Theendatha Thee Neeye Tamil Novels 28

 



அத்தியாயம் 28

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று பெரியவர்கள் சொன்னது இதைத்தானோ என்று ஈஸ்வர் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான். அத்தனை நாட்களாக அவன் அறிந்த வானதி வேறு. இப்பொழுது அவன் முன்பு தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்கும் வானதி வேறு.

முதன்முதலாக அவளை அவன் பார்த்த பொழுது எல்லாவற்றுக்கும் அஞ்சி நடுங்கி அழுபவள் இப்பொழுது அவனையே எதிர்த்து பேசுகிறாள் என்றால் அது சாதாரணமான விஷயம் அல்ல...எத்தனை தூரம் மனதளவில் அவள் நொறுங்கி இருந்தால் இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று நினைத்தவனால் அவளை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

“என்ன கேள்வி கேட்டா அப்படியே உறைஞ்சு போய் நிற்கறீங்க?”என்றாள் அதட்டலாக...

“நீ பேசு..இப்போ நீ பேசி நான் கேட்க வேண்டிய நேரம்...ஆனால் காலம் இப்படியே இருக்காது...ஒருநாள் எல்லாமே மாறும்...அப்போ நான் பேசுவேன்..நீ வாய் அடைச்சுப் போய் நிற்ப”

“ஹ...இனி என்கிட்டே நெஞ்சை நிமிர்த்தி உங்களால பேச முடியுமான்னு நானும் பார்க்கிறேன்...தப்பு செஞ்சுட்டு தலை நிமிர்ந்து நடந்துடுவீங்களா... மனசாட்சி உறுத்தல...”

“அதனால தான்..இப்போ நீ பேசுற எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு அமைதியா இருக்கேன்.ஏன்னா எனக்குத் தெரியும்.நான் தப்பு செஞ்சு இருக்கேன்னு.அதை நான் தெரியாம ஏதோ உணர்ச்சி வேகத்தில் எல்லாம் செய்யலை..தெரிஞ்சே தான் செஞ்சேன்.”என்றான் நிமிர்வாக.

“தப்பு செஞ்சுட்டு கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம எப்படி இப்படி இருக்க முடியுது உங்களால” என்றாள் வேகமாக

“எனக்கு வேற வழி தெரியலை ... நானும் உன்கிட்டே எப்படி எல்லாமோ பேசிப் பார்த்துட்டேன். நீ கேட்கலை... உன்னை வெளிநாடு அனுப்பி வைக்கக்கூட முயற்சி செஞ்சேன்...நீ ஒத்துக்கலை...”

“அதுக்காக” என்றாள் அழுத்தமாக...

“அதுக்காகத் தான்”என்றான் அவனும் அதை விட அழுத்தத்துடன்...

“திமிர்...”

“ஆமா..உடம்பு முழுக்க”என்றான் அலட்சியமாக...

“எனக்கு செஞ்ச அநியாயத்திற்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்”

“சொல்லிட்டா போச்சு...”

“இதுக்கெல்லாம் கண்டிப்பா நீங்க அனுபவிப்பீங்க”

“தேங்க்ஸ்”என்று மரத்து போன குரலில் சொன்னவனை என்ன செய்வது என்றே அவளுக்கு புரியவில்லை.

ஆத்திரம் அதிகமாக கைகளில் கிடைத்த பொருளை எல்லாம் தூக்கி அவன் மேல் எறியத் தொடங்கினாள். அவளின் கோபத்தை பார்த்ததும் அவன் முகத்தில் மெல்லிய புன்னகையின் சாயல். அது போதுமே அவளை இன்னும் அதிகமாக கோபப்படுத்த...

அவளது தாக்குதலில் இருந்து லாவகமாக தப்பியவன் கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருந்தான்.

“வானதி உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”என்றான் சீரியஸான குரலில்.அந்த குரலில் இருந்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவள் ‘என்ன’ என்று கூர்மையாக பார்த்தாள்.

“பத்திரிக்கையில் பேட்டி கொடுத்த மாதிரி நம்ம கல்யாணத்தை சீக்கிரம் நடத்தியாகணும்...அடுத்த மாசம் ஒரு நல்ல நாள் பார்த்து ஏற்பாடு செஞ்சிடலாமா?”

“ஏன் நாளைக்கு நாள் நல்லா இல்லையா... நாளைக்கே ஏற்பாடு செய்ங்க....”என்றாள் சுள்ளென்று.

“உடனே எப்படி... நாள்,கிழமை எல்லாம் பார்க்க வேண்டாமா...”

“இந்த யோசனை உங்களுக்கு முன்னாடியே இருந்து இருக்கணும்”என்றாள் எரிச்சலுடன்.

“கல்யாணத்தை நல்லா கிராண்டா இந்த ஊரே பார்க்கிற மாதிரி செய்யணும்” என்றான் அவன் பெருமையாக...

“தேவை இல்லை..சிம்ப்ளா செய்ங்க...யார் மூஞ்சிலயும் முழிக்கக் கூட எனக்குப் பிடிக்கலை...அருவருப்பா இருக்கு.” என்றாள் வானதி.

“ஓ...”என்று ஒரு மாதிரிக் குரலில் இழுத்தவன் பின் தோளைக் குலுக்கிக்கொண்டு சாதாரணமாக பேசத் தொடங்கினான்.

“அப்படின்னா எந்த பத்திரிக்கைக்கும் நம்ம கல்யாண விஷயத்தை சொல்ல வேண்டாம்”

“ஏன்..சொல்லக் கூடாது..ஒரு பத்திரிக்கை இல்லாமல் எல்லா பத்திரிக்கையிலும் வந்தாக வேண்டும்.நான் உங்களோடு சுற்றித் திரிந்ததை ஊர் முழுக்க பரப்பி விட்டீங்க இல்லையா...அதே மாதிரி இந்த நியூசும் எல்லா பத்திரிக்கையிலும் வந்தாக வேண்டும்.”என்றாள் தீர்மானமாக...

“ஏன் இப்படி ஏட்டிக்குப் போட்டியா நடந்துக்கிற....கல்யாணம் முடிஞ்சதும் இங்கேயே இருக்கலாம். என்னோட சொந்த ஊருக்கு எல்லாம் போக வேண்டாம்..... அங்கே போனா தேவை இல்லாத கேள்விகள் வரும்”

“கல்யாணம் முடிஞ்ச உடனே போக வேண்டாம்... மெதுவா ஒரு வாரம் கழிச்சு போகலாம்” என்று சொன்னவளை இமைக்காமல் பார்த்தான் ஈஸ்வர்.

“நான் சொன்னது எதையும் கேட்கவே கூடாதுன்னு பிடிவாதத்தோட இருக்க போல...சொன்னாக் கேளு ... அங்கே போக வேண்டாம்...அது நல்லது இல்லை”

“யாருக்கு நல்லது இல்லை..உங்களுக்கா”என்றாள் நக்கலாக

“யாருக்கா இருந்தா என்ன? நல்லது சொன்னா கேட்டுக்க வேண்டியது தானே...”

“ஏன் உங்க சொந்த ஊரில்  உங்களுக்கு கல்யாணம் நடந்ததை மறைக்க பார்க்கறீங்களா? வானதின்னு ஒருத்தி உங்க வாழ்க்கையில் இல்லைன்னு மறைக்கப் பார்க்கறீங்களா? நீங்களும் ஒரு மனுஷன்... சை! உங்க முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கலை.கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்களேன்” என்று அவள் கத்த, ஒன்றுமே பேசாமல் அறையை விட்டு வெளியே வந்தவனை எதிர்கொண்டார் பவுனு...

“என்ன தம்பி...சின்னம்மா ஊருக்கு வர சம்மதிச்சுட்டாங்களா...”

“சம்மதிக்க வச்சுட்டேன்” என்றான் மர்மப் புன்னகையுடன்.

“அவங்களுக்கு இன்னும் கோபம் குறையலையா தம்பி”

“எப்படி குறையும்...நான் செஞ்ச தப்பு அந்த மாதிரி...அது அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துடுமா என்ன?” என்றான் உள்ளார்ந்த வருத்தத்துடன்.

“அடுத்து என்ன செய்ய போறீங்க தம்பி?” என்றார் அவர் பேச்சை மாற்றும் விதமாக...

“கல்யாணம் தான்” என்றான் ஒருவித நிறைவான முகத்துடன்.

“ஏற்பாடெல்லாம்...”என்று கேள்வியாக அவர் இழுக்க...

“எல்லாம் ரெடி...நாளைக்கு காலையில் என் கையால் அவளுக்கு தாலி கட்ட வேண்டியது மட்டும் தான் பாக்கி”என்று சொன்னவன் வெளியே சென்று விட...

அதன் பிறகு இரவு டைனிங் டேபிளில் அமர்ந்து வானதி உணவு உண்ணும் நேரத்தில் தான் களைத்துப் போய் வீடு வந்து சேர்ந்தான் ஈஸ்வர்.

அதுநேரம் வரை பவுனம்மாவிடம் சிரித்துப் பேச முயற்சி செய்து கொண்டு இருந்தவள் அவனைப் பார்த்ததும் முகம் இறுகி கல்லாக மாறிப் போனாள். அவளுக்கும் சேர்த்து வைத்து பவுனம்மா அவனிடம் பேச வேறுவழியின்றி அவளும் அதை எல்லாம் கேட்க வேண்டியதாயிற்று.

அவன் கை நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்தான். உணவை உண்ட வண்ணம் ஒவ்வொரு பொருளாக அவருக்கு காட்டுகின்ற சாக்கில் வானதிக்கு காட்டிக் கொண்டு இருந்தான்.

“இது கல்யாணப் புடவை..இது நகைகள்...எதற்கும் இருக்கட்டும்னு கூரைப் புடவையும் வாங்கி வச்சு இருக்கேன்...அப்புறம் இது”

“எல்லாம் சரி தம்பி..முக்கியமான பொருள் தாலி எங்கே காணோம்”

“இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடும்மா” என்றவனின் பார்வையில் ஏதோ ரகசிய செய்தி இருந்ததை வானதி உணர்ந்து கொண்டாள். ஆனால் அவள் கவனிக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டதாலோ என்னவோ அவசரமாக பார்வையை மாற்றிக் கொண்டான்.

‘போடா...பெரிய சஸ்பென்ஸ்...இதுக்கு மேலயுமா என்னோட வாழ்க்கையில் பெரிய சஸ்பென்ஸ் வந்துடப் போகுது’என்று நினைத்துக் கொண்டாள்.

சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே இருக்க.. அங்கே இருக்க பிடிக்காமல் மேலே அறைக்கு செல்ல எத்தனித்தாள் வானதி. வாசலில் இருந்து யாரோ ஒரு வேலையாள் உள்ளே வருவதும்...ஈஸ்வரின் கைகளில் ஒரு பழைய காலத்து மரப்பெட்டியை ஒப்படைப்பதும் பார்த்தவளுக்கு அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் அங்கே நிற்க மனமின்றி மாடிக்கு வந்து விட்டாள்.

தான் எடுத்து இருக்கும் முடிவு சரிதானா...ஈஸ்வருடன் தன்னுடைய வாழ்க்கையை இணைத்துக் கொள்வதாக தான் எடுத்துக் கொண்ட முடிவு எந்த அளவிற்கு சரிப்பட்டு வரும். என்று நினைத்து குழம்பிக் கொண்டிருந்தாள் வானதி.

இத்தனை நாட்களாக மூர்த்தியை மனதில் கணவனாக வரித்து வைத்திருந்தது ஒருபுறம் என்றால் அந்த இடத்தில் ஈஸ்வரை பொருத்திப் பார்ப்பது அதை விட சிரமமாக இருந்தது.

என்ன தான் முதல் நாள் நடந்த சம்பவத்தில் மூர்த்தியை அவள் வெறுத்து இருந்தாலும் ஈஸ்வரை மனமார நேசிப்பது என்பது அவளால் முடியும் என்றே அவளுக்குத் தோன்றவில்லை.

நேசமே இல்லாமல் ஒரு திருமண வாழ்க்கை எதற்காக? யாருக்காக வாழ வேண்டும்... இவனை விட்டு ஒதுங்கி போய் தனியே வாழ்ந்து விடலாமா அல்லது இவனுக்குத் தெரியாமல் எங்கேயாவது கண் காணாத இடத்திற்கு சென்று விடலாமா’ என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினாள் வானதி.

கதவை திறந்து கொண்டு ஈஸ்வர் உள்ளே வரவும் எரிச்சலுடன் அவனை ஏறிட்டாள்.

“இப்ப எதுக்கு வந்தீங்க...”

“உன்கிட்டே இதை காட்டத் தான்” என்று சொன்னவன் படுக்கையில் அமர்ந்து கொண்டு அந்த பழங்காலத்து பெட்டியை கையில் இருந்த சாவியால் திறந்தான்.

உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தவள் வியந்து போனாள்.விலை உயர்ந்த பட்டுத் துணியால் போர்த்தப்பட்டு அதன் உள்ளே மங்களகரமான அம்மையப்பர் உருவம் பதித்த பொன் தாலி இருந்தது. ஆனால் அந்த தாலியில் கோர்க்கப்பட்டு இருந்த செயின் வித்தியாசமான முறையில் இருந்தது. நல்ல கனமான தோற்றத்துடன் திரிசூலத்தை ஆங்காங்கே பதித்து நீளமாக அமைந்து இருந்தது. அதன் தோற்றத்தைப் பார்க்கையிலேயே அது சாதாரணமான தாலி செயின் இல்லை என்பது அவளுக்குப் புரிந்து போனது.

“இது குடும்பத் தாலி... இத்தனை நாளாய் பேங்க் லாக்கரில் இருந்துச்சு... கல்யாணத்துக்கு தேவைப்படும்னு இப்ப தான் கொண்டு வர சொன்னேன். இது நேற்றே என்னுடைய கையில் கிடைக்கவில்லை... கிடைச்சு இருந்தா அப்பவே கட்டி இருப்பேன்”

“ஹ... அதனால எல்லாம் நீங்க செஞ்ச பாவம் இல்லைன்னு ஆகிடாது. தாலி கட்டி இருந்தாலும் கூட அதுவும் தப்பு தான். ஏன்னா..என்னோட மனசில் நீங்க இல்லை...இனி எப்பவும் அந்த இடம் உங்களுக்கு கிடைக்காது”

“நான் மறுக்கல...என்னோட சூழ்நிலையை உனக்கு விளக்குறேன்”

“என்ன பொல்லாத சூழ்நிலை...எனக்கு சுயநினைவே இல்லாதப்போ நீங்க செஞ்சது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?”என்று மூச்சு வாங்கக் கேட்டவளின் முகம் ஆத்திரத்தில் சிவந்து போய் இருந்தது. கண்கள் கலங்கி உதடு துடிக்க, மூக்கு விடைக்க அவள் நின்ற கோலம் அவனது மனதை அசைத்துப் பார்த்தது.

எங்கே அழுது விடுவோமோ என்று எண்ணியவள் வேகமாக அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள். அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவன் மனதை மாற்றிக் கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேறி விட்டான்.

சற்று நேரத்தில் தன்னை மீட்டுக் கொண்டவள் அந்த தாலியை கையில் வைத்துப் பார்த்தவாறே ஜன்னல் பக்கம் போனவள் யோசனையானாள்.

‘வீட்டை சுத்தி இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்? காலையில் வரும்பொழுது இதெல்லாம் இல்லையே’ என்று யோசிக்கத் தொடங்கினாள்.

‘இதே மாதிரி கல்யாண சமயத்தின் பொழுது மூர்த்தியும் ஏற்பாடு செஞ்சு இருந்தா...இந்த பிரச்சினை எதுவுமே வந்து இருக்காது’ என்று எண்ணியவள் சோர்ந்து போனாள்.

‘இப்போ எதுக்கு பழசை நினைச்சு நான் வருத்தப்படறேன். அதனால என்ன பலன்... இனி அடுத்து நடக்க வேண்டியது பற்றித் தான் யோசிக்கணும். இப்போ இந்த வீட்டை விட்டு நான் எப்படி வெளியே போவது... இந்தக் காவல் வெளியாள் யாரும் உள்ளே வராமல் இருக்கவா... அல்லது நான் தப்பி செல்லாமல் இருக்கவா’ என்று எண்ணத் தொடங்கினாள்.

யோசனையுடன் கையில் இருந்த தாலியைப் பார்த்தவளுக்கு கொஞ்சம் யோசனையானது.

‘சொந்த ஊர் ஆந்திரான்னு தானே சொன்னார்..ஆனா இதைப் பார்த்தா அந்த ஊர் தாலி மாதிரி இல்லையே... ஏன்னா ஆந்திரா பக்கம் ஒண்ணு கருகமணியில் தாலி போடுவாங்க...அப்படி இல்லைனா இரண்டு காசு மாதிரி தாலி தான் அங்கே கட்டுவாங்க...ஆனா இது என்ன தமிழ்நாட்டுத் தாலி மாதிரி இருக்கு’ என்று எண்ணி குழம்பியவள் பவுனம்மா பால் கொண்டு வரவும் அத்துடன் அந்த எண்ணத்தை ஒதுக்கி தள்ளி விட்டாள்.

பாலைவனத்தில் இருப்பவளுக்கு அருந்தக் கிடைத்த சுனை நீர் போல பவுனம்மாவின் அன்பும் அக்கறையும் அந்த நேரம் தேவையாக இருந்தது.தேவை இல்லாத கேள்விகள் கேட்டு அவளது மனதை ரணப்படுத்தாமல் இதமாக அவர் பேசிய பேச்சுக்கள் ஏனோ அந்த நிமிடத்தில்  அவளுக்குத் தேவையாக இருந்தது.

“தூங்கு பாப்பா...காலையில் நேரமா எழுந்திரிக்கணும்...காலையில் ஆறு மணிக்கு முஹூர்த்தம் குறிச்சு இருக்காங்க” என்று சொல்ல படுக்கையில் படுத்தவளுக்கு உறக்கம் வந்த பாடில்லை...புரண்டு புரண்டு படுத்தவள் நள்ளிரவில் ஏதோ சப்தம் கேட்டு எழுந்து அமர்ந்தாள்.

என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் எழுந்து பார்த்தவளின் காலுக்கு அருகில் சிறு கல் ஒன்று கிடந்தது. திறந்திருந்த ஜன்னலின் வழி அது உள்ளே வந்து இருப்பது புரிய வேகமாக எழுந்து ஜன்னலின் அருகில் சென்றாள்.வாசலில் காவலுக்கு இருந்த போலீசார் உறங்கி இருக்க...சற்று தூரத்தில் இருந்த மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்ட உருவம் சம்ஹார மூர்த்தி என்பதை அவளால் உணர முடிந்தது.

“இந்த நேரத்தில் இங்கே என்ன செய்றார்’ என்ற குழப்பத்துடன் யோசித்தவள் பக்கவாட்டில் இருந்த பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே போய் நின்றாள்.

‘கீழே இறங்கி வா’என்ற அவனின் சைகையை கண்டு முகம் சுளித்தாள் வானதி.

‘இப்ப எதுக்கு என்னை கீழே கூப்பிடறார்’ என்று எரிச்சல் ஆனாள்.

தீ தீண்டும்...

Post a Comment

புதியது பழையவை