் மட்டுமே தோன்றும் சில நிமிட வானவில்லை போல எப்பொழுதாவது
ஒரு சில நிமிடம் மட்டுமே தோன்றி மறையும் ஆணின் வெட்கம் அதிசயம் தானே!
அதுபோலத் தான் அபிமன்யுவின் வெட்கமும் மனதிற்கு இனியவளை பற்றிய நினைவு
அவனையும் அறியாமல் அவன் முகத்தில் வெட்கத்தை ஏற்படுத்தியது. மகனின் முகத்தையும்
அதில் காணப்பட்ட வெட்கத்தையும் பார்த்த ராஜேந்திரனுக்கு மகனின் செயலுக்கான காரணம்
புரிந்து விட்டது.ஆனால் வாயை திறந்து எதுவும் சொல்லாமல் மனைவியின் புறம் பார்வையை
திருப்பினார்.மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த பார்வதியின் முகம்
கனிந்தது.
“சரிப்பா...உன் இஷ்டம்.வந்து காபி குடி வா” என்று சொன்னவர் தோட்டத்தில் இருந்த
சேரில் போய் அமர்ந்து விட்டார்.
தந்தையும் மகனும் மட்டும் தனித்து இருக்க தயங்கி தயங்கி தந்தையிடம் தன்னுடைய
சந்தேகத்தை கேட்டான் அபிமன்யு.
“அப்பா உங்களுக்கு என் மேலே கோபமா?”
“ஏன் அபி இப்படி கேட்குற?”
“இல்லைப்பா நேத்து விஷயம் தெரிஞ்சு அம்மா கோபப்பட்டு சஹானாகிட்ட பேசிய
பொழுதும்  சரி அதற்கு பிறகு சமாதானமாகி
பேசிய பொழுதும் கூட நீங்க ஒண்ணுமே பேசலியே! உங்களுக்கு சஹானாவை பிடிக்கலியா இல்லை
நேத்து உங்ககிட்ட நான் அப்படி பேசினதால கோபமா 
டாடி”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அபி”
“பின்னே உங்க அமைதிக்கான காரணம் என்ன டாடி?”
“அபி இப்போ நானும் உனக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு வை.நாளைக்கு இந்த விஷயத்தில்
ஏதாவது பிரச்சினை வந்தா அஞ்சலியோ இல்லை உன்னுடைய அம்மாவோ உனக்கு மட்டும் தான்
சப்போர்ட் பண்ணுவாங்க.அவர்களுக்கு எப்பொழுதும் உன் மீது பாசம் அதிகம்.அதனால அவங்க
உன்னை பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க.ஆனால் நான் பொண்ணை பெத்தவன் அபி...என்ன தான்
நீ செய்த அத்தனை செயல்களுக்கு பின்னாலும் உன்னுடைய காதல் காரணமாய் இருந்தாலும் அதை
அந்த பெண்ணால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.சொல்?”
“அப்பா” அபிமன்யுவிற்கு அப்பாவின் கேள்வியில் உள்ள நியாயம் புரிந்தது.
“நான் உன் காதலுக்கு எதிரி இல்லை அபிமன்யு.அவளின் பக்க நியாயத்தை பேச
ஒருவராவது வேண்டும் என்று நினைக்கிறேன் அவ்வளவு தான்”
“அதுக்காக நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க டாடி.அவளை அங்கே அவளுடைய
ஊரிலேயே விட்டு விட்டு வந்து இருக்கணும்.அவளை மறந்துட்டு வேற கல்யாணம் செய்து
இருக்கணுமா? இல்லை அவ எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாடி இருக்கணுமா?சாரி டாடி
இது எதுவும் என்னால முடியாது.” தந்தையின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து
அழுத்தமாக பேசினான் அபிமன்யு.
“அவள் உன்னை காதலிக்க வேண்டும்னு நீ நினைக்கிறது தப்பு இல்லை அபி...ஆனால் அது
தானாக நடக்க வேண்டும்.உன்னுடைய கட்டாயத்தினால் அல்ல”
“நான் இப்ப வரை அவளை என்னை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை டாடி”
“அது மட்டும் போதுமா? நீயும் உன் அம்மாவும் அவளுக்கு விருப்பம் இல்லாமல் தானே
இங்கே அழைத்துக் வந்து இருக்கீங்க.அதை இல்லை என்று மறுக்க முடியுமா உன்னால்?”
“எனக்கு வேற வழி தெரியலை டாடி”குற்ற உணர்வுடன் தலையை குனிந்து கொண்டான்
அபிமன்யு.
“முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள் அபிமன்யு.உன் காதலை அவள் உணர
வேண்டுமெனில் முதலில் அந்த பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பழகு.அது தான்
உண்மையான காதலுக்கு அடையாளம்”தீர்க்கமாக பேசினார் ராஜேந்திரன்.அவரின்
வார்த்தைகளில் தெறித்த உண்மை, அபிமன்யுவை சுட்டது.
“இப்போ நான் என்ன செய்யணும் டாடி”
“உன் காதலை நீ அந்த பெண்ணிற்கு தெரியப்படுத்தி விட்டாய்.இங்கே இருக்கும்
நாட்களில் உன்னுடைய காதலை அவளுக்கு உணர்த்த முயற்சி செய். மத்தபடி அந்த பெண்ணை நீ
வற்புறுத்தினால் அதை நான் அனுமதிக்க மாட்டேன் புரிந்ததா?”
“நான் உங்க மகன் டாடி”
“அதற்காக நீ செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்க என்னால் முடியாது அபி”
“என் மீது உங்களுக்கு  நம்பிக்கை
இல்லையா டாடி?”
“ஏன் இல்லை.அதனால் தான் இது நாள் வரை நீ செய்த எந்த காரியத்தை பற்றியும்
உன்னிடம் நான் கேள்வி கேட்டதில்லை.ஆனால் சஹானா விஷயம் அப்படி அல்ல.இப்படி
பேசுவதால் எனக்கு உன் மீது பாசம் இல்லையென்று நினைத்து விடாதே.எனக்கு நீயும்
முக்கியம் அபி”
“உங்களின் நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றுவேன். நம்புங்கள்”
உறுதியுடன் வெளிவந்தன வார்த்தைகள்.
“சரி வா .போகலாம் அங்கே உன்னுடைய அம்மா உனக்காக காத்துக் கொண்டு இருக்கிறாள்”.
அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் தந்தையை பின் தொடர்ந்தவன் அங்கே தாயுடன் அமர்ந்து
பேசிக் கொண்டு இருந்த அஞ்சலியை கண்டதும் புருவத்தை உயர்த்தினான்.
“ஹே அஞ்சு...உனக்கு எப்பவும் எட்டு மணிக்குத் தானே விடியும்? இன்னைக்கு என்ன
இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டாய்?”
“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் அண்ணா”
“என்ன விஷயம் அஞ்சு”
“இன்னைக்கு நானும் உன் கூட அகாடமிக்கு வரலாம்னு இருக்கேன்”
“என்ன அஞ்சு புதுசா இருக்கு...நீ என்னுடைய அகாடமிக்கு வரேன்னு இதுவரை நீ
சொன்னது இல்லையே?” அபிமன்யுவின் குரலில் ஆச்சரியம் மிகுந்து காணப்பட்டது.
“இன்று எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு அதான்.அதுவும் அண்ணி
சம்பந்தப்பட்டது”
“ஹே...சஹானா சம்பந்தப்பட்டதா? என்ன விஷயம் சொல்லுடா” அபிமன்யுவின் குரலில்
ஆர்வம் கொப்பளித்தது.
“அதெல்லாம் சொன்னால் தான் அழைத்து செல்வாயா?”
“அப்படி இல்லை அஞ்சு...அது என்ன விஷயம்னு”
“ஸ்ஸ்ஸ் மூச்...மேலே பேசக்கூடாது இன்னைக்கு நானும் உங்க ரெண்டு பேர் கூட வரேன்
அவ்வளவு தான்.கிளம்பும் போது என்னையும் கூட்டிக் கொண்டு போ” என்று சொன்னவள் பேச்சு
முடிந்தது என்பது போல அங்கிருந்து கிளம்பி விட்டாள் அஞ்சலி.
“என்ன தான் பிடிவாதக்காரியா இருந்தாலும் அவளுக்கு உன் மீது எப்பவும் பாசம்
அதிகம் அபி”பார்வதி மகனிடம் அங்கலாய்த்தார்.
“ஆமா மம்மி” என்றவனின் பார்வை வாஞ்சையுடன் அஞ்சலியை தழுவியது.
நல்லவேளை அப்பொழுது அங்கே பேசிக் கொண்டு இருந்த யாரும் அந்த நிமிடம்
அஞ்சலியின் முகத்தில் இருந்த குருரமான சிரிப்பை பார்க்கவில்லை.ஒரு வேளை பார்த்து
இருந்தால்......

கருத்துரையிடுக