Vanavil Sirpame Tamil Novels 37

 

அத்தியாயம் 37
 
“என்ன சொல்றீங்க...”நம்ப முடியாத ஆச்சரியம் இருந்தது பிரபஞ்சனின் குரலில்.
 
“ஆமா...கொலை நடந்து ரொம்ப நாள் கழிச்சு தான் பாடி கண்டுபிடிச்சதாலயும், பாடி ஏற்கனவே முக்கால்வாசி எரிஞ்சு போன நிலையில கிடைச்சதாலயும் முதலில் செஞ்ச போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல எனக்கு என்னவோ அவ்வளவு நம்பிக்கை இல்லை...அதனால மறுபடி ஒருமுறை செய்ய சொல்லி இருந்தேன்.அதோட ரிப்போர்ட் இன்னைக்கு காலையில தான் எனக்கு வந்துச்சு...


அந்த இரண்டு பேரையும் கொலை செய்த கத்தியில் சங்கமித்ராவோட கைரேகை இருந்தாலும் அவங்களோட மரணத்துக்கு காரணம் அது இல்லை.அவங்களோட மரணத்துக்கு காரணம் ஹார்ட் அட்டாக்...
 
“என்ன ஹார்ட் அட்டாக்கா?...அதுவும் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்திலயா?...அது எப்படி சாத்தியம்?”
 
“ஆமா..எனக்கும் அதே சந்தேகம் தான்...ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் அப்படி ஹார்ட் வர்றதுக்கு வாய்ப்பில்லை அப்படிங்கிறது எனக்கு புரிஞ்சுது...அதைப் பார்த்த பிறகு தான் எனக்கு என் பொண்ணு இந்தக் கொலையை கண்டிப்பா செஞ்சு இருக்க மாட்டான்னு தோணுச்சு...ஆனா அதுக்கு அப்புறமும் எதுக்கு அவளை கைது பண்ணினேன்னு தானே உங்க கோபம்...
 
மாப்பிள்ளை எல்லா தடயங்களும் அவளுக்கு எதிரா தான் இருக்கு...அவளுக்கும் இது கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும் ஒருநாள் விஷயம் வெளியாகும் பொழுது அவ கைதாக வேண்டிய சூழ்நிலை உருவாகும்ன்னு.அப்படி இருந்தும் அதை அவ என்கிட்டே சொல்லலை...
 
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் படி கொலை நடந்தது ஒரு மாசத்துக்கு முன்னாடி.அதாவது...உங்க கல்யாணத்துக்கு முன்னாடி...
 
என்னோட கணிப்பு சரியா இருந்தா...அவ உங்களுக்கும் இதை பத்தி சொல்லி இருக்க மாட்டா...அவ செய்யலைன்னு நாம உறுதியா சொல்லணும்னா அதுக்கு அவ உதவி வேணும்...அவளாகவே சொன்னா தான் உண்டு...சங்கமித்ராவைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.அவளுக்கு எதையும் ஒளிச்சு , மறைச்சு பேசத் தெரியாது.உங்களைப் பத்தி ஆரம்ப நாட்கள்ல என்கிட்டே அவ சொல்லாம மறைச்சப்போ கூட அவ கண்ணில் அப்படியொரு தவிப்பும்,குற்ற உணர்வும்  இருந்துச்சு.
 
அப்படிப்பட்டவ...இத்தனை தூரம் நடந்த பிறகும் வாயை திறக்க மறுக்கிறான்னா...அதுக்கு பின்னாடி நிச்சயம் ஏதோ வலுவான காரணம் இருக்கும்.ஒருவேளை...இப்படி திடீர்னு அரெஸ்ட் பண்ணும் பொழுது பயத்தில் அவ சொல்றதுக்கு வாய்ப்பு இருக்குனு நினைச்சேன்...அதுதான்...ஆனா இப்ப உங்க முகத்தை பார்த்தா...அவ எதுவும் உங்க கிட்டே கூட சொல்லலைன்னு நினைக்கிறேன்.”என்று சொல்லி பேச்சை நிறுத்தி ‘நானும் போலீஸ்காரன் தான்’ என்று சொல்லாமல் சொல்வது போல அவன் முகத்தையே ஆழ்ந்து பார்க்கத் துவங்கினார்.
 
முகத்தில் எதுவும் காட்டக் கூடாது என்று எண்ணி அவன் அமைதியாக இருந்தாலும் அவனது அந்த அமைதியே அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது என்ற உண்மை அவனுக்கு தெரியாமல் போனது.அதைப் பற்றி மேலும் பேசாமல் அமைதி காத்தவர் பிரபஞ்சனின் கைகளில் அவன் கேட்ட ஆதாரங்களை தரவும் மறக்கவில்லை.
 
எல்லா ஆதாரங்களையும் எடுத்துக் கொண்டு வந்தவன்,வரும் வழியிலேயே சில வேலைகளை முடித்து விட்டு ஹாலில் அமர்ந்து இருந்தவளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.தன்னிடம் இருந்த ஆதாரங்கள் உண்மையானது தானா என்பதை உறுதி செய்து கொள்ள இரவும் பகலும் அவைகளையே ஒவ்வொன்றாக வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தான்.
 
இரண்டு நாட்களாக சாப்பாடு சாப்பிடக் கூட அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை.அறைக்குள் அவன் யார், யாரிடமோ போனில் பேசுவது தெரிந்தாலும் உள்ளே சென்று அவனிடம் பேச்சுக் கொடுக்க சங்கமித்ராவுக்கு பயமாகத் தான் இருந்தது.அவ்வளவு தூரம் அவன் கேட்டும் ஒன்றுமே சொல்ல முடியாத தன்னுடைய நிலையை வெகுவாக வெறுத்தாள் சங்கமித்ரா.
 
அந்த வீட்டில் அவளுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு வந்து சேர்ந்தது.தினமும் காலை அவனது காரிலேயே பெண் போலீஸ் துணையுடன் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு போய் கையெழுத்து போட்டு வந்து கொண்டிருந்தாள்.இது அத்தனையும் எந்த தடங்கலும் இல்லாமல் நடந்து கொண்டு இருந்தது.அதற்குப் பின்னால் இருப்பது தன்னுடைய கணவன் என்பதும் அவள் அறிந்த ஒன்று தான்.
 
ஆனால் எதற்காகவும் இரண்டு நாட்களாக அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை...பசி, சாப்பாடு, தூக்கம் என அனைத்தையும் மறந்து விட்டு அவளை அந்த வழக்கில் இருந்து விடுவிப்பது எப்படி என்பது குறித்து யோசித்து அதற்கேற்ப செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
 
அது அனைத்தையும் விட அவள் ஏன் இந்தக் கொலைப் பழியை தான் செய்ததாக சொல்கிறாள் என்ற விஷயமும் அவனுக்கு புரியவில்லை.அவனது கணிப்புப் படி அந்த கொலைகளில் இன்னொரு நபர் நிச்சயம் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும்.
 
அரக்கத்தனமாக அந்த கேசைப் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் மிக நுணுக்கமாக விசாரித்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.சிறு தகவலை கூட அலட்சியமாக விடாமல் மீண்டும் மீண்டும் சரி பார்த்தான்.
 
இறந்து போன அந்த இரு வாலிபர்களைப் பற்றிய விவரங்களையும் சரி பார்க்கையில் அவன் மனதில் ஏதோ நெருடலாகவே இருந்தது.
 
‘அமீஷ் படேல், தருண் யாதவ்... இருவருமே ஐடித் துறையில் வேலை பார்க்கும் நபர்கள்...இருவருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை.ஆனா நம்ம ஊர் இல்லை..வட மாநிலத்தை சேர்ந்தவங்க...பார்க்க நல்ல டீசன்டா தான் இருக்காங்க...தனியா அப்பார்ட்மெண்ட்ல வீடு எடுத்து தங்கி இருந்து இருக்காங்க...வீட்டில் சமையலுக்கு தனி ஆள் கூட கிடையாது.சாப்பாடு எல்லா நேரமும் ஹோட்டல் தான்...அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் ஒரு சின்ன சண்டை கூட போட்டது இல்லை...தானுண்டு...தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள்...அவர்களின் அலுவலகத்திலும் அவர்கள் இருவருக்கும் நல்ல பெயரே...
 
அடுத்ததாக அவனுக்கு எழுந்த சந்தேகம் அவர்கள் இருவருக்கும் ஒத்தார் போல வந்த ஹார்ட் அட்டாக்...அது எப்படி இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்திருக்க முடியும் என்று யோசித்தவன் அது குறித்த தன்னுடைய சந்தேகத்தை தனக்கு தெரிந்த இதய மருத்துவரிடம்  கேட்டு தெளிந்து கொண்டான்.
 
அடுத்ததாக இந்த இரண்டு நபர்களை கொல்ல நினைக்கும் அந்த மூன்றாவது நபர் யார்?அதனால் அந்த நபருக்கு என்ன ஆதாயம்?அந்தப் பழியை ஏன் இவள் தன்மேல் போட்டுக் கொள்கிறாள்?அந்த நபர்களுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?...என்று எல்லா விதத்திலும் யோசித்து பார்த்தவனின் மூளையில் பளிச்சென மின்னல் வெட்டியது.
 
ஒருவேளை இப்படி இருக்கக் கூடுமோ என்று எண்ணி அவனிடம் இருந்த ஆதாரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்தான்.அவனது யூகம் தொண்ணூறு சதவீதம் உறுதியானது.இது தான் காரணம் என்று தெரிந்த பின் அவன் மனம் மெல்ல லேசானது.
 
அவள் தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள் என்ற ஆத்திரம் முழுதாக குறையாவிட்டாலும் ஓரளவிற்கு மட்டுப்பட்டது.ஆனாலும் கூட அதிலும் சில கேள்விகளும் சந்தேகங்களும் அவனுக்கு எழாமல் இல்லை.இது அனைத்திற்கும் பதில் வேண்டுமென்றால் ஒன்று தன்னுடைய மனைவி சொல்ல வேண்டும் அல்லது அந்த மூன்றாவது நபர் சொல்ல வேண்டும்.
 
இப்பொழுது உண்மையை சொல்லி அவளை இந்த கேசில் இருந்து வெளியே கொண்டு வந்தால் கூட சங்கமித்ரா தன்னுடைய வாயால் அந்த கொலையை செய்தற்கான காரணத்தை கூற மாட்டாள்.அந்த விசயத்தில் அவள் மிகவும் உறுதியாக இருக்கிறாள் என்பதை தான் அவன் ஏற்கனவே உணர்ந்து கொண்டானே...
 
இனி இதில் சம்பந்தப்பட்ட அந்த முகமறியா மூன்றாம் நபர் யாரென்று தேட வேண்டும் என்று முடிவெடுத்தவன் அது குறித்த தகவல்களை சேகரிக்க எண்ணி வெளியே கிளம்பினான் பிரபஞ்சன்.சட்டென்று அவன் மனதில் ஒரு யோசனை வெளியானது.அதை செயல்படுத்த எண்ணியவன் அந்த கேசில் முக்கியமான ஆதாரங்களை எல்லாம் எடுத்து அறைக்கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.
 
பார்மலாக உடை அணிந்து இருந்தவன் அவளின் பார்வை ஏக்கத்துடன்  தன்னை தொடர்வதை அறியாதவன் போல போனில் பேசியபடியே இயல்பாக அதை வைத்து விட்டு செல்வது போல அவளின் பார்வையில் படும்படி வைத்து விட்டு வெளியேறினான்.
 
ஏக்கத்துடன் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் அவன் வெளியே சென்றதும் எதேச்சையாக அவளுக்கு எதிரில் இருந்த காகித குவியலைப் பார்த்தாள்.உடலும் மனமும் சட்டென்று பரபரப்பாக வேகமாக அதன் அருகில் சென்றவள் அதில் இருந்த குறிப்பிட்ட சில பேப்பர்களை மட்டும் உருவியவள் வேகமாக தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்து அந்த ஆதாரங்களை சாம்பலாக்கினாள்.
 
முக்கியமான சில காகிதங்களை மட்டும் எரித்த பிறகு எதையோ சாதித்த உணர்வு தோன்ற அதே மகிழ்ச்சியோடு திரும்பியவள் அதிர்ந்து தான் போனாள்.அறை வாயிலில் நின்றபடி அவளையே துளைக்கும் பார்வையுடன்  பார்த்துக் கொண்டு இருந்தான் பிரபஞ்சன்.
 
அவன் கண்களில் துளியளவு கூட அதிர்ச்சி இல்லை.அழுத்தமான நடையுடன் தன்னை நோக்கி வந்தவன் நிச்சயம் தன்னை அறையத் தான் போகிறான் என்று அவள் பயந்து கொண்டு இருக்க,அவனோ அவள் எரித்து வைத்து இருந்த காகிதக் குவியலின் மீது பார்வையை ஒருமுறை செலுத்தி விட்டு தோளை அசட்டையாக குலுக்கி விட்டு வாசல் புறம் நடந்தான்.
 
‘என்ன எதுவுமே பேசாம போறார்’என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுதே அலட்சியமாக அவள் புறம் திரும்பியவன் குரலில் கேலி இழையோட பேச ஆரம்பித்தான்.
 
“உன்னைப் போல ஒருத்தியை வீட்டில் வச்சுக்கிட்டு எல்லா ஒரிஜினல் ஆதாரங்களையும் இங்கே கொண்டு வந்து இருப்பேன்னு நினைக்கறியா?...முட்டாள்” என்றவன் அவளின் முகத்தில் வந்து போன அதிர்வலைகளை கண்டும் காணாதவன் போல தொடர்ந்து பேசினான்.
 
“இங்கே வீட்டுக்கு நான் கொண்டு வந்தது எல்லாமே செராக்ஸ் காபி தான்...ஒரிஜினல் பேப்பர்ஸ் எல்லாம் பத்திரமா இருக்கு...”என்றவன் அவளது கண்களை உற்றுப் பார்த்தவாறே தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.
 
“நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க மித்ரா...பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகமே இருண்டு போய்டுமா என்ன?ஏதோ ஒண்ணு இரண்டு பேப்பரை எரிச்சுட்டா...குற்றவாளியை சட்டத்துக்கிட்டே  இருந்து காப்பாத்தி விட முடியும்னா? இல்லை வேணும்னே உன் மேலே நீயே கொலைப்பழியை போட்டு யாரையோ காப்பாத்த பார்க்கறியே...அதை பார்த்துக்கிட்டு நான் சும்மா இருப்பேன்னு நினைச்சியா?”அடுக்கடுக்காய் அவன் கேள்விகளை கேட்க,அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவள் திண்டாடினாள்.
 
“போலீஸ்காரனை அவ்வளவு சுலபத்தில் ஏமாத்த முடியாது மித்ரா...அதுவும் என்னை அவ்வளவு சுலபமா ஏமாத்திடலாம்ன்னு நினைச்சியா?இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட அந்த மூன்றாவது நபரைத் தான் நான் இப்போ தேடிப் போறேன்.கண்டிப்பா அந்த நபரை கைது செஞ்ச பிறகு தான் இந்த வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைப்பேன்...”என்று ஆத்திரத்தில் கண்கள் விபரீத ஒளியில் பளபளக்க பெசியவனைக் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.அவனை தடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் உடலும் மனமும் உறைந்து போய் விட்டது...
 
‘இதற்கா இத்தனை பாடு...இது நடக்கக் கூடாது என்று தானே தன்னுடைய வாழ்வை அவள் பணயம் வைத்தாள்...அப்படி என்றால் இத்தனை நாட்கள் அவள் செய்த அத்தனையும் வீண் தானா?’உறுதியான முடிவுடன் செல்லும் கணவனை தடுக்கும் வகை அறியாது துவண்டு போய் கட்டிலில் விழுந்து விட்டாள் சங்கமித்ரா.
 
சிக்கலின் நூல் முனையை பற்றி விட்டதால் அதற்குப் பிறகு தெளிவான கோட்டில் விசாரிக்கத் தொடங்கினான் பிரபஞ்சன்.இந்தக் கேசில் வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைந்து இருந்து அத்தனை நாளும் செயல்பட்ட அந்த மூன்றாவது நபரை அடையாளம் கண்டவன்,அந்த நபர் தப்பி ஓடி விடுவதற்குள்  அவரை கைது செய்வதற்கு உண்டான அத்தனை வேலைகளையும் செய்து முடித்தவன் அன்று இரவு பதினோரு மணி அளவில் அவனுடைய மாமனார் தர்மராஜை சந்தித்தான்.
 
“இன்ஸ்பெக்டர் சார்...உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...அந்த இரட்டைக் கொலைகளில் உண்மையான கொலையாளி யார் அப்படிங்கிறதை கண்டுபிடிச்சாச்சு...அந்த நபரை கைது செய்யணும்.அதுக்கு முன்னாடி உங்க மூத்த மகளும்,மருமகனும் இங்கே வந்தாகணும்...”என்றான் அதிரடியாக .
 
அவன் பேச்சை தொடங்கியதில் இருந்தே அவனது முக பாவனையை கவனித்துக் கொண்டு இருந்தவர் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்தாகி விட்டது என்ற செய்தியில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.ஆனால் அதைத் தொடர்ந்து அவன் சொன்ன வார்த்தைகளில் முகம் சுருக்கி தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.
 
“அவங்க எதுக்கு ஏசிபி சார்...அதுவும் அவங்க இரண்டு பேரும் இப்போ வெளிநாட்டில் இருக்காங்க...உடனே எப்படி வர முடியும்?”
 
“என் மனைவி குற்றமற்றவள்ன்னு நான் நிரூபிக்கணும்னா அதுக்கு அவங்க கண்டிப்பா வந்தே ஆகணும்...அவங்களுக்கு நான் பிளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன்.அவங்க ஊர் நேரத்துக்கு இன்னைக்கு நைட் அவங்களுக்கு டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்.டிக்கெட் விவரங்களை உங்களோட மெயிலுக்கு அனுப்பி இருக்கேன்.
 
தகவலை அவங்களுக்கு சொல்லி உடனடியா புறப்பட்டு வர சொல்லுங்க...அப்புறம் ..இதை உங்களுக்கு சொல்லணும்கிற அவசியம் இல்லை...இது இரட்டை கொலை கேஸ்...ஸோ அவங்க ஒருவேளை நாளைக்கு காலையில இங்கே வராம இருந்தா அதுக்கு அவங்களுக்கு தனி தண்டனை உண்டு...அதையும் மறக்காம அவங்ககிட்டே சொல்லிடுங்க” என்றவன் அவரின் பதிலை எதிர்பார்க்காது அங்கிருந்து விருட்டென்று புறப்பட்டு விட்டான்.
 
செய்ய வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்தவன் கண்ணி வைத்து காத்திருக்கும் வேடனைப் போல உண்மைக் குற்றவாளியை கைது செய்து தன்னுடைய மனைவியை அந்தப் பழியில் இருந்து காப்பாற்றியே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் அன்றைய இரவை தன்னுடைய அலுவல் அறையிலேயே கழித்தான்.
 

சிற்பம் செதுக்கப்படும்...

Post a Comment

புதியது பழையவை