சதிராடும் திமிரே 12 tamil novels

Free pdf download novelsஅத்தியாயம் 12
அஞ்சலி கிடைத்த தனிமையில் அபிமன்யுவிடம் தான் சத்யனை விரும்புவதாகவும், சத்யன் அதை மறுத்து தன்னை ஊருக்கு அனுப்பி விட்டதையும் மறைக்காமல் கூறியவள் எப்படியாவது சத்யனுடன் தன்னை சேர்த்து வைக்கும்படி உடன்பிறந்தவளிடம் கேட்க, அவனோ அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.
“நீ இதுல உறுதியா இருக்கியா அஞ்சலி? ஏன் கேட்கிறேன்னா நீ அங்கே போய் முழுசா ஒரு மாசம் கூட தங்கி இருக்கல… அதுக்குள்ளே இப்படி உன்னோட வாழ்க்கையே சத்யன் தான்னு நீ முடிவு எடுத்து இருக்கிறதைப் பார்த்தா… கொஞ்சம் அவசரப்படுறியோன்னு தோணுது”
“அண்ணா… யார் வேணும்னாலும் இந்த கேள்வியை கேட்கலாம். நீ எப்படி கேட்கிற?”
“ஏன்டா நான் கேட்கக் கூடாதா?”
“நீ அண்ணியை ஒரே ஒரு முறை பீச்சில் பார்த்துட்டு கட்டினா அவங்களைத் தான் கட்டணும்னு முடிவு செய்யலையா? அதையே நான் கேட்டா தப்பா? உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? இத்தனைக்கும் அப்போ உனக்கு அண்ணியைப் பத்தி எதுவுமே தெரியாது… ஆனா சத்யாவைப் பத்தி இங்கே எல்லாருக்கும் தெரியும். அப்புறம் என்ன?” என்று கேட்க அபிமன்யுவின் முகம் தன்னவளை முதன்முதலாய் பார்த்த நினைவில் ஒரு கணம் மென்மையை பூசிக் கொண்டது.
“சத்யா நல்லவன் தான் அஞ்சலி.. அதுல எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனா உனக்கு அங்கே செட் ஆகுமான்னு தெரியலை”
“டாடியும், நீயும் சொல்லி வச்ச மாதிரி இதே காரணத்தை சொல்றீங்க?” என்று அவசரப்பட்டு கோபத்தில் வார்த்தையை விட அபிமன்யு அவளை கூர்மையாகப் பார்த்தான்.
“அ.. அது.. நீங்க ஹாஸ்பிடலில் இருந்தப்போ அப்பா கிட்டே சொன்னேன். அவரும் இதே தான் சொன்னார்”
“அதான் அவரே சொல்லிட்டாரே… அப்புறம் என்ன? விட்டுத் தள்ளு… இது ஒர்க் அவுட் ஆகாது”
“நீ மட்டும் அண்ணியை காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கலாம். நான் சத்யாவை கல்யாணம் செஞ்சுக்க கூடாதா? உனக்கு ஒரு நியாயம்… எனக்கு ஒரு நியாயமா?”
“அஞ்சு பேபி… நீ கோபத்துல ஒரு விஷயத்தை மறந்துட்ட… உங்க அண்ணியும் என்னை உயிருக்கு உயிரா காதலிச்சா… அத்தோட அவ இங்கே வந்து நம்ம கூட சந்தோசமா இருக்கா. உன்னால அந்த கிராமத்து வீட்டில் … முக்கியமா என்னோட மாமனாரோட அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழ முடியாது. மனுசன் வேற ரகம்” என்றான் கொஞ்சம் சிரித்துக் கொண்டே.
‘ஆமா… மிருகம்’ என்று எண்ணிக் கொண்டாள் மனதுக்குள்.
“சொன்னா புரிஞ்சுக்கோ செல்லம்”
“அண்ணா… என்ன செஞ்சா என்னோட காதல்ல நான் சீரியஸா இருக்கேன்னு எல்லாரும் ஒத்துப்பீங்க.” என்றாள் அதி தீவிரமான முகத்துடன்.
அவளது முக பாவனையைப் பார்த்த அபிமன்யுவும் தன்னுடைய விளையாட்டை கை விட்டு விட்டு பொறுப்பான அண்ணனாக அவளை ஆராய்ந்தான். அண்ணனின் லேசர் பார்வையில் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே அதை காட்டிக் கொள்ளவில்லை. நிமிர்வாகவே நின்றாள்.
“முதல்ல இந்த விஷயத்தை கொஞ்சம் ஆறப் போடு அஞ்சலி. காதலுக்கு பொறுமை ரொம்ப அவசியம். கொஞ்ச நாள் காத்திரு.. அதுக்கு அப்புறம் உன்னோட முடிவில் மாற்றம் இருந்தாலும் இருக்கலாம்.”
“ஒருவேளை என்னோட முடிவு மாறலைனா…”
“சத்யன் கிட்டே நான் பேசுறேன்… முக்கியமான விஷயம்… இப்பவே சொல்லிடறேன். ஒருவேளை சத்யன் வேற யாரையும் விரும்பினாலோ உன்னை பிடிக்கலைன்னு சொன்னாலோ நீ உன்னோட மனசை மாத்திக்கணும்”
“கண்டிப்பா எனக்கும் சத்யாவுக்கும் கல்யாணம் நடக்கும் அண்ணா… நான் வெயிட் பண்ணுறேன்” என்றவள் அத்துடன் தன்னுடைய வேலை முடிந்தது என்பதாக அங்கிருந்து சென்று விட அபிமன்யு யோசனையானான்.
நேற்று வரை குழந்தையாகவே நினைத்து வந்த தங்கை இன்று காதல், கல்யாணம் என்று பேசுகிறாள். விளையாட்டுப் பிள்ளை… கொஞ்சம் திமிர் பிடித்த பிள்ளையும் கூட என்பதை அவனாலும் மறுக்க முடியாதே.
அதற்காக தங்கையின் ஆசையை முற்றிலும் மறுக்கவும் அவனால் முடியாதே. சிறு வயதில் இருந்தே அவள் எதைக் கேட்டாலும் அதை உடனே கொடுத்துத் தான் அவனுக்கு பழக்கம். மறுத்து பேசியதே கிடையாதே.
ஒருவேளை அஞ்சலி சத்யன் விஷயத்தில் பிடிவாதமாக இருந்தால் எப்படி அவளை சமாளிப்பது என்ற கவலை அவனுக்கு இப்பொழுதே வரத் தொடங்கியது.
மாமனாரின் குணம் அறிந்து வைத்து இருப்பவனால் அங்கே தங்கையை அனுப்ப அவனுக்கு மனம் வரவில்லை. தனிக் குடித்தனம் வர சொல்லி சொன்னால் கேட்கும் ரகமும் சத்யன் இல்லை.
என்ன செய்வது என்று யோசித்து யோசித்தே அவனுக்கு மூளை சூடாகிப் போனது. அஞ்சலிக்கு சொன்னதையே தனக்கும் சொல்லிக் கொண்டான்.
‘கொஞ்ச நாள் போகட்டும். எதுவாக இருந்தாலும் பொறுமையாக முடிவு செய்யலாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் இப்பொழுதே எடுக்க வேண்டாம்’
அவன் மட்டும் அமைதியாக இருந்தால் போதுமா? அஞ்சலி அவளை தடுப்பது யார்? சஹானா வீட்டிற்கு வந்ததும் துரைசாமியின் நச்சரிப்புகள் அதிகமாகி விட மேகலாவும் சத்யனும் அன்று ஊருக்கு திரும்புவதாக ஏற்பாடு.
சஹானாவிற்கு ஆயிரம் முறை பத்திரம் சொல்லி விட்டு, அபிமன்யுவிடமும் உடலை பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார் மேகலா.
சத்யன் கிளம்பும் பொழுது தங்கையின் தலையை பாசமாக வருடி விட்டு, அபிமன்யுவை லேசாக அணைத்து கொண்டான்.
வாய் பேச்சில்லை.நொடியில் தன் மனதை உணர்த்தும் வித்தை படித்தவன் சத்யன்.
காரில் ஏறி கிளம்பப் போகும் சமயம் மிகச் சரியாக அங்கே வந்த அஞ்சலி நேராய் சென்று மேகலாவை கட்டிக் கொண்டாள்.
“உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ஆன்ட்டி” என்றவளின் பார்வை சத்யனை தழுவ… அவனோ கண்டு கொள்ளாமல் பெட்டியை எல்லாம் சரிபார்த்து அடுக்குவதில் மும்முரமாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டான்.
‘பார்க்கிறானா பாரு… சரியான மஞ்ச மாக்கான்’
அபிமன்யுவும் அப்பொழுது சத்யனையும், அஞ்சலியையும் தான் வெளியே காட்டிக் கொள்ளாத வண்ணம் கவனித்துக் கொண்டிருந்தான்.
காரில் ஏறி அமர்ந்த சத்யன் விடை பெறும் விதமாக எல்லாரிடமும் சிரித்த முகமாக தலையசைத்து விட்டு காரில் ஏறிக் கொண்டான்.
மேகலாவை அவசரப்படுத்தாமல் அவர் பேசி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து பின் காரை எடுத்து ஓட்ட ஆரம்பித்ததும் ரோட்டில் மட்டும் கவனத்தை செலுத்தத் தொடங்கினான்.
கார் கிளம்பி ஐந்து நிமிடம் ஆகி இருக்கக்கூடும் அவனது போனில் மெசேஜ் வந்தது. அஞ்சலியிடம் இருந்து ஏதோ ஆடியோ வந்து இருக்கவும் காரில் இருந்த ஸ்பீக்கரை ஒலிக்க வைத்தான் சத்யன்.
மனம் விரும்புதே உன்னை
உன்னை மனம் விரும்புதே…
நினைத்தாலே சுகம் தானடா …
நெஞ்சில் உன் முகம் தானடா…
அய்யயோ மறந்தேனடா…
என் பேரே தெரியாதடா”
என்ற பாடலை நான்கு வரி மட்டும் எடுத்து அவனுக்கு அனுப்பி இருந்தாள் அஞ்சலி. பக்கத்தில் மேகலா இருந்ததால் முகத்தில் உணர்வுகளை காட்டாமல் சமாளித்து விட்டு அப்படியே வைத்து விட்டாலும் மேகலா அறிவாளே இது யார் வேலை என்று.
தனக்குள் சிரித்துக் கொண்டார் அவர்.
சத்யன் மெசேஜை பார்த்த பிறகும் கூட தனக்கு பதில் அளிக்காமல் இருப்பது புரிய இங்கே அஞ்சலிக்கு கோபத்தில் மூக்கில் காற்று வருவதற்கு பதில் நெருப்பு வந்தது.
‘பொண்ணுங்களை சுத்தல்ல விடுறது தனக்குத்தானே வச்சுக்கிற ஆப்புன்னு இந்த ஆம்பிளைங்களுக்கு எப்போத் தான் தெரியுமோ’ என்று சலித்துக் கொண்டவள் அசராமல் அடுத்த மெசேஜை அனுப்பினாள்.
மீண்டும் மெசேஜ் வரும் ஒலி கேட்க சத்யன் இந்த முறை அதை எடுக்கவில்லை. மேகலா தான் சும்மா இருக்காமல் அவனை அதைப் பார்க்கும்படி சொன்னார்.
“அம்மா.. இது அந்த அஞ்சலியோட வேலை மா”
“எனக்கும் தெரியுது சத்யா… ஏதாவது முக்கியமா இருக்கப் போகுது”
“வேண்டாம்மா… அந்த லூசுக்கு வேற வேலை இல்லை…”
“ஊருக்கு போற வரை பொழுது போகணும்ல… சும்மா என்ன அனுப்பி இருக்கானு தான் பாரேன்” என்று லேசாய் வற்புறுத்த அவனும் தாயிற்காக அதை எடுத்துப் பார்த்தான். மேகலாவிற்கோ அஞ்சலியின் செயல்கள் குழந்தையின் குறும்புகளாய் தெரிய அவளின் சேட்டைகளை ரசிக்கத் தொடங்கினார்.
அவருக்கு அஞ்சலியை பிடித்து இருந்தது. தன்னைப் போல இல்லாமல் தைரியத்துடன் பிரச்சினைகளை அணுகுவதும், யாருக்கும் அஞ்சாமல் ஒற்றை ஆளாய் துரைசாமியை சமாளித்து மகள் ஆசைப்பட்ட திருமணத்தை செய்து வைத்த பொழுதே அவருக்கு அவளைப் பிடிக்கத் தொடங்கி விட்டது.
இப்பொழுது அவள் மனம் சத்யனின் பால் சாய்ந்து இருப்பதை அறிந்ததும் அவருக்கு மகிழ்ச்சி தான். சத்யனிடம் சொன்னால் அம்மாவிற்காக அவளை கண்டிப்பாக மணந்து கொள்வான் தான். ஆனால் அப்படி சத்யனின் வாழ்க்கை அமைவதில் அவருக்கு விருப்பம் இல்லை. சத்யனும், அஞ்சலியை மனமாற விரும்பினால் மட்டுமே இந்த திருமணம் சாத்தியம். மற்றபடி மேகலாவிற்காகவோ அல்லது வேறு ஒருவரின் மகிழ்ச்சிக்காகவோ திருமணம் செய்து கொண்டால் பின் நாளில் அது கசப்பில் முடியலாம். எனவே சத்யனிடம் தன் மனதில் இருப்பதை அவர் காட்டிக் கொள்ளவில்லை.
மேகலாவின் வற்புறுத்தலின் பேரில் மெசேஜை எடுத்து பார்க்க அது மீண்டும் பாடியது.
“முதல் முறையாய் கிள்ளிப் பார்த்தேன்…
முதல்முறையாய் கண்ணில் வேர்த்தேன்…
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி
மறுமுறை சூல் கொண்டேன்”
மேகலா ஒன்றும் சொல்லாமல் சத்யனைப் பார்க்க.. அவனோ பல்லைக் கடித்தான்.
‘குட்டி சாத்தான்’
“உனக்கு வேற வேலை இல்லையா? இனி உன் முகத்தில முழிக்க வேண்டாம்னு நிம்மதியா இருக்கு. மறுபடியும் என்னை தொந்தரவு செய்யாதே.” என்று மெசேஜ் அனுப்பினான். அடுத்த நொடியே மீண்டும் மெசேஜ் வர சத்யனுக்கு சலிப்பாய் இருந்தது.
‘இதென்ன சின்னப்பிள்ளை மாதிரி’ என்று எண்ணியவன் கோபத்தில் மொபைலை அணைப்பதற்கு பதிலாக தவறுதலாக மெசேஜை ஓபன் செய்து விட அதில் அஞ்சலி தன்னுடைய சொந்தக் குரலில் பாடி… இல்லையில்லை கிட்டத்தட்ட கத்தி இருந்தாள்.
“அவனா சொன்னான்… டொடடைங்( background மியூசிக் மக்கா)
இருக்காது…
அப்படி எதுவும் நடக்காது…
நடக்கவும் கூடாது…
நம்ப முடியவில்லை …
இல்லை இல்லை….”
என்று உச்சஸ்தாயில் கத்த மேகலா அடக்க மாட்டாமல் சிரித்து விட்டார்.
சத்யன் பாவமாக அவரைத் திரும்பி பார்த்தான்.
“அம்மாஆஆ..” அவன் குரலில் ஆட்சேபமும், சங்கடமும் சரிபாதியாக இருந்தது.
“என்ன சத்யா”
“நீங்களாவது இந்த பொண்ணுகிட்டே சொல்லக் கூடாதா?”
“என்னன்னு?” அவர் குரலில் இன்னும் சிரிப்பு மிச்சமிருந்தது.
“இதெல்லாம் தேவை இல்லாத வம்பில் தான் முடியும்மா.”
“அவ சின்னப் பிள்ளை சத்யா… ஏதோ விளையாட்டா செய்றா” அஞ்சலிக்கு அவர் பரிந்து பேச சத்யன் சோர்ந்து போனான்.
சத்யனுக்கு அவள் மீது லேசான ஈர்ப்பு உண்டு. ஆனால் அவள் தனக்கு மனைவியாக வருவதை அவன் விரும்பவில்லை. தந்தையைப் பற்றி அவன் நன்கு அறிவான். கிராமத்தில் வளர்ந்த பெண் தான் அவன் வீட்டு குடும்ப சூழலுக்கு ஏற்ப பொறுமையாக நடந்து கொள்வாள் என்பது அவன் கணிப்பு.
அதையும் மீறி ஏதாவது நடந்தால் சஹானாவின் வாழ்வு பாதித்து விடக் கூடாது என்ற கவலையும் இருந்தது அவனுக்கு. எனவே தான் முடிந்த அளவு அவளை விட்டு விலகி நின்றான். அவள் நெருங்க நெருங்க விலகி செல்வது அவனுக்கு அவஸ்தையாய் இருந்தது.
அவனும் மனிதன் தானே… உணர்வுகள் நிறைந்த மனிதன்.
போனை எடுத்து அவளுக்கு பதில் மெசேஜ் அனுப்ப சொல்லி கைகள் பரபரத்தாலும் தன்னைத்தானே கட்டுபடுத்திக் கொண்டான்.
சத்யனிடம் இருந்து பதில் மெசேஜ் வராததை எண்ணி அஞ்சலி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
‘இன்னிக்கு இது போதும்’
அபிமன்யு, சஹானாவுடன் மனநல மருத்துவரை பார்த்து விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தான். அவன் காருக்கு பின்னால் ஒரு வாகனத்தில் அவர்களது பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டு இருக்கும் ஆட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.
“சனா” தோளில் சாய்ந்து இருந்தவளிடம் பேச்சுக் கொடுத்தான் அபிமன்யு.
“ம்…” ஒற்றை எழுத்து மட்டுமே பதிலாய் வந்தது.
“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா”
“என்னங்க எதுவும் பிரச்சினையா?” அவள் முகத்தில் பதட்டம் தோன்ற அழகாய் சிரித்துக்கொண்டே அவள் தலையில் செல்லமாய் கொட்டினான்.
“மண்டு… எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன்? நம்ம அஞ்சலி பத்தி ஒரு விஷயம் உன்கிட்டே சொல்லணும்னு நினைச்சேன்”
“அஞ்சலி பத்தியா?”
“ம்…”
“சொல்லுங்க”
“அது வந்து அஞ்சலிக்கு … உங்க அண்ணன் மேல ஒரு அபிப்பிராயம் வந்து இருக்கும் போல” என்று சொல்ல அவள் கண்கள் பூவாய் மலர்ந்தது.
“நிஜமாவா சொல்றீங்க?”
“ம்ம்ம்”
“ஹையோ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க…”என்றவளின் மகிழ்ச்சிக்கான காரணம் அவனுக்கு புரியாமல் இல்லை.
அவர்கள் இருவரும் இனி சேர வாய்ப்பே இல்லை எனும் சூழலில் மொத்தமாக எல்லாவற்றையும் கையில் எடுத்து துரைசாமியை முட்டாளாக்கி அவர்கள் திருமணத்தை நடத்தி காட்டியவள் அஞ்சலி. அதன் காரணமாக அவள் மீது அதீத பாசம் உண்டு சஹானாவிற்கு. இப்பொழுது அவள் தன் வீட்டிற்கே மருமகளாய் வரப் போகிறாள் என்பதில் அவளுக்கு ஆனந்தமே.
“உனக்கு ஓகே வா சனா பேபி”
“எனக்கு ஏன் ஓகே இல்லாம போகணும்?” என்று மறுகேள்வி கேட்டாள் சஹானா.
“அது… வந்து”
“நீங்க எதை நினைச்சு யோசிக்கறீங்கன்னு எனக்கு நல்லாவே புரியுதுங்க. ஆனா எங்க அப்பாவை சமாளிக்கிற திறமை அஞ்சலி அண்ணி கிட்டே தான் இருக்கு. வேற யாரும் எனக்கு அண்ணியா வந்தா அவருக்கு அடங்கி நடக்கிற படி மாத்திடுவார். அண்ணி கிட்ட அவர் பருப்பு வேகாது.” என்று சொல்ல அபிமன்யு அவளை ஆச்சரியமாக பார்த்தான்.
“என்னங்க அப்படி பார்க்கறீங்க?”
“இதுல இப்படி ஒரு ஆங்கிள் நான் யோசிக்கவே இல்லை”
“ஆனாலும் அவருக்காக நாம இந்த கல்யாணத்தை செய்ய முடியாது. அண்ணனுக்கும் அண்ணியை பிடிச்சு இருந்தா மேற்கொண்டு பேசலாம்.”என்று சொன்ன மனைவியை நெகிழ்வுடன் பார்த்தான்.
அதற்குள் வீடு வரவே அவளை கைகளில் ஏந்தி சக்கர நாற்காலியில் அமர வைத்தவன் அவள் சொன்னதை யோசித்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்.
அஞ்சலியின் மனம் கோணாத விதத்தில் இதை கையாள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.
அதே நேரம் அஞ்சலி தன்னுடைய மொபைலை எடுத்து துரைசாமிக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.

Post a Comment

புதியது பழையவை