Vanavil Sirpame - Episode 10 Tamil Novels

 

அத்தியாயம் 10
 
திருமணம் முடிவாகி இருக்கும் இந்த நிலையில் தான் செய்து இருக்கும் இந்த செயல் சரிதானா என்ற குழப்பம் சங்கமித்ராவிற்கு ஏற்பட்டாலும் அதை எல்லாம் புறம் தள்ளினாள்.இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் பிரபஞ்சனின் அட்டகாசம் இன்னும் அதிகரிக்க கூடுமோ என்ற கவலை ஒரு புறம் எனில் மூன்றே நாட்களில் அவன் பக்கம் மெல்ல சாயத் தொடங்கிவிட்ட அவளுடைய மனதை எண்ணி தான் அவள் பெரும் கவலை அடைந்தாள்.

அவனை பார்த்த இந்த மூன்று நாட்களுமே அவள் உறக்கத்தை தொலைத்து இருந்தது வேறு அவளை மேலும் பயமுறுத்தியது.தனக்கு தானே ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாள். 'அவன் மீது எனக்கு இருப்பது சாதாரண ஈர்ப்பு தான்.'

அதற்கும் அவளுடைய மனசாட்சி அவளிடம் சண்டைக்கு வந்தது. 'அது எப்படி ஈர்ப்பு வரும்.எப்பொழுதும் உன்னை சீண்டிக் கொண்டே இருக்கும் ஒருவன் மேல்'அதற்கு பதில் அவளிடம் இல்லை.

தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் ஏதோ ஒரு வகையில் அவளது மனம் அதை வரவேற்கவே செய்தது.

எது எப்படியோ அன்றைய பகல் முழுவதும் இப்படியே மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டு இருந்தவள் அன்றைய இரவில் நிம்மதியாக தூங்கினாள். அதற்கு காரணம் இனி வரும் நாட்களில் பிரபஞ்சனால் எந்த விதமான தொந்தரவும் இருக்காது என்பதனால் அப்படி இருப்பதாக அவள் தன்னை தானே ஏமாற்றிக் கொண்டாள்.

காலை எழுந்ததும் முதல் வேலையாக  மொபைலை எடுத்துப் பார்த்தாள். அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அவளுக்கு பிரபஞ்சனிடம் இருந்து மெஸேஜ் வந்து இருந்தது.
'தேவியை தரிசிக்க எங்கே வர வேண்டும் பதிலுக்காக காத்திருக்கும் உன் பக்தன்'
படித்ததும் அவளையும் அறியாமல் அவள் முகம் புன்னகையை பூசிக் கொள்ள அவனுக்கு பதில் அனுப்பினாள்.

தரிசனம் கோவிலில் கிடைக்கும் என்று
பதில் மெசேஜ் அனுப்பி விட்டு சிரித்த முகமாகவே எழுந்து சென்று தலைக்கு குளித்து முடித்தாள்.கூந்தலை  அழகாக சீவி தோட்டத்தில் இருந்து பறித்த  ஒற்றை ரோஜாவை தலையில் வைத்துக் கொண்டாள்.
 
முகம் நிறைந்த சிரிப்புடன் போய் டைனிங் டேபிளில் அமர்ந்து தாயையும் தமக்கை யையும் சீண்டியவாறே காலை உணவை உண்டு முடித்தாள்.

கடந்த இரு நாட்களை விட இன்று மகள் மகிழ்ச்சியாக இருப்பதை அவளுடைய தாய் கவனித்தாலும் தலை வலி சரியாகி விட்டதால் ஏற்பட்ட மாற்றம் இது என்று எண்ணி சாதாரணமாக விட்டு விட்டார்.

காலேஜ்க்கு செல்லும் நேரத்திற்கு சற்று முன்னரே கிளம்பிய மகளை கேள்வியாக பார்த்த த
ர்மராஜ், " என்னம்மா இவ்வளவு சீக்கிரம் கிளம்பி ரெடி ஆகிட்டே"அவரது கேள்வி இயல்பாக தான் இருந்தது. ஆனால் மித்ரா தான் மனதுக்குள் மிகவும் வருந்தினாள்.பெற்றவர்களை ஏமாற்றுகிறோமோ என்ற குற்ற உணர்ச்சி அவளை வாட்ட ஆரம்பித்தது.

"கோவிலுக்கு போய்ட்டு காலேஜ் போகணும் அப்பா"
வேறு ஏதேனும் கேள்விகள் கேட்பாரோ என்று அவள் தந்தையின் முகத்தையே பயத்துடன் பார்த்துக் கொண்டு இருக்க , "சரிமா பார்த்து பத்திரமா போய்ட்டு வா" என்று மிக சாதாரணமாக கூறி விட்டு செல்லும் தந்தையை வியப்பாக பார்த்தாள்.

இதற்கு முன் வெளியே கிளம்புவது என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்து விடுவார். அதற்கு பயந்தே மித்ரா அவருக்கு தெரிந்து எங்கேயும் வெளியே செல்ல மாட்டாள்.காலேஜ் கட் அடித்து விட்டு வெளியே சுற்றுவதும் அவருடைய இந்த அதிக கட்டுப்பாட்டினால் தந்தை மீது ஏற்பட்ட கோபத்தில் அவரை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு கடந்த இரு வாரங்களாக செய்து கொண்டு இருக்கும் வேலை தான்.

அப்படிப்பட்ட தந்தை இன்று மறுபேச்சு பேசாமல் ஒத்துக்கொண்டது அவளுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது என்னவோ நிஜம்.ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்று பிரபஞ்சன் ஏற்கனவே அவரிடம் அனுமதி வாங்கி விட்டான் என்பது தான்.

கடகடவென காலை உணவை உண்டு முடித்தவள் மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக் கொண்டு நேரே கோவிலுக்கு சென்றாள்.

'அவன் வந்து விட்டானா' ஆவலோடு அவள் கண்கள் கோவிலை வலம் வந்தது. மந்திரம் போட்டது போல் அவள் நினைத்ததுமே அவள் முன்னால் வந்து நின்றான் பிரபஞ்சன்.

எப்பொழுதும் அவளை சீண்டும் விதமாக சிரிப்பவன் இன்று அவளை வசீகரிக்கும் விதத்தில் சிரித்துக் கொண்டு இருந்தான்.இளம் நீல நிறத்தில் சட்டையும் வேஷ்டியும் அணிந்து இருந்தான்.வேஷ்டி சட்டை  அவனுக்கு கம்பீரமான அழகை கொடுத்தது. கைகளில் அர்ச்சனை கூடையும் மாலையும் இருக்கவே, 'மாலை எதற்கு' என்ற கேள்வியோடு நிமிர்ந்தவள் அவனின் ரசனை மிகுந்த பார்வையில் லேசாக சிவக்க தொடங்கிய கன்னங்களை மறைக்கும் பொருட்டு வேறு புறம் திரும்பி கொண்டாள்.

"என்னம்மா ஏதோ கேட்க வந்த?"அவளை இயல்பாக்கும் பொருட்டு அவள் அறியாமல் அவளை ரசித்தபடியே பேசினான்.

"மாலை எதுக்கு"

"நம்ம கல்யாணத்துக்கு தான்"குறும்புடன் கூறிவிட்டு அவளை பார்த்து வசீகரமாய் புருவத்தை உயர்த்த பெண்ணவளின் மனதில் அதிர்வு தோன்றி மறைந்தது. முகத்தில் கோபத்தை வலிய வரவழைத்து கொண்டு அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

அவன் சட்டென காதை பிடித்து தோப்புக்கரணம் போடுவது போல செய்யவும் உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டாள்.

"முதல் நாளே சண்டை வேணாம் பேபி.இன்னைக்கு இந்த கோவிலில் திருக்கல்யாணம்ன்னு சொன்னாங்க.அதான் சாமிக்கு வாங்கிட்டு வந்தேன்.உள்ளே போகலாமே" என்று சொன்னபடி அவளோடு இணைந்து கோவிலுக்குள் பிரவேசித்தான்.

சன்னிதானத்தில் கடவுளை வணங்கும் போது ஏனோ சங்கமித்ரா எதையும் இறைவனிடம் வேண்ட தோணாமல் ஒரு நிமிடம் கண்களை  திறந்து பார்த்தவள் எதிரில் நின்றவனை பார்த்தாள்.

கண்களை இறுக மூடிக் கொண்டு வாய் எதையோ முணுமுணுக்க அவன் நின்ற விதம் அவளுடைய மனதில் ஆழமாக பதிந்து போனது.அர்ச்சனை முடிந்ததும் தீபாராதனை
க்காக அவன் கண்களை திறந்த நொடி அவள் சாமி கும்பிடுவது போல முக பாவனையை மாற்றி கொண்டாள்.

அர்ச்சனை தட்டை கையில் வாங்கிகொண்டு அங்கிருந்த பிரகாரத்தில் இருவரும் சற்று இடைவெளி விட்டு விலகி அமர்ந்தனர்.

மித்ரா மௌனமாக இருக்க பிரபஞ்சனே பேச்சை துவக்கினான்.

"நான் விசாரித்து விட்டேன் பேபி"

"என்ன" என்றாள் கேள்வியாக

"இந்த கோவிலில் கல்யாணம் செய்து வைப்பார்களாம்.மாலை இருக்கு,பிரசாதமாக அய்யர் கொடுத்த தாலி இருக்கு.அழகான மாப்பி
ள்ளை  நானும் தயாரா இருக்கேன்.இம்னு ஒரு வார்த்தை சொல்லு இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று குறும்பாக பேச அவனை திட்ட நினைத்தவள் அவனுடைய முகத்தில் இருந்த கேலியை பார்த்ததும் தான் சமாதானம் அடைந்தாள்.

"அழகான மாப்பிள்ளை தானே...அது எனக்கு ஏற்கனவே என் வீட்டில் பார்த்து வைத்து விட்டார்கள்" கிண்டலாக சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள்.

அவள் சொன்ன விஷயம் உண்மை தான். ஆனால் வேண்டுமென்றே இதை சொல்லி அவனை வருத்துவதாக அவன் நினைத்து கொள்வானோ என்ற எண்ணத்துடன்
பயந்து கொண்டே அவனை பார்த்தாள்.

அவனோ முகம் மாறாமல் புன்னகை மன்னனாகவே இருந்தான்.

'என்ன இவன் ரியாக்ஷனே இல்லாம இருக்கான்' என்று நினைத்தவள் மனதை உறுத்திய கேள்வியை வாய் விட்டே கேட்டாள்.

"எனக்கு திருமணம் முடிவாகி
இருக்கிறதில் உங்களுக்கு துளியும் வருத்தம் இல்லையா?"

கண்கள் பளிச்சிட நிமிர்ந்தவன் , "
நான் வருத்தப்படணும்னு நீ எதிர்பார்க்கறியா பேபி?"அவன் கேள்வி கேட்ட விதத்தில் உன்னை நான் கண்டு கொண்டேன் என்பதை சொல்லாமல் சொல்லினான். 

'ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்றது இல்ல...எப்ப பாரு எதிர்கேள்வி கேட்டே வாயை மூடுறது'என்று கோபமாக நினைத்தவள் அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

"பேபி இன்னும் நேரம் ஆகலை.அதுக்குள்ள கிளம்பிட்ட. சரி வா ரெண்டு பேரும் அப்படியே பேசிட்டே நடந்து போகலாம்"என்றவன் தானும் எழுந்து கொண்டான்.

"பேபி...இதே கோவிலுக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு முறையாவது வரணும்.தம்பதியா வந்து சாமி கும்பிட்டு என் கையால உன் நெத்தியில் குங்குமம் வச்சு விடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு"ஏக்கம் வழிந்தது அவன் குரலில்.

பதில் பேசாது அமைதி காத்தாள் சங்கமித்ரா.

"அப்புறம் பேபி இன்னொரு விஷயம். இப்போவே சொல்லிடறேன்"பீடிகையோடு பேச ஆரம்பித்தான்.

"கல்யாணத்துக்கு பிறகு உன்னை உள்ளங்கையில் வச்சு தாங்குவேன்.உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வர விட மாட்டேன்....இப்படி சினிமா டயலாக் எல்லாம் என்னிடம் எதிர்பார்க்காதே.

தினமும் உன்னை சீண்டிக்கிட்டே தான் இருப்பேன். நீ கோபமா இருக்கும் போது மாமன் மனசில அப்படியே நச்சுன்னு ஒட்டிக்கிற தெரியுமா?"

"நீ கோபமா இருந்தா தானே நான் வந்து உன்னை கெஞ்சி ,கொஞ்சி சமாதானப்படுத்த முடியும்."தன் போக்கில் உற்சாகமாக சொல்லிக் கொண்டே போனவன் மித்ரா விடம் எந்த பதிலும் இல்லாததால்  கேள்வியாக அவள் முகம் பார்த்தான்.

"நான் ஒருவேளை என் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொண்டால் என்ன முடிவெடுப்பீர்கள்?" அவளையும் அறியாமல் அவள் குரல் நடுங்கியது.
 
அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்து திணறடித்தவன் உறுதியான குரலில் பேசலானான்.
 
“மித்ரா நீ என்னை திருமணம் செய்து கொண்டாலும் சரி,அல்லது உன் வீட்டில் பார்த்து இருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்தாலும் சரி.” என்றவன் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
 

 

“இல்லை நாங்க ரெண்டு பேருமே உன்னை கல்யாணம் செஞ்சுக்க லாயக்கு இல்லைன்னு நீ நினைச்சு வேற வாழ்க்கையை தேர்ந்து எடுத்தாலும் சரி.அது முழுக்க முழுக்க உன்னுடைய மனதில் இருக்கும் காதலால் மட்டுமே இருக்க வேண்டும்.இதை எப்போதும் நினைவு வைத்துக் கொள்” என்று சொன்னவன் அதற்குள் பஸ் ஸ்டாப் வந்து விடவே அவளை பஸ்சில் ஏற்றி அனுப்பிவிட்டு அவள் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான்.
 


Post a Comment

புதியது பழையவை