அத்தியாயம் 5
அதிகாலையில் பறவைகளின் குரலில் தூக்கத்தில் இருந்து எழுந்தான் ஹரிஹரன். எப்பொழுதும் அவனுடைய வீட்டில் அலாரத்தின் ஒலி கேட்டு தினமும் எழுந்து பழகியவனுக்கு இந்த சூழ்நிலை முற்றிலும் புதிதாக இருந்தது. சோம்பலாக கண்ணை திறந்து பார்த்தவன் மெல்ல எழுந்து ஜன்னல் அருகே சென்று வெளியே தெரிந்த காட்சிகளை ரசித்துக் கொண்டு இருந்தான்.
குடும்பத்தோடு தந்தை புதிதாக வாங்கி இருக்கும் இந்த இடத்திற்கு நேற்று இரவுப் பொழுதில் வந்ததால் சுற்றுப்புறத்தை சரியாக பார்க்க முடியவில்லை. இப்பொழுது விடிந்தும் விடியாமலும் இருந்த அந்த விடிகாலை பொழுது அவனுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க குளித்து முடித்து வெளியே வந்தவன் நேராக அந்த பண்ணை வீட்டின் முற்றத்திற்கு வந்து நின்றான்.
ஒரு கல்யாணத்தையே அங்கே நடத்தி வைக்கலாம் என்பது போல பரந்து விரிந்து இருந்தது அந்த வீடு. அதன் நடுவில் சதுர வடுவில் உள்ள இடம் மட்டும் காலியாக நேராக வானத்தை பார்த்து ரசிக்கும் படி திறந்த வெளியாக இருந்தது. மழை நேரத்தில் நேராக மழை நீர் வீட்டிற்குள் கொட்டும் விதமாக அழகாக அமைக்கப் பட்டு இருந்தது. மேலே இருந்து பொழியும் மழை அழகாக ஒரே இடத்தில் சேகரிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தது. தற்போதைய கால கட்டத்தில் நவீன வசதிகளுடன் இருந்த அவனுடைய வீட்டில் இது போன்ற பழமை நிறைந்த விஷயங்களை அவன் பார்த்தது இல்லை. வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் ரசித்து ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தவனை அவனுடைய அன்னை அழைக்கவும் அங்கிருந்து கிளம்பி அன்னையின் குரல் கேட்ட இடத்திற்கு சென்றான் ஹரிஹரன்.
“டீ குடிடா” என்றபடி டீ கப்பை மகனின் கைகளில் திணித்தார் ஈஸ்வரி
“அம்மா இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு...”
“அதை ஏன் என்கிட்டே சொல்ற... உனக்காக பார்த்து பார்த்து ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்தை உங்க அப்பா தான் வாங்கினார். இதோ ...உங்க அப்பா வருகிறார் பார்... அவரிடம் சொல். கண்டிப்பா ரொம்ப சந்தோஷப் படுவார்” மகனின் மகிழ்ச்சி தாயையும் தொற்றிக் கொள்ள சிரிப்புடன் பதில் சொன்னார்.
திரும்பி தந்தையை பார்த்த ஹரிஹரன் முகம் கொள்ளா சிரிப்புடன், “அப்பா இந்த வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு... சூப்பரா இருக்குப்பா... தேங்க்ஸ்”
“உனக்கு பிடிச்சா சரிதான் தம்பி... இதெல்லாம் யாருக்காக வாங்கி போடுகிறேன்... உனக்காகத் தான். இதற்கே இப்படி சொல்றியே... இன்னும் நம்முடைய தோப்பை பார்த்தால் என்ன சொல்வாயோ? அதை பார்த்துவிட்டால் உனக்கு அங்கிருந்து கிளம்பவே முடியாது. அத்தனை அழகாக இருக்கும்”
“அப்படியா... அப்ப முதல் வேலை அதை பார்ப்பது தான். வாங்கப்பா போகலாம்...” பரபரத்தான் ஹரிஹரன்.
“ஹரி மணி இப்போ ஏழு தான் ஆகுது. டிபனை சாப்பிட்டு முடிச்சுட்டு எல்லாரும் சேர்ந்து போகலாம் ஹரி... நானும் இன்னும் அந்த இடத்தை பார்க்கலை.எல்லாரும் சேர்ந்து ஒண்ணா போய் பார்க்கலாம்.நீங்களும் வாங்க” என்று கணவரையும் அழைத்தார் ஈஸ்வரி.
“இப்போ காலையில ஒரு சின்ன வேலை இருக்கு ஈஸ்வரி... அந்த ப்ரோக்கர் மறுபடி வரேன்னு சொல்லி இருக்கார். பக்கத்துல ஒரு ரெண்டு ஏக்கர் இடம் இருக்காம். அது நம்ம இடத்துக்கு பக்கத்துல தான் வருது... இப்பவே அதையும் வாங்கிட்டா நமக்கு நல்லது. இல்லைன்னா பின்னாடி அந்த இடத்தினால ஏதாவது பிரச்சினை வரும். நான் போய் அதை பேசி முடிச்சுட்டு மதியம் வரேன். அப்புறம் சாப்பாட்டை முடிச்சுட்டு சாயந்திரம் போகலாம். என்ன சரிதானா?”
“என்னது சாயந்திரமா அது வரை நான் என்ன செய்யட்டும்... இப்படியே சும்மா உட்கார்ந்து இருக்கிறதா... நோ டாடி... நான் போய் அங்கே தோப்பை சுத்தி பார்க்கிறேன். நீங்க உங்க வேலையை முடிச்சுட்டு அம்மாவையும் கூட்டிக்கிட்டு அம்மாவோட சாயந்திரம் வாங்க... அம்மா மதிய சாப்பாட்டை ஒண்ணு அங்கே அனுப்புங்க... இல்லை நான் இங்கே வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக்கிறேன்... ஓகே வா” என்றவன் பெற்றவர்கள் மறுத்து பேச வாய் திறக்கும் முன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
காலை உணவை கூட மறுத்துவிட்டு துள்ளலான நடையுடன் அந்த ஊரை ரசித்து பார்த்த படியே நடந்து போனான் ஹரிஹரன். ஹரிஹரனின் சொந்த ஊரான வால்பாறையும் அழகான மலை பிரதேசம் தான். ஆனால் இந்த ஊரை போல எங்கே பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென இருக்கும் வயல்வெளிகளும், தண்ணீர் வழிந்து ஓடும் ஆறுகளும், தெரு முனை டீக்கடையில் ஒலித்த இளையராஜா பாடல்களும் ஏனோ அவனுக்கு ஒரு புது விதமான அனுபவமாக இருந்தது. ஹரிஹரனுக்கு அந்த ஊரை மிகவும் பிடித்து இருந்தது.
ஒரு பத்து நிமிட நடைக்குப் பின்னரே ஹரிஹரனுக்கு அந்த விஷயம் நினைவுக்கு வந்தது. தோப்பை சுத்தி பார்க்கும் ஆர்வத்தில் தோப்பு எங்கே இருக்கிறது என்று எந்த விவரமும் கேட்டுக் கொள்ளாமல் கிளம்பியது.
‘சரி அப்படியே வீட்டிற்கு கிளம்பி விடலாமா’ என்று யோசித்தவன் தன்னுடைய முடிவை உடனே மாற்றிக் கொண்டான்.
உள்ளூர் ஆட்களிடம் விசாரித்து வழி தெரிந்து கொள்ளலாம். இதற்காக மீண்டும் வீட்டிற்கு திரும்பி போக வேண்டாம் என்று நினைத்தவன் உள்ளூர் ஆட்களிடம் விசாரித்து அந்த தோப்பை சென்று அடைந்தான். உள்ளே செல்ல செல்ல அந்த தோப்பின் அழகு ஹரிஹரனை வெகுவாக கவர்ந்தது.
முதலில் தென்னந் தோப்பில் ஆரம்பித்து வரிசையாக அதன் பின் பழ மரங்கள் தோப்பாக அணிவகுத்து நின்றன. சப்போட்டா, மாதுளை, மாம்பழம்,தர்பூசணி, கொய்யா என்று பழ மரங்களை பார்த்தவனின் பார்வை அந்த மண்ணின் செழுமையில் ஒரு நிமிடம் மனம் மயங்கியது.
ஹரிஹரனுக்கு நன்றாக தெரியும் கண்டிப்பாக அந்த தோப்பினால் தன்னுடைய தந்தைக்கு நல்ல வருமானம் தான் என்று ஒரு தேர்ந்த வியாபாரியின் மகனாக எண்ணத் தொடங்கினான். எதையெதையோ எண்ணியபடி அங்கிருந்த மாந்தோப்பில் நுழைந்தவனை பலமான கல் ஒன்று தலையில் வந்து விழுந்தது.
“அம்மா” என்ற அலறலோடு தலையை பிடித்துக்கொண்டு கோபத்தோடு சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் ஹரிஹரன். அப்பொழுது இளம் குரல் ஒன்று அவனை அழைத்தது. அந்த அழைப்பை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று கேட்ட அந்த நிமிடமே அவனுக்கு தோன்றியது. அந்த குரலில் அப்படி ஒரு வசியத்தன்மை இருந்தது.
“பெரிசு... நினைப்பு எல்லாம் எங்கே இருக்கு... பார்த்து போக மாட்டீங்களா?” என்று மிடுக்காக ஒரு குரல் கேட்டது.
குரல் கேட்ட திசையை நோக்கி திரும்பி பார்த்தான் ஹரிஹரன். பதினேழு அல்லது பதினெட்டு வயதில் களங்கம் இல்லாத நிலவை போல கண்களில் ஒருவித அலட்சிய பாவனையை தேக்கியபடி நின்று கொண்டு இருந்தாள் அவள்.பார்த்த அந்த நொடியே அந்த பெண் அவள் மனதில் பசை போட்டது போல ஒட்டிக் கொண்டாள்.
‘யார்றா இந்த பொண்ணு... இப்படி பேசுது... ஆமா பெருசுன்னு சொன்னுச்சே... யாரை சொல்லிச்சு’ என்று எண்ணியபடியே சுற்றிலும் பார்வையை சுழல விட்டான் ஹரிஹரன்.
“பெருசு... யாரை தேடுற... இப்படித் தான் அடுத்தவங்க தோப்புக்குள்ள திருட்டுத்தனமா வருவியா?” அதட்டலாக ஒலித்தது அவளின் குரல்.
‘இவள் என்னைத்தான் சொல்கிறாளோ’ என்ற சந்தேகம் அப்பொழுது தான் அவனுக்கு சந்தேகம் வந்தது.
“திருட வந்துட்டு முழிக்கிற முழியை பாரு...” மேலும் அதட்டினாள் அவள்.
‘தோப்புக்கு சொந்தகாரனையே திருடன் என்று சொல்லும் இவள் யார்? அப்பொழுது தான் அந்த பெண்ணை கண்களில் தோன்றிய சுவாரசியத்துடன் உற்றுப் பார்க்க ஆரம்பித்தான் ஹரிஹரன். பாவாடை தாவணியில் துருதுருவென இருந்தாள்.
“யோவ்! என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு... கண்ணை நோண்டிடுவேன் ஜாக்கிரதை... நான் யார் தெரியுமா? இங்கே இந்த வேலை எல்லாம் வைத்துக் கொள்ளாதே...” என்று சொன்னவள் சட்டென திரும்பி தன்னுடன் அழைத்து வந்து இருந்த அந்த பொடுசுகளை பார்த்தாள். அவளின் ஒற்றை பார்வை அவர்களுக்கு என்ன சேதி சொல்லியதோ,உடனே அவர்களும் அவளுடன் சேர்ந்து கொண்டு ஹரிஹரனை முறைக்க தொடங்கினர்.
அவர்களின் செயலில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டு மேலும் அவளை சீண்ட எண்ணினான் ஹரிஹரன்.
“இந்த தோப்பு உங்களோடதா?”
“ஆமாம்னு சொன்னா என்ன செய்வதா உத்தேசம்?”
“நானே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்னு இருக்கேன்”
“உன்னை பார்த்தாலே திருடன் மாதிரி இருக்க... இதை எல்லாம் வாங்க எவ்வளவு காசு ஆகும் தெரியுமா? சும்மா பேசிக்கிட்டு இருக்காம கிளம்பு. எங்களுக்கு வேலை இருக்கு”
“அப்படி என்ன முக்கியமான வேலையோ?”
“ம் காவக்காரன் வர்றதுக்குள்ள மாங்காய் பறிக்கனும்... இந்த ஆளை சீக்கிரம் கிளம்பச் சொல்லு அக்கா...” என்று அவளின் குட்டைப் போட்டு உடைத்தான் ஒரு பொடியன்.
‘அப்போ நீ திருடத் தான் வந்தாயா?’ என்ற ரீதியில் பார்த்த அவனது பார்வையை அவள் கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.
“சும்மா பார்த்துகிட்டே நிற்காம கிளம்பு... எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் .அதை எல்லாம் உன்கிட்டே சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா?...” இப்பொழுதும் கொஞ்சம் கூட இறங்கி வராமல் பேசினாள் அவள்.
“என்ன வேலை? என்னுடைய தோப்பில் மாங்காய் திருடி திண்ணும் வேலையா?” நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திக் கேட்டான் ஹரிஹரன்.
தேவதை வருவாள்...
கருத்துரையிடுக