அத்தியாயம் 30
மேடையில் அமர்ந்து இருந்தவளின் பார்வை ஹோம குண்டத்தில் எரியும் அக்னியையே பார்த்தபடி இருந்தது. மறந்தும் அருகில் இருந்தவனை அவள் பார்க்கவில்லை. அவன் முகத்தை பார்த்தால் தான் தேவை இல்லாத குழப்பம் எல்லாம் வருகிறதே...
பின்னே ஏதோ ஆண்டாண்டு காலமாக காதலிப்பவளை கல்யாணம் செய்து கொள்வதை போல அவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி... இந்த பொலிவும், தேஜசும் மூர்த்தியிடம் ஒருநாள் கூட அவள் பார்த்ததே இல்லை...
அவன் முகத்தில் இருப்பது வெறுமனே சந்தோசம் என்று சொல்லி விட முடியாது. அதையும் தாண்டிய ஏதோ ஒன்று.எதையோ சாதித்து முடித்த திருப்தி அவன் முகத்தில்...
மந்திரங்கள் முழங்க... குறித்த நேரத்தில் ஒரு சில உறவினர்கள் முன்னிலையில் அவளுக்கு தாலி கட்ட தயாராக இருந்தான் ஈஸ்வர். கைகளில் தாலியை வாங்கிய பிறகு ஒரேயொரு நொடி அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான்.
அவன் கண்களில் இருந்தது என்ன என்று வானதிக்கு புரியவே இல்லை. கேள்வியா? ஆதங்கமா? சில நொடிகளுக்கு மேல் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் தலை தாழ்த்த முகம் முழுக்க பூரிப்புடன் அவளுக்கு தாலியை கட்டி தன்னில் சரிபாதியாக அவளை ஏற்றுக் கொண்டான் ஈஸ்வர்.
அக்கினியை வலம் வரும்பொழுது அவன் கைகள் உரிமையுடன் அவளைப் பற்றிக் கொள்ள அந்த நிமிடம் அவள் எப்படி உணர்ந்தாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அவளுக்குத் தெரிந்து ஈஸ்வரின் முதல் தொடுகை இதுதான். சுற்றி எல்லாரும் இருப்பதாலோ... அல்லது திருமண நிகழ்வுகளின் சோர்வின் காரணமாகவோ அவள் அமைதியாகவே இருக்க... அவள் பாதங்களை பொன்னே.. பூவே... என்று மென்மையாக கைகளில் பற்றி மெட்டியை அணிவித்தான் ஈஸ்வர்.
வானதிக்கு பிடிக்காது என்று எண்ணி வேறு எந்த வித சடங்குகளுக்கும் ஈஸ்வர் ஏற்பாடு செய்யாமல் போக ஒரு விதத்தில் நிம்மதியாகவும், ஒரு விதத்தில் ஆத்திரமாகவும் உணர்ந்தாள் வானதி.
‘விரும்பி கல்யாணம் செஞ்சு இருந்தா எல்லா சடங்கையும் செய்யத் தோணும்..இது பேருக்கு நடக்கும் கல்யாணம் தானே...’என்று எண்ணியவள் அவன் கைகளில் இருந்த தன்னுடைய விரல்களை பிரித்துக் கொள்ள முனைந்தாள்.
முயற்சி மட்டும் தான் அவளால் செய்ய முடிந்தது. ஆனால் அதற்கு அவன் ஒத்துழைக்க வேண்டுமே... அவள் விலக நினைக்க.. நினைக்க.. அவன் நெருங்கினான். அவனுடைய ஆழ்ந்த பார்வைகள் அவளைத் திணறடித்தது.
மூர்த்தி ஒருமுறை கூட தன்னை இப்படி பார்த்தது இல்லை என்ற எண்ணம் நினைவுக்கு வர மானசீகமாக தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள்.
‘இது என்ன பழக்கம்..மூர்த்தியையும் கட்டின புருஷனையும் சேர்த்து வச்சு பார்க்கிறது தப்பு.. இனி என் வாழ்வில் மூர்த்தி என்பது முடிந்து விட்ட அத்தியாயம்’ என்று தன்னைத்தானே தேற்றுக் கொண்டவளால் தொடர்ந்து சடங்குகளில் முழு ஈடுபாட்டோடு இருக்க முடியவில்லை.
அவள் மனம் குழப்பத்தில் இருந்ததால் அவளுக்காக ஈஸ்வர் பார்த்து பார்த்து செய்த எதுவும் அவள் கண்களில் படவில்லை.
‘நியாயப்படி பார்த்தால் ஈஸ்வருக்கு இந்த கல்யாணத்தில் துளியும் விருப்பமே இருக்கக் கூடாதே..ஆனால் இவன் என்ன இப்படி சந்தோசமாக இருக்கிறான்...அவனுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது... என் மீது அவனுக்கு காதலும் இல்லை... காமமும் இல்லை...அப்படி இருக்கும் பொழுது எதற்காக இந்த சந்தோசம்’ என்று எண்ணியவளின் முகம் குழப்பத்தை பிரதிபலிக்க அதை அவனும் உணர்ந்து கொண்டானோ என்னவோ பவுனம்மாவை அழைத்து அவர் வசம் அவளை ஒப்படைத்தான்.
“அவ கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் ... பத்திரமா பார்த்துக்கோங்க... இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு கிளம்பிடலாம்”
“என்ன தம்பி அதுக்குள்ளே...தாலி கட்டி முடிச்சதும் கிளம்பினா எப்படி? இனிமேல் தானே நிறைய சடங்கெல்லாம் இருக்கு”
“ம்ச்...அவளை பாருங்க பவுனம்மா... ரொம்ப சோர்ந்து போய் இருக்கா...” என்று அவளுக்காக அவன் பேச ஆச்சரியத்துடன் அவனை ஏறிட்டாள் வானதி.
“இல்லை தம்பி... இன்னும் சொந்தக்காரங்க வருவாங்களே...” என்று தயக்கத்துடன் அவர் இழுக்க ஒற்றை கை அசைவில் அதை மறுத்து விட்டான் ஈஸ்வர்.
“யாரா இருந்தாலும் வீட்டுக்கு வந்து பார்த்துக்கட்டும்” என்று முடிவாக சொன்னவன் வேகமாக வெளியே சென்று விட வானதியின் மனம் அவளையும் அறியாமல் முன்தினம் இரவு நடந்த விஷயங்களை அசை போடத் தொடங்கியது.
உறங்கிக் கொண்டு இருந்த அவளின் கட்டிலின் அருகே வந்தவன் பவுனம்மாவின் உறக்கம் கலையாத வண்ணம் மெல்லிய குரலில் பேசத் தொடங்கினான்.
“எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு...எனக்கு பயந்து நீ இப்படி பயந்துக்கிட்டு வந்து படுத்து இருக்கிறது”
“யார் சொன்னா ..உங்களுக்கு பயந்து நான் இங்கே வந்து படுத்து இருக்கேன்னு” முகத்தை மூடி இருந்த போர்வையை உதறி விட்டு ஆத்திரத்துடன் உறுத்து பார்த்தவளைக் கண்டதும் பொங்கிய சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் ஈஸ்வர்.
“நீ தான்...வேறு யார்?”
“உன்னைப் போல ஒருத்தனைப் பார்த்து நான் என்னைக்கும் பயப்பட மாட்டேன்”
“என்னைப் போல ஒருத்தன்னா” அவன் விழிகள் லேசாக இடுங்கியது.
“உன்னைப் போல ஒரு பொறு... ராட்சசன்”
“உன்னைப் பொறுத்த அளவில் எப்பொழுதுமே நான் ராட்சசனா மட்டுமே இருந்து இருக்கலாம் என்பது தான் என்னுடைய ஆசையும்னு உன்கிட்டே சொன்னா....”
“கண்டிப்பா நம்ப மாட்டேன்...”
“நல்லது.. எனக்கும் அது தான் வேணும்... இப்போ நல்ல பிள்ளையா படுத்து தூங்கு...”
“முடியாது...நீ வெளியே போ” என்று அவள் கத்த அவனோ ஒற்றை விரலை உயர்த்தி அவனது வாயிற்கு குறுக்கே வைத்து கண்களால் மிரட்டினான்.
“பவுனம்மா தூங்கிக்கிட்டு இருக்காங்க... சத்தம் கேட்டா முழிச்சுடுவாங்க...”
“முழிச்சா... முழிக்கட்டும்.. எனக்கென்ன வந்தது?” என்றாள் வீம்பாக...
“நீ இப்படி கோபமா பேசும் பொழுது...” என்றவன் வேண்டுமென்றே வார்த்தைகளை நிறுத்தி விட்டு அவளை ஆழ்ந்த பார்வை ஒன்று பார்த்து வைக்க வானதிக்கு அவனை நேர்கொண்டு பார்க்கவே முடியவில்லை.
“நீ இந்த மாதிரி என்னை எதிர்த்து பேசினா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்குது... உன் பக்கத்தில் வரணும் போல இருக்கு” என்று சொன்னவனின் பார்வை உணர்த்திய சேதியில் அவளுக்குள் கலவரம் மூண்டது...
கப்பென்று வாயை மூடியவள் அரண்டு போய் அவனைப் பார்க்க...
“குட்...இப்பக் கூட அழகாத் தான் இருக்க.. நேரமாச்சு தூங்கு” என்றவன் அறையில் ஒளிர்ந்த விளக்கை நிறுத்தி விட்டு செல்ல.. ஏனோ அவனிடம் மூர்த்தியின் நிலை பற்றி கேட்க வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு இல்லாமல் போனது.
அதன் பிறகு விடிந்ததும் பவுனம்மா பம்பரமாக சுழன்று அவளை கல்யாணத்திற்கு தயார் செய்தார்.
மாம்பழ வண்ணப் பட்டுப்புடவையில் சிகப்பில் பூக்கள் தெளித்தது போல இருந்த அந்த புடவையில் தேவதை போல அழகுடன் இருந்ததை வானதி கொஞ்சமும் உணரவே இல்லை.
வானதியை பொறுத்தமட்டும் இந்த திருமணத்தை கடமைக்காகவே செய்து கொள்ள நினைத்தாள். தன்னுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய ஈஸ்வரை ஒரு வகையில் பழி தீர்ப்பதற்க்காகவே இந்த திருமணம். மற்றபடி அவளுக்கு இந்த திருமணத்தில் எந்த விதமான லயிப்பும் இல்லை என்பது தான் நிஜம்.
பொம்மை போல இருந்தவளின் கழுத்தில் தாலி கட்டியவனுக்கு அவளது உயிர்ப்பில்லாத தன்மை சுட்டு இருக்க வேண்டும். எனவே தான் தாலி கட்டும் முன் அவன் கரங்கள் ஒரு சில நொடிகள் தயங்கியது என்பதை அவளும் உணர்ந்து கொண்டாள்.
கழுத்தில் பாரமாக கிடந்த மாலையை கழட்டி வைத்தவளுக்கு மஞ்சள் கயிறில் கோர்த்து அவன் கரங்களால் கட்டப்பட்ட தாலி அதை விடவும் அதிக கனமாக இருப்பதைப் போல தோன்றியது. ஆனால் மாலையை கழட்டியதைப் போல அதை கழட்ட முடியாதே என்று விரக்தியாக எண்ணிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் ஈஸ்வர் வந்து விட அவனும், அவளுமாக மட்டும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் ஏறி சென்று விட பவுனம்மா தனியாக உறவினர்களுடன் வேறு காரில் அவர்களுக்கு முன்னரே சென்று விட்டார். இவர்கள் காரை விட்டு இறங்கும் பொழுது அவர்களை வரவேற்க ஆரத்தி தட்டுடன் எல்லாரும் தயாராக காத்திருக்க, முகத்தில் ஒட்ட வைத்த சிரிப்புடன் காரில் இருந்து இறங்கினாள் வானதி.
“இரண்டு பேரும் சேர்ந்து ஜோடியா நில்லுங்கம்மா” என்று முகம் முழுக்க புன்னகையுடன் கூறிய பவுனம்மாவை பார்த்து லேசாக சிரிக்க முயன்றவளின் சிரிப்பு அடுத்த நொடி சுத்தமாக நின்று போய் இருந்தது ஈஸ்வரின் செயலால்.
அவனது கைகளை அவளது தோளை சுற்றி வளைத்துக் கொள்ள... அந்த நொடிகளில் ஏற்பட்ட அதிர்வில் இருந்து வெளிவர முடியாமல் திணறினாள் என்பதை அவளின் உடலில் ஏற்பட்ட அதிர்வு அவனுக்கு உணர்த்த... அதை உணர்ந்தவன் போல அவனது கைகள் ஒரு நிமிடம் ஆதரவுடன் அவளது தோள்களில் லேசான அழுத்தத்துடன் பதிந்தது.
வீட்டுக்குள் நுழைந்த பின்னரும் அவன் கைகளை விலக்கிக் கொள்ளாமல் இருக்க , வானதி கொஞ்சம் அசூசையாக உணர்ந்தாள்.
“கையை எடுங்க” என்றாள் யாருக்கும் கேட்காத குரலில்...
“முடியாது “ என்று சொன்னவன் அவளை நெருங்கி அமர வானதி வேகமாக இரண்டடி தள்ளி அமர்ந்தாள்.அவளது விலகலை பொருட்படுத்தாமல் அவன் மீண்டும் மீண்டும் அவளை உரசியபடியே அமர்ந்து இருக்க வானதிக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது.
“இப்போ தள்ளி உட்கார போறீங்களா இல்லையா?” என்றாள் யாருக்கும் கேட்காத வண்ணம் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
“அந்த ஐடியா எனக்கில்லை” என்று அவனும் கழுத்தை லேசாக சாய்த்து வைத்துக் கொண்டு கூற... அவளுக்குள் எரிச்சல் மூண்டது.
“என்ன அட்வான்டேஜ் (Advantage) எடுத்துக்க பார்க்கறீங்களா?”
“இல்லை மனசில் பதிய வைக்க முயற்சிக்கிறேன்”
“என்னன்னு?”
“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு...”
“என்னோட மனசிலா?” என்றாள் லேசாக நக்கல் தொனிக்க....
“இல்லை...என்னோட மனசில்” என்று அழுத்தமாக சொன்னவன் யாரோ வந்து அழைக்கவும் எழுந்து சென்று விட அந்த வீட்டு ஹாலில் தனியாக இருந்தாள் வானதி. அவள் மனம் முழுக்க அவன் சொல்லி சென்ற வார்த்தையிலேயே உழன்று கொண்டிருந்தது.
‘குழப்பிட்டான்...எப்பப் பாரு இப்படி எதையாவது சொல்லி குழப்புறதே இவனுக்கு வேலையா போச்சு’ அவள் போக்கில் அமர்ந்து இருக்க,மீண்டும் அவள் அருகில் வந்தவன் சற்று தளர்வாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“உனக்கு அசதியா இருந்தா ரூமில் போய் படுத்துக்கோ...”
கண்கள் ஓய்வுக்கு கெஞ்சினாலும் உறங்க செல்ல பிடிக்கவில்லை அவளுக்கு.அவளுக்கு சற்று முன் அவன் சொன்ன வார்த்தைக்கான அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.
“ஏன் அப்படி சொன்னீங்க?”
“எப்படி?”
“ம்ச்...”
“உண்மையைத் தான் சொன்னேன்”
“அதற்கு என்ன அர்த்தம்?”
“நான் என்ன சொன்னேனோ... அது தான் அர்த்தம்” என்றான் அவனும் சளைக்காமல்....
“ஓ... என்னை மாதிரி ஒரு அனாதையை உங்க மனைவி அப்படிங்கிற விஷயம் ரொம்ப கஷ்டப்பட்டு பதிய வச்சா மட்டும் தான் உங்க மனசில் பதியும் இல்லையா....” என்றாள் கொஞ்சம் அழுகையும் ஆத்திரமும் கலந்தவாறே...
‘இப்படி எல்லாம் நினைக்கிறவன் எதுக்கு என்னோட வாழ்க்கையில் வரணும்..ஒழுங்கா இருந்த என்னோட வாழ்க்கையை திசை மாத்தி விட்டு இப்படி நடந்துக்கணும்’ என்று எண்ணி வருந்தத் தொடங்கினாள்.
அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன் கொஞ்சம் நெருங்கி அமர்ந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டு பேசத் தொடங்கினான்.
“நீ நம்புறியோ இல்லையோ... இதுவரை உன்னை நான் அந்த கண்ணோட்டத்தில் பார்த்தது இல்லை. ஆனா இனி அப்படி இருக்க முடியாது. இனி நீ என்னோட மனைவி.. என்னோட சரிபாதி...நம்ம வாழ்க்கை நல்ல படியா போகணும்னு நான் விரும்பறேன். அதுக்கு முதலில் உன்னை என்னோட மனைவின்னு என்னோட மனசில் பதிய வைக்கணும் இல்லையா.. அதுக்காகத் தான் இதை எல்லாம் செய்றேன்.. மத்தபடி நீ சொன்ன எந்த காரணமும் இல்லை”என்றவன் பவுனம்மா வரவும் பேச்சை அத்தோடு நிறுத்திக் கொள்ள வானதிக்கு ஒருபுறம் நிம்மதியாகவும் ஒருபுறம் அழுகையாகவும் வந்தது.
‘இதுக்கு முன்னாடி என்னை அப்படி நினைக்காதவர்.. கடைசி வரை நல்லவராவே இருந்து இருக்கலாமே... செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு பேசி என்னை ஏமாத்திடலாம்ன்னு பார்க்கறீங்களா’ என்று திட்டித் தீர்த்தாள் வானதி.
நல்ல நேரம் பார்த்து இருவருக்கும் பாலும்,பழமும் கொடுக்க அவளை சீண்டிக் கொண்டே எல்லாவற்றையும் செய்தான் ஈஸ்வர். அவனது இந்த புது நெருக்கத்தால் இயல்பாக இருக்க முடியாமல் தவித்துப் போனாள் வானதி.சுற்றிலும் எல்லாரும் அவனது உறவினர்களாகவே இருக்க...ஒன்றும் மறுத்து பேச முடியாமல் பல்லைக் கடித்த வண்ணம் அமைதியாக இருந்தாள் வானதி.
ஒரு வழியாக அவனது சேட்டைகள் முடிவுக்கு வந்ததும் ஓய்வு எடுக்கப் போவதாக சொல்லிக் கொண்டு அவள் மாடி அறைக்குள் நுழையவும் அவனும் பின்னோடு வரவே தோன்றிய எரிச்சலை மறைக்காமல் முகத்தில் காட்டினாள் வானதி.
“இப்ப எதுக்கு என் பின்னாடியே வர்றீங்க...”
“இது என்ன அநியாயமா இருக்கு..என் பொண்டாட்டி பின்னாடி நான் வர்றேன்”என்று அவன் நியாயம் பேச அவளோ பல்லைக் கடித்தாள்.
“இப்போ எதுக்கு வந்தீங்க..அதை மட்டும் சொல்லிட்டு கிளம்புங்க..எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்..தனியா”என்றவள் கோபத்துடன் சொல்ல அதற்கெல்லாம் அசந்து போய் விடுவானா ஈஸ்வர்...அவன் பேசிய பேச்சில் அவளது அசதியை காக்கா தூக்கிக்கொண்டு பறந்து போய் விட்டது.
“நானும் அதை சொல்லத் தான் வந்தேன்... நல்லா தூங்கி ரெஸ்ட் எடு..அப்ப தான் நைட் பிரஷ்ஷா இருக்கும்”
‘ஞே’
“என்ன முழிக்கிற...இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் இல்லையா..”
“அதைத்தான் ஏற்கனவே கொண்டாடி முடிச்சாச்சே..அப்புறம் என்ன?”என்று வாயுக்குள் முணுமுணுக்க...
“நான் தானே கொண்டாடினேன்.... உன்னைப் பொறுத்தவரை இன்னைக்குத் தானே நம்ம பர்ஸ்ட் நைட்... ரெடியா இரு” என்று சொன்னவன் உற்சாகமாக விசிலடித்தவாறே அங்கிருந்து செல்ல கதவை சாத்த வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல் அவள் அப்படியே பேயறைந்தது போல நின்று கொண்டு இருந்தாள்.
தீ தீண்டும்...
கருத்துரையிடுக