அத்தியாயம் 19
“உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது முன் பகை இருக்கா?”அவன் முகத்தை உற்று நோக்கியவாறே அவள் கேட்க அவனோ வெகு கவனமாக கையில் இருந்த சாலட்டை ருசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
“ஒருவேளை தொழிலில் உங்களுக்கு பயங்கரமான நஷ்டத்தை ஏற்படுத்திட்டாரா?”என்று அவள் மீண்டும் தன்னுடைய கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவனோ அவளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
‘ம்ஹுகும்…இதை விடவே கூடாது…காரணம் என்னன்னு கண்டுபிடிச்சே தீரணும்’ தனக்குள்ளாகவே சபதம் ஒன்றை எடுத்துக் கொண்டவள் அடுத்து அவனை கோபப் படுத்த முயன்றாள்.
“ஒருவேளை நீங்க காதலிச்ச பொண்ணை….அதாவது என்னை அவர் கல்யாணம் செஞ்சுக்க முயற்சி செஞ்சதால இப்படி எல்லாம் நடந்துக்கறீங்களா” என்று வேண்டுமென்றே நக்கலாக கேட்டாள்.அவளுக்கு நன்றாகத் தெரியும்.இதற்கு என்ன பதில் வருமென்று. இருந்தும் அவள் பின்வாங்கத் தயாராக இல்லை.
அவனது பார்வையின் தீட்சண்யம் அவளை சுட்டாலும் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் அவனையே உற்றுப் பார்த்தாள்.
“உனக்கு என்ன பெரிய உலக அழகின்னு நினைப்பா? சம்ஹார மூர்த்தி ஒரு கிறுக்கன் பத்தாதா? உன் பின்னாடி சுத்த…” என்றான் சுள்ளென்று…
“அப்புறம் எதுக்கு என்னை கடத்திட்டு வந்து இருக்கீங்க சார்” இமை கொட்டி விழி விரித்தாள் ஒன்றுமறியாதவள் போல…
அவன் கண்களில் மின்னல் கீற்று ஒன்று நொடியில் கடந்து போனது.
“சில்லக்கா…என்னிடம் வார்த்தையாடி விஷயத்தை கறக்கிற அளவுக்கு உனக்கு திறமை பத்தாது…பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”என்றவன் அங்கிருந்து எழுந்து கப்பலின் உள் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மினி தியேட்டருக்குள் நுழைந்தான்.
இந்த ஒரு வாரமாக அவனை கணிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் வானதி.தன்னை இப்படி அடைத்து வைத்து இருப்பதன் நோக்கம் தெரிந்து விட்டால் இவனிடம் அது குறித்து பேசி நல்ல முறையில் இங்கிருந்து வெளியேறி விடலாம் என்று நினைத்தாள்.
அவள் அப்படி நினைத்ததற்குக் காரணம் ஈஸ்வர் தான்.அவள் அவனுடன் இருக்க சம்மதித்த பிறகு இந்த ஒரு வாரமும் அவன் நடந்து கொண்ட விதம் அப்படி.
இந்த ஒரு வாரமாக தினமும் வெவ்வேறு விதத்தில் புது உடைகளை அவளுக்கு கொடுத்து அணிய வைத்து அப்படியே இருவரும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதை மட்டும் நிறுத்தவில்லை அவன்.
அவளின் அறைக்குள் வருவதற்கு இரண்டு முறை நாசுக்காக தட்டி விட்டுத் தான் உள்ளே வருவான்.வேளா வேளைக்கு அவளைத் தேடி சாப்பாடு வந்து விடும்.வித விதமான,ருசி மிகுந்த சாப்பாடுகளை ஒன்றும் அவன் அவளுக்கு கொடுத்து விடவில்லை.அவளின் வயிறு வாடாத அளவிற்கு கொடுத்தான். பாதி நேரம் அவளது சாப்பாடு காய்கறியும்,பழங்களும் தான்.அதுவே அவளுக்கு தேவாமிர்தமாக இருந்தது.
அதே சமயம் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பெண் தானே என்று மோசமான தரம் தாழ்ந்த பேச்சுக்களை அவன் பேசியதே இல்லை.தனிமையில் இருக்கும் பொழுது கூட கண்ணியத்தை கடை பிடித்தான்.ஒருநாள் கூட அவனது பார்வை அவள் மீது தவறான விதத்தில் பதிந்தது கிடையாது.
அவனிடம் கோபம் இருந்தது.ஆனால் முன்கோபி இல்லை…
அவளது பார்வை அவளை அடிக்கடி துளைத்தது…கண்டிப்பாக வக்கிரமான மன நிலையில் அல்ல…
அவனைப் பற்றி ஓரளவிற்கு கணித்து இருந்ததால் தைரியமாக அவனிடம் பேச முயற்சி செய்தாள் வானதி.
அவன் பின்னாலேயே சென்றவள் அவனுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு விரல் விட்டு எண்ணத் தொடங்கினாள்.அவள் செய்வதை எல்லாம் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்தவன் அவளிடம் கேள்வி மட்டும் கேட்கவில்லை.
“இன்னையோட ஏழு நாள் முடிஞ்சது…இன்னும் எண்பத்து மூணு நாள் இருக்கு”என்று தனக்குத் தானே சொல்வது போல சத்தமாகவே சொல்லிக் கொண்டாள் வானதி.
“கண்டிப்பா மூணு மாசம் முடிஞ்சதும் அவர் கிட்டே அனுப்பி வச்சிடுவீங்க தானே சார்”என்று அவள் கேட்க அவன் இமையோரத்தின் துடிப்பு எதற்காக என்று அவளுக்கு புரியவில்லை.பதிலுக்காக ஆவலுடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“சரியா மூணு மாசம் முடிஞ்சதும் உன்னை அனுப்பி வச்சிடுவேன்…அதுக்கு அப்புறமும் உன்னை வச்சு மாறடிக்க எனக்கு என்ன தலை எழுத்து?”என்று விட்டேற்றியாக பேசியவன் தியேட்டரில் பாடலை ஓட விட அவனுக்கு விருப்பமான அதே பாடல் அன்றும் ஒலிக்கத் தொடங்கியது.
அவன் எப்பொழுதும் அந்த ஒரே பாடலை மட்டும் திரும்பித் திரும்பி கேட்பதை அவள் நன்றாக அறிவாள்.இப்பொழுதும் அந்தப் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.கண்களை மூடி நன்றாக சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அந்த பாடலை கேட்க ஆரம்பித்தான் ஈஸ்வர்.
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
அப்படி என்ன தான் இந்த பாட்டில் இருக்கோ என்று சலிப்புடன் நினைத்தாலும் அந்த நேரத்தில் அவன் முகத்தில் வந்து போகும் உணர்வலைகளின் காரணம் புரியாமல் குழம்பிப் போனாள் வானதி.
சட்டென்று ஏதோ கோளாறு காரணமாக ஒலித்துக் கொண்டு இருந்த பாடல் நின்று விட அவன் முகத்தில் அமைதி தொலைத்த பாவனை.பாடல் நின்று விட்டால் அங்கே இருந்த ‘பிரபல’ பாடகி வானதிக்கு பொறுக்குமா? அதீத ஆர்வக் கோளாறின் காரணமாக தான் இருக்கும் இடம் மறந்து , நிலை மறந்து தன்னுடைய குரலை சரி செய்து கொண்டு பாடத் தொடங்கினாள்.
பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா…
என்று அவள் தன்னை மறந்து கண்களை மூடி ரசித்துப் பாடிக் கொண்டு இருக்க இங்கே ஈஸ்வரின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை கவனிக்கத் தவறி விட்டாள் வானதி.
“போதும்….நிறுத்து”என்று ஆங்காரத்துடன் கத்தியபடி ருத்ர மூர்த்தியாக தனக்கு எதிரில் நின்றவனைப் பார்த்து மலங்க மலங்க விரித்தாள் வானதி.அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்தவன் வெறியோடு அவளை நோக்கி வந்தான்.
“இனியொரு முறை நீ பாடினே…இந்த கண்ணாடியை அப்படியே உன்னோட தொண்டையில் சொருகிடுவேன்…”என்று கர்ஜித்தவன் அவளின் மிரட்சியான பாவனையை அசட்டை செய்து விட்டு அங்கிருந்து புயலென கிளம்பி வெளியே சென்று விட்டான்.
‘இப்ப நான் என்ன செஞ்சேன்னு இவன் இப்படி கத்திட்டு போறான்’
‘அடியே அவனைப் பத்தி மரியாதையா பேசு…’
‘மனசுக்குள்ளே எப்படி வேணா நினைப்பேன்.அதுக்கெல்லாம் அவனால தடை போட முடியாது.’ என்றவள் அவனை முடிந்த மட்டும் வண்ண வண்ணமாக திட்டித் தீர்த்தாள்.
‘பின்னே அவள் அப்படி என்ன தவறு செய்து விட்டாள்.பாடல் நின்று போனதும் தன்னையும் மறந்து அந்தப் பாடலை பாடத் தொடங்கி விட்டாள்.இசையில் ஆர்வம் மிகுந்த பாடகியான அவள் பாடாமல் இருந்தால் தானே ஆச்சரியம்! அதற்குப் போய் இப்படியா கத்தி வைப்பான்.
இந்நேரம் அவராக இருந்து இருந்தால் என்னுடைய பாடலை வெகுவாக ரசித்துப் பாராட்டி இருப்பார்.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’என்றெல்லாம் திட்டியவள் அதன் பிறகு அவன் இருந்த திசைக்கு கூட செல்லவில்லை.
இங்கே ஜெயிலில் இருந்த சம்ஹார மூர்த்தி அதிரடியாக சில வேலைகளை செய்தான்.முதல் வேலையாக ஜெயிலில் எல்லாரிடமும் சோக முகம் காட்டினான்.அதாவது தான் உண்மையிலேயே இப்பொழுது வருந்திக் கொண்டு இருப்பதாகவும்,அடுத்து என்ன செய்வது என்பதே புரியாத நிலையில் துவண்டு போய் இருப்பதாகவும் மற்றவர்களை நம்ப வைத்தான்.அவனது ஆட்களுக்கு தினமும் ஜெயிலரின் போனில் இருந்தே உத்தரவுகளை பிறப்பித்தான்.
அதே நேரம் அவனுக்கு வானதியைப் பற்றி வந்து சேர்ந்த செய்திகள் அனைத்தும் அவனை வெகுவாக சிந்திக்க வைத்தது.வானதியை தேட சொல்லி நாலா திசையிலும் ஆட்களை ஏவினான்.வெளியாட்களைப் பொறுத்தவரை அவனுக்காக வாதாட வக்கீல் யாருமே ஒத்துக் கொள்ளவில்லை என்பதாக நம்ப வைக்கப்பட்டது.
ஆனால் உண்மை அதுவல்ல…சம்ஹார மூர்த்தியின் வழக்கை எடுத்துக் கொள்ள டெல்லியை சேர்ந்த வர்மா ஒத்துக் கொண்டார்.ஆனால் அந்த விஷயம் கடுகளவு கூட வெளியே தெரியாமல் வெகு கவனமாக காய்களை நகர்த்தத் தொடங்கினான்.
இதற்கிடையில் வானதியை அழைத்துக் கொண்டு ஈஸ்வர் சென்ற இடத்தைப் பற்றிய தகவல்களை அவனது ஆட்கள் மூலமாக திரட்டினான் சம்ஹார மூர்த்தி.அவனது கப்பலில் இருந்து ஒரு போட்(Boat) மூலம் அருகில் இருந்த துறைமுகத்தை அடைந்தவன் அங்கிருந்து வேறு கப்பலில் கிளம்பி சென்று இருக்கிறான் என்பது வரை அவனுக்கு தகவல் கிடைத்தது.
அந்த துறைமுகத்தை சேர்ந்தவர்களிடம் விசாரித்ததில் வானதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக ஈஸ்வரால் நம்ப வைக்கப்பட்டு இருந்ததையும் அறிந்து கொண்டான்.அது சம்பந்தமான போலியான மருத்துவ அறிக்கைகளும் அவன் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த தகவலும் அவன் காதுகளுக்கு எட்ட , முன்னைக் காட்டிலும் அதிக ஆக்ரோஷம் அடைந்தான்.
ஒரு பக்கம் வானதியை தேடுவதிலும்,மறுபக்கம் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் எல்லா ஏற்பாடுகளையும் வெகு கவனத்துடன் செய்து வந்தான் சம்ஹார மூர்த்தி. அவனை பார்க்க ஜெயிலுக்கு வந்த யாரையுமே அவன் சந்திக்கவில்லை. சுந்தரேசன் அய்யா கூட இரண்டு முறை முயன்று விட்டு அப்படியே விட்டு விட்டார்.
டெல்லியில் இருந்து வந்த வர்மா, தான் வந்ததுமே சம்ஹார மூர்த்தியின் ஆபிசில் உள்ள சிசிடிவி ரெக்கார்டிங்கை கைப்பற்றினார். அதில் யாரோ முகம் தெரியாத நபர் அந்த பெட்டியில் பொருட்களை வைப்பது பதிவாகி இருப்பதை முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொண்டார்.
அந்த ஆதாரங்களை நேரடியாக கோர்ட்டில் அளிக்காமல் ,நீதிபதியின் வீட்டில் அவரை சந்தித்து அந்த ஆதாரங்களைக் கொடுத்தார்.
“சார்…சம்ஹார மூர்த்தி ஒரு பெரிய பிசினஸ் மேன்..யாரோ வேணும்னே இப்படி எல்லாம் பழி சொல்லி அவரை ஜெயிலில் அடைச்சு வைக்க முயற்சி செய்றாங்க…இப்போ இந்த ஆதாரத்தை நாளைக்கு கோர்ட்டில் வச்சு உங்ககிட்டே கொடுத்தா விஷயம் வெளியே தெரிஞ்சு அவருக்கு ஆபத்தா முடியும்…அதனால தான் வீட்டில் உங்களைப் பார்த்து கொடுக்கிறேன்.”
“சரி வர்மா …எப்படியும் நாளைக்கு கோர்ட்டில் அவரை ரிலீஸ் செய்ய நான் உத்தரவிடும் பொழுது இந்த விஷயம் வெளியே தெரிந்து தானே ஆகும்..அப்போ என்ன செய்வீங்க?”
“அப்போ தெரியும் தான் சார்…ஆனா இப்ப வரைக்கும் அவருக்கு ஆதரவா எந்த வக்கீலும் ஆஜர் ஆகலைன்னு தான் எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க…இப்போ நான் ஆதாரத்தை உங்க வீட்டிலேயே கொடுத்ததால என்ன ஆதாரம்னு எதிரிகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை….அப்படியே தெரிஞ்சாலும் அவங்களால உடனடியா அவரை விடுதலை செய்யுறதை தடுக்க முடியாது…சோ…கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க சார்” என்று தெளிவாக எல்லா கருத்துகளையும் எடுத்து சொல்ல நீதிபதியும் அதற்கு உடன்பட்டார்.
சம்ஹார மூர்த்திக்கு மறுநாள் கண்டிப்பாக ஜாமீன் கிடைத்து விடும் என்ற தகவலை ஜெயிலரின் மூலமாக அவனுக்கு தெரியப்படுத்தினார் வர்மா.அதைக் கேட்ட மூர்த்தியின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.கற்பாறை போல இறுகிப் போய் அமர்ந்து இருந்தான்.
‘டேய் ஈஸ்வர் நான் வர்றேன்டா..தயாரா இரு…இத்தனை நாள் நீ என்னை ஆட்டிப் படைச்சதுக்கும் வானதியை என்கிட்டே இருந்து பிரிச்சு கூட்டிட்டு போனதுக்கும் கண்டிப்பா நீ அனுபவிப்ப’என்று மனதுக்குள் கறுவிக் கொண்டு இருந்தான்.
இங்கே கப்பலில் ஈஸ்வர் வானதியிடம் கத்திக் கொண்டு இருந்தான்.
“இப்போ நான் சொல்றதை செய்ய முடியுமா? முடியாதா?”
“இ..இல்ல வேண்டாம்…இது வேண்டாமே”கெஞ்சிக் கொண்டிருந்தாள் வானதி.
“சொன்னதை மட்டும் செய்” உத்தரவாக சொன்னவன் அவளுக்கு என்ன பேச வேண்டும் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று மறுபடியும் விளக்கி விட்டு போனை ஆன் செய்தான்.
வானதி நின்ற இடத்தில இருந்து ஒரு அடி கூட நகரவில்லை. அப்படியே நின்றாள்.
“வீடியோ ஓட ஆரம்பிச்சுடுச்சு வானதி..கமான் பேசு”
“இன்னைக்கு காலையில் நடந்த விஷயத்துக்காக என்னை பழி வாங்கறீங்களா”அவள் குரலில் அழுகை வெடித்துக் கிளம்ப தயாராக இருந்தது.
“ஏய்! அழுது சும்மா சீன் கிரியேட் பண்ணாத…ம்ம்ம் சீக்கிரம் நான் சொல்லிக் கொடுத்த வசனத்தை அப்படியே பேசு…முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கோ..கண்ணைத் துடை…மேக்கப் கலையுது பார்”என்றான் அதட்டலாக
“நா..நான் அப்படி எல்லாம் பேச மாட்டேன்”
“ஏன்..ஓ..நீ இப்படி எல்லாம் பேசினா உன்னோட ஹீரோ உன்னை வெறுத்து ஒதுக்கிடுவானோ…இவ்வளவு தானா உங்க காதல்ல்ல்ல்…”என்றான் சீண்டலாக
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை…இதுக்காக எல்லாம் அவர் என்னை ஒதுக்க மாட்டார்…”என்றாள் வீம்புடன்…
“அந்த நம்பிக்கை உனக்கு இருந்தா நான் சொல்ற படி செய்..இல்லைன்னா விட்டுடு…”என்றான் அசட்டையாக
“செய்றேன்..நீங்க சொன்னதுக்காக இல்லை சார்..அவர் மேல எனக்கு எப்படி நம்பிக்கை இருக்கோ..அதை விட அதிகமாவே அவருக்கு என் மேலே நம்பிக்கை இருக்கு” என்றவள் அவன் சொன்னபடியே வீடியோவில் பேசத் தொடங்கினாள்.
ஈஸ்வருக்கு நன்றாகத் தெரியும்…அவளை எப்படி சீண்டுவது என்று…அதை சரியான விதத்தில் செய்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டான்.
ஆனால் இதன் மூலம் ஏற்படப் போகும் விளைவுகள் தெரிந்து இருந்தால் நிச்சயம் இதற்கு சம்மதித்து இருக்கவே மாட்டாள் வானதி.ஆனால் கடவுளின் கணக்கும்,ஈஸ்வரின் கணக்கும் அந்த இடத்தில் தான் ஒன்றையொன்று முட்டிக் கொண்டு நின்றன.
தீ தீண்டும்…
கருத்துரையிடுக