முழுமதியாகுமோ என் வெண்ணிலா Tamil Novel 1

 

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

வீட்டு வாசலில் கட்டி இருந்த மைக் செட்டில் இருந்து பாடல்கள் ஒலிக்க, அதையும் தாண்டி தன்னுடைய வெண்கல குரலில் வீடே அதிரும்படி கத்தினார் மெய்யாத்தா.

“அடேய் ராஜா ... தாம்பூலப் பையில் போட சாத்துக்குடி பழம் போடணும்னு சொல்லி இருந்தேனே வந்துடுச்சா?”

“பார்த்திபன் கிட்ட சொல்லி இருக்கேன் ஆத்தா.இந்நேரம் வந்து இறங்கி இருக்கும்”என்று பவ்யமாக பதில் அளித்தபடி அங்கே பிரசன்னமானார் அவரின் அன்பு மகன் ராஜன்.

“சமையல்காரனுக்கு சொல்லி விட்டியா?” வெற்றிலையை வாயில் போட்டு அதக்கிக் கொண்டே சாய்வு நாற்காலியில் தோரணையுடன் அமர்ந்து கொண்டே அவர் கேட்க ,அவரின் காலுக்கு கீழே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார் ராஜன்.

“பார்த்திபன் கிட்டே சொல்லி இருக்கேன் ஆத்தா”

“ஏம்மா செல்வி...கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க தங்குறதுக்கு நம்ம தோப்பு வீட்டை சுத்தம் பண்ணி வைக்க சொன்னேனே...செஞ்சாச்சா?”

“பார்த்தி கிட்டே நேத்தே சொல்லிட்டேன் அத்தை...இந்நேரம் எல்லாத்தையும் முடிச்சு இருப்பான்” கொண்டையில் மல்லிகைப் பூவை சொருகியபடியே அதிர்ந்து பேசாமல் மாமியாரின் முன் நின்று அமைதியாக பதில் சொன்னார் செல்வி.

“எல்லா வேலையும் அவன் தலையிலேயே கட்டிட்டியா?வீட்டுக்கு மூத்த பிள்ளை...அவன் ஒத்தையா எவ்வளவு வேலையைத் தான் பார்ப்பான்?”

“அதெல்லாம் என் பிள்ளை சரியா செஞ்சுடுவான் ஆத்தா”பூரிப்புடன் பதில் சொன்னார் ராஜன்.

“அவன் சரியா செஞ்சுடுவான்னு எனக்கு தெரியாதா?... கட்டிக்கிட்டு வாடான்னு சொன்னா.. வெட்டிக்கிட்டு வர்றவன்டா என் பேரன்” மெய்யாத்தாவின் முகத்தில் பேரனை எண்ணி பெருமிதம் வந்து போனது.

“இந்த பாருடா ராஜா...என்ன தான் நம்ம வீட்டு பொண்ணை சொந்த மாமன் மகனுக்கே கொடுத்தாலும் உபசரிப்புல எந்த குறையும் இருக்கக் கூடாது...புரிஞ்சுதா...நேத்து வரைக்கும் தான் அவர் உனக்கு மச்சான்... நாளையில் இருந்து அவர் உனக்கு சம்பந்தி...புரிஞ்சுதா?”

“சரிங்க ஆத்தா”என்று தலையாட்டிய ராஜன் எப்பொழுதும் தாய் பேச்சை தட்டாத பிள்ளை...அவரது மனைவியோ அவரை விடவும் ஒரு படி மேலே...மாமியாருக்கு முன் கொஞ்சமும் குரலை உயர்த்தி பேச மாட்டார்.மாமியார் சொன்னால் என்ன ஏது என்று கூட கேட்காமல் உடனடியாக செய்து முடித்து விடுவார்.

அந்த வீட்டில் அவரை எதிர்த்து பேசவோ,மறுத்து பேசவோ ஒரு ஆள் உண்டு என்றால் அது பார்த்திபன் மட்டுமே...ஊரே எதிர்த்து நின்றாலும் தனியாக எதிர்கொள்ளும் அவரோ பேரனின் செயல்களை மட்டும் ஒரு நாளும் கேள்வி கேட்டதே கிடையாது.அஅந்த அளவுக்கு நம்பிக்கையும்,பாசமும் பார்த்திபனின் மீது அவருக்கு.

கிராமத்து மக்களால் பெரிய வீடு என்று அன்போடு அழைக்கப்படும் அந்த வீடு முழுக்க கல்யாண வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்க,அந்த வீட்டின் மூத்த மகன் பார்த்திபனோ அந்த நேரத்தில் தன்னுடைய அறையின் ஜன்னல் வழி வீட்டு வாசலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் கண்கள் அலை பாய்ந்த வண்ணம் வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தது.கல்யாண வீட்டிற்கே உரிய பரபரப்புடன் ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்க அந்தக் கூட்டங்களில் யாரையோ ஆவலாக தேடித்தேடிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

‘அவள் வருவாளா?’அவன் கண்களை வாசல் வழியாக உள்ளே வந்த ஒவ்வொருவரையும் உற்று உற்றுப் பார்த்து ஏமாந்து போனது.

‘ஒருவேளை அவள் வரவே மாட்டாளோ...இல்லை...நிச்சயம் அவள் வருவாள்...இதற்கு முன்பு நடந்த மாதிரி அவள் மறுத்து விடக்கூடாது என்று தானே இந்த முறை இவ்வளவு ஏற்பாடு செய்து இருக்கிறேன்.

இதற்கு முன் அவளது அண்ணன் பாஸ்கரை  அனுப்பி வர சொன்னது போல இல்லாமல் இந்த முறை என்னோட தங்கச்சி சுகன்யாவை அனுப்பி வைத்து இருக்கிறேன்.அண்ணனிடம் சாக்கு சொல்லி வராமல் இருந்தது போல சுகன்யாவிடம் இருந்து தப்பிக்க முடியாது’என்று எண்ணியவனின் பார்வை மீண்டும் ஆவலுடன் வாசலில் படிந்தது.

வெகுநேரம் அங்கேயே இருந்தவனின் கண்கள் சட்டென்று ஒளி பெற்றது வீட்டின் வாசலில் வந்து நின்ற காரைப் பார்த்து.காரின் முன்பக்கத்தில் இருந்து பாஸ்கர் இறங்கியதும்,பின் பக்கத்தில் இருந்து சுகன்யாவும் இறங்கி விட, முன்பை விட அதிக ஆவலுடனும்,கூர்மையுடனும் அவன் கண்கள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது.

வெண்டைப்பிஞ்சு போன்ற அழகிய விரல்கள் காரின் கைப்பிடியில் பதிந்து ஒரு நிமிடம் லேசான தயக்கத்திற்கு பிறகு கார் கதவை திறந்து கொண்டு இறங்குவதைக் கண்டதும் அவனுக்குத் தெரிந்து போனது அவள் வந்து விட்டாள் என்பது. வெண் தந்தத்தை மிஞ்சும் அழகுடன் ஒரு ஜோடி பாதங்கள் காரில் இருந்து வெளியே அடி எடுத்து வைப்பதைப் பார்த்த பார்த்திபனின் உடலில் மெல்லியதோர் சிலிர்ப்பு ஏற்ப்பட்டது.

நொடியும் தாமதிக்காமல் மின்னலென வாசலை நோக்கி விரைந்தான் பார்த்திபன்.எதிரில் வந்த யார் உருவமும் அவன் கண்களுக்கு தெரியவில்லை. அவன் பார்வை முழுக்க தவிப்புடன் அவளிடத்தில் மட்டுமே நிலைத்து இருக்க,அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தவண்ணம் அவர்களை நெருங்கினான்.

நான்கு வருடத்தில் அவளின் அழகு மேலும் பன்மடங்காக அதிகரித்து இருந்தது.குத்துவிளக்கைப் போன்ற தெய்வீக அழகுடன் இருந்தவளை கண்களில் நிரப்பிக் கொண்டான்.வெகுதூரம் பயணம் செய்து வந்ததால் லேசான களைப்பு மட்டுமே இருக்க,அந்த களைப்பையும் தாண்டிய அழகு முன்பை விட அதிகமாகவே இப்பொழுது அவனை ஈர்த்தது.

 

முகம் மலர்ந்த சிரிப்புடன் தன்னுடைய அண்ணன் பாஸ்கரனிடம் பேசிக் கொண்டே வந்தவள் எதேச்சையாக விழி உயர்த்திப் பார்க்க எதிரில் முகம் முழுக்க பூரிப்புடன் தங்களை நோக்கி வந்த பார்த்திபனின் கம்பீர உருவத்தை கண்டதும் அவளது சிரிப்பு அப்படியே துணி வைத்து துடைத்தது போல நின்று போனது.

Post a Comment

புதியது பழையவை