Theendatha Thee Neeye Tamil Novels 17

 

அத்தியாயம் 17
“எனக்கு வேண்டியது நீ தான் வானதி.நீ என்னோட இருக்கணும்”என்று பிசிறில்லாத குரலில் கூறியவனை வெறித்துப் பார்த்தாள் வானதி.


“நீ…நீ என்னை காதலிக்கிறியா?”அதிர்ச்சியுடன் கேட்டாள் வானதி


“கருமம்…அதெல்லாம் எதுக்கு…போயும் போயும் அடுத்த வேளை சோத்துக்கே வழி இல்லாதவளையா நான் காதலிப்பேன்”


‘அவர் காதலிச்சாரே…என்னை… எனக்காகவே’


“அவன் ஒரு முட்டாள் மடையன்…அவனைப் போலவே நானும் இருக்க முடியுமா”என்று அவள் மனதை படித்தவன் போல அசட்டையாக அவன் பேச , வானதியின் குழப்பம் மேலும் அதிகரித்தது.


“அப்புறம் ஏன்?”


“ஹ…என்னை கேள்வி கேட்கும் நிலையில் நீ இல்லை வானதி…நான் சொன்னா நீ கேட்டு தான் ஆகணும்…”


“நான் மறுத்தா?”


“விளைவுகளை எதிர்கொள்ளவும் நீ தயாரா இருக்கணும்”


“பயமுறுத்திப் பார்க்கறீங்களா?”


“உண்மையை சொல்றேன்”


“உங்க முடிவுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்…”


“இதனால ஆபத்து அவனுக்குத் தான் வரும்.அதை மறந்துடாதே”


“அவரை காப்பாத்துறதுக்காக நான் இப்படி ஒரு காரியம் செஞ்சது தெரிஞ்சா அவர் அதை நிச்சயம் ஏத்துக்க மாட்டார்…”


“அடேங்கப்பா! ரொம்ப தெளிவா இருக்க போலவே…”


“ஆமா..காதல் கொடுத்த தெளிவு..அவரைப் பத்தி நல்லா தெரிஞ்சதால வந்த தெளிவு…எப்படியும் அவர் வந்து என்னைக் காப்பாத்திடுவார்”


“அப்படியா…வாழ்த்துக்கள்”என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னவன் மௌத் ஆர்கானை எடுத்து வாசித்தபடியே அங்கிருந்த மோடாவில் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டான்.அவனுடைய அமைதி அவளது ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.


“இப்படி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்க வேண்டியவளை கடத்திக்கிட்டு வந்து உன்னோட அசிங்கமான ஆசைக்கு இணங்க சொல்றியே… உனக்கு வெட்கமா இல்லை”


அவளது கோபம் கொப்பளிக்கும் கேள்விக்கு அவனது தலை முடி கூட அசையவில்லை.அமர்ந்து இருந்த அதே நிலையில் இருந்தவன் அவள் பேசுவதை பேசி முடிக்கட்டும் என்று எண்ணியவனாக மீண்டும் வாசிக்கத் தொடங்கினான்.


“நீ எல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் தானா? இப்படி எல்லாம் ஒரு பெண்ணை கடத்திட்டு வந்து என்னோட கற்புக்கு விலை வைக்கறியே?” என்று அவள் ஆத்திரமாக பேசவும் வாசிப்பை நிறுத்தி விட்டு எழுந்து அவள் அருகில் வந்தான் ஈஸ்வர்.


“ஓ…நான் சொன்னதை இப்படி புரிஞ்சுக்கிட்டு தான் இவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருந்தியா சில்லக்கா?” என்றான் புரியாத பார்வையுடன்…


“நீ என்ன லட்சணத்தில் சொன்னன்னு எனக்கு நல்லா புரியுது”வார்த்தைகளை கடித்து துப்பினாள் வானதி.


“இல்லை..உனக்கு புரியலை…நான் உன்னை என்னோட இருக்கணும்ன்னு சொன்னேன். அதாவது என்னோட தங்கி இருக்க சொன்னேன்.அவ்வளவு தான்…அதற்கு மேல் உனக்கு பக்கத்தில் வர எனக்கு ஒண்ணும் உன் மேல ஆசை கிடையாது”


‘என்ன சொல்றான் இவன்’ என்று அவள் குழப்பத்துடன் பார்க்கையிலேயே தொடர்ந்து பேசினான் ஈஸ்வர்.


“எனக்குத் தேவை கொஞ்ச நாளைக்கு நீ என்னோட இருக்கணும். அதாவது என் கூடவே சந்தோசமா இருக்கணும்…அவ்வளவு தான்.மற்றபடி என்னுடைய விரல் நுனி கூட உன் மேல படாது.”


“இது என்ன பைத்தியக்காரத்தனம்? இந்த மாதிரி எல்லாம் ஏன் நடந்துக்கிற?இதனால உனக்கு என்ன லாபம்?”


“அது உனக்கு தேவை இல்லாதது…எனக்கு என்ன வேணும்னு கேட்டியே…நான் சொல்லிட்டேன்.உன்னால் கொடுக்க முடியுமா முடியாதா?”


“முடியாது.எனக்கு ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைச்சா கூட உன்னிடம் இருந்து தப்பிச்சு போகத் தான் பார்ப்பேன்.அப்படி இருக்கும் பொழுது இந்த மாதிரியான ஒரு செயலுக்கு எப்படி ஒத்துப்பேன்னு நினைக்கிற..செத்தாலும் ஒத்துக்க மாட்டேன்”


“சரி உன் இஷ்டம்”என்று அசட்டையாக சொன்னவன் அதற்கு மேலும் அங்கே நிற்காமல் மீண்டும் மோடாவில் சென்று அமர்ந்து விட அவளுக்கோ ஆத்திரம் பெருகியது.


‘என்ன நடந்தாலும் சரி…இங்கேயே சோறு தண்ணி இல்லாம செத்தாலும் சரி இவனோட திட்டத்துக்கு மட்டும் ஒத்துக் கொள்ளவே கூடாது’என்று வீம்புடன் கட்டிலில் படுத்து இறுக கண்களை மூடிக் கொண்டாள்.


சில மணி நேரங்கள் கடந்து இருக்கும்.அவனாகவே அவளைத் தேடி மீண்டும் வந்தான்.தன்னுடைய மொபைலை அன்று போலவே ப்ரோஜெக்டரோடு இணைத்தான்.


‘அய்யய்யோ… அன்னைக்கு மாதிரியே எதுவும் செய்யப் போகிறானோ…நான் சம்மதம் சொல்லாததால் என் கண்ணு முன்னாடியே அவரை எதுவும் செய்வானோ’ என்றெல்லாம் எண்ணியவளின் முகம் பயத்தில் வெளிறிப் போய் இருந்தது.


திரையில் சம்ஹார மூர்த்தி தெரிந்தான்.அன்றைய நாளை விட அதிக வேகத்துடன் வானதியை தேடும் வேலையை செய்து கொண்டு இருந்தான்.போலீஸ் துறையில் இருந்த உயர் அதிகாரிகளிடம் போனிலேயே விசாரித்துக் கொண்டு இருந்தான்.


அவனது தவிப்பை பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் அவளையும் அறியாமல் வழிந்தது.


“செம செண்டிமெண்ட் சீன் இல்ல”என்று நக்கலாக கேட்டு அவளது ஆத்திரத்தை அதிகரித்தவன் தொடர்ந்து பேசினான்.


“இது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எடுத்த வீடியோ…அன்னைக்கு மாதிரி லைவ் (Live) இல்ல”என்றவன் அதை தொடர்ந்து ஓட விட்டான்.


அவனது ஆள் ஒருவன் எல்லாரையும் முந்திக் கொண்டு சம்ஹார மூர்த்தியின் முன்னே வந்து நின்றான்.


“என்ன சுரேஷ்? ஏதாவது தகவலா?”என்று கேட்டவனின் உடல் பரபரப்பாக இருந்ததை அவளால் உணர முடிந்தது.


“ஆமா சார்…”


“சொல்லு..என்ன யோசிக்கிற…வானதி எந்த கப்பலில் இருக்கிறான்னு தெரிஞ்சு போச்சா?”


“அவங்க எந்த கப்பலில் இருந்தாங்கன்னு தெரிஞ்சு போச்சு சார்”தயங்கி தயங்கி அவன் பேச,


“என்னடா உளர்ற…தெளிவா சொல்”என்று அதட்டினான் சம்ஹார மூர்த்தி.


“சார்..நேத்து வரை வானதியும் அந்த ஈஸ்வரும் அவனோட சரக்குக் கப்பலில் தான் இருந்து இருக்காங்க சார்…ஆனா…”


“ஆனா?”மூர்த்தியின் பார்வை கூர்மையானது.


“இன்னைக்கு அந்தக் கப்பலில் அவங்க இல்லை சார்”


“என்னடா சொல்ற முட்டாள்”


“ஆமா சார்…நேத்து சாயந்திரம் மேடமும் அவனும் மட்டுமா அந்த கப்பலை விட்டு வெளியே போய் இருக்காங்க…அப்புறம்…”


“முழுசா…சொல்லுடா…”


“அப்படி கிளம்பிப் போகும் பொழுது மேடம் சுயநினைவில் இல்லைன்னு தான் எனக்கு தகவல் வந்தது”


“வானதியை மயக்கத்திலேயே வச்சு இருக்கானா அந்த ராஸ்கல்…அவன் மட்டும் கையில் சிக்கட்டும்.அவன் குடலை உருவிடுவேன்.அவள் உடம்பில் காயம் எதுவும் இல்லையே…அது சரி…உனக்கு இந்த தகவலை கொடுத்தது யார்?”


“மேடம் உடம்பில் சின்ன கீறல் கூட இல்லை சார். அந்தக் கப்பலில் வேலைப் பார்க்கும் சீனாக்காரன் ஒருத்தனுக்கு பணம் கொடுத்து தெரிஞ்சுகிட்டேன்.”


“அந்தக் கப்பலை விட்டு கிளம்பி எங்கே போனாங்க?”


“அது தெரியலை சார்…துறைமுகம் பக்கத்தில் இருக்கும் பொழுது அங்கிருந்து வேற ஒரு போட்டில் போய்ட்டாங்ளாம்.அவங்களை இறக்கி விட்டுட்டு அந்தக் கப்பல் போயிடுச்சாம்.வேற தகவல் எதுவும் அவனுக்குத் தெரியலை” என்று அவர்கள் பேசிக் கொண்டு இருக்க இங்கே வானதிக்கு ஒன்றுமே புரியவில்லை.குழப்பத்துடன் எதிரில் நின்றவனைப் பார்த்தாள்.


“நேத்து நீ மயங்கினியே…அப்போவே உனக்கு மயக்க ஊசி போட்டு உன்னை அந்தக் கப்பலில் இருந்து இந்தக் கப்பலுக்கு கொண்டு வந்துட்டேன்…உன்னோட ஹீரோ இந்நேரம் எனக்கு சொந்தமான கப்பலில் மட்டும் தான் உன்னையும்,என்னையும் தேடிக்கிட்டு இருப்பான்.இப்போ அவன் கைகளுக்கு நாம சிக்க மாட்டோம்”என்று உணர்ச்சியே இல்லாமல் கல் போல கூறியவனை வெறித்துப் பார்த்தாள்.


“என்னோட எட்டு கப்பலும் எந்த திசையில் போகுதுன்னு மூர்த்திக்கு தெரியும்.அவனோட பார்வை முழுக்க அந்த திசையில் மட்டும் தான் இருக்கும்.ஆனா நான் அவனை ஏமாத்திட்டு ஒன்பதாவதா ஒரு திசையில் போய்க்கிட்டு இருப்பேன் அப்படிங்கிற விஷயத்தை யார் அவனுக்கு சொல்லுவாங்க?ம்ச்..”என்று ஒன்றுமறியாதவன் போல உச் கொட்ட அவளுக்கு உள்ளுக்குள் கோபம் கனன்றது.


“ஏன் இப்போ அவருக்கு எப்படி தகவல் தெரிஞ்சது? உன்னோட ஆளையே விலைக்கு வாங்கி,அவன் மூலமா நான் அந்தக் கப்பலில் இல்லை அப்படிங்கிறதை அவர் தெரிஞ்சுகிட்டாரே…அதே மாதிரி இதையும் தெரிஞ்சுப்பார்”


“ஹா ஹா…முட்டாள்…என்னைப் பத்தின விஷயம் எனக்குத் தெரியாம வெளியே போய்டுமா என்ன? அந்த தகவலை அவன் கிட்டே சொல்ல சொன்னதே நான் தான்”என்றவனின் கூற்றில் அதிர்ந்து போய் நின்றாள் அவள்.


“அவனுக்கு உன்னைப் பத்தின எல்லா தகவலும் போய் சேரும்.ஆனாலும் உன்னை காப்பாத்த முடியாம அவன் துடிக்கணும். அது தான் எனக்கு வேணும்”அவன் கண்களில் பளபளப்பில் அவளுக்கு உடல் வெலவெலத்துப் போனது.


“ஏன் இப்படி எல்லாம் அநியாயம் செய்ற?”


“அநியாயம்? யாரு நானா? சரி தான்…சொல்லிட்டுப் போ..அதைப் பத்தி எனக்கென்ன? எனக்கு நான் நினைச்சது நடக்கணும். அது மட்டும் தான் முக்கியம்”


“பட்டினி கிடந்து செத்தாலும் சாவேனே தவிர, உன் விருப்பப்படி மட்டும் நடக்கவே மாட்டேன்”


“அப்படியா சொல்ற” என்றவன் தாடையை தடவியபடி அவளுடைய கட்டிலுக்கு அருகில் மொடோவை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டான்.


“வீடியோ பாதியிலேயே நிற்குது..அதை பார்ப்போமா?”என்ற அவனின் குரலை விட அவனது புன்னகை நிறைந்த முகமே அவளுக்கு அதிக திகிலைக் கொடுத்தது.


‘என்ன செய்யப் போறானோ தெரியலையே…ஆண்டவா இந்த பாவியிடம் இருந்து அவரை காப்பாற்று’ என்று மனதுக்குள் கடவுளிடம் வேண்டிக்கொண்டவள் பயத்துடன் திரையை உற்று நோக்கினாள்.


சம்ஹார மூர்த்தி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவனது ஆட்களுக்கு விளக்கிக் கொண்டு இருந்தான்.அவனது போன் ஒலிக்க எடுத்து பேசியவனின் முகத்தில் பதட்ட ரேகைகள்.ஒன்றுமே பேசாமல் போனை வைத்து விட்டான்.


அடுத்த சில நொடிகளில் அந்த இடமே அதகளமானது போலீசின் வருகையால்.


“சார் உங்க இடத்தை சோதனை பண்ண சர்ச் வாரன்ட் கொண்டு வந்து இருக்கோம்.கொஞ்சம் கோ ஆபரேட் செய்ங்க” என்று பெயருக்கு அவனிடம் அனுமதி கேட்டவர்கள் அந்த இடத்தையே தலை கீழாக அலசத் தொடங்கினார்கள்.


“நான் என்னோட லாயருக்கு போன் பண்ணிக்கறேன்”


“மன்னிக்கணும் சார்.இந்த பில்டிங் உள்ளே வரும் பொழுதே சிக்னல் ஜாமரை வச்சுட்டு தான் உள்ளே வந்தோம்.லேண்ட் லைனையும் கட் பண்ணியாச்சு”என்று சொன்னவர்கள் தங்கள் வேலையில் மும்மரமாக சம்ஹார மூர்த்தியோ முகத்தில் துளி கூட டென்ஷன் இல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான்.


‘மடியிலே கனம் இருந்தால் தானே வழியிலே பயம் வரும்’ என்று எண்ணியபடியே வானதியும் பதட்டமின்றி அமர்ந்து இருந்தாள்.
எதேச்சையாக திரும்பி அருகில் இருப்பவனைப் பார்த்தவளின் உள்ளத்தில் கிலி எடுத்தது.அவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.ஈஸ்வர் அவளை மிரட்டி இருந்தால் கூட அவளுக்கு இந்த அளவுக்கு பயம் இருந்து இருக்காது..ஆனால் அவனின் அந்த சிரிப்பு…அவள் மனதில் எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கியது.


‘இவன் தான் என்னவோ செஞ்சு வச்சு இருக்கான்…படுபாவி என்னத்த செஞ்சு வச்சானோ தெரியலையே…என்னவோ நடக்கப் போகுது’ என்று அவள் பயந்ததைப் போலவே அடுத்து வந்த சம்பவங்கள் அரங்கேறின.


உள்ளே ஒரு அறையில் இருந்து மரத்தால் ஆன பெரிய பெட்டியை போலீஸ்காரர்கள் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தனர்.அதன் உள்ளே திறந்து பார்த்தால், யானைத் தந்தங்களும்,கோவில் சிலைகளும் பத்திரமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.


மின்னல் தாக்கியது போல அதிர்ந்தாள் வானதி.ஆனால் சம்பந்தப்பட்ட மூர்த்தியோ எந்தவிதமான ஒரு பாவனையையும் வெளியிடாமல் அமைதியான முகத்துடன் இருந்தான்.


“மிஸ்டர் மூர்த்தி…இந்த பொருள் எல்லாம் எப்படி இங்கே வந்தது?”


“எனக்குத் தெரியாது”


“உங்க இடத்தில் தானே இருக்கு…உங்களுக்குத் தெரியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்?”


“இது என்னோட இடம் தான்..அதுக்காக இங்கே இருக்கிற எல்லாப் பொருளும் எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்ன்னு என்ன அவசியம்?”


“ரொம்ப சாமர்த்தியமா பேசுறதா நினைப்பா உங்களுக்கு?”


“பொய் கேஸ் போட்டு என்னை உள்ளே தள்ளணும்ன்னு நினைக்கிறவங்களை விட எனக்கு சாமர்த்தியம் கம்மி தான்”


“சும்மா வளவளன்னு பேசாம கிளம்புங்க..உங்களை நாங்க கைது செய்றோம்”


“அப்படி எல்லாம் நீங்க நினைச்சதும் என்னை கைது செய்ய முடியாது சார்…ஒருவேளை நீங்க என் மேலே வீணான குற்றசாட்டு வைக்கறீங்கன்னு கோர்ட்டில் நான் ப்ரூப் பண்ணிட்டா அதோட பலனை நீங்க அனுபவிக்கணும்.தயாரா?”


“எங்க கடமையை நாங்க செய்றோம்…உங்க மேல குற்றம் இல்லைன்னா அதை நீங்க சட்டப்படி நிரூபிங்க”


“இந்த கேஸை உடைச்சுட்டு ஒரே நாளில் என்னால வெளியே வர முடியாதுன்னு நினைக்கறீங்களா?கண் அசைக்கிற நேரத்தில் என்னால வெளியே வர முடியும்…அது உங்களுக்கும் தெரியும்..இப்போ என்னை கைது செய்றதோட விளைவுகள் என்னன்னு தெரிஞ்சும் ஏன் இதை செய்றீங்க?”


“மன்னிக்கணும் சார்…எங்க வேலையை நாங்க செய்றோம்.கொஞ்சம் கோ ஆபரேட் செய்ங்க”என்றபடியே சம்ஹார மூர்த்தியின் கைகளில் விலங்கிட நெருங்கியவர்கள் அவன் பார்த்த உக்கிரம் நிறைந்த பார்வையில் நடுங்கிப் போனார்கள்.


“இப்போ நான் உங்க கூட வர்றதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான்.என்னோட வானதி…அவளுக்காக மட்டும் தான் இப்போ நான் உங்களோட வர்றேன்.ஆனா என்னை உங்களால ரொம்ப நேரம் பிடிச்சு வைக்க முடியாது.நான் காற்று மாதிரி”என்றவன் அதற்கு பிறகு எதுவுமே பேசாமல் மௌனமாக போலீஸ் ஜீப்பில் சென்று அமர்ந்து கொண்டான்.


கண்ணால் கண்ட காட்சிகளை நம்ப முடியாமல் பிரமை பிடித்தவள் போல அமர்ந்து இருந்தாள் வானதி.


“இப்ப என்ன சொல்ற? என்னோட கண்டிஷனை ஒத்துக்கிறியா?”


“அந்த..போன் கால்..அதை யார் பேசினது? நீ தான் அவரை மிரட்டினியா?”அவளின் கேள்விக்கு அசட்டையாக தோள்களை குலுக்கினான் அவன்.


“இவ்வளவு பெரிய பாவியா நீ? உன் இஷ்டத்துக்கு நடக்கணும்னா எந்த அளவுக்கும் போவியா நீ?சே! நீ எல்லாம் மனுஷன் தானா?”


“இன்னும் உண்மை நிலவரம் உனக்கு தெரியலையே சில்லக்கா…எனக்குத் தெரியும்.சம்ஹார மூர்த்தியை ரொம்ப நாள் ஜெயிலில் அடைச்சு வைக்க முடியாதுன்னு.ஆனா…ஜெயிலில் வச்சே அவன் கதையை முடிக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகிடும்னு நினைக்கிற”
அவனது கூற்றில் பயப்பந்து தோன்றினாலும் அதை மறைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.


“அப்படி எல்லாம் யாரும் அவரை எதுவும் செய்ய முடியாது…அவரை காப்பாத்திக்க அவருக்கு தெரியும்?”


“அவர்…ம்ம்ம்..சரி தான்..ஒருத்தன் வந்தா ஓகே…அவனைக் கொல்ல அஞ்சு பேர் வந்தா…பத்து பேர் வந்தா…இருபது பேர் வந்தா…நூறு பேர் வந்தா…அப்பவும் ‘அவர்’ தப்பிச்சுடுவாரா” என்று அவன் புன்னகையுடன் கேட்ட விதத்தில் அவளது தைரியம் சுத்தமாக வடிந்து போனது.


“நீ… என்ன சொல்ற?”


“அவனை கொல்லுறதுக்கு ஆட்களை அனுப்பிட்டேன்…அவன் உயிரோட இருக்கணும்னா நீ என்னோட பேச்சை கேட்டுத் தான் ஆகணும்”


“என்னைக் கொன்னுடுவேன்னு அவரை மிரட்டி,அவரை கொன்னுடுவேன்னு என்னை மிரட்டி…இப்படி எல்லாம் செஞ்சு நீ எதை சாதிக்கப் போற….”


“எனக்கு வேண்டியதை சாதிச்சுப்பேன்…எப்பவுமே ஜெயிக்கணும்ன்னு ஆசைப்படறவன் அதைப் பத்தி மட்டும் தான் யோசிப்பான்.போற பாதையைப் பத்தி இல்லை…”


“நீ எல்லாம்…”


“நீ நினைக்கிற மாதிரி நான் ராட்சசனும் இல்லை.அதுக்கும் மேல…என்னை யாரோடவும் கம்பேர் செய்யாதே…எனக்கு இணையா இதுவரை இந்த பூமியில் யாருமே இல்லை.”என்று இறுமாப்புடன் கூறியவனை கொன்று போட்டு விடும் அளவிற்கு அவளது ஆத்திரம் பெருகியது.


“ஏன் இல்லை..அவர் இருக்கார்..கண்டிப்பா ஒருநாள் உன்னை கொல்லாம விட மாட்டார்”


“அதுக்கு அவன் உயிரோட இருக்கணுமே…நீ அவன் மேல இவ்வளவு நம்பிக்கையோட பேசும் பொழுது எனக்கு ஆசையா இருக்கு.உனக்கு சின்னதா ஒரு டெமோ காட்டணும்னு…என்ன சில்லக்கா ரெடியா”என்று அவன் புன்னகை மாறாமல் கேட்ட விதத்தில் அவளுக்கு குளிர் ஜுரமே வந்து விடும் போல இருந்தது.


தீ தீண்டும்…

Post a Comment

புதியது பழையவை