அத்தியாயம் 12
விடியலின் அருகாமையில் கண் விழித்த அபிமன்யுவின் நினைவுக்கு முதலில் அவனுடைய
காதலியின் முகம் தான்.வீணையின் தந்தியை மீட்டியது போல ஒவ்வொரு நரம்பும் இனிமையான
எண்ணத்தில் அதிர முகம் கொள்ளா சிரிப்புடன் தன்னுடைய நடைபயணத்தை
மேற்கொண்டான்.நேற்று போல இன்றும் அவள் அந்த ஆற்றங்கரை கோவிலுக்கு வருவாளா என்ற
எதிர்பார்ப்போடு நடக்க தொடங்கினான்.
அவனின் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை.அவள் வந்தாள். ஏற்கனவே குளித்து முடித்து
கையில் குடத்தோடு வந்து இருந்தாள். கண்கள் முழுக்க பயத்தோடு எங்கே இன்றும்
அபிமன்யு வந்து விடுவானோ என்ற எண்ணத்தில் அந்த இடத்தை சுற்றி பார்வையாலேயே
அலசினாள்.அபிமன்யு நேற்று ஒளிந்து கொண்ட அதே மரத்தின் பின் சென்று இன்றும் ஒளிந்து
கொள்ள அவனை காணாமல் நிம்மதியான முக பாவனையோடு ஆற்றில் இருந்து நீரை எடுத்து
பிள்ளையாரின் மேல் ஊற்றி வணங்க
ஆரம்பித்தாள்.
நேற்று போல இன்றும் அவளது வேண்டுதல் கொஞ்சம் பலமாக தான் இருந்தது.வேண்டுதலின்
போது நடுவில் அவளின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரின் காரணம் புரியாமல் அபிமன்யு
திகைத்து நின்றான்.
‘ஏன் அழுகிறாள்?எதற்காக அழுகிறாள்?அப்படி என்ன வேண்டும் இவளுக்கு? ஊரிலேயே
செல்வாக்கு மிகுந்த மனிதரின் பெண் இவள்.நல்ல வசதியான குடும்பம் இருந்தும் எதற்கு
இந்த அழுகை? ஒருவேளை என்னை நினைத்து பயந்து அழுகிறாளோ’என்றெல்லாம் எண்ணத்
தொடங்கியது அவன் மனது.
‘முதலில் அதை தெரிந்து கொண்டு சரி
செய்ய வேண்டும்’ என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டவன் நேற்று போல மிகவும்
அருகில் போய் நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்று அவளின் விழி திறப்பதற்காக
காத்திருந்தான்.
விழி திறந்ததும் எதிரில் அபிமன்யு நில்லாததால் லேசான மகிழ்ச்சியுடன் நடக்க
ஆரம்பித்தாள். மெதுவாக நிதானமான நடையோடு அவளின் எதிரில் வந்து நின்றான்
அபிமன்யு.அவனின் வருகையை அவள் விரும்பவில்லை என்பது அவளின் முக குறிப்பிலேயே
தெரிந்தது.அதற்காக அப்படியே சும்மா விட்டு விட்டால் அது அபிமன்யு கிடையாதே....
“வந்த உடனே யாரையோ தேடினாய் போல”
‘இவனுக்கு எல்லாம் எதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று நினைத்து அவனை
சுற்றிக்கொண்டு செல்ல முற்பட்டாள்.
“என்னை தானே தேடினாய் ....ஹம்ம் சொல்லு டியர்” வேண்டுமென்றே அவளை சீண்டி
அவனுடன் பேச வைத்து விட எண்ணினான் அபிமன்யு.
அதுவரை கஷ்டப்பட்டு அமைதி காத்தவள் அவனின் ‘டியர்’ என்ற வார்த்தையில் பொங்கி
விட்டாள்.
“பெரிய வெள்ளைக்கார துரை... வாயை திறந்தா இங்கிலீஷ் மட்டும் தான்
வருமாக்கும்... டியராம் டியர்...ஆளை பாரு” என்று திட்டிவிட்டு மேலும் முன்னேறி
சென்றாள்.
“ஓ ...உனக்கு இங்கிலிஷ்ல டியர்ன்னு சொன்னது தான் பிடிக்கலையா? இதை முன்னாடியே
சொல்லி இருக்கலாம்ல...சரி வேற எப்படி உன்னை செல்லமா கூப்பிடட்டும்? கண்மணி,
கண்ணம்மா,அம்மு, அம்முலு .... என்று அவன் அடுக்கிக்கொண்டே போக நடந்து கொண்டு
இருந்தவள் நின்று அவனை முறைக்க தொடங்கினாள்.
“நீங்க என்னை செல்லமாவும் கூப்பிட வேண்டாம்... பள்ளமாவும் கூப்பிட
வேண்டாம்....என் பின்னாடி வருவதை யாராவது பார்த்தால் உங்களுக்கு ஒன்றும்
இல்லை...என்னை தான் தப்பா பேசுவாங்க....வழியை விடுங்க....” எரிந்து விழுந்தாள்
சஹானா.
“நான் உன்னுடன் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது... நீ நினைத்தால்
கூட...இங்கே நீ என்னிடம் பேசவில்லை என்றால் நேற்று போல உன் வீட்டின் சுவர் ஏறிக்
குதித்து வருவேன்.... என்ன வரட்டுமா?” அவனின் குரலிலேயே அவன் கண்டிப்பாக செய்வான்
என்பதை உணர்ந்து பதறினாள் அவள்.
“ஏன் இப்படி எல்லாம் என்கிட்ட வந்து வம்பு செய்றீங்க?நான் அப்பாகிட்ட
சொல்லிடுவேன் உங்களை பத்தி...” மிரட்டினாள் ஒருவேளை கொஞ்சம் பயப்படுவானோ என்று
சொன்னாள் சஹானா.
“தனியா போய் சொல்றதுக்கு பதிலா என்னையும் கூட கூட்டிக்கொண்டு போய் உன்
அப்பாவிடம் சொன்னா இன்னும் நல்லா இருக்கும்ல... வா ரெண்டு பெரும் சேர்ந்து
போவோம்....” என்றவன் கூறியதோடு அல்லாமல் அவளின் கையை பற்றவும் முயல, விட்டால்
போதுமென்று தெறித்து ஓடி விட்டாள் சஹானா.
மான்குட்டி போல துள்ளி ஓடும் அவளை பார்த்து ரசித்த படியே கொஞ்ச நேரம் நின்று
விட்டு கிளம்பி பண்ணை வீட்டிற்கு சென்று விட்டான்.அவனுக்கு அவளிடம் பேசாமல் இருக்க
முடியவில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அவள் தன்னை வெறுத்து ஒதுக்குகிறாள்
என்ற காரணத்திற்காக தானும் ஒதுங்கிப் போனால் அதன்பிறகு அவள் தன்னை திரும்பிப்
பார்ப்பாளா என்பதும் சந்தேகமே...என்பதை அவனது அவனது மனம் அவனுக்கு ஏற்கனவே
எச்சரிக்கை செய்ததன் விளைவு தான் அவனது சீண்டல் பேச்சுக்கள்.
அங்கிருந்து துள்ளலான மனநிலையில் கிளம்பியவன் நேராக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு
போனான் .இன்று கட்டாயம் சத்யநாதன் வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே தன்னுடைய
வேலையை பார்த்துக் கொண்டு இருந்தான்.அவனது நம்பிக்கையை கெடுக்காமல் சத்யநாதன் அங்கே வந்தான்.அன்று
மட்டும் அல்ல வரிசையாக எல்லா நாட்களும்.
அப்படி சத்யநாதன் அங்கே வந்த நாட்களில் எல்லாம் அபிமன்யு சத்யாவிற்கு சந்தேகம்
வராத அளவிற்கு அவனுடைய வீட்டை பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்தான்.ஆனால் அவன்
துரைசாமியின் மகன் இல்லையா?.... அபிமன்யுவின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலை
சொல்லிவிட மாட்டான்.அதே நேரம் பதில் சொல்ல முடியாது என்று முகத்தில் அறைந்த
மாதிரியும் பேச மாட்டான்.
அபிமன்யு நினைத்ததை போல சத்யனிடம் இருந்து உள்வீட்டு விவகாரம் எதையும்
தெரிந்து கொள்ள முடியவில்லை.சத்யனிடம் இப்படி ஒரு தன்மையை அபிமன்யு எதிர்பார்த்து
இருக்கவில்லை என்பதே உண்மை.
பல நேரங்களில் அபிமன்யுவின் கேள்விகளுக்கு சத்யனின் பதில் உள்ளர்த்தம் நிறைந்த
ஒரு சிரிப்பு மட்டுமே...அதை தாண்டி எந்த கேள்வியும் கேட்டு சத்யனின் மனதை
நோகடிக்கவோ சத்யனின் நட்பை இழக்கவோ அபிமன்யு விரும்பவில்லை.இந்த குறுகிய
காலத்திலேயே சத்யனுக்கும் அபிமன்யுவிற்கும் இடையில் ஒரு அழகான நட்பு மலர்ந்து மணம்
வீச தொடங்கி இருந்தது.
அபிமன்யுவிற்கு ஒவ்வொரு நாள் விடியும் போதும் சஹானாவை பார்க்க போகிறோம் என்ற
உற்சாகத்துடனும், இரவு நெருங்குகையில் எப்படி அவளை கை பிடிக்க போகிறோம் என்ற ஏக்கத்துடனும்
கழிந்தது.
சகானாவிற்கு அன்று அவன் சொன்னதில் இருந்து எங்கே வீட்டிற்கே வந்து விடுவானோ
என்ற பயத்தில் தினமும் மறக்காமல் ஆற்றங்கரை கோவிலுக்கு வந்து விடுவாள். ஆனால்
தனியே வரமாட்டாள்.கூடவே துணைக்கு ஏழு அல்லது எட்டு வயது பொடிசுகளை அழைத்து வந்து
விடுவாள்.அபிமன்யுவும் அவளை வழிமறித்து பேச முயன்றதில்லை.
அந்த குழந்தைகள் அவளுடைய வீட்டிலோ அல்லது ஊரில் வேறு யாரிடமோ இதை பற்றி சொல்லி
விட்டால் சஹானாவிற்கு தான் தேவை இல்லாத தொல்லை என்று நினைத்தான்.அவளை பார்த்தாலே
போதும் என்ற அளவிற்கு அவனின் காதல் முத்திப்போய் இருந்தது.சஹானாவோ தன்னுடைய படை
வீரர்களை கண்டு தான் அபிமன்யு பயந்து விட்டதாக நினைத்துக் கொண்டாள்.
அடுத்து வந்த எல்லா நாட்களுமே இதே விதமாக கழிய ஷூட்டிங்கின் கடைசி தினமும்
வந்தது.இன்றோடு ஷூட்டிங் முடிந்து விடும் என்ற எண்ணம் அபிமன்யுவின் உள்ளத்தில் ஒரு
பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி வைத்து இருந்தது.
‘இன்று எப்படியும் சஹானாவிடம் தனித்து பேசி விட வேண்டும்.கூட யார் இருந்தாலும்
சரி...ஒருவேளை அவளை ஆற்றங்கரையில் பார்த்து பேச முடியாவிட்டால் வீட்டு சுவர் ஏறி
குதித்து விட வேண்டியது தான்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.
அன்றைய நாளின் தொடக்கம் அபிமன்யுவிற்கு கலக்கத்தோடு தான் ஆரம்பித்தது.ஆனால்
முடிந்த பொழுது அவன் மனம் முழுக்க மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது.அபிமன்யு
சந்தோசத்தின் உச்சியில் இருந்தான்.வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி.....
கருத்துரையிடுக