Vanavil Sirpame - Episode 4 Tamil Novels

 


அத்தியாயம் 4
சங்கமித்ரா பெண் போலீசுடன் அவனை நோக்கி வேகமாக வந்தாள்.சற்று நேரம் முன்பு அவளிடம் தோன்றி இருந்த பயம் இப்பொழுது கொஞ்சம் குறைந்து இருந்தது.துணைக்கு தான் ஆள் இருக்கிறதே!...இப்பொழுது அவள் இருக்கும் மனநிலையில் அவனை தனியாக எதிர்கொள்ள முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.மறுபடியும் இப்படியே எதையாவது பேசி வைப்பானோ என்று அவளுக்கு உள்ளுக்குள் ஒரு பயம்.இருப்பினும் வெளியே தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டு அவனிடம் சென்றாள்.

“இதோ இந்த ஆள் தான் மேடம்...என்னை தொந்தரவு செய்யறார்.இவரை அரெஸ்ட் பண்ணுங்க.”

“ஹலோ...என்ன தம்பி பார்க்க டீசன்டா இருக்க?பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணுறியே...ஸ்டேஷனுக்கு நட” அதட்டினார் பெண் போலீஸ்.

அவன் ஒரு வார்த்தை பேசவில்லை.பார்வையையும் சங்கமித்ராவிடம் இருந்து திருப்பவில்லை.பயத்தில் அவள் முகத்தில் ஆங்காங்கே வியர்வை பெருகி இருக்க , வியர்வை வழியும் இடங்களை எல்லாம் பார்வையால் சோம்பலாக தொடர்ந்து கொண்டு இருந்தான்.

அவனின் பார்வையை உணர்ந்ததும் பல்லை கடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தாள் சங்கமித்ரா.“நீங்க முன்னாடி போங்க மேடம்.நான் ஸ்டேஷனுக்கு வந்து இந்த ஆள் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கறேன்.”

“மித்ரா காலேஜ் போகாமல் இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?”என்ற கேள்வியோடு ஜீப்பில் வந்து இறங்கினார் அவளுடைய தந்தை தர்மராஜ்.வந்தவர் அவளின் அருகிலேயே நின்று கொண்டு இருந்த பெண் போலீசை பார்க்காமல் அங்கிருந்த பிரபஞ்சனை பார்த்து லேசாக அதிர்ந்து நின்றவர் உடனே சமாளித்துக் கொண்டார்.

அவருடைய அந்த சமாளிப்பு எதனால் என்று சங்கமித்ராவுக்கு அப்பொழுது புரியவில்லை.அது பிரபஞ்சனின் கண் அசைவால் நடந்தது என்பதையும் அவள் அறியவில்லை.

‘என்ன பதில் சொல்லி தந்தையிடம் இருந்து தப்புவது’ என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போது நடந்த இந்தபார்வை பரிமாற்றத்தை கவனிக்க அவள் தவறி விட்டாள். அங்கிருந்த அந்த பெண் போலீஸ் அவருக்கு விறைப்பாக ஒரு சல்யூட்டை வைத்து விட்டு நடந்ததை விவரிக்கலானார்.

எல்லாவற்றையும் கேட்ட தர்மராஜ் அடுத்து என்ன செய்வது என்று விழி பிதுங்கிப் போனார்.ஏனெனில் அவருக்கு தான் பிரபஞ்சனை தெரியுமே...தன் மகளுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளையை தன் மகளே இப்படி போலீசில் பிடித்து கொடுக்க பார்க்கிறாளே என்ன செய்வது என்று அவர் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே பிரபஞ்சன் தானாகவே முன்வந்து தன்னை கைது செய்யும்படி சொல்லி தன் கைகளை போலீசிடம் நீட்ட தர்மராஜ் தவித்துப் போனார்.

அவருடைய தயக்கத்திற்கான காரணம் புரியாமல் சங்கமித்ரா அங்கிருந்த பெண் போலிசை மேலும் முடுக்கி விட்டாள்.




“நீங்க இந்த ஆளை கூட்டிக்கிட்டு போங்க மேடம்...நான் அப்பா கூட வரேன்”

அப்பொழுதும் பிரபஞ்சன் அசையாமல் நிற்கவும் தர்மராஜ் தான் சூழலை சரி செய்ய சங்கமித்ராவிடம் பேசினார்.

“அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் மித்ரா...நீ கிளம்பி காலேஜ்க்கு போ”

“இல்லைப்பா ...நானும் கிளம்பி ஸ்டேஷன் வந்து இந்த ஆள் மேலே ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு அப்புறம் போறேன்”பிடிவாதமாக சொன்னாள் சங்கமித்ரா.

அவள் அப்படி பிடிவாதமாக இருந்ததற்கு காரணம் அவன் தான்.இங்கே இத்தனை பிரச்சினை நடந்து கொண்டு இருக்கும் போது கூட பக்கத்தில் ஒரு பெண் போலிசும்,தன்னுடைய தந்தையும் வந்த பிறகும் கூட அவனுடைய பார்வையில் சிறிதளவு கூட மாற்றம் இல்லை.அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இமைக்க கூட செய்யாமல்  ரசித்த வண்ணம் அப்படியே நின்று கொண்டு இருந்தான் பிரபஞ்சன்.

‘போலீஸ் அரெஸ்ட் பண்ணி உள்ள போய் கம்பி எண்ணப் போகும் போது கூட பார்வையை கொஞ்சாமாவது மாத்துறானா பார்’ அவனுடைய துணிச்சல் கண்டு அவளுக்கு எரிச்சல் தான் வந்து இருக்க வேண்டும்.ஆனால்  அவள் உள் மனது அதை ரசிக்கவே செய்தது. ‘பக்கத்தில் போலீஸ், என் அப்பா இருவரையும் வைத்துக் கொண்டே எப்படி சைட் அடிக்கிறான் பார்.சரியான எமகாதகன்’என்று உள்ளுக்குள் அவனை திட்டுவதாக நினைத்து பாராட்டிக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.

இவர்கள் ஒருபுறம் இருக்க பெண்ணை பெற்றவரோ அவளை உள்ளுக்குள் திட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தார். ‘இந்த பெண் என்ன இப்படி எல்லாம் செய்து வைத்து இருக்கிறாள்...கோபத்தில் மாப்பிள்ளையின் போட்டோவை அவள் பார்க்கவே இல்லை போலவே...அது பரவாயில்லை என்று பார்த்தால் இவர் என்னடாவென்றால் கைது செய்ய சொல்லி கையை வேறு நீட்டிக் கொண்டு இருக்கிறாரே இப்பொழுது என்ன செய்வது’ என்று யோசிக்கத் தொடங்கினார்.

“வாங்கப்பா ஸ்டேஷன் போகலாம்.”அவரோடு சென்று அவருடைய வண்டியில் அவ ஏறப் புறப்படும் முன் அவளை தடுத்து நிறுத்தினார் தர்மராஜ்.

“நீ காலேஜ் கிளம்புமா.நீ எதுக்கு ஸ்டேஷன் எல்லாம் வந்துக்கிட்டு.வயசு பொண்ணு அங்கே எல்லாம் வர வேண்டாம்.நீ போ நான் அவரை பார்த்துக்கிறேன்”

சங்கமித்ரா தெளிவாக இருந்து இருந்தால் தன்னுடைய தந்தை எதற்காக பிரபஞ்சனுக்கு இவ்வளவு மரியாதையை கொடுக்கிறார் என்பதை பற்றி யோசித்து இருப்பாள் அல்லது தன்னிடம் வம்பு செய்கிறான் என்று தெரிந்த பிறகும் கூட அவன் மீது கோபப்படாததன் காரணத்தை அவள் யோசித்து இருப்பாள்.அவள் தான் தெளிவாக இல்லையே.எதிரில் நின்று ஒற்றை பார்வையில் அவளை யோசிக்க விடாமல் செய்து கொண்டு இருந்தானே அவன்.

தந்தை சொல்வது அவளுக்கும் சரி என்று பட அவனை மறக்காமல் ஒரு வெற்றிப் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்ப ,அப்படி அவனை நோக்கி மிதப்பாக ஒரு பார்வை அவள் பார்த்து வைத்த அந்த நொடியில் அவளை நோக்கி குறும்பாக ஒற்றை கண்ணை சிமிட்டி அவளை அதிர வைத்தான் பிரபஞ்சன்.எதிரில் வந்த ஆட்டோவை மறித்து அதில் மகளை ஏற்றி வழியனுப்பிய தர்மராஜ் வேகமாக பிரபஞ்சனை நோக்கி வந்தார். அங்கிருந்த பெண் போலிசை கிளம்பும்படி சொன்னவர், திரும்பி பிரபஞ்சனிடம் பேசலானார்.

“என்ன மாப்பிள்ளை இதெல்லாம்?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா...சும்மா மித்ராகிட்ட பேசலாம்னு வந்தேன்...அவ தான் பயந்துட்டா...அவளுக்கு என்னை பத்தி எதுவும் சொல்லலியா மாமா”பார்வையை கூர்மையாக்கி கேட்டான் பிரபஞ்சன்.

“அ...அதெல்லாம் சொல்லிட்டேன் மாப்பிள்ளை...”மழுப்பலாக பேசினார் தர்மராஜ்

“அப்புறம் ஏன் மாமா அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை.அவளுக்கு நீங்க என்னோட போட்டோவை காமிக்கலையா? இல்லை அவளுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லையா?”விடாமல் கேட்டான் பிரபஞ்சன்.

“அவளுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் தான் மாப்பிள்ளை...உங்களுக்குப் பிடிச்சு இருந்தா எனக்கு சம்மதம் தான்னு சொல்லிட்டா மாப்பிள்ளை.உங்க போட்டோ காமிச்சப்ப கூட வேண்டாம்பா நீங்கள் சொன்னா சரி தான்னு சொல்லிட்டா”உண்மையை மறைத்து கொஞ்சமும் சந்தேகம் வராமல் பூசி மெழுகினார்.

அவரையே கூர்ந்து பார்த்த பிரபஞ்சன் தோள்களை குலுக்கி விட்டு அங்கிருந்து நகர முயன்றான்.

“இனி இந்த மாதிரி விளையாட்டு எல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை...இன்னைக்கு நான் வரவும் பிரச்சினை பெரிசு ஆகாம போச்சு.இல்லேன்னா அசிஸ்டெண்ட் கமிஷனர் உங்களையே அவள் உள்ளே தள்ளி இருப்பாள்.ஏன் இன்னும் நீங்க டூட்டியில் ஜாயின் பண்ணலை மாப்பிள்ளை.நீங்க ஜாயின் பண்ணி இருந்தால் அந்த பெண் போலிஸ் உங்ககிட்டே கூட வந்து இருக்க மாட்டாங்க...இந்நேரம் உங்களுக்கு சல்யூட் வச்சு இருப்பாங்க இல்ல” அசிஸ்டெண்ட் கமிஷனர் தன்னுடைய மருமகன் என்று பெருமை பீற்றிக் கொள்ள முடியவில்லையே என்று அங்கலாய்த்தார் தர்மராஜ்.

“இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் டூட்டியில் ஜாயின் பண்ணப் போறேன் மாமா.அதுக்குள்ள இங்கே வீடு எல்லாம் செட் பண்ணிடலாம்னு நான் மட்டும் முன்னாடியே இங்கே வந்தேன்.அப்ப தான் ‘எதேச்சையா’ மித்ராவை பார்த்தேன்.”

சரியாக வீட்டுக்கு அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பிற்கு பிரபஞ்சன் வந்தது எதேச்சையாக நடந்தது என்று நம்ப அவர் என்ன முட்டாளா என்ன? ஆனாலும் வேற வழி இல்லை.சொல்வது வருங்கால மாப்பிள்ளை..அதுவும் அசிஸ்டெண்ட் கமிஷனர் வேற மறுத்தா பேச முடியும்!.அவன் சொன்னதை எல்லாம் நம்பியதை போல தலையாட்டிக் கொண்டார் தர்மராஜ்.

“சரி மாப்பிள்ளை வீட்டுக்கு வாங்க...டிபன் சாப்பிட்டு போகலாம்”

“இல்லை மாமா நான் கிளம்பறேன்...ஒரு முக்கியமான வேலை இருக்கு.அப்புறம் மாமா ஒரு சின்ன ரெக்வஸ்ட்”

“சொல்லுங்க மாப்பிள்ளை...ஞாயிற்றுக் கிழமை நான் பெண் பார்க்க வரும் வரை என்னை பற்றிய விஷயங்கள் எதுவும் நீங்க மித்ராகிட்ட சொல்ல வேண்டாம். ப்ளீஸ்!”

“இது என்ன மாப்பிள்ளை ...இந்த விளையாட்டு எல்லாம் எதுக்கு?”

“இல்லை மாமா...எனக்கு மித்ரா ரொம்ப பிடிச்சு தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.ஆனா மித்ரா நீங்க சொன்னீங்க அப்படிங்கிறதுகாக தானே ஒத்துக்கிட்டு இருக்கா? ஒரு அப்பாவா அது உங்களுக்கு சந்தோசமா இருக்கலாம்.ஆனா அவளோட வருங்கால கணவனா எனக்கு அது கொஞ்சம் வருத்தமா இருக்கு மாமா...அவளும் என்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் ஆசை படறேன் மாமா.”

“மாப்பிள்ளை நீங்க ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர்”

“அது என்னுடைய வேலை மாமா.அதையும் தாண்டி நான் பிரபஞ்சன்.எனக்குன்னு ஆசைகளும் விருப்பங்களும் இருக்கு.”

“மாப்பிள்ளை அவ சின்ன பொண்ணு.அவ இன்னைக்கு மாதிரி விளையாட்டு தனமா ஏதாவது செய்துட்டா?”

“அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் மாமா...ப்ளீஸ்!”

அதற்குமேல் என்ன சொல்வது என்று புரியாமல் சம்மதமாக தலை அசைத்தார் தர்மராஜ்.

Post a Comment

புதியது பழையவை