Kadhal Kathakali Tamil Novels 13

 



அத்தியாயம் 13

அன்றைய பொழுதின் துவக்கத்தில் எப்பொழுதும் போல ஷூட்டிங் வேலைகள் அது பாட்டிற்கு நடந்து கொண்டு இருந்தது.சத்யநாதன் எப்பொழுதும் சரியாக பதினோரு மணி அளவில் வந்து விடுவான்.அன்று ஏனோ கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்தான்.

 

சத்யனின் முகத்தில் ஏதோ ஒரு யோசனை காணப்பட்டது.சத்யன் அபிமன்யுவிடம் ஏதோ கேட்க வருவதும் பின்பு தன்னை சமாளித்துக்கொண்டு எதையும் பேசாமல் நகருவதுமாக இருந்தான்.இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போல நடந்து கொண்டான் அபிமன்யு.

 

ஷூட்டிங் பிரேக் சமயத்தில் சத்யனின் அருகில் வந்து அமர்ந்து துரைசாமி அய்யாவின் வீட்டில் இருந்து வந்த இளநீரை இருவரும் குடித்துக் கொண்டு இருந்தனர்.தொண்டையை லேசாக செறுமிக் கொண்டு பேச ஆரம்பித்தான் சத்யநாதன்.

 

“இன்னையோட ஷூட்டிங் முடியுதா  அபி சார்...எல்லாரும் கிளம்பி விடுவீங்களா” என்று முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு கேட்டான்.

 

‘காலக் கொடுமை.... காதலி கொடுக்க வேண்டிய ரியாக்ஷன் எல்லாம் இவன் கொடுக்கறானே’ என்று மனதுக்குள் நொந்தவன் சத்யனிடம் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

 

“ஷூட்டிங் இன்றோடு முடியுது சத்யா....ஆனால் நாளை ஒரு நாள் இருந்து உங்கள் ஊரை சுற்றி பார்த்துவிட்டு நாளை மறுநாள் தான் கிளம்புவதாக இருக்கிறோம்.”

“அப்படியா... ரொம்ப சந்தோஷம்...இன்னும் ஒருநாள் கூட இருக்க போறீங்களா”என்று மகிழ்ந்து போனான் சத்யன்.அவனின் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி தெரிந்தது.

‘நான் ஊருக்கு போகாமல் இங்கேயே இருப்பதில் மச்சானுக்கு இத்தனை சந்தோசமா’ என்று மனதுக்குள் நினைத்தவன் வெளியே ஒன்றும் கேட்கவில்லை.

 

சத்யன் கிளம்பும் போது அபிமன்யுவிடம் திரும்பி பேச தொடங்கினான். “அபி சார்... உ.. உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே...” திக்கி திணறி ஒருவாறு சொல்லி முடித்தான் சத்யநாதன்.பழகியது கொஞ்ச நாட்களே ஆனாலும் சத்யனிடம் இப்படி ஒரு தயக்கத்தை இது வரை அபிமன்யு பார்த்தது கிடையாது.சத்யனின் பேச்சில் எப்பொழும் ஒரு நிமிர்வும் தெளிவும் இருக்கும்.

இன்று பார்க்கும் சத்யன் அபிமன்யுவின் கண்களுக்கு புதியவனாக தெரிந்தான்.எதற்காக இப்படி திக்கி திணறி பேசுகிறான் என்று அபிமன்யுவிற்கு  புரியவில்லை.தன்னுடைய எண்ணத்திலேயே சுழன்றவன் சத்யன் தன்னுடைய பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து , “ ஒரு சின்ன ஷாட் இருக்கு சத்யா...முடிச்சதும் பிரேக் விட்டுடுவாங்க...நாம ப்ரீயா பேசலாம்.சரிதானா...ஒன்றும் அவசரம் இல்லையே” என்று கேட்டான்.

 

சத்யன் உடனே தலையை மறுப்பாக ஆட்டி, “அதெல்லாம் ஒன்றும் இல்லை...நான் வெயிட் பண்ணுறேன் அபி சார்...”

 

“அதென்ன அபி சார்ன்னு கூப்பிடறீங்க சத்யா...நான் உங்களை பெயர் சொல்லி தானே கூப்பிடுகிறேன்...நீங்களும் அபி என்று அழைப்பது தானே..”

 

“இல்லை சார்...அது நான் உங்களின் தொழிலுக்கு கொடுக்கும் மரியாதை...நான் இப்படியே கூப்பிடுகிறேனே...இங்கே எல்லாரும் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறேனே”

 

அந்த நேரம் இருவர் நெஞ்சிலும் இன்று தான் இப்படி பேசுவது கடைசி நாளாக இருக்குமோ என்ற எண்ணம் ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது.அதன் பிறகு மீண்டும் அபிமன்யு ஷூட்டிங்கில் பிஸியாகி விட சத்யநாதன் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கலானான். அடிக்கடி திரும்பி அபிமன்யுவை பார்த்துக் கொண்டே தான் இருந்தான்.இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் சத்யன் இயல்பாக இல்லை என்பதை அபிமன்யுவால் உணர முடிந்தது.

 

ஒரு வழியாக பிரேக் சொன்ன பிறகு அங்கு தனியே இருந்த மரத்தின் கீழே அமர்ந்து இருவரும் பேச தொடங்கினர்.

 

“சொல்லுங்க சத்யா...ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்க?”

 

“அபி சார் ...நா...நான் இப்படி கேட்பதால் என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.இதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் என்னிடம் சொல்லி விடுங்க...” என்று பெரிய பீடிகையோடு ஆரம்பித்தான் சத்யநாதன்.

 

“சும்மா சொல்லுங்க சத்யா...எதற்கு இத்தனை தயக்கம்...உங்களை பற்றி எனக்கு தெரியாதா?” அவனை மேலும் ஊக்கினான் அபிமன்யு.

 

“நீங்கள் நாளை ஊரை விட்டு போகும் போது என் தங்கையையும் உங்களுடன் அழைத்து செல்ல முடியுமா?”தயங்கி தயங்கி ஒரு வழியாக சொல்லி விட்டான் சத்யன்.

 

“என்னது?” அபிமன்யுவிற்கு தான் வேப்பிலை அடிக்க வேண்டி இருந்தது...அத்தனை அதிர்ச்சி அவனிடம்.

 

 ‘ஒருவேளை சஹானா என்னை பற்றி எதுவும் சொல்லி விட்டாளோ அதனால் தான் இப்படி பேசுகிறாரோ என்று நினைத்தவன் அந்த எண்ணத்தை உடனேயே மாற்றிக் கொண்டான்.அப்படி அவள் சொல்லி இருந்தால் சத்யன் இப்படி பொறுமையாக பேசிக் கொண்டு இருந்து இருக்க மாட்டானே...எதுவாக இருந்தாலும் அவன் வாயில் இருந்தே வரட்டும்.நாமாக எதையும் சொல்லி உளறி விடக்கூடாது’ என்று நினைத்தவன் சத்யனின் முகத்தையே ஊன்றிப் பார்த்தவாறு இருந்தான்.

 

“உங்களுக்கு சென்னையில் ஒரு டான்ஸ் அகாடமி இருக்கிறது என்று கேள்வி பட்டேன் ... அதில் என் தங்கச்சிக்கு ஒரு வேலை போட்டு தருவதாக சொல்லி அவளை உங்களுடன் அழைத்து போக முடியுமா?. கொஞ்ச  காலம் மட்டும் தான்.”

 

“இதற்குள் ஓரளவு தெளிந்து இருந்தான் அபிமன்யு. ‘ஓ... வேலைக்கா...ஆனால் எதற்கு...இவர்களிடம் இல்லாத பணமா...பின் ஏன்...இது தான் சரியான சமயம் இப்பொழுது கேட்டால் சத்யனும் மறைக்க மாட்டான்...கொஞ்சம் அவன் வாயை கிண்ட வேண்டியது தான்.’ என்று நினைத்தவன் சத்யனிடம் பேச்சு கொடுத்தான்.

“எதற்காக சத்யா இப்பொழுது இது” கேள்வி இயல்பாக இருந்தாலும் அபிமன்யுவின் பார்வையில் கொஞ்சம் கூர்மை கூடி இருந்தது.

 

“அபி சார்...என்னால் உங்களுக்கு இப்போதைக்கு எந்த விவரமும் தர முடியாது...சஹானா இப்பொழுது சென்னைக்கு வர வேண்டும்...அதுவும் உங்களிடம் அவள் வேலை பார்க்க வேண்டும்.”

 

“அது தான் ஏன் என்று கேட்கிறேன்?......இதோ பாருங்கள் சத்யா உங்களுக்கு உதவ வேண்டும் என்றால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் என்னால் உங்களுக்கு எந்த விதத்திலும் உதவ  முடியாது.” அபிமன்யுவின் வார்த்தையில் அழுத்தம் கூடி இருந்தது.

சற்று நேரம் அமைதியாக இருந்தவன் ஆழ்ந்த மூச்சுக்களை வெளிவிட்டு தன்னை கொஞ்சம் அமைதிப் படுத்திக்கொண்டு பேசினான்.

 

“என்ன கேட்கணுமோ கேளுங்க...”

 

“உங்கள் தங்கச்சியை எதற்கு இப்பொழுது என்னோடு அழைத்துக் கொண்டு போக சொல்றீங்க.... கண்டிப்பா வேலை பார்த்து சம்பாரிப்பதற்காக அல்ல...வேறு என்ன காரணம்?”

சில நிமிடங்கள் அப்படியே இறுகிப் போய் அமர்ந்து இருந்தான் சத்யன்.நீண்ட மூச்சுக்களை வெளிப்படுத்தி தன்னை சமனப்படுத்திக் கொண்டவன் அதன் பிறகு அபிமன்யு கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் தெளிவாக பதில் சொன்னான்.

 “இப்பவாவது தங்கச்சியை உங்க கூடவே கூட்டி போறீங்களா?” சத்யனின் கண்களில் இறைஞ்சல் இருந்தது.

 

“இனி சஹானாவை நான் பார்த்துக் கொள்ளுகிறேன் சத்யன்... அவள் என்னுடைய பொறுப்பு.உங்கள் வீட்டில் இதற்கு அனுமதி வாங்கி விட்டீர்களா?”

 

“இல்லை ..இனிமேல் தான் ...உங்களிடம் பேசிய பிறகு வீட்டில் பேச வேண்டும்... அப்புறம் அபி சார் ஒரு முக்கியமான விஷயம் என் வீட்டையும் இந்த ஊரையும் பொறுத்த வரை சஹானா அங்கே இருக்கும் விவசாய சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இயற்கையான முறையில் உரம் மருந்துகள் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வருகிறாள்....அப்படித் தான் இங்கே எல்லாரிடமும் சொல்லப் போகிறேன்.அதை மறக்க வேண்டாம்.அவள் உங்கள் பொறுப்பில் தான் இருக்கப் போகிறாள் என்பது நம் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்க வேண்டும்.”

 

“சரி...சத்யன்.. உங்களிடம் ஒன்று கேட்கலாமா?”

 

“கேளுங்கள் அபி சார்”

“எப்படி என்னை நம்பி...அதுவும் குறிப்பாக ஐந்து நாட்கள் மட்டுமே பழகிய ஒரு ஆளை நம்பி உங்க தங்கையை அனுப்பி வைக்கறீங்க...”

 

“நான் எல்லாம் கிராமத்துக்காரன் அபி சார்...ஒரு பார்வையிலேயே ஆளை எடை போட்டு விடுவோம்...நானும் இங்கே வரும் போதெல்லாம் உங்களை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன்.எனக்கு தெரியாதா?”

 

“உங்கள் முன் நான் நல்லவன் போல நடித்து இருந்தால்?” விடாது கேள்வி கேட்டான் அபிமன்யு.

 

“இங்கு இந்த ஊருக்கு வந்த பிறகு வேண்டுமானால் நீங்கள் நடிக்கலாம்...ஆனால் உங்கள் ஊரில் நீங்கள் நடிக்க முடியாது இல்லையா?என்ன பார்க்கறீங்க...தப்பா எடுத்துக்காதீங்க அபி சார்....நேற்று முழுக்க சென்னையில் என்னுடைய நண்பர்களை அனுப்பி உங்களையும் உங்கள் அகாடமியை பற்றியும் நன்கு விசாரித்தேன்...போன வாரம் கூட கிரின்னு ஒரு ஆளை பளார்ன்னு ஒரு அறை விட்டு வேலையை விட்டு துரத்தி விட்டீங்கனு கேள்வி பட்டேன்...விசாரித்ததில் அவனிடம் ஏதோ ஒழுக்க குறைபாடு என்று தெரிய வந்தது.அவனின் ஒழுக்க குறைபாடு தட்டி கேட்பதானால் நீங்கள் ஒழுக்க சீலராக இருந்தால் மட்டுமே முடியும் இல்லையா...”

 

“உளவு பார்த்தீங்களா...” என்றான் அபிமன்யு ஒரு மாதிரி குரலில்.

 

“இல்லையென்று மறுக்க மாட்டேன் சார்...ஏன் தங்கையை நான் அனுப்ப போகிறேன்...அங்கே அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா? அவளுடைய பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு அண்ணனாக என்னுடைய கடமை.”

 

“உங்க தங்கச்சிகிட்ட இதை பத்தி சொல்லிட்டீங்களா?”

 

“இல்லை.... உங்களுக்கு இதில் கஷ்டம் இல்லையே அபி சார்....”

 

‘கரும்பு தின்ன கூலியா...’ என்று மனதில் நினைத்தவன் அதெல்லாம் ஒன்றும் இல்லை சத்யா...என்னோடு உங்கள் தங்கையை அழைத்து செல்ல முடியாது....நான் இங்கிருந்து நேரே சென்னைக்கு போகவில்லை...கொஞ்சம் வேறு வேலைகளை முடித்து விட்டு நாளை மறுநாள் தான் மீண்டும் சென்னைக்கு போகிறேன்.அதனால உங்கள் தங்கையை சென்னையில் நீங்கள் தான் கொண்டு போய் விட வேண்டும்.என்னோடு சேர்ந்து நீங்கள் வர முடியாது”என்று திட்டவட்டமாக மறுத்து விட்டான்.

 

ஏனெனில் அபிமன்யுவின் கணக்கு சரியாக இருந்தால் இப்பொழுது வரை சஹானாவிற்கு அவனை பற்றி எதுவும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை...ஒருவேளை இருவரும் ஒன்றாக கிளம்பும் பட்சத்தில் அவள் தன்னோடு வர மறுத்தாலும் மறுப்பாள் என்பதாலேயே அபிமன்யு தனக்கு வேறு வேலை இருப்பதாக பொய் கூறினான்.சஹானாவை தினமும் பார்க்கும் பட்சத்தில் என்னுடைய காதலை அவளுக்கு புரிய வைப்பதற்கு எனக்கும் கொஞ்ச கால அவகாசம் கிடைக்கும் என்று உறுதியாக நம்பினான்.

 

நாளை முதல் அபிமன்யுவின் தொல்லை இருக்காது என்று சஹானா மகிழ்ந்து கொண்டு இருக்க,இனி தினமும் அவள் தன்னுடைய முகத்தில் முழித்து தான் ஆக வேண்டும் என்ற மகிழ்ச்சியில் அபிமன்யு இருந்தான். இருவரில் யார் வெல்ல போகிறார்கள்? யாருடைய மகிழ்ச்சி நிலைத்து நிற்க போகிறது?

 

 


Post a Comment

புதியது பழையவை