அத்தியாயம் 27
“இங்கே இருக்கிற வீட்டுக்குத் தானே அத்தை போறோம்...அதுக்கு எதுக்கு அழுகை எல்லாம்”முந்தானையில் வாய் பொத்தி அழுத சாவித்திரியை தேற்ற முயன்றான் பிரபஞ்சன்.
“இருந்தாலும் இனி நினைச்ச நேரம் என் பெண்ணை பார்க்க முடியுமா?”அழுகை இன்னும் குறைந்தபாடில்லை.வேறு வழியின்றி கண்களால் மாமனாரை துணைக்கு அழைத்தான்.
“போதும் சாவித்திரி...இப்படித்தான் பொண்ணு முதன்முதலா புகுந்த வீட்டுக்குப் போகும் பொழுது அழுதுகிட்டே வழி அனுப்பி வைப்பியா?”லேசாக அதட்ட அவர் குரலில் இருந்த அழுகை கொஞ்சம் குறைந்தது.
“வீட்டுக்கு போனதும் விளக்கு ஏத்தி சாமி கும்பிடு...நேரத்துக்கு சாப்பிடு...மாப்பிள்ளையை நல்லா கவனிச்சுக்கோ”இப்படி விடாமல் அறிவுரைகளை பொழிந்து கொண்டு இருந்த தாயை வெறித்த பார்வையுடன் பார்த்துக் கொண்டு இருந்த சங்கமித்ராவை வினோதமாக பார்த்தான் பிரபஞ்சன்.
“அக்கா எங்கேப்பா?”தந்தையிடம் கேட்டாள்.
“உங்க மாமா இன்னைக்கு தானே ஊரில் இருந்து வர்றார்.அதுதான் அவரைக் கூட்டிக்கொண்டு வர ஏர்போர்ட் போய் இருக்கா”
“அக்காவை மட்டும் தனியாவா அனுப்பி வச்சீங்க?...நீங்களும் கூட போய் இருக்கலாமே அப்பா...”லேசான கோபம் அவள் குரலில்...
“அதில்லை பாப்பா...புருஷன் பொண்டாட்டி ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறாங்க...அதான் தொந்தரவு செய்ய வேண்டாம்னு அவளை மட்டும் தனியே அனுப்பி வச்சேன்.எல்லாம் நம்ம தெரு ராமுவோட ஆட்டோல தான் அனுப்பி வச்சேன்.பயப்பட வேண்டாம் பாப்பா”
“வீட்டுக்கு போனதும் போன் பண்ணு பாப்பா”என்று அழுதபடியே கூறிய தாயின் சொற்களை கவனிக்காதவள் போல வெளியே தயாராக இருந்த காரில் போய் ஏறிக் கொண்டாள்.
‘ஏன் இவ இப்படி நடந்துக்கிறா’என்ற யோசனையுடன் அவளையே பார்த்தபடி காரில் பின் இருக்கையில் ஏறி அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டான். காரில் டிரைவர் உடனிருக்க வேறு எதுவும் பேச வழியில்லாமல் போனது பிரபஞ்சனுக்கு.
சங்கமித்ராவோ தப்பித் தவறி கூட எதையும் பேசி விடக்கூடாது என்று உறுதியாக இருந்தாள்.மனதோடு சேர்த்து வாயிற்கும் பூட்டு போட்டுக் கொண்டாள்.உள்ளம் முழுக்க கணவனின் மீது கடலென நேசம் பரவிக் கிடக்க அது அவனுக்கு தெரிந்து விட கூடாதே என்று தனக்குள் இறுகிப் போய் விட்டாள்.
நேரே கார் பிரபஞ்சனின் வீட்டின் முன் நின்றது.பூட்டி இருந்த வீட்டை தன்னுடைய சட்டைப்பையில் இருந்த சாவியின் மூலம் திறந்தான் பிரபஞ்சன்.
“இதுவரைக்கும் வேலைக்கு ஆள் யாரையும் நான் வச்சுக்கலை.இனி உனக்கு வேணும்னா புதுசா போட்டுக்கலாம்”என்று பேசியபடியே அவன் வீட்டுக்குள் செல்ல முயல சங்கமித்ரா தயங்கி வாசலிலேயே நின்று விட்டாள்.
“உள்ளே வா”அங்கேயே நின்று விட்ட மனைவியை கேள்வியாக பார்த்தான்.
“ஆ...ஆரத்தி...யாரும் எடுக்க மாட்டாங்களா?” தயங்கி தயங்கி கேட்டாள். ஒரே ஒரு நிமிடம் அவனது பார்வை அவளை துளைத்தது.பின் கண்களில் மின்னல்கள் பளிச்சிட வேகமாக வீட்டுக்குள் சென்று கையில் ஆரத்தி தட்டோடு திரும்பி வந்தான்.
‘உங்களுக்கு எப்படி தெரியும்?’என்ற கேள்வி வாய் வரை வந்துவிட முயன்று அதை அடக்கிக் கொண்டாள்.
“திரும்பி இங்கே உன்னோட வரும் பொழுது நீ இதெல்லாம் எதிர்பார்ப்பன்னு எனக்கு தோணுச்சு.அதுதான் பக்கத்துக்கு வீட்டு அக்கா கிட்ட முன்னாடியே கேட்டு வச்சு இருந்தேன்.நான் எதிர்பார்த்த மாதிரி தான் நீயும் நடந்துக்கிற”அவன் கண்களில் தெரிந்த பளபளப்பிற்கு காரணம் என்னவென்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
அவளை மட்டும் வாசலில் நிற்க வைத்து தனியே ஆலம் சுற்றப் போனவனை அவளுடைய விழிகளில் தெரிந்த தயக்கம் தடுத்து நிறுத்தியது.
“என்னடா”கனிவுடன் கேட்டான் பிரபஞ்சன்.
“நீங்களும் சேர்ந்து நிக்கணும் இல்லையா?”
“அப்புறம் உனக்கு யார் ஆரத்தி எடுக்கிறது?...இங்கே இந்த வீட்டுக்கு முதன்முதலா வர்றது நீதான்.அதனால உனக்கு மட்டும் எடுத்தாலே போதும்”என்று இயல்பான குரலில் கூறியவன் சூழ்நிலையை மேலும் இலகுவாக்க ஆரத்தியை சுற்றியவாறே பாட ஆரம்பித்தான்.
கௌரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே
மித்ரா கல்யாண வைபோகமே
பிரபஞ்சன் கல்யாண வைபோகமே
முதல் இரண்டு வரிகளுக்கு அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தவள் அடுத்த வரிகளில் தன்னுடைய கவலைகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கடகடவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“எனக்கு முதல் ரெண்டு வரி தான் தெரியும் மித்ரா...நீ வருத்தப்படக் கூடாதேன்னு அதுக்கு அப்புறம் நானா பாடினேன்.அதுக்குப் போய் இப்படி சிரிக்கறியே?”ஆறடி ஆண்மகன் அவளிடம் ஐந்து வயது பிள்ளையாக குறைப்பட்டுக் கொண்டான்.
தனக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்று நெகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்தவள் சட்டென நிகழ்காலம் உரைக்க,முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல முயன்றாள்.அப்படி அவள் போக விட்டு விடுவானா அவன்...அவளின் பாதையை மறித்துக் கொண்டு அவளை வம்பிழுத்தான்.
“ஆரத்தி எடுத்தா தட்டுல காசு போடணும்...தெரியாதா?”
“அது ஆண்களுக்குத் தான்...”கழுத்தை லேசாக வெட்டிக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தவளை கண்ணில் குறுஞ்சிரிப்புடன் பின் தொடர்ந்தான் பிரபஞ்சன்.
“அது சரி...எவனாவது புதுசா கட்டின பொண்டாட்டி கிட்டே இருந்து பணத்தை எதிர்பார்ப்பானா?அவனது தேவையே வேற தானே?”என்று கூறியபடியே அவளின் பின்னோடு வந்து கதவை தாளிட்டவனை கண்டு அவளுக்கு உள்ளுக்குள் திக்கென்று ஆனது.
“என்ன முழிக்கிற...நேத்து உங்க வீட்டுல உன்னை எதுவும் செய்யாம விட்டு வச்சதுக்கு காரணம்.அங்கே நீ கத்தி கூச்சல் போட்டா எனக்குத் தானே அசிங்கம்...அதனால தான் இவ்வளவு நேரம் பொறுமையா இருந்தேன்.இப்போ உன்னை நான் தொட்டா .... உன்னால என்ன செய்ய முடியும் குஜிலி”நிதானமாக அவன் கேட்க அவளை பயம் கவ்விக் கொண்டது.
என்ன செய்வாள்... மிரண்டு போய் கால்களை பின்னால் எடுத்து வைத்து அவனிடம் இருந்து தப்பிக்கும் வழி ஏதாவது இருக்கிறதா என்று கண்களால் தேட அவளது நோக்கம் புரிந்தவன் போல அழுத்தமான நடையுடன் அவளை நோக்கி வரத் தொடங்கினான் பிரபஞ்சன்.
கதவை திறந்து கொண்டு வெளியே ஓடுவதென்றால் அவனை கடந்து தான் செல்ல வேண்டி இருக்கும்.இப்பொழுது எப்படி தப்புவது என்று எண்ணியவள் பின்னே திரும்பிப் பார்க்க அங்கே ஒரு அறையின் கதவு அவளுக்காகவே திறந்து வைக்கப்பட்டு இருப்பதை போல காட்சி அளிக்க சட்டென்று உள்ளுக்குள் போய் கதவை தாளிட்டுக் கொண்டாள் சங்கமித்ரா.
‘இதென்ன பைத்தியக்காரத்தனம்... இன்று ஒருநாள் அவனிடம் இருந்து தப்புவதால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா’ என்ற கேள்வி அவளுக்கு எழாமல் இல்லை.ஆனால் இப்பொழுது அவனது கைகளில் சிக்காமல் தள்ளி இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தவள் மூடிய கதவின் பின்னே சாய்ந்து கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
கதவுக்கு அந்தப் பக்கம் பிரபஞ்சனின் கோபக் குரல் கேட்கிறதா என்று கதவில் காதை தீட்டி வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.ஆனால் அவளுக்கு எந்த ஓசையும் கேட்கவில்லை. ‘ஒருவேளை கோபப்பட்டு வெளியே கிளம்பி போய் விட்டானோ’ என்று அவளுக்கு தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் தைரியம் தான் அவளுக்கு இல்லாமல் போனது.
கதவை திறந்து பார்க்கும் நேரத்தில் அவன் உள்ளே வந்து விட்டால் என்ன செய்வது? என்ற குழப்பத்துடன் கதவின் மேலே சாய்ந்து நின்றாள்.
“எவ்வளவு நேரம் தான் அங்கேயே நிற்கப் போற மித்ரா”என்று காதருகில் கேட்ட குரல் யாருடையது என்று அவளுக்கு யாரேனும் சொல்லவும் வேண்டுமா என்ன?பயத்தில் முகம் வெளுத்து விட்டது அவளுக்கு.பயத்தில் உடல் முழுக்க தொப்பலாக நனைந்து விட்டது.
‘இவர் எப்படி உள்ளே நுழைந்தார்’ என்று அவள் கண்களால் துழாவ அவளுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் பிரபஞ்சனே அவளுக்கு உரிய பதிலை கொடுத்தான்.
“இந்த ரூம்குள்ளே வர்றதுக்கு ரெண்டு கதவு இருக்கு.ஒண்ணு நீ வந்த வழி. இன்னொன்னு.... அதோ அங்கே இருக்கு பாரு...”என்று தீரைச்சீலைக்கு அப்பால் கண்ணுக்கு தெரியாத விதத்தில் மறைந்து இருந்த கதவை காட்டினான்.
“போலீஸ்காரன் இல்லையா அதனால இந்த வீட்டை வாங்கினதுமே ஒரு பாதுகாப்புக்காக இன்னொரு கதவையும் மாட்டி வச்சேன்.இதுவரைக்கும் அது யூஸ் ஆகலை.உன்னால இன்னைக்கு தான் யூஸ் ஆச்சு...”என்று பேசிக் கொண்டே அவளின் அருகில் வந்தவன் அதிர்ந்து நின்ற அவளின் பார்வையை கண்டும் காணாதவன் போல மெல்ல கைப் பிடித்து அவளை கட்டிலுக்கு அழைத்து சென்று அமர வைத்தான்.
சங்கமித்ரா இன்னும் பிரபஞ்சன் அறைக்குள் நுழைந்து விட்டதை ஏற்க முடியாமல் உறைந்து போய் நின்றாள்.பிரபஞ்சனோ அவளது நிலையை நன்கு அறிந்தவன் போல தேவை இல்லாமல் எந்த வார்த்தைகளும் பேசாமல் அவளுக்கு அருகில் சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்து இருந்தான். மெல்ல அவளது கைகளை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் இயல்பான குரலில் பேசத் தொடங்கினான்.
“நம்ம வீடுன்னு நான் சொன்னது இந்த வீட்டை இல்லை மித்ரா...கிராமத்தில் இருக்கும் என்னோட அப்பா,அம்மா வாழ்ந்த வீடு.அதனால இப்போதைக்கு எதுவும் நடக்காது.பயப்படாதே...” என்று அவன் கூறி முடித்த அடுத்த நொடி அவள் முகம் பூவாக மலர்ந்து விட்டது.
‘கண்டேன் சீதையை’என்று ஆஞ்சநேயர் கூறியது போல ஒற்றை வார்த்தையில் அவளது மனக் கலக்கத்திற்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று உணர்ந்து சட்டென்று அதை தீர்த்து வைத்த கணவனின் மேல் அவளுக்கு காதல் பெருகியது.
அதே சமயம் அவனை அறைக்கு வெளியில் விட்டுவிட்டு தான் மட்டுமாக அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டது எதனால் என்ற நினைவும் ஒன்றாக வர உள்ளம் சோர்ந்து போனாள் சங்கமித்ரா.
“மித்ரா...என்னைப் பார்”ஆசிரியரின் கண்டிப்புடன் ஒலித்தது அவன் குரல்.மீறும் துணிவின்றி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் சங்கமித்ரா.அவளது கன்னங்களை கைகளில் ஏந்தியவன் கண்ணோடு கண் கலந்தவாறே மயிலறகால் வருடுவது போல மென்குரலில் பேசினான்.
“நான் உன்னோட பிரபஞ்சன்டி...உன் புருஷன்...என்னைப் பார்த்து ஏன் பயப்படுற...உன்னை கஷ்டப்படுத்திடுவேன்னு நினைக்கறியா?” ‘என்ன பதில் சொல்வாள் அவள்?மௌனமாக அமர்ந்து இருந்தாள் சங்கமித்ரா.
“நேத்து கூட இப்படித்தான் நடந்துகிட்ட சங்கமித்ரா...நான் கிட்டே வந்தாலே உன் கண்ணில் அப்படி ஒரு பயம்...உன் உடம்பில் அப்படி ஒரு நடுக்கம்...வேண்டாம்டா... எனக்கு கஷ்டமா இருக்கு. நான் உன்னை போட்டோல பார்த்த அந்த நொடியில இருந்து உயிருக்கு உயிரா நேசிக்கிறேன் மித்ரா...ஆனா உன்னோட இந்த பயம் என்னை ரொம்பவே காயப்படுத்துது...ப்ளீஸ்!புரிஞ்சுக்கோடி...நானும் மனுஷன் தான்...”காதலாக தொடங்கி காதலிலேயே முடித்தான் பிரபஞ்சன்.
சங்கமித்ராவால் அவன் கண்களில் இருந்து தன்னுடைய பார்வையை விலக்க முடியவில்லை.கண்கள் முழுவதும் காதலை தேக்கி வைத்துக் கொண்டு பேசுபவன் அவளை விரும்பித் திருமணம் செய்து கொண்ட அவளது உயிருக்கு உயிரான அவளின் கணவன்.
‘ஏன் பார்வையை விலக்க வேண்டும்’என்று அவளின் உள்மனது அவளையே கேள்வி கேட்டது. அவனோடு ஒன்றத் துடித்த அவளின் மனதை அடக்கும் வழி தெரியாமல் திணறித் தான் போனாள் அவள்.அவளையும் அறியாமல் கணவனின் காதல் பார்வைக்கு அவளும் பதில் அளிக்கத் தொடங்கினாள் பார்வையாலேயே...
கண்கள் பளபளக்க அவளை இன்னும் நெருங்கியவன் காதலோடு மெல்ல அவளை அணைத்துக் கொண்டான்.மறுப்பின்றி அவன் தோளில் சாய்ந்து கொண்ட சங்கமித்ராவுக்கு.இதுதான் சொர்க்கம் என்று தோன்றியது.
தன் கைகளுக்குள் அடங்கி இருக்கும் மனைவியை காதலோடு அணைத்துக் கொண்டவனின் கைகள் மோகத்துடன் அவளின் இடையில் பரவத் தொடங்கியது. கணவன் அத்துமீற மாட்டான் ...சொன்ன சொல்லை மீற மாட்டான்... என்ற எண்ணத்தோடு அவன் கைகளில் அடங்கி இருந்தவளின் மேனியில் மெல்லியதோர் சிலிர்ப்பு.
கணவனாக காதலுடன் முதன்முறையாக அவன் தொடுகை உள்ளத்தில் ஏதோ ஒரு மூலையில் வெண்கல சத்தமாக அதிர்ந்து ஒலிக்க அவள் மேனியும் அதற்கு ஏற்ப மெல்ல அதிர்ந்தது.
மனைவியவளின் சிலிர்ப்பும்,அதிர்வும் பிரபஞ்சனை மேலும் முன்னேற சொல்லித் தூண்ட,அவளின் சம்மதம் வேண்டி அவளை கண்ணோடு கண் நோக்கினான்.அவன் வாய் திறந்து சொல்லாவிட்டால் அவளுக்கு தெரியாதா என்ன?வெட்கத்துடன் பார்வையை அவள் திருப்ப முயல, உதய சூரியனைப் போல சிவந்து விட்ட அவளது முகம் அவனுக்கு ஆயிரம் சம்மதங்களைக் கூற நொடியும் தாமதிக்காமல் அவளின் இதழை முற்றுகையிட்டான்.
இன்னும்...இன்னும் ...இன்னும் அவளுக்குள் மூழ்கி முத்தெடுக்க விழைந்தான். சங்கமித்ராவுக்கு அந்த நிமிடம் பிரபஞ்சனிடம் இருந்து விலக வேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை.மனம் நிறைந்த காதலுடன் அவன் கரங்களுக்குள் சரண் புகுந்தாள் சங்கமித்ரா.காதலோடு மோகமும்,தாபமும் போட்டி போட அவளின் இதழ்களை சுவைத்தவன் அவளை விட்டு பிரிய மறுத்தான்.
பெண்ணவளின் இணக்கம் அவனின் தாபத்திற்கு மேலும் தூபம் போட அவனின் ஆண்மை அடங்க மறுத்தது.மனதுக்குள் கஷ்டப்பட்டு தன்னுடைய வாழ்க்கை தொடங்க வேண்டிய முறை குறித்து நினைவுக்கு கொண்டு வந்தான் பிரபஞ்சன். பிரிய மனமின்றி அவளை பிரிந்தவனின் மனது அலைப் பாயத் தொடங்கியது.
‘என் மனைவி தானே...அவளை நான் இப்பொழுதே எடுத்துக் கொண்டால் என்ன’ என்று...இன்னமும் கண் திறவாமல் அவனது கை அணைப்பில் இருந்த மனைவியின் மதிமுகம் அவனது எண்ணத்தை செயலாற்ற தூண்ட பெரும் பிரயத்தனம் செய்து அந்த முடிவை தள்ளி வைத்தான்.
‘கூடாது...இன்னும் அவள் என்னிடம் காதல் சொல்லவில்லை...அவள் காதலை சொன்ன மறுநிமிடம் அவளை அழைத்துக் கொண்டு கிராமத்து வீட்டுக்கு போய் விட வேண்டும்.அப்படி அவள் சொல்ல மறுத்தால் நானாகவே ஒரு நாள் அவளை அங்கே அழைத்து சென்று பிறகு அவளை என் மீது இருக்கும் காதலை அவளே ஒத்துக் கொள்ளும்படி செய்து விடுவேன்’என்று உள்ளுக்குள் சூளுரைத்தவன் மெல்ல அவளை கட்டிலில் கிடத்தி அவளுக்கு அருகில் அமர்ந்து அவளின் இருபுறமும் கைகளை ஊன்றி அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை ரசித்துக் கொண்டிருந்தான்.
“நேத்து தான் நான் கேட்ட கேள்விக்கு ஒண்ணுமே பதில் சொல்லலை நீ...இப்பவாவது சொல்லேன் மித்ரா...”கொஞ்சலாக மனைவியின் முகத்தை கைகளால் அளந்த படியே கேட்டான். பட்டென்று அவன் கைகளை தட்டி விட்டவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள்.
“எனக்கு உங்களை பிடிக்கலை...இப்ப மட்டும் இல்லை எப்பவுமே எனக்கு உங்களை பிடிக்காது”என்று தன்னுடைய பலம்கொண்ட மட்டும் கத்தி கூறியவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
மனைவியவள் மயங்கியதை கூட உணரும் நிலையில் இல்லாமல் திக்பிரமை பிடித்தவன் போல அப்படியே வெறித்து பார்த்தவாறு அமர்ந்து இருந்தான் பிரபஞ்சன்.
சிற்பம் செதுக்கப்படும்...
கருத்துரையிடுக