அத்தியாயம் 29
சத்யனும், அஞ்சலியும் தனியாக
வசிக்கத் தொடங்கி ஒரு வாரம் தாண்டி இருந்தது. மேகலா காலையில் வீட்டில் சமையல் வேலைகளை முடித்து
வைத்து விட்டு ஒன்பது மணிக்கு எல்லாம் தோப்பு வீட்டிற்கு வந்து விடுவார். அதன்
பிறகு இரவு தான் வீடு திரும்புவார். ஆரம்பத்தில் இவர்கள் தனியே வந்தது பற்றி
துரைசாமி பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. எப்படியும் கொஞ்ச நாளில் தன்னுடைய
காலில் வந்து மகன் விழுந்து விடுவான் என்று நம்பிக் கொண்டிருந்தார். எனவே மகன்
மீது பெரிதாக அவருக்கு கோபமில்லை. மனைவி மீது தான் அத்தனை ஆத்திரமும் திரும்பி
இருந்தது.
அன்றைய தினம் இரவு ஒன்பதை நெருங்கும் பொழுது வீட்டுக்குள்
நுழைந்தவரை ஆத்திரத்துடன் எதிர்கொண்டார் துரைசாமி.
“குடும்ப பொம்பளையாடி நீ?
தினம் ஊர் சுத்திட்டு ராத்திரி இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வர்ற?
விளங்குமா குடும்பம்?”
“உங்களைப் போல ராத்திரி மணி பத்து ஆனதும் ஊர் அறிஞ்ச வேசி வீட்டு வாசல்ல நிற்கலையே நான்.
என் பையனோட தான் இருந்துட்டு வர்றேன்” அவரிடம் பேசும் பொழுது அவர் முகம் பார்க்க
மறுத்து வேறு ஏதோ வேலையை பார்த்துக் கொண்டே அசட்டையாக பதில் சொல்லும் மனைவியின்
போக்கு அவருக்கு கோபத்தை இன்னுமாய் தூண்டியது.
முன்பெல்லாம் அவர் எத்தனை தூரம் திட்டினாலும் அமைதியாக
வாங்கிக் கொள்ளும் மேகலா இப்பொழுதெல்லாம் உடனுக்குடன் பதிலடி கொடுத்து விடுகிறார்
என்பதே அவரால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
“கட்டின புருசனுக்கு நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கணும்ங்கிற
அறிவு இருக்கா இல்லையா உனக்கு? காலையிலே வெளியே
போயிட்டு இப்போ வந்தா நான் எப்படி சாப்பிடறது?”
“ஏன் சமைச்சு வச்சுட்டுத் தானே போனேன்?”
“யார் வந்து பரிமாறுவா?”
“வேலைக்காரி கிட்டே சொல்லிட்டுத் தானே போனேன்.? அவ
பரிமாறலையா?”
“வேலைக்காரி வந்து பரிமாறுனா நீ எதுக்குடி பொண்டாட்டின்னு
எனக்கு?”
“வேண்டாம்னா சொல்லுங்க... நான் என் மகனுக்கு அம்மாவா அவன்
கூடவே இருந்துக்கிறேன்”
“ஏய்! இத்தனை வருசமா நீ தானே செஞ்ச?”
“உங்களுக்கு வீட்டு வேலைக்காரியும்,
நானும் ஒன்னு தான்னு தெளிவா எடுத்து சொல்லி புரிய வச்சுட்டீங்களே. அதனால இனி அந்த
மாதிரி பைத்தியக்காரத் தனத்தை எல்லாம் செய்ய மாட்டேன்”
“வர வர ரொம்ப பேசுற நீ... ரொம்ப தலைவலிக்குது... சூடா டீ
போட்டு கொண்டு வா”
“காத்தாயி... ஐயாவுக்கு டீ வேணுமாம்... போட்டுக் கொண்டு வந்து
கொடு” என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்து கொள்ள... இவரை என்ன செய்து சரி
செய்வது என்று புரியாமல் தலையை பிய்த்துக் கொள்ள தொடங்கினார் துரைசாமி.
சோபாவில் அமர்ந்தவர் போனை எடுத்து மகனுக்கு அழைத்தார்.
நான்கு முறை அழைத்தும் அழைப்பு ஏற்கப்படாமல் இருக்க கடுப்பாகி
மீண்டும் அழைத்தார். ஐந்தாவது முறை போனால் போகட்டும் என்பது போல எடுத்தான் சத்யன்.
“அம்மாவைப் பத்தி என்ன பேசணும்?”வேண்டா
வெறுப்பாக பேசுகிறான் என்பது அவன் குரலிலேயே புரிந்தது அவருக்கு.
“டேய்! நான் அப்பா பேசறேன்டா.”
“...”
“நாளைக்கு மாந்தோப்போட குத்தகை கெடு முடியுது. நீ போய் அந்த
கிருஷ்ணன் பயலைப் பார்த்து தொகையை வாங்கிட்டு வா”
“உங்க சொத்து... உங்க தோப்பு... உங்க கணக்கு வழக்கு..
அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நீங்களே பார்த்தாலும் சரி.. வேற ஆள்
வச்சு பார்த்தாலும் சரி...”
“இத்தனை நாளா நீ தானே பார்த்தே...”
“அப்போ நீங்க எனக்கு அப்பா.. நாம எல்லாரும் ஒரு குடும்பம்னு
நினைச்சேன்... எப்போ என் பொண்டாட்டியும். குழந்தையும் உங்களுக்கு வேண்டாதவங்களா
ஆனாங்களோ அப்பவே நீங்களும் எனக்கு யாரோ தான்”
“இப்படி பேச சொல்லி அந்த சிறுக்கி சொல்லிக்...”
“...”
“ஹலோ...”
“...”
“ஹலோ...”
“...”
“போனை வச்சுட்டியா?” என்று போனைப்
பார்த்து கத்தியவர் மீண்டும் அவனுக்கு அழைக்க..சுவிட்ச் ஆப் என்று பதில் வர
ஆத்திரத்தில் போனை போட்டு உடைத்தார்.
“எல்லாரும் என்கிட்டேயே உங்க ஆட்டத்தை காட்டுறீங்களா?
பார்க்கிறேன்டா... இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம்னு பார்க்கிறேன்.” என்று
நினைத்தவர் அத்தனை ஆத்திரத்திலும் சரசு வீட்டுக்கு செல்ல மறக்கவில்லை. அங்கே
வீட்டு வாசலில் நின்றாலும் அவரது கவனம் முழுக்க சத்யனையும்,
மேகலாவையும் எப்படி தன்னுடைய வழிக்கு கொண்டு வருவது என்பதில் தான் இருந்தது.
அவன் இறங்கி வராமல் இத்தனை தூரம் பிடிவாதம் பிடிப்பதற்கு
முக்கியக் காரணம் மேகலாவின் சொத்துக்கள். அவள் பேரில் இந்த ஊரில் இருக்கும் விவசாய
நிலங்களின் மூலம் கிடைக்கும் வருவாய். அது மட்டுமில்லாமல் டவுனில் அவர் பேரில்
இருக்கும் கடைகளின் வாடகை என்று பெருந்தொகை ஒன்று வந்து கொண்டு இருக்கிறது. அதை
எல்லாம் எப்படியாவது தடுத்து நிறுத்தி விட்டால் மீண்டும் தன்னுடைய காலடியில் வந்து
விழுவார்கள் என்ற முடிவுக்கு வந்தார். அதை எப்படி செய்வது என்று தீவிர யோசனையில்
இருந்தார்.
தோப்பு வீட்டில் சத்யனின் மடியில் அஞ்சலி அமர்ந்து இருந்தாள்.
“ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரவா அஞ்சலி?”
“இப்படி நோயாளி மாதிரி என்னை ட்ரீட் பண்ணாதீங்க... எனக்கு ஒரு
மாதிரியா இருக்கு”
“நீ ஏன் அப்படி நினைக்கிற?
உன்னோட உடம்புக்கு சத்தா சாப்பிடறதா
நினைச்சுக்கோ”
“அப்போ நீங்களும் சாப்பிடுங்க...”
“அவ்வளவு தானே... செஞ்சுட்டா போச்சு”
“என்னை ஒரு வேலையும் செய்ய விட மாட்டேங்கறீங்க... இப்படி
படுத்தே இருந்தா ரொம்ப போர் அடிக்குது...”
“அதுக்குத் தான் டிவி வாங்கி வச்சு இருக்கேனே”
“எவ்வளவு நேரம் தான் டிவி பார்க்கிறது?”
“இப்போ என்ன தான் வேணும் உனக்கு?”
செல்லமாய் சலித்துக் கொண்டான்.
“என்கிட்டே ஒரு பிசினஸ் ஐடியா இருக்கு. உங்களுக்கு சொல்றேன்.
கேளுங்க... பிடிச்சு இருந்தா நம்ம இரண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்”
“அஞ்சலி...ஏற்கனவே அம்மாவோட சொத்தில் வாழ்றதே எனக்கு ஒரு
மாதிரி இருக்கு. அவங்களுக்கு செய்ய கடமைப்பட்டவன் நான். வயசான காலத்துல அவங்க
சொத்தை எல்லாம் எழுதி வாங்கிட்டு இப்படி இருக்கிறதே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.
சீக்கிரமே ஏதாவது தொழிலை பார்க்கணும்.”
“அதைத் தான் நானும் சொல்றேன்...என்னோட பிறந்த வீட்டில் வர்ற
சொத்தில் வாழ்றதுல நமக்கு என்ன பெருமை இருக்கும்?
அதே மாதிரி என்ன தான் அத்தை பவர் ஆப் அட்டர்னி எழுதி கொடுத்தாலும் என்னைக்கா
இருந்தாலும் உங்க அப்பா அதை சொல்லி குத்திக் காட்டாம இருக்க மாட்டார். நீங்க
சொந்தக் காலில் நின்னு ஒரு முழம் பூ வாங்கிக் கொடுத்தாலும் போதும்.”
“சரி அஞ்சலி”
“அது வரைக்கும் குழந்தை எல்லாம் வேண்டாமே”
“இது வரை நீ சொன்ன எல்லாத்தையும் நான் ஒத்துக்கிறேன். ஆனா
இது...”
“கல்யாணம் முடிஞ்ச உடனே குழந்தை பெத்துக்கிட்டா அது ஒரு பெரிய
பொறுப்புங்க.. குறைஞ்சது இரண்டு வருசம் போகட்டும். அதுக்குள்ள நம்ம இரண்டு பேரும்
நல்லபடியா செட்டில் ஆகிடுவோம். நம்ம குழந்தைக்கு உங்க அம்மா பணத்துலயோ, என்னோட
பிறந்த வீட்டு பணத்துலயோ செலவு செய்யாம நம்ம பணத்துல செலவு செய்ற அளவுக்கு நம்மளை
நாம வளர்த்துக்கணும்”
“என்ன அஞ்சலி? விட்டா சூர்ய
வம்சம் படத்துல வர்ற மாதிரி ஒரே பாட்டுல எல்லாமே நடக்கணும்னு சொல்லுவ போல...”
என்றான் விளையாட்டாய்.
“அந்த அளவுக்கு ஆசை இல்ல.. ஆனா நடந்தா நல்லா இருக்கும்ல...”
“சரி தான்..அஞ்சலி எனக்கு உன்கிட்டே ஒரு விஷயம் கேட்கணும்”
“உனக்கு மத்த பொண்ணுங்க மாதிரி கல்யாணம் ஆன பிறகு இப்படி
எல்லாம் இருக்கணும்னு ஏதாவது ஆசை இருக்குமே...”
“ஆமா.. அது இருந்துச்சு... அதுக்கென்ன இப்போ?”
“சொல்லேன்... என்னால முடிஞ்சதை எல்லாம் செய்றேன் நான்...”
“எப்போ கல்யாணம் முடிஞ்சு இத்தனை மாசத்துக்கு அப்புறமா?”
சாதாரண கேலி தான். ஆனால் சத்யனின் முகம் வாடி விட்டது.
“சொல்லேன் அஞ்சலி... ப்ளீஸ்!”
“வாரத்துல எல்லா நாளும் வேலை... வேலைன்னு அலைஞ்சாலும் சன்டே
மட்டும் வேற மாதிரி இருக்கணும்.”
“வேற மாதிரினா?”
“அன்னிக்கு ஒரு நாள் எனக்கு பெட் காபியில் ஆரம்பிச்சு எல்லாமே
நீங்க செஞ்சு தரணும். மாசத்துக்கு ஒரு முறை தியேட்டர்... ஒரு முறை கோவில்... ஒரு
நாள் எங்க வீடு... ஒரு நாள் நம்ம இரண்டு பேர் வீடும் சேர்ந்து எங்கேயாவது ட்ரிப்
போகணும்.”
“ம்ம்ம்... அப்புறம்”
“சஹானா அண்ணிக்கு குழந்தை பிறந்ததும்
கூட்டிட்டு வந்து நம்ம வீட்டுல வச்சுக்கணும். நாளைக்கு நமக்கு குழந்தை வந்த பிறகு
லீவ் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கே அண்ணன் வீட்டுக்கு போகணும். நம்ம இரண்டு வீட்டு குழந்தைங்களும் தான் நம்ம இரண்டு
வீட்டுக்கும் ராஜா ராணியா இருக்கணும்.”
“அடேங்கப்பா! வார்த்தைக்கு வார்த்தை
அண்ணன் வீடுன்னு தான் சொல்ற... அது அம்மா வீடு இல்லையா?” என்றான் லேசான கேலியுடன்.
“வீடு யார் பேர்ல இருக்குங்கிறதை
வச்சோ... யார் அதிகமா சம்பாதிக்காறாங்க அப்படிங்கிறத வச்சோ சொல்றதுனா நீங்க சொல்ற
மாதிரி சொல்லலாம். ஆனா என் மேல அதிக பாசம் வச்சு இருக்கிறது யாரு அப்படிங்கிற
அடிப்படையில் பார்த்தா அது அண்ணன் வீடு தான்.”
“ஹ்ம்ம்.. சரி தான்...அஞ்சலி
உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் டா...”
“சொல்லுங்க..”
“அது.. வந்து டாக்டர் நம்மள கொஞ்ச
நாள் கவனமா இருக்க சொன்னாங்க. அடுத்த குழந்தைக்கு குறைஞ்சது ஒரு மூணு மாசமாவது
ஆகட்டும்னு சொன்னாங்க. உன் உடம்புல இழந்த சத்துகள் மறுபடி உருவாக அந்த கேப்
தேவைப்படும்னு சொல்றாங்க...”
“அது தான் எனக்கே தெரியுமே”
“இல்ல... வந்து...”
“என்னங்க.. சொல்லுங்க...”
“இல்ல.. நானா உன்னை அப்ரோச் பண்ணா
கூட நீ கொஞ்சம் என்னை விட்டு ஒதுங்கி இருடா.. எனக்கு என்னவோ முன்னை விட இப்போ
உன்னை விட்டு தள்ளி இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று தயங்கி தயங்கி சொல்ல..
முத்துப் பற்கள் மின்ன மோகனமாய் புன்னகைத்தாள் அஞ்சலி.
“அது கஷ்டமாச்சே...”
“ஏன்? ஏன்?”
“எனக்கும் அதே நிலைமை தான் உங்களைப்
பார்க்கும் பொழுது” என்று சொல்லி விட்டு தளிர் விரல்களால் அவனது தோளை வருட...
வேகமாக அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டான் சத்யன்.
மெல்ல திரும்பி அவன் மனைவியின்
முகத்தைப் பார்த்தான். முன்னைக் காட்டிலும் அதிகமான புன்னகை அவள் முகத்தில்.
“ராட்சசி... ரொம்ப ஆபத்தானவடி நீ”
“என்ன சொன்னீங்க? காதுல விழல... கொஞ்சம் கிட்டே வந்து
சொல்லுங்க” விஷமப் புன்னகை அவள் முகத்தில்.
“வர மாட்டேன் போடி..” பிடறியை
வருடிக் கொண்டே சொன்னவன் அவளைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக வேகமாக அங்கிருந்து
நகர்ந்தான்.
சத்யன் நகர்ந்ததுமே அவள் முகத்தில்
இருந்த புன்னகை மெல்ல மறைந்து ஒரு வித தீவிரம் குடி கொண்டது.
இரவில் அருகில் படுத்து இருந்த சத்யன்
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டவள் முகத்தையும், உடலையும் மறைத்துக் கொண்டு அடையாளம்
தெரியாத வண்ணம் தயாராகி துரைசாமி இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள்.
காருக்குள் உட்கார்ந்து இருந்தால்
உறங்கி விடுவோமோ என்று நினைத்தோ என்னவோ இரவு முழுவதும் காருக்கு வெளியே அமர்வதை
வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் துரைசாமி.
தூரத்தில் இருந்து அவளது உருவம்
வருவதைப் பார்த்தவர் அசட்டையாகத் தான் இருந்தார்.
‘யாரோ... சரசு வீட்டுக்கு வர்றாங்க
போல...’
அவருக்கு அருகில் வந்தவள் மெல்ல
முகத்தை மறைத்து இருந்த துணியை மட்டும் விலக்க வெகுவாக அதிர்ந்து போனார் துரைசாமி.
“நீ!.. நீ!..”
“என்ன மாமனாரே... ரொம்ப திக்குது”
வெகுநாட்களுக்குப் பிறகு அவள் குரலில் கேலி மீண்டு இருந்ததை உணர்ந்து புருவம்
சுருக்கினார்.
“ஏய்! உன்னை யாரு இப்போ இங்கே வர
சொன்னது?”
“சும்மா உங்களைப் பார்த்து நலம்
விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தேன்.”
“என்ன கொழுப்பா? என்னவோ என் பிள்ளையை தனியா
கூட்டிட்டுப் போய்ட்டதால பெருசா சாதிச்சுட்ட திமிரா?”
“ச்சே! ச்சே! அந்த மாதிரி சின்ன
சின்ன விஷயத்துக்கு எல்லாம் நான் சந்தோசப்பட மாட்டேன்... இன்னும் செய்ய வேண்டியது
எவ்வளவு இருக்கு”
“என்ன பேச்செல்லாம் ஒரு தினுசா
இருக்கு.. கல்யாணம் ஆனதுல இருந்து புள்ளைப் பூச்சி மாதிரி இருந்த... இப்போ என்ன
பழையபடி திமிரெல்லாம் வந்துடுச்சு போல”
“ஓ... அப்படி வேற நினைப்பு இருக்கா
உங்களுக்கு? சும்மா கொஞ்ச நாளைக்கு அமைதியா இருந்தா எப்படி இருக்கும்னு பார்த்தேன்..
எனக்கு செட் ஆகவே இல்லை. அதான் பழையபடி மாறிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
“எப்படியோ போய்த் தொலை... இப்போ
எதுக்கு இங்கே வந்த?”
“உங்க பிள்ளை உங்க கிட்டே பேசுறது
இல்லை... உங்க மனைவியும் உங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கிறது இல்லை. அதுவுமில்லாம
வீட்டு மாப்பிள்ளையும், உங்க ஒரே பொண்ணும் கூட நீங்க போன் செஞ்சு பேச நினைச்சா
ஒழுங்கா பேசுறது இல்லையாமே?”
“ஆமா அதுக்கென்ன இப்ப? எல்லாரையும் எப்படி என் வழிக்கு
கொண்டு வர்றதுன்னு எனக்குத் தெரியும்”
“முயற்சி செய்ங்கனு சொல்லிட்டுப்
போகத் தான் வந்தேன்”
“எல்லாம் எனக்குத் தெரியும். உன்
வேலையைப் பார்த்துட்டு போ...”
“இல்ல மாமனாரே... உங்களுக்கு எதுவுமே
தெரியாது...” இருட்டில் ஒளிர்ந்த அவள் கண்களை கவனிக்கத் தவறினார் துரைசாமி.
“என்ன?”
“சீக்கிரமே உங்க மகனை சமாதானம் செய்ற
வழியைப் பாருங்க.. அவரை கூட்டிட்டு சென்னைக்கே போயிடலாம்னு யோசிக்கிறேன்”
“நீ சொன்னா என் புள்ளை வந்துடுவானா?”
“அடி மேல அடி வச்சா அம்மியும் நகரும்
மாமனாரே”
“என் மகன் ஒன்னும் அப்படிப்பட்டவன்
இல்லை.”
“அது போன வாரம் வரை... இப்போ நான்
என்ன சொன்னாலும் கேட்பார் தெரியுமா?”
“பார்க்கலாம்” என்றார் திமிராக.
“ஏதோ உங்க நல்லதுக்கு ஒரு வார்த்தை
சொல்லணும்னு தோணுச்சு. அதான் வந்தேன். இனி நீங்களாச்சு... உங்க திறமையும் ஆச்சு.
வரட்டுமா மாமனாரே”
“ஆனாலும் உனக்குத் திமிர் அதிகம்
தான். இல்லேன்னா ஊரே உறங்கின நேரத்துல இப்படி புருஷனுக்குத் தெரியாம வருவியா?”
“அவருக்குத் தெரிஞ்சா விட
மாட்டாரே... அப்புறம் எனக்குத் திமிரா? அது கொஞ்சம் இருக்குத் தான் மாமனாரே.ஆனா அதோட அளவு தான்
உங்களுக்குத் தெரியல” என்று சொன்னவள் கேலியாக உதட்டை வளைத்துக் கொண்டாள்.
‘இவ ஏதோ பொடி வச்சு பேசுற மாதிரி
இருக்கே’ என்று தனக்குள் அவர் யோசித்துக்
கொண்டிருக்க... மின்னல் வேகத்தில் நடந்து வீட்டிற்கு சென்று விட்டாள் அஞ்சலி.
அவள் முகத்தில் நினைத்ததை சாதிக்கப்
போகும் கர்வம் இருந்தது.
கருத்துரையிடுக