அத்தியாயம் 10
தன் மனதில் இருப்பதை சொல்லிவிட்டதால் இனி அடுத்து எனக்கும் சகானாவிற்கும்
திருமணம் நடக்க போகிறது என்று உறுதியாக நம்பினான்.ஆடல் கலையில் தேர்ந்தவன் பெண்
மனதை அறியும் வித்தையில் தேர்ச்சி பெறாதது யார் செய்த குற்றமோ...அபிமன்யுவை சொல்லி
குற்றம் இல்லை.அவனுக்கு அவள் தனக்கு கிடைக்காமல் போக கூடும் என்ற எண்ணம் சிறிது
கூட எழவே இல்லை.மறுப்பதற்கு என்ன காரணம் இருக்க கூடும்?
‘கை நிறைய சம்பாதிக்கிறேன்.சொந்தமாக டான்ஸ் அகாடமி வைத்து இருக்கிறேன்.ஊரில்
என்னை தெரியாதவர் யாரும் இல்லை.அழகாக இருக்கிறேன்.ஒரு கெட்ட பழக்கமும்
கிடையாது.இது அத்தனைக்கும் மேலாக அவளை காதலிக்கிறேன்.என் உயிராக பார்த்துக்
கொள்ளுவேன்.இதை தவிர வேறு என்ன தகுதி வேண்டும்?’ என்று தன்னை பற்றி மட்டுமே அவன்
சிந்தித்து கொண்டு இருந்தான்.
ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி கனவிலும் அவளோடு கை கோர்த்து திரிந்தவன் எப்பொழுதும்
போல அதிகாலையில் எழுந்தான்.மனதில் இருந்த உற்சாகம் இன்று தன்னுடைய தேவதை தன்னுடைய
விருப்பதை தன்னிடம் தெரிவித்து விடுவாள் என்ற நினைவு மேலும் இன்பத்தை கூட்ட
துரைசாமி அய்யாவின் பண்ணை வீட்டில் படக்குழுவினர் அனைவரும் உறங்கிக் கொண்டு இருக்க
தன் போக்கில் நடந்து செல்ல ஆரம்பித்தான்.
மெலிதாக விசில் அடித்த படியே ஊரை சுற்றி வலம் வந்தவனின் கால்கள் நேற்று அவளை சந்தித்த அதே அருவிக்கரைக்கு அவனை
இழுத்து வந்து விட்டு இருந்தது.நேற்று அவளை அந்த இடத்தில் பார்த்தது முதல் ஒவ்வொரு
நிகழ்ச்சியாக நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான்.ஏனோ அருவிக்கரையை விட்டு
செல்ல மனம் இல்லாமல் அங்கேயே இருந்தான்.தன்னுடைய தேவதையை எங்கெல்லாம் தேடி அலைய
வேண்டி இருக்குமோ என்று சஞ்சலத்தோடு வந்தவனை, காத்து இதோ இருக்கிறாள் உன் தேவதை
என்று சுட்டிக் காட்டிய அந்த இடத்தை அவனின் காதலின் சின்னமாகவே நினைக்க
ஆரம்பித்தான் அபிமன்யு.
பொழுது இன்னும் நன்றாக விடிந்து இருக்கவில்லை.மெலிதான இருள் படலம் இன்னும்
சூழ்ந்து இருக்க அந்த இடத்தை விட்டு கிளம்பி நடக்கலானான். ஆற்றங்கரையில் இன்றும்
வயது பெண்கள் குளித்துக் கொண்டு இருக்க அதை அலட்சிய படுத்தி ஒதுக்கி விட்டு
கண்டும் காணாதது போல பண்ணை வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான்.சீராக ஒரே நிதானமான
நடையில் நடந்து வந்து கொண்டு இருந்தவனின் நடையின் வேகம் சட்டென குறைந்தது.அவன் கண்கள் மின்னலென
பளபளத்தது.
அதிகாலையில் குளித்து முடித்து தலையில் ஈர துண்டோடு ஆற்றங்கரை பிள்ளையார்
கோவிலில் நின்று மனமுருக வேண்டிக் கொண்டு இருந்தாள் அவள்.மூடி இருந்த அவளின் கண்
இமைகள் அவளின் பலமான வேண்டுதலை தெரிவிக்க அவளை பார்த்த படியே அங்கே இருந்த அரச மரத்தின் பின் சென்று ஒளிந்து நின்று கொண்டான்
அபிமன்யு.அவளிடம் சென்று பேசலாம் என்று அவனுக்கு ஆசை இருந்தாலும் உடன் இருந்த
அவளின் தோழிகளின் நினைவில் மௌனம் காத்தான்.
மற்ற பெண்கள் குளித்து முடித்து கரை ஏறி பிள்ளையாருக்கு ஒரு வணக்கத்தை வைத்து
விட்டு அதற்கு மேல் அங்கே தாமதிக்காமல் கிளம்பி விட்டனர்.மற்றவர்கள் கிளம்பி போன
பிறகும் அவள் அங்கேயே கண் மூடி நிற்பதை பார்த்ததும்,அருகில் யாரும் இல்லை என்பதை
உறுதிபடுத்திக் கொண்டு அவளை சீண்டிப்
பார்க்க எண்ணி மறைவில் இருந்து வெளிப்பட்டு அவளின் முகத்திற்கு வெகு அருகில்
நின்று அவளை நன்கு பார்வையிட ஆரம்பித்தான்.
சந்தன நிறத்தில் பாவாடையும் குங்கும சிவப்பில் தாவணியும் அணிந்து கண் மூடி
இறைவனை வேண்டிக் கொண்டு இருந்தாள். சற்று முன் தான் குளித்து இருப்பாள் போலும்
அவள் முகத்தில் ஆங்காங்கே நீர் துளிகள்.பன்னீரில் நனைந்த ரோஜாவை அவனுக்கு
நினைவூட்டின.ஆயிரம் பெண்கள் அருகில் இருந்தாலும் தூண்டப்படாத அவனின் உணர்வுகள்
அவளின் அருகாமையில் சிலிர்த்து எழுந்தன.அவளின் ஒவ்வொரு அசைவையும் தனக்குள்
உள்வாங்கிக் கொண்டான்.
வேண்டுதலை முடித்து விட்டு மெதுவாக கண்ணை திறந்து பார்த்தவள் முகத்துக்கு மிக
அருகில் நின்ற அபிமன்யுவை பார்த்து பயந்து போய் கத்தி விட்டாள்.அபிமன்யுவின் நல்ல
நேரமோ அல்லது அவளின் கெட்ட நேரமோ ஆற்றங்கரையில் அப்பொழுது யாருமே இல்லை.
எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவள் பயப்பார்வையே பார்க்க அதில் தன்னையே
நொந்தவன்.அவளின் பயத்தை போக்க முன் வந்தான்.
“ஹே... கூல் ...கூல்... நான் தான் டியர்...திடீர்னு பார்க்கவும் பயந்திட்டியா
டியர்....நான் உன்னை பயமுறுத்த இப்படி நிற்கவில்லை.ரொம்ப நேரமா சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு இருந்தியா அதான்... அப்படி என்ன வேண்டிக்கிறன்னு பார்த்துகிட்டு
இருந்தேன்.வேண்டுதல் ரொம்ப பலமோ?”
அபிமன்யு பேசிக் கொண்டு இருக்கும் போதே பாதி பேச்சில் அவள் அங்கிருந்து
புறப்பட ஆரம்பித்துவிட்டாள்.அப்பொழுது கூட அவள் தன்னிடம் தனியே பேச
வெட்கப்பட்டு தான் கிளம்புகிறாள் என்றே
நினைத்தான் அபிமன்யு.அதனாலேயே அவளின் முன்பு நின்று அவளின் வழியை மறைத்தவாறு
நின்று பேச தொடங்கினான்.
“இன்னும் என்ன வெட்கம் உனக்கு...அதுவும் என்னிடம்...முகம் பார்த்து பேசக் கூட
செய்யாமல் இப்படி ஓடுகிறாயே”
அவனிடம் ஒன்றும் பேசக்கூடாது என்ற நினைவில் அங்கிருந்து கிளம்ப தொடங்கியவள்
அவனின் வார்த்தைகளில் நிதானித்தாள். ‘இதை இப்படியே விட்டால் இது மேலும் வளர்ந்து
கொண்டே தான் இருக்கும்.வெளியூரில் இருந்து வந்து இருக்கும் இந்த மைனருக்கு பெரிய
காதல் மன்னன்னு நினைப்பு போல அந்த எண்ணத்தை உடனடியாக போக்க வேண்டும்.’ என்று
நினைத்தவள் அவனிடம் கடுமையாகவே பேச ஆரம்பித்தாள்.
“இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட பேசுற வேலை வச்சுக்காதீங்க...”
அவள் தன்னிடம் பேசிவிட்ட மகிழ்ச்சியில் மேலும் அவளை சீண்ட தொடங்கினான்
அபிமன்யு.
“உன்னிடம் பேசாமல் வேறு யாரிடம் பேச”
“யார்கிட்டயோ பேசுங்க...என்கிட்ட பேசாதீங்க ... அவ்வளவு தான். நேற்றே உங்களை
பத்தி அப்பாகிட்ட சொல்லி இருப்பேன்...அப்படி சொல்லி இருந்தால் இந்நேரம் உங்களின்
உடம்பில் உயிர் இருந்து இருக்காது என்று தான் இரக்கப்பட்டு உங்களை மாட்டி விடாமல்
இருக்கிறேன்...இனியும் நீங்கள் தேவை இல்லாமல் வம்பு வளர்த்தால் நான் என்னுடைய
அப்பாவிடம் சொல்லி விடுவேன்.”
இப்பொழுதும் அவள் ஏதோ விளையாட்டாக பேசுவதாகவே அவன் நினைத்தான்.எனவே பேச்சை
மேலும் வளர்த்தான்.
“ஓ...உன் அப்பாவிடம் இருந்து என்னை காப்பாற்றி இருக்கிறாயா?என் மேல் அத்தனை
காதலா டியர்?”
அபிமன்யுவின் பேச்சை கேட்டு முகம் சுளிக்க தொடங்கினாள் சஹானா.அவளின் முக
சுளிப்பை பார்த்து முதன் முதலாக அவனுள் கேள்வி எழுந்தது.
“காதலும் இல்லை.மண்ணாங்கட்டியும் இல்லை.எனக்கு காதல் வராது.அப்படியே வந்தாலும்
உன்னை போல ஒரு பொறுக்கியின் மீது செத்தாலும் எனக்கு காதல் வராது. இனி என் பின்னால்
சுற்றினால் தேவை இல்லாமல் உனக்கு தான் அசிங்கம்” என்று படபடவென உரைத்தவள் அவனை
தாண்டி செல்ல சென்று விட்டாள்.
அபிமன்யுவால் அவளின் பதிலை உணரக் கூட முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய்
இருந்தான்.
‘என்ன சொல்கிறாள் இவள்? இவளுக்கு என்னை பிடிக்கவில்லையா?என்னை பொறுக்கி என்று
ஏன் சொல்கிறாள்?என்னிடம் விளையாடி பார்க்கிறாளோ’ என்று ஒரு நிமிடம் நினைத்தவன்
உடனே அந்த எண்ணத்தை அழித்து விட்டான்.அவளின் கண்களில் தெரிந்த முழு வெறுப்பையும்
தான் பார்த்தானே...
‘ஏன் இப்படி என்னை வெறுக்கிறாள்?நான் என்ன தவறு செய்தேன் என்று ஒன்றுமே
புரியாமல் விரக்தியோடு அங்கிருந்து திரும்பி நடக்க ஆரம்பித்தவனின் கால்கள்
மீண்டும் தன்னை அறியாமலேயே அருவிக்கரைக்கு வந்து நின்றது.
அவளையே நினைத்து தவித்துக் கொண்டிருந்த பொழுது இங்கே வந்து அவளை கண்ட அந்த
நிமிடம் எவ்வளவு சந்தோஷ பட்டேன்.தன்னுடைய காதல் எளிதில் கல்யாணத்தில் முடிந்து
விடும் என்ற எண்ணத்தோடு இருந்தவனுக்கு இது மிக பெரும் தோல்வியாகவே தோன்றியது.தன்னை
ஒரு பெண் மறுக்கிறாள் என்பதே அவனது கர்வத்திற்கு மிகப் பெரும் அடியாக
விழுந்தது.இதை இப்படியே விடவும் முடியாது.அப்படி விட்டுவிட்டால் அவள் தனக்கு
கிடைக்க மாட்டாள் என்பதை உணர்ந்தவன் நேரே துரைசாமி அய்யாவின் வீட்டிற்கு சென்றான்.
விடியற்காலையில் அவர் வீட்டிற்கு போய் நிற்கிறோமே என்ற யோசனை எதுவும் அவனுக்கு
இல்லை.வீட்டு வாசலுக்கு போனவன் வாசலில் இருந்த துரைசாமி அய்யாவை பார்த்ததும் ஒரு
நொடி யோசித்தவன் அப்படியே சத்தம் எழுப்பாமல் பின் வாசல் வழியாக யாருக்கும்
தெரியாமல் சுவரேறி குதித்து வீட்டிற்குள் நுழைந்தான்.ஏற்கனவே வீட்டை சுற்றி
பார்த்து இருந்ததால் அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும் அவன் நன்கு அறிந்து வைத்து
இருந்தான்.
வீட்டின் உள்ளே நுழைந்து ஒவ்வொரு இடமாக மறைந்து மறைந்து நின்று யார் கண்ணிலும்
படாமல் மாடிக்கு செல்லும் பைப்பை பிடித்து ஏறி சாதுர்யமாக அவளின் அறைக்குள்
நுழைந்து விட்டான்.அவளின் அறையை ஏற்கனவே அவள் உட்புறமாக சாத்தி இருந்ததால் மெதுவாக
அவளை பார்த்துக் கொண்டே நிதானமாக நெருங்கினான்.
வழக்கம் போல அபிமன்யுவை பார்த்ததும் முதலில் பயத்தோடு கத்த போனவளின் வாயை தன்னுடைய
கையினால் வேகமாக அடைத்தான்.முதலில் அவனை பயத்தோடு பார்த்தவள் பின்பு தன் பார்வையை
மாற்றி வெறுப்பாக பார்க்க ஆரம்பித்தாள்.அவளின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவனின்
உள்ளம் வேதனையில் தடுமாற தன்னை சமாளித்து கொண்டவன் மெதுவாக அவளிடம் பேச
ஆரம்பித்தான்.
“இதோ பார்...ஒரு இரண்டு நிமிடம் உன்னிடம் பேச வேண்டும் அவ்வளவு தான்...நீ
அமைதியாக இருந்தால் நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு கிளம்பி விடுவேன்...இல்லை
கத்தி ஊரை கூட்டினாய் என்றாலும் எனக்கு ஒன்றும் பயம் இல்லை.இப்பொழுது கூட என்னால்
நேரடியாக உன்னுடைய அறைக்குள் வந்து இருக்க முடியும்.உனக்கு அதனால் ஏதும் பிரச்சினை
வந்து விடுமோ என்ற எண்ணத்தில் தான் இப்படி பின் வாசல் வழியாக வந்தேன்.” என்று
கூறியவன்,அவள் அமைதியாக இருக்கவும் அவளின் வாயில் இருந்து மெதுவாக கையை
எடுத்துவிட்டு பேசலானான்.
“எனக்கு உன்னை முதன்முதலா பார்த்ததில் இருந்தே ரொம்ப பிடிச்சு இருக்கு...உன்னை
கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்.என்னை கல்யாணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா?”
“ஓ ... முன்பு கேட்டதையே இப்பொழுது மாற்றி கேட்கறீங்களா?... எனக்கு உங்க
காதலும் வேண்டாம்... நீங்களும் வேண்டாம்...போதுமா..இனி என்னை தொல்லை செய்யாமல்
இங்கிருந்து கிளம்புங்கள்.நீங்கள் காதல் சொன்னதும் உங்கள் காலில் வந்து விழுந்து
விடுவேன்னு நினைச்சீங்களா?...
ஏற்கனவே நீங்க கேட்டதுக்கு நான் ஒத்துக்கலைன்னு இப்போ கல்யாணம் பண்ணிக்க ஆசை
அது இதுன்னு இப்படி மாத்தி பேசறீங்களா? நீங்க எப்படி கேட்டாலும் சரி எனக்கு உங்களை
பிடிக்கலை...பிடிக்கலை...”என்று ஆத்திரமாக கத்தியவள் சட்டென்று தன்னுடைய குரலை
குறைத்துக் கொண்டாள்.தான் பேசுவது வெளியே இருக்கும் யார் காதிலாவது விழுந்து
விடுமோ என்ற பயத்தில்.
“நீ ஏதோ அவசரத்தில் சொல்ல வேண்டாம்....நல்லா பொறுமையா டைம்
எடுத்துக்கோ...என்னை பத்தி நான் இன்னும் உனக்கு சொல்றேன்...யோசிச்சு
சொல்லு...உனக்காக காத்திருக்க நான் தயார்.”
“சும்மா சொன்னதையே சொல்லி தொணதொணக்காதே...முதலில் இங்கே இருந்து வெளியே போ”ஆத்திரத்தில்
மரியாதையை கை விட்டு விட்டாள் சஹானா.
ஆழ்ந்து மூச்சை வெளியேற்றியவன் அவளை பார்த்துக் கேட்டான். “உன்னுடைய முடிவில்
எந்த மாற்றமும் இல்லையா?”
“இல்லை...இல்லை..இல்லை..போதுமா... முதலில் இங்கிருந்து போ...” அவனை வெளியே
துரத்துவதிலேயே அவள் குறியாக இருந்தாள் யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது
என்ற பயம் வேறு அவளை ஆட்டுவித்தது.
“சரி உன் முடிவை நீ சொல்லி விட்டாய்...இப்பொழுது என் முடிவை நான் சொல்கிறேன்
கேட்டுக்கொள்...உனக்கு புருஷன்னா அது நான் மட்டும் தான்.எனக்கு பொண்டாட்டின்னா அது
நீ மட்டும் தான்.அது நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடந்தே தீரும்.இந்த
ஊரில் இருந்து நான் கிளம்பும் போது உன்னையும் என்னோடு அழைத்து செல்ல போவது
உறுதி.உன்னால் முடிந்தால் தப்பித்துக்கொள்.... இல்லையேல் என்னை காதலித்து பழகிக்
கொள்” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தவன் அவளின் கன்னத்தில் ஒற்றை விரலால் தட்டி
விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
எதையுமே அதிரடியாக செய்து பழக்கப்பட்டவன் தன்னுடைய காதலிலும் அதையே
கையாண்டான்.பெண்களிடம் கெஞ்சிப் பழக்கம் இல்லாததால் இதையே அதிகாரமாகவே சொன்னான்
அபிமன்யு.உண்மையில் அவனுக்கு அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று
தெரியவில்லை.மலரினும் மெல்லிய பாவையவள் இவனுடைய உண்மை நேசத்தை உணர்வாளா?...
கருத்துரையிடுக