Vanavil Sirpame - Episode 22 Tamil Novels

 


அத்தியாயம் 22
 
 
திருமணம் உறுதியான பிறகு பிரபஞ்சனுக்கு எந்த தடையில் இல்லாமல் போனது.சங்கமித்ராவை தினமும் பார்க்க துடித்தது அவன் மனது.நினைத்த பொழுதெல்லாம் சங்கமித்ராவின் வீட்டிற்கு வந்து போனான்.அங்கே வந்து பேச அவனுக்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தன.நிச்சயத்திற்கு எங்கே டிரஸ் எடுக்கணும்?சாப்பாடு யார்கிட்டே சொல்லலாம்?பத்திரிக்கை டிசைன் பண்ண எங்கே கொடுக்கலாம்? திருமண மண்டபம் எதை புக் பண்ணலாம்? இப்படி தினமும் ஒரு கேள்வியோடு வந்து கொண்டே இருந்தான்.


“இதையெல்லாம் போனிலேயே கேட்கலாமே மாப்பிள்ளை”என்று ஒருமுறை சாவித்திரி நாசுக்காக தன்னுடைய விருப்பமின்மையை சொல்லி விட்டார் பிரபஞ்சனிடம்.


தன்னுடைய கணவர் பிரபஞ்சன் தன்னுடைய மேலதிகாரி என்ற காரணத்தினால் கொஞ்சம் அதிகமாவே பிரபஞ்சனிடம் மரியாதையுடனும்,பயத்துடனும் நடந்து கொள்ளவே,அந்த விஷயத்தில் அவருக்கு இருந்த எதிர்ப்பை இப்படி தெரிவித்தார் சாவித்திரி.


‘பிரபஞ்சன் அவருக்குத் தான் மேலதிகாரி...எனக்கு ஒன்றும் இல்லை.நான் பெண்ணைப் பெற்றவள்.இப்படி இவர் அடிக்கடி இங்கே வந்து போனால் எல்லாரும் என்ன பேசுவார்கள்...என்ன தான் இவருக்கு பெண்ணைக் கொடுப்பது என்று உறுதியாகி விட்டாலும் திருமணம் முடியும் வரை கொஞ்சம் கெடுபிடியாக நடந்து கொண்டால் தான் பிரபஞ்சனும் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்.இல்லையெனில் நம்மை தடுக்க யார் இருக்கிறார்கள் என்ற இறுமாப்புடன் அவர் இஷ்டத்திற்கு வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுவார்’ என்று எண்ணித்தான் பிரபஞ்சனை தட்டி வைக்க நினைத்தார் சாவித்திரி.


பதிலுக்கு பிரபஞ்சன் கொஞ்சம் வழிந்து கொண்டே ஏதாவது காரணம் சொல்வான் என்று அவர் எதிர்பார்த்து இருக்க,அவன் சொன்ன பதிலோ அவரை திகைக்க வைத்தது.


“வீட்டுக்கு போய் என்ன செய்றது அத்தை...அங்கே எனக்குன்னு யார் இருக்கா?தனியா தான் இருக்கணும்.எவ்வளவு நேரம் தான் டிவியையும்,வெறும் சுவர்களை மட்டுமே பார்க்கிறது.அதான் இங்கே வர்றேன்.இங்கே வந்தாலாவது உங்க எல்லார் கூடவும் ஒரு ரெண்டு வார்த்தை பேசிக்கிட்டு இருக்கலாம்.என்னோட அப்பா,அம்மா இல்லைனா என்ன அத்தை...அதுதான் நீங்களும் மாமாவும் இருக்கீங்களே”என்று உருக்கமாக பேசிவிட அதற்குப் பிறகு அவர் மறந்தும் அந்தக் கேள்வியை கேட்கவும் இல்லை...பிரபஞ்சன் அங்கே வருவதை ஆட்சேபிக்கவும் இல்லை...


பிரபஞ்சன் தினமும் அங்கே வந்து போனான்.அவன் வரும் நேரம் பெரும்பாலும் காலை நேரங்களில் வேலைக்கு செல்லும் முன் வரும் நேரமாக இருப்பதால் , அந்த நேரத்தில் சரியாக சங்கமித்ரா குளித்துக் கொண்டு இருப்பாள்.மாலை வீடு திரும்பும் நேரத்தில் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு வியாதி வந்து கொண்டு இருந்தது.


பிரபஞ்சனுக்கு அவள் தன்னை வேண்டுமென்றே ஒதுக்குகிறாள் என்பது புரியாமல் இல்லை.தெரிந்தும் அவன் அமைதியாகவே இருந்தான்.


‘ஏற்கனவே அன்று அவளை மிரட்டி பயமுறுத்தி வைத்து இருக்கிறேன்.இப்பொழுது மீண்டும் போய் அவளிடம் பேசும் பொழுது பழையபடி அவள் திருமணத்தை நிறுத்துவதை பற்றி பேசினால் என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியாது.ஆத்திரத்தில் மீண்டும் அவளை அடிக்க கை நீட்டினாலும் நீட்டி விடுவேன்’ என்று எண்ணியவன் அவளுடன் பேச எந்த முயற்சியையும் செய்யவில்லை.
பிரபஞ்சன் எதற்காக தன்னைப் பார்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை நன்கு உணர்ந்து இருந்தாலும் சங்கமித்ராவால் அதை ஏற்க முடியவில்லை.

அறைக்கு வெளியே கேட்கும் அவனது குரல் மட்டும் அவளுக்கு போதுமானதாக இல்லை. அவனை நேரில் பார்த்து காக்கி சட்டையில் அவனது கம்பீர உருவத்தை நெஞ்சுக்குள் நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று உள்ளம் துடித்த அதே சமயம், அவளது மனமே அவளை தடுக்கவும் செய்தது.


‘அவனைப் பொறுத்தவரையில் தனக்கு பார்த்த மாப்பிள்ளை அவன் தான் என்று சொல்லாமல் விட்டதால் தான் , நான் அவனை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான்.அப்படியே நினைத்துக் கொள்ளட்டும்.’ என்று முடிவு செய்து கொண்டாள்.தான் அவனை நேசிப்பதை எந்த காலத்திலும் அவனிடம் ஒத்துக் கொள்ளவே கூடாது என்று நெஞ்சினில் உறுதி கொண்டாள்.


“என்றாவது ஒருநாள் அவனுக்கு நிச்சயம் உண்மை தெரியும்...அப்பொழுது என்ன செய்வாய்?” அவளின் மனசாட்சி அவளைக் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று விழித்தாள்.


அவளிடம் அப்பொழுது எந்த பதிலும் இல்லை. அவளுக்கு தெரிந்தது எல்லாம் அவளால் பிரபஞ்சன் இல்லாமல் வாழ முடியாது என்பது மட்டும் தான்.எனவே இருக்கும் வரை அவனோடு இருந்து விட வேண்டும்.அதற்குப் பிறகு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாள் அவள்.


அந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை நிச்சயத்திற்கும்,திருமணத்திற்கும் வேண்டிய உடைகளை எடுத்து விடலாம் என்று அனைவரும் ஒன்று கூடி பேசி இருக்க,முதல் நாளே தான் வரப் போவதில்லை என்று அறிவித்தாள் சங்கமித்ரா.

அதுநாள் வரை பிரபஞ்சனை பார்க்காமல் அவள் தவிர்த்ததை வெட்கம் என்று எண்ணிக் கொண்ட சாவித்திரிக்கு மகளின் இந்த செயலில் லேசாக சந்தேகம் முளை விட தொடங்கியது.
சங்கமித்ரா தான் வரவில்லை என்று சொன்னதுமே அன்று காலை வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்த தர்மராஜை பிடிபிடியென பிடித்துக் கொண்டார் சாவித்திரி.


“எனக்கு என்னவோ இந்த கல்யாணம் சரியா வரும்னு தோணலை...”


“ஏன்...இப்படி எல்லாம் பேசுற...இந்த சம்பந்தம் கிடைக்க நாம எவ்வளவு கொடுத்து வச்சு இருக்கணும் தெரியுமா?”


“தயவு செஞ்சு உங்க மாப்பிள்ளை புராணத்தை ஆரம்பிக்காதீங்க...மாப்பிள்ளை நல்லவர் தான்...அதை நான் மறுக்கலை...ஆனா உங்க பொண்ணு என்னவோ அவரை கண்டாலே ஒதுங்கி ஒதுங்கிப் போறா...இப்ப கூட பாருங்க ... நாளைக்கு துணி எடுக்க போகலாம் வான்னு சொன்னா...எனக்கு புடவையை பத்தி என்னம்மா தெரியும்.நீங்களே போயிட்டு வாங்கன்னு பட்டும் படாமலும் பேசறா...எனக்கு இதெல்லாம் சரியா படலை அவ்வளவு தான் சொல்லுவேன்.”


“அவ சொன்னதும் உண்மை தானே...அவளுக்கு பட்டுப்புடவையை பத்தி என்ன தெரியும்...அதனால கூட வரலைன்னு சொல்லி இருக்கலாம் இல்லையா?”கண்ணாடியில் தலை வாரிய படி மனைவியின் கேள்விக்கு பதில் கொடுத்தார் தர்மராஜ்.


“அட என்னங்க நீங்க புரியாம பேசிக்கிட்டு...கல்யாணம் செஞ்சுக்க போறவளுக்கு அதுல துளி கூட ஆர்வம் இல்லாத மாதிரி நடந்துக்கிறா...எனக்கு மனசு கிடந்தது அடிச்சுக்கிது...நீங்க கொஞ்சம் கூட சட்டையே பண்ண மாட்டேங்கறீங்க”தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்தினார் சாவித்திரி.


“அப்படி எல்லாம் எதுவும் இல்லை சாவித்திரி..எனக்கு அந்த குழப்பமே இல்லை..உன்னோட திருப்திக்காக வேணும்னா பொண்ணுகிட்டே நானே நேரடியா இது பத்தி ஒரு வார்த்தை கேட்கிறேன் சரியா?”


“ம்”அரை மனதாக முணுமுணுத்தார் சாவித்திரி.
இவர்கள் இருவரும் பேசியதை வாசலில் நுழையும் பொழுதே கேட்டு விட்ட பிரபஞ்சன் உஷாரானான். ‘இப்பொழுது இவர் மட்டும் நேரடியாக சென்று சங்கமித்ராவிடம் பேசினால் என்ன ஆவது...’பதட்டமானான் பிரபஞ்சன்.


‘இவளே ஒரு குட்டை குழப்பி...இவ கிட்டே போய் பேசினா அவ்வளவு தான்’ என்று நினைத்தவன் அப்பொழுது தான் உள்ளே வருபவன் போல உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான் பிரபஞ்சன்.


“ஹாய் மாமா... என்ன வேலைக்கு கிளம்பியாச்சு போல”


‘நாம பேசினது எதுவும் இவர் காதில் விழுந்து இருக்குமோ’ என்ற எண்ணம் தோன்றவும் சமாளிப்பாக சிரித்து பேச ஆரம்பித்தார்.


“ஹி...ஹி...ஆமா மாப்பிள்ளை...வாங்க ரெண்டு பெரும் சாப்பிட்டு ஒண்ணாவே கிளம்பலாம்”


“நீங்க சாப்பிடுங்க மாமா...நான் கொஞ்சம் மித்ரா கிட்டே பேசணும்.நீங்க பர்மிஷன் கொடுத்தா...”


“தாராளமா போயிட்டு வாங்க மாப்பிள்ளை...”மனைவியின் கண்டனப் பார்வையை அவசரமாக புறக்கணித்து விட்டு பிரபஞ்சனுக்கு அனுமதி அளித்தார்.


அறைக்கு வெளியே நடந்து முடிந்த பேச்சு வார்த்தைகள் எதையும் கவனிக்காமல் ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து எங்கோ தொலைதூரத்தில் பார்வையை செலுத்திக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.மெலிதான கதவு தட்டலுக்கு பிறகு அறைக்குள் நுழைந்த பிரபஞ்சன் அவள் இருந்த கோலம் கொண்டு கொஞ்சம் கலங்கித் தான் போனான்.


திருமணம் முடிவாகி இருக்கும் பெண்ணுக்கு உரிய எந்த அறிகுறியும் அவளிடம் இல்லை.வாழ்க்கையே முடிந்து போய் விட்டது என்பது போல இருந்தது அவளது தோற்றம்.அதைப் பார்த்ததும் அவனது முகத்தில் சில நொடிகளுக்கு முன் தோன்றிய கனிவு காணாமல் போய் விட்டது.
‘இவ இப்படி இருந்தா...அவங்களுக்கு சந்தேகம் வராம என்ன செய்யும்...என்னவோ பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிக்க போற மாதிரி எப்பவும் சோகமா இருந்தா அவங்க அப்படித்தான் நினைப்பாங்க’ என்று எண்ணியவன் அதே கோபத்துடன் அவளின் அருகில் சென்று அவளின் கையைப் பற்றி ஒரு சுழற்று சுற்றி அவளை தன்னுடைய கைப்பிடிக்குள் கொண்டு வந்தான்.


பிரபஞ்சன் அறைக்குள் வந்ததையே அறியததாலோ என்னவோ...அவனுடைய இந்த செய்கையால் ஒரு நொடி அதிர்ந்து விழித்தவள் பிரபஞ்சனை பார்த்ததும் ஒரு நொடி அவளையும் அறியாமல் அவள் கண்கள் பரவசமானது.அடுத்த நொடியே தன்னை சமாளித்தவள் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டாள்.


“என்ன பழக்கம் இது...அடுத்தவங்க அறைக்குள்ளே இப்படித்தான் சொல்லாம கொள்ளாம வர்றதா?கதவை தட்டிட்டு வரணும்னு தெரியாதா? கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாம...”படபடவென்று பேசிக் கொண்டே போனவள் பிரபஞ்சனின் ஆழ்ந்த பார்வையில் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.


“நான் கதவை தட்டிட்டு தான் வந்தேன் மித்ரா...நீ தான் கவனிக்கலை.”அவளிடம் சண்டை போட விருப்பம் இல்லாமல் தணிவாகவே பேசினான் பிரபஞ்சன்.


“அதுக்காக ஒரு பொண்ணு தனியா இருக்கிற ரூம்குள்ளே நீங்க எப்படி வரலாம்?”அவள் அவனின் கோபத்தை தூண்டியே ஆவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பேச அது வேலை செய்தது.


“ஆமா...நீ ஹோட்டல் ரூம்ல தனியா தங்கி இருக்க பாரு...நான் திருட்டுத்தனமா உள்ளே வந்துட்டேன்.வாசல்ல இருக்கிறாரே உங்க அப்பா...அவர்கிட்டே உங்க பொண்ணை...அதாவது நான் கட்டிக்கப் போறவளை பார்த்து பேசிட்டு வர்றேன்னு சொல்லிட்டு தான் உள்ளே வந்து இருக்கேன்.”என்று அழுத்தம் திருத்தமாக சொல்லவும் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் மித்ரா.


அவளின் அந்த நிலை கண்டு என்ன நினைத்தானோ மேலும் அவளை வருத்தாமல் கனிவுடன் பேசத் தொடங்கினான்.


“நாளைக்கு கிளம்பி தயாரா இரு மித்ரா...எல்லாரும் போய் நிச்சயத்துக்கும்,கல்யாணத்துக்கும் வேண்டிய டிரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்திடலாம்...உனக்கு என்ன கலர் கரெக்ட்டா இருக்கும்னு நான் தான் செலக்ட் பண்ணுவேன்.அதை தான் நீ எடுக்கணும் சரியா...ஏன்னா ரசிக்கப் போறது நான் தானே...அதே மாதிரி எனக்கு டிரெஸ் நீ தான் எடுக்கணும்.சரியா?”


“நான் எங்கேயும் வர்றதா இல்லை...”வறண்டு போன குரலில் சொன்னாள் சங்கமித்ரா.


“என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்கிற மித்ரா...”


“நான் என்ன பண்ணினேன்....அதுதான் நீங்க ஆட்டி வைக்கிற மாதிரி எல்லாம் ஆடறேனே...பத்தலையா உங்களுக்கு”முகத்தில் கோபத்தை தேக்கி வைத்துக் கேட்டாள்.


“அப்படி என்ன பெருசா என் பேச்சு கேட்டு நடந்த...கொஞ்சம் சொல்லு...நானும் தெரிஞ்சுக்கறேன்” கதை கேட்கும் பாவனையில் அவன் கேட்க அவள் உஷ்ணமானாள்.


“ஹ...உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது இல்லையா...பிடிக்காத கல்யாணம் நடந்தா அப்படித்தான் இருக்க முடியும்...எல்லாமே உங்க இஷ்டம் தான்...போட்டுக்கிற டிரெஸ் என்னோட விருப்பப்படி எடுக்கிறதால மட்டும் இங்கே நடக்கிற எல்லாம் எனக்கு பிடிச்சதா மாறிடுமா...”


“நல்ல கேள்வி தான்...” உடனே அதை ஒத்துக் கொண்டான்.

அவன் இப்படி ஒத்துக் கொண்டாலே அதில் நிச்சயம் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை உணர்ந்தவள் ஆயிற்றே...கலவரத்துடன் அவன் முகம் பார்த்தாள்.


“நீ சொன்ன அத்தனையும் உண்மை தானே....வெளியே போய் உங்க அப்பாகிட்டே இந்த உண்மையை சொல்லு.அவர் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவார்”சலனமே இல்லாமல் அவன் கூற அதிர்ந்து விழித்தாள் சங்கமித்ரா.


“ஏன் அமைதியா நிற்கிற...நீ எதிர்பார்க்கிறது அது தானே...போ...போய் உன் அப்பாகிட்டே சொல்லு...”அவளின் தோளில் கை வைத்து வாசல் புறம் அவளை தள்ளி விட்டான்.


“...”


“என்னடி முழிச்சுக்கிட்டு நிற்கிற...ஒண்ணு இப்போவே போய் இந்த கல்யாணம் வேண்டாம்.எனக்கு இவனை பிடிக்கலை வேற மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்து...”


ஆணி அடித்தது போல அங்கேயே நின்றாளே தவிர அங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை அவள்.
கூழுக்கும் ஆசை...மீசைக்கும் ஆசை என்று ஒரு பழமொழி உண்டே அது போலத்தான் இருந்தது அவளது நிலையும்...
அவளுக்கு இந்த திருமணம் நடக்கவும் கூடாது.அதே நேரத்தில் பிரபஞ்சனை இழக்கவும் மனம் இல்லை...


மனதார அவனை காதலிக்கும் அவளால் அவனை விட்டுத் தரவும் முடியவில்லை.அதே சமயம் அவனுக்கு துரோகம் செய்யவும் அவளுக்கு மனமில்லை.இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்தாள்.


அவளையும் , தனக்கான அவளின் தவிப்பையும் கண்ணாரக் கண்டவனுக்கு அவளின் மீது இருந்த கோபம் மெல்ல வடியத் தொடங்கியது.


அவளையே தீர்க்கமாக பார்த்தபடி அவளை கடந்து செல்லும் முன் ஒரே ஒரு நொடி அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து ஒற்றை விரலை உயர்த்தி எச்சரிப்பது போல பேசினான்.


“நாளைக்கு கல்யாணத்துக்கு வேண்டிய பொருட்கள் வாங்க கடைக்கு போறோம்...நீ வர்ற... வந்தாகணும்...”கண்டிப்புடன் கூறிவிட்டு அவன் நகர திக்பிரமை பிடித்தவள் போல அப்படியே அமர்ந்து விட்டாள் சங்கமித்ரா.


சிற்பம் செதுக்கப்படும்...






 

Post a Comment

புதியது பழையவை