சதிராடும் திமிரே 6

அத்தியாயம் 6
அபிமன்யுவும் சகானாவும் மனமே இல்லாமல் வெளிநாட்டை விட்டு சொந்த ஊரை தேடி வந்தார்கள். கிளம்பும் முன் இருவருமே தங்களது வீட்டிற்கு அழைத்து தகவல் சொல்லி விட இரு வீட்டினருமே மகிழ்ந்து போனார்கள். துரைசாமியையும் சேர்த்து தான். பின்னே அவரின் வஞ்சத்தை தீர்க்கப் போகிறார் இல்லையா?
மகளாய் இருந்தால் என்ன? மனைவியாய் இருந்தால் என்ன? எப்பொழுதும் அவர் தான் ஜெயிக்க வேண்டும். அவர் சொல் தான் சபையில் நடக்க வேண்டும். அவரை மீறி எதுவும் நடந்ததாக இருக்கக்கூடாது.
ஒருமுறை அவரது மகளால் அவரது மனைவியும் அவரது பேச்சை மீறி நடந்தது போதும். இனியொரு முறை அப்படி நடக்கக்கூடாது. அதற்கு மனைவியை தூண்டி விடும் மகள் இருக்கக்கூடாது. என்ற முடிவுக்கு வந்தவர் கூலிப்படை ஆட்களை அழைத்து அவர்கள் ஊருக்கு திரும்பும் தகவலை சொன்னவர் அடுத்து அவர்கள் சொல்லப் போகும் நல்ல செய்தியை கேட்பதற்காக ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினார்.
அபிமன்யுவும், சகானாவும் தங்களுக்கு ஊரில் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் காதல் கிளிகளாய் ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டு தங்களை மறந்து போய் ஊர் வந்து சேர்ந்தனர்.
விடியற்காலை நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் அபிமன்யுவின் கார் அவனுக்காக காத்திருந்தது. தங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டதும் வெளியே வந்ததும் காரில் ஏறிக் கொண்டனர். காரில் டிரைவர் இருந்ததால் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டாலும் இருவரின் விரல்களும் ஒன்றோடு ஒன்று இறுக்கமாய் பற்றிக் கொண்டு இருந்தது.
இன்னும் முழுதாக விடிந்திராத காலை நேரத்தில் அபிமன்யுவின் கார் கூட்ட நெரிசல் இல்லா சாலையில் அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தது.
வண்டி எப்பொழுதும் வீட்டுக்கு செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்வதை முதலில் கவனித்த அபிமன்யு என்னவென்று டிரைவரிடம் கேட்டான்.
“என்னனு தெரியல சார். வீட்டுக்குப் போற வழி எல்லாம் பிளாக் ஆகி இருக்கு. அதான் ரோட்டை சுத்தி வீட்டுக்கு போயிட்டு இருக்கேன். சாக்கடை எதுவும் தோண்டி இருப்பாங்களா இருக்காம்” என்று பதில் சொன்னவர் சாலையில் கவனமாக என்னவோ உறுத்தலாக இருக்க… சாலையை திரும்பி பார்த்தான்.
அவனது காரை பின்தொடர்ந்து ஒரு கருப்பு நிற ஆம்னி வேன் மட்டும் வந்து கொண்டிருந்தது.

அந்த ரோட்டில் வேறு எந்த வாகனமும் இருக்கவில்லை.
என்னவோ உறுத்தலாக தோன்ற அந்த வண்டியின் நம்பர் பிளேட்டை பார்க்க முயன்றான். வேண்டுமென்றே சேறோ, கரியோ பூசி நம்பரை மறைக்க முயன்று இருந்தார்கள் போல. எதுவும் தெளிவாக தெரியவில்லை. லேசான பதட்டத்துடன் திரும்பி மனைவியை பார்த்தான். கணவனின் தோளில் மகிழ்வுடனும், நிறைவுடனும் சாய்ந்து அமர்ந்து இருந்தாள்.
போனை எடுத்தவன் உடனே தன்னுடைய பிஏவிற்கு அழைத்தான். நிலமையை தெளிவாக சொன்னவன் மெல்ல திரும்பி வண்டியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்தான். தெளிவாக தெரியவில்லை. ஆயுதம் எதுவும் வைத்து இருப்பார்களோ என்று பயம் கொண்டான்.
‘போலீஸ் எப்படியும் பத்து நிமிடத்திற்குள் வந்து விடுவார்கள் அதுவரை தாக்கு பிடித்தால் போதும்’ என்று எண்ணியவன் டிரைவரிடம் மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினான்.
“தம்பி… இந்த வழியா போனா வீட்டுக்கு போக முடியாதே…”
“நான் சொல்றதை மட்டும் செய்ங்க… முடிஞ்ச அளவுக்கு மக்கள் நடமாட்டம் இருக்கிற இடமா பார்த்து வண்டியை ஓட்டுங்க” என்று சொன்னவனின் குரலில் இருந்த அழுத்தத்தை உணர்ந்த டிரைவர் மறுபேச்சு பேசாமல் அவன் சொன்னதை செய்தார்.
அவன் மட்டுமாக தனியாக இருந்தால் அவனுக்கு பயமில்லை. ஆனால் அவனது உயிர் மனைவியும் அல்லவா உடன் இருக்கிறாள். அவளுக்கு எதுவும் ஆகி விடக் கூடாதே என்று அவன் மனம் பதைபதைத்தது. சஹானா இதை எதையும் அறியாமல் கணவனின் தோளில் சாய்ந்தவள் மெல்ல தூங்கத் தொடங்கினாள்.
அபிமன்யு சுதாரித்து கொண்டு பாதை மாறியதை அவர்களும் உணர்ந்து கொண்டார்களோ என்னவோ அதுவரை கொஞ்சம் நிதானமாக பின்தொடர்ந்து வந்தவர்கள் அவர்களின் வண்டியின் வேகத்தை அதிகரித்தார்கள்.
அபிமன்யுவின் டிரைவரும் அவர்களை கண்டு கொண்டவர் பதட்டத்துடன் தங்களுடைய காரின் வேகத்தை அதிகப்படுத்தினார். காரை வளைத்து ஒடித்து ஓடியதில் துயில் கலைந்த சஹானா நடப்பதை உணர்ந்து மிரட்சியுடன் அபிமன்யுவின் கரங்களை கெட்டியாக பற்றிக் கொண்டாள்.
“ஒன்னுமில்ல பேபி… போலீஸ் வந்துட்டு இருக்காங்க. பயப்படாதே. நான் இருக்கேன்”
“யாருங்க இவங்க?… நம்மளை ஏன் துரத்துறாங்க?”
“தெரியலை டா…” என்றவன் டிரைவரை இறங்க சொல்லிவிட்டு தானே காரை ஓட்டலாமா என்று யோசித்தான். ஆனால் அது ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.அவர்கள் அதற்குள் தங்களை நெருங்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தவன் டிரைவரிடம் காரை அதிவேகத்தில் செலுத்த பணித்தான்.

நெரிசல் மிகுந்த சாலையில் ஓரளவிற்கு மேல் அவரால் வேகமாக செல்ல முடியவில்லை.சிக்னல் விழுந்து விட அவர்கள் அவர்கள் அதற்கு மேல் முன்னேற முடியாதவாறு அவர்களுக்கு முன்னால் நிறைய வண்டிகள் பாதையை மறித்து நிற்க… வேறு வழியின்றி காரில் இருந்து இறங்கிய அபிமன்யு, சஹானாவை இழுத்துக் கொண்டு தெருவில் ஓடத் தொடங்கினான்.
அந்த வேனில் இருந்து பத்துக்கும் அதிகமான நபர்கள் இருப்பதையும் அவர்களின் கண்களில் உயிர் பறிக்கும் வெறி இருப்பதையும் அவன் உணர்ந்து கொண்டான். அவர்கள் துரத்தும் பொழுது அபிமன்யு,சஹானா இருவரையுமே குறி வைத்து துரத்துவதை உணர்ந்து கொண்டான். தன்னை மட்டும் துரத்தி இருந்தால் கூட சஹானாவை தனியே வேறு திசையில் அனுப்பி விட்டு அவன் மட்டுமாக அவர்களுடன் சண்டையிட்டு இருப்பான். இப்பொழுது அவளுக்காகவும் சேர்த்து ஓடத் தொடங்கினான்.
அபிமன்யு ஒரு பிரபலம். ஊருக்கே அவனைத் தெரியும். அவனையும் அவனது மனைவியையும் கொல்வதற்கு கூலிப்படையினர் துரத்துவதை கண்ட பொதுமக்கள் சிலர் போலீசுக்கு தகவல் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொள்ள இன்னும் சிலரோ தங்களுடைய மொபைலை எடுத்து அந்த காட்சிகளை பதிவு செய்யத் தொடங்கினர். ஏதோ அவர்களால் முடிந்த பொது சேவை!.
ஒரு கட்டத்திற்கு மேல் பொதுமக்கள் ஆங்காங்கே சூழ்ந்து கொண்டு நின்றது அவர்களின் ஓட்டத்திற்கான பாதையை தடை செய்ய… விலகி ஓட வழியின்றி அந்த கும்பலிடம் மாட்டிக் கொண்டார்கள் இருவரும்.
அபிமன்யு, சஹானாவை தன்னுடைய முதுகுக்கு பின்னால் இழுத்துக் கொண்டவன் கண்களால் நாலாபுறமும் அலசி அத்தனை பேரை எப்படி சமாளிப்பது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் தோளில் கரங்களை இறுக பற்றியிருந்த சஹானாவின் கரங்கள் நிலையில்லாமல் நடுங்கிக் கொண்டிருக்க தன்னவளின் மனம் எந்த அளவிற்கு பயத்தால் நடுங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிய அவனுக்கு அந்த ஆட்களை ஏவி விட்ட அந்த முகம் அறியா எதிரியின் மீது ஆத்திரம் பன்மடங்கானது.
அதற்குள் அவர்கள் இருவரையும் தாக்குவதற்கு தயாராக காத்திருந்த கூலிப்படை ஆட்களை அங்கிருந்த சில இளைஞர் பட்டாளம் கற்களால் தாக்க முற்பட்டது. அதில் ஒரு சில கற்கள் அபிமன்யு, சஹானாவின் மீதும் படத் தொடங்கியது. அபிமன்யு அவளை முழுவதுமாக தன்னுள் பொத்திக் கொண்டான். கோழிக் குஞ்சை பாதுகாக்கும் தாயைப் போல..அவனது கரங்களுக்குள் இறுக்கிக் கொண்டான்.
“டேய்! இவங்களை ஒண்ணுமே செய்யாம போனா துட்டு கிடைக்காதுடா… அவங்க இரண்டு பேர் காலையும் வெட்டுங்க… எல்லாரும் சுத்தி வளைங்க”அவர்களின் தலைவன் போல் இருந்தவன் குரல் கொடுக்க… அபிமன்யு சுதாரித்து அவர்களின் தாக்குதலை முடிந்த அளவுக்கு சமாளித்தான்.
ஆயினும் கையில் எந்த ஆயுதமும் இன்றி எதிரிகளை சமாளிப்பது அவனுக்கு பெரும் திண்டாட்டமாகத் தான் இருந்தது. தன்னுடைய சட்டையை பிய்த்து எறிந்தவன் அதைக் கையில் கோர்த்துக் கொண்டு சில நொடிகள் எதிரிகளை சமாளித்தான்.
தூரத்தில் எங்கோ போலிசின் சைரன் ஒலி கேட்க.. அபிமன்யு கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தான். அந்த ஒற்றை நொடி எதிரிக்கு சாதகமாய் போனது.
அபிமன்யுவின் கைகளில் வெட்டியவர்கள், போலீஸ் நெருங்குவதற்குள் இருவரையும் கொன்று விட வேண்டும் என்ற முடிவுடன் அடுத்ததாய் சஹானாவை நெருங்கினார்கள்.

ஊரில் மேகலா மிகுந்த சிரத்தையுடன் தன்னுடைய விரதத்தை மேற்கொண்டு இருந்தார். அன்றைய தினம் காலையில் எழுந்ததில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் தீவிரமான முறையில் விரதத்தில் இருந்தார். அஞ்சலி கூட இரண்டு முறை அவருக்கு குடிக்க ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள். ஆனால் அதை மறுத்து விட்டார்.
“வேண்டாம் தங்கம். மதியம் அம்மன் கோவிலில் இருந்து அம்மனோட அபிஷேக பால் வரும். அதை குடிச்சுக்கிறேன்”
“இவ்வளவு தூரம் உங்களை கஷ்டப்படுத்திக்கிறீங்களே ஆன்டி… எனக்கு கஷ்டமாயிருக்கு” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.
“என் பிள்ளைக்காக செய்றேன். இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை அஞ்சலி. அவங்களுக்காக ஒருநாள் சாப்பிடாம இருக்க மாட்டேனா?” என்றார் புன்னகை துளியும் வாடாமல்.
“எப்படித் தான் சாப்பிடாம இருக்க முடியுதோ உங்களால?” என்றாள் கண்களில் ஆச்சரியத்தை தேக்கி.
“ஒருத்தர் மேல நாம வைக்கிற அன்பு அவங்களுக்காக எதையும் செய்ற மன திடத்தையும், உடல் பலத்தையும் நமக்கு கொடுக்கும் அஞ்சலி.” என்றவர் பரிவாய் அவள் தலையை தடவிக் கொடுத்தார்.
“நீ போய் டிவி பாரு போ… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றவர் அம்மன் பாடலை முணுமுணுத்துக் கொண்டே கையில் இருந்த பூவை மாலையாக கோர்த்துக் கொண்டிருந்தார்.
“எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு ஆன்டி..”
“எதுக்குடா…”
“நான் இங்கே வந்ததுல இருந்து என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டீங்க. ஆனா இன்னிக்கு நீங்க சாப்பிடாம இருக்கும்போது நான் நல்லா மூக்குப் பிடிக்க சாப்பிடறேனே”
“ஹா ஹா… விரதம் நான் தான் இருக்கேன் அஞ்சலி. நீ ஏன் சாப்பிடாம இருக்கணும். அதுவில்லாம என் புருசனும், பையனுமே சாப்பிட்டுட்டு தானே இருக்காங்க. நீ எதுக்காக பட்டினி இருக்கணும். போடா… ரொம்ப யோசிக்காம போய் ஓய்வெடு” என்றவர் மீண்டும் தன்னுடைய பூஜை வேலையை தொடர… அஞ்சலிக்கு மனமே இல்லாமல் அவரை விட்டு நகர்ந்தாள்.
ஹாலுக்குள் வந்தவள் முதலில் கண்டது காலை உணவை வேகமாக உண்டு கொண்டிருந்த சத்யனைத் தான். ஏனோ அவன் மீது கோபம் வந்தது அவளுக்கு. இவனும் அவனது தந்தையைப் போலத் தானோ என்று
“உங்க அம்மா அங்கே சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சுட்டு இருக்காங்க.. நீங்க என்னடானா…”என்று அவள் பேச்சை தொடங்கி இருக்க.. பாதி பேச்சிலேயே வேகமாக எழுந்தவன் தன்னுடைய தாயை நாடி வேகமாக சென்று இருந்தான்.
“அம்மா… இன்னும் சாப்பிடலையா நீங்க?”
“இல்லை சத்யா… இன்னிக்கு விரதம்”
“என்னம்மா.. இப்போ எதுக்கு விரதம் இருந்து உடம்பை கெடுத்துக்கறீங்க”
“எல்லாம் நம்ம வீட்டு நல்லதுக்கு தான் தம்பி.. பூசாரி அருள் வந்து ஆடினப்போ விரதம் இருக்க சொன்னார்.”
“பூசாரி சொல்லியாச்சா… இனி தலைகீழா நின்னாலும் நீங்க சாப்பிட மாட்டீங்களே… இனி பூசாரி விரதம் இருக்க சொன்னா என்கிட்டே சொல்லுங்க நான் உங்களுக்கு பதிலா விரதம் இருக்கேன்” என்றான் அவரை முறைத்துக் கொண்டே..
“நீ வெளியே நாலு இடம் அலையறவன்… பட்டினியோட அலைஞ்சா உடம்பு என்னாகிறது”
“அப்படினா இனி உங்களுக்கு பதிலா நான் விரதம் இருக்கவா ஆன்ட்டி” என்று அஞ்சலி கேட்க மேகலா, சத்யன் இருவருமே அதிர்ந்தனர்.
‘இந்த வீட்டினருக்காக அஞ்சலி எப்படி விரதம் இருக்க முடியும்? சாத்தியம் தான். ஒருவேளை அவள் இந்த வீட்டின் மருமகளாக மாறினால்.’ என்ற எண்ணம் தாய், மகன் இருவர் மனதிலும் ஒரே நேரத்தில் மின்னி மறைந்தது.
அதே நேரம் துரைசாமியின் ஆர்ப்பாட்டமான குரல் அனைவரையும் அவர் இருந்த திசை நோக்கி நகர வைத்தது.
“மேகலா இங்கே பாரேன்… முயல் கறி கொண்டு வந்து இருக்கேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல இளம் கறியா கிடைச்சுதா… அதான் வாங்கிட்டு வந்துட்டேன். நீ போய் நல்லா மிளகு போட்டு மதியத்துக்கு வறுத்து வை… நான் போய் வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்திடறேன்” என்று அவர் போக்கில் பேசிக் கொண்டிருக்க மற்றவர் யாருமே வாயை திறக்காததில் சந்தேகம் கொண்டு திரும்பிப் பார்த்தார்.
மேகலாவின் பார்வை அவர் கையில் இருந்த முயலின் மீதிருந்து சிந்திய ரத்தத் துளிகள் வீடு முழுக்க அவர் நடந்து வந்த வழியில் எல்லாம் சிந்திக் கொண்டே வந்திருக்க அவரது பார்வை நிலைகுத்திப் போய் இருந்தது.
அவர் காதுகளில் அருள் வந்து ஆடிய பூசாரியின் வார்த்தைகள் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“விரத பங்கம் வராம செஞ்சு முடி… உன் புள்ளைக்கு நான் பொறுப்பு… பங்கம் வந்துட்டா…”என்றவரின் வார்த்தைகள் இப்பொழுதும் அவர் உடலில் அதிர்வலைகளை தோற்றுவிக்க… அடுத்து என்ன செய்வது என்று கூட புரியாமல் அப்படியே தோய்ந்து போய்நிற்க, அவரது நிலையை புரிந்து கொண்ட சத்யனும், அஞ்சலியும் அவரை நோக்கி ஓடி அவரைத் தாங்க… துரைசாமியோ ஒன்றுமே புரியாமல் திருதிருத்தார்.
அங்கே சென்னையில் கூலிப்படை ஆட்களின் கையில் இருந்த ஆயுதம் சகானாவின் மீது பாய்ந்திருந்தது.
“சனாஆஆஆஆ…..” என்ற அபிமன்யுவின் அலறல் அங்கிருந்த காற்றைக் கிழித்துக்கொண்டு இங்கே பெற்றவளின் செவியை தீண்டியதோ என்னவோ வேரறுந்த கொடி போல மயங்கி விழுந்தார் மேகலா.

 

Free pdf download novels

Post a Comment

புதியது பழையவை