திருமணத்திற்கு வந்திருந்த சொந்தங்கள் அந்த பழங்கால கிராமத்து
வீட்டில் முற்றத்தில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்க, வேஷ்டியின் வலது புற
நுனியை ஒற்றை விரலால் அவன் பிடித்திருந்த விதம் கன்னியர்களின் நெஞ்சத்தை கிறங்க
செய்யும் விதமாக இருந்தது.மற்ற பெண்களின் புறம் திரும்பாது தன்னுடைய கம்பீரமான
நடையுடன் கடந்து சென்ற பார்த்திபனை அங்கிருந்த பல பேர் பொறாமையுடன் பார்த்துக்
கொண்டிருந்தனர்.
அந்த வயதிற்கே உரிய உரமேறிய நெஞ்சமும்,வலுவேறிய தோள்களும்
பார்த்தவுடன் கிறங்கடிக்கும் அவனது வசீகரிக்கும் பார்வையும் பார்த்து ஊருக்குள்
நிறைய கன்னிப்பெண்கள் அவன் மீது பித்தாக இருந்தனர்.பின்னே சும்மாவா?யாராலும்
அசைக்க முடியாதவனாக அல்லவா அவன் இருந்தான்.
பார்த்திபன் அந்த ஊரிலேயே பெரிய குடும்பத்தின் மூத்த
பிள்ளை...விவசாயத் துறையில் பட்டம் பெற்றவன்.சொந்த தொழிலாக விவசாய நிலங்களே
அளவுக்கு அதிகமாக இருக்க அதை மட்டுமே கவனிக்காமல் தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு
பால் பண்ணை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறான்.ஆரம்பத்தில் வெறும்
பாலுக்காக மட்டும் தொடங்கப்பட்ட அவனது நிறுவனம் இப்பொழுது தயிர், மோர், நெய்,
வெண்ணெய்,பன்னீர்,பால் பவுடர் என்று பல மடங்காக பெருகி இருந்தது.
ஏகப்பட்ட சொத்துக்களுக்கு ஒரே ஆண் வாரிசு.அவன் தந்தை ராஜன்
எப்பொழுதும் அம்மா பிள்ளை தான்...தொழில் விஷயத்தில் மெய்யாத்தாவின் வார்த்தைகளை
மீறி அவர் நடந்தது இல்லை.ஆனால் பார்த்திபன் என்ன தான் பாட்டிக்கு அடங்கிய பேரனாக
இருந்தாலும் அவன் முடிவு செய்து விட்டால் எப்பாடுபட்டாவது அதை நடத்திக் காட்டியே
தீருவான்.மெய்யாத்தாவிற்கு அவனுடைய செயல்களால் இதுவரை அவன் மீது கோபமே வந்தது
இல்லை.பேரன் மீது அத்தனை பாசம் அவருக்கு.
யாருக்காகவும்,எதற்காகவும் இறங்கி வராதவர் ஏதேனும் ஒரு விஷயத்தை
பொறுத்துக் கொள்கிறார் என்றால் அதற்குக் காரணம் பார்த்திபனாகவே இருக்க முடியும்.
அவனுக்கு பின்னர் இரண்டு பெண் குழந்தைகள் சுகன்யா,சுபத்ரா...மூத்தவள்
சுகன்யாவுக்கு பாஸ்கருடன் நான்கு வருடங்கள் முன்பே காதல் திருமணம் பெரும் போராட்டங்களுக்கு
பிறகு வீட்டாரின் ஒப்புதலுடன் நடைபெற்றது.பாஸ்கர்,சுகன்யாவின் காதலுக்கு சாதிப்
பிரச்சினை காரணம் இல்லை.அவர்களது திருமணத்திற்கு தடையாக இருந்தது அவர்கள்
இருவருக்குள்ளும் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வே...
சுகன்யாவும்,பாஸ்கரும் தாங்கள் காதலில் உறுதியாக இருக்க வீட்டாரும் வேறு
வழியின்றி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.திருமணம் முடிந்த இந்த நான்கு
ஆண்டுகளில் பாஸ்கரின் நல்ல குணத்தையும், சுகன்யாவின் மீது வைத்திருக்கும்
நேசத்தையும் புரிந்து கொண்டவர்கள் அவரை தங்கத் தட்டில் வைத்து தாங்கத்
தொடங்கினார்கள்.
இரண்டாவது தங்கை சுபத்ராவுக்கு தான் நாளை காலையில் திருமணம். அவளுக்கு
சொந்தத்திலேயே திருமணம் பேசி முடிவு செய்து இருக்கிறார்கள்.சொந்த மாமா மகனையே
சுபத்ராவுக்கு முடிவு செய்து விட கல்லூரி படிப்பு முடிந்ததுமே அவளது திருமணத்தை
நடத்தி விட ஏற்கனவே செய்த முடிவின் படி நாளை திருமணமும் நடக்கப் போகிறது.
அடுத்ததாக பார்த்திபனின் திருமணத்தைத் தான் அந்த வட்டாரமே ஆவலுடன்
எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறது.ஆனால் அவனோ ஏற்கனவே ஒரு கன்னியின் வலையில் விழுந்து விட்டான் என்பது ஊரில் உள்ள
மற்றவர்களுக்கு தெரியாதே...எப்படியாவது தங்கள் பெண்ணை அவனுக்கு மணம் முடித்துக்
கொடுத்து விட வேண்டும் என்று அந்த ஊர் பெரிய மனிதர்கள் காத்துக் கொண்டு இருக்க
அவனோ ஒரு மான் விழியாளிடம் நான்கு வருடத்திற்கு முன்பே தன்னுடைய மனதை தொலைத்து
விட்டிருந்தான்.
அடுத்த நாள் திருமணம் என்பதால் அதற்குப் பிறகு நிற்பதற்கு கூட நேரம்
இல்லாமல் அவன் ஓடிக் கொண்டிருக்க அன்று முழுவதும் அவனால் அவளைப் பார்க்கவே
முடியவில்லை.அவளும் முடிந்த அளவு அவன் கண்ணெதிரில் வருவதை தவிர்த்து விட அவளின்
தரிசனம் அவனுக்கு கிடைக்கவேயில்லை.
இரவு பெண் அழைப்பு முடிந்ததும் சுபத்ராவுடன் மற்ற நெருங்கிய
சொந்தங்கள் மண்டபத்திற்கு சென்று விட,ஏனோ அவர்களோடு செல்ல மனமில்லாமல் வீட்டுக்கு
திரும்பி விட்டாள் அவள்.அவர்களோடு தங்க நேரும் பொழுது அவர்களில் யாராவது ஒருவர்
பழங்கதைகளை பேசினால் அவளால் அதை தாங்க முடியாதே.
அவளின் எண்ணம் புரிந்ததாலோ என்னவோ சுகன்யாவும்,பாஸ்கரனும் அவளை
வற்புறுத்தவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவள் இந்த கல்யாணத்திற்கு வந்ததே
பெரிது...தன்னுடைய நான்கு வருட பிடிவாதத்தை முதல் முறை தளர்த்தி இருக்கிறாள்.எனவே
அவள் மனம் வருத்தப்படும்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்று எண்ணியவர்கள் அவள்
போக்கிலேயே அவளை விட்டு விட்டனர்.
அவளுடன் துணைக்கு வருவதாக கூறிய சுகன்யாவை மறுத்து விட்டு தான்
மட்டுமாக வீட்டுக்கு வந்து விட்டாள் பௌர்ணமி.அன்றைய இரவுப் பொழுதில் விருந்தினர்
அனைவரும் உறங்கி விட அவளுக்குத் தான் உறக்கமே வரவில்லை...
அவளுக்கென்று தனியாக அறை ஒதுக்கப்பட்டு இருந்த போதிலும் அங்கே அவளால் நிம்மதியாக
உறங்க முடியவில்லை.நான்கு வருடங்களுக்கு முன் அதே வீட்டில் நடந்த சம்பவங்கள்
அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்ட மனதின் அழுத்தம் தாள முடியாமல்
அங்கிருந்து வெளியேறி மொட்டை மாடியில் அடைக்கலமானாள்.
விடிந்தால் திருமணம் என்ற நிலையில் வீட்டில் நள்ளிரவு நேரத்தை தாண்டிய
பிறகும் கூட வேலைகள் நடந்து கொண்டு இருக்க,இந்த நேரத்தில் வெளியாட்கள் பார்வையில்
பட வேண்டாம் என்று எண்ணி மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தாள் அவள்.
வானில் அடுத்த நாள் பௌர்ணமி என்பதன் அறிகுறியாக அழகாக நிலா காட்சி
அளிக்க அந்தக் காட்சியில் லயித்து இருந்தவள் தனக்கு பின்னாலேயே வந்து நின்று தன்னை
ரசித்தவனை அறியாமல் போனாள்.
“பொம்மிம்மா”அர்த்த ஜாம வேளையில் கரகரப்புடன் ஒலித்த அந்த குரல்
யாருடையது என்று அவளுக்குத் தெரியாதா என்ன?
சட்டென்று வேகமாக திரும்பியவள் அவளை மிக நெருங்கி நின்று கொண்டு
இருந்த பார்த்திபனைக் கண்டதும் வேகமாக இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
பார்த்திபனிடம் பேசப் பிடிக்காமல் அங்கிருந்து வேகமாக அவள் செல்ல முயல
கரங்களால் அவளுக்கு அணை கட்டினான் பார்த்திபன்.
“வழி விடுங்க”அவள் குரலில் மிடுக்கு இருந்தது.
“தூங்கலையா நீ...”
“என்னைக் கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்குக் கிடையாது...ஒழுங்கா
வழியை விடுங்க...”
“வழி விடாம ...வேற என்ன செய்யுறது? எனக்கு உன்னை என்னென்னவோ
செய்யணும்னு ஆசை தான்...ஆனா அதுக்கு நான் எதிர்ப்பார்க்கிற அந்த ஒரு வார்த்தை
இன்னும் உன்னோட வாயில இருந்து வரலையே... ஹ்ம்ம்...” என்றான் ஏக்கமாக...
“கண்டபடி உளறாதீங்க...”
“சரி உளறலை...தெளிவாவே பேசறேன்...உன்கிட்டே நான் கேட்ட கேள்விக்கு
நாலு வருசமா எனக்கு பதில் சொல்லாம இருக்க நீ?”
“ம்ச்..மடத்தனமான கேள்வி”
“ஹா ஹா..என்னோட கேள்விக்கு பதில் சொல்லாம தப்பிக்கத் தானே நாலு வருசமா
இந்தப் பக்கமே வராம இருந்த...”அவளை சீண்டி விட வேண்டும் எண்ணி அவன் பேச,
சரேலென்று இருட்டிலும் கூட கோபத்துடன் விழியுயர்த்திப் பார்த்த அவளது
கண்களில் லேசான கண்ணீரின் சாயலைக் கண்டதும் அவனுடைய நேசம் கொண்ட நெஞ்சம்
குத்தீட்டியாக மாறி குத்தியது.
“பௌர்ணமி”கெஞ்சுதலாக அழைத்தவன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க
ஒற்றை கையை உயர்த்தி அங்கேயே நிற்கும்படி ஆணையிட்டாள் அவள்.
“என் பேரை சொல்லவோ...என் கூட பேசவோ உங்களுக்கு எந்த உரிமையும்
இல்லை...தகுதியும் இல்லை...”என்று சொன்னவள் வேகமாக அவளை கடந்து செல்ல முயல அவளின்
கையை பிடித்து இழுத்து தனக்கு முன்னே நிற்க வைத்தான் அவன்.
அவன் மனம் கோபத்தில் கனன்று கொண்டு இருந்தாலும் நொடியில் அதை சமாளித்துக்
கொண்டு அவளிடம் பேசத் தொடங்கினான் பார்த்திபன்.
“நான் செஞ்சது தப்பு தான் பொம்மிம்மா...அதை மன்னிக்கக் கூடாதா?”
“சாகும் பொழுது மறப்பேன்”என்றாள் வெறுப்புடன்
“பொம்மிம்மா...”என்று பதறியவன் அவளது வாயை தன்னுடைய கரங்களால்
மூட,வேகமாக தட்டி விட்டாள் பௌர்ணமி.
“என்னைத் தொட்டுப் பேசும் வேலை எல்லாம் வேண்டாம்...இன்னமும் நான்
ஒண்ணும் குழந்தை இல்லை..உங்க நடிப்பை நம்பி ஏமாந்து போக...”
“நான் நடிக்கவில்லை பொம்மி...இப்ப மட்டும் இல்லை..எப்பவுமே...”
“ஆமா ..ஆமா...உண்மையை உணர்ந்து பேசுறவர் பேச்சு தானே அதெல்லாம்...”
“நான் அப்படி பேசினது தப்பு தான் பொம்மி..அதுக்காக காலம் பூரா என்னை
வெறுத்து ஒதுக்கிடுவியா”
“நீங்க யார்...உங்களை எதுக்கு நான் வெறுத்து ஒதுக்கணும்...நான்
என்னுடைய அண்ணியின் தங்கை கல்யாணத்துக்கு வந்தேன்...அது முடிஞ்சதும் திரும்பிப்
போகப் போறேன்...அவ்வளவு தான்..மத்தபடி இங்கே நான் வந்ததுக்கு வேற காரணம் எதுவும்
இல்லை”
“அவ்வளவு சுலபமா என்னை விட்டுட்டு போயிட முடியுமா பொம்மி உன்னால...”
“ஏன் முடியாது?...நீங்க யார் எனக்கு...என் வாழ்க்கையில் உங்களுக்குனு
எந்த இடமும் இல்லை..”என்று பேசிக் கொண்டே போனவளின் இடையை இழுத்து தன்னருகே கொண்டு
வந்தவன் அவளின் முகத்திற்கு மிக அருகில் தன்னுடைய முகத்தை வைத்தவாறு ஆத்திரத்துடன்
பேசினான்.
“வேண்டாம்டி...கோபத்தில் வார்த்தையை விட்டுட்டு நான் ஒருத்தன் படுற
பாடு போதாதா? நீயும் அதே தப்பை செய்யாதே...”
அவனிடமிருந்து விலக முயற்சி செய்தவளின் கோபத்தைக் கண்டு அவனுக்கு கோபம்
வருவதற்குப் பதிலாக காதலே வந்து தொலைத்தது. ஒற்றைக் கையால் அவளது இடையை வளைத்தவன்
மறுகரத்தால் அவளது முகத்தின் அழகை விரல்களால் ரசிக்கத் தொடங்கினான்.
அவனின் செய்கையில் கோபம் மாறி அதிர்ச்சி வந்தது அவளுக்கு.
‘என்ன செய்கிறான் இவன்...இந்த நேரத்தில் இப்படி தனியாக வந்து இவனிடம்
மாட்டிக் கொண்டோமே’என்று எண்ணி அவள் பதற அவனது கைகள் இப்பொழுது மூக்கிலிருந்து
கீழிறங்கி அவளது உதட்டை நோக்கி பயணித்தது. அவள் உடலில் ஓடிய நடுக்கத்தை அவனால் உணர
முடிந்தாலும் கரங்களை விலக்கிக் கொள்ளவில்லை அவன்.
பயத்தில் துடித்த அவளது அதரங்களில் அவனது பார்வை சற்று அதிக நேரம்
படிய பெண்ணவளின் உடலோ கூசி சிலிர்த்தது.கண்களை இறுக மூடிக் கொண்டவளின் மனதில் அவனை
எதிர்க்கக் வேண்டும் என்ற நினைவு துளியும் வராதது கண்டு அவன் முகத்தில் ஒரு
வெற்றிப் புன்னகை தோன்றியது.
‘அந்நிய ஆடவனை எந்தப் பெண் இப்படி நெருங்க அனுமதிப்பாள்?அவள் மனதில்
நான் இருக்கிறேன் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்’ என்று எண்ணியவன்
அவளுடைய மூக்கோடு தன்னுடைய மூக்கை உரச,ஏதோ கனவிலிருந்து விழிப்பதைப் போல
திருதிருவென முழித்தவள் கண்களில் கேலிச் சிரிப்புடன் நின்றவனைப் பார்த்ததும் உடல்
தீயாக கொதிக்க தன்னுடைய மொத்த பலம் அனைத்தையும் திரட்டி அவனை தள்ளி விட்டு மான்
குட்டியென ஓடி மறைந்தாள் பௌர்ணமி.
நாளை சுபத்ராவின் திருமணம் முடிந்ததுமே இதற்கு ஒரு முடிவு கட்டியாக
வேண்டும் என்று எண்ணியவன் வேகமாக கீழே சென்று விட்டான்.
கருத்துரையிடுக