அத்தியாயம் 8
அஞ்சலி தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைப்பதை கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் சத்யன். அவனது பார்வை எரிச்சலூட்ட அவனிடம் கோபமாய் காய்ந்தாள் அஞ்சலி.
“ஒன்னு உதவி செய்ங்க… இல்லைனா வெளியே போங்க… இரண்டும் இல்லாம எதுக்கு இப்படி சும்மா உட்கார்ந்து என்னையே பார்க்கறீங்க”
“உங்களை ஊருக்கு கிளம்ப சொன்னதுல ரொம்ப கோவமா இருக்கீங்க போல…”
“சே! சே! ரொம்ப குளுகுளுன்னு இருக்கு… இப்படித்தான் வீட்டுக்கு வந்தவங்களை துரத்தி விடுவீங்களா? ரொம்ப நல்லா இருக்கு உங்க வீட்டு விருந்தோம்பல்”என்று படுநக்கலாக சொன்னவளை அழுத்தத்துடன் பார்த்தான் சத்யன்.
“ எங்க வீட்டு விருந்தோம்பலில் எந்த குறையும் இல்லைங்க… தப்பெல்லாம்…”
“என் மேல தான்னு சொல்றீங்களா? நான் தான் ஒரு நல்ல விருந்தாளியா நடந்துக்கலைன்னு சொல்றீங்களா?”
“ஒரு வகையில் அப்படித்தான்ங்க. இனியும் நீங்க இங்கே இருக்கிறது சரிப்பட்டு வராது.”
“ஏன்…நான் அப்படி என்ன செஞ்சேன்?”
“நீங்க… இதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல… எப்படி இந்த வீட்டுக்கு நீங்க வந்தீங்களோ அதே மாதிரி நல்ல முறையில் உங்களை அனுப்பி வைக்க வேண்டியது எங்களோட பொறுப்பு. அதுக்கு மாறா எதுவும் நடந்தா நாளைக்கு என்னோட தங்கச்சி வாழ்க்கை தான் பாதிக்கப்படும்” என்று தெளிவாக சொன்னவனை அலட்சியமாக பார்த்தாள் அஞ்சலி.
“இந்த கல்யாணத்துக்கு நீங்க சம்மதிக்கலேன்னா உங்க தங்கச்சியை சாரி… என்னோட அண்ணியை நான் கொடுமை படுத்துவேன்னு சொல்றீங்களா?” அவனை நேருக்கு நேராய் பார்த்தாள் அஞ்சலி.
“ஹ…. அப்படி சொல்லல… அப்படி நீங்க நடந்துக்கிற வரைக்கும் என் மச்சான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டார்னு எனக்குத் தெரியும்.”
“அப்புறம் எதுக்காக…” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சத்யனின் மொபைல் ஒலி எழுப்பி அவர்களது பேச்சை பாதியில் நிறுத்தியது.
“உங்க அண்ணனோட பிஏ தான் போன் செய்றார். அவர் எதுக்கு எனக்கு போன் செய்றார்”என்றவன் கேள்வியுடன் தாடையை தடவியபடி யோசிக்க காரணம் அறிந்தவளின் உடலோ மெல்ல இறுகியது. சத்யன் அதை கவனிக்கவில்லை.
போனில் அந்தப்பக்கம் சொன்ன தகவலில் அவன் உடலில் பதற்றம் தொற்றிக் கொண்டதை உணர்ந்தவள் ஒன்றுமறியாதவள் போல காட்டிக் கொண்டு நிற்க அரும்பாடு பட்டாள். அழுகையை அடக்க பெரும்பாடு பட்டாள்.
‘அழுது தீர்த்து விட்டால் துரைசாமிக்கு எப்படி திருப்பிக் கொடுப்பது’
அவசரமாக போனை அணைத்து பாக்கெட்டில் வைத்தவன் அஞ்சலியிடம் பேசிக் கொண்டே வெளியேறினான்.
“நீங்க கிளம்பி தயாரா இருங்க… நான் இப்போ வந்துடறேன். சேர்ந்தே போகலாம்” என்று சொன்னபடியே வண்டியில் ஏறி அமர்ந்தவன் அன்னையை காண விரைந்து சென்றான்.
‘அன்னையிடம் எப்படி சொல்வது? உடல்நிலை வேறு சரியில்லை. சொன்னால் தாங்குவார்களா?’ என்ற பதட்டம் அவனை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் செய்தது.
அரக்கபறக்க மருத்துவமனைக்கு சென்றவன் கண்டதோ அமைதியாய் கட்டிலில் படுத்து இருந்த அன்னையையும், அவருக்கு அருகில் காலை கட்டிலின் மீது தூக்கிப் போட்டுக் கொண்டு சேரில் பின்னால் சாய்ந்து அமர்ந்து கைகளை தலைக்கு பின்னால் கட்டியபடி தூங்கிக் கொண்டு இருந்த தந்தையைத் தான். வீட்டு வேலைக்கார பெண்மணி மேகலாவிற்காக ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தார்.
‘இதுக்கு இவர் வீட்டிலேயே இருந்து இருக்கலாம்’ என்று எண்ணியவன் ஆத்திரத்தை அவர் மீது காட்ட விரும்பாமல் மேகலாவின் அருகில் சென்று அமர்ந்தான்.
கொஞ்சம் சோர்வாக இருந்த மேகலாவின் முகத்தைப் பார்த்து தயங்கியபடி நின்றவன் தன்னுடைய பதற்றத்தை மறைக்க முயன்றாலும் அன்னையவள் அறிய மாட்டாளா மகனை.
“என்னாச்சு சத்யா? ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரி படபடப்பா இருக்கு…?” என்றவள் எழுந்து அமர முயல வேகமாக அவரை தாங்கி சரியாக அமர வைத்தான் சத்யன்.
மனைவியின் குரலில் உறக்கம் கலைந்த துரைசாமியின் கவனம் முழுக்க மகனின் மீது பதிந்தது.
‘தகவல் வந்துடுச்சோ’ உடல் முழுக்க உற்சாகம் தொற்றிக்கொண்டது அவருக்கு.
‘கடவுளே நல்ல(!) செய்தியா இருக்கணும்’ என்றவர் வெகுவாக வேண்டிக் கொள்ள அவரின் வேண்டுதல் மற்றவரின் காதுகளுக்கு எட்டாமல் இருக்கும் வரை தான் அவரது ஆட்டம் என்பதை அவர் அறியாமல் போனது தான் விந்தை.
“அ… அம்மா…” வெகுவாய் திணறினான் சத்யன்.
‘ஆஹா.. பயபுள்ளை தடுமாறுறான்… அப்போ நம்ம நினைச்சது தான்…’
“என்ன சத்யா.. ஏன் முகமெல்லாம் இப்படி வேர்த்து வழியுது… சொல்லுப்பா?” மகனை ஊக்கினார் மேகலா.
“அம்மா.. பாரினில் இருந்து திரும்பி வந்த மச்சானையும், தங்கச்சியையும் யாரோ கொலை செய்ய முயற்சி செஞ்சு இருக்காங்க”
“அய்யோ! …” என்று அலறிய மேகலாவை சமாளிப்பதற்குள் போதும் போதுமென்று ஆனது சத்யனுக்கு. துரைசாமியின் மனதோ குத்தாட்டம் போட்டது. அவர் நினைத்தது நடந்து விட்டதே. கரை புரண்டு வெள்ளமென பொங்கி வரும் மகிழ்வை வெளியே காட்ட முடியாமல் தவித்து, பெரும் பிரயத்தனப்பட்டு முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டார்.
ஒரு வழியாக மேகலாவை சமாதானம் செய்த சத்யன் சென்னை கிளம்புவதாக சொல்ல துரைசாமி தானும் உடன் வருவேன் என்று அடம்பிடித்தார்.
“அம்மாவை பார்த்துக்க ஆள் வேணாமா? நீங்க இங்கேயே இருங்க…”
“சத்யா அம்மாவையும் நம்ம கூட அழைச்சிட்டு போகலாம் பா… அவளுக்கும் மனசு கிடந்தது அடிச்சுக்கும்ல. என்ன இருந்தாலும் பெத்தவ இல்லையா” என்று மேகலாவிற்காக அவர் பரிந்து பேசினார்.
உண்மையில் அவரது அக்கறைக்கு பின்னால் இருப்பது ஆகப்பெரும் கயமை.
மனைவியின் அழுகையையும், மகளின் நிலையையும் கண்ணாற கண்டு ரசிக்க விரும்பினார். அதை நேரடியாக சொல்ல முடியுமா? பதட்டமே இல்லாமல் மனைவிக்காக பரிந்து பேசிய துரைசாமியை மற்ற நேரமாய் இருந்திருந்தால் கவனித்து இருப்பானோ என்னவோ அன்றைய சூழலில் தான் இருந்த பரபரப்பில் அவரை கவனிக்க மறந்து போனான் சத்யன்.
மற்றவர்களின் பதட்டமும் அவரை இன்னமும் குஷிப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
‘கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க… எல்லாரும் நல்லா அவஸ்தை படுங்க… என்னை மதிக்காம அவளை அந்த கூத்தாடி பயலுக்கு கட்டி வச்சுட்டு குடும்பத்தோட எல்லாரும் ஈன்னு சிரிச்சு சிரிச்சு என்னை வெறுப்பேத்துனீங்க இல்ல… இப்போ என்னோட நேரம்… நீங்க எல்லாம் கதறுங்க.. நான் ரசிக்கிறேன்’
அவருக்கு ஒரே ஒரு வருத்தம் மட்டும் தான். இதற்கு எல்லாம் தான் தான் காரணம் என்று வெளிப்படையாக மார்தட்டி சொல்ல முடியவில்லையே என்பது தான்.
அவர் கண்கள் அஞ்சலியை தேடி சலித்தது.
‘எங்கே போனா அந்த பொட்டச்சி… எந்த அளவுக்கு என்னை வம்புக்கு இழுத்தா.. இப்போ அவளைப் பார்க்கணுமே… இந்நேரம் கதறிக்கிட்டு இருப்பா’ என்ற எண்ணமே ஆனந்தமாய் இருந்தது அவருக்கு.
மருத்துவரிடம் மேகலாவையும் அத்தனை தூரம் அழைத்து செல்வது குறித்து விசாரித்துக் கொண்டு அவர்கள் காரில் கிளம்ப, ஒன்றுமறியாத பிள்ளை போல சத்யனிடம் கேட்டார் துரைசாமி.
“ஏன் சத்யா… அந்த பொண்ணு அஞ்சலிக்கு தகவல் தெரியுமா?”
“தெரியலைப்பா… நான் எதுவும் சொல்லலை… அவங்களுக்கு மச்சான் மேலயும், நம்ம சஹானா மேலயும் பிரியம் ஜாஸ்தி… சொன்னா எப்படி ரியாக்ட் செய்வாங்கன்னு தெரியலை.. ஊருக்கு போய் அவங்களே தெரிஞ்சுக்கட்டும். இப்போ வீட்டுக்கு போய் நம்ம கூடவே அழைச்சிட்டு போயிடலாம்” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வண்டி ஓட்டுவதில் முனைப்பாகி விட துரைக்குத் தான் கொஞ்சம் சலிப்பாய் இருந்தது.
‘அவ அழுவறத உடனடியா பார்க்க முடியாதோ… நல்லா கண் குளிர பார்க்கணும்’ என்று வன்மத்தோடு எண்ணியவருக்கு மறந்து போனது, அங்கே சென்னையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தான் பெற்ற மகளும் தான் என்பது.
வீட்டுக்கு சென்று அஞ்சலியையும் காரில் ஏற்றிக் கொள்ள அஞ்சலியின் பார்வை முதலில் மேகலாவைத் தான் தேடியது. வெகுதொலைவு பயணம் என்பதால் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி தூங்குவதற்கு ஊசி போடப்பட்டு இருக்க அந்த பெரிய வேனில் பின்னால் சவுகரியமாக தூங்க வைக்கப்பட்டு இருந்தார். அழுது அழுது அவர் முகம் கொஞ்சம் வீங்கிப் போய் இமைகள் தடித்து இருப்பதையும், உறக்கத்திலும் அவர் விசித்து அழுவதையும் பார்த்த அஞ்சலிக்கு மனதில் பாரம் ஏறியது.
‘என்ன ஒரு அருமையான பெண்மணி… இவருக்குப் போயா இப்படி ஒரு மிருகம் புருசனா அமையணும்’
வேன் சத்யனின் கரங்களில் பறந்து கொண்டிருந்தது. துரைசாமி மற்றவர்களின் வருத்தத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் இருந்ததாலோ என்னவோ தன்னையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியை கவனிக்கத் தவறினார்.
அஞ்சலிக்கு இன்னும் யாரும் சொல்லவில்லையே. அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற பயம் வேறு சத்யனுக்கு. அவள் அழுதால் ஆறுதல் கூறி சமாளிக்க மேகலாவும் சுய நினைவோடு இல்லையே.
பயணம் நீண்டு கொண்டே செல்வது போல எல்லாருக்கும் தோன்றியது. மற்றவர்களுக்கு கவலையில் துரைசாமிக்கோ மகிழ்ச்சியில்.
‘சை! இன்னுமா ஊர் வரலை… இன்னும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது’ என்றவருக்கு சலிப்பு வந்தது.
“சத்யா இன்னும் கொஞ்சம் வேகமா போப்பா” என்று சொல்ல அஞ்சலியின் விழிகள் அவர் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.
தன்னை மீறி அவரைப் பற்றிய உண்மைகளை சொல்லி விடுவோமா என்று பயந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
சத்யன் அவளது அமைதிக்கான காரணத்தை தவறாக ஊகித்து இருந்தான். அவளை வீட்டை விட்டு கிளம்ப சொல்லியதால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக அமைதியாக இருக்கிறாள் என்று நினைத்தான். துரைசாமிக்கு இருந்த மகிழ்ச்சியில் அவளது இறுக்கம் நிறைந்த முகம் மகிழ்ச்சியையே கொடுத்தது. அவளது முகத்தைப் பார்த்தே ஓரளவிற்கு கணித்து விடும் மேகலாவும் இப்பொழுது உறக்கத்தில் இருக்க… யாருக்கும் அஞ்சலியின் உண்மை மனநிலை தெரியாமல் போனது.
அஞ்சலி மட்டும் கொஞ்சம் கதறி அழுது இருந்தால் துரைசாமியின் மகிழ்ச்சியின் அளவு கூடி இருக்கக்கூடும். அவள் அழாதது அவருக்கு ஒரு மனக்குறை தான்.
‘எவ்வளவு அழுத்தம் பாரு… இப்படி ஒரு தகவல் வந்தும் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லையே. திமிர் பிடிச்சவ’
ஒரு வழியாக சில மணி நேர பயணங்களுக்குப் பிறகு கார் மருத்துவமனையை அடைந்தது. ஏற்கனவே மேகலாவிற்கு அங்கு ஒரு அறை தயார் செய்து வைக்கப்பட்டு இருக்க அவரை பத்திரமாக அறைக்கு அனுப்பி வைத்து விட்டு மூவரும் வேகமாக அபிமன்யுவையும், சஹானாவையும் தேடி சென்றனர்.
மூவர் நடையிலும் வேகம் இருந்தது. இருவருக்கு பதட்டத்தினால் வந்தது. ஒருவருக்கோ மகிழ்ச்சியால் வந்தது.
உள்ளே நுழைந்தவர்களை பார்த்ததும் பார்வதி அழுது கொண்டே மகளை நோக்கி ஓடினார்.
“அஞ்சலி… பார்த்தியா உங்க அண்ணன் நிலைமையை…என் புள்ளை எவ்வளவு ஆசையா ஊருக்குப் போனான். மருமக முகம் கூட தங்கமா ஜொலிச்சுதே. எந்த கொள்ளிக்கண்ணு பட்டுச்சோ தெரியலையே” நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தார். அவர்கள் வந்திருக்கும் தகவல் அறிந்ததும் வேகமாக ஓடி வந்த ராஜேந்திரன் மனைவியை தன்னுடைய தோளில் சாய்த்து அமைதிபடுத்தத் தொடங்கினார்.
“போதும் பார்வதி… ரொம்ப அழுதுட்ட… இதுக்கு மேல அழுதா உடம்பு தாங்காது. நீயும் உடம்பை கெடுத்துக்கிட்டா அப்புறம் உன் மகனுக்கும், மருமகளுக்கும் யார் பதில் சொல்றது?” என்று அவரை ஆறுதல் படுத்த இதை எல்லாம் பார்க்க துரைசாமிக்கு அத்தனை கொண்டாட்டம் உள்ளுக்குள்.
‘திரும்பி வர்றதா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.’ என்று உறுதியாக நினைத்தவர் வெளியே நல்லபிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டார்.
“எப்படி நடந்துச்சு சம்பந்தி?”
“ஏர்போர்டில் இருந்து வந்தவங்களை ஏதோவொரு கும்பல் வண்டியில் துரத்தி துரத்தி கொலை பண்ண முயற்சி செஞ்சு இருக்காங்க. அபிமன்யு தன்னால முடிஞ்ச அளவுக்கு சமாளிச்சு இருக்கான். போலீஸ் வந்து சேருறதுக்குள்ளே நிலைமை கை மீறிப் போயிடுச்சு. அவங்க ஏழெட்டு பேரு… அபிமன்யு ஒத்தையா சமாளிச்சு இருக்கான். யார் செஞ்ச புண்ணியமோ நம்ம புள்ளைங்க உயிருக்கு ஆபத்தில்லை.”
‘எதே உயிருக்கு ஆபத்தில்லையா’ முகம் இருண்டு போனது துரைசாமிக்கு. அவரின் அதிர்ச்சியை அஞ்சலியைத் தவிர யாரும் கவனிக்கவில்லை.
“டாக்டர் என்ன சொல்றாங்க மாமா” சத்யன் கேட்க கவலை நிரம்பிய பார்வை ஒன்றை அவனிடம் செலுத்தினார்.
“அபிமன்யுவுக்கு கழுத்துல, தோளுல எல்லாம் நல்ல காயம்… மருமகளுக்குத் தான்…”
“தங்கச்சிக்கு என்னாச்சு மாமா”
“உயிருக்கு ஆபத்தில்லை சத்யா… ஆனா காலில் பயங்கரமா வெட்டி இருக்காங்க. அபிமன்யுவையும் காலில் வெட்ட பார்த்து இருக்காங்க. ஆனா அதுக்குள்ளே போலீஸ் வரவும் தப்பிச்சு ஓடிட்டானுங்க. மருமகளுக்கு காலில் ஆபரேஷன் செஞ்சுட்டு இருக்காங்க… பயப்படும்படி ஒண்ணுமில்லை. ஆனா எழுந்திருச்சு நடக்க எப்படியும் ஆறு மாசம் ஆகிடும்னு சொல்றாங்க. ஆனா மறுபடியும் அவளால டான்ஸ் ஆட முடியும்னு உறுதியா சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க” என்று சொல்லி முடிக்க சத்யாவிற்கோ நெஞ்சில் இடி விழுந்ததைப் போலானது.
துரைசாமி முகம் முழுக்க பிரகாசமாக மலர்ந்தது. அவரைத் தாண்டி… அவரது பேச்சை மீறி குடும்பத்தார் அனைவரும் செய்த ஒன்று. ஆனால் இனி அதனால் துளி கூட பிரயோஜனம் இல்லை. இனி சகானாவால் ஆட முடியாது.எதையோ சாதித்த உணர்வுடன் இருந்தவருக்கு இன்னமும் ஏதோ குறை இருப்பதாக தோன்றியது.
‘வேறென்ன அஞ்சலியின் கதறல் தான்.’
அஞ்சலியின் முகத்தையே கூர்ந்து பார்த்தார். அதில் சலனமே இல்லை.உதடு கடித்து அழுகையை அடக்குகிறாளோ என்று கூட தோன்ற முடியாதபடி இயல்பாக இருந்தது அவள் முகம்.இதனை அவர் எதிர்பார்க்கவில்லை.
‘ஆனாலும் இவளுக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி. இப்போ கூட ஒரு சொட்டு கண்ணீர் விட மாட்டேங்கிறாளே’ அவளை எப்படியாவது அழ வைத்துப் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலும் வலுத்தது.
“அண்ணன், தங்கச்சி இரண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப பாசமா இருப்பாங்களாமே” மெல்ல அவளை தூண்டி விட்டு அழ வைக்க முயன்றார் துரைசாமி.
அப்பொழுது தான் மற்றவர்களின் கவனம் அஞ்சலியின் புறம் சென்றது.
அதுநேரம் வரை அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக இருந்த அஞ்சலியை பெற்றவர்கள் ஆச்சரியமாக பார்க்க , சத்யனோ கேள்வியாக பார்த்தான்.
அவள் முகம் மேலும் இறுகியதே தவிர அப்பொழுதும் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை அவள்.அபிமன்யுவிற்கு இப்படி ஆனதும் மகளுக்கு புத்தி பேதலித்து விட்டதோ என்று பயந்து போனார்கள் பெற்றவர்கள் இருவரும்.
“அ… அஞ்சலி ஏன்டா ரொம்ப அமைதியா இருக்க? உன்கிட்டே முதல்லயே சொல்லலைன்னு கோபமா?” ராஜேந்திரன் அவளது மௌனத்தை உடைக்க முயன்றார்.
“…”
“அண்ணன்காரன் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும் போது அது மனசு என்ன பாடுபடும். என்ன இருந்தாலும் ஒரே ரத்தம் இல்லையா? வலிக்கத் தானே செய்யும். அழணும்னு தோணினா அழுதுடு மா.”என்று அக்கறையாய் சொல்வதைப்போல சொல்ல அவரை நிமிர்ந்து ஒரேயொரு மைக்ரோ செகண்ட் பார்த்த அஞ்சலி சட்டென்று பார்வையை பெற்றவர்கள் புறம் திருப்பினாள்.
“ஐ அம் ஆல்ரைட் டாட் (I am alright dad). ரொம்ப டயர்டா இருக்கு. நான் வீட்டுக்கு போய்ட்டு ப்ரஷ் ஆகிட்டு வரட்டுமா?” என்று கேள்வி கேட்ட அஞ்சலி அங்கிருந்த எல்லாருக்குமே புதிதாக தெரிந்தாள்.
அவள் முகத்தில் காணப்பட்ட இறுக்கம் மேற்கொண்டு அவர்களை பேச விடாமல் செய்தது.
“நான் வீட்டுக்குப் போறேன் டாட்” என்றவள் யாருடைய பதிலையும் எதிர்பாராமல் அங்கிருந்து கிளம்ப மகளை தனியே அனுப்ப மனமின்றி சத்யனை உடன் செல்லும்படி கேட்டுக் கொண்டார் ராஜேந்திரன்.
“ரொம்ப அப்செட்டா இருக்கானு தோணுது தம்பி. இப் யூ டோன்ட் மைன்ட் ( if you don’t mind) கொஞ்சம் அஞ்சலி கூட வீட்டுக்கு போய் நான் வர்ற வரை துணைக்கு இருக்க முடியுமா? ஜஸ்ட் ஒரு மணி நேரம். இங்கே அபிக்கும், மருமகளுக்கும் இன்னும் சில டெஸ்ட் எடுப்பாங்க.. நான் இங்கே இருக்கணும். பார்வதியால தனியா சமாளிக்க முடியாது” என்று கெஞ்சுதலாக கேட்க மறுத்து பேசாமல் அவர்களின் காரை நோக்கி சென்றான்.
காருக்குள் அஞ்சலி அமர்ந்து இருப்பது தெரிய… கதவை திறந்து அவள் அருகில் அமர்ந்த அடுத்த நொடி அவனை இறுக அணைத்து இருந்தாள் அஞ்சலி.
கருத்துரையிடுக