அத்தியாயம் 23
வீட்டிற்கு
போனதும் இன்னைக்கு என்ன செய்து வைக்கப் போகிறானோ என்று பயத்துடன் அமர்ந்து
இருந்தான் வசந்த். எப்படியும் இவன் கிளம்பி வர குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்ற
எண்ணம் தோன்ற வீட்டு ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தான். அவனது எண்ணத்தை
பொய்யாக்கும் விதமாக சில நொடிகளிலேயே கிளம்பி வந்து நின்ற ஹரிஹரனை பார்த்து வாயை
பிளந்து விட்டான் வசந்த்.
அச்சு அசல் ஒரு
ரேமாண்ட்ஸ் மாடலை போல நின்று கொண்டு இருந்தான் ஹரிஹரன். கருப்பு நிற கோட் சூட்டும், ரேபான்
கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தவனின் தோற்றம் நிச்சயம் ஒரு கதாநாயகனை போல தான்
இருந்தது.
ஹரிஹரன்
எப்பொழுதும் அவன் உடை விஷயத்தில் கவனமாக இருப்பான். அவனது உடைகள் ஒருபொழுதும்
ஆடம்பரமாக இருந்தது கிடையாது. கோட் சூட்டை அணிய வேண்டிய சூழ்நிலை வந்தால் அதை
இயல்பாக மறுத்து விடுவான். அப்படிப்பட்டவன் இன்று இப்படி வந்து நிற்கவும் வசந்த்
பேச்சையே மறந்தது போல அமர்ந்து இருந்தான்.
“கிளம்பலாமா வசந்த்” என்று தோளை தட்டிய பிறகு தான் சுய உணர்வுக்கே வந்தான்
வசந்த்.
“டேய் என்னடா இப்படி அழிச்சாட்டியம் பண்ணுற? ஒண்ணு ஒரு மணி
நேரம் டிரஸ் மாத்தி உயிரை எடுக்குற... இல்லேன்னா இப்படி ஐந்தே நிமிடத்தில்
அட்டகாசமாய் கிளம்பி வந்து நிற்கிற... உன் மனசில் என்ன தான்டா நினைச்சுக்கிட்டு
இருக்க?”
“என் வெண்ணிலாவை தான்” தயங்காமல் பதில் சொன்னான் ஹரிஹரன்.
“அடேய்! அடேய்!... நான் டாக்டர்டா என்னையே கிறுக்கன்
ஆக்கிடுவ போல இருக்கே... அது தான் எனக்கு தெரியுமே... இப்ப எதுக்கு இப்படி கிளம்பி
வந்து இருக்க? உனக்கு தான்
கோட் போட எல்லாம் பிடிக்காதே. அப்புறம் எதுக்கு இந்த கோலம்?... நீ எப்பவும் இந்த
மாதிரி பார்மலா டிரஸ் பண்ண மாட்டியேடா? ஆமா இது என்னடா உன்னோட மீசையை வேற ட்ரிம் பண்ணி வச்சு
இருக்க? இந்த கோலத்தில்
பார்த்தா இது நீ தான்னு சிவா கூட ஒத்துக்கொள்ள மாட்டான்”
“அதுக்குத்தான் இது”
“எதுக்கு”
“என்னை பார்த்தால் அடையாளம் தெரியக்கூடாது”
“டேய் இது என்னடா புது புரளியா இருக்கு... மீசையை லேசா
ட்ரிம் பண்ணி கோட் சூட் போட்டா உன்னை எங்களுக்கு அடையாளம் தெரியாதா... அதெல்லாம்
ஈஸியா அடையாளம் கண்டுபிடிச்சுவோம்”
“அது தான் எனக்கும் வேணும்” என்று கூறிய நண்பனை பார்த்த வசந்த் ‘ஒருவேளை நமக்கு தான்
பைத்தியம் பிடிச்சு இருக்கோ’ என்ற ரீதியில் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான்.
“என்னடா ஏதாவது புரியுதா?”
“எங்க ஆயா சத்தியமா புரியலைடா. ஏன்டா இப்படி மண்டை காய
விடுற... என்ன தான் உன் மனசில நினைச்சுக்கிட்டு இருக்க? மறுபடி வெண்ணிலாவை தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்ன
மகனே பிரண்டுன்னு கூட பார்க்க மாட்டேன். செத்து போன உங்க பாட்டி எல்லாம் சேர்த்து
வச்சு திட்டித் தீர்த்துடுவேன்”
“ஏன்டா இவ்வளவு கோபம்” சிரித்துக் கொண்டே கேட்டான் ஹரிஹரன்.
“பின்னே என்னடா உனக்கு வைத்தியம் பார்க்க நான் வந்தா நீ
எனக்கு வைத்தியம் பார்க்கிற நிலைமைக்கு கொண்டு போய்டுவ போலயே” நொந்து போனான்
வசந்த்.
“நான் தெளிவா தான் இருக்கிறேன் வசந்த். வெண்ணிலா என்னை
கிட்டத்தட்ட ஐஞ்சு வருஷம் கழிச்சு பார்க்கப் போகிறாள் இல்லையா?”
“ஆமாம் அதுக்கென்ன... இப்படி சொல்லித்தானே அங்கே ஊர்லயும்
ஒரு கூத்து அடிச்ச... மறுபடியும் அதே கதை தானே சொல்லப் போற” அலுப்புடன்
கேட்டான் வசந்த்.
“இல்லை வசந்த்... அப்போ இருந்த நிலைமை வேற... இப்போ இருக்கிற
நிலைமை வேற... இன்னும் தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ... என்கூட நல்லா பழகின
எல்லாருக்கும் நான் எப்படி எந்த உடையில் இருந்தாலும் அது நான் தான் என்று தெரியும்
இல்லையா?”
“ஆமா”
“அப்ப வெண்ணிலாவுக்கு என் மேல் கொஞ்சமாவது நேசம் இருந்தால்
அவளுக்கு என் முகம் நினைவு இருக்கும் இல்லையா?”
“அட... ஆமாம்டா” ஆர்வமாக சொன்னான் வசந்த்.
“அப்படின்னா நான் என்னுடைய தோற்றத்தை எப்படி மாற்றி
இருந்தாலும் என்னுடைய உருவத்தையும், குரலையும் வைத்து அவள் என்னை கண்டு கொள்வாள் இல்லையா”
“ஆமா”
“அதுக்குத்தான் இந்த சின்ன மாற்றம்”
“ஒருவேளை அவள் உன்னை கண்டுபிடிக்கவில்லை எனில் என்ன செய்வாய்?”
“அதுக்கு ஆயிரம் வழி இருக்கு... இது முதல் வழி... சரி
பேசிப்பேசியே நேரத்தை கடத்தாம சீக்கிரம் போகணும். சரி நீ இங்கேயே இரு. நான்
கிளம்பி போய்ட்டு வரேன்”
“ஹரி நானும் கூட வரேன்டா”
“வேண்டாம் வசந்த். நானும் சிவாவும் கம்பெனி பார்ட்னர்ஸ். நீ
அங்கே வந்தால், நீ யார் என்ன
என்று தேவை இல்லாத கேள்விகள் எல்லாம் வரும். அதனால் நீ அங்கே வரவேண்டாம்” என்று சொன்னவன்
வசந்தின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அங்கிருந்து
நேராக கிளம்பி சிவாவையும் அழைத்துக் கொண்டு இருவரும் ஷைன் கன்சல்டன்சி ஆபீசை
அடைந்தனர். காரில் வரும் போது சிவா ஹரிஹரனின் உடை மாற்றத்தை பற்றி கேள்வியாக கேட்க,
ஒற்றை பார்வையில் அவனை அடக்கி விட்டான்.
அந்த ஆபிஸை
அடைந்ததும் தங்கள் நிறுவனத்தின் கார்டை கொடுத்து விட்டு எம்டியை பார்க்க வேண்டும்
என்று சொல்லி ரிசெப்ஷனில் அமர்ந்து கொண்டனர்.
அங்கே
காத்திருந்த சில நிமிடங்களில் ஹரிஹரனின் இதயத்துடிப்பு ஏகத்திற்கும் எகிறியது.
’அவள் என்னை அடையாளம் கண்டுகொள்வாளா?’ என்று ஆயிரத்து ஓராவது முறையாக அவனையே அவன் கேட்டுக்
கொண்டான்.
சற்று நேரம்
பொறுத்து அவர்களுக்கு அழைப்பு வரவும் மேனேஜிங் டைரக்டர் என்று போர்டு மாட்டப்பட்டு
இருந்த அறையின் உள்ளே இருவரும் சென்று நாசுக்காக கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றனர்.
ஹரிஹரனின் இதயம் உச்ச கதியில் ஸ்வரம் தவறி குதித்துக் கொண்டு இருந்தது.
கண்களில்
அணிந்து இருந்த கருப்பு நிற கூலிங்கிளாஸ் அவனுடைய கண்களின் பரிதவிப்பை வெளியில்
தெரியாதவண்ணம் அவனை காத்தது. உள்ளம் எகிறித் துடிக்க கதவை திறந்து கொண்டு
நுழைந்தவனின் கணிப்பை பொய்யாக்காமல் அங்கே இருந்த சேரில் நடுநாயகமாக அமர்ந்து
கூர்மையான பார்வையால் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா.
கருத்துரையிடுக