Theendatha Thee Neeye Tamil Novels 18


 அத்தியாயம் 18

“வேண்டாம்…அவரை எதுவும் செஞ்சுடாதே…”கைகளை கூப்பி அவனிடம் கண்ணீர் மல்க கெஞ்சினாள் வானதி.


“எமோஷன் பத்தலையே சில்லக்கா…உன்கிட்டே இருந்து நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேனே…அவனுக்காக என்னோட காலில் விழுந்து கெஞ்சுவன்னு நினைச்சேன்.இவ்வளவு தானா உன் காதல்…” என்றான் நக்கலாக…


“நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்…ஆனா என்னை அவர்கிட்டே அனுப்பி வச்சுடு”


“ஆஹா..அதுதானே கூடாது”


“…”


“ஹம்..உனக்கு நான் சொல்றதை செய்ய இஷ்டம் இல்லைனா இப்பவே கூட நீ கிளம்பலாம்.நான் உன்னை எந்த விதத்திலும் தடுக்க மாட்டேன்”என்று கூறியவனை வியப்புடன் ஏறிட்டாள் வானதி.


“நிஜமாவா…நான் போகலாமா? என்னை அனுப்பிடுவீங்களா?”


“தாராளமா…உன்னை நான் என்ன கட்டியா போட்டு வச்சு இருக்கேன்.நீ கிளம்பணும்ன்னு ஆசைப்பட்டா இப்பவே கிளம்பலாம்…உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன்…கிளம்பு”என்று அமர்த்தலான குரலில் சொன்னவனை நம்ப முடியாமல் விழி விரித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


தன்னுடைய போனை எடுத்து யாரிடமோ பேசியவன், “உன்னை அனுப்புறதுக்கு ஏற்பாடு செஞ்சிட்டேன்”என்று கூறி முடிக்கவும் அறைக்கதவை திறந்து கொண்டு அந்த ஆப்ரிக்க கருப்பன் மைக்கேல் உள்ளே வரவும் சரியாக இருந்தது.


“மைக் இவங்க போக விருப்பப்பட்டா இவங்களை அனுப்பி வச்சிடு”என்று தெளிவான ஆங்கிலத்தில் சொன்னவன் அவளையே துளைக்கும் பார்வையோடு பார்த்துக் கொண்டு இருக்க மைக்கேல் அவளை சலனமில்லாமல் ஒரு பார்வை பார்த்து வைத்தான்.


‘பார்வையை கூட அப்படியே இந்த கடன்காரன் மாதிரியே பார்த்து வைக்கிறான் பாரு..எல்லாருக்கும் ட்ரைனிங் கொடுத்து இருப்பான் போல’என்று மனதுக்குள் திட்டியபடி எழுந்தவள் மைக்கேல் தன்னுடைய பின் பாக்கெட்டில் இருந்து சிறிய ரக துப்பாக்கியை எடுக்கவும் அரண்டு போனாள்.


“இவன் எதுக்கு துப்பாக்கியை எடுக்கிறான்?”


“நீ தானே சில்லக்கா அனுப்பி வைக்க சொன்ன…ஏன் இந்த வழி பிடிக்கலையா? வேணும்னா அன்னிக்கு மாதிரி கடலில் தள்ளி விட சொல்லட்டுமா?”என்று இமைக்காத பார்வையுடன் கேட்டவனை வெறித்துப் பார்த்தாள் வானதி.


“அதாவது இங்கே இருந்து நான் போறதா இருந்தா பிணமா தான் வெளியே போகணும்ன்னு சொல்லுறியா?”


“சே! சே!.. அந்த அளவுக்கு இரக்கம் இல்லாதவனா நான்! அப்படி எல்லாம் சொல்வேனா?… நானா உன்னை இங்கிருந்து அனுப்ப நினைக்கும் வரை நீ இங்கேயே தான் இருக்கணும்ன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.இப்பவே நீ கிளம்பணும்ன்னு நினைச்சா நான் தடுக்க மாட்டேன்.சந்தோசமா சிரிச்ச முகத்தோட வழி அனுப்பி வைப்பேன்.வேணும்னா இப்ப நீயாவே போய் கடலில் விழு…நான் உன்னை தடுக்கவோ, காப்பாத்தவோ மாட்டேன்”என்று சிறிதும் அலட்டல் இன்றி பேசியவனைக் கண்டு அவளுக்கு வெறுப்பு வந்தது.


‘இவனோடு இருப்பதற்கு கடலில் குதித்து உயிரை விட்டு விடலாம்’என்று நினைத்தவளின் மனதில் அன்று சில நொடிகள் கடலுக்குள் மூழ்கி உயிருக்கு போராடிய நொடிகள் வந்து போனது.மீண்டும் அந்த முட்டாள்த்தனத்தை செய்தால் கொடுமையான மரணம் தனக்கு நிச்சயம் என்பது அவளுக்கு புரிந்தது.


கடும் குளிரில் அந்த நீரில் குதித்தால் இரண்டே நொடிகளில் உடல் விறைத்து விடும்…நீருக்குள்ளேயே மூழ்கி ஜல சமாதி ஆன பின் தன்னுடைய உடலின் பாகங்களை மீன்கள் கடித்து தின்று உடலின் ஒரு எலும்பு கூட மிஞ்சாமல் போய் விடும்.அதன்பிறகு அவரை நான் மீண்டும் எப்படி சந்திப்பேன்?எங்கள் இருவருக்கும் கல்யாணம் எப்படி நடக்கும்?’ நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு பயங்கரமாக இருந்தது வானதிக்கு.


வானதி படுத்து இருந்த கட்டிலில் இருந்து அவளால் வெளிப்புறத்தை தெளிவாக பார்க்க முடிந்தது.கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வெறும் கடல் நீர் மட்டுமே தெரிந்தது.நிலப் பகுதியோ அல்லது வேறு கப்பல் ஏதேனும் அருகில் தெரிந்தால் கூட அவள் இந்தக் கப்பலில் இருந்து குதித்தால் உயிர் பிழைக்க ஒரு சதவீதமாவது வாய்ப்பு இருக்கிறது.


எதுவுமே இல்லாமல் நடுக்கடலில் அவள் குதிப்பது தற்கொலைக்கு சமம் என்பது அவளுக்கு நன்றாக புரிந்தது.


“நான் உன்னோட இருந்தா அவரை எதுவும் செய்ய மாட்டே தானே”


“அவனை கொல்றதால எனக்கு எந்த இலாபமும் இல்லை”


“என்னை அடைச்சு வைக்கிறதால மட்டும் உனக்கு என்ன லாபம் கிடைக்கப் போகுது”அடக்க முடியாமல் கேட்டவளை அவனது கூர்பார்வை வாயடைக்க செய்தது.


“உனக்கு தேவை இல்லாத விஷயங்களை தெரிஞ்சுக்கணும்னு நினைக்காதே சில்லக்கா…அதன் விளைவுகள் பயங்கரமா இருக்கும்”


“கொடுத்த வார்த்தையை நீ காப்பாத்துவன்னு நான் எப்படி நம்புறது?”


“அது உன் பிரச்சினை…உனக்காக என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.”என்று அவன் எடுத்தெறிந்து பேசினான்.


ஒரு விஷயம் மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்தது.அவனாக நினைத்தால் அன்றி அவளால் அந்த இடத்தை விட்டு உயிரோடு வெளியே போக முடியாது என்பது.அதே நேரம் தான் அவனுடைய செயல்களுக்கு உடன்படாமல் பட்டினி கிடந்தது செத்தால் கூட அந்த ஆத்திரத்தில் மூர்த்தியை அவன் இன்னமும் மோசமாக பழி வாங்குவான் என்பதை அவளது மனசாட்சி அவளுக்கு அறிவுறுத்தியது.


தன்னுடைய உயிரை விட , மூர்த்திக்கு இவனால் எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தவள் மனதை கல்லாக்கிக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு சம்மதம் தெரிவித்தாள்.


“எனக்கு சம்மதம்”அவனது முக பாவனையை அளவிட்டபடியே அவள் கூற அவன் முகமோ எப்பொழுதும் போல புன்னகையுடனே இருந்தது.தான் சம்மதித்ததும் அவன் வானளவிற்கு துள்ளி குதிப்பான் என்றெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை தான்.ஆனால் இப்பொழுது கூட உணர்ச்சிகள் மரத்துப் போன ஒரு முகத்துடன் இருப்பவனின் நோக்கம் என்ன என்பது அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.


“வெல்… குட் டெசிஷன் (well Good Decision) சில்லக்கா…இன்னையில் இருந்து நீ என்னோட கெஸ்ட்…உனக்கு பிடிச்சதை செய்யலாம்…இங்கே உனக்கு எந்த தடையும் இல்லை…” என்று சொன்னவன் அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல அங்கிருந்து வெளியேற வானதிக்கு அந்த நிமிடம் அவனைப் பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை என்பது நிஜம்…


சம்ஹார மூர்த்தி ஜெயிலில் இருந்தான்.அவனுடைய லாயர்கள் எவ்வளவோ திறமையாக வாதாடியும் யாராலும் அவனுக்கு ஜாமீன் வாங்கித் தர முடியவில்லை. சம்ஹார மூர்த்தி வெளியே வந்தால் சாட்சிகளை கலைப்பதற்கோ அல்லது அழிப்பதற்க்கோ முயற்சிகள் செய்யக் கூடும் என்று வாதாடி எதிர்த்தரப்பு வக்கீல் அவனுக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுத்து விட்டார்.


அவனை ஜெயிலுக்கு கொண்டு வர முடிந்த காவல் துறையால் அவனை சிறைக் கம்பிகளுக்கு அப்பால் கொண்டு செல்ல முடியவில்லை.


“சார்…உங்க செல்லுக்குப் போங்க..உங்களுக்குனு ஸ்பெஷலா ஏ கிளாஸ் ரெடி பண்ணி இருக்கேன் சார் ” ஜெயிலர் மிகப் பணிவாக வளைந்து நின்று பேசினார்.


நிமிர்ந்து அவன் பார்த்த ஒற்றைப் பார்வையில் அவருக்கு குளிர் ஜுரமே வந்து விடும் போல இருந்தது.


“உன்னோட போனைக் கொடு”


“சார்..ரூல்ஸ் படி அதெல்லாம் தப்பு..வெளியே தெரிஞ்சா…”


“உன்னை கொடுன்னு சொன்னேன்..”என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்ப அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு அவனிடம் மொபைலை கொடுத்தவர் வேகமாக சென்று வெளியில் நின்று கொண்டார்.யாரும் உள்ளே வராமல் காவல் காத்த படி.


“சேகர்…என்னை ஜாமீனில் எடுக்கிறதுக்கு ஏதாவது செய்றியா… இல்லையா?”


“…”


“நீ உள்ளூரில் எந்த வக்கீலையும் போய் பார்க்க வேணாம்.நீ லட்சக்கணக்கில் பணம் கொடுத்தாலும் கூட ஒருத்தனும் வர மாட்டான்.வந்தா அவங்க தலைக்கு அந்த ஈஸ்வர் குறி வச்சிடுவான்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.அதனால நீ டெல்லில இருக்கிற சுப்ரீம் கோர்ட் லாயர் வர்மாவைப் போய் பார்…”


“…”


“அதெல்லாம் வருவார்…ஒரு கோடி ரூபாய் கேட்டாலும் தரத் தயாரா இருக்கிறோம்னு சொல்லு.கண்டிப்பா ஒத்துப்பார்…”


“…”


“முட்டாள்…அதுக்கு எல்லாம் இப்ப நேரம் இல்லை…எனக்கு முதலில் வானதியை அந்தப் பைத்தியக்காரன் கிட்டே இருந்து மீட்டாகணும்…அதுக்கு நான் வெளியே வந்தாகணும்.என்னை வெளியே கொண்டு வர்றதுக்கு உண்டான வேலையைப் பார்.ஆசிரமத்தில் சுந்தரேசன் அய்யா பயந்து போய் இருப்பார்.அவரை நேரில் பார்த்து பேசு…பயப்படுவதற்கு ஒன்றுமில்லை…நான் சீக்கிரமே வெளியே வந்து விடுவேன் என்று அவருக்குத் தைரியம் சொல்”


“…”


“இவன் தான் ஜெயிலில் இருக்கிறானே அப்படின்னு வானதியை தேடுற வேலையில் அலட்சியம் காட்டாதீங்க…வானதியை தேடும் முயற்சியை எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தி விடக்கூடாது.என்னோட பலமே அவ தான்.அவ பக்கத்தில் இருந்தப்போ எல்லா விஷயத்தையும் ஈசியா செய்ய முடிஞ்ச என்னால அவ பக்கத்தில் இல்லாம எதுவுமே முடியலை.


அவளை நேரில் பார்த்தா தான் எனக்கு உயிரே வரும்.அதுக்கு அப்புறம் இருக்கு அவனுக்கு”ஆத்திரமாக பேசிக் கொண்டே போனவன் போனை வைத்து விட்டு அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசிக்கத் தொடங்கினான்.


கப்பலில் இருந்த வானதிக்கு பொறுமை எல்லை மீறிக் கொண்டு இருந்தது.எங்கே வாயைத் திறந்து கத்தி விடுவோமோ என்ற பயத்தில் வாயை இறுக மூடிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.


“கொஞ்சம் நேராப் பாரு…இவ்வளவு இல்லை…வலது பக்கம் கொஞ்சமா திரும்பு…சிரிக்கக் கூட தெரியாதா உனக்கு…ஈஈஈன்னு எல்லா பல்லையும் காட்டி இளிச்சு வைக்காதே…அழகா இதழ் பிரியாம சிரிக்கணும்.ம்ம்ம்..கையை இப்படி ஸ்டைலா வச்சுக்கோ…”என்று அரைமணி நேரமாக அவளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறான் ஈஸ்வர்.


முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு வேண்டாவெறுப்பாக அவன் சொன்னதை எல்லாம் செய்து கொண்டு இருந்தாள் வானதி.
“நீ போட்டு இருக்கிற டிரஸ் எவ்வளவு விலை அதிகம் தெரியுமா? அதை போட்டுக்கிட்டு இப்படி மண்ணு மாதிரி ரியாக்ஷன் கொடுக்கிற… இவ்வளவு காஸ்ட்லியான டிரஸ் போட்டு இருக்கிற சந்தோசத்திலயாவது கொஞ்சம் சிரிச்சுத் தொலை”


குனிந்து தான் அணிந்து இருந்த புது உடையை பார்த்துக் கொண்டாள்.பிங்க் நிறத்தில் டாப்சும்,வெள்ளையில் பிங்க் நிற பூக்கள் போட்ட லாங் ஸ்கர்ட்டும் அணிந்து இருந்தாள்.அதற்கு மேட்சாக வளையல் போன்ற தோடுகளும்,பிரேஸ்லெட்டும்,கழுத்தில் நல்ல கனமான டிசைனர் செயினும் கொடுத்து அவளை அணிய சொல்லி இருந்தான்.கூந்தலை விரித்து விட்டு,அவளின் நெற்றியின் மேலே கூலிங்கிளாசை ஸ்டைலாக அணிவித்து இருந்தான்.

அவளது தோற்றத்தையே முற்றிலுமாக மாற்றி இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களை மிஞ்சும் தோற்றத்துடன் அவளை மாற்றி இருந்தான் ஈஸ்வர்.
‘இதை எல்லாம் அவன் வாங்கி வைத்து இருப்பதைப் பார்த்தால் நிச்சயமாக பல நாள் முன்னரே திட்டமிட்டு அவளுக்காக வாங்கத் தொடங்கி இருக்க வேண்டும்.அது மட்டும் இல்லாமல் அவன் வாங்கி வந்த அனைத்துமே அவளுக்கு கன கச்சிதமாக பொருந்திப் போனது தான் அவளால் துளியும் நம்ப முடியவில்லை.

அப்படி என்றால் பல நாட்களாக என்னை இவன் கண்காணித்து இருக்கிறான்.அதனால் தான் இத்தனையும் சரியான அளவில் அவனால் வாங்கி இருக்க முடிந்து இருக்கிறது…பாவி…திட்டம் போட்டு எல்லாத்தையும் செஞ்சு இருக்கான்…’என்று நெஞ்சு முழுக்க அவன் மீதிருந்த ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்.


இதை எல்லாம் மனதுக்குள் நினைத்துக் கொள்ள முடியுமே தவிர…சிறு பார்வையால் கூட அவளால் வெளிப்படுத்த முடியாதே…அவன் கண்களிலிருந்து சிறுசெயல் கூட தப்புவது இல்லை.கண் கொத்திப் பாம்பாக எந்நேரமும் அவளை கண்காணித்த வண்ணம் தானே இருக்கிறான் அவன்.இப்பொழுது மனதில் நாம் நினைப்பது அவனுக்கு தெரிந்தால் வேறு வினையே வேண்டாம்.அதற்கும் சேர்த்து வைத்து பழி வாங்குவான் என்று எண்ணியவள் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.


“சந்தோசம் நாம போட டிரஸ்ல இருந்தா வருது? இது தெரியாம போச்சே எனக்கு…நான் என்னவோ அது மனசு சம்பந்தப்பட்டதுன்னு இல்ல நினைச்சேன்…அது சரி…அனாதைக்கு என்ன தெரியும்? உங்களைப் போல பெரிய்ய்ய மனுஷருக்குத் தான் எல்லாமும் தெரியும்.இல்லையா சார்ர்ர்ர்ர்”வேண்டுமென்றே அதிகப்படியாக அவனுக்கு மரியாதை கொடுத்து பேசினாள்.


“என்னிடம் மரியாதையா பேசணும்னு நான் சொன்னதை இப்படி இம்மி கூட பிசகாம நீ காப்பாத்துவன்னு நான் எதிர்பார்க்கலை….சரி போகட்டும் இப்போ நான் சொன்ன மாதிரி போஸ் கொடு…ம்ம்ம்” என்று அரட்ட,


“ம்ம்ம்..சரி சார்ர்ர்ர்”என்றவள் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி இளித்து வைக்க,வேகமாக தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டான்.


“முண்டம்..முண்டம்…இப்ப தானே சொன்னேன்…ஈஈஈன்னு இளிச்சு வைக்காதே…மிருதுவா…பூ மாதிரி சிரி”


“ஈஈஈ”


“கருமம் கருமம்…. ஒரு செல்பி எடுக்க ஒரு மணி நேரமா போராட வேண்டி இருக்கு உன்னோட”என்று எரிச்சல் அடைந்தவனை முடிந்த அளவுக்கு வெறுப்பேற்றி விட்டு அவனுக்கு அருகில் அமர்ந்து செல்பிக்கு போஸ் கொடுத்தாள்.


ஒரு வழியாக செல்பி எடுத்து முடித்ததும் வேலையாள் கொண்டு வந்த காபியை அவளுக்கு எடுத்துக் கொடுத்தான்.ஒரு வாய் குடித்து விட்டு ‘உவ்வே’ என்று துப்பி விட்டாள் வானதி.


“நாம இருக்கிறது நடுக்கடல்ல…இங்கே சுத்தமான பசு மாட்டுப் பால் எல்லாம் கிடைக்காது.பவுடர் பால் தான் கிடைக்கும்.இதையே குடிச்சு பழகிக்கோ…”என்றான் அலட்டல் சிறிதும் இன்றி…


அந்த மட்டிலும் அவள் கொஞ்சம் சந்தோசப் பட்டுக் கொண்டாள். ‘இதற்கு முன்பு கொடுத்ததைப் போல புழு நெளியும் கெட்டுப் போன உணவைத் தராமல் விட்டானே’என்று எண்ணி தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள் வானதி.


கசந்து வழிந்த அந்த காபியை வேறு வழியின்றி குடித்து முடித்து விட்டு திரும்பி அவனைப் பார்க்க அவன் போனில் மும்மரமாக எதையோ நொண்டிக் கொண்டு இருந்தான்.


‘ஒருவேளை எடுத்த போட்டோ சரியா வரலையோ…மறுபடியும் போஸ் கொடுக்க சொல்லி உயிரை எடுப்பான் போலவே’
“போட்டோ சரியா வரலையா?மறுபடியும் எடுக்கணுமா?” என்றாள் கவலையுடன்.


“அட்டகாசமா வந்து இருக்கு”என்றவன் போனைத் திருப்பி அவளிடம் காட்ட அவள் மனம் துணுக்குற்றது.


நீண்ட சோபாவில் இவள் ஒரு முனையிலும், அவன் ஒரு முனையிலுமாக இடைவெளி விட்டு அமர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ,அவன் எடுத்து இருந்த கோணத்தில் பார்த்தால் இருவரும் நெருக்கமாக அமர்ந்து இருப்பது போல தோன்றியது.அதுவும் அவள் கழுத்தை சாய்த்து அமர்ந்து இருந்த விதம் அவன் தோளில் அவள் தலை வைத்து இருப்பதைப் போல தோன்றும்படியாக இருந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


“இந்த போட்டோ சரியா இல்லை போலவே..வேற போட்டோ எடுத்துக்கலாமே..இதை அழிச்சிடுங்க”முடிந்த அளவு பதட்டத்தை குரலில் காட்டி விடாமல் இருக்க வெகுவாக பிரயத்தனப்பட்டாள் வானதி.


“நோ…நோ..ரொம்ப பர்பெக்டா இருக்கு…ஏன் வானதி இந்த போட்டோவை மூர்த்திக்கு அனுப்பினா எப்படி இருக்கும்?”என்று கண்கள் விபரீத ஒளியில் பளபளக்க அவன் கேட்ட விதம் ஏதோ சரியில்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது.


தீ தீண்டும்…

Post a Comment

புதியது பழையவை