முழுமதியாகுமோ என் வெண்ணிலா 5

 

ஆம்..கனத்த இதயத்துடன் தான்...அவனை விட்டு பிரிவது என்பது அவளால் முடியாத காரியம் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியுமே...இருந்தும் அதை அவள் செய்து தான் ஆக வேண்டும். ‘இல்லையென்றால் அவனது காலடியில் கிடந்து அவமானப்பட நேரும்..நான் மட்டும் அல்ல...என்னுடைய காதலும் கூட...அது நடக்கக்கூடாது’ என்று எண்ணியவள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மண்டபத்திற்குள் நுழைந்தாள்.

வேனில் ஏறியதில் இருந்தே அவளது ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டே இருந்தவனுக்கு அவளின் முக மாற்றம் அவள் ஏதோ ஒரு விபரீத முடிவு எடுத்திருப்பதை உணர்த்தியது.எதுவாக இருந்தாலும் இந்த முறை அவளை தன்னுடைய வாழ்வில் இழந்து விடக்கூடாது என்று முடிவு செய்தவன் சுபத்ராவின் திருமணம் முடிந்ததும் அவசர கதியில் இதை செயலாற்றியே தீர வேண்டும்’என்ற முடிவுக்கு வந்தான். அதன்பிறகு கல்யாண வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டான்.

நிறைந்த மூஹூர்த்ததில் சுபத்ராவின் கழுத்தில் அவளது மாமன் மகன் குமரன் தாலி கட்டி தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொள்ள பார்த்திபனின் மனதில் நிம்மதி பெருமூச்சு எழுந்தது.ஏனெனில் இதற்கு முன் அவனால் தன்னுடைய திருமணத்தைப் பற்றி வீட்டாரிடம் பேச முடியாமல் போனதற்குக் காரணம் சுபத்ரா தான்.வீட்டில் வயதுக்கு வந்த தங்கையை வைத்துக் கொண்டு அவளுக்கு முன் தான் திருமணம் செய்து கொள்வது அவனுக்கு சரியென்று தோன்றாத காரணத்தினால் தான் இதுநாள் வரை அவன் திருமணப் பேச்சை எடுக்காமல் இருந்தது.

‘இனி பாஸ்கரிடம் பேசி பௌர்ணமியை தனக்கு மணமுடித்து தர சொல்லி கேட்டு விட வேண்டியது தான்’ என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே அவனது மனச்சாட்சி அவனைப் பார்த்து கேலி செய்தது.

‘நீ கேட்டவுடன் பாஸ்கரே சம்மதித்தாலும் கூட பௌர்ணமி  நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டாள்.உன்னைக் காயப்படுத்த வேண்டும் என்று எண்ணி வேண்டுமென்றே மறுப்பாள் அந்த பிடிவாதக்காரி.அவளுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்த பின்னர் பாஸ்கரும் பின் வாங்கி விடுவார்.பிறகு எப்படி உன்னுடைய கல்யாணம் நடக்கும்?’

“நடக்கும்...நடந்தே தீர வேண்டும்...நான் நடத்திக் காட்டியே தீருவேன்’ என்று சூளுரைத்தவன் மீண்டும் திருமண வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.

திருமண வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு குடும்பத்தினரோடு வீட்டுக்கு புறப்பட த் தயாரானான் பார்த்திபன். அன்றைய இரவு மணமக்கள் தங்குவதற்கு  பார்த்திபனின் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் எல்லாரும் வீட்டுக்கு சென்று விட,மற்ற வேலைகளை வேலையாட்கள் வசம் ஒப்படைத்து விட்டு பார்த்திபன் களைப்புடன் வீடு திரும்பினான்.

மணமக்கள் இருவரும் தனித்தனி அறையில் தங்க வைக்கப் பட்டு இருக்க,வீட்டின் முற்றத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.ஊரிலேயே பெரிய வீட்டுத் திருமணம் இல்லையா? சந்தோசத்துக்கும்,கலகலப்புக்கும் பஞ்சமா என்ன? எல்லாரும் ஒன்றாக கூடிப் பேசிக் கொண்டிருந்தனர்.

பார்த்திபன் வீட்டுக்குள் நுழைந்த அதே சமயம் பௌர்ணமி தன்னுடைய பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தாள்.

‘அதற்குள்ளாகவா கிளம்பி விட்டாள்?’பார்த்திபனுக்கு திகைப்பாக இருந்தது. எப்படியும் திருமணம் முடிந்த பிறகு ஒரு இரண்டு நாளாவது இங்கே தங்கி இருப்பாள் என்று அவன் நினைத்ததற்கு மாறாக அவள் உடனேயே கிளம்ப அவன் அங்கேயே நின்று விட்டான்.

‘இல்லை...இவள் இப்பொழுது போகக் கூடாது...இப்பொழுது கிளம்பி விட்டால்,மறுபடியும் இவளை இங்கே கொண்டு வர முடியாது என்று நினைத்தவன் அடுத்து என்ன செய்வது’ என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கியவனை தடை செய்தது மெய்யாத்தாவின் குரல்

தன்னுடைய கணீர் குரலில் பௌர்ணமியை பார்த்து அதட்டலாக பேச ஆரம்பித்தார்.

“நீ கல்யாணத்துக்கு தான் இங்கே வந்தே...அதுக்காக கல்யாணம் முடிஞ்ச உடனே கிளம்பனும்னு அர்த்தம் இல்லை...ஏதோ தூரத்து சொந்தம் மாதிரி நடந்துக்கிட்டா என்ன அர்த்தம்?”என்று கேட்க பாஸ்கரன் அவளை முந்திக் கொண்டு பதில் அளித்தான்.

“அவளுக்கு அவளோட கம்பெனியில் லீவே கொடுக்க மாட்டாங்க பாட்டி...கல்யாணத்துக்கு இங்கே வர்றதுக்கு கூட அவங்க லீவே தரலை...எப்படியோ பேசி நாலு நாள் லீவு வாங்கிட்டு தான் வந்தா..இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி போன் பண்ணி அவளை உடனே கிளம்பி வர சொல்லி இருக்காங்க...ஏதோ அவசரமாம்”வேகமாக தங்கையை காப்பாற்றுவதற்காக அவளை முந்திக் கொண்டு பதில் அளித்தான்.

பார்த்திபனின் பார்வையை எதிர்கொள்ளாமல் அவள் முகம் திருப்பியதில் இருந்தே அவனுக்கு புரிந்து போனது அவள் வேண்டுமென்றே பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பப் பார்க்கிறாள் என்பது.

‘கூடாது...விடவே கூடாது...இந்த முறை என்னை அவள் பிரிந்து போகவே கூடாது...நான் விடவும் மாட்டேன்’ என்று எண்ணியவன் தனக்கு இருந்த வேலைகளை எல்லாம் மறந்து விட்டு அங்கேயே தேங்கி நின்று விட மெய்யாத்தா தொடர்ந்து பேசினார்.

“ஏன் பாஸ்கரு...இவளுக்கும் நம்ப சுபத்ரா வயசு தானே...காலா காலத்தில் இவளுக்கும் ஒரு பையனைப் பார்த்து முடிச்சுட்டா உங்களுக்கும் ஒரு கடமை தீரும் இல்லையா?அதுவும் இல்லாம நீங்க இங்கே இருக்க இவ என்னவோ ஹாஸ்டலில் ரூம் எடுத்து சென்னையில் தனியா தங்கி வேலை பார்க்கிறா...வயசுப் பொண்ணை தனியா வெளியூருக்கு அனுப்புறது எல்லாம் எனக்கு சரின்னு படலை...அவ்வளவு தான்” மெய்யாத்தா எப்பொழுதும் அப்படித்தான்.மனதில் எதையும் மறைத்து வைத்து பேச மாட்டார்.பட் பட்டென்று தேங்காய் உடைத்ததைப் போல பேசி விடுவார்.

“நானே உங்ககிட்டே சொல்லலாம்னு இருந்தேன் பாட்டி..நீங்களே அந்த பேச்சை எடுத்துட்டீங்க...எங்க சொந்தத்தில் ஒரு நல்ல வரன் இருக்கு...போன வாரம் தான் அவங்க வீட்டில் என்கிட்டே கேட்டாங்க..நானும் தங்கச்சி கிட்டே கேட்டு சொல்றதா சொல்லி இருந்தேன்...நேர்ல வரும் பொழுது சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்”

“பையன் உறவா? நல்லது... என்ன பண்ணுறான்?”

“ஒரே பையன் பாட்டி..பேங்க்ல வேலை பார்க்கிறான்.சொந்த வீடு நாலைஞ்சு இருக்கு...அது போக அவங்க அப்பாவுக்கு சொந்தமா ஊருக்குள்ளே நிறைய கடை இருக்கு... வாடகையே நிறைய வரும்...அவங்களா விரும்பி வந்து கேட்டாங்க..நானும் அந்த பையனைப் பத்தி விசாரிச்சேன்...எனக்கு ஓகே தான்...”

“உனக்கு பிடிச்சா போதுமா..கட்டிக்கப் போறவ அவ தானே..அவ கிட்டே போட்டோ எதுவும் காட்டி அபிப்பிராயம் கேட்டியா?”

“இல்லை பாட்டி..இனிமே தான்...”

“என்ன இழுக்கிற...போட்டோ காட்டவே இப்படி லேட் செஞ்சா அப்புறம் கல்யாணம் அடுத்த வருஷம் தான் நடக்கும் போல...போட்டோ கைல வச்சு இருந்தா இப்பவே இவகிட்டே காட்டி பிடிச்சு இருக்கா இல்லையானு கேளு..சட்டுபுட்டுன்னு சூட்டோட சூடா இவ கல்யாணத்தையும் முடிச்சு புடலாம்.”என்றார் அதிகாரமாக

“போட்டோ மாடியில வச்சு இருக்கேன் பாட்டி..ஒரு நிமிஷம் இதோ போய் எடுத்து வர்றேன்”என்று அவன் மாடிக்கு ஓடத் தயாராக, அவனை தடுத்து நிறுத்தினாள் பௌர்ணமி.

“வேண்டாம் அண்ணா...நான் பார்க்கணும்னு அவசியம் இல்லை...உனக்கு பிடிச்சு இருந்தா போதும்...எனக்கு சம்மதம்...”என்று சொல்லிவிட்டு பெட்டிகளை தூக்கிக் கொண்டு அவள் நகர முனைய பாஸ்கருக்கு தங்கையை எண்ணி முகம் பூரிப்பில் பொங்கி வழிந்தது.

பார்த்திபனுக்கோ அவள் வேறு ஒருவனை மணக்க சம்மதம் சொன்னதை நம்ப முடியாத அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இப்பொழுது இவள் என்ன சொன்னாள்? என்னை விட்டு வேறு ஒருவனை மணக்க ஒப்புக் கொண்டாளா? எப்படி அவளால் வேறு ஒருவனை மணக்க முடியும்?’

“மத்த விஷயத்தில் எப்படியோ...இந்த விஷயத்தில் தங்கச்சியை ஒழுங்கா தான் வளர்த்து இருக்க பாஸ்கர்”என்று கூட்டத்தில் ஆங்காங்கே கேலி குரல்கள் கேட்க பௌர்ணமியின் முகம் ஆத்திரத்தில் கனன்று கொண்டிருந்தது.

அவள் பெட்டிகளை தூக்கிக்கொண்டு நகர முனைய நொடியும் தாமதிக்காமல் அவள் முன் வந்து பாதையை மறித்தவாறு நின்றான் பார்த்திபன்.மொத்த வீடே அந்தக் காட்சியை கலவரத்துடன் பார்த்தது.பார்த்திபன் பொதுவாக எந்தப் பெண்ணிடமும் நின்று பேசியது இல்லை.தானாகவே யாராவது பேச வந்தால் கூட ஒன்றிரண்டு வார்த்தை மரியாதைக்காக பேசிவிட்டு நகர்ந்து விடுவான்.அப்படிப்பட்டவன் இப்பொழுது பௌர்ணமியின் பாதையை மறித்து நிற்க வீட்டினரே அதிர்ந்து போய் நின்றனர்.


Post a Comment

புதியது பழையவை