வனமும் நீயே வானமும் நீயே 9

எப்பொழுதும் போல விடியற்காலை எழுந்தவள் அவளை தூக்கத்தில் கூட சிறை பிடித்து இருந்த கணவனின் கரங்களை விலக்கிக்கொண்டு குளித்து விட்டு வீட்டின் பின்பக்கத்தில் போய் நின்று கொண்டாள். அவளுக்கு கொஞ்ச நேரம் தனிமை தேவையாக இருந்தது. யாரையும் எதிர்கொள்ள வேண்டியிராத தனிமை. எவ்வளவு யோசித்தும், அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் ஏதோ பாறையில் முட்டிக் கொள்வது போல தோன்றியது.

மாமா வீட்டுக்குப் போனால் மீண்டும் பழையபடி அதே அடிமை வாழ்க்கை தான் என்பதில் அவளுக்கு துளி அளவு சந்தேகமும் இல்லை. ஆனால் அங்கே போனாலும் பாண்டியன் அப்படியே விட்டு விடுவான் என்பதில் தான் அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. அந்த வீட்டில் எல்லாரும் இருக்கும் பொழுதே தான் ஒரு சின்ன விஷயத்தை சாக்கிட்டு அவளை அழைத்து வந்தான். தடுக்கும் வகை கூடத் தெரியாமல் மாமாவே வெறுமனே வேடிக்கை தானே பார்த்தார்.

‘இப்பொழுது நான் போனாலும் இவர் வந்து கேட்டால் மறுபடியும் என்னை அனுப்பி வைத்து விடுவார் தானே… எனவே அங்கே போவது சரியாக வராது. இங்கேயே இருப்பது சரியாக வருமா? இவர்கள் இருவரும் என்னிடம் எதையோ மறைப்பது போல தெரிகிறது. குழப்பத்துடன் எத்தனை நாள் இருக்க முடியும்… இங்கே வந்த இரண்டே நாளில் என்னுடைய நிம்மதி கெட்டுப் போயிற்றே’ என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு பின்னால் கேட்ட காலடி சத்தத்தில் வேகமாக திரும்பிப் பார்த்தாள்.

பதட்டமான தோற்றத்துடன் அவளது கணவன் தான் வந்து கொண்டிருந்தான். அவளை கண்ணால் பார்த்த பிறகே அதில் நிம்மதி தெரிய… லேசான சிரிப்புடன் அவளை நெருங்கினான்.

“இங்கே என்ன பண்ணுற ராசாத்தி? எழுந்ததும் பக்கத்தில் உன்னைக் காணோமேனு பதறிட்டேன்”

‘ஏன்’

“வேறு எதற்கு தேடுவேன்? விட்டதை தொடரத் தான்” என்று சொல்லி கண்களை சிமிட்ட… பார்வையை பூமியில் புதைத்துக் கொண்டாள் ராசாத்தி.

“இப்படி விடியற்காலை நேரத்தில் உலாவ உனக்கு பிடிக்குமா ராசாத்தி?” வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று அஞ்சியவனைப் போல மென்குரலில் பேசியபடி அவளது கைகளைப் பற்றிக் கொண்டான்.

“…”

“என் பொண்டாட்டிக்கு என் மேலே இன்னும் கோபமா?” அவள் கன்னங்களை கைகளில் ஏந்திக் கொண்டான். வேகமாக இல்லையென்றாலும் மெதுவாகவே அவனிடம் இருந்து விலகி கொண்டாள் ராசாத்தி.

“சரி வா… காபி குடிக்கலாம்” என்றவன் அவளது விலகலை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. தோளில் கை போட்டுக் கொண்டு கிச்சனுக்குள் அழைத்து சென்றான். அவன் பின்னாலேயே தயங்கி தயங்கி வந்தவளை அலேக்காக தூக்கி கிச்சன் மேடையில் அமர வைத்தவன் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்தான்.

“ஹப்பா… இனி எனர்ஜியோட வேலை பார்ப்பேன்… என்னோட சீக்ரெட் ஆப் மை எனர்ஜி என் பொண்டாட்டி தான்” என்று சொன்னவன் கண் இமைக்கும் நேரத்திற்குள் காபியை கலந்து விட்டான்.

இருவருக்கும் டம்ளரில் ஊற்றி வைத்தவன் அவளை கீழே இறக்கிவிட்டு ஹாலுக்கு அழைத்து வந்தான்.

“குடி ராசாத்தி…” என்று அவள் கைகளில் ஒன்றைத் திணிக்க… அவளோ இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் ரேவதியும் வந்து விட அவரும் தனக்கு ஒரு காபியை எடுத்துக் கொண்டு பாண்டியனுடன் பேசத் தொடங்கினார்.

“பாண்டியா… லதாவுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் தம்பி… வரும் வாரமே கல்யாணம் வச்சு இருக்காங்க… நான் போய் அங்கே இருந்து கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் வரலாம்னு இருக்கேன்”

‘எந்த லதாவிற்கு?’

“அது தான் ராசாத்தி… நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தப்போ ஆரத்தி எடுத்தப்ப ஒருத்தி வம்பு இழுத்தாளே அவ தான். என்னோட அண்ணன் மகள்… அவளுக்குத் தான் அவசர கல்யாணம்”அவள் கேளாமலே பதில் சொன்னார் ரேவதி.

“ஏன் அவசர கல்யாணம்?” தன்னைப் போலவே அவள் வீட்டிலும் கட்டாயத் திருமணமா என்ற கலக்கம் வந்தது அவளுக்கு.

“அ.. அது…”

“சொல்லுங்க அத்தை…” லேசான பிடிவாதம் தெரிந்தது அவள் குரலில்.

“நம்ம பாண்டியனை அவளுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்க அவங்க வீட்டில் எல்லாருக்கும் ஆசை இருந்தது.”

“ஓ” என்றாள் காற்றாகி விட்ட குரலில்.

“உங்க கல்யாணமும் அவசர கல்யாணம் இல்லையா.. நான் சொன்னப்போ… யாரும் நம்பலை.. அதுக்கு தான் உடனே தம்பி உன்னையும் கூட்டிட்டு வந்தான். உங்களை பார்த்த பிறகு தான் அவங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு… எப்படியும் இனி பாண்டியனை அவங்க வீட்டுக்கு மருமகன் ஆக்கிக்க முடியாதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு… அதுதான் வீம்புக்கு அவசரமா அவங்க பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கறாங்க.”

“ஓ”

“சரி பாண்டியா நீயும், ராசாத்தியும் கிளம்பி இருங்க… சாயந்திரமா மூணு பேரும் போய்ட்டு வரலாம். எப்படியும் அங்கேயே ஒரு வாரம் இருக்க வேண்டி இருக்கும்னு நினைக்கிறேன்”

“இல்லம்மா… நாங்க வரலை… நீங்க மட்டும் போய்ட்டு வாங்க…” என்றான் பேப்பரில் இருந்து கண்களை அகற்றாமல்

“என்ன தம்பி.. இப்படி சொல்ற… உனக்கு அவங்க மேல கோபம் இருக்கலாம். ஆனா அவங்க என்னோட அண்ணன் குடும்பம் பாண்டியா… கூட பிறந்தவங்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கணுமா? என்ன தான் அவர் எனக்கு பெரியப்பா மகனா இருந்தாலும் உறவுமுறையில் எனக்கு அண்ணன் தான்.  அதை மறந்துட்டு பேசாதே”

“அம்மா… ப்ளீஸ்.. நீங்களே இப்படி நினைச்சா எப்படி? அவங்க என்ன எல்லாரைப் போலவும் சாதாரணமாவா கல்யாணம் செஞ்சு வைக்கறாங்க… போட்டிக்கு கல்யாணம் செய்றாங்க… இப்போ அந்த கல்யாணத்துக்கு நாங்களும் வந்தா… அவங்க சும்மா இருப்பாங்களா? என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஆனா அவங்க ராசாத்தியை ஒரு வார்த்தை சொன்னா என்னால தாங்கிக்க முடியாது. அப்புறம் அவங்க எல்லாரையும் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன். எதுக்கும்மா அதெல்லாம்.. அதனால தான் சொல்றேன்.. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க.” என்றான் முடிவாக..

“நீ சொல்றதும் சரி தான் தம்பி… இன்னிக்கு கோபத்தில் வார்த்தையை விட்டுட்டா அப்புறம் நாளைக்கு ஒருத்தர் முகத்தில் ஒருத்தர் முழிக்க முடியாது”

இவர்கள் இருவரும் பேசிக்கொள்ள ராசாத்தியின் மனமோ பாண்டியனின் வார்த்தைகளிலேயே சுற்றிக் கொண்டு இருந்தது.

‘மற்றவர்கள் என்னை ஒரு சொல் சொன்னால் உன்னால் பொறுக்க முடியாதா? உண்மைக் காரணம் அது தானா? அல்லது அவனுடைய கண் முன்னால் தன்னுடைய மாமன் மகளுக்கு வேறு ஒருவன் தாலி கட்டுவதை கண் கொண்டு பார்க்க முடியாமலா?’ குழம்பித் தவித்தது பெண் மனம்.

மாலையில் டேக்ஸி வரவழைத்து அதில் ரேவதியை அனுப்பி விட்ட பிறகு பாண்டியன் ராசாத்தியை விட்டு ஒரு நிமிடம் கூட பிரியவில்லை. அவளுடன் கழித்த நொடிகளை எல்லாம் காதலால் நிரப்பினான்.

முத்தங்களில் மூழ்கடித்தான்.

அவளை கலைத்து… கூடலில் அவன் களைத்து போகும் வரையிலும் அவளை விட்டு விலகாமல் இருந்தான். சமைக்கும் பொழுதுகளில் கூட அவளுக்கு உதவி செய்வதாக பேர் பண்ணிக் கொண்டு அவளையே ஒட்டிக்கொண்டு திரிந்தான். மொத்தத்தில் அந்த ஒரு வாரத்தில் அவளுக்கு வேறு எந்த நினைவுகளுமே வராத வண்ணம் பார்த்துக் கொண்டான்.

அவளது மனம் முழுக்க அவன் மட்டுமே நிரம்பி வழிந்தான்.

அவன் அருகில் இருக்கும் பொழுது கணவனின் வேகமான இதழ் ஒற்றல்களும், இறுகிய அணைப்புகளும் மட்டுமே அவளது நினைவில் இருக்கும். ஆனால் அவன் கொஞ்சம் விலகியதுமே அவளது மனதில் அவனைக் குறித்த சந்தேகங்கள் பேயாட்டம் போடத் தொடங்கி விடும். எத்தனை குழப்பங்கள் ஏற்பட்டாலும் அது அத்தனையையும் மறக்கடித்து விடும் சக்தி கணவனுக்கு உண்டு என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவளால் அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்கவும் கூட முடியவில்லை.

பாண்டியனிடம் கேட்டால் அப்படியே பேச்சை மாற்றி விடுவான். ஓரிரு முறை முயற்சித்து விட்டு அதையும் கூட நிறுத்தி விட்டாள் அவள். வேண்டுமென்றே சொல்லக் கூடாது என்று நினைப்பவனிடம் எத்தனை முறை கேட்டாலும் பதில் வராது என்பது அவளுக்கு புரிந்து போனது.

ரேவதியும் கல்யாணம் முடிந்து வீட்டிற்கு வந்து விட… ஓரளவிற்கு அந்த வீட்டோடு பொருந்திக் கொண்டாள் ராசாத்தி.

ரேவதியைப் பொறுத்தவரை ராசாத்தியை கடிந்து கூட ஒரு வார்த்தை சொல்லியதில்லை. ராசாத்திக்கு அந்த வீட்டில் சின்ன குறை கூட இல்லாமல் நடந்து கொண்டார். கலகலப்பானவர்… யாரையும் கோபமாக திட்டிப் பேசி கூட அவள் பார்த்தது இல்லை. ரேவதியின் நெற்றியில் குங்குமம் இல்லாததால் அவரது கணவர் இறந்து விட்டார் போலும் என்ற முடிவுக்கு வந்தாள் ராசாத்தி.

காலையில் எழுந்து டிபன் வேலைகளை ரேவதியும், அவளுமாக செய்து விட்டு மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். பாண்டியன் கிளம்பியதும், மதிய சமையலை முடித்து விட்டு பாண்டியனுக்காக காத்திருப்பார்கள். இரண்டு மணி அளவில் வருபவன் மீண்டும் மாலை ஆறு மணிக்கு வருவான். ராசாத்தியை எங்கேனும் வெளியே அழைத்து சென்றுவிட்டோ அல்லது வீட்டிலேயே சிறிது நேரம் செலவழித்து விட்டோ செல்பவன் மீண்டும் இரவு உணவுக்குத் தான் வருவான். ஞாயிறு விடுமுறை கூட அவன் எடுத்துக் கொள்வது கிடையாது.

இது அனைத்தையும் தாண்டி ராசாத்தி கவனித்த ஒரு விஷயம் என்னவெனில் அந்த வீட்டை விட்டு தனியாக எங்கே செல்லவும் அவளுக்கு அனுமதி இல்லை. அது பக்கத்து தெருவில் இருக்கும் மளிகை கடையாக இருந்தாலும் சரி… கோவிலாக இருந்தாலும் சரி… ரேவதி அல்லது பாண்டியன் யாரேனும் ஒருவர் துணையாக இல்லாமல் எங்கு செல்லவும் அவளுக்கு அனுமதி இல்லை. அது துணை தானா? அல்லது அவளுக்கு காவலா என்று குழப்பம் வந்தது அவளுக்கு.

அதே நேரம் வீட்டிற்கு வரும் சொந்தங்கள் யாரும் ராசாத்தியை ஒரு வார்த்தை சொல்லவும் இருவருமே அனுமதித்தது இல்லை.

நாட்கள் மாதங்களாகியது… ராசாத்தி கருவுற்றாள்.

பாண்டியன் ஆனந்த கூத்தாடினான். அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.. ராசாத்தி பலகீனமாக இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல… ரேவதியும் , பாண்டியனும் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்கள்.

ஆனால் ராசாத்தியிடம் அவளது உடல்நிலை குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. ஏற்கனவே அவள் பயந்த சுபாவம் கொண்டவள். அப்படி இருக்கையில் உடல்நிலை குறித்து தெரியவந்தால் இன்னும் பயந்து போய் விடுவாளே என்று எண்ணி அவர்கள் அவளிடம் மறைக்க அதுவே அவர்களுக்கு வினையாகிப் போனது.

மசக்கையினால் ராசாத்தி பெரும்பாலும் கட்டிலிலேயே இருக்க… வேலை நேரத்தில் பல முறை அவளின் நலத்தை பேணியவாறே இருந்தான் பாண்டியன். அவளது மாமா வீட்டில் இருந்த நாட்களில் சரியாக சாப்பிடாமல், வயதுக்கு மீறிய அதிகப்படியான வேலைகளை செய்ததால் உடல் அளவில் அவளுக்கு போதுமான தெம்பு இல்லாமல் போனது. அவளது கர்ப்பப்பையும் பலகீனமாக இருப்பதாக மருத்துவர் சொல்ல… வேளா வேளைக்கு ரேவதியும், பாண்டியனும் அவளுக்கு சத்தான உணவுகளை கொடுத்தனர்.

 ‘அவள் உடல்நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் என்பது முன்னமே தெரிந்து இருந்தால் குழந்தைப் பிறப்பை கூட சில வருடங்கள் தள்ளி போட்டு இருக்கலாமே…’ என்று அந்த நேரத்தில் பாண்டியன் பெரிதாக வருந்தினான்.

ரேவதி கை வைத்தியமாக அவளுக்கு நிறைய கிராமத்து உணவுகளை செய்து கொடுக்க, பாண்டியன் அந்த வீட்டையே பழங்களால் நிரப்பினான்.

“உனக்கு எது வேணும்னாலும் கேளு ராசாத்தி… இந்த நேரத்தில் பொண்ணுங்களுக்கு ஏதேதோ ஆசை இருக்குமாமே?” என்று இரவில் தன்னுடைய நெஞ்சின் மீது தலை வைத்து படுத்து இருந்தவளைப் பார்த்துக் கேட்டான். அவன் முகத்தையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவள் அவனிடம் இருந்து விலகிப் படுத்தாள்.

“ஒண்ணுமில்லை” என்றவள் அப்படியே உறங்கிப் போனாள்.

பாண்டியன் தான் உறக்கத்தை தொலைத்து விட்டு நின்றான். அவன் மனதில் எதிர்பார்ப்பு இருந்தது. அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த விதத்தைப் பற்றி அவளுக்கு நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் உண்டு என்பதை அவன் அறிவான். அதைக் கூட கேட்காமல் அவள் ஒதுங்கி கொண்டது ஏனோ அவனுக்கு உள்ளுக்குள் வலித்தது.

திருமணம் ஆன மறுநாள் ஆற்றங்கரையில் அவனது கைகளுக்குள் சிலிர்த்து நின்றவளை அவனால் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன? ஆனால் அன்று தோன்றிய அதே சிலிர்ப்பு… அவனது முகம் பார்க்க முடியாமல் ஓரக்கண்ணால் அவனைப் பார்க்கும் வெட்கமும், தவிப்பும் கலந்த அந்த முகத்தை அவன் அதன் பிறகு அவளிடம் பார்க்கவே இல்லை.

அந்த வீட்டிற்கு வந்த பிறகு அவன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டது கிடையாது. முதல் நாளைத் தவிர அவனது தொடுகையை அவள் வெறுத்ததும் கிடையாது. அவன் முத்தமிடும் பொழுதெல்லாம் அவள் உடம்பில் ஓடிய சிலிர்ப்பை அவன் தான் உணர்ந்து இருக்கிறானே… அதையும் தாண்டி அவன் மனதை உறுத்தியது ஒன்று தான். பாண்டியன் ராசாத்தியை நெருங்கும் பொழுது அவள் அவனை தடுத்தது இல்லை… விலக முற்பட்டதும் இல்லை. அவனது வேட்கைகளுக்கும், தாபத்திற்கும் இசைந்து கொடுத்தாலும் ஒருநாளும் அவளாக அவனை நெருங்கியது இல்லை. ஏன் அவளாக அவனை முத்தமிட்டது கூட இல்லை என்ற உண்மை அவனை சுட்டது.

அவனுக்கு நன்றாகத் தெரியும். அவளுக்கு அவன் மீது வெறுப்பு இல்லை என்று… அப்படி அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் எப்பொழுதோ அவன் அவளிடம் இருந்து விலகி இருப்பானே… எதையோ உள்ளுக்குள் வைத்து மருகுகிறாள் என்பதை அவன் கொஞ்சம் தாமதமாகவே உணர்ந்தான்.

‘அவளுக்கு தாலி கட்டி, அவளுடன் குடும்பம் நடத்தி , அவனுடைய குழந்தையை வயிற்றில் சுமக்கும் இந்த நேரத்தில் கூட அவனிடம் மனம் விட்டு பேச மறுக்கிறாள். எதையோ உள்ளுக்குள் வைத்துக் கொண்டு தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் என்பது அவனுக்கு புரியாமல் இல்லை. அவளின் இந்த செய்கை அவளை மட்டும் இல்லாமல் குழந்தையையும் பாதிப்பதை அவள் அறிய மாட்டாளா?

என்னென்னவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் இப்பொழுது அவனும், அவளும் கணவன் மனைவி இல்லையா? வரப் போவது என்னுடைய வாரிசு மட்டுமா? அவளின் குழந்தையும் கூடத் தானே? ஒருவேளை ஏதேதோ மடத்தனமாக நினைத்து குழந்தையையும் வெறுக்கத் தொடங்கி விட்டாளோ’ என்று எண்ணி கவலை கொண்டான் பாண்டியன்.

அவனால் உண்மையை அவளிடம் சொல்லவும் முடியவில்லை. அவனது தன்மானம் தடுத்தது. அதே நேரம் இப்படியே போனால் அவளின் உடம்பிற்கு ஏதாவது பிரச்சினையை அவளே இழுத்துக் கொள்வாளோ என்று தோன்ற அவன் மனம் பதைபதைத்தது.

 

 

 

Post a Comment

புதியது பழையவை