அத்தியாயம் 7
அபிமன்யுவின் மொத்த குடும்பமும் மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்தது . குடும்பத்தை தவிர அவனது தொழில் வட்டாரத்தை சேர்ந்தவர்களும், அவனது ரசிகர்களும் சேர்ந்து அந்த மருத்துவமனையில் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தனர். மருத்துவமனையின் முன்னே கூடி இருக்க அந்தக் கூட்டத்தை சமாளிப்பது போலீசாருக்கும் மருத்துவமனையை சேர்ந்தவர்களுக்கும் பெரும் பாடாக இருந்தது.
அபியின் பெற்றோர்கள் இருவரும் ஐ சி யூ வின் முன்னே அழுது கரைந்து கொண்டு இருந்தார்கள். போலீசாரும் அவர்களுக்கு ஆறுதலாய் வார்த்தைகள் கூறினாலும் ஏனோ அவர்கள் மனம் சமாதானம் அடைய மறுத்தது.
“ சார் … அபி சாரையும் அவங்க வைப்பையும்(wife) தாக்க முயற்சி செஞ்சவங்க முகத்தை சிசிடிவி கேமரா வச்சு கண்டுபிடிக்கிற முயற்சி செஞ்சுகிட்டு இருக்கோம். கண்டிப்பா பிடிச்சிருவோம். நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க. அவங்க ரெண்டு பேருக்கும் எந்த ஆபத்தும் இருக்காது” என்று ஆறுதலாய் கூற அதை கவனித்து கேட்கும் நிலையில் பெற்றவர்கள் இருவருமே இல்லை . கண் முன்னே அபியும் சஹானாவும் உடல் எல்லாம் குருதி வழிய ஸ்ட்ரக்சரில் அழைத்து வரப்பட்ட தோற்றமே அவர்கள் கண் முன்னே வந்து நின்றது.
“நம்ம புள்ளைக்கு யாருங்க எதிரி.. அதுவும் மருமக பொண்ணு கூட இருக்கும்போது பொண்ணுன்னு கூட பாக்காம அவளையும் சேர்த்துக் கொல்ல முடிவு பண்ணி இருக்காங்க. அவ்வளவு பெரிய எதிரி நம்ம பிள்ளைக்கு யாருங்க?” கணவன் தோளில் தலை சாய்த்து கதறி அழுதவாறு பேசினார் பார்வதி. ராஜேந்திரனுக்கு என்ன சொல்லி மனைவியை சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை.
அபிமன்யு பொதுவாக யாரையும் பகைத்துக் கொள்வதில்லை. ஒருவேளை அதையும் மீறி யாராவது அவனிடம் வேண்டுமென்றே வம்பு வளர்த்தால் அவர்களை சுத்தமாக ஒழித்துக் கட்டி விடுவான். இன்னும் உடைத்து சொல்வதென்றால், அபிமன்யுவிற்கு எதிரி என்று யாரும் கிடையாது. ஏனெனில் அவன் எதிரிகளை விட்டு வைப்பதில்லை.
சஹானாவை கிரி மூலம் கடத்தி அபிமன்யுவிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்த மனிஷாவை கூட சுத்தமாக சினிமா துறையில் இருந்தே எல்லாரும் ஒதுக்கித் தள்ளும்படி செய்து விட்டான். ஹீரோயினாக நடித்து வந்தவள், இப்பொழுது அக்கா, அம்மா கதாபாத்திரத்தில் கூட நடிக்கத் தயாராயிருந்தாள். ஆனால் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அவளும் இனி தமிழ் சினிமாவில் தனக்கு வாய்ப்பில்லை என்று புரிந்து கொண்டவள் தெலுங்கு, மலையாளம் என்று ஒதுங்கிக் கொண்டாள். கிரியும் கை, கால் உடைந்து படுத்த படுக்கையில் இருக்கிறான். அவர்கள் இருவரும் இதை செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் இந்த கொடூரத்தை யார் செய்திருக்கக் கூடும் என்று அவர் தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தார்.
“அஞ்சலி கிட்டே சொல்லிட்டீங்களா” அழுதுகொண்டே கணவரிடம் கேட்டார் பார்வதி.
“இல்லை… சொன்னா அவ தாங்க மாட்டாளே… அண்ணன்னா அவளுக்கு உயிராச்சே…”
“அவ கிட்டே சொல்லாம இருக்க முடியாதுங்க… அவ கிட்டே இதை சொல்ல எனக்கு தெம்பில்லை.தயவு செஞ்சு நீங்களே சொல்லிடுங்க” என்றவர் சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டே ஊரில் உள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டத் தொடங்கினார்.
இங்கே ஊரிலோ மேகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு துணையாக எல்லாரும் அமர்ந்திருக்க துரைசாமியை மட்டும் இருவருமே மேகலாவின் அறைக்குள் அனுமதிக்கவில்லை.
“என் பொண்டாட்டியை நான் பார்ப்பேன்… நீ யாருடா என்னைத் தடுக்க” சத்யனை மீறிக்கொண்டு செல்ல முயன்றவரை சத்யனின் அழுத்தம் நிறைந்த குரல் தடுத்து நிறுத்தியது.
“இத்தனை பேர் முன்னாடி உங்களை உள்ளே வராம தடுக்கிறது எனக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனா அதை ஊர்க்காரங்க யாரும் பார்த்தா அதுக்கு அப்புறம் உங்க மரியாதை என்ன ஆகும்னு மட்டும் யோசிச்சுக்கோங்க” என்றவன் கைகளை இறுக்கமாக கட்டிக்கொண்டு அறை வாசலை மறித்தபடி நிற்க துரைசாமி ஒரு நொடி தயங்கினார்.
‘தள்ளி விட்டுடுவானோ… சை! கொஞ்சம் கூட அப்பன்கிற மரியாதையே இல்லை…’
‘கட்டின பொண்டாட்டி ரூம்ல என்னை உள்ளே விடமாட்டேங்குறாங்களே பார்க்கலாம்…இன்னும் எத்தனை நேரம் இவங்க ஆட்டம்னு’ என்று மனதிற்குள் மகனை வறுத்து எடுத்தார்.
அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தும் விதமாக அஞ்சலி அறையின் உள்ளே இருந்தது அவருக்கு துளியும் பிடிக்கவில்லை.
‘ எங்கிருந்து வந்தவ மட்டும் உள்ள இருக்கலாமா’ என்று அஞ்சலியை தாளித்தார்.
உண்மையில் முதல் நாள் இரவில் மேகலா அவரிடம் விரதம் இருப்பது குறித்து சொல்லியிருந்ததை அவர் மறந்தே போய்விட்டார் என்பதுதான் உண்மை. அவரது நினைவு முழுக்க அடுத்த நாள் விமானத்தில் தரை இறங்கப் போகும் அபிமன்யுவையும், சஹானாவையும் கூலிப்படையினர் சிறந்த(!) முறையில் கொலை செய்ய வேண்டுமே பதட்டமே அவருக்கு நிரம்பி இருந்தது .
தான் எந்த விதத்திலும் மாட்டி விடக்கூடாது என்ற பதட்டமும் அவரிடத்தில் இருந்தது.
தப்புத்தவறி அவர்கள் தப்பி விட்டாலோ அல்லது அவர்களை கொலை செய்ய முயன்றது தான் என்பது வெளியே தெரிந்த விட்டால் என்ன ஆவது என்ற பதட்டமும் அவருக்கு சேர்ந்திருக்க மேகலா அவரிடம் விரதம் இருப்பதைக் குறித்து சொன்ன தகவல் எதுவும் அவர் மூளையை சென்று சேரவே இல்லை.
அதை மறந்து விட்டதாலேயே அவர் முயல் கறியை வாங்கி வீடு வந்து சேர்ந்திருந்தார். மனைவி கீழே விழுந்த போது கூட அவருக்கு விவரம் புரியவில்லை.
மருத்துவமனையில் மனைவியை சேர்த்ததும் சத்யன் திட்டிய தான் பிறகு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டார் . ஆனால் அதே நேரம் மகனிடம் தன்னுடைய தவறை காட்டிக் கொள்ள விரும்பாமல் முகத்தையும் நெஞ்சையும் உயர்த்திக் கொண்டே அலைந்து கொண்டிருந்தார்.
அவரது அந்த தோற்றம்தான் சத்யனுக்கு இன்னும் ஆத்திரத்தை கூட்டியது.
‘என்ன மனிதர் இவர்! இத்தனை ஆண்டுகளாக அவர் மீது உயிரையே செலுத்தி வந்த அவருடைய மனைவி படுத்த படுக்கையாய் கிடக்கிறார் இப்பொழுது கூட வீம்பாய் திரிகிறார்’ என்று தந்தையின் மீது கோபமாகவே இருந்தான் சத்யன்.
ஒரு வேளை தாயின் இந்த நிலைக்கும், ஊரில் அபிமன்யுவும் சஹானாவும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதற்கும் காரணம் தந்தை தான் என்பதை பின்நாளில் அறிய நேர்ந்தால் அவன் மனது எப்படி மாறக்கூடும்? தந்தையை மன்னிப்பானா? அல்லது தங்கைக்காகவும், தங்கை கணவனுக்காகவும் தந்தையை பகைத்துக் கொள்வானா?
துரைசாமி உண்மையில் வேறொரு பதட்டத்தில் இருந்தார். அபிமன்யு சஹானாவையும் கொல்லச் சொல்லி இவர் அனுப்பிய ஆட்கள் அந்த வேலையை முடித்து விட்டார்களா இல்லையா என்ற தகவல் இன்னும் அவருக்கு வந்து சேரவில்லை. அவர் அந்த கூலிப்படை ஆட்களிடம் அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் சரி விஷயம் நல்லபடியாக முடிந்தாலும் சரி முடியாவிட்டாலும் சரி அந்த கூலிப்படை ஆட்களிடம் எண்களில் இருந்து தன்னுடைய எண்ணுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் அழைத்து எந்த தகவலையும் பரிமாறிக் கொள்ள வேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லி இருந்தார். அதனால் அவர்களிடம் இருந்து இன்னமும் அவருக்கு எந்த தகவலும் வரவில்லை .என்ன நேர்ந்தாலும் எப்படியும் அபிமன்யு வீட்டு வாயிலாகவோ அல்லது அஞ்சலியின் வழியாகவோ தனக்கு தகவல் தெரிய வந்து விடும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
ஆனால் அவர் நினைத்தபடி அவருக்கு தகவல் உடனே வந்து சேரவில்லை. ஏற்கனவே அபிமன்யுவின் பெற்றோர்கள் அஞ்சலியிடம் உடனே சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்து இருந்ததால் இன்னமும் தகவல் அஞ்சலியிடம் வந்து சேரவில்லை . அதனால் இவருக்கும் கூலிப்படையினர் செயலை ஒழுங்காக செய்து முடித்தனரா என்ற தகவல் தெரியாததால் மனதில் ஒரு பதட்டம் சூழ்ந்து இருந்தது .
அவராக அவர்களுக்கு அழைத்துப் பேசவும் பயம் ஏனெனில் சில செய்தித்தாள்களில் படித்திருக்கிறார் சில கொலை வழக்குகளில் கொலையாளி பிடிபட்டால் அவனது தொலைப்பேசி எண்ணை வைத்து யார் கொலை செய்தது என்பதை கண்டுபிடித்துவிட முடியும் என்பதை அவர் அறிந்திருந்தபடியால் தானே அவர்களுக்கு அழைப்பதற்கு வெகுவாக தயங்கிக் கொண்டிருந்தார்.
நேரம் கழிந்ததே ஒழிய அவர்களிடமிருந்து தகவல் வராமல் போகவே பொறுத்து பொறுத்து பார்த்தவர், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் உள்ளூரில் இருந்த கடைகளை விட்டு விட்டு வெளியூரில் சென்று வேறு ஒரு நபரின் அடையாள அட்டையை காண்பித்து போலி சிம் கார்ட் ஒன்றை வாங்கிக் கொண்டார்.
அதையும் தன்னுடைய மொபைலில் போடாமல் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து ஒரு சாதாரண கீபேட் ஃபோனை வாங்கி அதிலே போட்டுக் கொண்டார். யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தவர் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத தைரியத்தில் ஹாலில் அமர்ந்து பேச முடிவெடுத்தார்.
அறைக்குள் செல்லும் அளவிற்கு கூட பொறுமையில்லாமல் அந்த மற்றொரு எண்ணில் இருந்து அவர்களுக்கு அழைத்து விட்டார்.
“என்ன ஆச்சு?”
“….”
“அதெல்லாம் எனக்குத் தேவை இல்லை… உயிர் போச்சா? இல்லையா?”
“…”
“போலீஸ் வந்தாங்கனு சாக்கு எல்லாம் சொல்லாதே… இலட்சக்கணக்கில் காசு வாங்கிட்டு இப்போ இப்படி சொன்னா என்ன அர்த்தம்… நீ நல்ல தொழில்காரன்னு எல்லாரும் சொன்னதை வச்சுத்தான் உன்கிட்டே அவங்களை கொல்ற பொறுப்பை ஒப்படைச்சேன். நீ என்னடான்னா இப்படி அசால்ட்டா சொல்ற…”
“…”
“இதோ பாரு… எனக்கு பெத்த பொண்ணு அப்படிங்கிற பாசம் எல்லாம் கிடையாது. எனக்கு நான் நினைச்சது நடக்கணும் அவ்வளவு தான். அப்படி நடக்கல… உனக்கு மட்டும் பாவம் பாப்பேனா? இன்னும் கூட கொஞ்சம் பணம் செலவழிச்சு உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்”
“…”
“ஹாஸ்பிடலில் உன் ஆள் ஒருத்தனை விட்டு பார்த்துட்டு வர சொல்லு… புருசன், பொண்டாட்டி இரண்டு பேரும் உயிரோட வரக்கூடாது. என்னாலயும் அவங்களுக்கு போன் செஞ்சு விசாரிக்க முடியாது. புரிஞ்சுதா? நீயே விசாரிச்சுட்டு எனக்கு தகவல் சொல்லு” என்றவர் போனை அணைத்து விட்டு நிமிர்ந்தார்.
வேலையாட்கள் யாரும் கண்ணில் படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு . மடமடவென்று தன்னுடைய அறைக்குள் சென்று நுழைந்து கொண்டார்.
அவர் பேசியதை எல்லாம் அங்கே ஒரு ஜீவன் கேட்டதையோ அதிர்ந்து போய் உலகம் மறந்து நின்றதையோ அவர் அறியாமல் போனதோ அவரின் கெட்ட நேரம் தான்.
சமையல் அறையில் இருந்து சத்யனுக்காக மதிய உணவையும், மேகலாவிற்கு மாற்று உடையும் எடுத்துக்கொள்ள வந்த அஞ்சலியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
எல்லா பொருட்களையும் சரி பார்த்துக் கொண்டவளின் மனது எதையோ நினைத்து பதறி துடித்தது.
உடனே அபிமன்யுவிடமோ, சகானாவிடமோ பேசி விட எண்ணி அவர்களுக்கு அழைக்க… இருவரின் எண்ணையும் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
பூசாரியின் எச்சரிக்கை மீண்டும் மீண்டும் அவள் காதில் எதிரொலிக்க வரப்போகும் ஆபத்தைக் குறித்து தெரிவித்தே ஆக வேண்டும் என்று நினைத்து அவனுக்கு வீடியோ ஒன்றை அனுப்ப நினைத்தாள்.
மிக சரியாக அந்த நேரம் அங்கே வந்த துரைசாமி பேசிய அத்தனையும் ஒரு வார்த்தை விடாமல் கேட்ட அஞ்சலி திகைப்பூண்டை மிதித்தது போல் அப்படியே நின்றாள். அந்த இடத்தை விட்டு நகரக் கூட அவளால் முடியவில்லை அதிர்ச்சி என்பது கூட சாதாரண வார்த்தை தான் பேரதிர்ச்சி என்பதையும் தாண்டிய நிலையில் இருந்தாள்.
வெகுநேரம் அங்கேயே சிலை போல இருந்தாள் அஞ்சலி. மெதுவாக தன்னை மீட்டுக் கொண்டவள் வேகமாக தன்னுடைய பெற்றோருக்கு அழைத்தாள்.
அபிமன்யுவிற்கும், சஹானாவிற்கும் மருத்துவம் பார்த்த மருத்துவர் அழைப்பதாக சொல்ல இருவருமே போனை அபிமன்யுவின் பிஏ விடம் கொடுத்து விட்டு சென்று இருக்க, அஞ்சலி அழைப்பது தெரிந்தும் அவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை.
எடுத்து அவளிடம் என்னவென்று சொல்வது… பெற்றவர்கள் அவர்களே அவளிடம் சொல்ல தயங்குகையில் அவர் எப்படி சொல்வார். அவளது அழைப்பை தவிர்த்து விட்டார்.
அஞ்சலியின் மனது தன்னுடன் பிறந்தவனுக்காகவும் , தன்னுடைய அண்ணிக்காகவும் துடித்தது.
மருத்துவமனையில் முகம் கொள்ளா பதட்டத்துடனும், வேதனையுடனும் மருத்துவரின் முன்னால் அமர்ந்து இருந்தார்கள் ராஜேந்திரனும், பார்வதியும்.
“இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தில்லை… ஆனா…” மருத்துவர் பேசப்பேச கணவரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்ட பார்வதி அவரது தோளிலேயே சாய்ந்து கதறி அழத் தொடங்கினார்.
அதே நேரம் தொலைக்காட்சியிலும், சமூக வலை தளங்களிலும் அபிமன்யுவின் மீதும், அவன் மனைவியின் மீதும் கூலிப் படையினர் நடத்திய தாக்குதலில் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் செய்தி வெளியாகி பரபரப்பாக… அதைப் பார்த்த அஞ்சலி மேலும் பதறினாள்.
உடனேயே பறந்து போய் அண்ணனைப் பார்க்கத் துடித்தாள்.
அந்த நேரத்தில் தான் துரைசாமி உள்ளே வந்து கூலிப்படையினரிடம் பேசியது.
எந்த வித சலனமும் இல்லாமல் எல்லா பொருட்களையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு மருத்துவமனை சென்ற அஞ்சலி கண் விழித்து அமர்ந்து இருந்த மேகலாவை பார்த்ததும் இயல்பாய் சிரிக்க முயன்றாள்.
“என்னடா தங்கம் பயந்துட்டியா? எனக்கு ஒன்னுமில்ல… சாதாரண மயக்கம் தான்னு டாக்டர் சொல்லிட்டாங்க” என்று சொல்ல தளர்வாய் புன்னகைத்தாள். அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சத்யனுக்கும் கூட அவள் மீது பரிவு வந்தது தனது அன்னையின் மீது அவள் வைத்திருக்கும் அன்பை எண்ணி.
ஒரு வார்த்தை பேசாமல் கட்டிலில் அமர்ந்து இருந்த மேகலாவின் காலடியில் அமர்ந்து அவரது கைகளை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
“ஆன்ட்டி…”
“சொல்லுடா…”
“நான் ஒன்னு கேட்பேன்… அதுக்கு உங்க சம்மதம் வேணும்”
“நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்வேனா? என்ன வேணும் கேளு” என்று கேட்க சத்யன் இருவரையும் சுவாரசியமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இனி இது போன்று விரதம் இருந்து உடம்பை கெடுத்துக் கொள்ள கூடாது’ என்று அவள் கேட்பாள் என்று இருவரும் நினைக்க அஞ்சலியோ அசராமல் வெடிகுண்டை பற்ற வைத்தாள்.
“என்னை உங்க வீட்டு மருமகளா அச்செப்ட் செஞ்சுப்பீங்களா?” என்று குரலில் ஒருவித தீவிரத்துடன் கேட்க இதை அவர்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது அதிர்ந்த முக பாவனையிலேயே தெரிந்தது.
சத்யன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க… அவளோ மேகலாவின் முகத்தையே ஒருவித தீவிர பாவனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கருத்துரையிடுக