Kadhal Kathakali Tamil novels 11

 

அத்தியாயம் 11

ஒரு வழியாக காதலை சொல்கிறேன் பேர்வழி என்று சஹானாவை மிரட்டி விட்டு நேராக பண்ணை வீட்டிற்கு போனவன் வீட்டின் உள்ளே செல்லாமல் பின் பக்கம் இருந்த தென்னந்த்தோப்பை நோக்கி நடக்கலானான்.கால்கள் ஓயும் வரை வெகுதூரம் நடந்தவன் ஒரு இடத்தில் அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து விட்டான்.கண்கள் முழுதும் வெறுமை சூழ்ந்து இருக்க பார்வை ஆகாயத்தில் நிலைத்து இருந்தது.

 

அவன் மனம் முழுக்க ஆயிரம் கேள்விகள் வண்டாக குடைந்த வண்ணம் இருந்தது.அவளுக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை?எதனால் பிடிக்கவில்லை?அவள் என்னை வெறுக்கிறாள் என்று எனக்கு நன்றாக தெரிகிறது ஆனால் ஏன்?எத்தனையோ கேள்விகள் மனதில் எழுந்தாலும் அது அத்தனையிலும் இருந்தது ஒரே ஒரு கேள்வி தான்.என்னுடைய காதல் அவளுக்கு புரியவே இல்லையா? என்பது தான்.

 

அவனுக்கு அப்பொழுது கூட அந்த அருவிக்கரையில் அவளை பார்த்த பொழுது நடந்த சம்பவம் நினைவுக்கு வரவில்லை.அன்று அவன் தவறான நோக்கத்தில் எதையாவது செய்து வைத்து இருந்தான் என்றால் அவனுக்கு அதெல்லாம் நினைவில் இருந்து இருக்கும்.அவளின் கையை பிடித்து பேசியது கூட அவள் தன்னை விட்டு போய் விடுவாளோ என்ற பயத்தில் அவனை அறியாமல் செய்த செயல்.அது அவனின் நினைவிலேயே இல்லை.

 

தன்னை அவள் வெறுக்கிறாள் என்று தெளிவாக தெரிந்தும் அவனால் அவளை விட்டுவிட முடியவில்லை.தன்னை முதன்முதலாக ஈர்த்த பெண் அவள் தான்.அதுவும் ஒரே பார்வையில்.முதல் நாள் பார்த்த பொழுது அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழியும் போது அவனின் உள்ளமும் சேர்ந்து அல்லவா கலங்கியது.வேறு எந்த பெண்ணாலும் தூண்டப்படாத, தூண்ட முடியாத அவனின் உணர்வுகள் அவளின் அருகில் மட்டும் தானே தறி கெட்டு ஓடுகிறது.

இதோ இன்று ஒரு திருடனை போல அவளின் வீட்டு சுவர் ஏறி குதித்து அவளை யாருக்கும் தெரியாமல் போய் பார்த்து இருக்கிறான்.இது அவனுக்கு புதிது.ஒரு பெண்ணிற்காக தானா இப்படி எல்லாம் மாறியது என்று அவனின் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்டாலும் அதற்கு அவனிடம் பதில் இருக்கவில்லை.

 

இப்பொழுது கூட அவளிடம் இப்படி எல்லாம் பேசி விட்டோமே என்ற வருத்தமே அவனுக்குள் இருந்தது.நடனத்தில் கை தேர்ந்தவனுக்கு பெண்ணின் மனதை பற்றி தெரியவில்லையே.அவளிடம் அவன் இப்பொழுது பேசியது கூட அவளை விட்டு அவனால் பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தால் தான்.மற்றபடி அவளை காயப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை.

 

அவள் தன்னை பற்றி ஏதோ தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.தன்னை பற்றி அவளிடம் விளக்கி கூற அவன் தயார் தான்.ஆனால் அவள் காது கொடுத்து கேட்க வேண்டுமே...அவள் தான் அவனைப் பார்த்தாலே பயப்படுகிறாளே...அவளிடம் என்னவோ தைரியமாக சொல்லி விட்டு வந்து விட்டான்.ஊரை விட்டு கிளம்பும் போது அவளை உடன் அழைத்துக் கொண்டு தான் செல்ல போவதாக கூறி விட்டான்.அதை எப்படி செய்வது என்று சிந்தித்த வண்ணம் எழுந்து நின்று கொண்டு நடக்க ஆரம்பித்தவனை கலைத்தது அவனின் உதவியாளரின் குரல்.

 

“சார் இன்னும் அரை மணி நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பிச்சுடும் சார்...டைரக்டர் உங்களை கிளம்பி இருக்க சொன்னார்” என்று பவ்யமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

‘இவளை நினைத்துக் கொண்டே வந்து இருக்கும் காரியத்தையே மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்வோடு அங்கிருந்து செல்ல தொடங்கினான். பண்ணை வீட்டிற்கு சென்றவன் மடமடவென கிளம்பி அதன் பிறகு தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தினான்.இடையிடையே வந்து அவளுடைய முகம் கண்ணாமூச்சி ஆடினாலும் அதில் இருந்து கஷ்டப்பட்டு மனதை திசை திருப்பி ஷூட்டிங்கில் மனதை செலுத்தினான்.

 

ஷூட்டிங்கின் போது அவ்வபொழுது இடை இடையே துரைசாமி அய்யாவின் வீட்டில் இருந்து பலகாரங்களும் உணவு வகைகளும்,பழங்களும் வந்த வண்ணம் இருந்தது.குறை என்று சொல்ல முடியாதபடி அனைத்தும் வந்து கொண்டே இருந்தது.இவர் கொஞ்சம் வித்தியசமானவரா இருக்காரே...முதலில் தங்கள் குழுவினரை ஓட ஓட விரட்டியது என்ன..இப்பொழுது இப்படி விழுந்து விழுந்து உபசரிப்பது என்ன... என்று மனதில் நினைத்தவன் அப்பொழுது தான் அவனை பார்த்தான்.

 

அவன்... அவன் தான்... அன்று சஹானாவுடன் பீச்சில் பார்த்தவன்.அவனை பார்த்ததும் அபிமன்யுவின் உடலும் உள்ளமும் பரபரக்க உதவியாளரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து அவனை நோக்கி சென்றான்.அவனிடம் சென்று என்ன பேசுவது?எப்படி ஆரம்பிப்பது? என்ற யோசனையோடு நிற்கும் போதே அன்று துரைசாமி அய்யாவின் வீட்டில் இவர்கள் உதவிக்கென அனுப்பி வைத்து இருந்த முருகன் தானாகவே வலிய வந்து இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

 

“அய்யா ..வணக்கமுங்க...இவர் நம்ம அய்யாவோட பையன் சத்யநாதன்ங்க....இங்கே உங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னாங்க...அதான் கூட்டிக் கொண்டு வந்தேன்...நான் கிளம்புகிறேன் அய்யா...”என்று சொன்னவன் அங்கிருந்து உடனே கிளம்பியும் விட்டான்.

 

‘ஓ... இவன் சஹானாவின் அண்ணனா? அன்று அவளோடு இவனை இணைத்து வைத்து நினைத்ததை எண்ணி உள்ளுக்குள் வருந்தியவன் மனதுக்குள் சஹானாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

 

அவனுடைய தவறை சரி செய்யும் நோக்கோடு சத்யனை வெகுவாக வரவேற்றான். “வாங்க சார்... உட்காருங்க...என்ன விஷயம்?”

“ஒண்ணும் இல்லை சார்...சும்மா ஷூட்டிங் ஒழுங்காக நடக்கிறதா? உங்களுக்கு எல்லா வசதியும் சரியாக இருக்கிறதா?என்று நேரில் கேட்டு தெரிந்து கொள்வதற்காக தான் வந்தேன்.எல்லாம் சரியாக இருக்கிறதா? வேறு ஏதேனும் உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்க” இயல்பாகவே பேசினான் சத்யநாதன்.

 

“எல்லாம் சரியாய் இருக்கு...இந்த அளவிற்கு செய்வதே பெருசு...இதுவே எங்களுக்கு நிறைவாக தான் இருக்கிறது.”

 

“அது... தவறாக நினைக்க வேண்டாம் சார்... உங்கள் ஷூட்டிங் முதல் நாள் தடைப்பட்டதற்கு எங்கள் ஆட்கள் தான் காரணம்” என்றவன் சிறிது இடைவெளி விட்டவன் மீண்டும் பேசலானான். “எங்களால் உங்கள் வேலை சற்று தாமதம் ஆனது என்று கேள்வி பட்டேன். அது தான்...”தந்தையின் தவறை சுட்டிகாட்ட மனமின்றி லேசான குற்ற உணர்வுடன் பேசிய சத்யநாதனை பார்த்து நட்போடு புன்னகைத்தான் அபிமன்யு.

“அதற்கும் சேர்த்து தான் இப்படி கேட்காமலேயே ஆயிரம் உதவிகள் செய்றீங்களே?பிறகு இதில் வருந்த என்ன இருக்கிறது”புன்னைகையுடன் பேச்சை முடித்து விட்டான் அபிமன்யு.

 

பேச ஆரம்பித்ததும் ‘செய்வது எல்லாம் செய்து விட்டு இப்பொழுது ரொம்ப கரிசனையா பேசுறீங்களா?’ என்று தாம் தூம் என குதிப்பான் என்று எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக இப்படி விட்டு கொடுத்து பேசிய அபிமன்யுவை சத்யனுக்கும் பிடித்து விட்டது.அதிலும் தன்னுடைய தந்தை தான் இத்தனையும்செய்தார் என்று தெரிந்தும் அவரை பற்றி ஒரு வார்த்தை கூட குறைவாக பேசாதது அபிமன்யுவின் மதிப்பை மேலும் கூட்டியது.

 

சற்று நேரம் பொதுப்படையாக பேசிக் கொண்டு இருந்து விட்டு சத்யன் கிளம்ப எத்தனித்த நேரம் , “சத்யா நாளைக்கும் வாங்க...வீட்டில் இருந்து கூட அழைத்துக்கொண்டு வாங்க... ஷூட்டிங் பார்க்க” கண்ணில் எதிர்ப்பார்போடு அபிமன்யு பேச தலை அசைத்து அதை மறுத்தான் சத்யன்.

“இல்லை சார்...வீட்டில் இருந்து வேறு யாரும் வர மாட்டாங்க...நான் இன்று வந்தது கூட உங்களுக்கு எல்லாம் சரியாக கிடைத்து வருகிறதா என்று தெரிந்து கொள்வதற்காக தான்.அதனால் நாளை நான் கூட வர மாட்டேன்” என்று மின்னாமல் முழங்காமல் தலையில் இடியை தூக்கி போட்டான் சத்யன்.

 

தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சத்யனுக்கு காட்டாமல் நொடியில் முகத்தை மாற்றிய அபிமன்யு, “இப்படி சொன்னால் எப்படி சத்யா...அட்லீஸ்ட் எனக்காக வரலாம் இல்லையா?” என்று எப்படி எல்லாமோ பேசி சத்யனின் சம்மதத்தை பெற்றுக் கொண்டான்.சத்யனும் அவனது பேச்சை கேட்ட பிறகு ஏதோ யோசனையில் மூழ்கியவன் சட்டென்று தினமும் வர சம்மதித்து விட்டான்.

 

‘பிறகு சத்யனையும் விட்டால் வேறு யார் மூலம் அந்த வீட்டு உள் விவகாரங்களை தெரிந்து கொள்வது...ஏற்கனவே இந்த ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் முடிந்து விட்டது.மிச்சம் இருப்பது இன்னும் நான்கு நாட்கள் தான் அதற்குள் அவளை தன்னுடன் அழைத்து சென்றாக வேண்டும்.அதற்கு தனக்கு வேண்டிய விவரங்கள் தரவும் அந்த வீட்டில் ஒரு ஆள் தேவை...அது சத்யன் தான்’ என்பதை உறுதியாக நம்பினான் அபிமன்யு.

 

அடுத்த நாள் சத்யனின் வரவை உறுதிபடுத்திக் கொண்டே சத்யனை அங்கிருந்து கிளம்ப அனுமதித்தான் அபிமன்யு.முதன்முதலாக ஒரு விஷயத்தில் அதில் இறங்கி தோல்வியை கண்ட அபிமன்யு.இனி எக்காரணம் கொண்டும் அதில் சறுக்க கூடாது என்று தெளிவாக திட்டமிட தொடங்கினான்.

 

மறுநாள் முதல் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவன் நிம்மதியாக தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்.இடையிடையே வந்த கண் முன்னே தோன்றிய  அவனுடைய  தேவதையை செல்லமாக கொஞ்சி அனுப்பி வைத்தான்.மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவை எடுத்து விட்டதால் முகம் எங்கும் மகிழ்ச்சியில் பொங்க வேலையை பார்த்துக் கொண்டு இருந்தான் அபிமன்யு.

அபிமன்யுவின் மனநிலைக்கு அப்படியே எதிர் மனநிலையில் இருந்தது வேறு யாரும் அல்ல நம்ம விஷ்வ சஹானா தான்.பூட்டிய அறைக்குள் விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவளின் கண் முன்னே தெரிந்தது அபிமன்யுவின் முகம் தான்.அந்த கற்பனை முகத்தை கூட அத்தனை வெறுப்பாக பார்த்துக் கொண்டு இருந்தாள் சஹானா.

 

‘ஆளை பாரு...பெரிய இங்கிலாந்து ராணி எலிசபெத் பேரன்...டியர்ன்னு கூப்பிடறான்...அவன் பாட்டுக்கு வர்றான்...காதல்ன்னு சொல்றான்...என்ன பாத்து என்ன வெட்கம்னு வேற கேட்கிறான்...சரியான பொறுக்கி...அன்னிக்கு அருவிக்கரையில் அவன் செய்த காரியத்திற்கு கத்தி ஊரை கூட்டி ஊர் ஆட்களிடம் அடி வாங்க வைத்து இருக்க வேண்டும்.

 

ஏற்கனவே நிறைய வீட்டு சுவர் ஏறி குதித்து இருப்பான் போல...எப்படி யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் வந்தான்?நேற்றும் இப்படி தான் வந்தான்...இவனை இந்த வீட்டிற்குள் வர யார் அனுமதித்து இருப்பார்கள்?... கண்டிப்பாக தன்னுடைய தந்தையின் அனுமதி இன்றி அவனால் அங்கு வந்து இருக்க முடியாது’ என்று உறுதியாக நம்பினாள் சஹானா.

அவன் யார் ? எங்கிருந்து வந்து இருக்கிறான்? எதற்காக வீட்டிற்குள் அவனை நுழைய விட்டீர்கள் ? எளிதான கேள்விகள் தான். ஆனால் இதை போய் தந்தையிடம் கேட்டு விட முடியுமா?...கேட்டால் அதன் பிறகு தன்னுடைய நிலை என்ன ஆகும்? என்று பல குழப்பங்களில் இருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.

 

 

 

 

 


Post a Comment

புதியது பழையவை