Theendatha Thee Neeye Tamil Novels 16

 

அத்தியாயம் 16


தனி விமானம் மூலம் கிளம்பிப் போன சம்ஹார மூர்த்தியின் ஆட்களிடம் இருந்து எந்த விதமான சாதகமான பதிலும் அவனுக்கு வந்து சேரவில்லை.வானதியை தேடி செல்வதற்கு அவனுக்கு முன்னால் இருந்த எல்லா வழிகளும் அடைப்பட்டுப் போனதைப் போல இருந்தது அவனுக்கு.


‘எங்கே இருக்கிற வானதி…கல்யாணம் நடக்கப் போகிறதே என்று நான் உன் விஷயத்தில் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டேனோ…இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காதோ’என்று காலம் கடந்து வருந்தினான் சம்ஹார மூர்த்தி.


‘எந்த இடத்தில் நான் தப்பு பண்ணினேன்…வந்து விடு வானதி..உன்னை எப்படியும் கண்டிப்பாக மீட்டு விடுவேன்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனின் எதிரில் கவலை தோய்ந்த முகத்துடன் சுந்தரேசன் அய்யா வந்து நின்றார்.


“தம்பி…வானதியைப் பத்தி எதுவும் தகவல் கிடைச்சுதா?”அவரின் வயதுக்கு மீறிய தளர்ச்சி அவர் குரலில் தெரிந்தது.


“இ..இல்லை அய்யா…ஆனா நீங்க கவலைப் படாதீங்க..கண்டிப்பா கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவேன்”என்று அவரைத் தேற்ற முயன்றான் சம்ஹார மூர்த்தி.


“கல்யாணம் ஆகி உங்க கூட சந்தோசமா இருப்பான்னு நினைச்சேன்…ஆனா இப்படி ஆகிடுச்சே தம்பி”என்று அவர் துண்டில் வாய் பொத்தி அழ சம்ஹார மூர்த்தி தன்னுடைய கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு அவரை தேற்ற முயன்றான்.


“அய்யா … நீங்க பெரியவங்க..உங்களுக்கு நான் சொல்லித் தான் தெரியணும்னு இல்லை…இந்த மாதிரி சமயத்தில் நீங்களே சோர்ந்து போனா எப்படி? அவளுக்கு ஒண்ணும் ஆகாது…ஆகவும் விட மாட்டேன்.பத்திரமா அவளை மீட்டுக் கொண்டு வந்து உங்க கண்ணு முன்னாடி நிப்பாட்டுறேனா இல்லையானு மட்டும் பாருங்க…”என்று ஆறுதல் வார்த்தைகள் கூற முனைந்தான்.


“தம்பி உங்க கிட்டே ஒரு விஷயம் கேட்கணும்…நீங்க தப்பா எடுத்துக்கலைனா கேட்கலாமா”என்று வெகுவாக தயங்கி தயங்கி கேட்டார்.


“கேளுங்க அய்யா…”


“வந்து…தப்பா எடுத்துக்காதீங்க…வானதி காணாமல் போய் இரண்டு நாள் ஆச்சு…இந்த இரண்டு நாளில் அ…அவளுக்கு என்ன அசம்பாவிதம் வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம்.இதனால நீங்க அவளை கல்யாணம் செஞ்சுக்கிறதா எடுத்த முடிவில் எந்த மாற்றமும் வந்துடாதே…


ஏன்னா…அவ நம்மகிட்டே திரும்பி வரும் பொழுது எப்படி எந்த நிலைமையில் வருவாளோன்னு எனக்கு பயமா இருக்கு.அவளை ஒரு நாள் கூட நான் பிரிஞ்சு இருந்தது கிடையாது.


பெத்த பொண்ணு மாதிரி அவளை வளர்த்துட்டேன்.ஒரு அப்பனுக்கு பொண்ணு காணாம போனா என்ன விதமான பயம், கவலை எல்லாம் வருமோ அத்தனையும் எனக்கு வருது. ஒருவேளை அவ திரும்பி வந்ததும் நீங்களும் அவளை ஒதுக்கிட்டா அவ உடைஞ்சு போய்டுவா….பூஞ்சை மனசுக்காரி தம்பி அவ”என்று அவர் சொல்லி முடித்ததும் கண்களை ஒரு நிமிடம் இறுக மூடி தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டான் சம்ஹார மூர்த்தி.


அவருக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாதா என்ன…இருப்பினும் இந்த நேரத்தில் அவருக்கு ஆறுதல் கூற வேண்டியது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்தவன் அவருக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசத் தொடங்கினான்.


“அய்யா…நீங்க தேவை இல்லாம வருத்தப் படறீங்க…அவளை கடத்திட்டு போனவன் பணத்துக்காக செஞ்சு இருந்தா..இந்நேரம் நமக்கு தெரியப்படுத்தி இருப்பான். இந்த நிமிஷம் வரை அந்த மாதிரி எந்த தகவலும் நமக்கு வரலை.

இவன் ஏதோ முன்பகையை மனசில வச்சுக்கிட்டு தான் இந்த மாதிரி செஞ்சு இருக்கான்.அவனோட நோக்கம் என்னை அசிங்கப் படுத்துறதுதான்.மத்தபடி வானதிக்கு அவனால எந்த ஆபத்தும் வராது…நீங்க பயப்படாதீங்க…நானும் என்னால முடிஞ்ச வரை அவளை தேடிக்கிட்டு தான் இருக்கேன்.ஆனா அவன் ரொம்ப திட்டம் போட்டு என்னை குழப்புற மாதிரி எல்லா காரியத்தையும் செஞ்சு இருக்கான்.


சீக்கிரமே வானதியை மீட்டு நான் கொண்டு வருவேன்.எங்க கல்யாணமும் கண்டிப்பா நடக்கும்.நீங்க அமைதியா இருங்க…உங்களை நம்பி ஆசிரமத்தில் பல ஜீவன் இருக்காங்க.அவங்களை நினைச்சு பாருங்க” என்று அவரை தேற்றி அனுப்பியவன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

 

கண் விழித்த வானதிக்கு ரொம்பவும் அசதியாக இருப்பது போல தோன்றியது. மெல்ல சோம்பலுடன் கண்களைப் பிரித்துப் பார்த்தாள்.தலை பாரமாக இருப்பது போல தோன்றியது.கைகளால் தலையை தாங்கியபடி மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள்.அவள் கண் விழிப்பதற்காகவே காத்திருந்ததைப் போல அடுத்த நொடி அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஈஸ்வர்.


“ஹே…சில்லக்கா கண்ணு முழிச்சுட்டியா?”என்று கேட்டபடியே கையில் இருந்த கோப்பையை அவள் புறம் நீட்டினான்.


“இந்தா..இதை கொஞ்சம் குடிச்சுப் பாரு…”என்று நீட்ட அவனையும்,அவன் நீட்டிய கோப்பையையும் வெறுப்போடு பார்த்தாள் வானதி.அதை தட்டி விடுவதற்காக அவள் கை நீட்டிய நொடியில் தான் அவள் உடலில் ஏதோ வித்தியாசத்தை அவள் உணர்ந்தாள்.


சந்தேகப்பட்டு இரண்டு கைகளையும் நன்கு தடவி ஆராய்ந்தாள்.வலது கையில் தோள் பட்டையிலும்,இடது கையில் மணிக்கட்டிலும் லேசான எறும்பு கடித்ததைப் போல ஒரு வலி இருந்தது அவளை குழப்பியது.சட்டென்று ஆத்திரத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


“எதுக்கு எனக்கு ஊசி போட்ட? என்ன ஊசி அது?”


“பரவாயில்லையே… உனக்கு கொஞ்சம் புத்தியும் இருக்கு போலவே” என்று கிண்டலாக பேசியபடி மறைமுகமாக அவன் செய்ததை ஒத்துக்கொள்ள அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.


“என்ன ஊசி அது? விஷ ஊசியா? இல்ல போதை ஊசி மாதிரி எதுவுமா?” அவள் பேசி முடிக்கும் முன், அவள் முன்னே ஆங்காரத்துடன் எழுந்து நின்றான் ஈஸ்வர்.


“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?”


“இரக்கமே இல்லாத ராட்சசன் மாதிரி தெரியுது…கோழை மாதிரி ஒரு பெண்ணை கடத்திட்டு வந்து இப்படி அடைச்சு வச்சு இருக்கியே…நீ எல்லாம் மனுசனே கிடையாது” தன்னுடைய கல்யாணம் நின்று போனதற்கும், இப்பொழுது தான் அனுபவித்துக் கொண்டு இருக்கும் அத்தனை துன்பங்களுக்கும் அவன் தானே காரணம் என்ற ஆத்திரம் மிக அவனை தாக்கிப் பேசத் தொடங்கினாள் வானதி.


“சந்தோசம்..அப்படியே நினைச்சுக்க..அதுதான் உண்மையும் கூட…” என்று அவன் அலட்டல் இல்லாமல் கூற அவளுக்கோ வெறுத்துப் போனது.


“இதை பெருமையா வேற நினைக்கறியா நீ… இப்போ செய்ற எல்லா வேலைக்கும் அவர் வந்ததும் இருக்கு…அவர் கையால தான் நீ அழியப் போற…”


“அப்படியா சொல்ற?…அவனால எனக்கு அழிவா? இல்லை என்னால அவனுக்கு அழிவு வருதான்னு பார்த்துடுவோமா” என்றவன் இண்டர்காமை எடுத்து பேச, வெளியே இருந்து ஒரு கருப்பன் வந்தான்.


“மைக்கேல் …உனக்கு இவன் போட்டோவை வாட்ஸ் ஆப்பில் (Whatsapp) அனுப்பி வைக்கிறேன்.இவனை சுத்தி நம்ம ஆட்களை எப்பவும் இருக்க சொல்லு…நான் எப்போ சொல்லுறேனோ அப்போ அவனைக் கொன்னுடு”


“நீ… நீ சும்மா என்னை பயமுறுத்தப் பார்க்கிற…அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது.அவர் ஒண்ணும் சாதாரணமானவர் இல்லை..சம்ஹார மூர்த்தி”


“அப்படியா? அதையும் பார்த்துடலாமே… மைக்கேல் நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்.யூ கேன் கோ ( You can go)…”


“அவரை சாய்க்க யாராலும் முடியாது. எத்தனை பேர் வந்தாலும் அவர் பந்தாடி விடுவார் தெரியுமா?” உள்ளுக்குள்ளே பயம் இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு வெளியே தைரியமாக பேச முயன்றாள் வானதி.


“ஏன்..அவன் புட் பால் டீமில் இருந்தானா?” என்று அவன் நக்கலாக கேட்க வானதிக்கு ஆத்திரம் பெருகியது.


“இதோ பார்..ஏற்கனவே நீ செஞ்சு வச்சு இருக்கும் காரியத்திற்கே அவர் நினைச்சார்ன்னு வை உன்னை என்ன வேணா செய்வார்…அவரை நெருங்க நினைச்சா அப்புறமா அதுவே உன்னோட அழிவுக்கு காரணமாகிடும் சொல்லிட்டேன்” அவனை மிரட்டினால் பயந்து தன்னை விட்டு விடுவானோ என்ற நப்பாசையில் பேசத் தொடங்கினாள் வானதி.


“அவனை கொல்ல அவனை நெருங்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லையே… நான் நினைச்சா அவன் காரில் பாம் வச்சு அவன் கதையை முடிப்பேன், அதுவும் இல்லைன்னா ஆயிரம் அடி தூரத்தில் தள்ளி இருந்து அவனை குறி பார்த்து சுட முடியும்.அதுவும் இல்லைன்னா அவன் சாப்பிடுற சாப்பாட்டில் கொஞ்சமே கொஞ்சம் விஷம் கலந்தா போதும்… சம்ஹார மூர்த்தி சத்தமே இல்லாம சமாதி ஆகிடுவான்” என்று அவனது திட்டங்கள் ஒவ்வொன்றாக அவன் விவரிக்க அவளது உள்ளம் அதிர்ந்து போனது. இருந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.


“நீ பொய் சொல்ற…அப்படி எல்லாம் அவரை சுலபமா யாராலும் நெருங்கி விட முடியாது…”


“அப்படியா சொல்ற…” என்றவன் தன்னுடைய மொபைலை எடுத்து ஏதோ பட்டனை அழுத்த ஒரு வீடியோ ஓட ஆரம்பித்தது.


திரையில் சம்ஹார மூர்த்தி தெரிந்தான். வானதியை கண்டுபிடிக்க சொல்லி எல்லாரையும் திட்டிக் கொண்டு இருந்தான். ரொம்பவும் களைத்துப் போய் கண்கள் ஒளி இழந்து மழிக்கப்படாத தாடியுடன் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தான் அவன்.


இத்தனை நாட்கள் கழித்து அவனைப் பார்ப்பதால் இமைக்கக் கூட மறந்து போய் அவன் முகத்தையே பருகுவதைப் போல பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.


‘ரொம்ப இளைச்சுட்டார் …என்னை காணாம ரொம்ப வருத்தத்தில் இருக்கார் போலவே’என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே ஈஸ்வரின் குரல் இடையிட்டது.


“உன்னைப் பார்க்காம இரண்டு நாளா சார் பச்சை தண்ணி கூட குடிக்கலையாம் தெரியுமா? இப்படியே விட்டா கூட பட்டினி கிடந்தே செத்துடுவான்…எனக்கும் வேலை மிச்சம்”என்று வெறுப்புடன் சொன்னவனை ஆத்திரத்துடன் பார்த்தாள் வானதி.


“மொத்தமா எல்லா பீலிங்கையும் இப்பவே கொட்டிடாதே…கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ…அப்புறம் அவன் செத்துப் போய்ட்டா அவனோட பிணத்து மேல விழுந்து அழுக கண்ணுல தண்ணி இல்லாம போய்டும்”என்று வன்மத்துடன் கூறியவனை கட்டுக்கடங்காத அதிர்ச்சியுடன் பார்த்தாள் வானதி.


“எ..என்ன சொல்ற நீ?”


“ஒரு சின்ன டெமோ காட்டட்டுமா?” என்று அமர்த்தலான குரலில் கேட்டவன் அவனது போனை எடுத்து ஏதோ புரியாத மொழியில் யாரிடமோ பேசி விட்டு போனை அணைத்து பாக்கெட்டில் வைத்தான். அவளுக்கு அருகில் இருந்த மோடாவில் அமர்ந்து அவனது போனை பெரிய ப்ரொஜெக்டரில் இணைத்து, வீடியோவை பெரிய திரையில் பார்ப்பதற்கு வசதி செய்து கொடுத்தவன் மோடோவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.


“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா வானதி?…எனக்கு சின்ன வயசில் இருந்தே கறுப்பு நிறம் பிடிக்காது.இதோ இப்போ மூர்த்தியோட தலைக்கு பின் பக்கம் ஒரு பூச்சாடி இருக்கே…அது கூட கறுப்பு நிறம் தான் இல்லையா…” என்று அவன் சொல்ல அவளுக்கு குழப்பமாக இருந்தது.


‘இப்போ எதுக்கு இந்த கதை எல்லாம் என்கிட்டே சொல்லுறான்….’ என்று எண்ணமிடும் அதே நேரம் அவளது மூளை அவளை எச்சரிக்கை செய்தது. எந்த விதமான காரணமும் இல்லாமல் இவன் எதையும் செய்ய மாட்டனே’ என்று எண்ணி பயந்தாள் வானதி. அவள் அப்படி பயந்தது சரியே என்று நிரூபிக்கும் வகையிலேயே அவனது பேச்சும் இருந்தது.


“எனக்கு பிடிக்காத ஒண்ணு..அவனுக்கு பிடிச்சு இருக்கு…அதுக்காக அதை நான் விட்டு வைக்க முடியுமா” என்றவன் தன்னுடைய இன்னொரு போனில் இருந்து யாருக்கோ மெசேஜ் அனுப்ப, அடுத்த நிமிடம் அந்த கறுப்பு பூச்சாடி வெடித்து சிதறியது.


வானதியின் உடல் அதிர்ந்து தூக்கிப் போடுவதை உணர்ந்து கொண்டவனின் முகத்தில் திருப்தியான புன்னகை ஒன்று வந்து போனது.


அந்த பூச்சாடி வெடித்து சிதறியதும்,சம்ஹார மூர்த்தி ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்றதும், பின் ஆத்திரத்துடன் ஒவ்வொரு ஜன்னலையும் திறந்து வெளியே பார்ப்பதுவும், அவனது ஆட்கள் வேகமாக அந்த கட்டிடத்தை விட்டு கீழிறங்கி தேட முற்படுவதும் அவளுக்குத் தெரிந்தது.


“ஏன் வானதி…எனக்கு ஒரு சந்தேகம்…இங்கே உட்கார்ந்த இடத்தில் இருந்து சம்ஹார மூர்த்தியின் தலைக்கு பின்னால் இருக்கும் பூச்சாடியை ஒற்றை நிமிடத்தில் வெடித்து சிதற வைக்க முடிந்தவனால் அவனது தலையை வெடித்து சிதற வைக்க எவ்வளவு நேரம் ஆகி விடும் என்று நினைக்கிறாய்?” விரல் நகங்களை அளந்தபடியே அவன் பேசிய அந்தப் பேச்சில் அவளது முதுகுத்தண்டு சில்லிட்டது.


‘இவன் என்ன சொல்ல வர்றான்? அவரை கொல்லப் போறானா? ஏன்? அவருக்கும் இவனுக்கும் என்ன பகை? என்னை எதற்கு கடத்திட்டு வந்தான்? இப்போ அவரை எதுக்கு கொல்ல முடிவு செஞ்சு இருக்கான்…’ என்று குழப்பத்துடன் எண்ணியவள் அச்சத்தோடும்,குழப்பத்தோடும் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் முகமோ கொஞ்சமும் சலனமில்லாமல் அதே புன்னகையுடன் இருந்தது.


“உனக்கு என்ன தான் வேணும்?”என்று ஆத்திரமும் அழுகையும் போட்டி போட கேட்டவளைக் கண்டு அவனது முகம் விபரீத ஒளியில் மின்னியது.


“நீ புத்திசாலி வானதி…சரியா புரிஞ்சுக்கிட்டே…என்னுடைய தேவை என்னன்னு நான் சொல்லட்டுமா?”என்றவனின் பார்வை அவள் மீது பதிந்த விதத்தில் அவளின் உச்சி முதல் பாதம் வரை மொத்தமும் நடுங்கியது.வேட்டையாடத் துடிக்கும் வேங்கை தன்னுடைய இரையைப் பார்க்குமே ஒரு பார்வை…அதே பார்வை தான் அவனும் அவளை நோக்கி செலுத்தினான்.


தீ தீண்டும்…

Post a Comment

புதியது பழையவை