Vanavil Sirpame Tamil Novels Final

 


 

“அடியே மித்ரா...மாப்பிள்ளைக்கு இன்னும் கொஞ்சம் கேசரி வையேன்டி...” மிகப்பெரிய இக்கட்டில் இருந்து குடும்பத்தில் உள்ள எல்லாரையும் காப்பாற்றிய இளைய மருமகனை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார் சாவித்திரி.

வேகமாக தலையை ஆட்டி விட்டு நமுட்டு சிரிப்புடன் ஆறாவது கரண்டி கேசரியை பிரபஞ்சனின் கண் ஜாடையை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவனது இலையில் வைத்து விட்டுத் தான் நிமிர்ந்தாள் சங்கமித்ரா.

‘ராட்சசி...காப்பாத்துவான்னு பார்த்தா...இப்படி கரண்டி கரண்டியா அள்ளி வைக்கிறாளே’என்று உள்ளுக்குள் அவளைத் திட்டித் தீர்த்தவன் முகத்தை கஷ்டப்பட்டு நேராக வைத்துக் கொண்டு சாப்பிட்டான்.

இளைய மருமகனுக்காக விருந்து செய்த சாவித்திரி அசைவத்தில் பட்டையை கிளப்பி இருந்தார்.மட்டன் பிரியாணி,சிக்கன் சிக்ஸ்டி பைவ்,முட்டை,வஞ்சிர மீன் வறுவல்,நண்டு ரசம் என்று வித விதமாக அசத்தி இருந்தார்.ஆனால் கூடவே பிரபஞ்சனுக்கு பிடிக்கும் என்று அவனுக்காக ஸ்பெசலாக ஒரு அண்டா கேசரியையும் செய்து வைத்து விட்டு பக்கத்தில் இருந்து பரிமாறினார்.

“கூச்சப்படாம சாப்பிடுங்க மாப்பிள்ளை” என்று அன்புடன் உபசரிப்பவரை வருத்த விரும்பாமல் அவனும் அரை அண்டா கேசரியை காலி செய்து விட்டான்.இருந்தும் அவர் விட்ட பாடில்லை.

“உங்களுக்கு கேசரி பிடிக்கும்னு எனக்கு நல்லா நியாபகம் இருக்கு மாப்பிள்ளை.அது தான் செஞ்சு வச்சு இருக்கேன்.நீங்க பொண்ணு பார்க்க வந்தப்பவே பிரியமா கேசரி கேட்டீங்களே”
‘அய்யோ...நான் சொன்னது வேற கேசரியை...இதை எப்படி உங்களுக்கு சொல்லிப் புரிய வைப்பேன்’ என்று நொந்து போனான்.கண் முன்னே அறுசுவை விருந்து இருந்தும் முக்கால் வசி வயிற்றை கேசரியால் நிரப்பினான் பிரபஞ்சன்.

எதிரில் அமர்ந்து அவனது முக பாவனைகளையும்,எண்ணவோட்டத்தையும் ஒரு நமுட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த மனைவியை கண்களால் மிரட்டினான்.

‘உள்ளே வாடி...உன்னை கவனிச்சுக்கறேன்’

அவனுடைய மிரட்டலுக்கு எல்லாம் அசந்து போவாளா அவள்...நாக்கை துருத்தி காட்டி விட்டு கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.ஒருவழியாக உண்டு முடித்தவன் மித்ராவின் அறைக்குள் தூங்குவதற்கு சென்று விட சற்று நேரம் பொறுத்து உள்ளே வந்தவளை மான்குட்டியென கைகளில் ஏந்திக் கொண்டான்.

“ஏன்டி...உங்க அம்மா என்னை கேசரி போட்டே கொன்னுடுவாங்க போல...வந்ததில் இருந்து கேசரியா தான் தின்னுக்கிட்டு இருக்கேன். காப்பாத்துடின்னு சொன்னா... கிண்டலா பண்ற...உன்னை இன்னைக்கு என்ன செய்றேன் பார்”அவனின் தண்டனை எப்பொழுதும் போல அவளை சீண்டி சிவக்க செய்ய... சற்று பொறுத்து அவனை விலக்கி நிறுத்தியவள் அவனை வம்புக்கு இழுத்தாள்.



“உங்களுக்கு கேசரி பிடிக்கலேன்னா அம்மா கிட்ட சொல்ல வேண்டியது தானே...அதை விட்டுட்டு என்கிட்டே வம்புக்கு வந்தா என்ன அர்த்தம்”

“எப்படிடி சொல்லுவேன்...எனக்குத் தான் கேசரி ரொம்ம்ம்ப பிடிச்சு இருக்கே...”என்று சரசமாடியவனின் பார்வை அவளுடைய அதரங்களில் பதிய,அவள் முகம் குங்குமமானது.

“அப்ப அனுபவிங்க” என்று சொல்லி விட்டு ஓட முயன்றவளை இடையோடு சேர்த்து அணைத்து தன்னுடைய பிடியில் வைத்துக் கொண்டான்.

“நீ சொல்லாமலே மாமன் அதை தான் செய்வேன்...சொன்ன பிறகு சும்மா இருப்பேனா” என்றவன் அவளுடைய இதழ் நோக்கி குனிந்து தன்னுடைய முத்திரையை மென்மையாக பதித்தான்.

அவன் விடுவித்த பிறகும் கூட அவனை விட்டு விலகாமல் அவன் தோளிலேயே சாய்ந்து இருந்த மனைவியின் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தியவன் பதறித் தான் போனான்.அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிய கண்ணீரைப் பார்த்து.

“ஹே...குஜிலி...என்ன ஆச்சுடி...ஏன் அழற?”

“உங்களுக்கு கொஞ்சம் கூட என்மேலே கோபம் இல்லையா?”

அவளின் கேள்வியில் ஒரு நிமிடம் மௌனமானவன் தன்னை சமாளித்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்.கோபம் ,வருத்தம் எல்லாமே இருந்துச்சு.எப்ப அந்த கொலைகளில் உன்னோட அக்கா சம்பந்தப்பட்டு இருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சுதோ அப்பவே என் கோபம் எல்லாம் போச்சு.அதுக்கு அப்புறம் உன்னிடம் கோபமா பேசினது கூட உனக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைச்சுத் தான்.

காதல்னா என்ன மித்ரா... எல்லாத்தையும் சேர்ந்து பகிர்ந்துக்கணும்.சந்தோசம்,துக்கம்,பயம், எதிர்பார்ப்பு...  இப்படி எல்லாத்தையும்.ஆனா நீ அப்படி இல்லை அப்படிங்கிற வருத்தம் எனக்கு உண்டு.

நீ செஞ்சது தப்பு தான்.என்கிட்டே சொல்லாம இருந்தது அதை விட பெரிய தப்பு தான்.ஆனா இதை எல்லாம் சந்தோசமாவா நீ செஞ்சு இருப்ப...எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப...என் மேல உயிரையே வச்சு இருந்தும் நான் பக்கத்தில் வரும் பொழுதெல்லாம் நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப...

அதுவும் என்மேல வெறுப்பா இருக்கிற மாதிரி நடிக்கும் பொழுதெல்லாம் நீ உள்ளுக்குள்ளே எவ்வளவு துடிச்சு இருப்ப...அதுவே நரக வேதனை மித்ரா...அதுக்கு மேல நானும் தண்டனை கொடுத்து உன்னைக் காயப்படுத்த விரும்பலை.”

“நான் என்ன செஞ்சாலும் உங்களுக்கு கோவமே வராதா?”அவன் முகத்தையே அண்ணாந்து பார்த்து ஏக்கத்துடன் கேட்டவளை முன் எப்பொழுதையும் விட அதிகமாக பிடித்தது அவனுக்கு...

அவள் மூக்கோடு மூக்கு உரசி இல்லை என்பதாய் அவன் தலை அசைக்க நெகிழ்ந்து போனாள் சங்கமித்ரா.கணவனை இன்னும் அதிக காதலுடன் அணைத்துக் கொண்டவள் அவனது அணைப்பில் அமிழ்ந்து இருக்க பிரபஞ்சன் பேசினான்.

“மித்ரா...உன்கிட்டே ஒண்ணு கேட்கட்டுமா...”

“கேளுங்க ....ரஞ்சன்” என்றாள்.

அவள் வெகு அரிதாகத் தான் அப்படி அழைப்பாள் என்பதை அறிந்து வைத்து இருந்தவன் அவளது காதோர முடிகளை ஒதுக்கியபடி அவள் கண்ணோடு கண் கலந்தபடி பேசினான்.

“நம்ம கல்யாணம் நடந்த புதுசில உங்க அம்மா மேல கோபமா இருந்தியே...ஏன்?”

ஒரு நிமிடம் அவளின் உடல் லேசாக விறைப்பு அடைவதை உணர்ந்தவன் அவசரமாக தொடர்ந்து பேசினான்.



“சொல்ல இஷ்டம் இல்லேன்னா வேண்டாம்டா...”

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள் தொடர்ந்து பேசினாள்.

“சொல்ல இஷ்டம் இல்லைன்னு இல்லை...இதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தான் புரியலை...அம்மாவுக்கு எப்பவுமே அக்கா மேல என் மேல இருக்கிற அளவுக்கு பாசம் இருந்தது இல்லை...அதுக்குக் காரணம் அக்கா பார்க்கிறதுக்கு அவங்களோட மாமியார்...அதாவது அப்பாவோட அம்மா மாதிரி ஒரே முக ஜாடை.

கல்யாணம் ஆகி அம்மா இங்கே வந்த புதுசில் பாட்டிக்கும்,அம்மாவுக்கும் ஒத்து வரவே வராது.எப்ப பாரு அப்பாகிட்டே ஏதாவது சொல்லி பிரச்சினையை கிளப்பி விட்டுட்டே இருப்பாங்க...அவங்க இறந்ததுக்கு அப்புறம் தான் அக்கா பிறந்தா...சொந்தக்காரங்க எல்லாரும் இறந்து போன உன் மாமியாரே உனக்கு பொண்ணா பிறந்துட்டாங்கன்னு சொல்லி இருக்காங்க... அம்மாவால அதை ஏத்துக்க முடியலை.அக்கா வளர வளர அவங்க முகம் அப்படியே பாட்டியோட முகம் மாதிரியே இருக்கவும் அம்மா அக்காவை வெறுத்து ஒதுக்க ஆரம்பிச்சாங்க.

உள்ளூரிலேயே எவ்வளவோ பேர் இருந்தும் அக்காவை வெளிநாட்டில் கட்டிக் கொடுத்ததுக்கு காரணம் அம்மா தான்.அக்கா முகத்தைப் பார்க்கக் கூட அவங்க விரும்பலை...”

“இதனால தான் உங்க அம்மா மேல கோபமா இருந்தியா?”

“அம்மாவோட ஒதுக்கம் அக்காவுக்கு தெரியவே இல்லை.சின்ன வயசில இருந்தே அப்படித்தான் அப்படிங்கிறதால அவளுக்கு பழகிடுச்சு போல.ஆனா எனக்கு ஓரளவுக்கு விவரம் தெரிஞ்ச பிறகு அதெல்லாம் நல்லாவே புரிஞ்சது.அந்த பேஸ்புக் அக்கௌண்ட் எல்லாம் அக்காவுக்கு கொஞ்சம் டைம் பாஸ் ஆகுமேன்னு நான் ஆரம்பித்து வைத்த குளறுபடி தான்.

ஒருவேளை அம்மா,அக்காவை புரிஞ்சுகிட்டு இன்னும் கொஞ்சம் சப்போர்ட்டா இருந்து இருந்தா...அப்படி ஒரு நிலை...அதாவது வெளியுலகத்தில் முகம் தெரியாத யாரோ ஒருவரிடம் அக்கா ஆறுதல் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது இல்லையா...

அவங்களுக்கு பிடிக்காத மாமியாரின் முக ஜாடையில் பிறந்ததை தவிர அக்கா என்ன தப்பு செய்தாள்? அந்த கோபம் தான் எனக்கு அம்மா மீது...”


“இன்னமுமா கோவமா இருக்க?”

“இல்லை...அன்னைக்கு அக்கா பிரச்சினை தெரிய வந்ததில் இருந்தே அம்மாவுக்கும் உள்ளுக்குள்ளே குற்றவுணர்ச்சி இருந்து இருக்கும் போல...அதனால அதுக்கு அப்புறம் அக்காகிட்டே சகஜமா பேச முயற்சி செய்றாங்க...நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு அதுக்கு வழி ஏற்படுத்தி தருவேன்”

“இப்படி ஊரில் எல்லாருக்கும் என்ன வேணும்னு பார்த்து பார்த்து செய்ற...மாமனை மட்டும் கண்டுக்கவே மாட்டேங்குற...”கன்னத்தோடு கன்னம் உரசியபடி அவள் காதில் அவன் சொல்ல அவளது உடல் சிலிர்த்தது.

“ஆமாமா..கண்டுக்கிறதே இல்லை... பகல்,ராத்திரின்னு கணக்கில்லாம வட்டி...வட்டிக்கு வட்டி...வட்டி போட்ட குட்டின்னு பொய் கணக்கா சொல்லி என்னை ஏமாத்தி எல்லாம் சாதிச்சுக்கறீங்களே... இன்னும் என்ன வேணுமாம்?”அவன் கைகளில் குழைந்த படியே கன்னம் சிவக்க முணுமுணுத்தவளை இன்னும் தனக்குள் பொதித்துக் கொண்டான் பிரபஞ்சன்.

“எனக்கு என்ன வேணும்னு நான் சொல்லித் தான் உனக்கு தெரியணுமா...”என்று பேசியபடியே அவளுடைய அதரங்களை இந்த முறை சற்று அழுத்தமாகவே பற்றியவனின் தேவையை உணர்ந்து அவளும் அவனுக்கு இசைந்து கொடுத்தாள்.

சற்று நேரம் பொறுத்து விலகியவன் மேலும் அவளை இழுத்துக் கொண்டு கட்டிலின் அருகே நகர முனைய , அவன் அடுத்து என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறான் என்பது புரிய வேகமாக அவனை தள்ளி விட்டு கதவிற்கு அருகில் போய் நின்று கொண்டாள்.

“மாமா...ஒழுங்கா அங்கேயே நில்லுங்க...ஒரு நாளைக்கு எத்தனை தடவை தான் குளிக்கிறது?”

“எத்தனை தடவை வேணும்னா குளிக்கலாம்.இங்கே ஒண்ணும் தண்ணீர் பஞ்சம் வராது...கிட்டே வாடி குஜிலி”என்று பேசியபடியே அவளை தாவிப் பிடித்தவன், அடுத்து அவள் சொன்ன வார்த்தையில் பதறிக் கொண்டு அவளை விடுவித்தான்.

“அம்மா...உங்க மாப்பிள்ளைக்கு இன்னும் கொஞ்சம் கேசரி வேணுமாம்”என்று அவள் கத்திய கத்தில் அரண்டு போனவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு பரிதாபமாக விழித்தான்.

“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடி...கட்டுன புருஷனை இப்படியா பழி வாங்குவ?”

“சொல் பேச்சு கேட்கலைனா அப்படித் தான்...ஒழுங்கா அடங்கி ஒடுங்கி ஒரு இடத்தில் உட்காருங்க...இல்லைன்னா எங்க அம்மாவை கேசரி எடுத்துட்டு வர சொல்லிடுவேன்”ஒற்றை விரல் உயர்த்தி அவள் எச்சரிக்க

“சரி...சரி..நான் சமத்தா இருக்கேன்”என்று அவன் உடனடியாக ஒத்துக்கொள்ள அவளது மூளையில் அபாய மணி ஒலிக்கும் முன் காலம் கடந்து விட்டிருந்தது.

அவளை அசால்ட்டாக கைகளில் அள்ளியவன் அவள் பேச எண்ணி வாயைத் திறக்கும் முன் அதை தடுத்து நிறுத்தினான்.தன்னுடைய முரட்டுத் தனமான இதழொற்றலால்...

“இது தான் சமத்தா இருக்கிறதா...”அவனை விலக்க முயற்சித்தபடியே அவள் கேட்க...

“ஆமா..புதுசா கல்யாணம் ஆன புருஷன் பொண்டாட்டிகிட்டே எப்படி நடந்து நல்ல பேர் வாங்கணுமோ அதை தான் நானும் செய்யறேன்.இப்படி எல்லாம் இல்லைன்னா அப்புறம் நாளைக்கு வரலாறு என்னோட வீரத்தைப் பத்தி தப்பா பேசாது?” என்று குறும்புடன் கேட்டவன் மீண்டும் தன்னுடைய வேலையில் கவனமாக கணவனின் கைகளில் உருகிக் கரையத் தொடங்கினாள் சங்கமித்ரா.

உண்மை நேசம் இருந்து விட்டால் எது வந்த போதும் தடைகளைத் தாண்டி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலர்ந்தே தீரும்.இப்பொழுது இவர்கள் இருவரின் வாழ்வில் மலர்ந்ததைப் போல...

***சுபம்***

Post a Comment

புதியது பழையவை