அத்தியாயம் 1
தனி அறையில் சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து இருந்தவளின் கை, கால்கள் உதறிக் கொண்டு இருந்தது.
'எத்தனை தூரம் போராடி என்ன பயன்? கடைசியில் கல்யாணம் நடந்துடுச்சே. தப்புவதற்கு வழியே இல்லாமல் இப்படி அந்த ராட்சசனிடம் மாட்டிக் கொண்டேனே...'
ஒரு வாரமாக தூங்காமல் இருந்ததாலும் ஒரு பொட்டு தூக்கம் இல்லை அவள் விழிகளில்...
‘எப்படி தூக்கம் வரும்? இன்னும் சற்று நேரத்தில் அந்த ராட்சசன் வருவானே’ என்ற எண்ணமே அவளது உடலின் ஒவ்வொரு அணுவையும் பதற வைத்துக் கொண்டு இருந்தது.
ஏற்கனவே தப்புவதற்கு செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்க... இனியொரு முறை முயன்று பார்க்க சொல்லி மனம் முரண்டவே... மெல்ல எழுந்தவள் ஜன்னல் வழி வெளியே இருந்த ரவுடிகளை நோட்டம் இட்டாள்.
ஆளாளுக்கு கொஞ்சம் ஊற்றிக் கொண்டார்கள் போலும். ஒருவரும் நிலையாக இல்லை.
‘ஆஹா’ என்று குதூகலித்தது அவள் மனம்.
இந்த வீட்டின் பின் புறமாக இருக்கும் கொல்லைப்புறத்தில் ஒரு கதவு இருக்கிறது. அதை திறந்து கொண்டு ஓடி விட வேண்டியது தான்.
‘இவனுங்களே இப்படி குடிச்சு இருக்கும் பொழுது.. அவங்களை விட பெரிய ரவுடி அவன் மட்டும் சும்மாவா இருப்பான்? என்ன நடந்தாலும் சரி... அவன் கிட்டே சிக்க மட்டும் கூடாது.’ என்று எண்ணியவள் பூனைப் பாதம் வைத்து அறையில் பொருத்தப்பட்டு இருந்த மற்றொரு கதவில் கை வைக்கவும் .. அவள் இருந்த அறைக் கதவு உட்புறமாக அழுத்தமாக பூட்டவும் சரியாக இருக்க.. அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தாள் ராசாத்தி.
மடித்து கட்டிய வேஷ்டியில் கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு செவ்வரியோடிய விழிகளுடன் அவளை உறுத்துப் பார்த்தவனின் பார்வையில் அவளுக்கு குளிர் ஜுரம் வந்து விடும் போல இருந்தது.
பாதங்களை அழுத்தமாக தரையில் பதித்து ஒவ்வொரு அடிக்கும் அவளது உடலோடு சேர்த்து மனதையும் அதிர வைத்தபடி அவளுக்கு அருகில் வந்து நின்றான் பாண்டியன்.
அவளின் அருகில் வந்து நெருங்கி நின்றவன் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். அவன் பார்வைக்கு பயந்து அவள் விழிகள் நிலம் பார்க்க அவனோ அவளது செய்கையில் அதிருப்தியை வெளிப்படுத்தினான்.
“ம்ச்... நிமிர்ந்து என்னைப் பாருடி” அழுத்தமான அவனின் குரலில் அவளது உடல் தூக்கி வாரிப்போட்டது.
அவளது பயத்தைக் கண்டு அவனுக்கு கோபம் தான் வந்தது.
“இப்போ எதுக்கு இப்படி பயந்து நடுங்கிறவ... உன் புருஷன் தானே வந்து இருக்கேன்... நிமிர்ந்து பாருடி...” என்று குரலில் அதிகாரத்தைக் கூட்டிப் பேச... வேறுவழியின்றி பார்வையை உயர்த்தினாள் ராசாத்தி.
அவளது பார்வை உயரவும் அதற்காகவே காத்திருந்தவன் போல அவன் விழிகள் காந்தம் போல அவளது விழிகளை கவ்விக் கொண்டது.
அவன் கண்களை பார்த்த நொடியே அவளுக்கு பக்கென்று ஆனது.
கண்கள் முழுக்க தாபம் நிரம்பி வழிந்தது.
முதலிரவு அறையில் எல்லா பெண்களும் எதிர்கொள்ளும் அதே சூழல் தான். ஆனால் இங்கே ராசாத்தியின் நிலையோ கடினமாக இருந்தது. சில நொடிகளுக்கு மேல் அவளால் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை தாழ்த்திக் கொள்ள... எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சியுடன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலை அடைந்தான்.
நொடிகளில் நடந்த இந்த சம்பவத்தை நம்ப முடியாமல் அவள் விழி விரித்துப் பார்க்க... அவனோ பார்வையைக் கூட அவள் புறம் திருப்பாமல் கட்டிலில் கிடத்திவிட்டு விளக்கைத் தேடினான்.
சட்டென்று கட்டிலை விட்டு கீழே இறங்கினாள் ராசாத்தி.
‘இப்போ என்ன’ பார்வையால் அவன் கேட்க...
“பால் குடிக்கணும்ன்னு சொல்லி அனுப்பினாங்க...” அவன் பார்வை அவள் முகத்தை மொய்த்தது. அவள் பார்வையை திருப்பிக் கொள்ள கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக அவளை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.
பாலை நன்றாக ஆற்றிக் கொடுத்தாள்.
அவன் பாதியை குடித்துவிட்டு மீதியை அவளிடம் நீட்ட... டம்ளரை வாங்கி கீழே வைக்கப் போனவள் அவனது கழுகுப்பார்வையில் வேகமாக ஒரே மூச்சில் மடமடவென அருந்தினாள்.
அங்கே வைத்திருந்த பழங்களையும், இனிப்புகளையும் ஒரு தட்டில் வைத்து அவனிடம் நீட்டியவள் மறந்து போய் கூட அவனது விழிகளை பார்க்கவில்லை. நொடிக்கு நொடி அதில் ஏறிக்கொண்டிருந்த சிவப்பு நிறம் அவனது ஆத்திரத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது. ராசாத்தியின் உள்ளமோ எப்படி அவனிடம் இருந்து தப்புவது என்ற சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தது.
மொத்த உடலும் நடுங்க... அதையும் மீறி அவள் செய்து கொண்டிருந்த செயல்களை எல்லாம் கண்களால் அளவிட்டபடியே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து விட்டான்.
“நீ எத்தனை நேரம் பயந்து பயந்து நேரத்தை கடத்தினாலும் இனி உன்னால் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன் வேகமாக எழுந்து அவளை கைகளை பற்றினான்.
அழுந்தப் பற்றி இருந்த அவன் கைகளை தள்ளி விட்டு ஓட சொல்லி மனம் முரண்டினாலும் அதை செய்யத் தான் அவளுக்கு துணிவில்லை. அவனைப் பற்றி அவளுக்கு தெரியாதா என்ன? ஆறு மாதமாக அவனைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அவனது முரட்டுத்தனமும் ,கோபமும் அவள் அறிந்த ஒன்று தானே... அவனிடம் அவள் சண்டித்தனம் செய்தால் அதன் விளைவு என்னாகும் என்பதை தான் அவள் அனுபவத்தில் கண்டு இருக்கிறாளே...
எத்தனையோ முறை அவன் கைகளாலேயே அடி வாங்கி இருக்கிறாளே... மனிதத் தன்மை என்பதே கொஞ்சமும் இல்லாமல் அவன் அவளை அடித்த நாட்கள் அவள் கண் முன்னே வந்து போனது.
‘கடவுளே இந்த ராட்சசனிடம் இருந்து என்னைக் காப்பாற்று’ என்று மனதுக்குள் இறைவனை வேண்டியபடி ஆட்டுக்குட்டி போல அவன் பின்னாலேயே சென்றாள்.
“உட்கார்” அதட்டி அமர வைத்தவனிடம் இருந்து சில அடிகள் தள்ளி அமர்ந்தவளைப் பார்த்து அவன் பல்லைக் கடிக்க... அவளுக்கோ இதயம் தொண்டைக் குழியில் வந்து துடிப்பதைப் போல இருந்தது. எழுந்து சென்று விளக்கை அணைத்து விட்டு அவளை நெருங்கி அமர்ந்தவனின் கரங்கள் அவளது தோளில் அழுத்தமாக பதிய... அவள் உடல் அதிர்ந்தது. அதை உணர்ந்தவனின் கைகள் ஒரு நொடி மட்டுமே தயங்கியது. அடுத்த நொடியே அவனது இறுகிய அணைப்புக்குள் இருந்தாள் ராசாத்தி.
அத்துமீறும் அவன் கரங்களை தடுப்பதற்காக அவள் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போக... அவனின் கைகளுக்குள் அடங்கப் பிடிக்காமல் அவளது கண்கள் கண்ணீரை வெளியிட்டது.
அவனது மார்பை நனைத்த அவளது கண்ணீரை உணர்ந்தவன் அவளது முகத்தை நிமிர்த்தி ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
தடுமாறும் விழிகளும்... துடிக்கும் உதடுகளும் அவளது நிலையை பறைசாற்றியது. அவளது கன்னங்களை கைகளில் ஏந்தியவன் அவளது கண்ணோடு கண் கலந்தவாறே... அவளது உதடுகளில் தன்னுடைய முத்திரையைப் பதித்தான். அவளது திமிறல்களை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவன் முன்னேற... அவனது வேகத்தை கண்ட பெண்ணவளுக்கு அச்சமே தலைத் தூக்கியது.
அவளை எடுத்துக் கொள்ளும் வேகத்தில் நிதானம் இல்லாமல் வேகத்தை கூட்டியவனின் வேகத்தில் மிரண்டு போய் அவள் ஒதுங்க... விடாப் பிடியாய் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டான் பாண்டியன். அவன் கைகள் அவள் உடலின் மென்மைகளை பரிசோதிக்க... கண் திறந்து அவனைப் பார்ப்பதற்கும் அஞ்சியவளாய் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
‘இதெல்லாம் கனவு... கெட்ட கனவு... அம்மா, அப்பா... என்னை எழுப்பி இது கனவுன்னு சொல்லுங்களேன்’ மூடிய இமைகளுக்குள் அவள் மனம் வேண்டிக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் அவன் கை அவளது உடலில் ஓரிடத்தில் அழுத்தமாக பதிய ... வலி தாங்க முடியாமல் “அம்மா” என்று கதறி அழத் தொடங்கினாள் பெண்ணவள்.
வேகமாக அவளை விட்டு விலகியவன் விளக்கை போட்டான். ஒளி வெள்ளம் தன் மீது பாயவும்... பதட்டத்துடன் தன்னை மறைத்துக் கொண்டவளை அசட்டை செய்யாது அவளின் அருகே நெருங்கி அவளது கால்களை பரிசோதித்தான்.
முழங்காலுக்கு மேலே அவன் கைகள் துணியை விலக்க முற்பட... பதட்டத்துடன் தடுத்தவளை அடக்க அவனது ஒற்றை பார்வை போதுமானதாக இருந்தது.
வலது காலில் முட்டிக்கு மேலே விறகு கட்டையால் சூடு வைத்த தழும்பைக் கண்டவனின் கண்களில் நொடிக்கு நொடி கோபம் ஏறிக் கொண்டே போனது.
“யார் ?” என்று கேட்டவனின் ஒத்தை வார்த்தையில் அவளது முதுகுத்தண்டு சில்லிட்டது.
“...”
“கேட்கிறேன் இல்ல...” உக்கிரம் குறையாமல் கேட்டவனை கண்டு பயத்தில் வார்த்தைகள் தந்தி அடித்தது அவளுக்கு.
“அ... அத்தை...”
“எந்த அத்தை?”
“வே... வேணி அத்தை...” என்று சொல்ல... கோபத்தில் அவன் பற்களை கடித்த சத்தம் அவளின் காதுகளில் விழுந்தது.
“எதுக்கு வச்சாங்க?... எப்போ நடந்துச்சு?”
“நேத்து ரா... ராத்திரி... இ... இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்னு” என்று சொன்னவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளுக்குத் தெரியும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று...
‘சும்மாவே சாமியாடுவான்... இப்போ இவனை கல்யாணம் செய்ய பிடிக்காமல் நான் இருந்தேன்னு தெரிஞ்சுடுச்சு... இன்னிக்கு பெல்ட்டால் என்னோட தோலை பிரிச்சு எடுக்கப் போறான்’
உயிர் போகும் அளவிற்கு வலிகளை வாங்கிக் கொள்ள தயாராக அவள் காத்திருந்த பொழுது அவனோ வேறு ஒரு கேள்வியை கேட்டு வைத்தான்.
“வேற எங்கேயும் காயம் இருக்கா?” என்றவனின் கேள்வியில் விழி உயர்த்தி அவனைப் பார்த்தவள் தலையை குனிந்து கொண்டு இல்லையென்று தயக்கத்துடன் தலையை அசைக்க... அவளது தயக்கமே அவனுக்கு சொல்லாமல் சொன்னது அவள் பொய் சொல்கிறாள் என்று...
“ம்ச்... உண்மையை நீயா சொல்றியா? இல்லை... நானா பார்த்து தெரிஞ்சுக்கட்டுமா?” என்றவனின் கேள்வியில் மிரண்டு போனாள் ராசாத்தி...
அவளது கைகள் தன்னையும் அறியாமல் உடலை மறைக்க...
“அப்போ நீ சொல்ல மாட்ட... சரி நானே பார்த்துக்கிறேன்” என்றவன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டே அவளை நெருங்க... மருட்சியுடன் கைகளை உயர்த்தி தடுத்தாள் ராசாத்தி.
“நீ... நீங்க பார்க்க வேண்டாம்...” கெஞ்சுதலாக சொன்னவனின் குரலில் அவன் முகத்தில் வந்து போன உணர்வுகளை அவள் பார்க்கத் தவறினாள். அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை அவள்.
“சரி பார்க்கலை... அது யார் வேலை?”
“சந்திரா அத்தை... இன்னிக்கு விடியற்காலை நான் வீட்டை விட்டு வெளியே ஓடப் பார்த்தேன்னு சூடு வச்சாங்க”. மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள். இதுவும் அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பி விடக் கூடிய விஷயம் தான்... நாளைக் காலை இந்த அறையை விட்டு நான் உயிரோடு போக மாட்டேன் என்று அவளுக்கு உறுதியாக தோன்ற ஆரம்பித்தது. அவனின் அடிகளை எதிர்பார்த்து காத்திருந்தவள் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
கருத்துரையிடுக