Theendatha Thee Neeye Tamil Novels 20

 

அத்தியாயம் 20
இடம் :1
அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் ஓட விட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தான் சம்ஹார மூர்த்தி.தன்னுடைய கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.வெறி பிடித்தவன் போல மீண்டும் மீண்டும் அதையே ஓட வைத்து பார்த்துக் கொண்டு இருந்தான்.அந்த காணொளியில் வானதி நவ நாகரீக உடையில் தோன்றி, அழகாக சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தாள்.


“ஹாய் பிரண்ட்ஸ்…எல்லாரும் எப்படி இருக்கீங்க…நான் ரொம்பவே சந்தோசமா இருக்கேன்…என்னோட சந்தோசத்துக்கு காரணம் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு…அது என்ன பரிசுன்னு உங்க எல்லார் கூடவும் பகிர்ந்துக்க ஆசையா இருக்கு.


கடவுள் எனக்கு கொடுத்த அந்த விலைமதிப்பில்லா பரிசு என்ன தெரியுமா? ஈஸ்வர்… என்னோட ஈஸ்வர்….ருத்ரேஸ்வர்…எங்கேயோ ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்தவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைக்கல…


இப்போ நானும் அவரும் கப்பல்ல ஜாலியா போய்ட்டு இருக்கோம்.நாங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி செய்றோம். அநேகமா தரைக்கு இறங்கியதும் எங்க கல்யாணத்தைப் பத்தின நல்ல செய்தி சொல்லுவோம்” என்று வெட்கத்தோடு பேசி முடித்தவளைக் கண்டவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது மட்டும் நிஜம்.அளவுக்கு அதிகமான ஆத்திரத்தால் அவன் உடல் நடுங்கத் தொடங்கியது.


“டேய்! ஈஸ்வர்..என் கையில் நீ மாட்டின செத்தடா”என்று ஜெயிலில் கத்தியவனின் குரலைக் கேட்டு மொத்த ஜெயிலுமே ஒரு நொடி அடங்கிப் போனது.


வேகமாக ஜெயிலரின் அறைக்குப் போனவன் , “போனைக் கொடு”என்று அதிகாரமாக பிடுங்கிக் கொண்டான்.யாரேனும் பார்த்து விடுவார்கள் என்ற பதட்டத்துடன் ஜெயிலர் சுற்றும் முற்றும் பார்க்க,ஒரே இழுவையில் அவரை சேரில் இருந்து கீழே தள்ளி விட்டு தான் அந்த சேரில் அமர்ந்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.


“டேய்! நான் உள்ளே இருக்கிறதால தானே வானதியை தேடும் வேலையை உங்ககிட்டே ஒப்படைச்சேன்.அதை செய்யாம வெளியில் என்னத்தை கிழிச்சுக்கிட்டு இருக்கீங்க?”வார்த்தைகளால் அவனது ஆட்களை கிழித்து தோரணம் கட்டினான் சம்ஹார மூர்த்தி.
மறுமுனையில் அவனது ஆட்கள் கூறிய தகவலில் அவனது முகம் மகிழ்ச்சியில் மின்னியது.


“என்ன? கண்டுபிடிச்சாச்சா? எங்கே? எந்தக் கப்பல்?பக்கத்தில் துறைமுகம் எதுவும் இல்லையே?” என்றான் சந்தேகமாக…


“…”


“ரொம்ப நல்லது…நான் வெளியே வர்றதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு…வெளியே வந்ததும் நான் செய்யுற முதல் வேலை அந்த ஈஸ்வரை கொன்னு…குழியில புதைக்கிறது தான்…அதுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு முடிங்க…”என்று அவனது ஆட்களுக்கு வரிசையாக உத்திரவிட்டவன் முகத்தில் கொலைவெறி தாண்டவமாட காத்திருக்கத் தொடங்கினான்.


அன்று காலையில் கோர்ட் ஆரம்பித்ததும் முதல் கேசே சம்ஹார மூர்த்தியின் கேஸ் தான்.வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சம்ஹார மூர்த்தி விடுவிக்கப்பட அடுத்த நொடி ப்ரைவேட் விமானம் ஒன்றின் மூலம் தனக்கு நம்பிக்கையான ஆட்களுடன் கடலை நோக்கி பயணிக்கத் தொடங்கினான்.


விமானத்தில் ஏறி அமர்ந்ததும் சேகர் தயங்கித் தயங்கி பேசினான்.


“சார்…நாங்க விசாரிச்ச வரை இப்ப வரைக்கும் அந்த கப்பலில் தான் அவங்க இருக்காங்க சார்…மேடம் பேசின வீடியோவில் கூட ஒரு இடத்தில அந்த கப்பலின் பேர் அவங்களுக்கே தெரியாமல் பதிவாகி இருக்கு.ஆனா…”


“ஆனா…என்ன?”


“இப்போ எதுக்கு சார் இந்த அளவுக்கு ஆயுதங்களை எடுத்துக்கிட்டு போறோம்?”


ஒரு முழு கப்பலை கடலோட சமாதியாக்க இவ்வளவும் தேவை சேகர்…”என்று சலனமில்லாத குரலில் முடித்து விட சேகருக்கு அந்த குரல் நிச்சயம் பயத்தையே அளித்தது.


சம்ஹார மூர்த்தி இப்படி சலனமில்லாத குரலில் பேசினால் அதற்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் ஒன்றே ஒன்று தான்.அன்று யாருடைய வாழ்நாளோ முடியப்போகிறது எண்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.


மீண்டும் மீண்டும் தன்னுடைய ஆட்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்டான் சம்ஹார மூர்த்தி.அந்த கப்பல் இருக்கும் இடத்திற்கு அருகில் எந்த துறைமுகமும் இல்லை என்ற தகவலை உறுதி செய்த பின்னரே அவன் வேட்டைக்கு தயாரானான். இல்லையெனில் அவர்களை நெருங்குவதற்குள் ஈஸ்வர் மீண்டும் தன்னிடம் இருந்து தப்பி வேறு கப்பலில் சென்று விட வாய்ப்புகள் அதிகம் இருப்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.


அவனது பணத்தின் மூலம் அந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருந்த துறைமுகங்களுக்கும் கூட தகவல் அனுப்பி இருந்தான்.ஒருவேளை ஈஸ்வர் அந்த இடத்திற்கு வந்து இருந்தால் அவனை அங்கிருந்து வெளியேற விடாமல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தான்.அவன் செய்து இருக்கும் வேலைக்கு அவனை தன்னுடைய கையாலேயே கொன்றால் தான் அவனது ஆத்திரம் தீரும். இந்த முறை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவன் தப்பி விடக் கூடாது என்பதில் அதீத வெறியோடு இருந்தான் சம்ஹார மூர்த்தி.


இடம் :2


கப்பலில் தனக்கென்று ஒதுக்கப்பட்டு இருந்த அறையில் கண்ணீரில் கரைந்து கொண்டு இருந்தாள் வானதி.அறைக் கதவை இரண்டு முறை நாசுக்காக தட்டி விட்டு உள்ளே வந்தவனை அவள் பார்த்த பார்வையில் நிச்சயம் குரோதம் மட்டுமே இருந்தது.


“என்ன வானதி காதலனுக்கு துரோகம் செஞ்சுட்டோம்னு நினைச்சு கதறிக் கதறி அழறியா?”அவன் குரலில் இருந்த நக்கலில் சிலிர்த்து எழுந்தாள் வானதி.


“நான் எந்த துரோகமும் செய்யலை…அது எனக்கும் தெரியும்..உங்களுக்கும் தெரியும் சார்”


“பரவாயில்லையே எவ்வளவு கோபம் இருந்தாலும் மரியாதையா சார்னு கூப்பிடறே…அது தான் உனக்கு உண்மை தெரியுமே..அப்புறம் எதுக்கு அழற”


“நான் அவரை நினைச்சு அழறேன்.இந்த வீடியோவை பார்த்ததும் அவர் மனசு என்ன பாடுபட்டு இருக்கும்”


“அவரா?..ஓ…அந்த வீடியோவை பார்த்துட்டு அவர் இந்நேரம் உன் மேல வச்சு இருந்த காதலை தூக்கிப் போட்டு இருப்பாரே..அதை நினைச்சு அழற போல..ச்.சோ…”போலியாக அனுதாபப் பட்டான்.


“உங்களோட ஆட்டத்துக்கு எல்லாம் முடிவு நெருங்கிடுச்சு…கூடிய சீக்கிரம் அவர் என்னைத் தேடி வரத் தான் போறார்…”


“எந்த தைரியத்தில் இப்படி திமிரா பேசுற வானதி…ஓ..அந்த வீடியோவில் கப்பலோட பேர் வர்ற மாதிரி இடத்தில் நின்னு பேசி இருந்தியே..அதை வச்சா” என்று அவன் அலட்டல் இல்லாமல் கேட்க அவளுக்கோ சர்வமும் அடங்கிப் போனது.


அவன் அதை கவனித்து இருக்க மாட்டான் என்று தானே அவள் நினைத்தாள்.வெளியே தன்னைத் தேடிக் கொண்டு இருக்கும் சம்ஹார மூர்த்திக்கு தன்னைப் பற்றிய எந்த தகவலையும் சேர்க்க முடியாமல் இருந்தவள் அந்த வீடியோவை பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள்.அதனால் தான் முதலில் மறுத்தவள் பின் அவனது மிரட்டலுக்கு அஞ்சி நடிப்பது போல ஒத்துக்கொண்டு நடிக்கவும் செய்தாள்.


‘நான் இவனை ஏமாற்றி அவருக்கு என்னைப் பத்தின தகவலை அனுப்பிட்டேன்னு நினைச்சா…இவன் வேறு ஏதோ கதை சொல்கிறானே’


“ஹே…சில்லக்கா..நீ என்ன நினைச்சே..இதைக் கூட கவனிக்காம அந்த வீடியோவை நான் அனுப்பி இருப்பேன்னு நினைக்கறியா?”


“…”


“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோ சில்லக்கா…நீ நிலத்தில் இருக்கிற வரை போற பாதையை நீ தீர்மானிக்க முடியும்.ஆனா நீ இப்ப இருக்கிறது கடல்ல…கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டா..அது எந்த திசைக்கு உன்னை தள்ளுதோ அந்த திசையில் தான் நீ பயணம் செஞ்சாகணும்.கடலோட ஆக்ரோஷத்துக்கு முன்னாடி நீ எடுக்கிற எல்லா முயற்சியும் வீண் தான்” என்றவனின் அமைதியான அணுகுமுறை கண்டு அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.


“…”


“சரி இந்தா காபியை குடி…”


“எனக்கு ஒரு மண்ணும் வேண்டாம்…”ஆத்திரத்தில் வெடித்து சிதறினாள் வானதி.


“இதை குடிச்சா..உனக்கு ஒரு நல்ல சேதி சொல்வேன்…சம்ஹார மூர்த்தியைப் பற்றி”என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே வேகமாக அவன் கையில் இருந்த காபி கோப்பையை பறித்தவள் கடகடவென்று குடித்து முடித்தாள்.


“அந்த காபி கசப்பா இருக்குமே…உனக்கு அதோட டெஸ்ட் வேற பிடிக்காது…இருந்தும் அதை இவ்வளவு வேகமா குடிச்சு முடிச்சுட்டியே”என்று சிலாகித்தான் ஈஸ்வர்.


“அதை விடுங்க சார்……அவர்..அவருக்கு என்ன? சொல்லுங்க சார்”
“அவ்வளவு லவ்வா அவன் மேல”என்றான் ஒரு மாதிரிக் குரலில்…
அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாத வானதி அவனை தொடர்ந்து நச்சரித்தாள்.


“சொல்லுங்க சார்…ப்ளீஸ்”


“சம்ஹார மூர்த்தி ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிட்டான்”என்று அவன் சொல்லி முடித்ததும் அவள் முகமெங்கும் மத்தாப்பூவாக மலர்ந்தது.


“டிவியில் சில விளம்பரம் வரும் பார்த்து இருக்கியா சில்லக்கா”என்றான் முகம் முழுக்க புன்னகையுடன்.அவனுடைய இந்த முகம் அவளுக்குள் திகிலூட்ட அவனையே பயத்துடன் பார்க்கத் தொடங்கினாள்.


“எண்ணெய் வாங்கினா கப் இலவசமா கொடுப்பாங்க…சோப் வாங்கினா டப்பா ஒண்ணு இலவசமா தருவாங்க..அதே மாதிரி நல்ல செய்தி ஒண்ணு சொன்னா என்கிட்டே உனக்கான இன்னொரு கெட்ட செய்தியும் இலவசமா கிடைக்கும்.”


“எ…என்ன சார்”


“கொஞ்ச நேரம் முன்னாடி நீ குடிச்சியே அந்த காபியில் மயக்க மருந்து கலந்துட்டேன்”


“பொ… பொய் சொல்றீங்க”என்றாள் நடுங்கும் இதயத்துடன்…


“அதுக்கான அவசியம் எனக்கு இல்லை”


“எதுக்கு இப்படி செஞ்சீங்க? எ…என்னை என்ன செய்யப் போறீங்க”என்று அவள் கேட்க,அவன் பார்வை ஒருவித சுவாரசியத்துடன் அவளை வருடியது.அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று ‘திக் திக்’ என அதிரும் மனதுடன் , உயிரை கண்ணில் தேக்கியபடி அவள்,அவனையே பார்த்துக் கொண்டு இருக்க… மெல்லிய தோள் குலுக்கலுடன் தொடர்ந்து பேசினான்.


“இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம இங்கே இருந்து கிளம்பியாகணும்…நீ முழிச்சுக்கிட்டு இருந்தா ரொம்ப தொந்தரவு செய்வ…உன்னை கையை கட்டி,காலை கட்டி தூக்கிட்டுப் போறதுல எனக்கு இஷ்டம் இல்ல…”அமர்த்தலாக அவன் பேசிக் கொண்டு இருக்க செய்வது அறியாமல் திகைத்துப் போய் அமர்ந்து இருந்தாள் வானதி.


“இந்த மூர்த்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் வானதி…அப்படியே லட்டு மாதிரி உன்னை அவன் கிட்டே தூக்கி கொடுத்துட்டு அவன் முன்னாடி தோத்துப் போய் தலை குனிஞ்சு நிற்பேன்னா…நெவர்…நான் சொன்ன அந்த மூணு மாச கெடுவும் முடியற வரை எந்த கொம்பனாலும் உன்னை என்கிட்டே இருந்து காப்பாத்த முடியாது சில்லக்கா….அவன் எத்தன்னா… நான் ஜித்தன்…


அவன் எப்போ எந்த மாதிரி யோசிப்பான்னு அவனை விட எனக்கு நல்லாவே தெரியும் சில்லக்கா…இந்நேரம் நம்ம பக்கத்தில் எந்த துறைமுகமும் இல்லை அதனால சுலபமா என்னை பிடிச்சிடலாம்ன்னு நினைச்சு ரொம்ப வேகமா நம்மை தேடி வந்துக்கிட்டு இருப்பார்.உன்னோட அவர்…” என்று அவன் ஒரு வித வெறியோடு பேசிக் கொண்டே போக வானதிக்கு சுற்றுப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது.


“ஆனா அவன் இப்போ தேடி வர்றது உன்னை இல்ல…அவனோட அழிவை” வேங்கையின் சீற்றத்தோடு பேசிக் கொண்டே போனவனை இயலாமையுடன் வெறித்து பார்த்தவாறே மயங்கி சரிந்தாள் வானதி.


“மைக்கேல்…ஹெலிகாப்டர் வந்துடுச்சா”என்று கேட்டவன் அடுத்தடுத்து மளமளவென்று செய்ய வேண்டிய வேலைகளை செய்யத் தொடங்க அடுத்த சில நிமிடங்களில் வானதியும் அவனும் மட்டுமாக அந்த ஹெலிகாப்டரில் பறக்க,அவனது மற்ற ஆட்கள் கப்பலில் இருந்த பாதுகாப்பு படகுகளைப் பயன்படுத்தி வேறு திசையில் செல்லத் தொடங்கினர்.


இடம் :1


“சார்…அதோ தெரியுதே..அந்தக் கப்பல் தான் சார்…” சில மணி நேர பயணத்தில் அந்தக் கப்பலை கண்டுகொண்டான் சம்ஹார மூர்த்தி.அந்தக் கப்பல் அப்படி ஒன்றும் வெகு தொலைவில் இல்லை.ஈஸ்வரின் எண்ணம் மூர்த்தியை குழப்புவது ஒன்று மட்டுமே..அதனால் அடிக்கடி தான் போகும் கப்பல்களை மாற்றிக் கொண்டே இருந்தான்.


முன்னோக்கி செல்வதும்,பிறகு எதிரில் வந்த கப்பலுக்கு மாறி மீண்டும் கிளம்பிய இடத்திற்கு வருவதுமாக இருக்கவே தற்பொழுது அவன் சென்று கொண்டிருந்த கப்பலை வெகு சீக்கிரத்தில் அடைந்து விட்டான் சம்ஹார மூர்த்தி.


விமானத்தில் இருந்து அவனது ஆட்கள் சத்தமே இல்லாமல் குதித்து ஒவ்வொரு அறையாகத் தேடத் தொடங்கினார்கள்.அந்த எண்ணமெல்லாம் சம்ஹார மூர்த்திக்கு துளியும் இல்லை.கப்பலில் குதித்த அடுத்த நொடி “வானதி” என்று பெருங்குரலெடுத்து கத்தினான்.அவள் அங்கே இருந்தால் தானே பதில் பேசுவாள்.கடல் காற்றின் இரைச்சல் மட்டுமே அந்த கப்பலின் மேல் தளத்தை நிரப்பி இருந்தது.


மின்னலின் வேகத்தோடு போட்டி போடுவது போல…ஒவ்வொரு இடமாக தேடி சலித்தவன் கடைசியாக வானதியை அடைத்து வைத்து இருந்த இடத்தில் அவள் கடைசியாக அணிந்து இருந்த உடைகளை பார்த்ததும் ஒன்றுமே பேசத் தோன்றாமல் அவைகளையே வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்துக் கொண்டு இருந்தான்.


அந்த அறையின் கதவை யாரோ இரண்டு முறை மெலிதாக தட்டவும் கையில் பிடித்து இருந்த துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தவாறே திரும்பினான்.


அவனுக்கு எதிரில் குட்டிக் கண்களுடன் ஒரு சீனன் நின்றுக் கொண்டு இருந்தான்.


“நீங்க வந்ததும் ஈஸ்வர் சார் இதை உங்களிடம் கொடுக்க சொன்னார்” என்றான் உடைந்த ஆங்கிலத்தில்…


அவன் நீட்டிய காகிதத்தில் இருந்த ஒற்றை வரியை படித்தவனுக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு ரௌத்திரம் வந்ததோ தெரியாது.வேகமாக துப்பாக்கியை எடுத்து தலைக்கு மேலே வைத்து நிறுத்தாமல் சுடத் தொடங்கினான்.


சீனன் பயந்து போய் தரையோடு தரையாக படுத்துக் கொள்ள மேல் தளத்தில் இருந்த அந்த அறையை துப்பாக்கி குண்டுகளால் துளைத்து சல்லடையாக்கி விட்டான் சம்ஹார மூர்த்தி.


கண்கள் சிவக்க மீண்டும் அந்த பேப்பரை வாசித்துப் பார்த்தான்.


“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”


“ஈஸ்வர்….உனக்கு சாவு என் கையில தான்டா”என்று அவன் கத்த,அதே நேரம் கப்பலில் ஏதோ வெடி சத்தம் கேட்ட அந்த நொடியே, பயங்கர வேகத்துடன் கப்பல் ஆடத் தொடங்கியது.


அந்த சீனன் அந்த நேரத்தில் வேகமாக எழுந்து ஓடத் தொடங்க,அவனை அசட்டை செய்து விட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.


அவன் இருந்த கப்பல் முக்கால்வாசி முழுகி விட்டது.கப்பலின் மேல் தளத்தில் உள்ள பொருட்களின் பாரம் தாங்காமல் கப்பல் ஆங்காங்கே உடைந்ததின் சத்தத்தைத் தான் அவன் சற்று முன் கேட்டது.அவனை இறக்கி விட வந்த விமானமும் துப்பாக்கி குண்டு துளைத்தால்,அது செயல் இழக்கும் அபாயம் இருந்ததால் அவர்களை இறக்கி விட்டதும் அவர்களை விட்டுத் தள்ளி சென்று விட தன்னை சுற்றி சூழ்ந்து கொள்ளத் தொடங்கிய கடல் நீரை பார்த்துக் கொண்டு இருந்தவனின் மனதில் கலவரம் மூண்டது.


இடம் :2


அந்தக் கப்பலில் அரங்கேறிய அத்தனை நிகழ்வுகளையும் தன்னுடைய மொபைலின் மூலம் பார்த்த ஈஸ்வரின் முகத்தில் வெற்றிக்களிப்பு வந்தது.


சம்ஹார மூர்த்தி அவனது ஆட்களை துறைமுகத்தில் நிறுத்தி வைத்து இருக்க,ஈஸ்வரோ அவனது ஹெலிகாப்டரை நேராக ஏர்போட்டிற்கு செலுத்தினான்.


அங்கே ஏற்கனவே செய்து வைத்திருந்த ஏற்பாட்டின் படி ஒரு தனி விமானத்தின் மூலம் வானதியும்,ஈஸ்வரும் ஒன்றாக தங்களது பயணத்தை தொடங்கினார்கள்.


அவளை சீட்டில் படுக்க வைத்த வாக்கில் அவளுக்கு சீட் பெல்ட்டை அணிவித்தவன் அவள் முகத்தை மறைத்து இருந்த முடிக்கற்றையை அவள் மேல் விரல் கூட படாத வண்ணம் ஒதுக்கி விட்டு அவள் முகத்தையே தீர்க்கமாக பார்த்தான்.


“நீ கண் முழிக்கும் போது, நாம இரண்டு பேரும் ஒரு புது உலகத்தில் இருப்போம் சில்லக்கா” என்றவன் அவளுக்கு அருகில் இருந்த மற்றொரு சேரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்தான்.


தீ தீண்டும்.

Post a Comment

புதியது பழையவை