Kadhal Kathakali Tamil novels 31

 

 

 

 

 

அத்தியாயம்  31

 

காரில் எந்த விதமான சப்தமும் இன்றி அமைதியாக இருந்தது.அந்த. அமைதியை குலைக்க காரில் இருந்த மூவரில் யாருமே விரும்பவில்லை.காரில் முன் புறம் அமர்ந்து அபிமன்யு காரை ஓட்டிக் கொண்டு இருக்க அவனுக்கு அருகில் அஞ்சலி அமர்ந்து இருந்தாள், பின்புறம் சஹானா மட்டும் தனித்து அமர்ந்து கொண்டாள்.

 

காரில் இருந்த மூவரின் மனநிலையும் வேறுவேறாக இருந்தது காலத்தின் கட்டாயமன்றி வேறு என்ன சொல்ல?அகாடமிக்குள் நுழையும் வரை அமைதியாக இருந்த அஞ்சலி மெல்ல அபிமன்யுவின் காதில் கிசுகிசுத்தாள்.

 

“உள்ளே என்ன நடந்தாலும் அமைதியாக இரு...உன்னுடைய கேள்விகள் எல்லாவற்றையும் தனியாக என்னிடம் கேள்”என்று சொல்லி விட்டு நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டாள்.

 

“அஞ்சு பேபி சொன்ன பிறகு நோ ஆப்ஜெக்ஷன்” என்று சொன்னவன் காரை விட்டு கீழே இறங்கி தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான்.சஹானாவும் அஞ்சலியும் ஒருவர் பின் ஒருவராக அறைக்குள் வந்து அமர்ந்தனர்.

 

“என்ன அஞ்சு ஏதோ சர்ப்ரைஸ் இருக்குனு சொன்ன, என்ன விஷயம் சொல்லுடா”

 

“ஒரு ஐஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு அண்ணா”

“ஹ்ம்ம் இன்னும் ஐஞ்சு நிமிஷமா!”

இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அறைக் கதவு மெல்லியதாக தட்டப்பட்டது.

“இதோ வந்தாச்சு அண்ணா...யார் வந்து இருக்கிறதுனு பாருங்க”

"என்ன டார்லிங் உள்ளே வர சொல்ல மாட்டீங்களா?"என்ற கேள்வியோடு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் ஒரு அழகிய மாது.

'யாரிவள்' என்று அறியாத சஹானா அந்த புதியவளை பார்த்து கொண்டு இருக்க அபிமன்யு சீட்டில் இருந்து எழுந்து விட்டான்.

"ஹே... நிஷா வாட் அ சர்ப்ரைஸ்!நீ எப்போ சென்னை வந்து சேர்ந்தாய்?"

"இன்னைக்கு காலையில் தான் வந்தேன்.  நேராக  உங்களை பார்க்க தான் வந்து இருக்கிறேன் டியர்" என்று கூறியவள் அபிமன்யுவின் அருகில் வந்து லேசாக அவனை ஒருமுறை அணைத்து விட்டு அதன் பிறகு  அவனை விடுவிக்கும் நினைவே இல்லாதது போல அவன் தோளில் தொற்றாத குறையாக தொங்கி கொண்டு இருந்தாள். அபிமன்யு இருக்கும் துறையில் இது போன்ற நட்பான தோள் அணைப்புகள் சாதாரணமான விஷயம். ஆனால் சஹானாவிற்கு இதை எல்லாம் பார்க்கும் பொழுது எரிச்சலாக இருந்தது.

 

"என்ன விஷயம் நிஷா? இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிற்கிற?"

 

"அஞ்சலி தான் என்னை வர சொன்னாங்க டியர்...யாரோ உனக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு டான்ஸ் சொல்லி தர என்னை வர சொன்னாங்க... யாரு அஞ்சலி அது?"

 

"இதோ இவங்களுக்கு தான்" சஹானாவை காட்டினாள்  அஞ்சலி.

 

அபிமன்யு அதிர்ந்து தான் போனான்.'ஏன் இப்படி செய்தாய்' கண்களாலேயே தங்கையிடம் கேட்க அவள் பிறகு சொல்வதாய் சமிக்சை செய்தாள் அஞ்சலி.

 

"சஹானா இவங்க பெரிய டான்சர் டெல்லியில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பரத நாட்டிய துறையில் வேலை பார்க்கிறாங்க... இவங்க தான் உங்களுக்கு டான்ஸ் சொல்லி தர போறாங்க."

 

சஹானாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து விட்டது.அபிமன்யுவிடம் இருந்து விலகி இருக்கலாம் என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி தான் அது.

 

"தேங்க்ஸ்" என்றாள்

 

"சஹானா நீங்க இவங்களை கூட்டிகிட்டு உங்களோட டான்ஸ் ரூம்க்கு போங்க...நான் பின்னாலேயே வரேன்" என்று அஞ்சலி கூறவும் சஹானாவும் நிஷாவும் புறப்பட்டு சென்றனர்.

 

"ஏன் அஞ்சு இப்படி செஞ்ச?"

 

"காரணமாகத்தான் அண்ணா... ஏற்கெனவே வீட்டில் உன்னுடன் தான் இருக்கிறாள்.இங்கேயும் வந்து முழு நேரமும் உன் அருகிலேயே இருந்தால் உன் மீது இன்னும் வெறுப்பு தான் வரும். பிரிந்து இருந்தால் தான் ஒருவரின் அருமையை உணர முடியும்."

"இருக்கலாம் அஞ்சு... நானே அவளுக்கு பரதம் சொல்லிக் கொடுத்து ஆட வைத்து அவளை மெருகேற்றலாம் என்று நினைத்தேன்... ஆனால்"அவனையும் மீறி அவன் குரலில் வருத்தம் வெளிப்பட்டது.

 

"அண்ணா...உன் மீது இருக்கும் வெறுப்பில் அவர்கள் நீ சொல்லி கொடுக்கும் போது முழு கவனத்தையும் செலுத்தி ஒழுங்காக கற்று கொள்வார்களா என்பது சந்தேகமே. அதனால் தான் இப்படி ஒரு ஏற்பாடு"

 

"இருந்தாலும்..."

 

"அண்ணா உனக்கு நிஷாவை பற்றி தெரியும் இல்லையா?அவங்க எவ்வளவு அருமையான டான்சர்.அதை விட என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?"

 

"அப்படி இல்லை அஞ்சு... ஹ்ம்ம் நீ சொன்னா சரி தான்" என்று சொல்லி அந்த பேச்சை நிறுத்தினாலும்  அவளின் செயலை முழு மனதாய் ஏற்க முடியாமல் தவித்தது அபிமன்யுவின் காதல் கொண்ட மனது.

 

"ஹ்ம்ம்... சரி அண்ணா... நீ உன் வேலையை கவனி நான் போய் அண்ணியை பற்றி ஒரு வார்த்தை நிஷாவிடம் சொல்லி விட்டு வருகிறேன்."

 

"சரிடா" என்று சொன்னவன் தன்னுடைய வேலைகளில் மூழ்கிப் போனான்.

 

தனக்குள் சிரித்தபடியே சஹானாவை தேடி சென்றாள் அஞ்சலி.

"ஹாய் நிஷா...  சஹானா எப்படி டான்ஸ் கத்துகிறாங்க." விஷமமாக  கேட்டாள் அஞ்சலி.

 

"அஞ்சலி நீ அவ்வளவு தூரம் கெஞ்சி கேட்டியேனு தான் நான் இந்த பெண்ணுக்கு டான்ஸ் சொல்லி தர ஒத்துக்கிட்டேன்... ஆனா இந்த பொண்ணுக்கு எதுவுமே தெரியல... சரியான பட்டிக்காடுகிட்ட என்னை மாட்டி விட்டுட்டியே.இது கொஞ்சமாவது நல்லா இருக்கா?"வேண்டுமென்றே சஹானாவை மட்டம் தட்டிப் பேசினாள் நிஷா.

 

சஹானாவிற்கு நிஷா பேசுவதை கேட்டதும் அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது. ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டாள்.

 

"என்ன செய்வது நிஷா... எல்லாம் என் அண்ணனின் தலை எழுத்து..." என்று போலியாக சலித்துக் கொண்டாள் அஞ்சலி.

 

"இந்த பெண் யார் அஞ்சலி... உனக்கு சொந்தமா"

 

"அதெல்லாம் இல்லை நிஷா...எங்க ஸ்டேட்டஸ் என்னன்னு உனக்கே நல்லா தெரியும்.அப்படி இருந்தும் இந்த நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை எப்படி எனக்கு சொந்தமா என்று உன்னால் கேட்க முடியுது நிஷா"

 

"ஓ...ஸாரி அஞ்சலி... அப்புறம்  இந்த பெண்ணுக்கு இந்த இடத்தில் என்ன வேலை?"

 

"உனக்குத்தான் அண்ணனை பற்றி தெரியுமே... யாராவது கஷ்டப்பட்டா அண்ணனுக்கு பொறுக்காது"

 

"அதுவும் பொண்ணுங்க என்றால் அபி டார்லிங்க்கு மனசு தாங்கவே தாங்காதே" சொல்லி விட்டு தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர் இருவரும்.

 

இருவரின் பேச்சிலும் முக்கியமாக இருந்தது இரண்டு விஷயங்கள் தான். ஒன்று சஹானாவை குறைவாக பேசுவது மற்றொன்று அபிமன்யுவை தவறாக சித்தரிப்பது.இவர்கள் பேச்சில் சஹானா வருந்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

 

யார் எப்படி பேசினால் நமக்கு என்ன? நான் இங்கே இருப்பது பரதம் கற்றுக்கொள்ள அதை  மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள் சஹானா.

 

அன்றைய தினம் சாப்பிடும் போது கூட அபிமன்யுவிற்கும்  சஹானாவிற்கும் தனிமை கிடைக்கவே இல்லை. நிஷா சஹானாவையும் அவளுடைய திறமையையும் வேண்டும் என்றே குறைத்து பேசினாள்.சஹானாவிற்கு  உள்ளுக்குள் கோபம் துளிர்த்தாலும் அதை மறுத்து பேசாமல்  அப்படியே கேட்டு கொண்டு இருந்தாள்.

 

அபிமன்யு சஹானாவிடம்  தனித்து பேச எவ்வளவோ முயற்சி செய்தான்.ஆனால் சஹானாவை கேட்கும் கேள்விகளுக்கு நிஷா தான் பதில் சொன்னாள்.

 

ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சல் அடைந்து அவளிடம் வீட்டுக்கு போனதும் பேசிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த போது தான் நிஷா அந்த குண்டை தூக்கி போட்டாள்.

 

"நானும் உங்க வீட்டில் தான் தங்க போறேன் அபி டார்லிங்... ஏற்கனவே பெட்டி எல்லாம் உங்க வீட்டில் வச்சிட்டு தான் இங்கே வந்தேன்...சீக்கிரம் கிளம்புங்க... வீட்டுக்கு போகலாம்" என்று சொன்னபடி சஹானாவை அதிர வைத்தாள் நிஷா.

 

 

 

 

 

 


Post a Comment

புதியது பழையவை