அத்தியாயம் 25
‘நான் எப்படி
அந்த ஊருக்குப் போவது? மறுபடியும் அந்த ஊருக்கு போனால் நான் உடைந்து போவேனே! சின்ன வயதில் இருந்து
நான் பார்த்து பழகிய இடங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை கண்ணில் பார்த்தால் நான்
என்ன ஆவேன்? அங்கே போனால்
மீண்டும் பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து என்னை குத்திக்
கிழித்து விடுமே... இது எல்லாம் தெரிந்தும் எப்படி நான் அந்த ஊருக்கு துணிந்து
போவேன்! முடியாது என்று மறுத்து விட வேண்டியது தான்’
‘ஆனால் அவனிடம்
எப்படி மறுத்து பேசுவது? என்ன காரணம் சொல்லி இதை மறுப்பது? இப்பொழுது புதிதாக வந்து இருப்பவன் வேறு கொஞ்சம் குடைச்சல்
பேர் வழியாக இருப்பான் போல் இருக்கிறதே? நான் தான் வந்து ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறானே!
அவனிடம் பேசினால் ஒத்துக் கொள்வானா? அவனை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்.’ என்ற
முடிவுக்கு வந்தவள் தன்னுடைய ஆட்களின் மூலமாக ஏற்கனவே அவனுடைய போன் நம்பரை அறிந்து
இருந்தாலும், வேண்டுமென்றே
சிவாவின் அலுவலகத்திற்கு அழைத்து ஹரிஹரனின் எண்ணை வாங்கி அவனுடன் பேச தயாரானாள்.
இங்கே இப்படி
இருக்க அங்கே ஹரிஹரனின் வீட்டில் ஹரிஹரன் தன்னுடைய நண்பர்கள் இருவருடனும்
காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருந்தான்.ஹரிஹரன் மிகுந்த மகிழ்ச்சியில்
இருந்தான்.
“டேய்...நான்
சொன்னேன்ல.அங்கே இருந்தது என்னோட வெண்ணிலா தான்.ஆள் இப்ப எப்படி மாறிட்டா
தெரியுமா?முகத்தில் ஒரு கம்பீரம் வந்து இருக்கு.தெளிவா பேசறா...ஒரு வார்த்தை
பேசினாலும் தீர்க்கமா பேசுறா...
அப்புறம்...என்ன
நடந்துச்சு தெரியுமா?”என்று கண்கள் பளபளக்க விவரித்தவன் நண்பர்களின் அதிர்ச்சியை
கண்டுகொள்ளாமல் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் விவரித்தான்.
அதுவரை வாயை
திறந்து எந்த கேள்வியும் கேட்காமல் உடன் இருந்த சிவா அப்பொழுது தான் கேள்வியே
கேட்டான். ஹரிஹரன் மற்றும் வெண்ணிலாவின் முன்கதையை வசந்த் மூலம் அறிந்து
இருந்ததால் அவனுடைய செயலுக்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்று முழுமையாக
நம்பினான்.
“டேய்! ஹரி என்னடா புதுசு புதுசா என்னென்னவோ சொல்ற? நாம எப்போ
புதுசா கம்பெனி ஆரம்பிச்சோம்! அதுக்கு ஆள் வேணும்னு வேற அங்கே வந்து அப்படி
புளுகுற. இதுல அந்த பொண்ணை வேற கூட்டிக்கிட்டு அம்பாசமுத்திரம் போகணும்னு வேற
சொல்ற?”
“டேய் ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க. நான் எதையும்
யோசிக்காம செய்யலை. எல்லாம் யோசிச்சுத் தான் பண்றேன். என்னோட நிலா பழைய மாதிரி
சந்தோசமா இருக்கணும்னா அவ மனசில் குத்தி இருக்கிற முள்ளை எடுத்தாகணும். அதை நான்
இங்கே இருந்து செய்வதை காட்டிலும் அவளோட ஊரில் வைத்து செய்வது தான் சரிப்பட்டு
வரும்” உறுதியாக
சொன்னான் ஹரிஹரன்.
“டேய் இதெல்லாம் சரியா வரும்னு எனக்கு தோணலை” சிவா
அங்கலாய்த்தான்
“கண்டிப்பா சரியா வரும்டா... நீ வேணும்னா பாரு... இன்னும்
கொஞ்ச நேரத்தில் வெண்ணிலா எனக்கு போன் பண்ணுவா. ஏன்னா அவ அந்த ஊருக்கு வர விரும்ப
மாட்டா... அந்த ஊரில் தான் அவளோட ரகசியம் இருக்கு. அதனால் வர மறுப்பா.முடிந்த
அளவுக்கு இதை தவிர்த்து விட்டு அவளுக்கு பதில் வேற யாரையாவது அனுப்பி வைக்க
முயற்சி செய்வாள்.அதுவும் இல்லாம...”
இவர்கள் பேசிக்
கொண்டு இருக்கும் போதே ஹரிஹரனின் போனில் வெண்ணிலாவின் அழைப்பு வர அவன் முகத்தில்
வெற்றிச் சிரிப்போடு நண்பர்களிடம் போனை காட்டி விட்டு ஒன்றும் அறியாதவன் போல போனை
எடுத்து பேசினான்.
“ஹலோ” அவனது குரல் கம்பீரமாக ஒலித்தது.
“ஹ... ஹலோ... நான் ஷைன் கன்சல்டன்சி எம். டி. பேசறேன்”
“ஓ... நீங்களா? உங்களுக்கு எப்படி என்னுடைய நம்பர் தெரியும்?” பதிலை தெரிந்து
வைத்துக் கொண்டே கேள்வி கேட்டான் ஹரிஹரன்.
“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டி இருந்தது அது
தான் உங்க ஆபிசுக்கு போன் பண்ணி உங்க நம்பரை வாங்கினேன்” . ‘நல்லவேளை அலுவலகத்திற்கு போன் பண்ணி கேட்ட பிறகு
இவனுக்கு போன் செய்தோம் என்று தன்னுடைய செயலை எண்ணி தன்னை தானே உள்ளுக்குள்
பாராட்டிக் கொண்டாள்.
“அப்படியா?” என்று நம்பாத குரலில் கேட்டவன் பிறகு அதை கண்டு கொள்ளாமல்
பேச்சை மாற்றினான்.
” சொல்லுங்க என்ன விஷயம்?”
“நாளைக்கு ஊருக்கு போகும் ப்ரோக்ராமை கேன்சல் பண்ணிடுங்க...
நான் வரலை”
“ஏன்”
“எனக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருக்கு... அது முடியாம
நான் எங்கேயும் வெளியே வர முடியாது”
“இதை நீங்க என்னோட வருவதற்கு ஒத்துக்கிறதுக்கு முன்னாடி
யோசிச்சு இருக்கணும்”
“அப்போ நியாபகம் வரலை... வேணும்னா உங்க கூட என்னோட
சித்தப்பாவை அனுப்பி வைக்கறேன். அவரும் கம்பெனியில் ஒரு பார்ட்னர் தான். அவர்
என்னை விட திறமையான நிர்வாகியும் கூட. மேலும்...”
“மேடம்... ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்... உங்க
வாடிக்கையாளர்கிட்ட ஒரு வார்த்தை கொடுத்தா அந்த வார்த்தையை எப்பாடுபட்டாவது
காப்பாத்தணும். அது தான் ஒரு நல்ல கம்பெனிக்கு அழகு... அதை விட்டுட்டு நேரில்
வந்து பேசும் போது ஒத்துக்கிட்டு அப்புறம் இப்படி மறுத்து பேசுவது கொஞ்சமும் நல்லா
இல்லை சொல்லிட்டேன்” குரலை சற்றே உயர்த்திப் பேசினான் ஹரிஹரன்.
“சார் உங்களோடது தீடீர்னு பிக்ஸ் பண்ண விஷயம்... எனக்கு
அப்போ இந்த பழைய அப்பாய்ன்மென்ட் மறந்து போய்டுச்சு... இப்போ தான் என்னோட ஷெட்யூலை
பார்த்தேன். அதான் உங்களுக்கு உடனே போன் பண்ணினேன்” பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு பேசினாள் வெண்ணிலா.
“அது என்னோட பிராப்ளம் இல்லை... நீங்க மறந்ததுக்கு நாங்க
நஷ்டப்பட முடியுமா?”
“இதில உங்களுக்கு எந்த நஷ்டமும் வரப்போறதில்லை. அது தான்
எனக்கு பதிலாக கம்பெனியின் இன்னொரு பார்ட்னர் வர்றாரே. அப்புறம் என்ன?” லேசாக எரிச்சல்
காட்டினாள் வெண்ணிலா
“இப்படி மாத்தி மாத்தி பேசினா என்ன அர்த்தம்... நான்
உங்களுக்காக உங்க பேரில் டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு... இப்போ வந்து இப்படி
மாத்தி பேசினால் எப்படி?”
“காரில் தானே போகப் போறோம்னு சொன்னீங்க... அப்புறம் எங்கே
இருந்து டிக்கெட் வந்தது?” சந்தேகமாக கேட்டாள் வெண்ணிலா.
‘மாட்டிக்கிட்டோமோ...
ஏன்டி இப்படி புத்திசாலியா இருந்து தொலைக்கிற’ என்று உள்ளுக்குள் நொந்தவன் தன்னை
சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
“நான் கார்ல போகலாம்னு சொன்னது ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும்...
அதுக்கு அப்புறம் நாம ட்ரைன்ல தான் போகப் போறோம்”
“இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை” எப்படியாவது
அவனுடன் சண்டை போட்டு தனக்கு பதிலாக தன்னுடைய சித்தப்பாவை அவனுடன் அனுப்பி வைத்து
விட வேண்டும் என்ற நோக்கத்தோடு பேச ஆரம்பித்தாள்.
“நல்லா இருக்கு... ரொம்ப நல்லா இருக்கு. இங்கே நாங்க தான்
உங்க கிளையண்ட்... நீங்க என்னமோ எங்களுக்கு முதலாளி மாதிரி இல்ல பேசிக்கிட்டு
இருக்கீங்க. இது கொஞ்சமும் சரி இல்லை. உங்ககிட்ட பேசி முடிவு பண்ணினதுக்கு
அப்புறம் இப்படி வந்து என்னிடம் மறுத்து பேசினா நான் மறுபடி உங்க கம்பெனி டீலை
கேன்சல் பண்றதை பத்தி யோசிக்க வேண்டி இருக்கும்”
“நான் தான் எனக்கு பதிலாக என்னுடைய சித்தப்பா வருவார்னு
சொல்றேனே?”
“எனக்கு நீ... ஐ மீன் நீங்க தான் வேண்டும்” அழுத்தமாக
சொன்னான் ஹரிஹரன்.
“கடைசியா என்ன தான் சொல்ல வர்றீங்க?”
“நான் ஆரம்பத்தில் இருந்து ஒண்ணு தான் சொல்றேன்... உங்களை
மாதிரி மாத்தி மாத்தி பேசலை” வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேசினான் ஹரிஹரன்.
“இப்போ இதுக்கு என்ன தான் முடிவு?”
“என்னோட நீங்க வாங்க... உங்க சித்தப்பாவை உங்களோட அந்த
‘முக்கியமான’ வேலையை பார்க்க சொல்லுங்க” உறுதியாக சொன்னான் ஹரிஹரன்.
“எனக்கே ஆர்டர் போடறீங்களா?” கொதித்தாள் வெண்ணிலா
“சொன்ன வார்த்தையை காப்பாத்த சொல்றேன்” அமர்த்தலாக
பதில் சொன்னான் ஹரிஹரன்.
“தொழிலில் நெளிவு சுளிவு இருக்கலாம். தப்பு இல்லை” விடாது
போராடினாள் வெண்ணிலா.
“நெளிவு சுளிவு வேறு, சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது வேறு. இரண்டையும் போட்டு
நீங்கள் குழப்பிக் கொள்ளாதீர்கள்” தன் முடிவில் உறுதியாக நின்றான் ஹரிஹரன்.
“உங்களுக்கு வார்த்தை கொடுத்த மாதிரி தானே... என்னுடைய
இன்னொரு வேலையும் அதுவும் நான் வாக்கு கொடுத்த மாதிரி தானே?”
“அது உங்கள் பிரச்சினை என்று ஏற்கனவே நானும் சொல்லி
விட்டேன்... மறுபடியும் இதையே பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். எடுத்த முடிவை
மாற்றிக் கொள்வது என்பது எனக்கு பிடிக்காத ஒன்று. நாளை கிளம்பி தயாராக இருங்கள்.
இதை பற்றி மீண்டும் பேச எனக்கு விருப்பம் இல்லை” என்று கூறிவிட்டு அவள் மறுத்து பேசும் முன் போனை வைத்து
விட்டான் ஹரிஹரன்.
ஹரிஹரன் போனை
வைத்த பிறகும் கையில் இருந்த போனை கொஞ்ச நேரம் கோபமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்
வெண்ணிலா. அது இயலாமையால் வந்த கோபம். தன்னால் அங்கே போகாமல் தடுக்க முடியவில்லையே
என்பதால் வந்த கோபம்.
’எவ்வளவு தூரம்
பேசினேன் கொஞ்சமும் இறங்கவில்லையே... இவன் கண்டிப்பாக அவராக இருக்க முடியாது.
பச்சை பிள்ளைகளின் முகம் வாடப் பொறுக்காத அவர் எங்கே? இத்தனை தூரம் கெஞ்சியும் மனம் இறங்காத இவன் எங்கே? அவரும் இவனும்
நிச்சயம் ஒரே ஆளாக இருக்க முடியாது’
போனையே கையில்
வைத்துக் கொண்டு இருந்த வெண்ணிலாவை விசித்திரமாக பார்த்த அவளுடைய சித்தப்பா மெல்ல
அவளை நெருங்கி அவளுடைய தோளை தொட்டு உலுக்கினார். ஏதோ கனவுலகில் இருந்து மீண்டதை
போல முழித்தவள் மெல்ல சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“நாளைக்கு நான் ஊருக்கு போறேன் சித்தப்பா...”
“எந்த ஊருக்கு பாப்பா?”
“நம்ம ஊருக்கு தான் சித்தப்பா”
“நம்ம ஊருக்கா? வேண்டாம் பாப்பா. அங்கே போக வேண்டாம். உன் மனசு தாங்காது
பாப்பா. சொன்னா கேள்.உனக்கு பூ மாதிரி மனசு தாயி.அங்கே போனால் நடந்தது எல்லாம்
உனக்கு நியாபகம் வரும்.தேவை இல்லாத மன வருத்தம் தான் ஏற்படும்.அதுக்கு பதிலா நீ
அங்கே போகாம இருந்து விடு.அவங்க வந்து கேட்டா உனக்கு உடம்பு சரி
இல்லை...அப்படின்னு எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்.நீ அங்கே போகவே வேண்டாம்
பாப்பா” அவளை போக
விடாமல் தன்னால் ஆன மட்டும் தடுத்தார்
அவர்.
“இல்லை சித்தப்பா இனி போகாமல் இருக்க முடியாது. அப்படி
போகாமல் இருந்தால் அந்த சிவாவையும் அவன் குடும்பத்தையும் நாம பழி வாங்க முடியாது.
இத்தனை வருஷ உழைப்பும் வீணாகிடும். நான் போய்த்தான் தீர வேண்டும் சித்தப்பா”
“நீ கொஞ்சம் எடுத்து சொல்லி இருக்கலாம் அல்லது தட்டி கழித்து
இருக்கலாமே பாப்பா”
“முயற்சி செய்து பார்த்தேன் சித்தப்பா. இப்பொழுது புதிதாக
வந்து இருப்பவன் கொஞ்சம் குடைச்சலாக இருக்கிறான்.சித்தப்பா இந்த புது ஆளைப் பற்றிய
விவரம் எதுவும் இன்னும் எனக்கு வரலை.அநேகமா நாளைக்கு வரும்னு நினைக்கிறேன்.அப்படி
தகவல் வந்ததும் எனக்கு அதை எல்லாம் உடனே மெயில் அனுப்பி வச்சிடுங்க.நான்
பார்த்துக்கிறேன்.”
“அங்கே ஊரில் தெரிந்தவங்க யார் கண்ணிலும் பட்டு விடாதே
பாப்பா.அப்புறம் அது இன்னும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விடும். நானும் வேணும்னா
உன் கூட துணைக்கு வரட்டுமா பாப்பா”
“வேண்டாம் சித்தப்பா. நான் சமாளித்துக் கொள்வேன்”
“சமாளித்து கொள்வாய் தானே பாப்பா” அப்பொழுதும் சந்தேகமாகவே கேட்டார்.
“என்னால் முடியும் சித்தப்பா” என்று உறுதியாக சொன்னவள் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானாள்.
அங்கே
வெண்ணிலாவுடன் பேசி முடித்த பின் ஹரிஹரன் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களில்
ஈடுபட்டான். முதல் வேலையாக சிவாவிடம் சொல்லி தனக்கும், வெண்ணிலாவிற்கும் ட்ரைனில் டிக்கெட் புக் செய்தான்.
“அடப்பாவி இப்ப தான் டிக்கெட்டே எடுக்கறியா... அப்புறம்
ஏன்டா அப்படி புளுகின?”
“என்னை என்னடா செய்ய சொல்ற... இவ்வளவு தூரம் வர்றதுக்கே
எனக்கு நாக்கு தள்ளிடுச்சு. இப்ப என்னடான்னா அவ வர முடியாதுன்னு முரண்டு பிடிச்சா, நான் என்ன செய்ய? அது தான்
டக்குன்னு வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிச்சேன்” என்று ஹரிஹரன் சொல்லி முடிக்க சிவாவும் வசந்தும் ‘அடப்பாவி’
என்று நினைத்து வாயை பிளந்தபடி அமர்ந்து இருந்தனர்.
இரவு கடந்து
விடிந்த பிறகு ஹரிஹரன், வெண்ணிலா இருவரும்
வெவ்வேறு மனநிலையில் கிளம்பிக் கொண்டு இருந்தனர். இனி வரும் நாட்களில்
வெண்ணிலாவுடன் கழிக்க போவதை எண்ணி ஹரிஹரன் மகிழ்ச்சியுடன் இருந்தான். அதே நேரம்
வெண்ணிலா அங்கே போன பிறகு எந்த சூழ்நிலையிலும் தன்னிலை இழந்து விடக்கூடாது என்ற
உறுதியுடனும் தயாராகிக் கொண்டு இருந்தாள்.
கருத்துரையிடுக