முழுமதியாகுமோ என் வெண்ணிலா 2

 அண்ணனிடம் பேசியபடியே வந்தவள் வேண்டுமென்றே பார்த்திபன் தங்களை நெருங்கும் முன்  அவனை ஒதுக்கி விட்டு மற்றவர்களுக்கு சந்தேகம் வராதபடி தோட்டத்திற்குள் நுழைந்து கொண்டாள்.அப்படி அவள் செய்தது பார்த்திபனின் முகத்தை ஒரு நொடி வாட வைத்தாலும் உடனே முகத்தை முயன்று சரி செய்து கொண்டவன் தன்னுடைய முதல் தங்கை சுகன்யாவையும்,அவளது கணவர் பாஸ்கரனையும் அன்புடன் வரவேற்று உபசரித்து வீட்டுக்குள் அழைத்து சென்று அவர்களை தங்குவதற்கு ஏற்பாடு செய்தவன் அடுத்த நொடி மின்னலென தோட்டத்திற்குள் நுழைந்து இருந்தான்.

விசேஷ வீடு... வீடு முழுக்க சொந்தங்கள்... யார் வேண்டுமானாலும் தங்களைப் பார்த்து விடக் கூடும் என்ற எண்ணம் அவனை ஒரு நொடி கூட தடுக்கவில்லை.எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறான்.அதுவும் திட்டமிட்டு அவளை இங்கே வர செய்து விட்டு அவளைப் பார்க்காமலோ,தனித்து அவளுடன் பேசாமலோ இருப்பது அவனால் ஆகாத காரியம்.

மாலை நேரத்தில் தோட்டத்தில் இருந்த மலர்கள் அனைத்தும் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்க அந்த அத்தனை மலர்களின் அழகையும் தன்னுள்ளே நிரப்பிக் கொண்டவள் போல கள்ளமில்லா அழகுடன் பூக்களை ரசித்துக் கொண்டு இருந்தவளைப் பார்த்தவனின் உள்ளம் காதலில் கரைந்து அவளது காலடியை தஞ்சமடைந்தது.

“குட்டிமா”தன்னுடைய மொத்த காதலையும் அவனது குரல் மூலம் அவளிடம் தெரிவிக்க எண்ணினானோ என்னவோ அவன் குரல் காந்தமாய் அவளை ஈர்க்க முயன்றது.

அவனது குரல் கேட்டு ஒரு நிமிடம் அசைவற்று நின்றவள் உடல் விறைப்புற, அவன் இருந்த திசைப் பக்கம் கூட திரும்பாமல் வேகமாக எதிர் திசையில் நடக்க முயல சட்டென அவளின் பாதையை மறித்து நின்றான் பார்த்திபன்.

“எத்தனை வருஷம் கழிச்சு உன்னைப் பார்க்கிறேன்...ஆளே அடையாளம் தெரியலை...”அவள் முகத்தை மொய்த்தது அவன் பார்வை.

“...”

“இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் இங்கே வர வழி தெரிந்ததா?”அவன் குரலில் லேசான கொஞ்சல் இருந்ததைக் கண்டவள் வெறுப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது பார்வைக்கு அர்த்தம் அவனுக்கு புரியாமல் இல்லை.ஒரு சில நிமிடங்கள் முகம் கன்ற அவளின் நேர்கொண்ட பார்வையை எதிர்நோக்க முடியாமல் தயங்கியவன்  பின் முகத்தை நேராக  நிமிர்த்தி அவள் முகத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டான்.

நான்கு வருடங்களுக்கு முன் அவள் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அவளை அவன் முதன்முதலாக பார்த்தது.அதற்குப் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறான்.முன்பு முகத்தில் இருந்த அந்த குழந்தைத்தனம் முற்றிலுமாக மாறி இப்பொழுது தெளிவாகவும்,தீர்க்கமான பார்வையுடனும் இருந்தது அவள் முகம்.

அவள் முகத்தையே வைத்த கண் வாங்காமல் ரசிக்கத் தொடங்கினான் பார்த்திபன்.

கருவண்டு விழிகள் அவனைப் பார்க்காமல் அவன் இருந்த திசைக்கு எதிர்ப்புறம் இருக்க,பிறை போன்ற நெற்றியும்,பளபளப்பாக இருந்த கன்னங்களும் ,பாவையவளின் அதரங்களும் அவனை முத்தமிட சொல்லித் தூண்ட,அதை கட்டுப்படுத்தும் வகை தெரியாமல் திணறத் தொடங்கினான் பார்த்திபன்.

அவளின் பார்வை அவன் மீது இல்லாமல் இருந்தாலும் சில நொடிகள் முன்பு பார்த்த அவனின் உருவம் அவளது கண்ணை விட்டு அகல மறுத்தது.நான்கு வருடங்களுக்கு முன்பு அப்பொழுது தான் கல்லூரிப் படிப்பை முடித்து இருந்த பார்த்திபனின் உருவத்திற்கும் இப்பொழுது அவள் கண் முன்னே வேஷ்டி சட்டையில் ஆண்மையின் கம்பீரத்துடன் நிற்கும் பார்த்திபனுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருந்ததை அவளால் உணர முடிந்தது.அதற்கும் மேல் அவன் கண்களில் வழிந்த காதல்...அது அவளை தடுமாற செய்தது.

காதல்...வெறும் ஊற்றாக இருந்தால் அவளால் அசட்டை செய்திருக்க முடியும்...ஆனால் அவன் கண்களிலோ சமுத்திரத்தை மிஞ்சக்கூடிய அளவில் காதல்..அதை அவளால் சுலபமாக ஒதுக்கித் தள்ள முடியவில்லை,முயன்று அவன் கண்களிலிருந்து பார்வையை வேறு புறம் திருப்பினாள்.

‘யாராவது வந்து இப்படி இரண்டு பேரும் தனியா தோட்டத்தில் பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்தா என்ன ஆகுறது?’ என்று நினைத்தவள் அவனை சுற்றிக் கொண்டு போக முயல அவளை மீண்டும் தடுத்து நிறுத்தியது அவன் குரல்.

“குட்டிமா”

“அப்படி கூப்பிடாதீங்க...”அவள் குரலும்,உடலும் சேர்ந்து நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

“ஏன் குட்டிமா”அவள் தன்னிடம் பேசி விட்ட மகிழ்ச்சியில் இருந்தான் அவன்.

“எங்க அப்பா மட்டும் தான் அப்படி என்னை கூப்பிடுவார்...என் மேலே பாசம் வச்சு இருந்தவர் கூப்பிட்ட வார்த்தை அது...அதை நீங்க பயன்படுத்துறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை.”

முகத்தில் அடி வாங்கியதைப் போல உணர்ந்தவன் அப்பொழுது கூட அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

“கடைசியா நான் உன்னைப் பார்த்தப்போ உன்கிட்டே ஒரு கேள்வி கேட்டேன்...அதைப் பத்தி ஏதாவது யோசிச்சியா?”

“யோசிக்கிற அளவுக்கு அது எனக்கு முக்கியமான விஷயமா படலை...அதனால அதைப் பத்தி எல்லாம் நான் நினைக்கலை.”என்று நறுக்குத் தெறித்தார் போல பேசியவள் தொடர்ந்து அவனை கடந்து சென்று விட அவன் தான் அந்த இடத்திலேயே அப்படியே நின்று விட்டான்.

‘ஹம்...எல்லாம் உன்னோட தப்பு தானே பார்த்திபா...இதை நீ தான் சரி செஞ்சு ஆகணும்”என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவன் வேகமாக வீட்டுக்குள் நுழைந்தான்.

அவனுக்கு முன்பாக உள்ளே வந்த பௌர்ணமி நேராக மெய்யாத்தாவிடம் சென்று பட்டும் படாமலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு தனக்காக ஒதுக்கப்பட்டு இருந்த அறைக்குள் புகுந்து கொள்ள பார்த்திபனின் பார்வையோ ஏக்கத்தோடு அவளையே தொடர்ந்தது.

Post a Comment

புதியது பழையவை