அத்தியாயம் 36
காரை விட்டு இறங்கியதும் முதலில் அவன் எதிர்கொண்டது அவனுடைய மாமனார் தர்மராஜைத் தான்.தானே வலிய வந்து பேச முயன்றவரை ஒற்றை கை அசைவில் வெறுப்புடன் ஒதுக்கித் தள்ளிவிட்டு மனைவியை பாதுகாப்பாக அணைத்தபடி போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே அழைத்து சென்றான் பிரபஞ்சன்.
ஊரில் மற்றவர்களுக்கு அவளை அறிமுகம் செய்து வைத்த பொழுது முகம் திருப்பிய சங்கமித்ரா,இப்பொழுது அவனை விட்டு இம்மியும் நகரவில்லை. அதே நேரம் அவளிடம் பதட்டமும் காணப்படவில்லை.நிதானமாக இருந்தாள்.
“என்ன ஒரு பத்திரிக்கை நிருபரையும் காணோம்?”என்று கேட்டவள் சுற்றிலும் யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்க்கவும் அவனின் ஆத்திரம் மெல்ல அதிகமாகியது.அவளின் முகத்தில் வந்து போன உணர்வுகளை படிக்க முனைந்தான்.
போலீஸ் ஸ்டேஷன் வந்து இருக்கிறோம் என்ற பதட்டமும் இல்லை...தன் மீது கொலைப் பழி விழுந்து இருக்கிறது என்ற பயமும் இல்லை.முதன்முறையாக ஒரு இடத்திற்கு வரும் குழந்தை எவ்வளவு ஆவலோடு எல்லா இடத்தையும் சுற்றி பார்க்குமோ அதே மனநிலையோடு அந்த இடத்தை சுற்றிப் பார்த்தாள்.
“இது தான் லாக்கப்பா?” என்று கேட்டபடி அதன் உள்ளே நுழைய அவள் முயல கடுங்கோபத்துடன் கையைப் பிடித்து இழுத்து சேரில் அமர வைத்தான் பிரபஞ்சன்.
பிரபஞ்சனை அங்கே எதிர்பார்த்து இருந்தாலும் அவன் முகத்தில் இருந்த உக்கிரத்தை பார்த்ததும் ஒட்டு மொத்த காவல் நிலையமும் அரண்டு போய் இருக்க,யாரும் எதுவும் பேசாமல் விறைப்பாக எழுந்து நின்று சல்யூட் ஒன்றை வைத்தனர்.தலை அசைத்து அதை ஏற்றுக் கொண்டவன் எதுவும் பேசாமல் இறுகிப் போய் அமர்ந்து இருக்க,எப்படி பேச்சை துவங்குவது என்று அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரும் சற்று நேரம் மௌனமாகவே இருந்தார்.ஆனால் அப்படியே இருந்து விட முடியுமா என்ன...பேசித்தானே ஆக வேண்டும் என்று எண்ணியவர் பயந்து, பயந்து தானே பேச்சை துவங்கினார்.
“சார்...உங்க மனைவிக்கு எதிரா தான் எல்லா ஆதாரமும் இருக்கு சார்...எங்க மேல தப்பில்லை...முதல்ல விசாரிச்சுக்கலாம்ன்னு தான் சொன்னோம்...ஆனா உங்க மாமனார் தான்...”பேசிக் கொண்டே போனவர் பிரபஞ்சனின் முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.
அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக உள்ளே மூச்சிரைக்க வந்த புதிய நபர் வேகமாக இன்ஸ்பெக்டரிடம் பேசினார்.
“சார் சங்கமித்ரா மேடம்க்கு முன்ஜாமீன் கொண்டு வந்து இருக்கேன்.லாயர் சுந்தர மூர்த்தியோட ஜூனியர் நான்.என் பேர் விஜய்”என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் கைகளில் கத்தையாக வைத்திருந்த பேப்பர்களில் ஒன்றை எடுத்து அவர் முன் நீட்ட அதை வாங்கிப் பார்த்தவர் பிரபஞ்சனிடம் திரும்பி பேசத் தொடங்கினார்.
தன்னை ஒரு நிமிடம் கூட சிறைக்குள் இருக்க விடக்கூடாது என்ற உத்வேகத்துடன் வரும் வழியெல்லாம் யார்,யாரிடமோ போனில் பேசி இங்கே வருவதற்குள் தனக்கு முன்ஜாமீன் வாங்கி வைத்த கணவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.
கண்டிப்பாக தண்டனையிலிருந்து அவள் தப்ப முடியாது என்ற விஷயம் அவளுக்கு நன்றாக தெரியும்.இருப்பினும் தன்னைக் காப்பாற்றி விடப் போராடும் கணவனின் மீது அவளுக்கு காதலும் பரிதாபமும் சேர்ந்தே எழுந்தது.இப்படித்தான் நடக்கும் என்பது அவளுக்கும் தெரிந்த ஒன்று தானே...
ஆனால் இன்னும் கொஞ்ச நாள் தாமதம் ஆகும் என்று அவள் நினைத்து இருந்தாள்.அவளின் எண்ணத்திற்கு மாறாக எல்லாம் உடனடியாக நடந்து விட்டது.
தான் சொன்னதும் கேட்டுக் கொண்டு அவனாகவே அந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்தாள்.ஆனால் அவனோ அவள் மீது கொண்ட காதலின் காரணமாக அவளை மிரட்டி அதற்கு சம்மதிக்க வைத்தான்.அவள் ஒன்றும் அவனுடைய மிரட்டலுக்கு பயந்து அந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பது அவளது ஆழ்மனம் மட்டுமே அறிந்த ஒரு விஷயம்...
ஒருவேளை தான் செய்த தவறுக்கு தண்டனையாக தான் தூக்கில் தொங்கி இறந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட கடைசி நாட்களில் அவனுடைய மனைவி என்ற கௌரவத்துடன் சாக வேண்டும் என்று எண்ணியே அந்த திருமணத்திற்கு அவள் சம்மதித்தாள்.
அப்படி கடும் மனப் போராட்டத்துக்கு இடையில் அவனை மணந்து கொண்டவளுக்கு அவளின் மனச்சாட்சி குத்தீட்டியாய் மாறி குத்த ஆரம்பித்தது. ‘உன்னுடைய சுயநலத்திற்காக அவனுடைய வாழ்க்கையை நீ அழிக்கப் பார்க்கிறாயே...நீ இறந்த பின் அவனுடைய வாழ்க்கை என்ன ஆகும்’ என்று கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
ஒருவேளை அவனிடம் வெறுப்பாக நடந்து கொண்டால் அவன் தன்னை வெறுத்து, தான் போன பிறகு வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு நிம்மதியாக வாழ்வான் என்று எண்ணி அதையும் முயற்சி செய்தாள்.அதற்கும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.அவன் நெருங்கினால் விலகி நிற்க முடியாமல் அவள் தடுமாற அவளின் அந்த நிலையை அவன் கண்டு கொண்டான் என்பதும் அவளுக்கு சோர்வையே தந்தது.
வேறு வழியின்றி தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டால் அவளை விட்டு அவன் கண்டிப்பாக விலகி விடுவான் என்று நினைத்து கத்தியால் அவள் மணிக்கட்டு நரம்பை அறுக்க முயற்சி செய்யும் சமயம் அவனிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டாள்.
அவனது முகத்தை நேருக்கு நேர் பார்த்து நடந்த உண்மையை சொல்லும் துணிவு அவளுக்கு இல்லை...அதை சொல்லவும் அவள் விரும்பவில்லை.
ஆனால் அன்று அவனின் உயிருக்கு ஏதோ ஆபத்து என்று அவள் அறிந்த பொழுது அவள் வசம் அவளில்லை.அவனில்லாமல் அவளுக்கு ஏது வாழ்வு?...அவன் மீது கொண்ட அதீத காதல் தான் அவளை சாவை நோக்கி விரட்டியது.
முன்பும் ஒருமுறை அவன் காணாமல் போன பொழுது அவன் இனி தன் வாழ்வில் திரும்ப மாட்டான் என்று எண்ணித் தானே அந்த மடத்தனத்தை அவள் செய்தாள்.
மீண்டும் அவனை கண்ணால் காணும் முன் அவள் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காது.மீண்டும் ஒருமுறை அவனை இழக்கும் துணிவு அவளுக்கு இல்லை.
‘நான் இறந்து போனாலும் ஒரு மனைவியாக அவரின் தேவைகளை நிறைவேற்றுவது என்னுடைய கடமை இல்லையா...ஒருவேளை நான் அவரை விட்டுப் பிரிந்து ஜெயிலுக்கு போனாலும் அவரை கொஞ்ச நாட்களாவது மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டோமே என்ற திருப்தி ஒன்றே தனக்கு போதும்’ என்று முடிவு செய்து தான் அவள் அவனோடு இல்லற வாழ்க்கையை வாழத் தொடங்கினாள்.
இதை எல்லாம் தனக்குள் எண்ணிப் பார்த்துக் கொண்டவள் இன்ஸ்பெக்டரின் குரலில் தன்னிலை அடைந்தாள்.
“சார் மேடமை இந்த பேப்பர்ஸ்ல கையெழுத்து போட சொல்லுங்க...”என்று பேப்பரை நீட்டி கையெழுத்து வாங்கியதும் அடுத்த நொடி அங்கே நிற்காமல் மின்னலென அவளை இழுத்துக் கொண்டு காரில் ஏற்றி நேராக அவனுடைய வீட்டை நோக்கி சென்றான்.
காரை வீட்டின் உள்ளே நிறுத்தி கதவை அறைந்து சாத்தியவன் ருத்ர மூர்த்தியாக கடுங்கோபத்துடன் நின்றான்.அப்படி ஒரு கோபத்தை அவனிடம் எதிர்பார்த்து இருந்தாலும் ஏனோ அதை எதிர்கொள்ளும் அந்த நிமிடம் அவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது.
“என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசில...என்னவோ அசால்டா நீ பாட்டுக்கு லாக்கப்புக்குள்ளே போய் உட்கார பார்க்கிற...வர்ற வழியில கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாம பாட்டு கேட்டுக்கிட்டு வர்ற...கொஞ்சம் கூட பயமே இல்லாமல் என்கிட்டேயே இரண்டு கொலை பண்ணி இருக்கேன்னு சொல்ற...”
“முழுசா நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு...”அசட்டையாக சொன்னவள் பிரிட்ஜை திறந்து உள்ளே இருந்த ஜூஸ் பாட்டிலை காலி செய்யத் தொடங்கினாள்.
அவளின் நடவடிக்கைகளை பார்த்து அவனுக்கு கோபம் அதிகமானதே தவிர...கொஞ்சமும் குறையவில்லை.அவள் குடித்துக் கொண்டிருந்த ஜூஸை ஆத்திரத்துடன் கீழே தட்டி விட்டவன் அவளின் தோள் பட்டைகளை இறுகப் பற்றினான்.
“இப்ப நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம் மித்ரா...அப்போ நீ தான் அந்த கொலை எல்லாம் செஞ்சியா...இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை...”
“சொல்லன்ணும்னு தோணலை”வலியில் முகம் சுளித்தாலும் வார்த்தைகள் தெளிவாகவே வந்தது.
“சை! ராட்சசி...இப்படி என்னை சாகடிக்கத் தான் வந்தியா நீ...”அவளை காயப்படுத்தும் என்று தெரிந்தே தான் பேசினான்.ஆத்திரத்தில் தன்னை மறந்து உண்மையை அவளாகவே சொல்லுவாள் என்று அவன் எதிர்பார்க்க அவளோ இறுகிப் போன முகத்துடன் தெளிவாக பதில் சொன்னாள்.
“நான் தான் உங்களை கல்யாணத்தை நிறுத்த சொல்லி சொன்னேனே...நீங்க தான் கேட்கலை...” பழியை அவன் மீதே போட்டாள் சங்கமித்ரா.
“ஏய்..என்னடி விளையாடுறியா...கல்யாணத்தை நிறுத்த சொல்லி மட்டும் தானே சொன்ன...இதுதான் காரணம்னு நீ எப்பவாச்சும் சொன்னியா...எவ்வளவு பெரிய சதிகாரிடி நீ...”
“சும்மா கத்தாதீங்க...எனக்கு தலை வலிக்குது...வேணும்னா இப்பவே டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறேன்...நீங்க உங்க வழியில் போகலாம்.உங்க மனைவி ஒரு கொலைகாரி அப்படிங்கிற விஷயம் வெளி உலகத்துக்கு தெரிய வந்தா நிச்சயம் உங்களுக்கு அவமானமாத் தான் இருக்கும்.அதனால என்னை விவாகரத்து...”என்று பேசிக் கொண்டே போனவள் அவனது அனல் வீசும் பார்வையில் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
“அதாவது விவாகரத்து செஞ்சு என்னை விட்டு பிரிஞ்சு போனாலும் போவ...எதுக்காக கொலை பண்ணினன்னு என்கிட்டே சொல்ல மாட்டே அப்படித்தானே...”தான் எப்படி எல்லாமோ அவளை தூண்டி விட்ட பின்னரும் கூட அவள் கொஞ்சமும் அதைப் பற்றி வாயைத் திறக்காமல் போக , தன்னுடைய நடிப்பை நிறுத்தி விட்டு நிதானமாக கேட்டான் பிரபஞ்சன்.
ஒரு நிமிடம் அவளது முகத்தில் வந்து போன தடுமாற்றத்தை குறித்துக் கொண்டவன் இப்பொழுது அவளுக்கெதிரில் இருந்த சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.
“நான் போலீஸ்காரன் மித்ரா...”என்றவன் அவளுடைய முகத்தில் ஊடுருவும் பார்வையை செலுத்த அவனது பார்வையில் இருந்த கூர்மையில் அவளது மேனி மெல்ல நடுங்கத் தொடங்கியது.வெளிப்படையாக அது அவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்று முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
“நீ சொல்லலைனா...என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்கறியா...”அவனுடைய ஆழ்ந்த குரல் அவளின் உள்ளத்தை ஊடுருவியது.
‘வேண்டாம்...எதையும் நீங்க கண்டுபிடிக்க வேண்டாம்...’ அவளின் மனம் மௌனமாக அலறியது.
“நான் கண்டுபிடிக்கறேன்டி...நீ எதுவுமே சொல்லாட்டியும் கூட பரவாயில்லை..இது என்னோட திறமைக்கு நீ கொடுத்த ஒரு சவாலா எடுத்துக்கிறேன்.ஆனா ஒரு விஷயம் மட்டும் நினைவில் வச்சுக்க...நான் ஜெயிச்சா...கண்டிப்பா உனக்கு தண்டனை உண்டு...அதுவும் கொடுமையானதா தான் இருக்கும்”என்று சூளுரைத்தவன் வேகமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.
அடுத்ததாக அவன் சென்ற இடம் அவனது மாமனார் வீடு தான்.வீட்டில் தரையில் ஒரு மூலையில் அமர்ந்து அவனுடைய மாமியார் சாவித்திரி கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க அவரது குரல் தெருமுனையிலேயே அவனுக்கு கேட்க ஆரம்பித்து விட்டது.
“எந்த அப்பனாவது இப்படி பெத்த பெண்ணையே ஜெயிலில் தள்ள ஏற்பாடு பண்ணுவாரா...சே! என்ன மனுஷன் நீங்க..பெத்த பிள்ளை அப்படிங்கிற பாசம் கொஞ்சம் கூட இல்லையா உங்களுக்கு...போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்தா பந்த பாசம் எல்லாம் இப்படியா மறந்து போகும்...”என்று கத்திக் கொண்டே இருந்தவர் உணர்ச்சி துடைத்த முகத்துடன் உள்ளே வந்த பிரபஞ்சனை பார்த்ததும் கலவர முகத்துடன் பேச்சை நிறுத்தி விட்டு எழுந்து நின்றார்.
“உங்க வீட்டுக்காரர் கிட்டே நான் கொஞ்சம் பேசணும்...எங்கே அவர்?” அவன் குரலில் கோபம் இல்லை...ஆனால் கண்கள் ஆத்திரத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது.முகத்தில் முயன்று தருவித்த அமைதி இருந்தது.
‘மாமா என்று குறிப்பிடாமல் இப்படி பேசுகிறாரே’ என்று எண்ணி வருந்திய சாவித்திரி உள்பக்கம் திரும்பி குரல் கொடுக்கும் முன் தானாகவே அறையை விட்டு வெளியே வந்தார் தர்மராஜ்.
பிரபஞ்சனைப் பார்த்ததும் அவர் முகத்தில் எந்த அதிர்ச்சியும் காணப்படவில்லை.அவனது வருகையை அவரும் எதிர்பார்த்து தானே காத்திருந்தார்.மனைவியை கைது செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தவரை அவன் அப்படியே விட்டு விடுவானா என்ன?நிச்சயம் தன்னைத் தேடி வருவான் என்பது அவருக்கு தெரியாதா என்ன...
போலீஸ் ஸ்டேஷனிலேயே அதைப் பற்றி பேசி விடலாம் என்று நினைத்துத் தான் அவர் அவனிடம் பேச முயற்சித்தார்.ஆனால் பிரபஞ்சன் தான் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவே இல்லையே...
அவரின் பார்வையில் லேசான மன்றாடல் மட்டுமே இருந்தது.அதை கண்டும் காணாதவன் போல முகத்தை இரும்பென வைத்துக் கொண்டவன் இறுகிப் போனக் குரலில் பேச ஆரம்பித்தான்.
“என்னோட மனைவியை நீங்க கைது செய்ய முயற்சித்த கேஸ் பத்தின டீடைல்ஸ் கொஞ்சம் தேவைப்படுது.தர முடியுமா இன்ஸ்பெக்டர் சார்”ஒட்டுதலின்றி பேசியவனின் வார்த்தைகள் அவரின் நெஞ்சை தைத்தது.
மனம் வருந்தி தன்னுடைய நிலையை எடுத்து சொல்ல எண்ணி வாய் திறந்தவர் அவனின் இறுகிப் போனத் தோற்றத்தில் அந்த முயற்சியை கை விட்டார்.
“உள்ளே என்னுடைய அபிசியல் ரூம் இருக்கு..அங்கே போய் பேசலாம்”என்றவர் பின்னே தொடர்ந்து வர முயன்ற மனைவியை பார்வையாலேயே அடக்கி விட்டு,அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்ட பிறகு கேஸ் சம்பந்தப்பட்ட விவரங்களை மடமடவென கூறத் தொடங்கினார்.
அது அத்தனையையும் தெளிவாக உள்வாங்கிக் கொண்டவன் அவர் சேகரித்து வைத்து இருந்த அத்தனை ஆதாரங்களையும் சரிபார்க்கத் தொடங்கினான்.கிட்டத்தட்ட் நான்கு மணி நேரம் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் எல்லா ஆதாரங்களையும் சரி பார்த்தான்.
அது அத்தனையும் சங்கமித்ராவுக்கு எதிராகத் தான் இருந்தது என்பதை அவன் மனம் வேதனையுடன் கண்டு கொண்டது.
“இந்த ஆதாரங்களை எல்லாம் நான் எடுத்துக் கொண்டு போகலாமா...என் மேல் நம்பிக்கை இருந்தா கொடுங்க...இன்னும் கொஞ்சம் அனாலைஸ் பண்ணிட்டு தர்றேன்”
“எடுத்துட்டு போங்க ஏசிபி சார்...” என்றவர் சிறிது இடைவெளி விட்ட சொன்ன கூடுதல் தகவலை கேட்டு அவனது முகம் மத்தாப்பாக ஜொலித்தது.
சிற்பம் செதுக்கப்படும்...
கருத்துரையிடுக