வனமும் நீயே வானமும் நீயே 10

பாண்டியன் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு அவள் கூடவே இருந்தான். ஒரு வேலைக்காரனைப் போல அவளுக்காக எல்லா வேலைகளையும் செய்தான். ஒரு தாயைப் போல அவள் எடுத்த மசக்கை வாந்திகளினால் முகம் சுளிக்காமல் அவளைத் தாங்கினான். குழந்தையைப் போல அவளிடம் கனிவு காட்டினான். ஆனால் என்ன ஒன்று இது எதுவுமே அவளது மனதை தொட்டதாக அவனுக்கு தோன்றவில்லை.

திருமணம் ஆன பிறகு அவன் கோபக்காரன் என்று தெரிந்த பொழுதும் அவள் கண்களில் அவனைத் தேடும் தேடலை அவன் கண்டிருக்கிறான். என்று அவன் அவளிடம் எதையோ மறைக்கிறான் என்பது தெரிந்ததோ அன்றிலிருந்து அவள் அவனிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்து விட்டாள்.

திருமணம் பிடிக்காமல் அவள் ஓட முயன்ற பொழுது கூட அவனிடம் அவளுக்கு ஏற்பட்டு இருந்த பயத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு அதை சரி செய்து விடலாம் என்று நினைத்தவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று அவளிடம் காணும் ஒதுக்கம் அவனை வாள் கொண்டு அறுத்தது. முக்கியமாக அவளின் உடல்நிலை அவனை மிரட்டியது. உண்மையை அவளிடம் சொல்லவும் முடியாமல் தவித்தான் பாண்டியன்.

கர்ப்பிணியாக இருப்பவளை மிரட்டி, அதட்டி எதையுமே செய்ய அவனால் முடியவில்லை. ஏதாவது கொஞ்சம் கோபமாக பேசினாலும் அவள் அழுகையில் கரையத் தொடங்கினாள். அவளது அழுகையை கண்டதும் ரேவதியிடம் அவன் தான் திட்டு வாங்க வேண்டி இருந்தது. அதன் பிறகு அவளிடம் கொஞ்சமும் கடுமை காட்டவில்லை அவன்.

அவளுக்கு ஏழாம் மாதம் நெருங்கியதும் அவனது வீட்டு சொந்தங்களை எல்லாம் அழைத்து அவளுக்கு வளைகாப்பு நடத்தினான். வளைகாப்பு நேரத்திலும் கூட அவள் முகம் முழுதான மலர்ச்சியைக் காட்டவில்லை. ரேவதி வந்து வளையல் போடும் பொழுது கொஞ்சம் மலர்ந்து இருந்த அவளது முகம் அடுத்ததாக அவளுக்கு வளையல் போட அவன் நெருங்கவும் கூம்பிப் போயிற்று. அவளின் செய்கையால் ஏற்பட்ட வலியை மென்று முழுங்கிவிட்டு சிரித்த முகத்துடன் வளையல் போட்டவன் அதன்பிறகு அங்கே நிற்கவில்லை.

மேலும் ஒரு வாரம் கடந்த நிலையிலும் அவளிடம் எந்த மாற்றமும் ஏற்படாததை எண்ணி அவனுக்கு கவலை பிடித்தது. அந்த முரடனுக்குள்ளே இருந்த மென்மையான மனது மனைவியின் நிலை கண்டு துடித்தது. மான அவமானம் பாராமல் அவளிடம் சொல்லிவிட வேண்டியது தான். அவளையும் , குழந்தையையும் விட எனக்கு வேறு எதுவுமே பெரிதில்லை. அதே சமயம் அவன் சொல்வதை சரியான முறையில் அவள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பதைபதைப்பும் சேர… அவளை அழைத்துக் கொண்டு அன்று வெளியே செல்ல முடிவெடுத்தான்.

வீட்டில் வைத்து இந்த விஷயங்களை பேச முடியாது. ரேவதியின் காதுகளில் அவர்களின் பேச்சு விழுவதை அவன் விரும்பவில்லை. எனவே தோப்புக்கு அழைத்து சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்தவன் வீட்டுக்கு வந்த பொழுது காலம் கடந்து இருந்தது.

 ராசாத்தி வீட்டில் இல்லை!.

தூக்கத்தில் இருந்த ரேவதியை எழுப்பிக் கேட்ட பொழுது கவலையுடன் கைகளை பிசைந்தாரே தவிர அவருக்கும் ஒன்றும் தெரியாமல் போனது. வீட்டு வாசல் கதவு உடைக்கப்படாமல் திறந்தே இருந்தது. ஒன்று அவளாகவே சென்று இருக்க வேண்டும் அல்லது அவளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள் வந்து அழைத்து சென்று இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

முதலில் அவள் அடிக்கடி செல்லும் இடங்களான வீட்டுக்கு அருகில் இருந்த கோவிலுக்கு போய் பார்த்தவன் அங்கே அவள் இல்லை என்று ஆனதும் அடுத்தபடியாக அவன் சென்ற இடம் அவளது மாமா தயாளன் வீட்டிற்குத் தான்.

வீட்டின் உள்ளே நுழைந்து அவளை தேடுவதற்கு கூட அவசியம் இன்றி வீடு வாசலிலேயே அவனுக்கு தெரிந்து விட்டது அவள் அங்கே தான் இருக்கிறாள் என்று. வீட்டை சுற்றிலும் உள்ளூர் ரவுடிகள் சிலரை  ஏற்பாடு செய்து இருந்தது அவனது சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தது.

அவன் அங்கே இருந்த வரையில் வீட்டு காவலுக்கு என்று யாரையும் வைத்தது இல்லை தயாளன்…  அவனுக்குத் தெரிந்து அவர்களின் திருமணத்தின்போது தான் ராசாத்தி தப்பி ஓடி விடக்கூடாது என்று வீட்டில் காவலுக்கு ரவுடிகளை ஏற்பாடு செய்து இருந்தார்.

‘இன்று இப்படி ஆட்களை நிறுத்தி இருக்கிறார் என்றால் அவள் இங்கே தான் இருக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தவன் பைக்கை அப்படியே போட்டு விட்டு வீட்டுக்குள் ஓடினான்.

வாசலில் இருந்த அத்தனை பேரையும் நொடியில் அடித்து வீழ்த்தியவன் புயலாக மாறி வீட்டுக்குள் சென்ற பொழுது அங்கே அவன் பார்த்த காட்சியில் அவனது நரம்புகள் புடைத்தது.

ராசாத்தியின் வாயில் துணியை வைத்து அழுத்தி விட்டு அவளது இரு அத்தைகளும் அவளைப் பிடித்து எங்கேயோ இழுத்து கொண்டு சென்று இருந்தார்கள். அத்தனை சீக்கிரத்தில் அவனை அவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை போலும்.

அதிர்ந்து போய் அவர்கள் நிற்க… அவர்களின் அருகில் அவன் நெருங்கிய வேகத்திலும்  , பார்த்த பார்வையிலுமாக  அவனது உக்கிரத்தை உணர்ந்தவர்கள் தாங்களாகவே ராசாத்தியை பிடித்து இருந்த கையை விட்டு விட்டார்கள்.

“சீ… நீங்க எல்லாம் பொம்பளைங்க தானா? மாசமா இருக்கிற பொண்ணை இப்படியா இழுத்துட்டு வருவீங்க… உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?” என்றவன் அவர்களுக்கு அருகில் இருந்த ராசாத்தியை இழுத்து தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டான். பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அவளது உடல் அவனுக்கு இன்னும் வெறியேற்ற ராசாத்தியின் அத்தைகள் இருவரும் கலவரமானார்கள்.

“எங்கே அந்தாளு… எல்லாத்தையும் உங்களை செய்ய சொல்லிட்டு இப்போ என்னைக் கண்டதும் ஓடிப் போய் ஒளிஞ்சுக்கிட்டாரா? கூப்பிடுங்க அந்தாளை… இனியும் சும்மா இருந்தா சரியா வராது… அந்தாளுக்கும் எனக்கும் இருக்கிற கணக்கை இப்பவே நான் நேர் பண்ணிக்கறேன்” கட்டுகடங்காத ஆத்திரத்தில் பேசியவனைக் கண்டு ராசாத்தியின் உடல் தூக்கிப் போட்டது பயத்தில்.

“சண்டை வேண்டாம்.. நாம கிளம்பலாம்” என்றாள் நடுக்கத்துடன்

“உங்களைத் தான் கேட்கிறேன்… இப்போ சொல்லுறீங்களா… இல்லை உங்க ரெண்டு பேரோட கழுத்தையும் ஒடிக்கட்டுமா?” கை முஷ்டியை உயர்த்திக் கொண்டு அவர்களை நெருங்கியவனைக் கண்டு வேணிக்கும், சந்திராவுக்கும் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

“அ.. அவர் இங்கே இல்லை”

“ அப்படின்னு அந்தாளு சொல்ல சொன்னாரா? நீங்களா சொல்லிடுங்க… நானே கண்டுபிடிச்சேன் அப்புறம் அந்தாளு பிணம் கூட உங்களுக்கு கிடைக்காது. எவ்வளவு தைரியம் இருந்தா நான் வீட்டில் இல்லாதப்ப என்னோட பொண்டாட்டி மேல கையை வச்சு இருப்பார் அந்தாளு”நரசிம்ம அவதாரம் போல கர்ஜித்தபடி நின்றவனைக் கண்டு அவர்கள் இருவருக்கும் உடல் வெலவெலத்துப் போனது.

“நிஜமாவே அவர் வீட்டில் இல்லை… பக்கத்து ஊர் திருவிழாவில் தலைமை ஏற்க கூப்பிட்டாங்கன்னு போய் இருக்கார்.”

“பொய் சொல்லி புருஷனை காப்பாத்த திட்டமோ?”என்றான் அப்பொழுதும் நம்பாமல்

“நாங்க எதுக்கு அந்தாளைப் காப்பாத்தணும்? அந்தாளு மட்டும் எங்க திட்டத்துக்கு சம்மதிச்சு இருந்தா எப்பவோ இவளை தூக்கி இருப்போமே… விஷயம் தெரிஞ்சும் இத்தனை நாளும் சும்மாவா இருந்து இருப்போம். அந்த மனுசன் தான் புத்திக் கெட்டுப் போய் இருக்காரே. புதுசா பாசப் பைத்தியம் பிடிச்சு இருக்கு அந்தாளுக்கு. வேணாம் வேணாம்னு எங்க உயிரை வாங்கினதால தானே அந்தாளு இல்லாத நாளா பார்த்து இவளை தூக்கினோம். எல்லாம் திட்டம் போட்ட மாதிரி தான் நடந்தது. இன்னும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு நீ வந்து இருந்தீன்னா எல்லாமே எங்க திட்டப்படி தான் நடந்து இருக்கும்.”

உண்மை தான்… பாண்டியன் காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் பதினோரு மணிக்கு ஒருமுறை வந்து அவளுக்கு ஜூஸ் கொடுப்பான். அதன் பிறகு அவன் மறுபடியும் வருவது மதிய சாப்பாட்டிற்க்காக இரண்டு மணிக்குத் தான். என்னவோ மனதின் உந்துதல் காரணமாகவே என்னவோ அன்று அவளைப் பார்க்க பன்னிரெண்டு மணிக்கே மீண்டும் வந்து விட்டான். அதனால் தான் அவளை உடனடியாக மீட்க முடிந்தது என்பதை எண்ணி நிம்மதி அடைந்தான்.

“இப்போ நான் இவளை கூட்டிட்டு எங்கே போறேன் தெரியுமா? போலீஸ் ஸ்டேஷன்க்கு. இனி எனக்கு, என் பொண்டாட்டி, குழந்தை, என்னோட அம்மா… யாருக்கு எது நடந்தாலும் அதுக்கு நீங்க இரண்டு பேரும்… உங்க புருஷனும் தான் காரணம்னு எழுதி புகார் கொடுக்கப் போறேன். இனி என் பொண்டாட்டி மேலே சின்னதா ஒரு துரும்பு பட்டாலும் நீங்க தான் களி திங்க வேண்டி இருக்கும்” என்று மிரட்டியவன் ராசாத்தியின் உடலில் அப்பொழுதும் நடுக்கம் குறையாததைக் கண்டு அவளை கைகளில் ஏந்திக்கொண்டு வாசல் வரை வந்தான். பிறகு மொபைலை எடுத்து ரேவதியிடம் ராசாத்தி தன்னிடம் பாதுகாப்பாக இருப்பதை தெரிவித்து விட்டான்.

அதற்குள் ஓரளவிற்கு தன்னை சமாளித்துக் கொண்ட ராசாத்தியும் அவனிடம் இருந்து விலகி பைக்கில் அமர்ந்த நேரம் வெளியில் இருந்து ஒரு கார் வீட்டினுள் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய தயாளன் நம்ப முடியாத ஆனந்தத்துடன் பாண்டியனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தார். அவரை நோக்கி அலட்சியமான பார்வையை ஒன்றை வீசி விட்டு வண்டியை வேகமாக செலுத்தியவன், பின்னால் அமர்ந்து இருக்கும்  ராசாத்தியின் நினைவு வந்ததும் மெல்ல வேகத்தைக் குறைத்து ஓட்ட ஆரம்பித்தான்.

அங்கே நடந்த காட்சியை எல்லாம் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராசாத்தி. மேற்கொண்டு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பைக் பாண்டியனின் தென்னந்தோப்பிற்குள் நுழைந்தது. அவ்வபொழுது பாண்டியன் ஓய்வெடுக்கும் அறைக்கு அவளை கூட்டி வந்தவன் கதவை மூடிவிட்டு ராசாத்தியை இறுக அணைத்துக் கொண்டான்.

“கொஞ்ச நேரத்தில் என்னை எந்த அளவுக்கு தவிக்க வச்சிட்டடி… ராட்சசி”அவன் உடலில் ஓடிய நடுக்கம் அவன் எந்த அளவிற்கு பயந்து இருந்தான் என்பதை சொல்ல ஆச்சரியத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் ராசாத்தி.

“இந்த பார்வைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை… எதுக்குடி சொல்லாம, கொள்ளாம கிளம்பி அந்த வீட்டுக்கு போன”

“நான் எங்கே போனேன்?… அத்தை தலைவலிக்குதுனு மாத்திரை போட்டுட்டு படுத்து இருந்தாங்க… பாப்பா வயித்துல ஒரு இடத்தில இல்லாம அங்கேயும் இங்கேயுமா அசைஞ்சு கிட்டே இருந்ததா.. அதனால என்னால தூங்க முடியலை. சரி கொஞ்ச தூரம் நடக்கலாமேனு வீட்டு வாசலில் தான் நடந்துகிட்டு இருந்தேன். அப்போ தான் அந்த ரவுடிங்க வந்து என்னை தூக்கிட்டு போய்ட்டாங்க… நான் கத்த முயற்சி செஞ்சேன்னு எனக்கு மூக்கில் எதையோ வச்சு அழுத்தினாங்க… அதுக்கு அப்புறம் நான் முழிச்சு பார்க்கும் பொழுது நான் அந்த வீட்டில் இருந்தேன்.”

அவளாக வெறுத்துப் போய் அவனை விட்டு விலகவில்லை என்பதே பெரும் ஆறுதலாக இருக்க… அவளை தோளில் சாய்த்துக் கொண்டவன் கொஞ்ச நேரம் வேறு எதையும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“உன்கிட்டே நிறைய விஷயம் சொல்லணும் ராசாத்தி… அதுக்காக தான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்தேன்… அப்படி வந்ததும் நல்லதா போச்சு” என்றவனின் இறுகிய உடல் அவனது தவிப்பை சொல்ல… மெல்ல அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“சரி முதலில் நீ என்னோட கேள்விக்கு பதில் சொல்லு… கல்யாணம் ஆன மறுநாள் கூட உன் முகத்தில் கொஞ்சம் சந்தோசத்தைப் பார்த்தேன்… ஆனா அதுக்கு அப்புறம் ஏன் நீ அப்படி இல்லை? உனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் என்கிட்டே கேட்டு தெளிவு படுத்தி இருந்து இருக்கலாமே…”

“ஆரம்பத்தில் இருந்தே நீங்க என்னிடம் உண்மையா இல்லையே… மாமாவிடம் வேலைக்கு சேர்ந்தது… உங்களைப் பற்றிய அடையாளங்களை மறைச்சு…  மாத்தி … ஏதோ ஒரு ரவுடி போல தானே இருந்தீங்க… கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அப்படியே ஆளே மாறிட்டீங்க.. நான் கேட்டாலும் கூட உண்மையைத் தான் சொல்வீங்கன்னு எனக்கு என்ன நிச்சயம்?”

“உன்கிட்டே நான் பொய் சொல்வேனா ராசாத்தி?”

“உண்மையை மறைச்சு தானே என்னை கல்யாணம் செஞ்சீங்க?”

“அ… அது வேற வழியில்லாம…”

“கல்யாணம் ஆன பிறகும் கூட நீங்களா சொல்லலையே… நானா கேட்க முயற்சி செய்யும் பொழுதெல்லாம் கூட அதை என்கிட்டே மறைக்கத் தானே முயற்சி செஞ்சீங்க…”

“எனக்குள்ளே சில குழப்பம் இருந்தது ராசாத்தி… சில விஷயங்களை நான்  சொல்லும் பொழுது  நீ எப்படி எடுத்துப்பனு எனக்குத் தெரியல…”

“நான் மாமா வீட்டுக்கு வந்த புதுசுல ரெண்டு அத்தைகளும், மாமாவும் என் மேலே ரொம்ப பிரியமா இருப்பாங்க… நான் கேட்டது… கேட்காதது எல்லாமே கிடைக்கும். அம்மா, அப்பா இல்லாத குறை கூட அவங்களோட இருக்கிறப்போ பெருசா தெரியலை. அவங்க நியாபகம் வந்து அழும் பொழுது எல்லாம் எல்லாருமா சேர்ந்து என்னை சமாதானம் செய்வாங்க… புது துணி, மிட்டாய்ன்னு கிடைக்கும்.

எனக்கும் அப்போ அவங்க மேல பாசமும், நம்பிக்கையும் வந்துச்சு… அம்மாவும், அப்பாவும் இல்லைனாலும் இவங்களை எனக்கு ஆண்டவன் கொடுத்து இருக்கானே… ஒருவேளை இவங்களுக்கு குழந்தை இல்லாததே எனக்காகத் தானோன்னு பைத்தியக்காரத் தனமா எல்லாம் யோசிச்சு இருக்கேன். அவங்களும் ஆரம்பத்தில் என்கிட்டே அப்படித் தான் பாசமா இருந்தாங்க… ஆனா அப்புறம் தான் தெரிஞ்சது எல்லாமே வேஷம்னு…

எங்க அப்பாவோட தம்பியும், அக்காவும் கூட என்னோட கஸ்டடிக்காக கோர்ட்டில் கேஸ் போட்டு இருந்தாங்களாம்.. இவங்களுக்கு குழந்தை இல்லாம இருந்ததாலயும் , என்கிட்டே ஜட்ஜ் கேட்டப்போ நான் இவங்க கூடவே இருக்கிறேன்னு சொன்னதாலயும் கேஸ் இவங்க பக்கம் தீர்ப்பாகிடுச்சு. அதுக்கு அப்புறம் தான் இவங்களோட நடவடிக்கை எல்லாம் அடியோட மாறிப் போய் அவங்க சுயரூபம் எனக்குத் தெரிஞ்சது.

அதுக்கு அப்புறம் நான் அந்த வீட்டில் ஒரு வேலைக்காரி… இல்லை அதை விடவும் மோசமா ஒரு அடிமை மாதிரி தான் இருந்தேன். உங்களுக்குத் தான் தெரியுமே… அந்த வீட்டுக்கு நீங்க வந்த பிறகு அந்த ஆறு மாதத்தில் நீங்களே எத்தனையோ முறை என்னை கை நீட்டி அடிச்சு இருக்கீங்க… அங்கே அதை யாரும் தடுத்தது கிடையாது. அப்போ எல்லாம் என் மனசில் தோணுனது ஒண்ணே ஒண்ணு தான்.

ஒரு காலத்தில் பொய்யான உறவுகளை நம்பி ஏமாந்து போனதுக்கு தான் இப்போ இப்படி அனுபவிக்கிறேன்னு. அதனால தான் முதலில் உங்களை ஏத்துக்க முடிஞ்ச என்னால அதுக்கு அப்புறம் நீங்களும் என்கிட்டே இருந்து எதையோ மறைக்கறீங்கனு தெரிஞ்ச பிறகு உங்களை நெருங்க முடியலை… உண்மையை சொல்லணும்னா அதுக்கு அப்புறம் உங்களை விட்டு விலக தான் நினைச்சேன். நீங்களும் அவங்களை மாதிரியே என்னை ஏமாத்திடுவீங்களோன்னு எனக்கு ஒரு பயம் இருந்துச்சு… நீங்களும் அதுக்கு ஏற்ற மாதிரி என்கிட்டே எதையும் சொல்ல தயாரா இல்லை… நானும் உங்ககிட்டே கேட்க எவ்வளவோ முயற்சி செஞ்சேன்.. ஆனா நீங்க தான் பிடி கொடுக்கவே இல்லை.”

“என்னோட குழந்தையை சுமக்கிறது உனக்கு வெறுப்பா… அ… அருவருப்பா இருக்கா ராசாத்தி”

“இல்லையே… இப்படி ஏன் உங்களுக்கு தோணுச்சு?” என்றாள் குழப்பமாக…

“பின்னே உனக்காக பார்த்து பார்த்து நானும் அம்மாவும் எவ்வளவு செஞ்சோம்… உன் முகத்தில் கொஞ்சமும் சந்தோசம் இல்லையே… வளைகாப்பு அப்போ கூட நான் வளையல் போட வந்தப்போ பிடிக்காத மாதிரியே முகத்தை திருப்பிக்கிட்டியே”என்றான் வருத்தமும், கோபமும் கலந்து

“அது…”

“சொல்லு ராசாத்தி…”

“அத்தைங்க ரெண்டு பேரும் என்கிட்டே பேசினாங்க…”

“எப்படி பேசினாங்க… அவங்க ஏதாவது குழப்பம் செய்ய முயற்சி செய்வாங்கன்னு தானே நானும் அம்மாவும் எப்பவும் உன் கூடவே இருந்தோம்… வீட்டை விட்டு நீ எங்கேயும் தனியா போனதே இல்லையே…”

“வீட்டு போனுக்கு ஒரு முறை போன் செஞ்சு பேசினாங்க…”

“என்ன சொன்னாங்க?” என்றான் இறுகிய குரலில்.

“வ… வந்து குழந்தை பிறந்ததும் மாமா பேரில் கேஸ் போட்டு எங்க அப்பா, அம்மாவோட சொத்தை எல்லாம் அபகரிக்க முயற்சி செய்ய போறீங்களாம். சொத்து கிடைச்சதும் என்னை துரத்தி விட்டுடுவீங்க… அதுக்காகத் தான் என் மேலே இவ்வளவு அக்கறையா இருக்கிற மாதிரி நீங்க நடிக்கறீங்கனு சொன்னாங்க…”

“நீயும் உடனே நம்பிட்டீயாக்கும்” என்றான் கோபமாக…

“என்னோட நிலைமையில் இருந்து பாருங்க…”

“என்னடி நிலைமை… உன்கிட்டே ஒரு விஷயத்தை சொல்லலைன்னா அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கு… சொத்தாம் … பெரிய சொத்து.. யாருக்கு வேணும் அந்தாளு சொத்து” என்று படபடவென்று பொரியத் தொடங்கினான்.

“கோபப்படாதீங்க…”

“இதோ பாரு ராசாத்தி… உனக்கு உடம்பு ரொம்ப வீக்கா இருக்குனு டாக்டர் சொன்னாங்க… உன்னை ரொம்ப கவனமா பார்த்துக்கணும்னு சொல்லி இருக்காங்க… உனக்கும், குழந்தைக்கும் எதுவும் ஆகிடக் கூடாதுன்னு நானும் அம்மாவும் ஒவ்வொரு நாளும் பயந்துக்கிட்டு இருக்கோம். நீ என்னடான்னா..சொத்தைப் பத்தி பேசுற… உன்னையும், குழந்தையையும் விட எனக்கு சொத்தா முக்கியம்”என்று வருத்தமாக பேசியவனின் முகத்தில் இருந்த கலக்கத்தை காண சகிக்காமல் அவனை மடியில் தாங்கிக் கொண்டாள் ராசாத்தி.

அவளது பிடியில் இருந்து விலகியவன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.

“இல்லை ராசாத்தி.. இன்னும் நாம பேசி முடிக்க வேண்டிய விஷயம் சிலது இருக்கு… அதையும் பேசி முடிச்சுடுவோம்” என்றவன் அவளிடம் இருந்து விலகி தொலைதூரத்தை வெறிக்க.. பதைபதைக்கும் மனதோடு காத்திருந்தாள் ராசாத்தி.

‘இன்னும் என்ன பூதம் கிளம்பப் போகிறதோ’ என்று…

 

 

 

 

 

Post a Comment

புதியது பழையவை