அத்தியாயம் 16
“ரெண்டு வருஷம்
கழிச்சு மறுபடி
நீ வெண்ணிலாவை
போய் பார்த்தியா
ஹரி”
“இல்லைடா...
அதன் பிறகு நான்
அவளை பார்க்கல”
“அப்போ
உங்க ரெண்டு
பேருக்கும் திருமண
ஏற்பாடு யார்
மூலமா நடந்தது?”
“என்னோட படிப்பு முடிஞ்சதும் நானே ஏற்பாடு
செஞ்சேன்... அந்த
புரோக்கர் மூலமா.
அவரே வந்து
அம்மா அப்பாகிட்ட
பேசி அரேஞ்ச்
மேரேஜ் மாதிரி
பேச சொன்னேன்”
‘இதுல எல்லாம்
விவரம் தான்டா நீ ‘ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவன் அடுக்கடுக்காக கேள்விகளை
கேட்கத் தொடங்கினான்.
“உன்னோட
அப்பா அம்மாவிற்கு
இதில் முழு
சம்மதம் இருந்ததா?”
“ஹம்மம்...
அவங்களுக்கு விருப்பம்
தான்”
“ஒரு வேளை வெண்ணிலா வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம்
கிடைக்கவில்லையா?”
“அவங்களுக்கும் விருப்பம் தான் வசந்த்... ஒரு நல்ல நாளா பார்த்து வந்து பெண் பார்த்து விட்டு போக
சொல்லி இருந்தாங்க...”
“அப்புறம்
ஏன்டா உங்க
ரெண்டு பேருக்கும்
கல்யாணம் நடக்கலை?”
வசந்தின் குரலில்
ஆர்வத்தை விட
குழப்பம் அதிகமாக
இருந்தது.
“அவ
என்னை பிடிக்கலைன்னு
சொல்லிட்டா வசந்த்”
ஹரிஹரனின் வார்த்தைகளில்
அத்தனை துயரம்
இருந்தது. கண்களை
இறுக மூடி
தன் மனதை
நிலைப்படுத்த முயற்சி
செய்கிறான் என்பது
அசைந்தாடும் அவனது
கருவிழிகளில் தெரிந்தது.
“அவளுக்கு உன்னை பிடிக்கலைன்னு உனக்கு யார் சொன்னது ஹரி”
“அவள் தான்”
“உன்னை தேடி இங்கே நேரில் வந்து இருந்தாளா?”
“இல்லை வசந்த் எனக்கு போன் பண்ணி பேசினாள்”
“நீ தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்ச உடனே இப்படி சொன்னாளா?”
“இல்லை வசந்த்... நாங்க பெண்
கேட்டப்போ இன்னும் ஒரு மூணு மாசம் கழித்து நீங்க பொண்ணு பார்க்க வாங்கனு தான்
சொன்னாங்க...
மூணு மாசம் கழித்து தான் அவள் போன் பண்ணி சொன்னாள்”
“அது என்னடா மூணு மாச கணக்கு” வசந்திற்கு காரணம் புரியவில்லை.
“இல்லைடா...
மூணு மாசம் முடிந்த பிறகு தான் அவளுக்கு திருமணப் பேச்சு
எடுக்கணும்னு அவங்க குடும்ப ஜோசியர் சொல்லிட்டாராம். அதனால தான்”
“ஹரி எனக்கு ஒரு சந்தேகம்டா”
“சொல்லு வசந்த்”
“அவளுக்கு உன்னை பிடிக்கலேன்னா அதை உடனே சொல்லி இருக்கலாமே அதுக்கு ஏன் மூணு
மாசம் முடிஞ்சதும் அவ சொல்லணும்”
“எனக்கும் அது தோணுச்சு வசந்த். நான் அவகிட்ட அதே கேள்வியை கேட்டேன்”
“என்ன சொன்னாங்க”
“ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு இதில் விருப்பம் இல்லையாம்.
அவள் வீட்டில் இந்த திருமணத்தை நிறுத்த ரொம்ப முயற்சி
செய்தாளாம்.
ஆனா அவங்க வீட்டில் அது எதுவுமே வேலைக்கு ஆகலை போல.
அதான் கடைசியா எனக்கு போன் பண்ணி கல்யாணத்தை நிறுத்த சொன்னா”
“அவ சொன்னதும் நீயும் என்ன ஏதுன்னு விசாரிக்காம உடனே கல்யாணத்தை
நிறுத்திட்டியாக்கும்” கோபம் தெறித்தது வசந்தனின் வார்த்தையில்.
“வேற என்ன செய்ய சொல்ற வசந்த். அவளுக்கு என்னை பிடிக்கலையே.அவள் பிடிச்சு
இருக்குனு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அவளை நான் எந்த காரணத்திற்காகவும்
யாருக்காகவும் விட்டு கொடுத்து இருக்க மாட்டேன்.ஆனா அவளுக்கே என்னை பிடிக்கலைன்னு
ஆன பிறகு அதுக்கு அப்புறம் அவளை வற்புறுத்தி கல்யாணம் செஞ்சுக்க எனக்கு இஷ்டம்
இல்லை ” ஹரிஹரனின்
குரலில் இருந்த வருத்தத்தை வசந்தனால் உணர முடிந்தது.
“ஹரி சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம்.
உன்னை போல ஒருத்தனை எதுக்காக வெண்ணிலா மறுக்கனும்.
நல்லா படிச்சு இருக்க, நல்லா சம்பாதிக்கிற, இருந்தும் ஏன் உன்னை பிடிக்கலைன்னு சொன்னாங்கன்னு எனக்கு
புரியலை...”
“ஒருவேளை கடைசி நாள் நான் நடந்து கொண்ட முறை காரணமாக இருக்கலாம்”
“டேய் அவனவன் ஊரில் என்ன எல்லாமோ செய்றான்.
இதெல்லாம் ஒரு குத்தமா?”
“வசந்த் நீ அவ மனநிலையையும் கொஞ்சம் யோசிச்சு பார்க்கணும்.
அவ அப்போ ரொம்ப சின்ன பொண்ணு... என்ன தான் எனக்கு அவள் மேல காதல் இருந்தாலும் அவளிடம் நான்
நடந்து கொண்ட முறை தவறு தானே?”
“அதுக்காக அய்யா உடனே தியாகம் செஞ்சுட்டீங்களாக்கும்”
“அப்படி இல்லை வசந்த்... அவளுக்கு பிடிக்கலை அப்படிங்கிற போது விலகி போறது தான் முறை.அதை விட்டு
கட்டாயப்படுத்தி அவளை திருமணம் செஞ்சு அவளை கஷ்டப்படுத்துறதுல எனக்கு துளியும்
விருப்பம் இல்லை”
“ரொம்ப நல்லா இருக்கு ஹரி நீ செஞ்சது. ஒருவேளை வெண்ணிலா மேல உனக்கு இந்த அளவிற்கு காதல் இல்லைனா நீ செஞ்சது சரி...
ஆனா இப்போ உன் வாழ்க்கை இல்ல வீணாக்கி வச்சு இருக்க”
“என் வாழ்க்கை ஒண்ணும் வீண் ஆகலை வசந்த்”
“டேய் எனக்கு வர கோபத்துக்கு உன்னை நாலு சாத்து சாத்தனும் போல இருக்கு.
டேய் இப்படி பைத்தியக்காரன் மாதிரி இன்னும் அவளை மறக்க
முடியாம சுத்திக்கிட்டு இருக்கியே இது தான் நீ நல்லா இருக்கிற லட்சணமா?”
வசந்தால் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை.யாரோ ஒரு பெண்ணை
நினைத்துக் கொண்டு நண்பனின் வாழ்வு வீணாகிறதே என்ற கோபம் அவனின் வார்த்தைகளில்
வெளிவந்தது.
“எனக்கு அதில் எந்த விதமான வருத்தமும் இல்லை வசந்த்.
அவளை நினைச்சுக்கிட்டு இருக்கிறது எனக்கு சுகமான விஷயம்
தான்” துறவி போல பேசிய
ஹரிஹரனை முறைக்க மட்டும் தான் வசந்தால் முடிந்தது.
“நீ உன்னை பத்தி மட்டுமே யோசிக்கிற ஹரி.
உன் அப்பா அம்மாவை பத்தி நீ கொஞ்சம் கூட யோசிச்சு பார்க்கலை
இல்ல” பெற்றவர்களை
பற்றி பேசினால் நண்பன் இந்த நிலையை விட்டு வெளிவர கொஞ்சமேனும் முயற்சி செய்வான்
என்ற எண்ணத்தில் தான் வசந்த் அவர்களை பேச்சில் இழுத்தான்.முன்தினம் இந்த விஷயத்தை
அவர்களிடம் கொண்டு செல்வதாக கூறிய பொழுது ஹரிஹரன் அடைந்த பதட்டமும்,பயமும்
வசந்திற்கு நன்றாக நினைவில் இருந்தது.
“என்ன வசந்த் இப்படி பேசுற? என் நிலையில் இருந்து கொஞ்சம் யோசிச்சுப் பார்
வசந்த்”
“வேற எப்படி பேச சொல்ற?உனக்காக நான் இரண்டு வருஷம் வெளியே யாருக்கும் தெரியாம ட்ரீட்மெண்ட்
கொடுத்துக்கிட்டு இருக்கேன்.அதை மறந்திடாதே ஹரி.சரி சொல்லு...உனக்கு எப்போ இருந்து
இந்த கனவு வர ஆரம்பிச்சது?”
“வெண்ணிலா வீட்டில் பேசி மூணு மாசம் கழிச்சு கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிக்கலாம்னு
சொன்னாங்களே அப்போ இருந்து தான்” தயக்கத்துடன் இழுத்தான் ஹரிஹரன்.
“இதை பத்தி உன் வீட்டில் சொன்னியா?” வசந்தின் பார்வை ஹரிஹரனை ஊடுருவியது.
“இல்லை” தலையை கீழே
குனிந்து கொண்டான் ஹரிஹரன்.
“என்னடா நீ இப்படி இருக்கிற? எதையுமே உங்க வீட்டில் சொல்லாம இருந்து இருக்கிற? அவங்க உன்னுடைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்னு தெரியாம
இத்தனை நாளா எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பாங்க”
“என்னை வேற என்ன என்ன செய்ய சொல்ற வசந்த்? நான் இதை எல்லாம் அவங்ககிட்ட சொன்னா உடனே வெண்ணிலா கிட்ட
நாங்க போய் பேசி உன்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்கிறோம்ன்னு சொன்னா நான் என்ன செய்ய?”
“அப்படி செய்தால் கூட அதில் என்ன தப்பு இருக்கு ஹரி!பெத்தவங்களா அது அவங்க கடமையும் கூட...”
“அதனால் அவளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் வசந்த் அதனால் தான் சொல்றேன்”
“இதுல என்னடா பிரச்சினை வரப் போகுது?”
“இல்லைடா அவளுக்கு எப்பவுமே அவங்க அப்பானா ரொம்ப பயம். என்கிட்ட அவ போன் பண்ணி பேசினது கூட அவங்க அப்பாவுக்கு
தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்ல. அப்படி இருக்கும் போது என் வீட்டில் இருந்து யாராவது போய் இவளை கல்யாணத்திற்கு
சம்மதிக்க வைக்கிறேன் என்று அவளிடம் பேசி, அது அவளுடைய வீட்டில் தெரிந்து விட்டால் அதுக்கு அப்பறம்
அவளுக்கு ஏதாவது கெட்ட பேர் வந்துடுச்சுன்னா?”
“டேய்! எனக்கு நல்லா வாயில வருது... பேசாம இரு...
அவளுக்கு பிடிக்கலை, அவளுக்கு கஷ்டம் வரக் கூடாது, இப்படி எல்லாமே அவளுக்காக மட்டும் தான் பார்க்கிற?
உன்னை பத்தி ஏன் நீ கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்கிற”
“என்னை பத்தி யோசிக்க இதில ஒண்ணும் இல்லை வசந்த். அவளிடம் காதலை சொல்லி நான் கிளம்பி வந்த பிறகு இரவு பகல்
பாராமல் என்னுடைய படிப்பை படித்து முடித்தேன். அதுக்கு காரணம் அவள் மேல் நான் வைத்து இருந்த நேசம்.
அதுக்கு அப்புறம் அவ இந்த திருமணத்தை மறுத்து பேசினப்போ கூட
எனக்கு அவ மேல கோபம் வரல... நான் அவளை விட்டு பிரிந்து இருந்தால் தானே வருத்தப்படணும்.
நான் தினமும் அவ முகத்தில் தான் விழிக்கிறேன்.
இன்னும்...”
“ஹரி போதும் இத்தோட நிறுத்து... நீ செய்றது எல்லாம் உனக்கு வேணும்னா சந்தோசமா இருக்கலாம்.
ஆனா ஒரு நண்பனா என்னால நீ செய்ற பைத்தியக்காரத்தனத்தை
எல்லாம் ஒத்துக்க முடியாது”
“வசந்த் நீ என்னை எவ்வளவு வேணும்னா திட்டு அதுக்கு உனக்கு
உரிமை இருக்கு.
ஆனா என்னுடைய காதலை பத்தி ஒரு வார்த்தை கூட பேசாதே...
அதுக்கு உனக்கு உரிமை இல்லை” இறுகிய குரலில் பேசினான் ஹரிஹரன்.
“அந்த ஊருக்கு போய் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” முகத்தை திருப்பிக் கொண்டு பேசிய வசந்தின் குரல் கோபம்
மிச்சம் இருந்தது.
“ஊர் எல்லைக்கு வந்தாச்சு... இன்னும் கொஞ்ச தூரம் தான்”
“அந்த ஊருக்கு போனதும் முதல் வேலையா அந்த பொண்ணு இப்போ
கல்யாணம் செய்து எந்த ஊரில் இருக்கிறான்னு பார்த்து அவளை அவ குடும்பம் குழந்தைன்னு
வாழ்றதை உன்னை பார்க்க வச்சா தான் உனக்கு பிடிச்சு இருக்க பைத்தியம் தெளியும்”
“என்னுடைய இந்த பைத்தியத்தை யாராலும் தெளிய வைக்க முடியாது”
உறுதியுடன் தெளிவாக கூறினான் ஹரிஹரன்.
“அப்புறம் எதுக்குடா என்கிட்டே ட்ரீட்மென்ட் எடுத்துக்க வந்து என் உயிரை
வாங்குற?”
எரிச்சலுடன் கேட்டான் வசந்தன்.
“ஆரம்பத்தில் உன்கிட்ட வரும் போது எனக்கு மனசு ரொம்ப உறுத்திச்சு.
இப்படி யாரோ ஒருத்தனுக்கு மனைவியாக போற பொண்ணை பத்தி
இப்படிப்பட்ட எண்ணம் எல்லாம் எனக்கு வருவது சரி இல்லைன்னு எனக்கு தோணிச்சு அதனால
தான் உன்கிட்ட வந்தேன். ஆனால் இப்போ ... இந்த நிமிஷம் நீ சொல்ற மாதிரி அவளை வேற ஒருத்தரோட உடமைன்னு நினைச்சு மனசை தேத்திக்க என்னால முடியலை”
“என்னடா உளர்ற!” உறுத்து விழித்தான் வசந்த்
“நான் யாரோ ஒருத்தனின் மனைவியையா காதலிக்கிறேன். என் மனசில் இருப்பதெல்லாம் ஐந்து வருடத்திற்கு முன் நான்
பார்த்த என்னுடைய வெண்ணிலாவை தானே...”
“ஐயோ ஏன்டா குழப்பம் பண்ற” தலையை பிய்த்துக் கொண்டான் வசந்த்.
“இப்போ அவள் வேறு... வேறு ஒரு
குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் கூட நான் அவளை மறக்க மாட்டேன்.
என்னோட மனசில இருந்து அவளை நீக்குவதற்கு எந்த விதமான முயற்சியோ ஒத்துழைப்போ உனக்கு நான்
தர மாட்டேன்” தீர்க்கமாக
சொல்லி முடித்தான் ஹரிஹரன்.
அவள் வேறு ஒருவனின் மனைவி என்ற வார்த்தையை கூட
கவனமாக தவிர்த்த நண்பனின் மனநிலை தெளிவாக புரிய இதற்கு மேல் விட்டு வைத்தால்
தன்னுடைய ஆருயிர் நண்பனின் வாழ்க்கை வீணாகி விடும் என்பதை தெளிவாக உணர்ந்து
கொண்டான் வசந்தன்.
‘இனி இவனிடம் பேசிப் பயனில்லை'. நான் ஒரு மருத்துவன் என்பதை விட முதலில் இவனின் நண்பன். இவன் என்னை என்ன செய்தாலும் சரி அந்த வெண்ணிலாவை இவன்
மனதில் இருந்து துரத்தி அடிப்பது தான் தன்னுடைய முதல் வேலை என்ற முடிவுக்கு
வந்தவன், ஒரு மனநல மருத்துவனாக இதை எப்படி கையாள்வது என்று சிந்திக்க
தொடங்கினான்.
கருத்துரையிடுக