Siragilla Devathai - Episde 4 Tamil novels

 


அத்தியாயம் 4
 

 

காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு அந்த அடுக்குமாடி கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான் ஹரிஹரன். ‘ஹோட்டல் சிவா’ என்ற பெயர் பொன் எழுத்துக்களால் மின்னியது. வரவேற்ப்பில் தொடங்கி உணவுக்கூடம் வரை அனைத்து இடத்தையும் கண்களால் ஆராய்ச்சி பார்வை மேற்கொண்டவாறே சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தான் ஹரிஹரன்.
 
 

 

ஒரு சிறு குறை கூட சொல்ல முடியாத அளவிற்கு எல்லாமே சரியாகத் தான் நடந்து கொண்டு இருந்தது. முதலாளியான சிவா உடன் வந்ததால் ஹரிஹரனுக்கு தனி மரியாதை கிட்டியது. ரூம் புக் செய்வது முதல் கடைசியில் ரூம் காலி செய்யும் வரை எல்லா விவரத்தையும் ஒரு சிறு விவரம் கூட மறக்காமல் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொண்டான் ஹரிஹரன்.
 
 

 

அதன் பிறகு இருவரும் சிவாவின் அறைக்கு சென்று விட அங்கிருந்து கணக்கு வழக்குகளை கம்ப்யூட்டரில் பார்க்க தொடங்கினான் ஹரிஹரன். இடை இடையே கேட்ட கேள்விகளுக்கு சிவா முடிந்த வரை பதில் அளித்தான். சிவா இங்கே வந்து தொழிலை இப்பொழுது தான் கையில் எடுத்துக் கொண்டதால் அவனுக்கு பழைய கணக்குகள் எதுவும் தெரியவில்லை.
 
 

 

அது பற்றிய விவரங்கள் கூற ஹோட்டலின் மேனேஜரும், சிவாவுடைய அப்பாவின் பிஏ இருவரும் வந்தனர். அடுத்து அடுத்து ஹரிஹரனின் சரமாரியாக கேட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் கூட அலுக்காமல் எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதிலை சொன்னார்கள். 
 
 

 

அரை நாள் ஓடியதே தெரியாமல் ஹரிஹரன் சுழன்று சுழன்று வேலை பார்த்தான். அவனின் வேகத்தை பார்த்த சிவா கூட கொஞ்சம் மிரண்டு தான் போனான்.
 
 

 

டேய்... என்னடா இவ்வளவு வேகமா இருக்க? நான் இதை எல்லாம் முடிக்க இன்று ஒருநாள் ஆகும் என்று நினைத்தேன். நீ என்ன அதற்குள் முடித்து விட்டாய்?”
 

 

டேய் நான் ஆடிட்டர்டா அதையே அடிக்கடி மறந்து போய் விடுவாய் போல... இதை பார்க்க எதற்கு ஒரு நாள் முழுக்க வேண்டும்? சரி நான் இப்பொழுதே  கிளம்பியாக வேண்டும். எனக்கு இதில் சில சந்தேகம் இருக்கு. அதை எல்லாம் உனக்கு மெயில் அனுப்பி இருக்கேன்.
 
 

 

அது எல்லாவற்றையும் நீயே நேரில் போய் கேட்டு தெரிந்து கொள். உன்னுடைய மேனேஜரையோ அல்லது உன் அப்பாவின் பிஏவையோ கேட்காதே... நீயே இறங்கி விசாரித்து சொல்... புரிந்ததா? என்னதான் நம்பிக்கையானவர்கள் என்றாலும் கூட ஒரு அளவிற்கு தான் அவர்களை நீ சார்ந்து இருக்க வேண்டும்
 
 

 

இன்று நான் பார்த்தவரை இன்னும் சில முக்கிய விவரங்களை நீ தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். அது நல்லது கிடையாது சிவா. நீ இப்பொழுது தான் இங்கே வந்து பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கலாம். ஆனால் இனியும் இப்படி மற்றவர்களை நம்பி இருப்பது சரி அல்ல... என்ன புரிந்ததா? அப்புறம் இன்னொரு விஷயம் எனக்கு உன்னோட ஹோட்டலோட கடைசி இரண்டு வருட கணக்கு வழக்குகளும் பென் டிரைவில் கேட்டு இருந்தேனே... என்ன ஆச்சு?”
 
 

 

ரெடியா இருக்குடா
 
 

 

அதை உடனே நான் கொடுக்கும் என்னுடைய கம்பெனி மெயில் ஐடிக்கு அனுப்பி வை. என்னோட ஸ்டாப்ஸ்சை அதை பார்க்க சொல்கிறேன். அனுப்பிட்டு பென் டிரைவை என்னிடம் கொடு. நான் போகும் இடத்தில் இருந்து உடனே கிளம்ப முடியுமா என்று தெரியவில்லை. இடையே எனக்கு தேவைப்படும் தகவல்களை சரிபார்க்க பென் டிரைவை என்னோடு எடுத்து செல்கிறேன்
 
 

 

உடனே கிளம்பணுமா ஹரி... அட்லீஸ்ட் இன்னிக்கு ஒரு நாள் மட்டுமாவது தங்கிட்டு போயேன்
 
 

 

சிவா... திருப்பி திருப்பி உன்கிட்ட சொல்ற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை... சொன்னா புரிஞ்சுக்கோடாஎன்று நண்பனிடம் அலுத்துக் கொண்டு மதிய உணவைக் கூட சாப்பிடாமல் அங்கிருந்து வெளியேறி நேராக வசந்தின் ஹாஸ்பிடலுக்கு போய் சேர்ந்தான்.
 

 

என்னடா மணி ஆச்சே... ஆளை காணோமே... ஒருவேளை என்னை விட்டுட்டு ஓடிப் போயிட்டியோன்னு நினைச்சேன்... நல்லவேளை வந்துட்ட...அமர்த்தலான குரலில் சொன்னான் வசந்த்.
 
 

 

அது தான் மிரட்டி வைச்சு இருக்கியே... கிளம்பித் தொலை...எரிச்சலுடன் மொழிந்தான் ஹரிஹரன்.
 
 

 

கரெக்ட் இப்ப கூட உன்னோட வீட்டிற்கு நேரா போயிடலாமா இல்லை போன் பண்ணி பேசிக்கலாமான்னு தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட... சரி சரி கிளம்பு...என்று கூலாக சொன்ன வசந்த்தை ஒன்றுமே செய்ய முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு கிளம்பினான் ஹரிஹரன்.
 
 

 

ஹரிஹரனுடைய காரிலேயே இருவரும் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். காரில் மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய அதை வசந்த் கலைத்தான்.
 

 

ஹரி இப்போ எங்கே போறோம்...
 

 

அம்பாசமுத்திரம் கேள்விப் பட்டு இருக்கியா?”
 

 

ம்லேசான தலையசைப்பு வசந்திடம் இருந்து.
 

 

அங்கே தான் போறோம்
 

 

அது தான் அந்த பொண்ணோட ஊரா?”
 

 

ஆமாம்
 

 

அந்த ஊருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ எதுக்காக அந்த ஊருக்கு போன?”
 

 

அப்பாவுக்கு அந்த ஊரில் ஒரு பண்ணை வீடும் அதை ஓட்டி கொஞ்சம் தோப்பும், வயலும் இருக்கு...
 

 

நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?” தேர்ந்த மனநல மருத்துவனான வசந்த் நண்பனுக்கே தெரியாமல் அவனின் கடந்த காலத்தை அறிய வேண்டி அவனின் வாயை கிளறினான்
 

 

கேளுடாநண்பன் தன்னுடைய வாயைக் கிளறித் தனக்கே தெரியாமல் விஷயத்தை கறக்கப் போகிறான் என்பதை உணராமல் ஹரிஹரனும் அவனது கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரானான்.
 

 

மற்ற நேரமாக இருந்து இருந்தால் ஹரிஹரன் சுதாரித்து இருப்பான்.ஆனால் இப்பொழுது மனமெங்கும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருந்தது.வெண்ணிலாவை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்பதே அவனின் மன மகிழ்ச்சிக்கு காரணம்.
 

 

நீ உன் அப்பாவின் தொழில்களை பார்க்காமல் விட்டதற்கு காரணம் வெண்ணிலா தானா?”
 

 

ஆமாம்...என்று கூறியவன் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பேசலானான்.
 

 

எனக்கு சி. ஏ (Chartered Accountant) படிப்பதில் ஆர்வம் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் படிப்பை முடித்துவிட்டு அப்பாவின் தொழிலை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய அப்போதைய எண்ணமாக இருந்தது.
 

 

ஆனால்... போன வருடம் படிப்பை முடித்த பிறகு அதை செய்யும் தைரியம் எனக்கு வரவில்லை... அப்பாவின் தொழில்களை பார்ப்பது என்றால் அந்த ஊருக்கும் செல்ல வேண்டி இருக்கும். ஏற்கனவே அவளை பற்றிய கனவுகள் எனக்கு வர ஆரம்பிச்சுடுச்சு... அங்கே போனால் நான் என்னையும் மீறி ஏதாவது செய்து விடுவேனோன்னு பயந்துக்கிட்டுத் தான் அப்பாவின் தொழிலை பார்க்காமல் தனியா கம்பெனி ஆரம்பிச்சேன்” 
 

 

இதெல்லாம் வீட்டுல யாருக்காவது தெரியுமா?” துளைக்கும் பார்வையுடன் கேட்டான் வசந்த்.
 

 

தெரியாது... நான் தெரியப்படுத்தலைதலையை கீழே குனிந்து கொண்டான் ஹரிஹரன்.
 

 

சந்தோசம்... இன்னும் வேற என்ன செஞ்சு வச்சுருக்க... அதையும் சொல்லுவசந்தின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.
 

 

வேற ஒண்ணும் இல்லை...முணுமுணுத்தான் ஹரிஹரன்.
 

 

">ஹ்ம்ம்... உன்னோட அப்பா கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை... ஆனா அந்த பொண்ணு நிம்மதி கெட்டு போயிட கூடாதுன்னு இவ்வளவு தூரம் யோசிச்சு இருக்க... அந்த பொண்ணு எப்படி?”
 

 

எப்படியா? ...ஏதோ ஒரு வித போதையில் கண்கள் சொருகியது போல கண்களை மூடிக் கொண்டு இருந்த ஹரிஹரனை வித்தியாசமாக பார்த்தான் வசந்த்.
 

 

‘நல்லவேளை வண்டியை டிரைவர் ஓட்டிக்கிட்டு இருக்கார். இவனை நம்பி விட்டு இருந்தா இந்நேரம் காரை கொண்டு போய் ஏதாவது ஒரு பள்ளத்துல இறக்கி இருப்பான் போல...
 

 

தேவதை மாதிரி இருப்பா... அவளுக்கு நடக்க தெரியாது... பறந்து தான் வருவா...
 

 

பின்னாடி றெக்கை இருக்கா?” கனகாரியமாக தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான் வசந்த்.
 

 

டேய் கிண்டலா பண்ற?” என்று நண்பனை முறைத்தான் ஹரிஹரன்.
 
 

 

பின்னே என்னடா அந்த பொண்ணை பத்தி சொல்ல சொன்னா தேவதைங்கிற... பறப்பான்னு சொல்ற... நான் அதையா கேட்டேன்... அந்த பொண்ணு அழகாத் தான் இருக்கும்ன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்... இல்லேன்னா நீ இப்படி தலைக்குப்புற விழுந்து இருக்க மாட்டியே... அந்த பொண்ணை எங்கே, எப்போ பார்த்த அதை சொல்லு
 
 

 

அப்பா அந்த பண்ணையை வாங்கின புதுசில அங்கே குடும்பத்தோடு ஒரு முறை போய் இருந்தோம் வசந்த்... அப்போ தான் பார்த்தேன்...கண்கள் எங்கோ தொலை தூர வானை வெறிக்க பரவசத்துடன் தன்னுடைய கடந்த காலத்தை பற்றிக் கூற தொடங்கினான் ஹரிஹரன்.
 
 
தேவதை வருவாள்...

 

 


Post a Comment

புதியது பழையவை