வனமும் நீயே வானமும் நீயே 5

“உனக்கு வேணும்கிற பொருளை எல்லாம் எடுத்து வச்சுக்கோ… நம்ம வீட்டுக்குப் போகணும்” என்றான் உத்தரவாக… அறைக்குள் நுழைந்ததில் இருந்தே குறுக்கும் மறுக்குமாக நடந்தவன் தீவிர யோசனைக்குப் பின் இப்படி சொல்லவே… பேந்த பேந்த விழித்தாள்.

‘இவரே இங்கே தானே தங்கி இருக்கார்… இதுல கிளம்பு நம்ம வீட்டுக்குப் போகலாம்னு சொன்னா என்ன அர்த்தமாம்?’

“சொல்றது காதில் விழலையா?”

“உங்களுக்கு வீடு இருக்கா?”தயங்கி தயங்கி ஒருவாறாக கேட்டுவிட்டாள்.

“ஏன் இல்லாம …. நான் என்ன பிளாட்பாரம்ன்னு நினைச்சியா?” அனல் தெறித்தது அவன் பேச்சில்.

“அ… அப்படி இல்ல… இத்தனை நாளும் நீங்களே இங்கே தானே தங்கி இருந்தீங்க! அதான்” மென்று விழுங்கினாள்.

“உன்னை நடுத்தெருவில் நிறுத்திட மாட்டேன்.. கிளம்பு” என்று ஒரு மாதிரிக் குரலில் சொல்ல கப்பென்று வாயை மூடிக் கொண்டு தன்னுடைய பொருட்களை எல்லாம் பார்வையிடத் தொடங்கினாள்.

கிழிந்து போனதாய் நாலு  தாவணி, பாவாடை, சட்டை…  அவளது பெற்றோரின் மங்கலான கறுப்பு வெள்ளை  போட்டோ, அவளது பள்ளிக்கூட சான்றிதழ்கள், கல்யாணத்திற்காக அவளது மாமன் வீட்டில் எடுத்துக் கொடுத்த ஒரு கூரைப் புடவையும், இரண்டு சாதாரண புடவைகளும் தான் அவளது சொத்து… அதைப் பார்க்கும் பொழுதே கண்கள் கலங்கத் தொடங்கியது.

பெற்றவர்கள் இருந்த வரையிலும் அவர்கள் அன்பில்  நனைந்த நாட்களும், அவளுக்காக பொருட்களை வாங்கி குவித்த நாட்களும்  கண்முன்னே தோன்றி மறைய… கண்ணீர் நிற்காமல் வழியத் தொடங்கியது.

அவளின் அழுகையை எல்லாம் மார்பின் குறுக்கே கை கட்டியபடி மௌனமாக  சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னோட தோளும், நெஞ்சும் நீ சாஞ்சுக்கத் தான் இருக்கு ராசாத்தி” என்று சொன்னவன் அவளைப் பிடித்து தன் புறம் திருப்ப… அவன் நெஞ்சில் சாய்ந்தவளின் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. சட்டென அவளை இழுத்து மூச்சுத் திணறும் அளவுக்கு  முத்தமிட்டான்.

“முத்தம் வேணும்னு நீயாவே கேட்டபிறகு நான் மறுப்பேனா கண்ணு” என்றான் கிசுகிசுப்பாக…

“நான் எப்போ கேட்டேன்” என்று திணறியவளுக்கு முதல் நாள் இரவு நடந்தது நியாபகத்திற்கு வர தன்னையும் அறியாமல் முகம் சிவந்தாள்.

“ம்ம்ம்.. இது நல்லா இருக்கு… இப்படியே இரு… சீக்கிரம் எடுத்து வை கிளம்பணும்” என்று சொல்ல, தயக்கத்துடன் தன்னுடைய மனதில் இருந்ததை சொல்லி விட்டாள்.

“இங்கே இருந்து எந்த டிரஸ்ஸும் வேண்டாம்… எ… எனக்கு வேற துணி வாங்கித் தர்றீங்களா? சாதாரணமா ரெண்டு புடவை வாங்கி கொடுத்தாக் கூட போதும்” என்று சொல்ல அவளையே ஒரு தினுசாகப் பார்த்தவன் அனாவசிய கேள்விகள் இன்றி ஒத்துக் கொண்டான்.

அவர்கள் இருக்கும் அறைக்கதவு மெலிதாக தட்டப்பட… ராசாத்தி போய் கதவைத் திறக்க வெளியே சந்திரா நின்று கொண்டிருந்தார்.

“சாப்பிட வர சொல்லி உன் மாமா சொன்னார்”

“இதோ வர்றோம்” என்று சொல்லி விட்டு திரும்பியவள் கணவனின் கண்டனப் பார்வைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பினாள்.

“எ… என்ன?”

“உன்கிட்டே நான் என்ன சொன்னேன்? நீ என்ன செஞ்சு வைக்கிற”

“சாப்பிடத் தானே….”

“இந்த வீட்டில் இனி ஒரு வாய் தண்ணி கூட குடிக்கக்கூடாது கிளம்பு போகலாம்” என்று அழுத்தத்துடன் சொல்ல.. அதற்கு மேலும் மறுத்து பேசாமல் அவன் பின்னாலேயே சென்றாள்.

கூடத்தில் தயாளன் சாப்பிட அமர்ந்து இருக்க… அவருக்கு அருகிலேயே ஒரு இலை போடப்பட்டு இருந்தது. அது பாண்டியனுக்காக என்பது ராசாத்திக்கு புரிந்தது. பாண்டியன் தான் ராசாத்தியை திருமணம் செய்து கொள்ள போகிறான் என்பது தெரிந்த பிறகும், ஏன் அவர்களின் திருமணம் முடிந்த பிறகும் கூட தயாளன் பாண்டியனை தன்னுடன் சமமாக அமர வைத்து உணவு உண்டது இல்லை என்பது ஏனோ அவளின் நினைவுக்கு வர கசந்து போனது அவளுக்கு.

இப்பொழுது பாண்டியனுக்கு அளிக்கப்படும் இந்த திடீர் மரியாதை அவன் ராசாத்தியின் கணவன் என்பதற்காக அல்ல.. கோபமாக இருப்பவனை குளிர்விப்பதற்காக என்பது அவளுக்கு புரியாமல் இல்லை. ஆனால் புரிந்து கொள்ள வேண்டியவனோ அங்கே வந்து  அவர்கள் முகத்தைப் பார்க்கக் கூட விரும்பாதவன் போல வேறு திசையில் திரும்பி நின்று பேசத் தொடங்கினான்.

“நாங்க கிளம்புறோம்… என்னோட வீட்டுக்கு” என்று சொன்னவன் ராசாத்தியை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல மொத்த குடும்பமும் ஒரு நொடி அமைதியாக இருந்தது. அடுத்த நிமிடமே சந்திரா வில்லென பாய்ந்து அவர்கள் முன் சென்று அவர்களை தடுத்து நிறுத்தினாள்.

“என்னது வீட்டை விட்டு போறீங்களா? இவ போனா வீட்டு வேலை எல்லாம் யார் செய்றது?”

“உங்க வீடு தானே? நீங்க தான் செய்யணும்”

“இத்தனை நாள் இவ தானே செஞ்சா…இனிமேலும் இவ தான் செய்யணும்.”

“இப்போ இவ என் பொண்டாட்டி… உங்க வீட்டு வேலையை எல்லாம் அவ இனி செய்ய மாட்டா…”

“ஆங்… அதெப்படி செய்யாம போவா.. நாங்க விட்டுடுவோமா?”

“என்ன வேணா செஞ்சுக்கோங்க .. நான் என்னோட பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு என்னோட வீட்டுக்குப் போறேன்… ஆனதைப் பாருங்க” என்று அமர்த்தலாக சொல்ல தயாளனின் கண் அசைவில் வேணி வேகமாக அங்கே வந்தார்.

“இப்படி எடுத்தெறிஞ்சு பேசுனா எப்படி தம்பி…. குடும்பம்னா நாலும் இருக்கத் தான் செய்யும்… அதுக்காக எல்லாம் கோபப்படலாமா? அதுவும் இல்லாம இப்படி திடீர்னு கிளம்பினா என்ன அர்த்தம்? புதுசா கல்யாணம் ஆனவங்க நீங்க… நல்லநேரம் எல்லாம் பார்த்துட்டு அப்புறம் கிளம்பலாமே”

“இந்த வீட்டில் இருந்து கிளம்பினாலே எங்களுக்கு நல்ல நேரம் தான்” என்று முகத்தில் அடித்தாற் போல பேசவும்… எல்லார் முகமுமே இருண்டு போனது.

“பாண்டியா… ஆயிரம் தான் இருந்தாலும் அவ என்னோட தங்கச்சி மக.. இப்படி பொசுக்குன்னு கிளம்பினா என்ன அர்த்தம்… ஒரு பத்து நிமிஷம் பொறுங்க… நல்ல நேரம் வந்ததும் கிளம்புங்க” என்று சொல்லவும் ராசாத்தியின் முகம் லேசான எதிர்பார்ப்புடன் கணவனின் முகம் பார்த்தது. மனைவியின் முகத்தைப் பார்த்தவன் அதிருப்தியுடன் சூள் கொட்டினான்.

“ம்ச்.. சரி உள்ளே போய் உட்காரு… நல்ல நேரம் வந்ததும் கிளம்பலாம்” என்று சொல்லவும் புள்ளி மானென குதித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

அவளை சிரித்த முகத்துடன் உள்ளே அழைத்து சென்ற வேணியும் , சந்திராவும் நேராக வீட்டு பூஜை அறைக்கு அழைத்து சென்றனர்.

“குங்குமம் வச்சுக்கோ ராசாத்தி…” என்று தட்டை நீட்ட.. நெற்றில் வகிட்டில் வைத்துக் கொள்வதை பார்த்த இருவரும் அவள் அறியாமல் பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

“உங்க அம்மா இருந்தா இதெல்லாம் அவங்க கேட்டு இருப்பாங்க… ஆனா என்ன செய்றது… அவங்களுக்குத் தான் அந்த கொடுப்பினை இல்லையே… ஹ்ம்ம்… சரி சொல்லு ராசாத்தி… நேத்து ராத்திரி எல்லாம் நல்லபடியா நடந்துச்சா? அந்தப் பய… வந்து பாண்டியன் ரொம்ப முரட்டுத்தனமா எதுவும் நடக்கலையே” என்று கேட்டபடி இருவரும் அவள் முகத்தை உற்று நோக்க… அவளுக்கு காலையில் பாண்டியன் சொன்னது நினைவுக்கு வந்தது.

‘யாராவது உன்னை நேத்து ராத்திரி என்ன நடந்ததுன்னு கேட்டா.. இந்த முத்தம் தான் நினைவுக்கு வரணும்’ என்று சொல்லியபடி அவன் கொடுத்த ஆழ்ந்த முத்தங்களின் நினைவில் அவளது முகம் சிவக்க… அவளது அத்தைகளின் முகம் செங்குரங்கானது.

“என்ன தான் இருந்தாலும் இந்த ஆம்பிளைங்களை நம்ப முடியாது ராசாத்தி… உங்க மாமாவே ரெண்டு கல்யாணம் செஞ்சுக்கலையா… நீயும் எங்களை மாதிரி புருஷன் தான் தெய்வம்னு நினைச்சு அவன் என்ன சொன்னாலும் தலையாட்டிடாதே… அவன் உன்னை வீட்டை விட்டு துரத்தினாலோ… இல்லை நீயாவே கிளம்பி வந்தாலோ எங்க வீடு எப்பவும் உனக்காக காத்திருக்கும்.. அதை மறந்துடாதே ” என்று சொல்ல அத்தைகளின் பாசத்தில் அவள் மெய் மறந்து போனாள்.

“சரி சரி… நேரமாச்சு.. உன் புருஷன் காத்துக்கிட்டு இருப்பான்…” என்று இருவரும் அவசரப்படுத்த… இப்பொழுதும் வாசலிலேயே இருந்த கணவனோடு சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறினாள் ராசாத்தி. அந்த வீட்டை விட்டு அத்தனை எளிதாக வெளியேற முடியும் என்பதை அவளால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. முதல் நாள் இரவு வரை எத்தனை முறை முயற்சி செய்து இருப்பாள்.. இப்பொழுது இத்தனை சுலபமாக இந்த வீட்டை விட்டு வந்தாயிற்றே… என்று எண்ணியவள் கணவனின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொள்ள… பாண்டியனின் சைக்கிள் வேகம் பிடித்தது.

‘இப்போ எங்கே போறோம்… அங்கே யார் இருப்பார்கள்’ என்று எந்த நினைவும் அவளுக்கு இல்லை… நிர்மலமான முகத்துடன் அமைதியாக வந்தாள். பாண்டியன் சைக்கிளை நிறுத்தியது ஒரு குடிசை வீட்டின் முன்னால்.

“இங்கேயே இரு.. வந்திடறேன்” என்று சொன்னவன் தான் மட்டுமாக பூட்டி இருந்த வீட்டை திறந்து உள்ளே போக… அப்பொழுதும் கூட அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை.

புதுசா கல்யாணமாகி வர்றதினால ஆரத்தி எடுத்துட்டு வரப் போறார் போல’ என்ற நினைவுடன் அவள் வீட்டை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்க… பூட்டி இருந்த வீட்டின் உள்ளே இருந்து ஒரு பைக்கையும்… அத்தோடு சேர்ந்து ஒரு பையையும் எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு  வெளியே வந்தவனைப் பார்த்து வாய் பிளந்து நின்றாள்.

‘இவர் கிட்டே பைக் கூட இருக்கா? ஆனா இதுவரை இவர் பைக் ஓட்டி நான் பார்த்ததே இல்லையே… எதுக்காக வண்டியை இங்கேயே வச்சு இருந்தார்?… அவசர நேரங்களில் கூட பயன்படுத்தாமல் இங்கே வைத்திருக்க என்ன காரணம்?’ என்று அவள் யோசிக்க… அவளது திகைத்த பார்வையை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் பைக்கை ஸ்டார்ட் செய்தவன் பின்னால் அவளை அமர சொன்னான்.

இதுவரை பைக்கில் ஏறியே பழக்கம் இல்லாத ராசாத்தி தடுமாற… இயல்பாக அவளது கையை எடுத்து இடுப்பில் கோர்த்து பிடித்துக் கொள்ள பணித்தவன் வண்டியை அசுர வேகத்தில் ஓட்டினான். அவன் வண்டி ஓட்டிய வேகத்தில் மிரண்டு போய் அவனை இறுகப் பற்றிக் கொண்டாள் ராசாத்தி…

பைக் கிராமத்தை விட்டு வெகு தூரம் வந்ததும், மனைவியின் பசியை உணர்ந்தவன் ஒரு நல்ல ஹோட்டலில் அவளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தான். ஹோட்டலையும், அங்கே பரிமாறப்பட்ட சுவையான உணவுகளையும் ஒருவித பயத்துடனே பார்த்தாள் ராசாத்தி.

‘பெரிய ஹோட்டலா இருக்கே.. காசு ரொம்ப ஆகுமே’ என்று கவலையுடன் இருந்தவள் சாப்பிட்டு முடித்ததும் அவன் கொண்டு வந்திருந்த பையில் இருந்து சலவை நோட்டுகளாக எடுத்துக் கொடுக்க… திக் பிரமை பிடித்தவள் போல ஆனாள் அவள்.

‘அப்படின்னா இந்த மூட்டை முழுக்க இருப்பது பணமா?’ என்று எண்ணியவள் அதை அவனிடம் வாய் திறந்து கேட்கவும் முடியாமல் ஒருவித பிரமிப்புடன் அவனை பின் தொடர… கையோடு அவளை அழைத்துக் கொண்டு அவன் சென்ற இடம் துணிக் கடை…

கண்ணில் கண்டதை எல்லாம் அவன் வாங்கிக் குவிக்கவில்லை அதே நேரம்… அவளுக்கு எதெல்லாம் அழகாக இருக்கும் என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான். வீட்டில் கட்டிக் கொள்வதற்காக சில சாதாரண புடவைகளும்… வெளியில் விசேசங்களுக்கு சென்றால் உடுத்திக் கொள்ள சில டிசைனர் புடவைகளும் , பட்டுப் புடவைகளும் வாங்கினான்… சில மணி நேரத்தில் திரும்பி வருவதாகவும் அதற்குள் அந்த துணிகளுக்கு ஜாக்கெட் தைத்து விடுமாறும் சொன்னவன் பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்து விட்டு வெளியேறி அடுத்து சென்ற இடம் நகைக்கடை.

அவள் கைகளுக்கு மெல்லியதாய் ஒரு வளையல், கழுத்துக்கு தாலி சங்கிலி, கழுத்தை ஒட்டியதாக ஒரு செயின், இரட்டை அடுக்கு ஜிமிக்கித் தோடு, சின்னதாக கல் வைத்த நெக்லஸ் ஒன்றை தேர்ந்தெடுத்தவன் பில் போட்டதும்… அதை எல்லாம் அங்கேயே அவளை அணிய செய்தான். தாலி செயினை மட்டும் தாலி பிரித்து கோர்க்கும் பொழுது கட்டிக் கொள்ளலாம் என்று சொல்லி பத்திரப்படுத்தியவன் மீண்டும் துணிக்கடைக்கு சென்று அவளது உடைகளை பெற்றுக் கொண்டு அதில் ஒன்றை அங்கேயே அவளை அணிய செய்தான். அவளது மாமன் வீட்டில் எடுத்துக் கொடுத்தப் புடவையைக் கூட அவள் அணிந்து இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை என்பது அவளுக்கு தெளிவாக புரிந்து போனது.

அவளது மாமா வீட்டில் அவளுக்கு பெயரளவுக்குக் கூட தங்கம் போடவில்லை என்பது அவளுக்கும் தெரியும். அந்த வீட்டிற்கு வந்த புதிதில் அவள் அணிந்திருந்த மெல்லிய சங்கிலியும், தோடும் பாலிஷ் செய்து தருவதாக அவளது அத்தைமார்களால் பறித்துக் கொள்ளப்பட்டது. மீண்டும் அதை கேட்டு வாங்கி அணிவதற்கு அவளுக்கு தோன்றவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அதைக் கேட்பதற்கு அவளுக்கு தைரியம் இல்லை என்பது தான் நிஜம். கேட்டால் கண்டிப்பாக அடி விழும் என்பது தெரிந்த பிறகு அதைப்பற்றி அவள் வாயைத் திறந்து விடுவாளா என்ன?

அதை  கேட்டால் அத்தைகள் இருவரும் சும்மா விட்டு விடுவார்களா? அனாதையான அவளுக்கு பெத்த பெண்ணைப் போல அவர்கள் பாதுகாத்து வருவதாகவும், அவளுக்கு வயிறு நிறைய சாப்பாடை போடுவதாகவும், கொஞ்சமும் நன்றி உணர்ச்சியே இல்லாமல் அவள் நடந்து கொள்வதாகவும் எட்டு ஊருக்கு கேட்கும்படி இருவரும் அலறுவதை கேட்பதற்கு பயந்து கொண்டே அவள் வாயை மூடிக் கொள்வாள். அப்படி அவள் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் அவர்கள் இருவரும் அப்படி நடந்து கொண்டார்களோ என்ற சந்தேகம் அவளுக்கு உண்டு.

ஏதேதோ யோசனைகளில் மூழ்கி இருந்தவள் வண்டி போகும் பாதையை அப்பொழுது தான் கவனித்தாள்.

‘இது ஊருக்குப் போற வழி இல்லையே’                                         

“எங்கே போறோம்?”

“போக வேண்டிய இடத்துக்கு” என்று முகம் இறுக பதில் சொன்னவன் அதன் பின்னர் மௌனத்தை கையாள ராசாத்தியோ திகைத்துப் போனாள்.

 

 

 

 

 

 

Post a Comment

புதியது பழையவை