அத்தியாயம் 15
காலை எழுந்தது
முதல் வெண்ணிலா கொஞ்சம் பதற்றமாகவே இருந்தாள். அவளின் பயத்திற்கு காரணம் ஹரிஹரன்.
அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்ற கவலையே அவளுக்கு பதட்டத்தை தோற்றுவித்தது.
வெண்ணிலா இது வரை இந்த அளவிற்கு எதற்கும் பதட்டமானது கிடையாது.
இரவு முழுவதும்
சரியான தூக்கம் இல்லை அவளுக்கு.ஏனோ ஹரிஹரனின் கரங்கள் இன்னமும் தன் மேனியில்
ஊர்வது போன்ற எண்ணம் அவ்வபொழுது தோன்றி அவளை இம்சித்தது.உறங்கிக் கொண்டிருந்த
கட்டிலில் அருகில் ஹரிஹரன் படுத்துக் கொண்டு அவளை முத்தமிட நெருங்குவது போல ஒரு
பிரமை...இரவு முழுக்க ஹரிஹரனின் நினைவால் அவள் துளி கூட உறங்கவே இல்லை.
முதன் முறையாக
அவளுக்கு ஒருவரை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம். ஆனால் எல்லா குழப்பத்தையும்
தள்ளி வைத்து விட்டு காலை எழுந்ததும் கொஞ்ச நேரம் வீட்டில் சுற்றி விட்டு அவளுடைய
அப்பா வெளியே கிளம்பியதும் இவள் இந்த பக்கம் தன்னுடைய பட்டாளத்துடன் கிளம்பி
ஹரிஹரனின் தோப்பிற்கு வந்து விட்டாள். நேற்றைய நிகழ்விற்கு பிறகு ஏனோ தனியே
கிளம்பி போய் ஹரிஹரனை பார்க்க அவளுக்கு உள்ளுக்குள் லேசான தயக்கம்.
அங்கே
அவளுக்கும் முன்னே வந்து அங்கே காத்துக் கொண்டு நின்றான் ஹரிஹரன். ஹரிஹரனின் முகம்
கொள்ளா தவிப்பு இவளை கண்டதும் நொடியில் மறைந்தது. ஹரிஹரனின் முகத்தில் இருந்த பார்த்ததும் ஏதோ ஒரு வகையில் வெண்ணிலாவிற்கு
நிம்மதியாக இருந்தது. காவக்காரனுடன் அவளுடைய பட்டாளம் மாங்காய் பறித்து சாப்பிட
சென்று விட ஹரிஹரனும் வெண்ணிலாவும் தனித்து நின்றனர்.
“வெண்ணிலா நீ வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்... எங்கே என் மேல்
உள்ள கோபத்தில் நீ வராமல் இருந்து விடுவாயோனு நினைச்சேன். அதோ அங்கே ஒரு பெரிய
மரம் இருக்கிறது பார்... வா அங்கே போய் பேசலாம். அங்கே இருந்தால் மறைவாக இருக்கும்”
அதுவரை ஹரிஹரன்
பேசப் பேச கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக திரும்ப தொடங்கிய வெண்ணிலாவின் முகம் ‘மறைவான
இடம்’ என்ற வார்த்தையில் சுருங்கியது. ஏற்கனவே அவன் மீது தனக்கு கோபம் வரவில்லையே
எதனால் என்று யோசித்துக் கொண்டு இருக்கையில் ஹரிஹரனுடைய அந்த வார்த்தையால்
முன்தினம் அவன் நடந்து கொண்ட முறையை முயன்று நினைவில் கொண்டு வந்து அவனை கோபமாக
பார்த்தாள்.
அந்த நொடியில்
அவள் கண்களில் தெரிந்த கோபத்தில் தன்னுடைய தவறை உணர்ந்தான் ஹரிஹரன்.
“தப்பா எடுத்துக்க வேண்டாம் வெண்ணிலா... யாராவது உங்க ஊர்
ஆட்களுக்கு நாம் பேசப் போகும் விஷயம் காதில் விழுந்தால் உனக்கு ஏதாவது பிரச்சினை
வரலாம். அதற்குத்தான் அங்கே வர சொன்னேன். மத்தபடி வேறெந்த தவறான எண்ணமும் இல்லை” தாழ்மையான
குரலில் தவிப்புடன் பேசினான் ஹரிஹரன்.
ஹரிஹரன்
சொன்னதிலும் உண்மை இருப்பதால் அதற்கு மேலும் வாதாடாமல் அவன் சொன்ன இடத்திற்கு
அவனுக்கு முன்னால் நடந்து போய் சேர்ந்தாள். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று
புரியாமல் சில நிமிடம் தடுமாறியபடி நின்றான் ஹரிஹரன்.
இதை இன்று
பேசாமல் விட்டால் அது அதை விட பெரிய தவறாகி விடும். ஏற்கனவே வீட்டில் அங்கே
அவனுடைய தாயும் தந்தையும் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களுக்கு தெரியாமல் சொல்லாமல் கொள்ளாமல் வெண்ணிலாவிடம் மன்னிப்பு கேட்க
வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் அங்கே வந்து இருந்தான் ஹரிஹரன்.
தன்னுடைய தயக்கத்தை உடைத்துக் கொண்டு பேசத் தொடங்கினான் ஹரிஹரன்.
“நிலா... உன்னை முதன்முதலாக பார்த்ததில் இருந்தே என்
மனதுக்குள் ஒரு சலனம். ஆனால் நீ சின்னப் பெண், விளையாட்டுத் தனமானவள். தேவை இல்லாமல் என் மனதில் இருப்பதை
எல்லாம் சொல்லி படிக்கும் வயதில் உன் மனதில் சலனத்தை ஏற்படுத்த நான்
விரும்பவில்லை.
அதனால் உன்னை
விட்டு விலகி விட வேண்டும் என்று தான் முடிவு செய்து இருந்தேன். ஆ... ஆனால்
என்னுடைய மனத் தளைகள் எல்லாம் நேற்று திருவிழாவில் உற்சவ சிற்பமாய் உன்னை பார்த்த
பிறகு...” ஆழ்ந்த மூச்சை
வெளியேற்றி தன்னை தானே சமாதானம் செய்து கொண்டவன் பின் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“நான் அப்படி நடந்து கொண்டது தவறு தான் நிலா... அதற்கு நான்
எந்த விதமான சமாதானமும் சொல்லத் தயாராக இல்லை. அதற்கு உன்னிடம் மனதார மன்னிப்பு
கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அதை நான் தெரியாமல் செய்யவில்லை. தெரிந்து தான்
செய்தேன். அது நீ என்பதை தெரிந்து தான் செய்தேன்”
“உனக்கு பதில் அந்த நேரத்தில் அந்த கூரையின் கீழ் வேறு எந்த
பெண் வந்து நின்று இருந்தாலும் அப்பொழுதே அந்த இடத்தை விட்டு சென்று இருப்பேன்
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல். ஆனால் இனி எங்கே உன்னை பார்க்க முடியாமல்
போய் விடுவேனோ என்ற பரிதவிப்பில் தான் உன்னை பார்க்க ஆரம்பித்தேன்”
“பரிதவிப்பாக பார்க்க ஆரம்பித்த என்னுடைய பார்வை எந்த நொடி
காதலனுடைய பார்வையாக மாறியது என்று தெரியவில்லை நிலா. ஆனால் அந்த நொடி தான் நான்
என்னுடைய காதலை நன்றாக உணர்ந்து கொண்டேன்.
என்னுள் நீ நீக்கமற கலந்து விட்டாய் என்பதை. எனக்கு உன்னை திருமணம் செய்து கொள்ள
வேண்டும் நிலா. ஆயுள் முழுவதும் உன்னுடைய நிலா முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க
வேண்டும். உன் கண்களில் என் உருவத்தை இரவும் பகலும் மாறாது பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்.”
“காதலோடு உன்னை முத்தமிட வேண்டும், காமமின்றி உன்னை தழுவ வேண்டும், உனக்கு நான் சேயாக வேண்டும், எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் நீ தாயாக வேண்டும், உறங்குகையில்
உன்னுடைய முகத்தை நான் என்னுடைய நெஞ்சில் ஏந்தி ரசிக்க வேண்டும், செல்லமாய் என்
தலை கோத உன் கரங்கள் நீள வேண்டும், தவறு செய்யும் போது என் காதை பிடித்து நீ திருகிட வேண்டும், அலுத்து ஒய்ந்து
போய் நான் இருக்கும் போது சாய்ந்திட உன் மடி வேண்டும், உன்னோடு தனிமையில் வெகுதூரம் நடக்க வேண்டும். இன்னும்
சொல்வதானால் என் காதலால் உன்னை முழுதாக அலங்கரிக்க வேண்டும்” தீவிரத்தோடு
சொல்லிக் கொண்டே போனவன் வெண்ணிலாவின் பிரமித்த பார்வையில் கொஞ்சம் இயல்புக்கு
வந்தான்.
“என்ன நிலா பயந்துட்டியா? இது எல்லாம் எனக்கு நேற்று ஒரு நாள் இரவில் தோன்றியது
மட்டும் தான். அதற்கு முன் என் மனதில் இப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லை. அதற்கு
முன் எனக்கு இது போல ஆயிரம் எண்ணங்கள் வந்தாலும் கூட அதை எல்லாம் ஒதுக்கி வைத்து
விடுவேன். ஆனால் இப்பொழுது அதெல்லாம் முடியலை... என்ன நிலா நான் இவ்வளவு பேசுறேன்.
நீ ஒண்ணுமே சொல்ல மாட்டேன்கிற?”
“...”
“என் மீது கோபமா நிலா?”
“...”
“என்னை பிடிக்கலையா நிலா?” அவன் வார்த்தைகளில் அவனையும் மீறி பதட்டம் இருந்தது. அதை
வெண்ணிலா உணர்ந்து கொண்டாள். ஆனாலும் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள்
வெண்ணிலா.
உண்மையில்
வெண்ணிலா கொஞ்சம் பிரமித்துப் போய் இருந்தாள்.ஹரிஹரன் எந்த அளவிற்கு தன்னை
ஆழமாக நேசித்து இருந்தால் இப்படி எல்லாம்
பேச முடியும்.எவ்வளவு ஆசைகள் மனதில் வைத்து இருக்கிறார் என்று அவனுக்கு சாதகமாகவே
யோசித்து வந்தவள் சட்டென கோபத்துடன் மனசாட்சியை கடிந்து கொண்டாள்.
‘வெண்ணிலா
ஆயிரம் காரணம் இருந்தாலும் அவர் உன்னிடம் நடந்து கொண்ட முறை ரொம்ப தப்பு.உன்னோட
அனுமதி இல்லாம உன்னை அவர் எப்படி தொடலாம்?’என்றெல்லாம் கேள்வி கேட்டு அவளை
குடைந்து கொண்டு இருந்தது அவளது மனசாட்சி.
“இதோ பார் வெண்ணிலா. நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன்.
நான் இன்னும் என்னுடைய படிப்பை முடிக்கவில்லை. எப்படியும் ஒரு இரண்டு வருடத்தில்
முடித்து விடுவேன். அதன்பிறகு நான் உன்னை தேடி வருவேன் நிலா. உனக்கு என் மீது
நம்பிக்கை இருந்தால், என்னை பிடித்து இருந்தால் எனக்காக காத்திரு. நான் வருவேன். கண்டிப்பாக
நிச்சயம் வருவேன்” ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தி நிதானமாக உச்சரித்தான் ஹரிஹரன்.
“...”
“ஒருவேளை இடையில் உனக்கு என்னுடன் பேச தோன்றினால் இதில்
என்னுடைய வீட்டு முகவரியும் போன் நம்பரும் இருக்கு. நீ விரும்பினால் பேசலாம்” என்று
கூறிவிட்டு ஒரு கார்டை அவள் கைகளில் திணித்தான்.
“இந்த இரண்டு வருடங்களில் உனக்கு வேறு யா... யாரையேனும்
பிடித்து இருந்தால் நான் நிச்சயம் அதன் பிறகு உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நீ
என்னை நம்பலாம்”
“...”
“இப்பவே ஊருக்கு போகணும் நிலா! அம்மாவும் அப்பாவும் வீட்டில
கிளம்பிக்கிட்டு இருக்காங்க. எனக்கு இங்கேயே இருந்து விடணும்ன்னு ஆசை தான். ஆனால்
இங்கேயே இருந்தால் மேலும் உன்னை காயப்படுத்தி விடுவேனோ என்று பயமாக இருக்கு. அதனால்
தான் கிளம்பறேன்.என்னால உன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு வெறுமனே பார்த்துகிட்டே
மட்டும் இருக்க முடியாது நிலா...உன்னை இறுக்கமா கட்டி பிடிச்சு என்னோட அணைப்பிலேயே
வச்சு இருக்கணும் போல தோணுது..”
“...”
“நான் கிளம்ப போறேன் நிலா... இப்போ கூட என்னிடம் ஒரு
வார்த்தை பேச மாட்டியா” ஏக்கமாக அவள் முகத்தையே பார்த்தபடி பேசினான் ஹரிஹரன்.
“...”
“நிலா” அழுத்தமாக கூப்பிட்டான் ஹரிஹரன்.
மெல்ல
நிமிர்ந்து ஒரு முறை அவனை பார்த்தவள் மீண்டும் தலையை குனிந்து கொண்டாள். அந்த ஒரு
நிமிட பார்வையை மனதுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன் மெல்ல அவளிடம் பேச்சுக்
கொடுத்தான்.
“எனக்காக காத்துக் கொண்டு இரு நிலா... இருப்பாய் தானே” என்று சந்தேகமாக
கேட்டவன் அவளிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும் பெருமூச்சோடு மீண்டும் பேசத்
தொடங்கினான்.
“உனக்கு எப்போ எந்த உதவி தேவை என்றாலும் எனக்கு போன் செய்து
கேட்கலாம் நிலா. நான் வரேன்... கண்டிப்பா மறுபடி உனக்காக வருவேன் நிலா...” என்று சொன்னவன்
அங்கிருந்து கிளம்பி வெளியேறி விட்டான்.
அவன் அவ்வளவு
தூரம் பேசிய பிறகும் கூட அங்கே இருந்தவரை அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல்
நின்றவள் அவன் அவளை கடந்து சென்ற பிறகு அவன் போகும் திசையையே வெறித்துப்
பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கருத்துரையிடுக