Vanavil Sirpame - Episode 11 Tamil Novels

 


அத்தியாயம் 11
 

 

அன்றைய தினம் முழுவதும் கல்லூரியில் இதமான மனநிலையிலேயே கழித்தாள்.அதற்கு காரணம் பிரபஞ்சன் என்பது அவளது மனதிற்கு நன்றாக புரிந்தது. மதிய உணவு இடைவேளையின் போது 'காலேஜ்க்கு கட் அடிக்கலாமா?' என்று கேட்டபடி வந்த தனுஜாவை இவள் முறைத்த முறைப்பில் அவள் அரண்டே போனாள்.

"ஏய் என்னடி இப்படி முறைக்கிற"

"எவ்ளோ கஷ்டப்பட்டு நம்ம வீட்டில் 
படிக்க வைக்கறாங்க. நீ என்னடான்னா இப்படி காலேஜ் கட் அடிக்க சொல்றியே...நீ எல்லாம் எங்கே படிச்சு உருப்படப் போற"
 
'அடிப்பாவி' என்று ஒரு பார்வை அவளை பார்த்து விட்டு பேச ஆரம்பித்தாள் தனுஜா.

"ஏன்டி பிசாசே... உனக்கு என்னை பார்த்தா எப்படி இருக்கு... சும்மா இருந்தவளை ஒரு வாரமா காலேஜ் கட் அடிக்க வச்சுட்டு இப்ப என்னடான்னா ரொம்ப நல்ல பிள்ளை மாதிரியா பேசுற" என்று கோபமாக வாதிட்டவள் அவளின் தலையில் நங் கென்று ஒரு குட்டை வைத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள். அங்கேயே நின்று கொண்டு இருந்தால் சங்கமித்ரா அவளை தொலைத்து விடுவாள் என்பதை அறிந்தவள் ஆயிற்றே.

கோபம் வருவதற்கு பதிலாக சங்கமித்ராவுக்கு சிரிப்பு வந்தது. தானே வலிய போய் தோழியை சமாதானம் செய்தாள்.அவளின் செய்கைகளை எல்லாம் தனுஜா ஒரு வித ஆராய்ச்சி கண்ணோடு பார்க்க , ரொம்ப கஷ்டப்பட்டு முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.

அன்று வீட்டுக்கு திரும்பிய பிறகும் கூட அதே மனநிலையில் தான் இருந்தாள். இரவு உணவை உண்டு முடித்த பின் தூக்கம் கண்களை சுழற்றிக் கொண்டு வர படுக்கையை விரித்து தூங்க தயாரானாள்.

செல் போனில் அழைப்பு வர இந்த நேரத்தில் அழைப்பது யாரென்ற யோசனையுடன் எடுத்து பார்த்தவளின் தூக்கம் ஓடியே போனது.வேகமாக போய் அறைக்கதவை தாழிட்டு விட்டு போனை எடுத்து பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ"

"என்ன பேபி தூங்கிட்டியா"

"தூங்க போறேன்.என்ன விஷயம் இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்கீங்க"

"ஏதாவது விஷயம் இருந்தா தான் உனக்கு போன் பண்ணனுமா?"அவன் குரல் ஆழ்ந்து ஒலித்தது.

இன்னதென்று பிரிக்க முடியாத ஏதோ ஒரு உணர்வினால் தாக்க பட்டவள் இதழை கடித்து அமைதியானாள். அவளின் நிலையை உணர்ந்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டு அவளை சீண்ட தொடங்கினான்.

"இன்னிக்கு எதுக்கு கோவிலில் சாமி கும்பிடும் போது மாமனை அப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்த ? மாமன் அம்புட்டு அழகாவா இருக்கேன்?" அவன் குரலில் இருந்த கேலியில் அவன் தான் பார்த்ததை தெரிந்து கொண்டான் என்பது புரிந்து விட வாய் பேசாமல் மௌனியானாள் சங்கமித்ரா.

"பதில் சொல்லு பேபி...அமைதியா இருந்தா விட்டுடுவேன்னு உனக்கு நினைப்பா? பதில் சொல்லு என்னை சைட் அடிச்சுக்கிட்டு தானே இருந்த" விஷமம் வழிந்தோடியது அவன் குரலில்.

இல்லை ... இல்லை என்று வேகமாக மறுக்க நினைத்தாலும் வார்த்தைகள் வாயை விட்டு வெளிவர மாட்டேன் என்று சண்டித்தனம் செய்ய அவனுடைய சேட்டைகளுக்கு எப்படி பதில் கொடுப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.

"இப்படி வெட்கப்பட்டால் எப்படி பேபி? அதுவும் உன் மாமன்கிட்ட என்ன வெட்கம்?" சீண்டலை நிறுத்தும் எண்ணமில்லை பிரபஞ்சனுக்கு.

அவனுடைய குற்றச்சாட்டை ஏற்கவும் முடியாமல் அவள் தடுமாற அவளை சீண்டி சிவக்க வைக்கும் வேலையை அவன் செவ்வனே செய்தான்.

"இப்போ மாமனை பாரு.உன்னை நான் சைட் அடிச்சதை மறைக்காம  ஒத்துக்குவேன்.அந்த பெருந்தன்மை உனக்கு இல்லையே"

இனியும் அமைதியாக இருந்தால் இவன் இன்னும் சீண்டுவான் என்பதை உணர்ந்து இருந்ததால் வாய் திறந்து பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசறீங்க? நான் எதுக்கு உங்களை பார்க்க போறேன்.அதுவும் ரசிச்சு"

"என்னை கேட்டால் எனக்கு எப்படி தெரியும் பேபி...ரசித்து பார்த்த உனக்கு தானே தெரியும்"அப்பாவி போல பேசினான்.

"கோவிலில் எதிரே நின்னு சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தென்.கண்ணை திறந்து பார்க்கும் போது எதிரில் நீங்கள் இருந்தீர்கள்.அதுக்காக நான் உங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்னு சொல்றது எல்லாம் சுத்த பொய்"

"ஓ...அப்ப நான் எதிரில் இருந்ததால் தான் என்னை பார்த்தாய்...இல்லையென்றால் என்னை பார்த்து இருக்க மாட்டாய் அப்படித்தானே"

"இதில் சந்தேகம் வேறா?"

"சரி பேபி நீ சொன்னா நான் நம்பாமல் இருப்பேனா.கண்டிப்பாக நம்புகிறேன். ஒரே ஒரு சின்ன்ன்ன்ன்ன சந்தேகம் பேபி... கோவிலின் உள்ளே வந்ததும் கண்களாலேயே தேடினாயே அது யாரை?"

"அது...அது"

"ம் சொல்லு பேபி"

"அது... வந்து... வந்து கோவிலுக்குள்ள"

"சுண்டல் விற்கிறவனை தானே தேடினாய்?"எடுத்துக் கொடுத்தான்.

அவளும் பதட்டத்தில் யோசிக்காமல் "ஆம்" என்று விட பிரபஞ்சன் அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் சிரிக்க ஆரம்பித்ததும் நான் என்ன சொன்னேன் என்று யோசித்தவள் தான் உளறி கொட்டியதை உணர்ந்து மீண்டும் வாயை இறுக மூடி கொண்டாள்.

"என்னிடம் என்ன வெட்கம் மித்ரா... நமக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்க வேண்டாம் .சரிதானா. இதே கேள்வியை என்னிடம் கேட்டால் நான் கண்டிப்பாக ஒத்துக் கொள்வேன். நான் உனக்கு தெரிந்தும், தெரியாமலும் உன்னையும் உன்னுடைய ஒவ்வொரு செயல்களையும் ரசித்துக் கொண்டு தான் இருந்தேன்."

"உன்னுடைய ட்ரெஸ்க்கு மேட்ச்சாக அதே நிறத்தில் நீ தோடும்,வாட்சும் அணிந்து இருந்தாய்.கழுத்தில் மெல்லிய ஒற்றை சங்கிலி அதில் இதய வடிவில் குட்டியா ஒரு டாலர் ஒரு கையில் மெல்லிய பிரேஸ்லெட் அப்புறம்    உன் தலையில் ஒரே ஒரு சிகப்பு ரோஜா.உன் நெற்றியின் வலது புறம் இருக்கும் மச்சத்தின் மீது எப்பவும் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.அப்புறம் உன் கழுத்தில்...."

"அய்யோ போதும் போதும்...இப்படியா எல்லாத்தையும் நோட் பண்ணுவீங்க"

"எனக்கு அவ்வளவு எளிதில் எதுவும் மறக்காது பேபி.இன்னும் சொல்ல போனால் என் அளவிற்கு நீ இன்னும் என்னை கவனிக்க வில்லையோ என்று எனக்கு கொஞ்சம் வருத்தமாக கூட இருக்கிறது.

தான் அவனை சரியாக கவனிக்கவில்லையா? தன்னை தானே கேள்வி கேட்டு கொண்டாள். 'இல்லையே...இளம் நீல நிறத்தில் அவன் அணிந்து இருந்த சட்டையும்,அதே நிறத்தில் பார்டர் வைத்த வேஷ்டியும், ஒற்றை கையில் அவன் அணிந்து இருந்த தங்க நிற கடிகாரமும் ஒரு கையில் மாலையும் அர்ச்சனை கூடையும் வைத்து இருந்தவன் ஒற்றை கையால் அவ்வப்போது மீசையை முறுக்கி விட்டு கொண்டதும் அவளின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கும் போது அதில் வழிந்த காதலும்,தன்னை சீண்டும் போது அதே கண்களில் வழியும் விஷமமும் அவள் அறிந்து தானே இருந்தாள்.

"என்ன பேபி மாமனை மனசுக்குள்ள ரசிச்சு முடிச்சுட்டியா"அவனுடைய கேலியில் முகம் சிவந்து மீண்டும் அமைதி காத்தாள் மித்ரா.

"சரி பேபி...இன்னைக்கு இது போதும்.நாளைக்கு என்னோட இதயப்பூ எங்கே மலர்ந்து இருக்கும்?"

"பூ தானே தோட்டத்தில் இருக்கும்.போய் பறிச்சுக்கோங்க" அவள் விளையாட்டாக சொன்னாள்.

"எனக்கு பூவை பறிப்பதில் துளியும் இஷ்டம் இல்லை மித்ரா. அது செடியிலேயே இருக்க வேண்டும்.அதன் மலர்ச்சியை பார்த்து ரசிக்க வேண்டும்.அது தான் பிடிக்கும்" என்றவன் சிறிது இடைவெளி விட்டு உற்சாகமான குரலில் மீண்டும் தொடர்ந்தான்.

"அதுக்காக என்னை சாமியார்னு எல்லாம் நினைச்சுடாதே. கல்யாணத்துக்கு அப்புறம் டெய்லி உனக்கு தலை நிறைய மல்லிப்பூ வாங்கி தருவேன் சரியா?"

இதற்கு என்ன பதில் சொல்வது என்று வழக்கம் போல மித்ரா அமைதி ஆகி விட்டாள். சில நேரங்களில் அவனுடன் சரிக்கு சரி மல்லுக்கு நிற்பவள் திருமணம் நிச்சயம் நடந்து விடும் என்பது போன்ற அவனுடைய உறுதியான பேச்சில் அவள் மனம் துவண்டு விடுவாள்.

அவளின் அமைதியையும் அதற்கான காரணத்தையும் ஊகித்தவன் மென்மையான குரலில் பேச ஆரம்பித்தான்.

"மித்ரா தேவை இல்லாமல் இப்போது எதையும் மனதுக்குள் போட்டு குழப்பிக் கொள்ளாதே.எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன். உண்மையில் நான் உனக்கு நன்றி சொல்லணும் மித்ரா"

அவனுடைய பேச்சையே கேட்டுக் கொண்டு இருந்தவள் அவனின் நன்றி என்ற வார்த்தையில் லேசாக குழப்பம் அடைந்தாள்.

"எதுக்கு"

"வாழ்க்கை இவ்வளவு அழகானது எனக்கு புரிய வைத்ததற்கு. நான் எப்பவும் கொஞ்சம் முரட்டுத்தனமாக தான் நடந்து கொள்வேன்.என்னுடைய இயல்பே அது தான். இப்போது  பூவை செடியில் இருந்து பறித்தால் அதுக்கு வலிக்குமோன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.என் கண்களுக்கு எல்லா பூவும் உன்னை போலவே தோணுது. அப்படி இருக்கும் போது நான் எப்படி அதை நோகடிப்பேன் சொல்லு? " என்று தொண்டை லேசாக கரகரக்க பேசியவன் கொஞ்சம் இடைவெளி விட்டு குரலை சரி செய்து கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.

"அது மட்டுமா? இப்போ எல்லாம் வீட்டுக்கு வந்தா முழுக்க முழுக்க கண்ணாடி முன்னாடியே தவம் கிடக்கிறேன். நீ நல்ல சிவப்பு நிறம் உன் பக்கத்தில் நான் நின்றால் கறுப்பு வெள்ளை படம் மாதிரி இருக்கும் இல்லையா? அதனால் அடுத்த வாரம் நம்ம கல்யாணத்துக்கு நாள் குறிச்சதும் சிவாஜி படத்துல வர மாதிரி எல்லா முறையும் பயன்படுத்தி கலர் ஆகலாம்னு இருக்கேன்"

"எதுவுமே ஒர்க் அவுட் ஆகலைனா ரஜினி மாதிரியே பெயிண்ட் அடிச்சுக்குவீங்களா" கிண்டலாக  கேட்டாள்.

"நீ கல்யாணத்துக்கு ரெடின்
னு ஒரு வார்த்தை சொல்லு.பெயிண்ட் டப்பா உள்ளேயே குதிச்சிடறேன்" 
 
அவனுடைய குரலில் இருந்த தீவிரத்தில் மித்ரா வாய் அடைத்து போனது என்னவோ நிஜம்.

"என்ன பேபி நேரில் தான் பேச மாட்டேங்கிற போனில் நல்லா பேசுவன்னு நினைச்சேன். இங்கே நான் ஒருத்தன் தான் ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்கேன்.நீ வாயே திறக்க மாட்டேங்கிற"

'நீ எங்கேடா என்ன பேச விடுற...எதையாவது சொல்லி வாயை திறக்கவே விட மாட்டேங்கிற' என்று உள்ளுக்குள் நினைத்தவள் வெளியே அமைதியாகி விட பிரபஞ்சனே மீண்டும் தொடர்ந்தான்.

"ஊஹூம் ... இது வேலைக்கு ஆகாது.நீ பேச மாட்ட ...அதனால் இடத்தை நானே செலெக்ட் பண்ணுறேன்"

"என்னுடைய இதயப்பூ வை சந்திக்க சரியான இடம் பூக்கள் கொட்டிக் கிடக்கும் பூங்கா.சரி தானே"

"அங்கேயா" தயக்கமாக இழுத்தாள்.

"உன் வீட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கிறது  மித்ரா.காலை நேரத்தில் நிறைய பேர் வாக்கிங் போவாங்க.டீசண்டா தான் இருக்கும். பயப்படாமல் வா"

"இல்லை ... தெரிந்தவங்க யாராவது பார்த்துட்டா" கவலையும் பயமும் போட்டி போட்டது அவள் குரலில்.

"நான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் மித்ரா. இருந்தாலும் மறுபடியும் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ.என்னை தாண்டி தான் உன்னை எந்த ஆபத்தும் நெருங்கும். உன்னை கேள்வி கேட்க யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்.தேவை இல்லாம இப்படி எல்லாம் பயப்படாதே.நாளைக்கு சரியான நேரத்தில் வந்து விடு.குட் நைட் " என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான்.

அவனுடைய உரிமையான பேச்சில் மனதில் தோன்றிய இதத்தோடு அப்படியே உறங்கியும் விட்டாள்.

Post a Comment

புதியது பழையவை