அத்தியாயம் 18
ஊரில் இருந்து
திரும்பியதில் இருந்தே சோர்வாகவே இருந்தான் ஹரிஹரன். தாயிடமோ தந்தையிடமோ ஒரு
வார்த்தை கூட பேசாமல் அறைக்குள்ளே அடைந்து கிடந்தான். முதல் நாள் அப்படி அவன்
இருந்ததை வீட்டில் யாருமே தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. வெளியூர் போய் வந்ததால்
ஏற்பட்ட பயண அசதியாக இருக்கும் என்றே எண்ணினர்.
இரண்டாவது நாள்
காலையில் மகனுக்கு குடிப்பதற்காக காபி கொண்டு போன ஈஸ்வரி மகன் இருந்த கோலத்தை
கண்டு அதிர்ந்து போனார். விடிய விடிய தூங்காமல் இருந்ததன் அறிகுறியாக கண்களை
சுற்றி கருவளையம் இருக்க பார்வை எங்கோ தொலை தூரத்தில் வெறித்துக் கொண்டு இருந்தது.
தாய்க்கு
தெரியாதா மகனைப் பற்றி. கண்டிப்பாக இது பயணக் களைப்பு அல்ல என்பதை உணர்ந்தவர்
மெல்ல மகனின் அருகே சென்று மகனின் தோளை தட்டினார். ஏதோ கனவில் இருந்து கலைந்தவன்
போல திடுக்கிட்டு விழித்தவன் தாயை கண்டதும் தாயின் இடுப்போடு கரங்களை கோர்த்து
அவரது வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
இது ஹரிஹரனின்
சிறு வயது பழக்கம். ஹரிஹரன் மிகுந்த மகிழ்ச்சியிலோ அல்லது துயரத்திலோ இருக்கும்
போது எல்லாம் தாயின் மடியில் இப்படி புதைந்து கொள்வது வழக்கம். மகனின் முக
வாட்டத்தை வைத்து இதன் பின்னணி மகிழ்ச்சி அல்ல என்பதை உணர்ந்தவர், எதுவும் பேசாமல்
மகனின் தலையை இதமாக கோதி விட்டார். சற்று நேரம் பொறுத்து மகனை எழுப்பி கட்டாயப்
படுத்தி காபியை குடிக்க வைத்தவர் மகனை அதட்டி உருட்டி குளியல் அறைக்கு அனுப்பி
விட்டு யோசனையோடு கீழே இறங்கி வந்தார்.
மகன் குளித்து
முடித்து கீழே வருவதற்குள் கணவனிடம் தான் மகனிடம் கண்ட மாறுதலை கூற விஸ்வநாதனின்
முகமோ யோசனையை தத்தெடுத்தது. ஹரிஹரன் குளித்து முடித்து தயாராகி உணவு மேஜையில்
சாப்பிட அமரவும் ஈஸ்வரி மௌனமாக கணவருக்கும் மகனுக்கும் உணவு பரிமாறத் தொடங்கினார்.
மகனின் அமைதி
மனதை உறுத்தவே தன்னுடைய மௌனத்தை கலைத்து மகனுடன் பேசத் தொடங்கினார் விஸ்வநாதன்” சிவாவை பார்க்க
போய் இருந்தியே எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா ஹரி”
தந்தை வெகுநாள்
கழித்து தன்னிடம் இயல்பாக பேசியதும் தன்னுடைய துக்கத்தை எல்லாம் உள்ளுக்குள்
மறைத்துக் கொண்டு வரவழைத்த மகிழ்ச்சியுடன் தந்தையிடம் பேச ஆரம்பித்தான் ஹரிஹரன்.
“அவனோட கணக்கு வழக்குல கொஞ்சம் குளறுபடி நடந்து இருக்கு டாடி.அதை சரி பார்க்கத் தான்
என்னை வர சொல்லி இருந்தான். நானும் அன்னைக்கு மதியமே எல்லாத்தையும் பார்த்து
முடிச்சுட்டு அப்படியே அம்பாசமுத்திரம் வரை போய்ட்டு வந்தேன் டாடி” பேச்சு
சுவாரசியத்தில் தந்தையிடம் உளறி விட்டதை உணர்ந்தவன் உதட்டைக் கடித்து பேச்சை
நிறுத்திக் கொண்டான்.
மகனின்
முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவர் அம்பாசமுத்திரம் என்ற
வார்த்தையில் அவன் தடுமாறுவதையும் கவனித்தவர் பார்வையை மேலும் கூர்மையாக்க மகன் எதையோ
தன்னிடம் மறைக்க முயல்வதையும் கண்டு
கொண்டார்.
இப்பொழுது
எப்படி இதை சமாளிப்பது என்று ஹரிஹரன் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவனது போன்
ஒலி எழுப்பி அவனை காப்பாற்றியது. இது தான் சாக்கென்று போனை எடுத்து காதில்
வைத்தவன் போன் பேசுவது போல அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
போனில்
எதிர்புறம் பேசியது ஹரிஹரனின் நண்பன் சிவா. அவன் சொல்லிய விஷயங்களை உள் வாங்கியவன்
நண்பனுக்கு இந்த நேரத்தில் தன்னுடைய உதவி தேவை என்பதை உணர்ந்து தான் உடனே அங்கு
வருவதாக கூறியவன் தாய் தந்தையிடம் சொல்லிக் கொண்டு உடனே அங்கிருந்து கிளம்பி
விட்டான். தடுக்க முயன்ற மனைவியை கண்ணாலேயே அமைதிப் படுத்திய விஸ்வநாதன் வேகமாக
கிளம்பி செல்லும் மகனையே பார்வையால் தொடர்ந்தார்.
காரை வழக்கம்
போல மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்ற ஹரிஹரன் அந்த ஊரின் பிரபலமான ஹோட்டலில் தங்கி
இருக்கும் சிவாவை அவனுடைய அறையில் போய் சந்தித்தான். அங்கே அவனுக்கு முன்னே
ஏற்கனவே வசந்த்தும் வந்து இருப்பதை கண்டவன் வசந்த்திற்கு ஒரு தலை அசைப்பை
தந்துவிட்டு நண்பனை பார்த்து புன்னகைத்தான். பதிலுக்கு புன்னகைக்காமல் இருந்த
நண்பனின் முக வாட்டத்தை மனதில் குறித்துக் கொண்டவன் தன்னுடைய கவலைகளை ஒதுக்கி
வைத்து விட்டு சிவாவுடன் பேச ஆரம்பித்தான்.
“யார் அந்த சிடியை கொடுத்து அனுப்பியது சிவா?”
“தெரியலை ஹரி. என்னுடைய வீட்டு தோட்டத்தில் கீழே கிடந்தது
என்று தோட்டக்காரன் எடுத்து வந்து கொடுத்தான். நீ வந்துட்டு போன அன்னைக்கு
இராத்திரி என்னிடம் கொடுத்தான். நீ ஆடிட் முடித்த பிறகு என்னிடம் சில கேள்வி
கேட்டு இருந்தே இல்லை. அதை பத்தி நான் விசாரிக்கும் போதே எனக்கு லேசா கொஞ்சம்
சந்தேகம் வந்துச்சு. இந்த சிடியை நேற்று இராத்திரி போட்டு கேட்டதும் எனக்கு
கன்பார்ம் ஆச்சு”
“எங்கே அதை உன்னுடைய லேப்டாப்பில் ப்ளே பண்ணு” என்றபடி
சிவாவுக்கு எதிரில் இருந்த சோபாவில் ஹரிஹரனும் வசந்த்தும் அமர்ந்தனர். சிவா
தன்னுடைய லேப்டாப்பை எடுத்து அந்த சிடியை ப்ளே பண்ண தொடங்க, நண்பர்கள்
இருவரும் கூர்ந்து கவனிக்க தொடங்கினர்.
“என்ன ஒரு வழியாய் இப்போ தான் கணக்கு வழக்கை எல்லாம் சரிபார்க்க
தோணுச்சா? ஆடிட்டர்
எல்லாம் வந்தார் போல.யார் வந்தாலும் சரி உன்னுடைய கண் முன்னாடியே உன்னுடைய சொத்து
எல்லாம் அழிவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.நான் நினைச்சு இருந்தால்
இன்னும் கொஞ்ச நாள் இந்த விஷயம் எல்லாம் உன்னுடைய கவனத்திற்கு வராத மாதிரி செஞ்சு
இருக்க முடியும்.
ஆனா அதை நான்
விரும்பலை.உன்னோட எல்லா சொத்தும் அழியறதை
உன் கண் முன்னாடியே நீ பார்த்தாலும்
எப்படி தடுக்கிறதுன்னு தெரியாம நீ துடியா துடிக்கணும்.கடைசியில் எல்லாத்தையும் இழந்து
விட்டு நீயும் உன்னுடைய குடும்பமும் நடுத்தெருவில் நிற்கத்தான் போறீங்க.
அதை நான்
என்னுடைய கண்ணார ரசிக்கத் தான் போகிறேன். இது ஏதோ விளையாட்டுக்காக செய்தது
அப்படின்னு நினைத்தால் நஷ்டம் எனக்கில்லை” என்று பேசிய அந்த ஆடியோ முடிந்து விட்டது.
சிவாவும், வசந்த்தும் அதை
கேட்டு குழம்பி போய் இருக்க ஹரிஹரனோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான். அவன்
இருந்த நிலையை பார்த்த வசந்த் பதறிப் போய் அவனது தோளை தொட்டு உலுக்க, வழி மறந்த
குழந்தை போல காட்சி அளித்தான் ஹரிஹரன். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர்
நிற்காமல் வழிந்தது.
“டேய் ஹரி... என்னடா? என்ன ஆச்சு?” என்று நண்பனை போட்டு உலுக்க வழியும் கண்ணீரை துடைக்க கூட
தோன்றாமல் விக்கித்துப் போய் நின்ற
ஹரிஹரன் ,வசந்த்தை பார்த்து திக்கித் திணறிப் பேசினான்.
“ வ... வசந்த்... இது... இந்த குரல்... இப்போ பேசியது
நிலா... என்னோட வெண்ணிலா வசந்த்” என்று கூறியவனின் கண்களில் இருந்து மேலும் கண்ணீர் வழிந்த
வண்ணம் இருந்தது.
கருத்துரையிடுக