அத்தியாயம் 22
“சார் காபி...”என்று தனக்காக காபி கோப்பையை நீட்டியவளைப் பார்த்து மென்நகை புரிந்தவாறே காபிக் கோப்பையை வாங்கிக் கொண்டான். காலையிலேயே குளித்து முடித்து புது மலராக இருந்தவளை வெறுமையான பார்வையால் அளந்தான் ஈஸ்வர்.
“ரொம்ப சந்தோசமா இருக்க போல”
“ஆமா சார்...இன்னிக்கோட நூற்று பதினெட்டு நாள் ஆகுது சார்...இன்னும் இரண்டே நாள் தான்...நான் வீட்டுக்கு போகப் போறேன் இல்லையா”என்றவள் ஆர்வம் மிகுதியில் துள்ளிக் குதிக்காத குறையாக கூறி விட்டு நாக்கை கடித்துக் கொள்ள அவன் முகத்திலோ எந்த மாறுதலும் இல்லை.
“உட்கார் சில்லக்கா...உன்கிட்டே கொஞ்சம் பேசணும்”என்றவன் எழுந்து முகம் கழுவ செல்ல என்ன சொல்லப் போகிறானோ என்று பதைபதைக்கும் மனத்துடன் காத்திருந்தாள் வானதி.
அன்று அவள் அவனது மொபைலை திருட்டுத்தனமாக எடுக்க முயன்ற குற்றத்திற்காகத் தான் அவளது சிறைவாசத்தை மூன்றிலிருந்து நான்கு மாதமாக உயர்த்தி விட்டு இருந்தான்.அதன் பிறகு அவள் அங்கிருந்து வெளியேற எந்த முயற்சியும் செய்யவே இல்லை.
மீண்டும் ஏதாவது செய்யப் போய் அவனிடம் மாட்டினால் வீட்டுக்கு திரும்பும் நாள் தள்ளிக்போய்க் கொண்டே இருக்குமே என்ற பயத்தில் அந்த முயற்சியை சுத்தமாக விட்டு விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நான்கு மாதத்தில் ஈஸ்வரின் மீது அவளுக்கு நம்பிக்கை வளர்ந்து இருந்தது.அவனால் தனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று முழுமையாக நம்பத் தொடங்கி இருந்தாள் வானதி.அவள் எதைப் பற்றி பேசினாலும் பொறுமையாக எடுத்து சொல்பவன் மூர்த்தியைப் பற்றி பேசினால் மட்டும் செவிடனாக மாறி விடுவான்.
அன்று அவள் கையிலிருந்த மொபைலை பறித்தவன் சாவதானமாக பேசத் தொடங்கினான்.
“மொபைல் இருக்கு சரி...உள்ளே பேட்டரி இருக்கா பார்த்தியா?அது இல்லாம எப்படி சில்லக்கா மொபைல் ஆன் ஆகும்? மொபைல் இருக்கும் இடத்தை உனக்கு காட்டிக் கொடுத்துட்டு உன்னை அவ்வளவு ஈசியா தப்பிக்க விட்டுடுவேன்னு எண்ணமா உனக்கு? பேட்டரி இந்த வீட்டில் இன்னொரு இடத்தில் ஒளிச்சு வச்சு இருக்கேன்.உன்னால முடிஞ்சா அதை கண்டுபிடிச்சு எடுத்துக்கோ”என்றவனின் பேச்சை கேட்டு அந்த வீடு முழுவதும் பேட்டரியை தேடித் பார்த்து நொந்து போனது தான் மிச்சம்...
அன்று மொபைலை திருடி அவனிடம் மாட்டியதற்கு மறுநாள் ஒரு ஹெலிகாப்டர் அவர்கள் வீடு நோக்கி வந்தது.தான் தப்பி செல்வதற்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் வேகமாக மாடிக்கு ஓடியவள் அங்கிருந்த படியே அவர்களை நோக்கி கையாட்டி கத்தத் தொடங்கினாள்.
“ஹெல்ப் மீ...சேவ் மீ” (Help me…save me) என்று ஆங்கிலத்தில் கத்தத் தொடங்க அவளுக்கு பின்னால் வந்து நின்ற ஈஸ்வரை அவள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
‘அது தான் காப்பாத்த ஆள் வந்தாச்சே..அப்புறமும் எதுக்கு இவனுக்கு பயப்படணும்’என்று எண்ணியவள் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு கண்ணுக்கு எட்டாத குறுநகையுடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனை அசட்டை செய்து விட்டு மீண்டும் கத்தத் தொடங்கினாள்.
ஹெலிகாப்டர் அவர்களை நோக்கி வரத் தொடங்கவே உற்சாகம் கொப்பளித்தது அவளுக்கு.மகிழ்ச்சியில் திளைத்தவள் அதிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தவனைக் கண்டதும் மொத்தமாக அடங்கிப் போனாள்.
ஹெலிகாப்டரில் இருந்து எட்டிப் பார்த்தவன் ஈஸ்வரின் ஆள் மைக்கேல்.... நொந்து போனவள் தளர்ந்து போன நடையுடன் வீட்டுக்குள் செல்ல மைக்கேல் ஏதோ ஒரு பார்சலை ஈஸ்வரிடம் கொடுத்து விட்டு மீண்டும் கிளம்பி செல்வதும் அவள் கண்களில் பட்டது.எத்தனை முறை தான் இப்படி ஏமாந்து போவதோ என்று எண்ணி நொந்தவளின் கண்கள் அவளையும் அறியாமல் கண்ணீரை பொழியத் தொடங்கியது.
அதை எல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை.அந்த கருப்பன் கொடுத்த பார்சலை வாங்கி வந்தவன் மெல்ல பிரிக்கத் தொடங்கினான்.பிரித்து உள்ளே இருந்த பொருளை முறையாக அடுக்கி முடித்ததும் கண்களால் அவளை அழைக்க,பொம்மை போல எழுந்து அங்கே போய் நின்றாள்.கையில் இருந்த ரிமோட்டால் அதை ஓட செய்ய உள்ளிருந்து பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியது.அதை கேட்ட அடுத்த நொடி இரு காதுகளையும் இறுக்கமாக மூடிக் கொண்டாள் வானதி.
“என்ன கண்றாவி இது”அந்த இரைச்சலையும் மீறி அவள் பேசுவது கேட்க இன்னும் அதிகமாக கத்த வேண்டி இருந்தது அவள்.
“வெஸ்டெர்ன் மியூசிக்...ரொம்ப நல்லா இருக்கு இல்ல”என்று ரசனையோடு சிலாகித்தவனை என்ன செய்தால் தகும் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.ஆத்திரத்தில் எதையாவது எடுத்து அவன் தலையில் போடலாம் என்றால் அதற்கு தேவையான தைரியம் என்ற ஒரு விஷயம் அவளிடம் துளியும் இல்லை.பின்னே அப்படி ஏதாவது செய்யப் போய் சிறைவாசத்தை ஐந்து மாதமாக மாற்றி விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு அவளுக்கு.
“இது கர்ண கொடூரமா இருக்கு..தயவு செஞ்சு நிப்பாட்டுங்க...”
“வீடு ரொம்ப அமைதியா இருக்கே...நீயும் பாதி நேரம் அழுதுகிட்டே இருந்து தொலைக்கிற..மனுஷனுக்கு கடுப்பு வராதா..அதுக்குத்தான் இந்த மாற்று ஏற்பாடு”
“நான் இனி அழ மாட்டேன்..தயவு செஞ்சு இது வேண்டாம்..நிறுத்திடுங்க...”என்று அவள் கெஞ்ச...
“அப்படி எல்லாம் செய்ய முடியாது..வேணும்னா...அதுக்கு பதிலா இதை கேட்கலாம்...”என்றவன் அந்த சிடியை எடுத்து விட்டு வேறு ஒன்றை உள்ளே செலுத்த அதன் உள்ளிருந்து கர்நாடக சங்கீதம் ஒலிக்க ஆரம்பித்தது.
கண்ணா….! கண்ணா….!
என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்
நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்
அவன் வருவான்
என்ற பாடல் ஒலிக்க அவளுக்கு அந்த பாடலும் வேப்பங்காயாகத் தான் கசந்தது...ஆனால் இதற்கு முன்னால் ஒலித்த காட்டு கத்தலுக்கு இது பரவாயில்லை என்ற எண்ணம் தோன்றவே அமைதியாகி விட்டாள் வானதி.
அன்று முதல் தினமும் இரவு தூங்கப் போகும் வரை அந்த வீட்டில் பாடல்கள் ஒலித்து கொண்டே இருந்தது.ஆரம்பத்தில் கடனே என்று இருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னையும் அறியாமல் அதனுள் மூழ்கத் தொடங்கினாள்.அதில் வரும் சங்கதிகள்...ராகங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினாள்.
“ஹே...சில்லக்கா...எத்தனை தடவை கூப்பிடறேன் என்ன யோசனை?”என்று கேட்டவாறே அவளுக்கு எதிரில் அமர்ந்தான் ஈஸ்வர்.
“ஒண்ணுமில்லை சார்” என்றவளை நம்பாத பார்வை பார்த்தவன் அவனுடைய கையில் இருந்த ஒரு கவரை எடுத்து அவளிடம் நீட்டினான்.
‘என்ன இது’என்ற யோசனையுடன் அதை வாங்கிப் பார்த்தவள் கொஞ்சம் குழம்பிப் போனாள்.
“இதுல உன்னோட பாஸ்போர்ட் இருக்கு வானதி...கூடவே உன்னோட படிப்பை நீ தொடர்ந்து அண்டார்டிகாவில் படிப்பதற்கு தேவையான எல்லா ஏற்பாடும் தயார்”என்று சொன்னவனை அதிர்ந்து போய் பார்த்தாள் வானதி.
‘என்ன சொல்கிறான் இவன்? அப்படி என்றால் என்னை திருப்பி அனுப்ப மாட்டானா?’என்ற பயத்துடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் வானதி.
“உன்னை அங்கே போயி ஆகணும்னு நான் கட்டாயப் படுத்தலை வானதி..ஆனா நீ இப்ப திரும்பி உன்னோட ஊருக்கு போனா அங்கே நிறைய கசப்பான சம்பவங்கள் நடக்கலாம்.அதுக்கு பேசாம அங்கேயே போகாமலே இருந்துடு” என்று அவன் சொல்ல வானதியோ கலகலத்து சிரித்தாள்.
“சார் விளையாடாதீங்க...நான் அங்கே போக வேண்டாமா? அவர் எனக்காக காத்துக்கிட்டு இருப்பார்...சுந்தரேசன் அய்யா...பிள்ளைகள் எல்லாருமே என்னை காணாம தவிச்சு போய் இருப்பாங்க...அநேகமா அங்கே போய் சேர்ந்ததும் எனக்கு கல்யாணம் நடக்கும்.”என்றாள் முகத்தில் வெட்கம் மின்ன...
அவனுடைய பார்வை அவளிடம் எதையோ சொல்லத் துடித்தது.
“இன்னைக்கு முழுக்க நல்லா யோசி சில்லக்கா..கடந்த நாலு மாசத்தில் நடந்த விஷயங்கள்..அதோட எதிர்வினைகள் எப்படி இருக்கும்னு எல்லாத்தையும் யோசி...அதுக்கு அப்புறம் தெளிவான முடிவு எடு”என்று அவன் சொல்ல அவள் முகத்தில் கோபம் துளிர் விட்டது.
“என்ன சொல்ல வர்றீங்க சார்...அவர் என் மேலே சந்தேகப்பட்டு என்னை கல்யாணம் செஞ்சுக்காம ஒதுக்கி வச்சிடுவார்ன்னு சொல்லுறீங்களா?” என்று அவள் கொதிக்க அவனது மௌனம் அதை ஆமோதித்தது.
“அப்போ என்னோட கல்யாணத்தை நிறுத்தி அவரை என்கிட்டே இருந்து பிரிக்கத் தான் இத்தனையும் செஞ்சீங்களா சார்?”
“...”
“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோங்க சார்...அவர் என் மீது வைச்சு இருக்கிற காதல் உன்னதனமானது... புனிதமானது... உங்களோட நாடகத்தை நம்பி எல்லாம் அவர் என்னை ஒதுக்கி வச்சிட மாட்டார்...புரியுதா?”
“சரி வானதி...நீ அவனை ரொம்பவே நேசிக்கிறாயா?”
“ஆமா..அதிலென்ன உங்களுக்கு சந்தேகம்?”
“சரி அப்போ நான் கேட்கிற கேள்விகளுக்கு பதிலை சொல்லு...அவனுக்கு பிடிச்ச நிறம் என்ன? பிடிச்ச சாப்பாடு? பிடிச்ச ஊர்? பிடிச்ச நடிகை?...இப்படி ஏதாவது ஒண்ணுக்கு உனக்கு பதில் தெரியுமா?”
“....”
“தெரியாதா ...சரி விடு...அவனோட அப்பா பேர்...அம்மா பேர்...அவனோட நெருங்கின நண்பன் பேர்... இப்படி ஏதாவது தெரியுமா?”
“...”
“இப்படி அவனைப் பத்தி எதுவுமே தெரியாது..ஆனா அவனை காதலிக்கிற...முட்டாளா நீ?”என்றான் கோபமாக...
“சார்...காதல் நீங்க சொன்ன எதையும் பார்த்து வருவதில்லை.அவர் என்னை நேசிக்கிறார் அது போதும் எனக்கு...”
“ரொம்ப அவசரப்படாதே சில்லக்கா..மீதம் இருக்கிற இரண்டு நாளும் நல்லா யோசி...உன்னோட முடிவு மாறினா நல்லது”
“யாருக்கு நல்லது சார்?”
“நல்லது நடந்தா போதுமே..அது யாருக்கா இருந்தா என்ன?”
“ஒருவேளை என்னுடைய முடிவில் மாற்றமில்லைனா?”
“பின்னாடி உன்னோட வாழ்க்கையில் அந்த முடிவை எடுத்ததற்கு வருத்தப்படுவாய்”
“கண்டிப்பா மாட்டேன்...”
“அதை இப்பவே முடிவு செய்ய வேண்டாம்...அப்புறம் பார்த்துக்கலாம்”
“ஒருவேளை உங்களுக்கு சாதகமான முடிவை நான் எடுக்கலைன்னா...என்னை இங்கே இருந்து அனுப்ப மாட்டீங்களா சார்”என்றாள் பதட்டமாக...
“கண்டிப்பா இரண்டு நாள் கழிச்சு உன்னை அனுப்பி வச்சிடுவேன்..அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றவன் அமைதியாக எழுந்து சென்று விட , நடுவில் இருந்த ஒருநாள் வானதியை அவன் சுத்தமாக தொந்தரவு செய்யவில்லை.
சாப்பிடும் பொழுது கூட ஒரு வித அமைதி நிறைந்து இருந்தது.கடைசி நாள் காலை அவள் எழுந்ததும் முதலில் பார்த்தது அறையில் இருந்த அலங்காரத்தைத் தான்..கையில் காபியோடு உள்ளே நுழைந்தவன் அவளை பார்த்து மென் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.இயல்பாக கல்மிஷம் இல்லாத சிரிப்பு.
“எடுத்துக்கோ சில்லக்கா..இன்னைக்கு உனக்கு செண்டு ஆப் பார்ட்டி (Send Of Party)”
அவள் புரியாமல் மலங்க மலங்க விழிக்க , “போய் குளிச்சுட்டு வா” என்று அவளை அனுப்பி வைத்தான்.குளித்து முடித்து அறையை விட்டு வெளியே வந்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தது.அந்த தீவே விழாக் கோலம் பூண்டது போல அழகாக மாற்றி இருந்தான்.கடற்கரைக்கு அருகில் ஒற்றை குடையும்,அதற்கு கீழே டேபிளும் போட்டு இருக்க,அவளுக்கு முன்னதாகவே சென்று அவன் காத்து இருந்தான்.
“இதுக்கு முன்னாடி இந்த யோசனை இல்லை..என்னவோ நேத்து நைட் தோணுச்சு..உனக்கு இப்படி பார்ட்டி கொடுக்கலாம்னு.. அதான்...ராத்திரியோட ராத்திரியா எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன்.”என்றவன் அவள் அமர்வதற்கு தோதாக சேரை இழுத்து விட்டவன்,அதன் பிறகு அவளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டான்.
டேபிளில் பலவகையான உணவுகள் மூடி வைக்கப்பட்டு இருக்க,ஆசையுடன் ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள்.பாஸ்தா,நூடுல்ஸ்,புலாவ் வகைகள் என்று வித விதமான உணவு வகைகள் டேபிளை நிரப்பி இருந்தது.
வெஜிடபிள் புலாவுடன் , பன்னீர் சிக்ஸ்டி ஃபைவை தட்டில் வைத்துக் கொண்டு சாப்பிட்டவளை பார்த்துக் கொண்டு இருந்தவன் வேறு சில உணவு வகைகளை அவளது தட்டில் வைக்க முயல,அதை தடுத்து விட்டாள் வானதி...
“நான் வெஜ் வேணாம் சார்...”
“என்னது வேணாமா? அவன் வீட்டில் தினமும் இது தான்...அப்புறம் அங்கே போய் வெறுமனே தண்ணீரை குடிச்சு உயிர் வாழ்வியோ?”என்றான் நக்கலாக...
“நான் போனதும் அவர் அங்கே எனக்கு பிடிச்ச மாதிரி சமையலை மாத்திடுவார்”என்றவளை வெறுமையான பார்வையால் அளந்தவன் தோள்களை குலுக்கி விட்டு அடுத்த வேலையை கவனிக்கத் தொடங்கினான்.
சாப்பிட்டு முடித்ததும் கோப்பையில் ஒரு திரவத்தை ஊற்றி அவளிடம் நீட்டினான்.மூக்கின் அருகே கொண்டு சென்றதும் அதன் நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை சுளித்துக் கொண்டு அதை அப்படியே மேசையில் வைத்து விட்டாள் வானதி.
“ஏன் வச்சிட்ட சில்லக்கா...இது தான் உன்னோட அவருக்கு ரொம்பவும் பிடிச்ச பிராண்டு”என்று சொல்ல ஆத்திரமாக அவனை முறைத்தாள்.
“அவனுக்கு பிடிச்ச எல்லாத்தையும் நீயும் ஏத்துக்க பழகிக்கோ சில்லக்கா..அது தான் உன்னோட வளமான வாழ்க்கைக்கு நல்லது”என்றான் நக்கலாக...
“என்ன சொல்ல வர்றீங்க இப்ப”என்றாள் காட்டத்துடன்
“இல்லை அவனோட வசதி,வளம் எல்லாத்துலயும் மயங்கித் தானே அவனை கல்யாணம் செஞ்சுக்க முடிவு செஞ்ச...அப்போ அதுல இருக்கிற குறைகளை எல்லாம் கண்டுக்க கூடாது இல்லையா”என்றான் அவளுக்கு அறிவுரை கூறுவது போல...
“இதை எல்லாம் நம்பி நான் அவரை விட்டு பிரிஞ்சு நீங்க சொன்ன மாதிரியே வெளிநாட்டுக்கு ஓடிப் போகணும் அதுதானே”என்றாள் கோபமாக...
“அது உன் இஷ்டம்”என்று தோள் குலுக்க அவள் விருட்டென்று எழுந்து வீட்டிற்குள் சென்று விட்டாள்.
அத்தோடு முடிந்தது என்று நினைத்தால்,அன்று மாலையே முன்பு போல ஹெலிகாப்டரில் அவனது பட்டாளம் வந்து இறங்கியது.மாலை தொடங்கிய அந்த கும்பலின் ஆர்ப்பாட்டங்கள் இரவு வரை தொடர்ந்தது.வீடு முழுவதும் காட்டுக் கத்தலாக கத்திக் கொண்டு இருந்தார்கள்.
அது போதாது என்று குடி ஒருபக்கமும்,மியுசிக் ஒருபுறமுமாக இரைச்சலாக இருந்தது.அவர்களின் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகத் தொடங்கிய பொழுதே அறைக்குள் வந்து பூட்டிக் கொண்டாள் வானதி.அவர்களின் ரகளை நள்ளிரவைத் தாண்டியும் தொடரவே,அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கதவைத் திறந்து கொண்டு வந்தவள் வேகமாக வெளியில் வந்து ஈஸ்வரை தேடினாள்.
வீடு எங்கும் அவனை தேடி சலித்தவள் இறுதியில் மொட்டை மாடியில் அவளுக்கு முதுகு காட்டி நின்றவனைக் கண்டு எரிச்சலுடன் பேசத் தொடங்கினாள்.
“என்னடா இத்தனை நாள் என்னை நிம்மதியா இருக்க விட்டீங்களேன்னு பார்த்தேன்..கடைசியில உங்க வேலையை காமிச்சுட்டீங்க இல்லையா?”
“நான் என்ன செஞ்சேன் சில்லக்கா”என்றான் அமர்த்தலாக...
“இப்படி குடியும்,கூத்துமா இருந்தா என்ன அர்த்தம்?”
“பழகிக்கோ சில்லக்கா...நாளையில் இருந்து அவன் கூட நீ வாழப் போற வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்”
சலனமின்றி அவனை முறைத்தவள் கீழே செல்ல முற்படும் முன் அவன் குரல் அவள் செவிகளை தீண்டியது.
“விடியற்காலை தயாரா இரு சில்லக்கா...நாளைக்கு உனக்கு விடுதலை... என்ன ஒண்ணு..எல்லாரும் ஜெயிலில் இருந்து விடுதலை அடைஞ்சு வீட்டுக்குப் போவாங்க..ஆனா நீ வீட்டில் இருந்து ஜெயிலுக்குப் போகப் போற”என்றவனின் குரலில் இருந்த வெறுமை அவளை ஏதோ ஒரு விதத்தில் தாக்கியது.
தீ தீண்டும்...
கருத்துரையிடுக