அத்தியாயம் 24
தன்னைத்தானே
அடக்கிக் கொள்ள ஹரிஹரன் பெருமுயற்சி செய்ய வேண்டியதாக இருந்தது.யார் அவனுடைய
கனவில் வந்து தினம் தினம் அவனை தொல்லை செய்தாளோ அந்த ராட்சசி இப்பொழுது அவன்
எதிரில்.ஓடிப் போய் அவளை கைகளில் அள்ளிக் கொள்ள வேண்டும் என்று துடித்த கைகளை
கட்டுப் படுத்த பெருமுயற்சி செய்து கொண்டு இருந்தான் ஹரிஹரன்.
வெண்ணிலாவிடம்
இத்தனை வருடங்களில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தை ஹரிஹரனால் தெளிவாக உணர
முடிந்தது. அவளுடைய பார்வையில் தீர்க்கமும் தெளிவும் கூடி இருந்தது. ஒன்றும் அறியா
விளையாட்டு பெண் போல இருந்தவளின் முகத்தில் இப்பொழுது அறிவுச் சுடர் கொழுந்து
விட்டு எரிந்தது. 
முன்பு பாவாடை
தாவணியில் இருந்தவள் இப்பொழுது நவநாகரீக மங்கையாக இருந்தாள். ரோஸ் நிற டாப்பும், வெள்ளை நிற லாங்
ஸ்கர்ட்டும் அணிந்து இருந்தாள். தலையை கர்ல் செய்து விரித்து விட்டு இருந்தாள்.
அளவான மேக்கப். ஏற்கனவே ஹரிஹரன் வீழ்ந்து கிடக்கும் அந்த விழியில் மஸ்காரா போட்டு
இன்னும் அதிக அழகோடு இருந்தாள் வெண்ணிலா. 
இருவரும் உள்ளே
நுழைந்ததும் அவளது பார்வை முதலில் படிந்தது சிவாவின் மீது தான். அருகில் இருந்தவனை
அவள் கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. சிவாவைத் தான் அவள் தன்னுடைய பார்வையால் அளந்து
கொண்டு இருந்தாள். ஆனால் வெளியே தெரியாதவண்ணம் மிக கவனத்துடன். அவளுடைய பார்வையில்
சீற்றம் இருந்ததை ஹரிஹரன் உள்ளுக்குள் குறித்துக் கொண்டான். மெதுவாக தொண்டையை
கனைத்து தானும் அங்கே இருப்பதை வெண்ணிலாவிற்கு குறிப்பால் உணர்த்தினான். 
அப்பொழுது தான்
அவன் இருப்பதையே கவனித்தவள் தன்னுடைய பார்வையை மெல்ல சிவாவிடம் இருந்து திருப்பி
இருவரையும் பொதுவாக பார்த்து வரவேற்பாக தலை அசைத்தாள்.தன்னை அவள் உணர்ந்து
கொண்டாளா என்று ஹரிஹரன் துளைக்கும் பார்வையுடன் அவளைப் பார்க்க அவளோ முகத்தில்
எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் கல்லென இறுகிப் போய் அமர்ந்து இருந்தாள்.  ஹரிஹரன் பேச முயலும் போது அவனை  முந்திக்கொண்டு சிவா முதலில் பேச ஆரம்பித்தான். 
“ஹலோ... நாங்க ஹோட்டல் சிவால இருந்து வந்து இருக்கோம்” என்று
பேசியபடியே அவளது கையைப் பற்றி குலுக்க முனைய,
அலட்சியமான ஒரு
தலை சிலுப்பலால் அவனது கை குலுக்கலை புறக்கணித்து விட்டு , அவனது பேச்சை
இடைமறித்து வெண்ணிலா பேசலானாள்.
 “உங்க கம்பெனிக்கு நான் இன்னைக்கு எந்த
அப்பாயின்மென்ட்டும் கொடுத்த மாதிரி நியாபகம் இல்லையே?” அசால்ட்டாக தோளை குலுக்கியபடி சொன்னாள் வெண்ணிலா. 
‘ஆஹா முதல்
பால்லயே சிக்ஸர் அடிக்கறாளே’ என்று உள்ளுக்குள் சிலாகித்தவன், “ரொம்ப நல்லா
இருக்கு உங்க கம்பெனியில் கிளையன்ட்க்கு நீங்கள் தரும் மரியாதை... நாங்க உங்களை
பார்க்க வரணும்னா உங்ககிட்ட முன்னாடியே சொல்லி அனுமதி வாங்கிட்டு தான் வரணுமா என்ன? 
எங்களுக்கு
எப்போ தோணுதோ அப்போ எல்லாம் நாங்க வருவோம்... பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை...
இது கூட தெரியாமல் நீங்க என்ன தான் தொழில் செய்யறீங்களோ? இதுக்கு தான் சின்ன பெண்களை நம்பி தொழிலை ஒப்படைக்க கூடாது
என்று சொல்வது” கேலியாக உதட்டை
பிதுக்கினான் ஹரிஹரன். 
அப்பொழுது தான்
ஹரிஹரனை உற்று நோக்கினாள் வெண்ணிலா. ‘நீ யார்’ என்று அவளுடைய பார்வை கேளாமல்
கேட்டதில் ஹரிஹரன் உள்ளுக்குள் உடைந்து போகவே, நண்பனின் நிலை அறிந்து தானாகவே முன் வந்து பதிலை சொன்னான்
சிவா.
 “இவர் இந்த கம்பெனியில் புதுசா சேர்ந்து
இருக்கிற பார்ட்னர்” 
‘நீ தானா அது’
என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் சிவாவிடம் திரும்பி பேச
ஆரம்பித்தாள். 
தன்னை
பார்த்ததும் அவள் அடையாளம் கண்டு கொண்டு துள்ளி குதிப்பாள் என்றெல்லாம் ஹரிஹரன்
எதிர்பார்த்து இருக்கவில்லை தான். அதே நேரத்தில் இப்படி கொஞ்சம் கூட அடையாளம்
தெரியாத அளவிற்கு நடந்து கொண்ட அவளின் செயல்பாடு குறித்து உள்ளுக்குள் வருந்தினான்
ஹரிஹரன். இருந்தாலும் இதற்காக எல்லாம் சோர்ந்து விட்டால் பிறகு தான் எடுத்த
காரியத்தை முடிப்பது எப்படி என்று தன்னை தானே தேற்றிக் கொண்டான். 
“என்ன விஷயமா வந்து இருக்கீங்க? எப்பவும் போனில் உங்க பி. ஏ தானே பேசுவார்... இப்போ என்ன
நீங்களே நேரடியா வந்து இருக்கீங்க?” இப்பொழுதும் கேள்வி சிவாவிடம் தான் கேட்டாள். 
சிவா என்ன பதில்
சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஹரிஹரன் பேச ஆரம்பித்தான். “புது
கம்பெனிக்கு ஆட்கள் தேவைப் படறாங்க. அது விஷயமா பேசத் தான் வந்து இருக்கோம்” அலட்டல் இல்லாமல் சொன்னான்
ஹரிஹரன். 
“இதை நீங்க போனிலேயே சொல்லி இருக்கலாமே” இப்பொழுதும்
பதில் சிவாவிடம் தான் கூறினாள். 
‘இவ வேணும்னே
என்கிட்டே பேசுறதை அவாய்டு பண்ணுறாளோ’ என்ற எண்ணம் தோன்ற உள்ளுக்குள் குஷியானவன்
நேராக நிமிர்ந்து தீர்க்கமாக பேச ஆரம்பித்தான். 
“உங்க கிட்ட பேச வந்தது நான் தான். ஸோ... என்கிட்டே நேரடியா
பேசினா கொஞ்சம் நல்லா இருக்கும்” 
ஒரு நிமிடம்
திடுக்கிட்டவள் சட்டென சுதாரித்துக் கொண்டு ‘மேலே சொல்’ என்பது போல அசால்ட்டாக
சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கதை கேட்கும் பாவனையில் அமர்ந்து கொண்டாள். 
‘என்னா
தெனாவட்டு’ என்று உள்ளுக்குள் அவளது செய்கையை ரசித்தவன் வெளியே முகத்தில் ஒரு
உணர்வும் காட்டாமல் பேச ஆரம்பித்தான். 
“எங்க பார்ட்னர்ஷிப்ல புதுசா பெரிய  கம்பெனி ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்.
அதுக்கு அதிக அளவில் ஆட்கள் வேணும். அது சம்பந்தமாத் பேச தான் வந்து இருக்கோம்” 
“பு...புது கம்பெனியா? புதுசா ஆரம்பிக்கிறதுனா அதிக அளவில் முதலீடு தேவையா
இருக்குமே?” கேள்வியாக
இழுத்தாள் வெண்ணிலா. ‘ஏற்கனவே தான் ஏற்படுத்தி இருக்கும் நஷ்டத்தில் இப்போதைக்கு
புது தொழில் எதுவும் சாத்தியம் இல்லையே’ என்பதால் அவளுக்கு சந்தேகம் எழுந்தது. 
“ஆமா... புதுத் தொழில் தான். அதை பத்தி உங்களுக்கென்ன? எங்களுக்கு
வேணும்கிற ஆட்களை ஏற்பாடு செய்து தருவது தான் உங்க வேலை. அதுக்கு உண்டான பணம்
வழக்கம் போல உங்களை தேடி வந்திடும்” பட்டு கத்தரித்தாற் போல பேசினான் ஹரிஹரன். 
“இதை சொல்ல நீங்களும் நேரில் வந்து இருக்க வேண்டிய அவசியம்
இல்லையே” 
“அவசியம் இல்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” 
“அது தான் விஷயத்தை சொல்லிட்டீங்களே” 
“நான் இன்னும் விஷயத்தை சொல்லி முடிக்கலை” 
“இன்னும் எவ்வளவு நேரம் கழிச்சு சொல்றதா உத்தேசம்?”ஹரிஹரனை  மட்டம் தட்ட முயன்றாள் வெண்ணிலா. 
“நீங்க கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு அமைதியா இருந்தா
சொல்றதா உத்தேசம்” இதுக்கெல்லாம் நான் அசருவேனா? என்று தயங்காமல் பதிலடி கொடுத்தான் அவன்.
சளைக்காமல்
ஒருவருக்கு ஒருவர் விடாமல் பேசுவதை பார்த்த சிவா வாயை ஆவென பிளந்து வேடிக்கை
பார்க்க தொடங்கி விட்டான். ‘ என்ன ரெண்டு பேரும் இப்படி பேசுறாங்க... ஒரு வேளை
சண்டை போடப் போறாங்களோ’ என்று உள்ளுக்குள் அதி தீவிரமாக சிந்திக்க தொடங்கினான்
சிவா. 
அதற்கு மேல்
பேசாமல் வாயை இறுக மூடிக் கொண்டு அமர்ந்து இருந்தாள் வெண்ணிலா. அவளின் செய்கையை
உள்ளுக்குள் வெகுவாக ரசித்தான் ஹரிஹரன். அவன் அளவில் இன்னும் அவள் குழந்தை தானே.
கோபமாக இருக்கும் குழந்தை வாயை இறுக மூடிக் கொண்டு பேச மாட்டேன் என்று சண்டித்
தனம் செய்வதை போலவே இருந்தது அவளது செய்கை. என்ன ஒன்று அந்த குழந்தை முகத்தில்
இப்பொழுது விளையாட்டுத் துளியளவும் இல்லை. தீர்க்கமான பார்வையோடும், ஒரு விதமான
அலட்சியத்தோடும் ஹரிஹரனை பார்த்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா. 
அவளின் இந்த
அந்நியத்தனமான பார்வை ஹரிஹரனின் காதல் கொண்ட மனதில் வலி எழுப்ப தவறவில்லை. ‘எப்படி
இருந்த பெண் இவள்! இப்படி விறைப்பாக இருக்கிறாளே. வந்த இவ்வளவு நேரம் ஆனாலும்
மருந்துக் கூட அவள் சிரிக்கவே இல்லையே... நொடிக்கு ஒரு முறை கிண்கிணி போல
சிரிப்பவள் இப்பொழுது சிரிப்பையே மறந்து போனது போல் அல்லவா நடந்து கொள்கிறாள்’.
என்று உள்ளுக்குள் மறுகிக் கொண்டு இருந்தவன் வெண்ணிலா தன்னையே பார்த்துக் கொண்டு
இருப்பதை உணர்ந்து தன்னுடைய மௌனத்தை கலைத்து விட்டு பேச தொடங்கினான். 
“நாங்க வெளியூரில் இந்த ப்ராஜெக்ட்டை ஆரம்பிக்கப் போகிறோம்.
எங்களுக்கு வேலைக்கு தேவைப்படும் ஆட்களும் அந்த ஊரை சேர்ந்த ஆட்களாகவே இருந்தால்
கொஞ்சம் நல்லா இருக்கும்.அதே நேரம்  உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுத்த மாதிரியும்
இருக்கும். அதனால் நீங்க நேரில் வந்து நல்ல திறமையான ஆட்களை எங்களுக்காக செலக்ட்
பண்ணிக் கொடுத்தால் நல்லா இருக்கும்” 
“என் கம்பெனி மேனேஜரை அனுப்பி வைக்கிறேன்” பேச்சு
முடிந்தது என்பது போல மேசையில் இருந்த பைலை எடுத்துப் பார்க்க தொடங்கினாள். 
“அதுக்காகவா நான் இவ்வளவு தூரம் வந்து இருக்கேன். உங்க
மேனேஜர் வந்து ஆட்களை தேர்வு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை” 
“பின்னே?” கேள்வியாக பார்த்தாள் வெண்ணிலா. 
“நீங்க வந்து ஆட்களை தேர்ந்து எடுத்து தரணும்” முடிவாக
சொன்னான் ஹரிஹரன். 
“இதென்ன புது பழக்கம்... நானும் ஒரு கம்பெனியின் எம். டி
தான். உங்க ஒரு கம்பெனிக்காக நான் இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு வர முடியுமா? அதுக்கு எல்லாம்
வாய்ப்பே இல்லை... இதற்கு முன் செய்த மாதிரி இப்பவும் எங்க மேனேஜர் வந்து ஆட்களை
தேர்ந்து எடுத்து நல்லபடியாக தருவார்” 
“அதில் எனக்கு திருப்தி இல்லை மிஸ்...” வேண்டுமென்றே
இழுத்தான். 
“மிஸ் வெண்ணிலா” பல்லை கடித்து துப்பியவாறே வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக
உரைத்தாள். 
“ஓ இன்னும் மிஸ் தானா... ரொம்ப நல்லதாக போயிற்று” அவன் பார்வை
அவளை சோம்பலாக வருடியது. 
“என்ன நல்லதாக போயிற்று” அவளுடைய கண்களில் எரிச்சல் அப்பட்டமாக வெளிப்பட்டது. 
“இல்லை கல்யாணம் ஆகி இருந்தா எங்க கூட வெளியூர் வந்து
உங்களால தங்க முடியாது... புருஷன் ஒத்துக்கலை, மாமியார் ஒத்துக்கலைன்னு பிரச்சினை வரும். இப்போ அதுக்கு
வாய்ப்பு இல்லை. நீங்களும் நாளைக்கே கிளம்பி வந்துடுவீங்க இல்லையா” 
“ஹலோ... நான் எப்போ நாளைக்கு கிளம்பி வரேன்னு சொன்னேன்?” 
“நீங்க நாளைக்கு கிளம்பி வரலைனா நான் உங்க கம்பெனி கூட போட்ட
அக்ரீமென்டை கேன்சல் பண்ண வேண்டி இருக்கும்... பரவாயில்லையா?” நிதானமாக
கேட்டான் ஹரிஹரன்.
“நான் உங்க கம்பெனி கூட போட்ட அக்ரீமென்ட்ல இப்படி வெளியூர்
வருவதற்கு சம்மதம்னு எங்கேயும் குறிப்பிட்டு சொன்ன மாதிரி எனக்கு நியாபகம்
இல்லையே!” அவள் கைக்கு
சிக்காமல் ஆட்டம் காட்டினாள். 
“என்னுடைய கம்பெனிக்கு ஆட்கள் தேவைப்படும் போது, ‘எங்களுக்கு
பிடித்த’ மாதிரியான ஆட்களை தேர்ந்தெடுத்து தருவது உங்க கம்பெனியின் பொறுப்புன்னு
சொல்லி இருக்கீங்களே... அதுக்கு என்ன அர்த்தம்?” அவளை விட நிதானமாக ஹரிஹரன் எதிர்க் கேள்வி கேட்டான். 
“அதுக்கு நான் தான் வந்தாக வேண்டும் அப்படினு என்ன அவசியம்னு
தான் எனக்கு புரியலை” 
“இந்த கேள்விக்கு உண்டான பதிலை நான் ஏற்கனவே சொன்ன மாதிரி
எனக்கு நியாபகம்” 
“இப்போ முடிவா என்ன தான் சொல்ல வரீங்க?” அலுப்பாக
கேட்டாள் வெண்ணிலா.
“நாளைக்கு கிளம்பித் தயாரா இருங்கன்னு சொல்றேன்... ஒருவேளை
மறுத்தால் நம்ம ரெண்டு கம்பெனிக்கும் இடையில் உள்ள அக்ரீமென்ட் இன்றோடு முடிந்து
விடும்னு சொல்றேன்” 
‘என்ன முடிந்து
விடுமா? கூடாது... அது நடக்க கூடாது. அப்படி நடந்து விட்டால் நான் எப்படி அந்த
குடும்பத்தை பழி வாங்குவது?’ என்று வேகமாக சிந்தித்தாள். அவளுக்கு வேறு வழியும்
இருக்கவில்லை. இதை மறுத்தால் இத்தனை நாள் தான் பட்ட பாடு அனைத்தும் வீணாகி விடுமே.
அது நடக்க கூடாது என்ற முடிவுக்கு வந்தவள் உடனே தலையை ஆட்டி தன்னுடைய சம்மதத்தை
தெரிவித்தாள். 
வெண்ணிலா
நினைத்து இருந்தால் இன்னும் கொஞ்சம் தீர்க்கமாக பேசி ஹரிஹரனுடன் வர தீர்மானமாக
மறுத்து இருக்கலாம்.ஆனா ஹரிஹரன் அக்ரீமென்ட்டை கேன்சல் செய்து விடப் போவதாக
சொன்னதும் அவள் மனம் வேறு எதைப்பற்றியும் யோசிக்க மறுத்து விட்டது.அதன் விளைவாக
ஹரிஹரனுடன் கிளம்பி ஊருக்கு வரவும் சம்மதித்து விட்டாள்.
“சரி ரொம்ப சந்தோசம்... நான் வந்த வேலை முடிஞ்சது... நான்
கிளம்பறேன். நாளைக்கு காலையில் தயாரா இருங்க. ஒரு ஐந்து  நாளைக்கு நமக்கு அங்கே வேலை இருக்கும். அதற்கு
ஏற்றார்போல் கிளம்பித் தயாராக  இருங்கள்.
நான் என்னுடைய காரில் வந்து கூட்டிக் கொண்டு போகிறேன்” என்று சொன்னவன் சிவாவை அழைத்துக் கொண்டு அறையை விட்டு
வெளியே செல்ல தயாரானான். அறைக் கதவில் கை வைக்கும் முன் வெண்ணிலாவின் குரல் அவனை
தடுத்து நிறுத்தியது. 
“எந்த ஊருக்கு போறோம்?” 
“அம்பாசமுத்திரம்” சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டான் ஹரிஹரன். 
வெண்ணிலா தான்
பிரம்மை பிடித்தது போல அப்படியே அமர்ந்து விட்டாள். ‘ அந்த ஊருக்கா?’

கருத்துரையிடுக