Vanavil Sirpame Tamil Novels 40

 



“நித்யா போனதுக்கு அப்புறம் அப்படித்தான் இருந்தேன்.இப்போ தப்பு செஞ்சவங்களை தண்டிச்சதால மனசுல எந்த வன்மமும் இல்லை தான்.ஆனா நித்யா பத்தின விஷயங்கள் வெளியுலகத்துக்கு தெரிய வருமே...அதை நான் விரும்பலை..அதுக்காகத் தான் ஓட முயற்சி செஞ்சேன்.ஆனா மாட்டிக்கிட்டேன்”



“உங்களோட இந்த குற்றத்துக்காக உங்களுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் தம்பி”அப்பொழுதும் விடாமல் அவனை பயமுறுத்திப் பார்த்தார் வக்கீல்.
“ஹ...”விரக்தியான புன்னகையை சிந்தியவன்... “நல்லது...அதை முதலில் செய்ங்க..நான் என்னோட நித்யா கிட்டே போய்டுவேன்...அங்கே போய் அவளை நாலு அறை அறைஞ்சு கேட்கணும்...என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணவே இல்லையாடின்னு கேட்கணும்” என்றவனின் பார்வை எங்கோ தொலைதூரத்தை வெறித்துக் கொண்டு இருந்தது.
எல்லா வாதங்களையும் நன்கு கேட்டறிந்த பிறகு நீதிபதி தன்னுடைய கனத்த குரலில் பேச ஆரம்பிக்கவும் அந்த கோர்ட் முழுக்க அமைதியை தத்தெடுத்தது.
“இந்த வழக்கில் கொலை குற்றம் சாட்டப் பட்ட சங்கமித்ராவை இந்த கோர்ட் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறது.அதே சமயம் கொலை செய்வதற்கான மருந்தை கொடுத்த சத்யாவையும்,அதை அனுப்பிய சுரேஷுக்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ரவியின் வாக்குமூலம் வழியாக தெளிவாக தெரிவதால் அவர்களையும் இந்த கோர்ட் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறது.குற்றவாளி ரவிக்கு இந்த கோர்ட் ஆயுள் தண்டனை விதிக்கிறது...
மேலும் சிறப்பாக செயல்பட்டு உண்மை குற்றவாளியை சட்டத்திற்கு முன் அடையாள படுத்திய பிரபஞ்சனை இந்த கோர்ட் பாராட்டுகிறது...சமீப காலமாக பெருகி வரும் குற்றங்களில் அதிகப்படியாக நடக்கும் குற்றங்கள் இணையப் பயன்பாட்டினால் நடப்பவை தான்.பேஸ்புக்,மியுசிக்கலி போன்ற வெப்சைட்கள் மனிதர்களின் மன அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் பயன்படுத்த பட வேண்டியவை.தருண்,அமீஷ் போன்ற ஒரு சிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு பலரின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விடுகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எந்த பெண்ணுமே ஏன் முதலிலேயே இதை வீட்டில் இருப்பவர்களிடம் தெரியப்படுத்தவில்லை.பெண்களின் பாதுகாப்பிற்காக இத்தனை சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும் கூட ஏன் இப்படி நடக்கிறது?பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை துணிந்து வெளியே சொல்ல வேண்டும்.
நடந்ததை நீங்க வெளியே சொல்ல மாட்டீங்க...அப்படிங்கிற உங்களோட பயம் தான் தப்பு செய்யும் சிலருக்கு சாதகமா போய்டுது.இந்த மாதிரி விஷயங்களை நீங்க எதிர்கொள்ள நேரும் பொழுது வீட்டில் இருக்கிறவங்க துணையையோ,சட்டத்தின் துணையையோ நாடி இருந்தால் இத்தனை மரணங்கள் நிகழ்ந்து இருக்காது.சைபர் கிரைம் பிரிவில் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டங்கள் இயற்றப்படவும்,தண்டனைகளை அதிகபடுத்தவும் இந்த கோர்ட் வலியுறுத்துகிறது”என்று கூறி அவர் தன்னுடைய தீர்ப்பை முடிக்க அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
சத்யா நெகிழ்ச்சியுடன் சங்கமித்ராவின் கைகளை பிடித்துக் கொண்டு பேசினாள்.
“நீ ஏன்டி இப்படி எல்லாம் செஞ்ச...உனக்கு எப்படி இதெல்லாம் தெரிய வந்துச்சு...”
“ஒருநாள் நைட் தூக்கம் வராம கம்ப்யூட்டரை ஆன் பண்ணி கொஞ்ச நேரம் கேம் விளையாடலாம்ன்னு கீழே வந்தேன்.அப்போ உன்னோட பேஸ் புக் பேஜை நீ குளோஸ் பண்ண மறந்துட்ட போல...அப்போ தான் அதை எல்லாம் பார்த்தேன்...
அதுக்கு அடுத்த நாள் நீ அவங்ககிட்டே போன்ல கெஞ்சுறதை நான் மறைஞ்சு இருந்து கேட்டேன்.அன்னிக்கு நீ தூங்குனதுக்கு அப்புறம் உனக்கே தெரியாம உன்னோட போன்ல கால் ரெக்கார்டர் இன்ஸ்டால் பண்ணி அடுத்த நாள் அவங்க உன்னை மிரட்டி பணம் கொண்டு வர சொன்னதை எல்லாம் நான் தெரிஞ்சுகிட்டேன்.அப்படித்தான் அவங்க உன்னை வர சொன்ன இடம் எனக்கு தெரிஞ்சது. ஏதாவது செஞ்சு உன்னை காப்பாத்தணும்ன்னு மட்டும் தான் தோணுச்சு...அதுதான் கொஞ்சமும் யோசிக்காம அப்படி செஞ்சுட்டேன்.”
“இனியொரு முறை எனக்காக இப்படி எதுவும் செய்யாதே ...உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு...”
“கண்டிப்பா செய்ய மாட்டேன் அக்கா...இதுநாள் வரை அவர்கிட்டே உண்மையும் சொல்ல முடியாம அவர் கூட மனசார வாழவும் முடியாம ...ஷ்ஷ்ஷ்...அப்பப்பா... நான் நரகத்துல இருந்தேன்...இப்ப தான் என் மனசு நிம்மதியா இருக்கு”
கூடப் பிறந்தவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பாசத்துடன் அணைத்துக் கொள்ள அங்கே அனைவரும் மகிழ்ச்சியான மனநிலையுடன் இருந்தார்கள்.பிரபஞ்சனும்,தர்மராஜும் சேர்ந்து மீதம் உள்ள கோர்ட் வேலைகளையும்,பத்திரிக்கைகளுக்கு பேட்டியும் கொடுத்து விட்டு திரும்பும் பொழுது எல்லாரும் ஓரளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர்.
எல்லாரும் பேசிக் கொண்டே ஒரே காரில் சென்று விட சங்கமித்ரா மட்டும் பிரபஞ்சனுடன் செல்ல எண்ணி அவனுக்காக காத்திருந்தாள்.ஆனால் அவனுக்கு பதிலாக கான்ஸ்டபிள் ஒருவர் தான் வந்தார்.
-------------------
“மேடம்...அய்யாவுக்கு நிறைய வேலை இருக்குதாம்...முடிய ரொம்ப நேரம் ஆகுமாம்.அதுவரை நீங்க இங்கே இருக்க வேண்டாமாம்...உங்களை கிளம்பி வீட்டுக்கு போக சொன்னாங்க...”என்று சொல்லவும் அவளுக்கு சொத்தென்று ஆனது.
‘சே!அவர்கிட்டே மனசு விட்டு நிறைய பேசணும்னு நினைச்சேனே...’என்று எண்ணியவள் வேறு வழியின்றி கான்ஸ்டபிள் ஜீப்பில் சென்று தன்னுடைய வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டாள்.
வீட்டுக்குள் நுழைந்ததும் குளித்து முடித்து தலை நிறைய பூச்சூடி இதுநாள் வரை இல்லாத அளவுக்கு தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டாள் சங்கமித்ரா.
அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.கண்டிப்பாக தூக்கில் தொங்கி உயிரை விடப் போகிறோம் என்று அவள் எண்ணி எண்ணி எத்தனை நாள் வருந்தினாள்.அவர் இரண்டே நாளில் அத்தனையும் மாற்றி விட்டாரே...மனதில் அழுத்திக் கொண்டு இருந்த பாரம் நீங்கி இருந்ததால் மனம் முழுக்க காதலுடன் கணவனின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.
நேரம் தான் போனதே ஒழிய அவன் வந்த பாடில்லை.
‘சே!இன்னிக்காவது கொஞ்சம் சீக்கிரம் வரக் கூடாதா? என்ன மாதிரியான நாள் இன்னைக்கு’என்று கணவனிடம் செல்லமாக சலித்துக் கொண்டவள் வேண்டாவெறுப்பாக டிவியின் முன் அமர்ந்து இலக்கில்லாமல் ஏதேதோ சேனலை மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அதுவும் ஒரு கட்டத்தில் போரடித்துப் போக அவருக்கு போன் செய்து சீக்கிரம் வர சொல்லலாம் என்று எண்ணியபடி போனை எடுத்துப் பார்க்க அதில் ஏற்கனவே பிரபஞ்சன் அனுப்பி இருந்த குறுஞ்செய்தி ஒன்று வந்து இருந்தது.
‘என்ன இவர் மெசேஜ் அனுப்பி இருக்கார்’என்று ஆவலுடன் அதை திறந்து பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள்.அவன் அனுப்பி இருந்ததைப் படித்து.
“உன்கிட்டே சொன்னபடி சவால்ல நான் ஜெயிச்சுட்டேன்.இனி உனக்கு நான் தரும் தண்டனை என்ன தெரியுமா?...இனி என்னுடைய வாழ்க்கையில் உனக்கு இடமில்லை.என்னைப் பார்க்கவோ பேசவோ முயற்சி செய்யாதே...விரைவில் நீ விரும்பிய டைவர்ஸ் பேப்பர்கள் உன்னைத் தேடி வரும்”
மின்னல் தாக்கியது போல அதிர்ச்சியுடன் கைகளில் இருந்த செல்போனை தவற விட்டவள் அப்படியே திக்பிரமை பிடித்தவள் போல அமர்ந்து விட்டாள்.
‘எல்லா பிரச்சினையும் முடிஞ்சுடுச்சு.இனி சந்தோசமா வாழலாம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே...என்னை இப்படியா தண்டிப்பீங்க.இனி உங்க வாழ்க்கையில் எனக்கு இடமில்லையா...நீங்க இல்லாம எனக்கு எதுவுமே இல்லையே’என்று எண்ணி அழுகையில் கரைந்தாள்.
வெகுநேரம் வரை அழுகையில் கரைந்து கொண்டு இருந்தவளுக்கு நேரம் கடக்க கடக்க அழுகை ஆத்திரமாக மாறியது.
‘எப்படி அவர் அப்படி சொல்லலாம்? நான் இல்லாம வாழ்ந்துடுவாரா அவர்...நான் இல்லாம அவரால மட்டும் சந்தோசமா இருக்க முடியுமா என்ன?தண்டைனையா கொடுக்கிறார்.அதுவும் டைவர்ஸா?’என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டவள் பழைய துறுதுறுப்பான சங்கமித்ராவாக மாறி ‘அவனை இன்னைக்கு சும்மா விடக் கூடாது’ என்று சூளுரைத்து அவனை தேட எண்ணி வெளியே போவதற்கு வீட்டு வாசலில் பார்த்தாள். அவனுடைய பைக் மட்டுமே நின்று கொண்டு இருந்தது.
இப்பொழுது அவள் இருக்கும் மனநிலையில் கால் டாக்ஸிக்காக காத்திருக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. ‘வேறு வழியில்லை பைக்கை எடுத்துக்கிட்டு போய்ட வேண்டியது தான்..எத்தனை முறை அப்பாவோட பைக்கை ஓட்டி இருக்கேன்’ என்று எண்ணியவளை பார்த்து அவள் கட்டி இருக்கும் புடவை நக்கலாக சிரித்தது.
‘உன்கிட்டே லைசன்சே இல்லை...இதுல புடவையைக் கட்டிக்கிட்டு நீ வண்டி ஓட்டப் போறியா?’
‘எல்லாம் சதி பண்ணுதே...’என்று முணுமுணுத்தவள் சட்டென்று மூளையில் மின்னலடிக்க அறையின் உள்ளே சென்று பீரோவை திறந்து பிரபஞ்சனின் காக்கி உடைகளில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள்.
அவனது உடலுக்கு கன கச்சிதமாக பொருந்தி இருந்த உடை அவளுக்கு தொளதொளவென்று இருந்தது.கண்ணாடியில் பார்க்கையில் அவளுக்கே சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.சட்டென்று ஆங்காங்கே சில பல ஊக்குகளை குத்தி  சரி செய்து தலையில் சூடி இருந்த பூவை எல்லாம் எடுத்து வைத்து விட்டு தலையை உயரத் தூக்கி கொண்டையிட்டு அதற்கு மேலே தொப்பியை அழகாய் பொருத்தியவள் வீட்டை பூட்டி விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு பறந்தாள்.
அவளுக்குத் தெரியும்.அவன் இப்பொழுது எங்கே இருப்பான் என்று.போலீஸ் உடையில் இருந்ததால் அவளை யாரும் எந்த சிக்னலிலும் நிறுத்தவில்லை.பைக்கை வேகமாக செலுத்தியவள் சில மணிநேரங்களில் புயலென அந்த கிராமத்து வீட்டை அடைந்தாள்.வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தியவள் எட்டிப் பார்க்க வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.பிரபஞ்சன் அங்கே தான் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டவள் வெகுநாட்களுக்குப் பிறகு சுவரேறி வீட்டின் உள்ளே குதித்தாள்.
வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே சென்றவள் முதலில் எதிர்கொண்டது கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்த பிரபஞ்சனைத் தான்.அவன் நின்ற விதமே அவளுக்கு சொல்லியது , ’தான் இங்கே கண்டிப்பாக வருவோம் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் போல’ என்று எண்ணினாள்.அவன் அப்படி காத்திருப்பான் என்று எதிர்ப்பார்க்காததால் ஒரு நிமிடம் பயந்தவள் நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டாள்.
பிரபஞ்சன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர வாய் திறந்து எதுவுமே பேசவில்லை.அவளை பார்த்து முகம் திருப்பவும் இல்லை.
‘இப்போ எதுவுமே பேசாம அமைதியா இருக்கிறது உங்க முறையா’என்று மனதுக்குள் நொந்தவள் சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“என்னவோ மெசெஜ் அனுப்பி இருந்தீங்களே? எங்கே என் கண்ணைப் பார்த்து நேருக்கு நேரா சொல்லுங்க பார்க்கலாம்”
“...”
“எல்லா பிரச்சினையும் தீர்ந்து போச்சு...இனி சந்தோசமா இருக்கலாம்னு நினைச்சா...அதுல பெட்ரோல் ஊத்தியா கொளுத்த பார்க்கறீங்க...விட மாட்டேன்...”
“என்ன செய்வ?”நிதானமாக கேட்டான் பிரபஞ்சன்.
“நா...நான் எதுவும் செய்வேன்...”
“ கொலை பண்ணிட்டு என்கிட்டே இருந்து அதை மறைச்சு கல்யாணம் செஞ்சு இருக்க...இந்த ஒரு காரணம் போதும் டைவர்ஸ் வாங்க”அவளையே பார்த்தபடி கூற அவள் முகம் இருண்டது.
“நான் செஞ்சது தப்பு தான்...இல்லைன்னு சொன்னேனா...அது நான் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமா இருந்தா நிச்சயம் மறைச்சு இருக்க மாட்டேன்.அதுல அக்காவோட வாழ்க்கையும் இல்ல இருக்கு...அதுவும் அவங்க வீட்டுக்காரர்க்கு இதெல்லாம் தெரிஞ்சா அவளோட குடும்ப வாழ்க்கை கெட்டுப் போய்டுமேன்னு எனக்கு பயம்...அதனால தான் சொல்லலை.கடைசியில் பார்த்தா அவ அவங்க வீட்டுக்காரர் கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டு என்னை இப்படி தொங்கல்ல விட்டுட்டா...”
“அவங்க புத்திசாலி அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு...கட்டுன புருஷன் கிட்டே எதையும் மறைக்க கூடாதுன்னு...” நேரம் பார்த்து குத்திக் காட்டினான் பிரபஞ்சன்.
“நான் முட்டாள்தான்...வடி கட்டுன முட்டாள் தான்..அதனால தான் அப்படி ஒரு காரியத்தை செஞ்சேன்.”
 “என் மேல கடுகளவு காதல் உனக்கு இருந்து இருந்தா கூட அப்படி ஒரு காரியத்தை நீ செஞ்சு இருக்க மாட்ட மித்ரா...நீ செஞ்ச காரியத்தால நம்ம வாழ்க்கை எவ்வளவு தூரம் பாதிக்கும்னு தெரிஞ்சே அந்த காரியத்தை செஞ்சு இருக்கியே...”
“ஆமா..தெரிஞ்சு தான் செஞ்சேன்...ஏன்னா...எனக்கு அப்போ  வாழப் பிடிக்கலை...நீங்க இல்லாம எனக்கு வாழப் பிடிக்கலை...எப்படியும் சாகத் தானே போறோம்.அதுக்கு முன்னாடி அக்காவோட வாழ்க்கையை காப்பாத்தி கொடுக்கலாம்னு நினைச்சேன்.”
“என்னடி சொல்ற...”அவன் கண்கள் வியப்பில் விரிந்தன.
“ஆமா...அந்த ரௌடிங்களோட சண்டை போட்ட பிறகு...உங்களை நான் பார்க்கவே இல்லை...அதனால அவங்க தான் உங்களை ஏதோ பண்ணிட்டாங்கன்னு நினைச்சேன்.நீங்க இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை.தற்கொலை செஞ்சுக்கவும் பயமா இருந்துச்சு.எப்படியும் சாகத் தான் போறோம்.அதுக்கு முன்னாடி அக்கா வாழ்க்கையை காப்பாத்திட்டு சாகலாம்னு நினைச்சேன்”என்று கூறிவிட்டு கதறி அழுதவளை பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான் பிரபஞ்சன்.
“மித்ரா...என் மித்ரா”என்று ஆசையாக தழுவிக் கொண்டவன் அவளது முகமெங்கும் முத்திரைகளை பதித்தான்.
“உன்கிட்ட சொன்னா நீ தாங்க மாட்டன்னு நினைச்சு தான் இத்தனை நாளா உன்கிட்டே சொல்லலை...அன்னிக்கு நைட் எனக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு.கிட்டத்தட்ட ஒரு மாசம் நான் ஹாஸ்பிடல்ல இருந்தேன்.இந்த விஷயம் உங்க அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும்.அவரையும் உன்கிட்டே சொல்ல வேண்டாம்னு நான் தான் தடுத்தேன்”
“நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா...அந்த ரௌடிங்க உங்களை ஏதோ செஞ்சுட்டாங்கன்னு நினைச்சு...”என்று கதறியவளை இழுத்து தன்னுடைய மார்பில் சாய்த்துக் கொண்டான்.
“சாரிடி...என்னோட தப்புதான்...அப்போ இருந்த மனநிலையில் உன்கிட்ட சொல்ல வேணாம்னு நினைச்சேன்...மத்தபடி நீ இவ்வளவு பயந்து போய் இருப்பன்னு எனக்கு தெரியலை...
என்ன தான் பெரிய போலீஸ்காரனா இருந்தாலும் உன் விஷயத்தில் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே என்னுடைய மூளை ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குது.நீ என் மேல வச்சு இருக்கிற காதலில் உறுதியா இருக்கியான்னு தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சு தான் உன்கிட்டே என்னைப் பத்தி எந்த தகவலும் சொல்லாம விட்டேன்.ஆனா கடைசியில் நடந்த குழப்பத்துக்கு எல்லாம் நான் தான் காரணம்...ஒருவேளை உன்கிட்டே அப்பவே என்னைப் பத்தி சொல்லி இருந்தா இவ்வளவு தூரம் நடந்து இருக்காது.”
“இல்லை...தப்பு என் மேல தான்...உங்களை தேடி இருக்கணும்.இல்லைன்னா நீங்க கண்டிப்பா வருவீங்க அப்படின்னு நம்பிக்கையோட காத்து இருந்து இருக்கணும்.இரண்டுமே இல்லாம போனதால தான் இந்தப் பிரச்சினை...”
“ஆமா...இதென்னடி கோலம்..என்னோட யூனிபார்மை போட்டுக்கிட்டு சோளக் கொல்லை பொம்மை மாதிரி வந்து நிற்கிற...”
அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்ததை சொல்லி முடிக்க கோபம் மறந்து, கடகடவென சிரிக்கத் தொடங்கினான் பிரபஞ்சன்.
“ஏன் சிரிக்கறீங்க?”
“மகளே உன்னோட நல்ல நேரம் எந்த சிக்னலிலும் மாட்டாம தப்பிச்சு வந்துட்ட...மாட்டி இருந்த...கஞ்சி தான்...களி தான்”
“உங்களைப் பார்க்கணும்னு எவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்து இருக்கேன்.சிரிக்கவா செய்றீங்க...உங்களை...”என்று கேட்டபடி அவனது நெஞ்சில் சரமாரியாக குத்த அவளது தண்டனையை சந்தோசமாக வாங்கிக் கொண்டவன் அவள் அடித்து ஓய்ந்ததும் மென்மையாக அவளின் அதரங்களை சிறைப் பிடித்தான்.
அவனாகவே விடுவிக்கும் வரை அமைதியாக இருந்தவள் விலகியதும் அவன் கன்னங்களில் மாறி மாறி அறைந்தாள்.
“டைவர்ஸ் தர்றேன்னு சொன்னீங்க இல்ல...என்னை விட்டுட்டு இருந்துடுவீங்களா...”
“இதே வாய் தான் இரண்டு நாள் முன்னே வேற மாதிரி பேசுச்சு...இப்ப நான் சொன்னா மட்டும் உனக்கு கஷ்டமா இருக்கா...ஆரம்பத்தில் இருந்து என்னை எவ்வளவு கஷ்டபடுத்தி இருக்க..அதுக்கு ஒரு சின்ன பனிஷ்மெண்ட்”என்று சொல்லி தோளை குலுக்கியவனை ஆவேசம் வந்தவள் போல அடிக்கத் தொடங்கினாள்.
சற்று நேரம் அவளிடம் அடி வாங்கியவன் ஒரு கட்டத்தில் அவளது கைகள் இரண்டையும் இறுக்கி பிடித்து அவளை தன்னுடைய கரங்களுக்குள் சிறை வைத்தான்.
“இது தான் நான் உனக்கு கொடுக்கிற தண்டனை...இந்த ஜெயில்ல நீ உன்னோட ஆயுசு பூரா இருந்தாகணும்.உனக்கு விடுதலையே கிடையாது”என்றவன் அவளது கண்ணோடு கண் கலக்க விட அவளது கண்களில் பன்னீர் சாரலாய் கண்ணீர் துளிகள்.
“சரி ...சரி...அழுதது போதும்...யூனிபார்மை நீ போட்டு இருக்கிறதை யாராவது பார்த்தா பிரச்சினை ஆகிடும்...சீக்கிரம் கழட்டி வை...நீயே செஞ்சாலும் சரி...இல்லை என்னை உதவிக்கு கூப்பிட்டாலும் சரி”என்று சொல்லியவன் குறும்புடன் தன்னுடைய அக்மார்க் கண் சிமிட்டலை செய்ய மயங்கித் தான் போனாள் சங்கமித்ரா.
“ம்ம்ம்...பார்வை எல்லாம் பலமா இருக்கே...அதெல்லாம் அப்புறம் முதல்ல யூனிபார்மை கழட்டு”அவன் வேலையில் அவன் கண்ணாக இருக்க...
அவன் அசந்த நேரத்தில் அவனை தள்ளி விட்டு ஓடியவள் அவனை பார்த்து கேலியாக பேசினாள்.
“முடிஞ்சா...பிடிச்சு நீங்க சொன்னதை செய்ங்க”என்று அவனுக்கு சவால் விட்டவளைப் பார்த்து அவனது ஆண்மை மீசையை முறுக்கிக் கொண்டு எழ அந்த வீட்டுக்குள் இருவரும் கபடி ஆடத் தயார் ஆனார்கள்.சற்று நேரம் பொறுத்து அவர்கள் இருவருக்கும் மூச்சு வாங்கும் ஒலியும்,சில சில்மிஷ ஒலிகளும் கேட்க அதற்கு மேல் அவர்களின் மகிழ்ச்சியான மன நிலையை வார்த்தைகளாக  வேறு சொல்லத் தான் வேண்டுமா...

 

Post a Comment

புதியது பழையவை