Siragilla Devathai Episode 3 Tamil Novels

 

 

காரை சீரான வேகத்தில் ஒட்டிக் கொண்டு இருந்தான் ஹரிஹரன். எத்தனை அவசரம் என்றாலும் காரை வேகமாக ஓட்டவே மாட்டான். எங்கேனும் செல்ல வேண்டும் என்றால் கூட சரியாக திட்டமிட்டு கிளம்புவதற்கு சில மணித்துளிகள் முன்பே கிளம்பி இருப்பான்.

 எதிலும் அவசரம் காட்ட மாட்டான். அவனுடைய இந்த பழக்கம் அவனுடைய சிறு வயது முதலே வந்த ஒன்று. ஹரிஹரனின் இந்த நிதானம் அவனை அறிந்தவர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் நிலைமையை அழகாக கையாளும் திறன் கொண்டவன் ஹரிஹரன். 

வசந்த்திடம் பேசி விட்டு அவனுடைய அலுவலகத்திற்கு சென்றவன் அங்கிருந்த வேலைகளை முடித்துக் கொண்டு இதோ மறுநாள் தன்னுடைய நண்பன் சிவாவை பார்க்க கிளம்பிவிட்டான். அவனுடைய கைகளில் கார் அழகாக ஓடினாலும் மனம் முழுக்க வெண்ணிலாவே நிறைந்து இருந்தாள். 

அவளை பற்றிய எண்ணங்கள் வந்ததும் அவனையும் மீறி அவனுடைய உதடுகள் புன்னகையை தத்தெடுத்தது. காரை மிதமான வேகத்தில் ஓட்டி சென்று கோயம்புத்தூரில் இருக்கும் நண்பனின் வீட்டிற்கு நேராக சென்று விட்டான்.சிவாவிற்கு ஹரிஹரன் ஊரில் இருந்து கிளம்பும் பொழுதே தகவல் கொடுத்து இருந்ததால் நண்பனுக்காக வாசலிலேயே காத்திருந்தான். ஹரிஹரனை பார்த்ததும் அவன் காரில் இருந்து இறங்கும் முன் பாய்ந்து சென்று அவனை வரவேற்றான் சிவா. 

 “வாடா... வாடா... ரொம்ப தேங்க்ஸ்டா. நீ எவ்வளவு பிஸின்னு எனக்கு தெரியும்... இருந்தும் நான் சொன்னதும் உடனே வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்டா”

 “டேய் ஏன்டா இப்படி மொக்கை போட்டு கழுத்தறுக்கிற? நான் உன் பிரண்டுங்கிறத மறந்துடாதே... சும்மா பார்மாலிட்டிக்காக இப்படி ஏதாவது உளறினா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்”

 “சரிடா... கோவிச்சுக்காதே வா. வீட்டுக்குள்ள போகலாம்” ஹரிஹரனின் இயல்பை அறிந்தவன் ஆதலால் உடனே சமாதானப்படுத்தினான் சிவா. வீட்டில் நுழைந்த ஹரிஹரன் பார்வையாலேயே வீட்டை அலசினான்

” என்னடா வீட்டில் யாரையும் காணோம்? அப்பா, அம்மா எல்லாரும் எங்கே?”

 “அவங்க எல்லாரும் ஒரு கல்யாணத்துக்கு போய் இருக்காங்கடா. திரும்பி வர ஒரு வாரம் ஆகும்”

 

“சரி எதுக்காக என்னை வர சொன்ன?” நேரடியாக விஷயத்திற்கு வந்தான் ஹரிஹரன்.

 “ஒண்ணும் இல்லைடா. உனக்கே நல்லா தெரியும். அப்பாவிற்கு இங்கே திடீர்னு உடம்பு சரி இல்லாம போனப்போ நான் இங்கே இல்லை. அமெரிக்கால படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்பாவும் என்னை தொந்தரவு பண்ண வேண்டாம்னு தொழிலை எல்லாம் இங்கே இருக்கிற அவருக்கு நம்பிக்கையான ஆட்களிடம் கொடுத்து பார்க்க சொல்லி இருக்கார். 

உடம்பு சரி இல்லாததால் அப்பாவும் அடிக்கடி நேரில் சென்று தொழிலை பார்க்க முடியவில்லை. மேலும் அவருடைய ஆட்களின் மேல் அவர் வைத்த நம்பிக்கை எல்லாமும் சேர்ந்து அவர் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டார். ஆனால் இங்கே நான் வந்து பார்க்கும் போது எதுவும் சரி இல்லை. 

எல்லாவற்றிலும் ஏதோ குளறுபடி நடந்து இருக்கிறது. சாதாரணமாக பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது போல தான் இருக்கும். ஆனால் யாரோ ரொம்ப திறமையாக பணத்தை எல்லாம் திருடி இருக்கிறார்கள். எல்லாரும் அப்பாவிடம் நெடுநாளாக வேலை செய்பவர்கள். யாரை சந்தேகப்படுவது என்று எனக்கு தெரியவில்லை. அதற்காக தான் உன்னை அழைத்தேன்”

 “உன் அப்பாவுடைய எல்லா பிசினஸ்லையும் இப்படி ஏமாற்று வேலை நடந்து இருக்கிறதா?”

 “ஆமாம் ஹரி. அப்பாவோட ஹோட்டல் பிசினஸ்ல மட்டும் தான் அளவுக்கு அதிகமா நடந்து இருக்கு. மற்றதுலயும் கொஞ்சம் திருட்டு வேலை நடந்துக்கிட்டு தான் இருக்கு. ஆனால் அதெல்லாம் சின்ன சின்ன தப்பு தான். இங்கே ஹோட்டலில் மட்டும் கோடிக்கணக்கான பணம் திருடப்பட்டு இருக்கிறது.” 

 “அவ்வளவுதானே... என்னிடம் சொல்லிட்ட இல்ல நான் பார்த்துக்கிறேன்... வேற என்ன பிரச்சினை...” என்று அசால்ட்டாக சொல்லிவிட இனி ஹரிஹரன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்து விட தொடர்ந்து பேசினான் சிவா.
 
“வேற ஒண்ணும் இல்லைடா... இதை மட்டும் சரி செய்தால் போதும்... அப்புறம் இந்த விஷயம் எதுவும் அப்பாவிற்கு தெரிய வேண்டாம். அப்பாவிற்குத் தெரிந்தால் வருத்தப் படுவார்” கெஞ்சலாக கேட்டான் சிவா.

 “சரிடா... நான் இன்னிக்கு உன்னோட ஹோட்டலுக்கு ஒரு விசிட் பண்ணறேன். நீயும் கூடவா... அப்புறம் உன்னோட கம்பெனி அக்கௌன்ட்ஸ் எல்லாம் ஒரு பென்டிரைவ்ல காபி(copy) பண்ணி என்னோட மெயிலுக்கு அனுப்பு. என்னோட ஸ்டாப்ஸ்க்கு மெயில் அனுப்பி நான் இன்னிக்கே செக் பண்ண சொல்றேன் அதுல எனக்கு ஏற்படுற டவுட்ஸ் உனக்கு போன் பண்ணி கேட்டுக்கறேன். நீ கொஞ்சம் கிளியர் பண்ணு. ஒரு வாரத்துக்குள்ள உனக்கு நான் எங்கே தப்பு நடந்துருக்குன்னு சொல்லிடறேன் சரி தானா?” 

 “ஏன்டா இங்கேயே தங்கி ஒரு வாரம் இருந்து பார்த்துக் கொடுக்க கூடாதா?” சிவாவின் கண்களில் அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

“இல்லடா... அதுக்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன். கணக்கை எடுத்து பார்த்தா அரைநாளில் கண்டுபிடித்து விடலாம். என் மீது நம்பிக்கை இல்லையா உனக்கு?”

 “அப்படி இல்லைடா... அப்பாவும் அம்மாவும் திரும்பி வருவதற்குள் என்ன பிரச்சினை என்று கண்டு பிடித்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அது தான்... மற்றபடி உன் மீது நம்பிக்கை இல்லாமலா உன்னை கூப்பிட்டு இருக்கேன்”

 “அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். சரிதானா” 

 “நீ சொன்னா சரி தான்டா” “அவ்வளவு தானே விஷயம். நீயும் என்னோடு கிளம்பு. உன்னோட ஹோட்டலை பார்த்துவிட்டு அப்படியே கிளம்பறேன்டா”

 “என்னடா அதுக்குள்ள கிளம்பிட்ட... நான் நேற்றே உன்னிடம் என்ன சொன்னேன்? ஒரு இரண்டு நாள் தங்கிட்டு தான் போகணும்னு சொன்னேன்ல... நேத்து சரி சரின்னு சொல்லிட்டு இப்ப என்னடா உடனே கிளம்புற... இங்கே பக்கத்தில் சின்னதா ஒரு எஸ்டேட் விலைக்கு வாங்கி இருக்கேன். அதுல போய் ஒரு இரண்டு நாள் தங்கிட்டு வரலாம்னு சொன்னேனே மறந்துட்டியா?”

 “அதெல்லாம் எதுவும் மறக்கலை சிவா...”

 

“பின்னே என்ன ஹரி... ஒரு இரண்டு நாள் தங்கிவிட்டு போயேன்... உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணின மாதிரி இருக்குமே” 


 “இல்லை சிவா அதை விட ஒரு முக்கியமான வேலை இருக்கு... இன்னொரு நாள் வந்து உன்னுடைய எஸ்டேட்டில் தங்குறேன். நேற்று வரை இந்த பிளான் இல்லை. திடீர்னு வந்த வேலை அதனால் தான் தங்க முடியலை தப்பாக எடுத்துக்காதே சிவா” நண்பன் வருத்தப் பட கூடாதே என்று பொறுமையாக எடுத்துக் கூறினான் ஹரிஹரன்.

 “சரி விடுடா” என்று சொன்னாலும் நண்பனின் குரலில் இருந்த வருத்தத்தை ஹரிஹரனால் உணர முடிந்தது. இருப்பினும் இப்பொழுது இதை விட வெண்ணிலாவை தேடி அவளது ஊருக்கு செல்வது தான் முக்கியம் என்பதால் நண்பனை பிறகு சமாதானம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான் ஹரிஹரன்.

 “ஹரி நீ இங்கேயே இரு நான் போய் குளிச்சுட்டு வரேன் இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு கிளம்பலாம்” என்று சொன்னவன் மடமடவென தன்னுடைய அறைக்குள் நுழைந்து விட்டான். ஹாலில் காத்துக் கொண்டு இருந்த நேரத்தில் வேலையாள் கொண்டு வந்த காபியை மறுத்துவிட்டு நண்பனுக்காக காத்திருக்க தொடங்கினான் ஹரிஹரன்.

 வெண்ணிலாவை பற்றிய இந்த கனவு முதல் முறை தனக்கு வந்த பொழுதே கொஞ்சம் கவனமாக இருந்து இருந்தால் இப்பொழுது இந்த நிலை வந்து இருக்காதோ என்று காலம் கடந்து வருந்தினான் ஹரிஹரன். முதலில் இந்த கனவு வந்த பொழுது அவளை தனக்கு திருமணம் பேசியதால் இது போன்ற கனவுகள் எல்லாம் இளமை பருவத்தில் சகஜம் தானே என்று அசால்ட்டாக நினைத்து விட்டு விட்டான். 

 

திருமணம் நின்ற பிறகு இதே கனவு வந்த பொழுது கூட அவள் மீது தனக்கு இருக்கும் ஈர்ப்பின் காரணமாக தான் இந்த கனவு வருகிறது. இன்னும் கொஞ்சம் நாள் போனால் இந்த கனவு தனக்கு வரப் போவதில்லை என்று உறுதியாகவே நம்பினான். ஏனெனில் அதுவரை அவன் வெண்ணிலாவின் மீது தனக்கு இப்படி ஒரு ஆழ்ந்த நேசம் இருக்கிறது என்பதை அவன் உணரவேயில்லை.

தேவதை வருவாள்...

Post a Comment

புதியது பழையவை